Thursday, June 21, 2007

இன்று உலக இசை நாள் மறக்கப்பட்ட இசை மேதை எம்.எஸ்.வி!

கேள்விக்குறி!

எஸ்.ராமக்கிருஷ்ணன், பிரபலமான சிற்றிலக்கிய எழுத்தாளர், தற்போது வெகுஜன ஊடகங்களாகிய விகடனிலும் தொடர் எழுதுகிறார் கேள்விக்குறி என்ற தலைப்பில், இந்த வார விகடனில் மீதமிருக்கும் வலி என்ற பெயரில் அவரது கட்டுரை வந்துள்ளது அதிலிருந்து என்னை கவர்ந்த ஒரு பகுதி!

எஸ்.ராமகிருஷ்ணனின் நண்பர் கூறியதாக வந்துள்ள பகுதி!

என் நண்பரும் இசை விமர்சகருமான ஷாஜியிடம் பேசிக்கொண்டு இருந்த போது அவர் சொன்னார்...எம்.எஸ்.விச்வநாதன் எவ்வளவு பெரிய இசையமைப்பாளர்! தென்னிந்தியாவில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ லட்சம் பேர் அவர் பாடல்களை கேட்டு ரசிக்கிறார்கள்.அவ்வளவு பெரிய இசையமேதைக்கு இது வரை மிகப்பெரிய அங்கீகாரம் என்று எதுவுமே கிடைக்கவில்லை. தமிழ்த்திரையுலகின் இசை அரசனாக இருந்த எம்.எஸ்.வி. க்கு இன்று வரை மானில அரசு விருதோ, தேசிய விருதோ கிடைத்தது கிடையாது.பத்மஷ்ரி,பத்மபூஷன் போன்ற விருதுகள் எதற்கும் அவர் பெயர் பரிசீலனை செய்யப்பட்டதில்லை. திரையிசை சாதனை மட்டுமின்றி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் இசை மைத்தது போன்ற எண்ணிக்கையற்ற சாதனைகள் செய்துள்ள மனிதரையே நாம் தொலைவில் வைத்துதான் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

மக்களின் மனதில் நீங்காத இடம் கிடைத்துள்ள அங்கீகாரம் தவிர வேறு விதங்களில் கெளரவப்படுத்தவோ,சிறப்பு செய்யவோ நாம் மறந்து போனோம். அது சரி அவராக வாய்விட்டுக் கேட்கவா முடியும்? என்றார்.

பசிக்கிறது என்றால் வாய்விட்டுக் கேட்கலாம்.ஆனால செய்த பணிக்காக மரியாதையை எப்படி வாய்விட்டுக் கேட்பது?

நம் வாழ்வுடன் ஒன்றுகலந்து விட்ட கலைஞர்களை,நம் மொழியும் வாழ்வும் உயர்வு பெறப் பாடுபட்ட அறிஞர்களை,வல்லுனர்களை, மூதோர்களை அடையாளம் கண்டு கெளரவப்படுத்த வேண்டியது நமது அடிப்படைச் செயல்பாடு அல்லவா?

எவ்வளவு அலட்சியமாக கடந்த காலத்தையும் , மனிதர்களையும் நம் மக்கள் மறந்து விடுகிறார்கள் என்று பார்த்தால் சற்றே பயமாகவும் , வெறுப்பாகவும் உள்ளது இந்த போக்கு எது வரை செல்லும் நாட்டையும் மறக்கும் வரை செல்லுமோ?

இன்று உலக இசை நாள் , எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ....என்ற பாடல் தான் மனதில் கேட்கிறது.கண்ண தாசன் மற்றும் எம்.எஸ்.வி இணைந்தால் இனிமையான பாடல்கள் தான் , அதை இசை அமைத்தவரோ எங்கேயோ மறக்கடிக்கப்பட்டு விட்டார். எம்.எஸ்.விக்கு பின்னால் வந்த கற்றுக்குட்டி இசையமைப்பளர்கள் எல்லாம் பத்மஷ்ரி விருதுகள் வாங்கியுள்ளார்கள் இவரை மட்டும் கவனிக்காமல் விட்டவர்களை என்ன செய்வது என்பது தான் எனது கேள்விக்குறி?

