Wednesday, April 25, 2012

மின்வெட்டு குறையும்!

கடந்த ஆட்சியில் அறிவிப்புடன் சில மணி நேரங்களும் அறிவிப்பில்லாமல் பல மணி நேரங்களும் மின்வெட்டு போட்டு தாக்கியது விளைவு "வரும் பொது தேர்தலில் கழகம் தோல்வியடைந்தால் அதற்கு காரணம் மின்வெட்டாகவும் இருக்கலாம்" என அப்போது மின்வெட்டு அமைச்சர் என அறியப்பெற்ற ஆர்க்காட்டாரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் ஒரு 1000 மெ.வாட் மின் உற்பத்தி திட்டம் கூட செயல்ப்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.பல திட்டங்கள் வெற்றறிவிப்பாகவும், சில பேரங்கள் படிந்த பின் துவங்கப்பட்டு மந்தகதியில் நடைப்பெற்றன. அதிகரித்து வரும் மின் வெட்டினை சமாளிக்க வெளிசந்தையில் வாங்கியும், மத்திய அரசுடன் இருந்த உறவைப்பயன்ப்படுத்தி அவ்வப்போது மத்திய மின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் பெற்றும் கூடுமானவரை மின்வெட்டை சமாளித்து ஐந்து ஆண்டுக்காலத்தினை தள்ளிவிட்டனர்.

ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டினை  நொடியில் தீர்ப்பேன் என வரம் கொடுக்கும் மகாசக்தியைபோல் அருள் வாக்கு கொடுத்தே பொது தேர்தலில் அம்மையாரும் அமோக வெற்றிப்பெற்றார், அனேகமாக உள்ளூக்குள் அப்போது ஐயா மந்திரப்புன்னகை புரிந்து இருப்பார், இந்தம்மா எப்படித்தான் மின் வெட்டினை தீர்க்கிறது பார்ப்போமே என்று.

ஆட்சிப்பொறுப்பேற்றதும் அதிகாரிகளை கூட்டி கூட்டம் போடும் போது தான் உண்மையான நிலையே தெரிய வருகிறது ,மின்வாரியத்துக்கு சுமார் 50000 கோடி கடன்,அதில் 10000 கோடி ரூபாய் கடன் மின்சாரத்தினை வெளி சந்தையில் வாங்கிய வகையில் நிலுவை என.

புதிதாக மின்சாரம் வாங்க வேண்டும் எனில் பழைய கடன் தொகையை கேட்கிறார்கள், மத்திய  மின் தொகுப்பில்  கூடுதல் மின்சாரம் கேட்டால் கூடன்குளத்தில் தமிழகரசு எதிர் நிலைப்பாடு எடுத்திருந்ததால் கண்டுக்கொள்ளவில்லை.

அந்த சமயத்தில் காற்று வீசும் பருவமும் டிசம்பருடன் முடிய துவங்கியது எனவே காற்றாலை மின்சாரத்தின் அளவும் வெகுவாக குறைய ஆரம்பித்தது விளைவு மின்வெட்டின் கடுமை கூடத்தொடங்கியது.

என்ன செய்யலாம் என மெத்தப்படித்த அதிகாரிகளைக்கூட்டி வைத்துக்கேட்டால் வழக்கம் போல கஜானா காலி ,மின் கட்டணத்தினை உயர்த்தினால் மட்டுமே வருமானம் கிடைக்கும் அதை வைத்து மின்சாரம் வாங்கி சமாளிக்கலாம் என அபூர்வமான அறிவுரை தந்தனர்.

