முன்னோட்டம்:
ஓகை அவர்கள் ஒரு பதிவிட்டு அதில் தற்காலத்தில் கிராமத்தில் லாபமற்ற விவசாயம் செய்வதை விட நகரத்தில் சாலைப்போடுதல் , கட்டுமானம், கல் உடைத்தல், மூட்டை தூக்குதல் இன்ன பிற கூலி வேலை செய்வது நிறைவான வாழ்வை தரும் எனக்கூறியுள்ளார். அதனை செல்வன், தெ.கா மற்றும் வவ்வாலுக்கு சமர்ப்பணம் என வேறு அறிவித்து , கருத்துகளும் கேட்டுள்ளார்.
ஓகை அவர்களின் பதிவு
கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!
ஓகை அவர்களுக்கு மிக பெரிய மனது, மாற்று கருத்துகளை வரவேற்று இருக்கிறார். அவர் எதிர்பார்ப்பை வீண் ஆக்காமல் சில பல கருத்துகளை அள்ளி விட்டேன் ஆனாலும் நீளமாக போய்விட்டது எனவே தனியே ஒரு பதிவிடுகிறேன்.
உள்ளது உள்ளபடி:
இந்திய பொருளாதரத்தை விவசாய பொருளாதாரம் என்பார்கள் , 65 சதவீத மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளிப்பது விவசாயம். ஆனால் தற்போது விவசாயம் செய்வதர்கான இடு பொருள் , இன்ன பிற முதலீட்டு காரணிகளின் விலை ஏறிய விகிதாசாரத்தில் விளைப்பொருளுக்கு விலை கிடைக்கவில்லை. மேலும் இயற்கையின் திருவிளையாடல் வேறு மழை பெய்து கெடுக்கும் இல்லை காய்ந்து கெடுக்கும். எனவே விவசாயிகள் பலரும் நொடித்து போய் விட்டார்கள்.
சிரமப்படுபவனுக்கு உதவாமல் அவனை அதை விட்டு வெளியேற சொல்கிறார்கள். வேறு எந்த உற்பத்தி கூடத்திலும் உற்பத்தியை நினைத்தால் கூட்டலாம் , குறைக்கலாம் , அல்லது சிறிது காலம் மூடிவிட்டு தொடரலாம். தேவைக்கு ஏற்றார்ப்போல அதிகப்படியாக உழைத்து எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு உற்பத்தி செய்யலாம். ஆனால் விவசாயத்தில் அப்படி எல்லாம் செய்ய முடியாது, 140 நாள் சாகுபடி நெல் என்றால் அத்தனை நாட்களுக்கு பிறகு தான் நெல் கிடைக்கும், நிலத்தில் ஓவர் டைம் வேலைப்பார்த்தாலும் அதன் உற்பத்தி காலம் குறையாது.
ஷூ போடுபவர் அது கிடைக்கவில்லை என்றால் செருப்பு போடலாம், தோலில் கிடைக்கவில்லை என்றால் ரப்பரில் போட்டு சமாளிக்கலாம் ஆனால் உணவுக்கு வேறு மாற்றே இல்லை. பசித்தால் சாப்பீட்டு தான் ஆக வேண்டும் ,அதுவும் எந்த உணவாக இருந்தாலும் நிலத்தில் இருந்து தான் வர வேண்டும். தொழிற்சாலையில் செயற்கையாக ஒரே ஒரு அரிசியை கூட உற்பத்தி செய்ய முடியாது.
எப்படி தமிழைப்படிக்காமல் ஒரு தலைமுறையே தமிழ் தெரியாமல் நாட்டில் உருவாகி வருகிறதோ அதே போல நகரத்திற்கு கூலி வேலை தேடி போய்விட்டால் ஒரு தலைமுறையே விவசாயம் தெரியாமல் உருவாகிவிட்டால் என்ன ஆவது. நாடு முழுக்க நிலம் தரிசாக கிடக்கும். உணவு தட்டுப்பாடு வரும்.
நம் சுய நலம் முன்னிட்டாவது விவசாயம் வாழ வேண்டாமா?
சரி விவசாயம் வாழ வேண்டும் அப்படி என்றால் விவசாயி கடைசி வரைக்கும் கஷ்டப்பட வேண்டுமா? இல்லை அதற்கும் சில தீர்வுகள் இருக்கிறது.
தீர்வு:
ஒரு தொழிலில் இரண்டு வகையான வளர்ச்சி சாத்தியம் ,செங்குத்து வளர்ச்சி, கிடைமட்ட வளர்ச்சி என்ற இரண்டு வகை சாத்தியம். விவசாயம் வெறும் ஒரே ஒரு வேலையை மட்டுமே செய்கிறது அதில் இந்த இரண்டு வளர்ச்சியையும் கொண்டு வர வேண்டும்.
செங்குத்து வளர்ச்சி:(vertical integration)
மாடு வளர்க்கிறார், பால் கறக்கிறார் ,விற்கிறார் இது சராசரி. அதுவே பால் கறந்து விறபதோடு , அதில் இருந்து தயிர், மோர் வெண்ணை , நெய், ச்சீஸ், பால்கோவா, பால் பவுடர் என அனைத்து பால் பொருட்களும் செய்து விற்றால் அது செங்குத்து வளர்ச்சி.