Friday, June 15, 2007

செஞ்சிக்கோட்டை வாலிபன் ராஜா தேசிங்கு!

தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு , மேற்கு தமிழகத்தில் வலிமையான கோட்டை கொத்தளம் உடைய அரசியல் களம் என்றால் அது செஞ்சி தான். சென்னை,வேலூர் கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி.

சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி , சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது.இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கபுரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று.

ஆடு மேய்க்கும் ஒருவர் அந்த வழியே சென்ற முனிவருக்கு பசிக்கு உணவளித்ததால் இங்கே புதையல் உள்ளது என செஞ்சிமலைப்பகுதியை காட்டி சென்றார் அதனை எடுத்த ஆடு மேய்ப்பவர் அந்த பணத்தைக் கொண்டு கட்டிய கோட்டை தான் செஞ்சிக்கோட்டை என்பார்கள்.புதையல் பணத்தில் கோட்டை கட்டியவர் பெயர் ஆனந்த கோன்,அவ்ரது மகன் கிருஷ்ணக் கோன் தான் கிருஷ்ண கிரி உருவாக காரணமாக இருந்தார் பின்னாளில்.

பின்னாளில் செஞ்சிக்கு புகழ் வரக்காரணமாக இருந்தவர் ராஜா தேசிங்கு , இவரைப்பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களும் , கதைகளும் உண்டு.

ராஜ தேசிங்கின் வரலாறைப் பார்ப்போம், மராத்தியர்கள் சிவாஜி தலைமையின் கீழ் வீறுக்கொண்டு எழுந்து அவுரங்கசீப்பிற்கு குடைச்சல் கொடுத்து பெரிய சாம்ராஜ்யத்தினை நிறுவ முயன்றார்கள் அப்பொழுது மரத்தாவிலிருந்து , கொண்கன் கடற்கரை வழியாக கர்னாடக , தமிழகம் என படை எடுத்து தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.

மராத்தியர்களை அழிக்க வேண்டும் என்று அவர்கள் செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து படைகளை அனுப்பி கொண்டு இருந்தார் அவுரங்கசீப்.இதற்கிடையே சிவாஜி மறைந்து விட அவரது மகன் ராஜாராம் தொடர்ந்து போரிட்டார் ஆனலும் ஒரு நிலைக்கு மேல் சாமாளிக்க இயலாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து செஞ்சிக் கோட்டையில் பதுங்கினார்.அவரைப்பிடிக்க பெரும் படையை அவுரங்கசீப் மகமூத் கான் என்பவர் தலைமையில் அனுப்பினார்.

மகமூத் கானினின் படையில் குதிரைப்படை தலைவராக இருந்தவர் சொரூப் சிங் , ராஜபுத்திர வீரர் அவரது மகன் தான் ராஜ தேசிங். 11 மாத கால முற்றுகைக்கு பின்னர் கோட்டையை அவுரங்க சீப்பின் படைக் கைப்பற்றியது, போரில் தீரத்துடன் செயல்ப்பட்டதால் சொருப் சிங்கின் வசம் கோட்டையை ஒப்படைத்து ,அந்த பகுதியினை நிர்வகித்து வர சொல்லிவிட்டார் அவுரங்கசீப்.இதற்கிடையே அவுரங்கசீப்பும் மறைய ஷா ஆலம் என்பவர் தில்லி சுல்தான் ஆனார்.

ஷா ஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க இயலவில்லை எனவே குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப் சிங்க்கை தில்லி வர சொன்னார் சுல்தான், அவருடன் துணையாக 18 வயதே ஆன ராஜா தேசிங்கும் சென்றான்.தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தன்க்கு ஒரு வாய்ப்பு அளித்துப்பார்க்க சொல்லி தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான்.வாய்ப்பளிக்கப்பட்டது அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்துக் காட்டினான். அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்து விட்டார் சுல்தான் .அது மட்டும் அல்ல இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார்.

தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய் (இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை). அவர் சமைந்த நேரம் சரியான நேரம் இல்லை என்பதால் ஆறு மாதக்காலம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்ககூடது என தடை விதித்து விட்டார் பெண்ணின் தந்தை.முகம் பார்க்காமலேயே தான் திருமணம் நடந்து அந்தக்கால காதல் கோட்டை!

-தொடரும்.

சென்னையில் ஒரு மழைக்காலம்!

சென்னையில் என்னைப்போல புனிதர்கள் இருப்பதன் அடையாளமாக இன்று இரவு நல்ல மழை தாராளமாக பெய்கிறது.

ரஜினி ரசிக கண்மணிகள் அவர்கள் தலை படம் வருவதால் தான் சென்னையில் மழை என்று கொஞ்சம் போல உடான்ஸ் விட்டுக்கொள்ளலாம்,யார் கேட்கப் போகிறார்கள்.

மழையைப் பார்த்து ஒரு மாமாங்கம் ஆகப் போகிறது என்பதால் ஆர்வமாக வேடிக்கைப் பார்த்தேன். ஒரு தம் பற்ற வைத்துக்கொண்டு (நமுத்து விட்டது பாதி தம்)

மழை பெய்தால் சினிமாவில் கதாப்பாத்திரங்கள் எல்லாம் ஓடிப்போய் நனைகிறார்கள் (பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்கவோ?) நாம் மட்டும் ஒதுங்கி நிற்கிறோமே என்று தோன்றியது ஆனால் நாளைக்கு நமககு தான் மூக்கடைப்பு ,காய்ச்சல் ,இன்ன பிற எல்லாம் வந்து நான்கு விரல் காட்டும் அனாசின் தேவைப்படும்!

மழை பெய்த்ததும் மண் வாசனை வருமே எங்கே காணோம் என்று கொஞ்ச நேரம் மண்டையை பிறாய்ந்துக்கொண்டேன் இந்த கான்கிரிட் காட்டில் அதற்கெல்லாம் கொடுப்பினை இல்லை என்பதை தாமதமாக விளங்கிக் கொண்டேன்.

சரி அந்த மண்வாசனை வரக்காரணம் ஒரு பேக்டீரியா என்று படித்த நியாபகம் அது என்ன என்று யோசித்து கடைசியில் ஒரு பழைய புத்தகத்தை தேடி கண்டுக்கொண்டாயிற்று, "ஆக்டினோமைசெட்ஸ்" என்ற நுண்ணுயிர் , வறண்ட காலத்தில் ஸ்போர்களை உருவாக்கி மண்ணில் விட்டு செல்லும் மழை நீர் பட்டதும் அவை உடைந்து நுண்ணுயிர் வெளிப்படுகிறது,எனவே மண்வாசனை வருகிறது என ஆழமாக சுவாசித்தால் நுண்ணுயிர் தான் நம் மூக்கில் போகும் ஜாக்கிரதை(பயம் வேண்டாம் நோய் எதுவும் வராது அது ஒரு தாவரங்களுக்கான நுண்ணுயிர்)

Wednesday, June 13, 2007

விடுதலைப்போரும் வீரபாண்டிய கட்ட பொம்மனும், சமூக பின்னணியும்!

இந்திய விடுதலைப் போரைப் பற்றி வட இந்திய ஆய்வாளர்கள் குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவக்குவார்கள், ஆனால் அதற்கு முன்னரே தமிழகத்தில் விடுதலை வித்து விதைக்கப் பட்டுவிட்டது.

பூலித்தேவன் மற்றும் கட்ட பொம்மன் இருவரும் சற்றேரக்குறைய ஒரே காலக்கட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனியரின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடியவர்கள். இவர்களின் போராட்டம் தோல்வியில் முடியவும், அதன் முக்கியத்துவம் ஒட்டு மொத்த இந்திய வரலாற்றிலும் குறைத்து மதிப்பிடவும் என்ன காரணம் என்று அலசுவதே எனது நோக்கம்!