இப்போது தான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்,இடைத்தேர்தல் வேற ஒன்னு வருது இப்போ கட்டணத்தை பல மடங்கு கூட்டினால் மக்கள் கடுப்பாகிடுவார்கள், கடும் தோல்விக்கு பிறகு பொட்டு வச்சுக்கிட்டு பொங்கல் சாப்பிட்டுக்கிட்டு இருக்க எதிர்க்கட்சிகளூம் துள்ளிக்குதித்து போராட்டத்தை நடத்தி மீண்டும் இழந்த மக்கள் செல்வாக்கை அடையப்பார்ப்பாங்க, எனவே வேற எதாவது செய்யணும் என இராசதந்திரமாக யோசித்து , மின்வெட்டு 4 மணியோ 10 மணி நேரமோ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அறிவிச்சுக்கோங்க, மக்கள் ஏன் இந்த மின்வெட்டு எனக்கேட்டால் மின்வாரியக்கடன் கதையையும் கடந்த ஆட்சியின் அவலத்தையும் சொல்லி காசு இல்லை என சொல்லிவிடலாம் அப்படியே சைடுல மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணம் உயர்த்த  ஆலோசிப்பதாக ஒரு அறிக்கையும் விட்டு வச்சுட்டோம்னா நம்ம "ஆபரேஷனை" வெற்றிகரமாக நடத்தி முடிச்சுடலாம் என முடிவுக்கு வருகிறார்கள்.

"ஆப்பரேஷன்" என சொன்னார்களே என்ன என்று புரியவில்லையா, மின் கட்டணம் உயர்த்தினால் எதிர்ப்பு கிளம்பும், உயர்த்தாமல் அரசின் கையிருப்பு பணத்தினைக்கொண்டு மின்சாரம் வாங்கிக்கொடுத்தால் பின்னர் அதிகமாக மின் கட்டணம் உயர்த்தினால் ஏன் இந்த அளவு உயர்த்தணும் கேட்பார்கள்.அதே சமயம் கடுமையான மின்வெட்டினை செய்தோம் எனில் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்படும் மக்கள் ஒரு கட்டத்தில் தாங்களாகவே முன் வந்து நீங்க கட்டணம் எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக்கோன்ங்க ஆனால் தடையில்லாமல் அல்லது குறைவான மின் வெட்டுடன் மின்சாரம் கொடுத்தா போதும் கோடி புண்ணியம் நீங்க ந்ல்ல்லாயிருப்பிங்கனு கதற ஆரம்பிச்சுடுவாங்க.அரசியல் நாடக மேடையில் ...அ நாடகமே அரசியல்தான் :-))

நாம அந்த நேரம் பார்த்து மானாவாரியா மின் கட்டணம் உயர்த்திக்கலாம்,மக்கள் எதிர்ப்பே காட்ட மாட்டாங்க, அதே நேரம் எதிர்க்கட்சிகள் உத்தம அவதாரம் எடுத்து இது வரலாறுக்காணாத மின் கட்டண உயர்வு இதற்கு தானா ஆசைப்பட்டாய் தமிழினமே சற்றே சிந்தித்துப்பார் கழக ஆட்சியின் மேண்மைகளைனு  அறிக்கை விட்டால் 50000 ஆயிரம் கோடிக்கடன் சுமை அதில் 10000 கோடி மின் சாரம் வாங்கியது என தேதி,கிழமை ,தொகை வாரியா 100 பக்க அறிக்கை விட்டு பிரஸ் மீட் வச்சு பேசினோம்னா சும்ம அல்லு சில்லு அலறும்ல ஏன்னா நாம பேசுறது ஃபேக்ட்டு ...ஃபேக்ட்டு ... ஃபேக்ட்டு என அம்மையார் அமர்க்களமாக இராசதந்திர ஆபரேஷனை விளக்கவே அமைச்சர் பெருமக்கள் எல்லாம் பக்தி பரவசமாகி அம்மானா சும்மா இல்லைடா என பாடி மெய்சிலிர்க்கிறார்கள்.

FACTU..FACTU...FACTU...

"Last year, we purchased 1,500MW of electricity from private players at high prices and somehow managed the situation. But this time, we are not able to buy as we still owe 10,000 crore to suppliers," said the power manager.

