Friday, January 27, 2012

ஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்?

ஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்?


முதல் மனிதர்கள் ஆதாம் ,ஏவாள் என யூத மத புனித நூலானா தோராவில் முதலில் கூறப்பட்டது , பின்னர் தோன்றிய கிருத்துவமும் அதை அப்படியே சுவிகரித்து தனது பழைய ஏற்ப்பாட்டில் சேர்த்துக்கொண்டது. இதெல்லாம் முதல் நூற்றாண்டின் ஆரம்பக்கால கட்டம்.

பின்னர் ஏழாம் நூற்றாண்டில் முகமது நபியால் உருவாக்கப்பட்ட மதமும் ஆதாம் , ஏவாள் கருத்தாக்கத்தை ஏற்றுக்கொண்டதோடு அல்லாமல் மோசஸ், ஏசு என்று அனைவரையும் இஸ்லாமியர்களாக ஆக்கி அவர்கள் தான் இஸ்லாத்தின் ஆரம்ப கால இறைத்தூதர்கள் என்று புதிதாக ஒரு கருத்தாக்கத்தை தானே உருவாக்கிக்கொண்டு தனது பழைமைக்கு  தானே ஆதாரம் உருவாக்கிக்கொண்டது.

பாவம் மோசசுக்கு பின்னாளில் தாம் மூசா என்றும், ஏசுவுக்கு பின்னாளில் ஈசா என்றும் பெயர் மாறி இஸ்லாமியர்களாவோம் என்று தெரியாமல் போய்விட்டது :-)) தெரிந்திருந்தால் ஒரு வேளை அவர்கள் அவதரிக்காமலே இருந்து இருப்பார்கள்.முகமது நபிக்கு முன்னொடி இறைத்தூதர்கள் என சொல்லப்படும் பட்டியல் இறைத்தூதர்கள் பட்டியல. ஆதம் முதல் கொண்டு ஏசு வரை எல்லாருமே இஸ்லாமிய இறைத்தூதர்கள் என சொல்லிக்கொள்கிறார்கள். இதில் விடுபட்டுப்போனது யாஹு மெசெஞ்சர் மட்டுமே என நினைக்கிறேன் :-))

இப்படி பல முன்னோடி இறைத்தூதர்கள் உண்டு என சொல்வது புதிதல்ல ஏற்கனவே புத்த மதத்தில் 28 புத்தர்கள் உண்டு என்றும் கவுதம புத்தருக்கு பின்னரும் ஒரு புத்தர் வருங்காலத்தில் வருவார் என புத்த மதம் சொல்கிறது. ஆனால் முகம்மது நபி கொஞ்சம் முன்னேற்பாடாக அவரே அல்டிமேட் இறைத்தூதர் என சொல்லிக்கொண்டார்.

புத்தர்களின் பட்டியல

இப்போது எனது கேள்வி மனித இனம் பரிணாமத்தின் படி உருவானதா அல்லது மேற்கண்ட மதங்கள் சொன்னது போல ஆதாம்,ஏவாள் என்ற இரண்டே இரண்டு ஆதி மனிதர்களிடம் இருந்து தான் பல்கி பெருகி இன்றைய 600 கோடி மக்களாக ஆனதா என்பதே.
ஈடன் கார்டனில் ஆதாம்,ஏவாள்(படம் உதவி:விக்கி,நன்றி)முதலில் ஆதாம் ,ஏவாள் கருத்தாக்கத்தினைப்பார்ப்போம், அது உண்மை எனக்கொண்டால் , அதனுள் இருக்கும் ஆபாசத்தினையும் மத வாதிகள் உண்மை என ஏற்றுக்கொள்வார்களா?


என்ன ஆபாசம் இருக்குனு என்று கேள்விக்கேட்பவர்கள் இந்த சுட்டியில் போய் முழுக்க ஆதியோடந்தமாக படித்து விட்டு வரவும். ஆதாம் ஏவாள் கதை- Chapter LXXIV . இங்கே பதிவில் சுருக்கமாகப்பார்ப்போம்.

