Wednesday, December 12, 2012

அஃதே,இஃதே-4: 27-11-2043(12-12-12)# 12-12-12

 எல்லாருக்கும் 27-11-2043 என்ற அபூர்வ நாளில் அடியேனின் அதி அற்புத வாழ்த்துக்கள்!!!

ஹி...ஹி இன்னிக்கு 12-12-12 தானே என சிண்டை பிச்சுக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன் ,தலைப்பிலேயே நான் என்ன சொல்லவருகிறேன் என்பது புரிந்து இருக்கும்.

ஆங்கில முறையில் கிரிகோரியன் காலண்டர் முறையில் தான் இன்று 12-12-12 என வரும், அதனை நூறாண்டுக்கு ஒரு முறை வரும் அதிசயம் என பலர் அதிசயமே அதிசயத்துப்போகும் வண்ணம் பதிவுலகில் பிரஸ்தாபித்து இருப்பார்கள் :-))

ஆனால் நம்ம தமிழ்நாட்டு தமிழர்களுக்கு என்றே ஒரு நாட்காட்டி முறை உருவாகி ரொம்ப காலமாச்சு , நிறைய பேரு இன்னும் தமிழ் நாட்காட்டி முறை என்றால் பிரபவ என துவங்கி 60 ஆண்டுகளை கொண்ட விக்ரம சாகா நாட்காட்டியினையே நினைத்துக்கொண்டிருப்பார்கள், ஆனால் அது வடமொழி நாட்காட்டி, அப்படியே சுட்டு இங்கே வைத்துவிட்டார்கள், இந்த 60 ஆண்டுகளும் நாரத பாகவதருக்கும் , ஊதாங்குழல் கிருஷ்ணாவுக்கும் பிறந்த புள்ளைங்களாம் :-))

அது எப்படி ரெண்டு பேரும் ஆம்பிளைங்களாச்சே என வாய எல்லாம் தொறக்கப்படாது, பகவான் எல்லாத்துக்கும் ஒரு இண்டெலிஜென்ஸ் பிளான் வைத்திருப்பார், எனவே நாரத பாகவதரின் ஸ்திரி மோகத்தினை தனிக்க கவர்ச்சி கன்னி அவதாரம் எடுத்துவிட்டார் எல்லாம் வல்ல ஊதாங்குழல் கண்ணன் :-))

எனவே இந்த கண்றாவி வட மொழி ஆண்டுக்கணக்கு வேண்டாம் என கி.பி 1921 இல் மறைமலை அடிகள் தலைமையில் ஒரு தமிழறிஞர்கள் குழு கூடி , தமிழ்ப்புலவர் திருவள்ளுவரின் பிறந்த ஆண்டினை கணக்கிட்டு , அதன் அடிப்படையில் ஒரு தமிழ் நாட்காட்டி உருவாக்கினார்கள்.

திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு 31 என எடுத்துக்கொண்டு அது முதல் ஆண்டுக்கணக்கினை துவக்கினார்கள், எனவே இவ்வாண்டு 2012 +31 எனக்கூட்டினால் 2043 வரும்.

கார்த்திகை என்பது 11 ஆவது மாதம் ,இன்று கார்த்திகை 27 எனவே தான் 27-11-2043 என இந்நாளை குறிப்பிட்டேன் , எனவே 12-12-12 என்று நாள்,மாதம், ஆண்டு வருவது எல்லாம் சிறப்பு என சொல்வதில் எந்த பெருமையும் இல்லை ,ஏன் எனில் ஒவ்வொரு வகை காலண்டரிலும் ஒவ்வொரு நாள் இப்படி வர வாய்ப்புள்ளது, எனவே எல்லா நாளும் சிறந்த நாளே!

ஹி...ஹி ஆனாலும் சும்மா இருக்க முடியுமா , ஒரு பதிவைப்போட்டு கடமையாற்றுவது தானே நம்ம பொழப்பு என இப்பதிவைப்போட்டு இந்நாளை எனது பதிவுலக டைம் லைனிலும் பதிவாக்கிட்டேன் :-))

கடந்தாண்டு 11-11-11 அன்றும் இதே போல சேவை ஆற்றியுள்ளேன் ,அதனைப்படிக்க சுட்டியை தட்டிவிடவும்.