மேலும் இப்போது மீண்டும் காற்று வீசும் பருவம் துவங்கிவிட்டது எனவே மீண்டும் காற்றாலை மின்சாரம் கிடைக்க ஆரம்பித்துவிடும்  கூடவே அரசியல் காற்றும் அம்மையாருக்கு சாதகமாக வீச ஆரம்பித்து விட்டது, கூடங்குளத்தில் ஆதரவான நிலைப்பாடு எடுத்ததால் டில்லி அன்னையும் நட்பாக பார்க்க துவங்கிவிட்டார், இப்போது ஜனாதிபதி தேர்தல் அடுத்து மக்களவைத்தேர்தல் என வரிசைக்கட்டி வருகிறது செல்வாக்கு இழந்து விட்ட திமுகவை அதற்கெல்லாம் நம்பினால் மீண்டும் ஒரு முறை மூக்குடைப்பட நேரிடலாம் என பல அரசியல் கணக்குகள் போட்டு அவ்வப்போது அம்மையாருக்கு சமரச செண்டு அனுப்பிக்கொண்டு இருக்கிறார் டில்லி அன்னை, அது போல ஒரு சமரச செண்டு தான் ஜெய்ராம் ரமேஷ் அனுப்பிய பாராட்டு மடல் அல்லது மெடல் கூடவே கேட்காமலே வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு 100 கோடி கூடுதல் நிதி என பச்சை விளக்கு எரிய விட ஆரம்பிச்சுட்டாங்க.

இப்போ மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் கேட்டாலும் கிடைக்கும் சூழல், வெளி சந்தையில் மின்சாரம் வாங்கவும் நிதி கிடைத்து விட்டது, காற்றாலைகளும் உற்பத்திக்கு தயாராகிவிட்டது எனவே இன்னும் சில நாட்களில் படிப்படியாக மின்வெட்டு குறைய ஆரம்பித்து விடும், முற்றிலும் மின் வெட்டு நீங்கிவிடும் என சொல்ல முடியாது ஆனால் 10 மணி நேர மின் வெட்டு இருக்காது பெரும்பாலும் 2-3 மணி நேர மின்வெட்டாக குறைய வாய்ப்புள்ளது.

அரசியல் வானிலை அய்யாவுக்கு சாதகமில்லாமல் போவது பெரிய பின்னடைவு தான் , இப்படியே மின்வெட்டு தொடர்ந்தால் மக்களவை தேர்தலில் அதையே பெரிய பிரச்சாரம் ஆக்கி சட்ட சபை தேர்தலில் விட்டதைப்பிடிக்கலாம் என ஒரு கணக்குப்போட்டு காத்திருக்கையில் இப்படி வெகு சீக்கிரம் மின்வெட்டு பிரச்சினை தீர்ந்தால் ஏமாற்றமாக இல்லாமல் என்ன செய்யும்.

இப்பவும் அரசியல் செய்ய ஒரு வாய்ப்பு இருக்கு மின்வெட்டினைக்கண்டித்து மாபெரும் உண்ணா நிலை போராட்டம் மே-1 இல் நடத்தப்போவதாக அறிவிச்சுடுங்க, வழக்கம் போல காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் உண்ணா நிலை போரட்டம் இருந்துக்கலாம், எப்படியும் இன்னும் சில நாட்களில் மின்வெட்டு தானா குறையத்தான் போகுது அதுக்கு காரணம் நான் உண்ணா நிலை போராட்டம் நடத்தியதனால் தான் என சொல்லிக்கலாம் எப்பூடி :-))

பின்குறிப்பு:

நாம் இரண்டு கழகங்களின் அரசியலையுமே விமர்சிக்கிறோம், எனவே சரியாக பதிவின் உள்ளடக்கத்தினை சரியாக உள்வாங்காமல் அரசியல் சாயம் பூசி விளையாட நினைப்போருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :-))