அப்போதைய தமிழக ஆட்சி முறை பாளையம் அல்லது சமஸ்தானம் என்ற பெயரில் நடைப்பெற்று வந்தது.இந்த பாளையக்காரர் முறை தமிழக முறை அல்ல அதனை இங்கு அறிமுகப்படுத்தியவர் விஜய நகர பேரரசரான கிருஷ்ண தேவ ராயர் ஆவார். மூவேந்தர் காலத்திற்கு பிறகு தமிழகம் விஜய நகர பேரரசின் கீழ் வந்தது,அப்போது தமிழகத்தை நிர்வகிக்க கிருஷ்ண தேவ ராயரிடம் மெய்க்காப்பாளர்கள்,மற்றும் அரண்மனை வாயில் காப்போன் என பணிபுரிந்த 3 பேரை நாயக்கர்களாக தமிழகத்திற்கு அனுப்பினர்.அவர்களை மதுரை நாயக்கர்கள்,தஞ்சை நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள் என்பர், புகழ் பெற்ற திருமலை நாயக்கர், ராணி மங்கம்மா எல்லாம இவர்கள் வழி வந்தோரே. ,அந்த நாயக்கர்களின் கீழ் வரி வசூலிக்கவும் நிர்வாகம் பண்ணவும் உருவாக்கப்பட்டது தான் பாளையம் முறை.

ஒரு பாளையம் என்பது 96 கிராமங்களை உள்ளடக்கியது. அப்படி ஒரு பாளையத்தை தான் வீர பாண்டிய கட்ட பொம்மன் பஞ்சாலம் குறிச்சியை தலை நகராக கொண்டு ஆண்டுவந்தார்.தந்தை பெயர் ஜக வீர பாண்டியன்.அவர் பால் ராஜு என்ற பாளையக்காரர் வழி வந்தவர் .

வீர பாண்டியனின் இயற் பெயர் கருத்தப் பாண்டி என்பதே. இரண்டு சகோதரர்கள் சிவத்தையா என்கிற ஊமைத்துரை,மற்றும் துரை சிங்கம் ஆகியோர்.இரண்டு சகோதரிகள் ஈஸ்வர வடிவு மற்றும் துரைக்கண்ணு.

தென் மாவட்ட பாளையக்காரர்கள் அனைவரும் மதுரை நாயக்கர்களுக்கு வரி செலுத்த கடமை பட்டவர்கள் பின்னர் முகலாய ஆட்சியின் போது ஆர்க்காடு நவாப்புக்கு வரி செலுதினார்கள்.அப்போதைய ஆர்க்காடு நவாப் முகமது அலி என்பவர் வெள்ளையரிடம் கடன் வாங்கியதால் வரி வசுலிக்கும் உரிமையை தந்து விட்டார்.

வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் ஏன் வரி வசூலிக்கும் உரிமையை வாங்க வேண்டும் , காரணம் வெள்ளையர்களின் அனைத்து வியாபரங்களும் பலத்த நஷ்டம் அடைந்து விட்டது , வெள்ளையர்களின் துணிகளை வாங்க அப்போது யாரும் முன் வர வில்லை நம் மக்கள் மேல் சட்டை அணிவதில்லை , குழாய் மாட்டுவதில்லை பின்னர் அந்த துணிகளை எதற்கு வாங்கப் போகிறார்கள்.இங்கிலாந்தில் இருந்து லாபம் ஈட்ட வில்லை எனில் கம்பெனியை இழுத்து மூடி விட்டு வரவும் என இறுதி ஓலை வந்து விட்டது.எனவே வேறு வழி இல்லாமல் வரி வசூலித்து லாபம் ஈட்ட தலைப்பட்டார்கள்.

வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கும் வெள்ளையர்களுக்கும் மோதல் உருவாகக் காரணம் என்ன என்பதை சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்ட பொம்மன் படம் பார்த்த அனைவரும் அறிவர், படத்தில் முழுவதும் காட்டப்படவில்லை.