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: 11-11-11


#சின்னசாமி சுப்பிரமணிய பாரதியார்.11-12-1882 இல் திருநெல்வேலி சீமையில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார் ,சிறு வயதில் சுந்தரமூர்த்தி என்ற பெயரில் அறியப்பட்டாலும் பின்னாளில் சுப்பிரமணிய பாரதியாராக மாறி  தனது 38 வயதிற்குள் பல புரட்சி மிகு , எழுச்சி கவிதைகளை பாடி தமிழர் மனதில் நீங்கா இடம் பெற்று ,செப்டெம்பர் -11,1921 ஆம் ஆண்டு காலமானார். அவர் மறைந்த போது அவர் வயதின் எண்ணிக்கையை விட குறைவாக வெறும் 32 நபர்கள்  மட்டுமே இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள் என்பதில் இருந்து ,நம் மக்களின் தமிழ் ஆதரவு நன்கு புலப்படும்.

நம்ம ஊரில் ஒரு சாமானியன் தமிழ், தமிழன் என்றால் பொழைக்க தெரியாதவன் ,அதே அரசியல்வாதி தமிழ், தமிழன் என்றால் பொழைச்சுப்பான் :-))

பாரதியின் நினைவில் ...இப்பாடலை ரசியுங்கள்!# super Star:சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் ... கேட்கிறவன் கேணையனாகவே இருக்க வேண்டும், எனவே அவரைப்பற்றி நாம தனியாக சொல்லத்தேவையில்லை, தமிழ் திரைப்படத்தின் வணிக வலிமையை தமிழகம் தாண்டி உலகிற்கு நடைமுறையில் காட்டியவர் நம்ம "ரியல் தல" மட்டுமே!, அவரின் பிறந்த நாள் இன்று தான் என நான் வேற தனியாக சொல்லணுமா?

வாழ்த்துக்கள்!!!

பட்டைய கிளப்பும் இப்பாடலை ரசித்து மகிழுங்கள்!#மரமும் மாணவர்களும்:தமிழகத்தில் வனப்பரப்பு தேசிய அளவில் பரிந்துரைக்கப்பட்ட 18 சதவீதத்திற்கும் குறைவாக 15 சதவீதம் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொன்னாலும், அதெல்லாம் காகித எண்ணிக்கை என நினைக்கிறேன் ,அதைவிட குறைவாகவே வனப்பரப்பு இருக்க வேண்டும்.

மேலும் சாலை ஓரம் இருக்கும் மரங்களை எல்லாம் சாலை விரிவாக்கம், புதிய சாலைகள் போடுவது என வெட்டி வீழ்த்திவிட்டார்கள்.  தானே புயல் வீசிய போது பல லட்சம் மரங்கள் வீழ்ந்து கிடப்பதை நேரடியாக பார்த்தவன், புயலால் கடலூர் மாவட்டத்தில் முன்பிருந்ததை விட மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

மேலும் சில ,பல அரசியல் கட்சிகள் மரம் வெட்டிப்போட்டே கட்சியை வளர்க்கிறார்கள்,இது போக சமூக விரோதிகளும் மரங்களை வெட்டிக்கடத்துகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் மரங்களே இல்லாத சூழல் உருவாகி, வெப்பம், சுற்று சூழல் மாசு அதிகரித்து, மழை பொழிவு குறையலாம், தற்சமயமே பெரும்பாலும் மழை பொழியாமல் ஏமாற்றிவிடுவதை அனைவரும் உணரலாம்.

அரசு ,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எல்லாம் அடிக்கடி மரம்நடுவிழா என நடத்தி பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுப்பதை அடிக்கடி பார்க்கலாம், ஆனால் அப்படி நட்ட மரங்கள்(மரக்கன்று) என்னாச்சு என அதன் பின் யாரும் கவலைப்படுவதில்லை, புதிதாக நடப்பட்ட மரக்கன்றுகள் நிலத்தடி நீரை உறிஞ்சும் அளவுக்கு வேர் ஊன்றி இருக்காது, எனவே தொடர்ந்து நீர் ஊற்ற வேண்டும், ஆனால் மரம் நட்டவர்கள், கைத்தட்டிக்கொண்டு வேற ஊருக்கு மரம் நடும் வேலையை செய்ய போய்விடுவார்கள், நம்ம மக்களும் மரம் வளர்ந்தால் நமக்கும் நல்லது தானே என சுயமாக தண்ணீரும் ஊற்றுவதில்லை,எனவே ஒரே வாரத்தில் மரக்கன்று காய்ந்து விறகாக ஆகிவிடும், அக்கம் பக்கம் மக்கள் அடுப்பெரிக்க பொறுப்பாக புடுங்கிக்கொன்டு போய்விடுவார்கள் :-))

இதான் மரம் நடும் விழாவின் உண்மையான நிலை, இப்படியே செய்துக்கொண்டிருந்தால் , எக்காலத்திலும் தமிழகம் பசுமையாக மாறாது.

இதற்கு ஒரு நல்ல தீர்வாக நான் நினைப்பது என்னவெனில் , பள்ளி மாணவர்களை இதற்கு பயன்ப்படுத்துவதே ஆகும்.

