Saturday, August 25, 2007

காணாமல் போகும் நாட்டுக்காளைகள்!

(அரசு வெளியிட்ட காங்கேயம் காளை சிறப்பு தபால் தலை!)

மணப்பாறை மாடு கட்டி , மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்டு உழுது போடு ... என்ற புகழ்ப்பெற்ற தமிழ் திரைப்பாடலை பலரும் கேட்டு இருப்போம். ஆனால் தற்போது அப்படிப்பட்ட புகழ்பெற்ற நம் நாட்டின் பூர்வீக மாட்டினங்களை காண்பது அறிது ஆகி வருகிறது. பல பூர்வீக மாட்டினங்கள் இருந்த இடம் தெரியாமல் அழியும் சூழலில் இருக்கிறது.

இப்போது இருக்கும் பெரும்பாலானா மாடுகள் மேலை நாட்டு ஆங்கில மாடுகளுடன் கலப்பினம் செய்யப்பட்டு பெறப்பட்ட மாட்டு வகைகள் ஆகும்.

இந்திய மாடுகள் , அளவில் சிறியதாகவும் , திமில்களுடன் , இருக்கும். ஆனால் கடின உழைப்பாளிகள் , குறைந்த உணவு எடுத்துக்கொண்டு வறட்சி ,வெப்பம் தாங்கி வளரக்கூடியவை. உழவு, மற்றும் கறவை மாடுகள் என இருவகைப்படும்.சில இன வகைகளில் கறவைக்கும் , பாரம் சுமத்தல் , இழுவை என இரண்டுக்கும் பயன்படும்.

அதிக பால் ,மற்றும் மாட்டிறைச்சிக்காக இந்திய மாடுகள் மேற்கத்திய மாடுகளுடன் செயற்கை கருவூட்டல் மூலம் இனக்கலப்பினம்(artificial insemenation) செய்யப்பட்டது. அதன் விளைவாக பால் உற்பத்தியும் பெருகியது, எதன் ஒன்றுக்கும் பக்க விளைவு என ஒன்று இருக்கும் அதன்படி , இதனால் பல இந்திய வகை மாடுகள் வளர்ப்பது குறைந்து காலப்போக்கில் அழியக்கூடிய சூழல் வந்து விட்டது , சில பூர்வீக மாட்டு வகைகள் ஒரு சில நூறுகள் தான் எஞ்சி இருக்கின்றது என்றால் நாம் எந்த அளவு தீவிரமாக வணிக நோக்கில் கலப்பின மாடுகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம் என்பது புரியும்.

எனவே தற்போது அப்படி பட்ட அழியும் நிலையில் உள்ள மாட்டினங்களை(endangerd species) பாதுகாக்கப்பட்டவைகளாக அறிவித்து பண்ணைகளில் பராமரித்து எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் நாட்டை சேர்ந்த பூர்வீக மாடுகளில் அழியும் நிலையில் உள்ள மாடு வகைகளில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த உம்பளச்சேரி இன மாடுகளும் ,திருச்சி மாவட்டத்தை சேர்ந்த புங்கணூர் இன மாடுகளும் முதலிடத்தில் இருக்கிறது, இவை மிக குறைந்த எண்ணிக்கையிலே இருக்கிறது.உலக அளவில் இவை அழியும் நிலையில் உள்ள அரிய இன மாடுகள் என "UNO" போன்ற அமைப்புகள் அறிவித்துள்ளது.

அதிக பால் ,இறைச்சி தரும் கலப்பினம் இருக்கும் போது நாட்டு மாடுகள் அவசிய்மா என கேள்வி எழக்கூடும். இந்நாட்டு மாடுகளின் மரபணுக்களே புதிய வகை கலப்பின மாடுகளை உருவாக்க பயன்படும் மூலம். இவை அழிந்து விட்டால் பின்னர் மீண்டும் பெறவே முடியாது. அமெரிக்கா , பிரேசில் , இஸ்ரேல் போன்ற நாடுகள் நம் காங்கேயம் காளைகளை இறக்குமதி செய்து அவற்றின் விந்தணு மூலம் வறட்சி தாங்கும் புதிய கலப்பினங்கள் உருவாக்கியுள்ளார்கள்.

நம் நாட்டில் தற்போது தான் விழிப்ப்புணர்வு ஏற்பட்டு சில அழியும் நிலையில் உள்ள மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசை விட சில தனியார்களின் பண்ணைகளின் தயவில் தான் இன்னும் சில இனங்கள் அழியாமல் இருக்கிறது.

இந்திய பூர்வீக மாடுகளின் வகை மற்றும் அவை காணப்படும் மாநிலம்:

1) அமிர்த மகால் -கர்நாடகா

2) பச்சூர் - பிகார்

3) பர்கூர் - தமிழ்நாடு

4) தாங்கி - மகாராஷ்டிரா

5) தியோனி - மகாராஷ்டிரா

6) கவொலாவோ - மகா

7) கீர் - குஜராத்

8) ஹல்லிகர் - கர்நாடகா

9) ஹரியானா - ஹரியானா

10) காங்கேயேம் - தமிழ்நாடு

11) காங்ரெஜ் - ராஜஸ்தான்

12) கேன்கதா - உத்திரப்பிரதேசம்

13) கேரிகார்க் - உத்திரப்பிரதேசம்

14) ஹில்லார் - மகாரஷ்டிரா

15) கிருஷ்ணா வாலி - கர்நாடகா (250க்கும் குறைவாக)

16) மால்வி - ராஜஸ்தான்

17) மேவாதி - உத்திரபிரதெசம்

18)நகோரி - ராஜஸ்தான்

19)நிமாரி - மகா

20)ஓங்கோல் - ஆந்திரா

21) பொன்வார் - உத்திரபிரதேசம்

22) புங்கனூர் - ஆந்திரா , தமிழ்நாடு ( 100 க்கும் குறைவாக)

23) ரதி -ராஜஸ்தான்

24) சிவப்பு காந்தாரி - மகா, குஜராத்

25) சிவப்பு சிந்தி - பஞ்சாப்,

26) சாஹிவால் - பஞ்சாப்

27) சிறி - மேற்குவங்கம் , சிக்கிம்

28) தார்பார்க்கர் - ராஜஸ்தான்

29) உம்பளச்சேரி - தமிழ்நாடு

30) வச்சூர் - கேரளா (100 க்கும் குறைவாக)

31) கங்காத்திரி - உ.பி, பீகார்,

32) மல்நாட் ஹிடா - கர்நாடகா

33) தோ தோ - நாகாலாந்த்

*இவற்றில் மிகவும் அருகி , அழியும் நிலையில் வெகு சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் மாடு வகைகள் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

*இது வரை அந்த வகை மாடுகளில் எந்தனை இருக்கிறது என கணக்கெடுக்பட கூட இயலாத எண்ணிக்கையில் உள்ள மாடு வகைகள் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. இவையும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள இன மாடுகளே!

மாடுகள் மட்டும் அல்ல , ஆடு , கோழி , ஒட்டகம் என பல இந்திய கால்நடைகளும் ,விலங்குகளும் வணிக நோக்க இனப்பெருக்கத்தினால் அழியும் நிலையில் உள்ளது , அவற்றை பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்!