இன்னும் சொல்ல போனால் வெள்ளையருடன் இனக்கமனவராக இருந்தவர் தான் கட்ட பொம்மனின் தந்தை ஜக வீரபாண்டியன், பூலித்தேவன் முதன் முதலில் வெள்ளையரை எதிர்த்த போது வெள்ளையருக்கு ஆதரவாக படை வீரர்களை கொடுத்து உதவியுள்ளார் மேலும் பூலித்தேவன் போரில் தோற்று தலை மறைவாக இருந்த காலத்தில் அவரை தேட திருவிதாங்கூர் ராஜவுடன் சேர்ந்து வெள்ளயருக்கு உதவியுள்ளார், அதாவது எட்டையப்பன் செய்தது போன்று.

இதனால் அப்போது தேவர்களை தலைவராக கொண்ட பாளையங்களும் , சமஸ்தானங்களும் தெலுங்கு பேசும் நாயக்கர் வழி வந்த கட்ட பொம்மனின் தந்தை மீது வெறுப்புற்றிருந்தர் இதையே பின்னாளில் கட்ட பொம்மன் வெள்ளையரை எதிர்த்த போது பிரித்தாலும் சூழ்சியின் மூலம் பயண்ப்படுத்திக் கொண்டார்கள் வெள்ளையர்கள்.

அப்போதைய பாளையங்களில் மூன்று வகையான படை வீரர்கள் இருந்தார்கள்,

அமரம் சேவகம் -பரம்பரை நில உரிமை பெர்ற்று அதிலிருந்து வரும் வருமானத்திற்கு பதிலாக படையில் பணிபுரிவர்.

கட்டுபுடி சேவகம் - பரம்பரை உரிமை இல்லாமல் நிலம் பெறு சேவகம் புரிவர்.

கூலி சேவகம் அல்லது படை - போர்க்காலத்தில் மட்டும் தினக் கூலி அடிப்படையில் வேலை செய்வர், மற்றக் காலங்களில் இவர்கள் வழிப்பறி ,கன்னம் வைத்து கொள்ளை அடித்து வாழ்வார்கள்.இவர்களின் சேவைக்கு பரிசாக கொள்ளை அடிப்பதை கண்டு கொள்ளாமல் விடுவார் பாளையத்தின் தலைவர் (நம்பித்தான் ஆக வேண்டும !) ஆனால் ஒரு நிபந்தனை உண்டு உள்ளூரில் அதாவது அதே பாளையத்தில் கொள்ளை அடிக்காமல் வெளியில் போய் கொள்ளை அடிக்க வேண்டும்.

இந்த மூன்று வகையான போர்ப்படை சேவைகளை செய்தது முக்குலத்தோர் சமூக மக்களே. இப்படிப் பட்ட படைகளை கொண்டிருந்தால் தான் கட்ட பொம்மனை கொள்ளைக்காரன் எனவும் வெள்ளையர்கள் குற்றம் சாட்டினர். திரைப்படத்தில் ஏன் வரிக்கொடுக்க வேண்டும் என்று வசனம் பேசினாலும் உண்மையில் வரி செலுத்த கட்ட பொம்மன் தயாராகவே இருந்தார். அருகாமை பாளையக்காரர்கள் கட்டபொம்மனை வெறுப்பதும், மேல் உதவிக்கு யாரும் வர மாட்டர்கள் என்பதும் தெரிய வந்ததால் ஒரே அடியாக பாஞ்சாலக்குறிச்சியை தங்க்கள் வசம் படுத்த படை எடுத்து சாதித்துக்கொண்டார்கள்.

எட்டையப்பனுடன் எல்லை தகராறு, தேவர் சமூகத்தினை சேர்ந்த பூலித்தேவனை பிடிக்க கட்ட பொம்மனின் தந்தை உதவியதால் ,பூலித்தேவனின் உறவினரான புதுக்கோட்டை சமஸ்தான ராஜா விஜய ரகுனாத தொண்டை மானுக்கும் வெறுப்பு எனவே அனைத்து வகையிலும் கட்ட பொம்மன் தனிமை படுத்தப் பட்டது தோல்விக்கு வழி வகுத்தது.