தமிழகத்தில் உள்ள உயர் நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை-5185

கடந்தாண்டு(2012) இல் 10.87 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்கள், அப்படியானல் 5 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆண்டுக்கு இதே எண்ணிக்கைக்கு குறையாமல் மாணவர்கள் இருந்திருக்க வேண்டும்.

எனவே 5- 10 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை -

10.87*5=54.35 லட்சம் மாணவர்கள்.

ஒரு மாணவன் 5 ஆம் வகுப்பில் சேரும் போதே ஒரு மரக்கன்றை கொடுத்து நட்டு ,பராமரிக்க சொல்ல வேண்டும், ஏதேனும் ஒரு பொது இடத்தில் நட வைக்கலாம், மேலும் தினசரி ஒரு இரண்டு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் எடுத்து சென்று ஊற்றினாலே போதும் சுமார் மூன்று மாதத்தில் மரம் நிலைத்துவிடும்.

இதே போல ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டும். மாணவர்கள் நட்ட மரம் உண்மையில் இருக்கிறதா என்பதை ஆண்டு இறுதியில் ஆசிரியர் கணக்கெடுக்க வேண்டும், இவ்வாறு ஆண்டுக்கு ஒரு மரக்கன்றை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக கொடுக்க வேண்டும். இதனால் மாணவர்கள் ஊக்கத்துடன் மரம் நடுவார்கள்.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மரக்கன்று நட்டு பராமரித்தை காட்டினால் 5 மதிப்பெண்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் கொடுக்கலாம், சமூக அறிவியல் பாடத்திற்கு கொடுத்தால் பொறுத்தமாகவும் இருக்கும். எத்தனையோ 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு சில மதிப்பெண்களில் தோல்வியடைவதுண்டு ,அவர்களுக்கு எல்லாம் போனஸ் மதிப்பெண் ஒரு வர பிரசாதமாக இருக்குமே.

போனஸ் மதிப்பெண்கள் கொடுத்தால் கல்வி தரம் குறையும் என்றெல்லாம் சிலர் சொல்லக்கூடும், ஆமாம் 5 மதிப்பெண் குறைவாக எடுக்க வைத்தால் மட்டும் கல்வித்தரம் கூடிவிடுமா? இதனால் யாருக்கு என்ன நட்டம் ,அனைவருக்கும் ஒரே சீராக 5 மதிப்பெண்கள் கிடைக்கும் என்பதால் யாருக்கும் சாதகமாகிவிடாது.

ஆண்டுக்கு 50 லட்சம் மாணவர்கள், 50 லட்சம் மரக்கன்றுகள் நடுவதாக கொண்டால் பத்து ஆண்டுகளில் 5 கோடி மரங்கள், அவற்றில் 50% பிழைத்து மரமாக நின்றாலும் 2.5 கோடி மரங்கள், உருவாகி தமிழகம் பசுமையாகுமே!

மேலும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆண்டுக்கு ஒரு மரம் வீதம் 10 ஆம் வகுப்பு வரும் போது ஐந்து ஆண்டுகளில் ஐந்து மரம் நட்டு, உருவாக்கி இருப்பார்கள், இவை அம்மாணவர்களின் சொத்து , எனவே 10 ஆம் வகுப்பு முடித்து வெளியேறும் போது அம்மரங்களை அரசு ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து வாங்கிக்கொள்வது போல செய்ய வேண்டும், இதன் மூலம் மாணவர்களுக்கு உயர்நிலைப்பள்ளி கல்வி முடிக்கையில் ஒரு ஊக்கத்தொகை கிடைத்தது  போல இருக்கும். மேலும் ஒவ்வொரு மாணவருக்கும் பசுமை சான்றிதழ் என ஒன்றை அளித்து அவர்களின் சேவையை கவுரவிக்கலாம். இது பின்னாளில் வேலைக்கு செல்லும் பொழுது அம்மாணவரின் சமூக பொறுப்புணர்ச்சிக்கு சான்றாக காட்ட உதவும்.

இது போல ஏதேனும் மாற்று வழியில் மரங்களை நட அரசு சிந்தித்தால் மட்டுமே தமிழகம் பசுமையாக மாறும், வழக்கம் போல அரசு எந்திரம் மூலம் மரம் நடுகிறோம் என செலவு கணக்கு காட்டிக்கொண்டிருந்தால் வருங்காலத்தில் தமிழகம் பாலைவனமாக தான் மாறும்.

------------------
பின் குறிப்பு:

தகவல் ,மற்றும் படங்கள் உதவி,

கூகிள்,விக்கி,யூடியூப்,தமிழ்நாடு அரசு இணைய தளங்கள்,நன்றி!
-----------------------