கடவுள் என்று கூறப்படுவர் முதலில் ஆதாமை உருவாக்கினார், பின்னர் அவன் விலா எலும்பை வகுந்தெடுத்து அதில் இருந்து ஏவாளை உருவாக்கினார்.அவர்கள் வாழ ஏடன் கார்டனையும் உருவாக்கிக்கொடுத்தார்.

பாம்பு வடிவில் சாத்தான் எனப்படும் தீய சக்தியின் தூண்டுதலால் ஏவாள் ஆப்பிளையோ , தக்காளியையோ கடித்து வைத்து தன்னுணர்வு பெற்றாள் , போதாக்குறைக்கு ஆதமையும் கடிக்க சொல்ல இருவருக்கும் தன்னுணர்வு வரப்பெற்று, நிர்வாணம், ஆண், பெண் என்ற அறிவெல்லாம் எட்டிப்பார்த்தது.

இருவரின் கூட்டுசதியும் கடவுளுக்கு பிடிக்காமல் போனதால் அம்மையாரால் கார்டனை விட்டு விரட்டப்பட்ட சின்னம்மா போல இருவரும் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டனர் . கூடவே கடவுளின் சில பல சாபங்களும் இலவச இணைப்பாக கொடுக்கப்பட்டது.அச்சாபங்களில் மரணம் , முதுமை, பசி, தாகம் எல்லாம் அடக்கம்

வெளியேறிய இருவரும் ஒரு குகையில் இனிதே தனிக்குடித்தனத்தை துவக்கினர் , இல்லறத்தின் விளைவால் ஓராண்டில் கெயின் என்ற ஆண் மகவும் லுலுவா என்ற பெண் மகவுவையும் ஒரே நேரத்தில் இரட்டையர்களாக ஈன்றெடுத்தாள் ஏவாள்.

இரண்டுப்பேரும் வளர்த்து வந்தார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளும் இனிதே கழிய மீண்டும் ஒரு வாரிசு உருவாக்கம் நடைப்பெற்றது இப்போதும் பிரசவத்தில் ஒரு ஆண் , ஒரு பெண் என இரட்டைக்குழந்தைகள். ஆண்க்குழந்தைக்கு ஏபெல் என்றும் பெண்ணுக்கு அக்லியா என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

இங்கே ஒரு சின்ன குறிப்பு இரண்டாவது பிறந்த பெண் அக்லியா , லுலுவாவை விட அழகில் கொஞ்சம் குறைவு என்று கதையில் அல்லது புனித நூலில் சொல்லப்பட்டுள்ளது. இது எதுக்கு இப்போனு தோன்றலாம் ஆனால் இது ஒரு புரதான நிகழ்வுக்கு தூண்டலாக அமையப்போகிறது.

கெயின், ஏபெல் இருவரும் வளர்ந்து வாலிபப்பருவம் அடைந்தனர் அவர்களுக்கு என்று ஒரு தொழில் கொடுக்க வேண்டும் என ஆதம் முடிவெடுத்து கெயினிடம் விவசாயத்தையும் ஏபெலிடம் கால்நடை வளர்ப்பையும் ஒப்படைத்தார் ஒரு பொறுப்பான தந்தையாக.

இருவரும் தத்தமது வேலையில் கவனம் செலுத்தி உற்பத்தி செய்தார்கள், அதனை ஆண்டவனுக்கு படைக்கும் போது ஏபெல்லின் படையலை ஏற்று கெயினுக்கு வெறுப்பேத்தினார் கடவுள், இதனால் சகோதரர்களிடையே ஒரு பூசல் உருவானது.

இதனிடையே பொறுப்பான , பாசமிகு தாயாக ஏவாள் நம்ம பசங்க வளர்த்துட்டாங்க, தொழிலும் செய்யுறாங்க அவங்களுக்கு ஒரு கல்யாணம் செய்துப்பார்க்கலாம் என்று கணவன் ஆதமிடம் சொல்கிறாள்.