மேற்கூறிய காரணங்களினால் இந்திய அளவில் சுதந்திரப் போராட்டம் பற்றி குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவங்குகிறார்களா அல்லது மங்கல் பாண்டே என்ற பிராமண சிப்பாய் துவக்கியதால் முக்கியத்துவம் அளிகிறார்களா என்று பல சரித்திர ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள் விடையை கூறாமல். வாசகர்கள் நீங்களும் கூறலாம் தெரிந்தால்.

Tuesday, June 12, 2007

வலைப்பதிவுலகின் விக்கிரமாதித்தன்!ஹலோ யாரு அது?....

கோன் ஹை?...

மீரு எவரண்டி?...

who are you?...
...

...)))<--)))<--)))<---."வவ்வால்"-->(((-->(((-->((( ...

வவ்வாலா..ஆஆ....ஆஹ்... வந்துடான்யா .....வந்துட்டான்...

பேர கேட்டாலே ச்சும்மா அதிருதுல .... அதான் வவ்வால்...

(எந்த அதிர்வையும் நீங்கள் உணரவில்லை என்றால் உங்களுக்கு பக்கவாதம் , முடக்கு வாதம் அல்லது அல்ஸீமர் என நினைத்துக்கொள்ள வாய்ப்புண்டு)

போதும் அடங்கு ராசா...!

தலைமறைவா சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனதும் இல்லாமல் இப்போ வந்து ஓவரா பந்தா விட்டா தர்ம அடிதான் ஜாக்கிரதை!

இந்த வலைப்பதிவுகள் பக்கம் வந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டபடியால் மக்கள் அன்புடன் முதலாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை இணைய உலகின் சுற்று சுவர்களில் ஒட்டி வைத்து துக்கம் கொண்டாடி அல்லது தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விடுவார்கள் எனவே அப்படி பட்ட ஒரு துன்பியல் சம்பவம் நடக்காமல் தடுக்கும் வண்ணம் மீண்டும் எனது குளிர் மற்றும் கோடை கால உறக்கம் கலைத்து மலை மீது இருந்து இறங்கி வந்து விட்டேன்.

நான் வருகையிலே என்னை வரவேற்க எங்கும் வண்ண பூ மழை பொழியவில்லை ஒரே அனல் காற்று தான் அடித்தது சென்னை மாநகர வீதிகளிலும் வலைபதிவு நெடுஞ்சாலையிலும் எப்போதும் மக்கள் சூடும் சுரணையுமாகவே இருக்கிறார்கள் சந்தோஷம்!

வலைப்பதிவுகளின் உள்ளடக்கதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை இந்த இடைப்பட்டக் காலத்தில் ஆனால் பல புற தோற்ற மற்றும் எண்ணிக்கை அளவிலான முன்னேற்றம்/ மாற்றம் கண்கூடாக தெரிகிறது , நிறைய புது பதிவுகள், பல புதிய கூட்டணிகள், மாற்றம் ஒன்றே மாறாதது எனவே மாற்றங்களை வரவேற்போம்!

ஆயிரம் பதிவுகள் போட்ட அபூர்வ சிந்தாமணியாக ஒரு புதிய வலைப்பதிவைக் கண்டு உள்ளம் துணுக்குற்றது அது பொன்ஸ் மற்றும் குழுவினரின் கைங்கர்யம் என்பதை கண்டு கொண்டேன் ...கண்டு கொண்டேன்!

இப்படி சில பல மாற்றங்களுடன் தமிழ்வலைப்பதிவுலகம் தளராது பீடு நடைப்போட்டு வருவதை காணும் பொழுது என் நெஞ்சம் பெருமிதத்தால் விம்முகிறது!