இதெல்லாம் கடினம் செய்வது முடியாது தொழில் நுட்பம் வேண்டும் என்று சொல்ல கூடியவை அல்ல. வெளி நாட்டில் எல்லாம் விவசாயிகள் செய்து விற்கும் ச்சீஸ், யோகர்ட் க்கு ஃபார்ம் யோகர்ட், ச்சீஸ் என்றே பெயர். இன்னும் சொல்லப்போனால் ஆரம்பத்தில் இந்தியாவிலும் இவை எல்லாம் குடிசை தொழிலாகத்தான் செய்தார்கள்.
சிறுவனாக இருக்கும் போது பார்த்து இருக்கிறேன் தலையில் கூடை வைத்து மோர், தயிர், நெய் எல்லாம் விற்றுக்கொண்டு ஒரு பெண் வருவார்கள். இப்போது அப்படி வருவது இல்லை ஏன். விளம்பரங்களில் வாழும் பெரிய நிறுவனங்களின் பொருட்களை வாங்க நாம் பழகிக்கொண்டோம்!
கிடைமட்ட வளர்ச்சி!(horizontal integration)
மாட்டிற்கு என்ன வேண்டும், உணவு அதற்கு என்று தீவன புல்லும் வளர்க்கலாம். மேலும் செறிவூட்டிய தீவனம் தயாரிக்க மக்க சோளம், கம்பு போன்றவையும் வளர்க்கலாம் , தானியமும் கிடைக்கும் , தீவனமும் தயாரிக்கலாம். எண்ணை வித்துகள் பயிரிட்டு அதில் இருந்து எண்ணை எடுத்து விட்டு புண்ணாக்கை கால் நடை தீவனம் ஆக பயன்படுத்தலாம், அதிகப்படியை விற்கலாம்.
தனி ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் , இரண்டு ஏக்கர் இருக்கும் அவருக்கு இதெல்லாம் சாத்தியமா எனக்கேட்கலாம். சிறு விவசாயிகள் பத்து பேர் ஒன்று சேர்ந்து கூட்டாக இப்படி ஒரு முயற்சியில் ஈடுபடலாம். அதற்கு கடன் உதவியும் அரசு செய்யலாம்.மகளீர் சுய உதவிக்குழுக்கள் போல இது விவசாயிகள் சுய உதவி குழு!
இவை எல்லாம் சில உதாரணங்களே , இடத்திற்கு ஏற்றார்ப்போல இன்னும் என்ன என்னவோ எல்லாம் செய்யலாம்!
நிலத்தினை பன்னோக்கு வழியில் உபயோகிக்க வேண்டும்(integrated Farming)
விவசாயம் பண்ண தேவை நீர், ஆனால் அதற்க்கு தட்டுபாடு , தீர்வு, நமக்கு என சொந்தமாக ஒரு சிறு பண்ணைக்குட்டை வெட்டிக்கொள்ள வேண்டும் அதில் மழை நீரை சேகரிக்கலாம். இருக்கிற ஒரு ஏக்கரில் இதெல்லாம் சாத்தியாமா எனக்கேட்கலாம், ஒரு ஏகர் என்பது 100 சென்ட், அதில் ஒரு 5 சென்ட் ஒதுக்கினால் கூட போதும்.
5 சென்ட்டில் குட்டை போட்டால் உற்பத்தி பாதிக்குமே என்பீர்கள், குட்டையை சும்மா விட்டால் தானே , அதில் மீன் வளர்க்கலாம். அந்த குட்டைக்கு மேலெ கம்பி வலை அமைத்து கூண்டில் கோழி வளர்க்கலாம்.கோழியின் கழிவு மீனுக்கு உணவு.
குட்டையின் கரை ஓரமாக மலர் செடிகள், தென்னை , வாழை என குறைந்த அளவில் போட்டாலும் உபரி வருமானம் தானே!
நெல் வயலாக இருந்தாலும் ஆங்காங்கே சில தேனீ வளர்ப்பு பெட்டிகள் வைத்து தேன் சேகரிக்கலாம். நெல்லின் மலரிலும் தேன் உண்டு. மேலும் மகரந்த சேர்க்கையும் நன்கு நடக்கும்.
இதற்கு பெயர் தான் ஒருங்கிணைந்த விவசாயம்.
இதெல்லாம் ஏதோ நானே சொந்தமாக சொல்லவில்லை பல நூல்களிலும் இவை எல்லாம் இருக்கிறது. இவற்றை நடை முறைப்படுத்த ஆரம்பக்கட்ட பண உதவி தேவை , ஆலோசனை வழங்க வேண்டும் , ஒரு முறை செய்து பார்த்து விட்டால் , பின்னர் அவர்க்களே பிடித்துக்கொள்வார்கள்.
விவசாயி, விவசாய தொழிலாளி நகரத்திற்கு பிழைப்பு தேடி செல்வதால் ஏற்படும் பின்னடைவினை அடுத்துப்பார்ப்போம்
தொடரும்...