இங்கே அறிவார்ந்த மக்களுக்கு நியாயமாக ஒரு கேள்வி வரனும் , கேள்வி வந்துச்சா? உலகின் முதல் மனிதர்கள் ஆதாம், ஏவாள், அவங்களுக்கே இப்போ தான் ஆண் இரண்டு, பெண் இரண்டுனு பிறந்து உலகின் முதல் குடும்பமாக உருவாகி இருக்கு. அப்படி இருக்க அவங்க பசங்களுக்கு எங்கே இருந்து கல்யாணத்துக்கு பெண் கிடைக்கும்? இப்படி ஒரு கேள்வி எல்லாருக்கும் வந்திருக்கனும்.

கேள்விக்கு விடை என்ன , ஏவாளே சொல்கிறாள், வெண்ணைய கையில வச்சுக்கிட்டு நெய்க்கு அலைய வேண்டாம் , கெயின் கூடப்பொறந்த லுலுவாவை ஏபெலுக்கும், ஏபெல் கூடப்பொறந்த அக்லியாவை கெயினுக்கும் கல்யாணம் கட்டி வைக்கலாம்னு ஆலோசனை சொல்கிறாள்.

அனேகமாக மனைவி ஒரு மந்திரி, மனைவி சொல்லே மந்திரம் எல்லாம் அந்த புராணக்காலத்திலேயே ஆரம்பம் ஆகிடுச்சு என நினைக்கிறேன். ஆதமும் சரி அப்படியே செய்யலாம்னு தலையை ஆட்டுகிறான். பொண்டாட்டிக்கு புருஷன்மார்கள் தலை ஆட்டுவதும் அப்போவே ஆரம்பம் ஆகி இருக்குனு தெரியுது :-))

எல்லாரும் ஆதாம் ஏவாளின் வழித்தோன்றல்களே என்று சொல்லி பரிணாமத்தை கிண்டல் செய்யும் மார்க்கபந்துகள் எல்லாம் உணர்ச்சி வசப்படாதிங்க இதெல்லாம் நீங்க புனித நூல்னு சொல்வதில் இருப்பது தான். அதில் என்ன சொல்லி இருக்குனே தெரியாமா எல்லாம் புனிதம்னு கண் மூடித்தனமா நம்புவதால் தெரியாமல் போய் இருக்கலாம். முழுசா படிங்க, அதுக்கு அப்புறமா சொல்லுங்க எது சரினு.

மார்க்கப்பந்துக்களுக்கு ஜீரணிக்க கஷ்டமா இருக்கும் , என்னடா இது அண்ணன் , தங்கச்சிக்க்குள்ள கல்யாணமானு, இதை தான் இத்தனை நாளா புனித நூல் சொல்லிச்சுனு நம்பி பரிணாமத்தை எதிர்த்தோமா என்றெல்லாம் கேட்டு லேசா தலைக்கூட சுத்தும் :-))

ஆதாம், ஏவாள் சூப்பராக திருமணத் திட்டம் போட்டாங்க, ஆனால் அங்கே தான் ஒரு டிவிஸ்ட் வைக்குறார் நம்ம சாத்தான். சாத்தான் அண்ணாச்சி கெயினிடம் போய் ஏற்கனவே உன் படையலை கடவுள் ஏற்றுக்கொள்ளவில்லை அதனால் ஏபெல் தான் உங்க அப்பா,அம்மாவுக்கு செல்லம் ஆகிட்டார், மேலும் இப்போ உன்னோட அழகான தங்கையை ஏபெலுக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டு , ஏபெலின் அசிங்கமான தங்கையை உனக்கு கட்டி வைக்கப்போறாங்க எனவே நீ பேசாம உன் தம்பி ஏபேலை போட்டு தள்ளிடு , அப்புறம் நீ மட்டும் தான் உனக்கே ரெண்டு பொண்ணும் னு ஒரு நாராசமான ஐடியாவை தருகிறார் திருவாளார் சாத்தான்.