ஊரை விட்டு ஓடிப்போய் திரும்பி வந்த" வெயில் பசுபதி" போல சொக்காய் எல்லாம் கிழித்துக்கொண்டு வந்துள்ளேன் எனவே பாசக்கார வலைப்பதிவு மக்கள் எல்லாம் வழக்கம் போல ஆதரவு தந்து என்னைப் போஷிக்க வேண்டுமாய் விண்ணப்பித்துக்கொள்கிறேன்!

அன்றாட வாழ்கையின் கோரப்பிடிகள் வேதாளம் போல் என்னை பிடித்து அழுத்திக்கொண்டு இருப்பினும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல மீண்டும் மீண்டும் வந்து எனது வலைப்பதிவு கடமையை செய்ய தலைப்பட்டுள்ளேன்! உஜ்ஜைனியில் உள்ள காளியிடம் சாகா வரம் பெற்றும் நாடாறு மாதம் காடாறு மாதம் என வாழ நிர்பந்திக்கப்பட்ட விக்கிரமாதித்தன் போல!.

இப்படிக்கு

என்றும் மனம் தளராத
உங்கள் அன்பன்
வவ்வால்.

விக்கிரமாதித்தன் பற்றிய ஒரு வரலாற்று பின் குறிப்பு:-

அம்புலி மாமா புகழ் விக்கிரமாத்தித்தனுக்கு வரலாற்று முகமும் உண்டு அதனையும் பார்ப்போம்.

விக்கிரமாதித்தன் சரித்திர புகழ் பெற்ற இரண்டாம் புலிகேசியின் பேரன் ஆவான்.உஜ்ஜைனியை தலை நகராகக்கொண்டு ஆட்சி பரிபாலணம் செய்தவன்!

விக்கிரமாதித்தன் தனது தாத்தா புலிகேசிக்கு பல்லவன் மகேந்திரன் மற்றும் அவனது மகன் நரசிம்மவர்மனால் ஏற்பட்ட அவமானத்தை துடைக்க தமிழகத்தின் மீது படை எடுத்து வந்துள்ளான். போரின் முதல் கட்டத்தில் மணிமங்கலம்(தாம்பரம் அருகேயுள்ளது) , மற்றும் சோலிங்கர் ( சோழசிங்கபுரம் என்பதே சோலிங்கர் என மறுவியது,ஆர்க்காடு அருகேயுள்ளது) அருகே பல்லவர்களை வென்று புறமுதுகிட வைத்தான். மேலும் முழு தமிழகத்தையும் வெல்லும் அவாவில் பாண்டியர்களையும் வெல்ல மதுரை வரை சென்றான்,அக்காலக்கட்டத்தில் சோழ பேரரசு கிடையாது.

அங்கு தான் விதி சிரித்தது விக்கிரமாதித்தனைப் பார்த்து .பாண்டிய மன்னன் கோச்சடை என்பவன(தாய்க்குலங்கள் போடும் இரட்டை ,ஒற்றை சடை அல்ல இது ஒரு பெயர்) நெல்வேலி என்னுமிடத்தில் தீரத்துடன் போரிட்டு விக்கிரமாதித்தனை வென்றான் ,அதனால் கோச்சடைக்கு ரணதீரன் என்ற பட்டம் கிடைத்தது.பின்னர் கோச்சடை ரணதீரன் என்றே அழைக்கப்பட்டான். விக்கிரமாதித்தனுக்கு ரணதீரன்,ரண ரஸிகா என்ற பட்டப்பெயர்கள் உண்டு.

மதுரையிலிருந்து உதைவாங்கி கொண்டு வந்தவனை நரசிம்மன் மீண்டும் பெரும் படை திரட்டிக்கொண்டு வழியில் எதிர்க்கொண்டான் இம்முறை பல்லவனுக்கே ஜெயம்.விக்கிரமாதித்தனை ஓட ஓட விரட்டிக்கொண்டு உஜ்ஜைனி வரை நரசிம்மன் சென்றதாக சரித்திரம் கூறுகிறது.இதனால் நரசிம்மவர்மனுக்கு ரணஜெயன் என்ற பட்டம் கிடைத்தது.