கெயினுக்கும் இது சரினு படவே , ஏபேலை நயவஞ்சகமாக பேசி வா வயலை சுத்திப்பார்க்கலாம்னு கூப்பிட்டு சென்று கல்லால் அடித்துக்கொள்கிறான். ஆகாவே புராணம்,இதிகாச வரலாற்றில் முதல் கொலைக்காரன் கெயின் ,அதுவும் சொந்த சகோதரனைக்கொன்றவன் என பிரசித்திப்பெறுகிறான்.

கெயின் ஏபேலை கொல்லும் சம்பவத்தினை விவரிக்கும் ஓவியம். படம் உதவி:விக்கி. நன்றி

பின்னர் கடவுள் கெயினுக்கு சாபம் விட்டது, மீண்டும் சேத் என்ற மகன் ஆதாம் ஏவாளுக்கு பிள்ளையாக பிறந்து அவர்கள் எல்லாரும் தமது தமக்கைகளையே மணம் புரிந்து வம்சம் விருத்தி செய்தது என புராண புனித நூல்களின் கதைப்போகிறது. நாம் இத்தோடு முடித்துக்கொண்டு மானிட குலம் முதல் இரண்டு மனிதர்களிடம் இருந்து தோன்றியது என்பது சரியா அல்லது பரிணாமவியல் தான் சரியா என்று கேள்வியுடன் துவங்குவோம் நமது அறிவார்ந்த சிந்தனையை.

மார்க்க பந்துகளே எல்லா மனிதர்களும் ஆதாம் ஏவாள் வழித்தோன்றல் தான் என்று இனியும் நம்புவிர்களானால், நீங்கள் எல்லாம் சகோதர , சகோதரிகளை மணமுடிக்க ஆர்வம் உள்ளவர்களா? என்பதற்கு பதில் சொல்லுங்கள் ஆம் என்று ஒத்துக்கொண்டால் உங்கள் புனித நூல் சரியாக சொல்லி இருக்கு எனலாம் :-))

ஆதாம் ஏவாள் வழிவந்ததே மனிதகுலம் எனும் சித்தாந்ததிற்கு மாற்றாக வருவது பரிணாமவியல், மைட்டோ காண்டிரியல் ஏவாள் எனப்படும் சித்தாந்தம், இது குறித்து அடுத்தப்பதிவில் பார்க்கலாம்.

பரிணாமவியலுக்கு மாற்றாக சொல்லப்படுவது அறிவார்ந்த படைப்பாக்க சித்தாந்தம் ஆகும். எப்படி ஆகினும் அறிவியல் சார்ந்து ஆய்வு செய்பவர்கள் அனைவருமே ஒரு ஜோடி மனிதர்களிடம் இருந்து உலக மக்கள் அனைவரும் பிறந்தார்கள் என்பதை மறுக்கவே செய்கிறார்கள்.

 பதிவர் சார்வாகன் பரிணாமவியலை அறிவார்ந்த படைப்பாக்கம் என்பதன் வாயிலாக நோக்குபவர் ஆனாலும் பரிணாமம் , மைட்டோக்காண்ரியல் ஈவ் பற்றி எல்லாம் விரிவாக அலசுபவர். பரிணாமவியலுக்கு மாற்றுக்கருத்து எனினும் ஆதாம் ஏவாள் தியரி அறிவார்ந்த சித்தாந்தம் அல்ல என புரியவைக்கும் அவரதுப்பதிவுகள் விருப்பம் உடையவர்கள் அங்கு சென்று மேலதிக தகவல்கள் பெறலாம்.

1)சார்வாகன் -1

2)சார்வாகன் -2

3)சார்வாகன் -3

மேலும் விக்கிப்பீடியாவில் உள்ள ஆதாம் ஏவாள், மற்றும் அவர்கள் சந்ததி குறித்தான தகவல் பக்கங்களின் சுட்டி:

1)) ஆதாம் ,ஏவாள்

2) கெயின் , ஏபெல்

3))சந்ததியினர்பிற்சேர்கை:-

சார்வாகனின் கெயினின் மனைவி யார் என்னும் பதிவு,
கெயினின் மனைவி யார்

ரெவெரி அளித்துள்ள கெயினின் மனைவி குறித்தான சுட்டி

கெயினின் மனைவி