Thursday, February 07, 2008

ஜோதா அக்பர்

செல்லுலாய்ட் ஜோதா பாய்
ஜோதா அக்பர் என்ற ஒரு இந்தி திரைப்படம் இந்த மாதம் வெளிவர இருக்கிறது வரும் போதே சில சர்ச்சைகளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு!இதை இயக்கி இருப்பவர் லகான் புகழ் அஷுதோஷ் கோவ்ரிகர், கதை முன்னால் தொலைக்காட்சி நடிகர் ஹைதர் அலி. இசை , நம்மவூரு ஏ.ஆர்.ரெஹ்மான். இதில் ஜோதா பாய் என்ற ராஜபுதன இளவரசியாக, அக்பரின் மனைவியாக அய்ஷ்வர்யா ராய் பச்சன்* (ராய் போடக்கூடாதுனு சொல்லிட்டாங்களே) அக்பராக ரித்திக் ரோஷன் நடித்துள்ளார்கள். பலத்த எதிர்ப்பார்ப்புகளை தூண்டும் படமாக பேசப்படுகிறது.

இந்த சர்ச்சைகள் உண்மையில் கேள்விக்கேட்கும் நோக்கில் எழுப்பப்படுகிறதா இல்லை படத்தை விளம்பரப்படுத்த அடிக்கப்படும் கூத்தா என்றும் எனக்கு சந்தேகம்(வழக்கம் போல)

அப்படி என்ன சர்ச்சை என்றுப்பார்ப்போம்,

ஒரு சாரார் ஜோதா பாய் என்ற பெண்ணே சரித்திரத்தில் இல்லை , அபுல் பசல், பதாயுனி, நிசாமுதின் பக்ஷி ஆகியோரின் அக்பர் வரலாற்றில் இப்படிப்பட்ட பெயரே குறிப்பிட வில்லை என்கிறார்கள்.

இன்னொரு சாரார் ஜோதா பாய் இருந்தார் ஆனால் அவர் அக்பரின் மனைவி அல்ல , அக்பருக்கு மொத்தம் 34 மனைவிகள் என்று வரலாற்றில் தெளிவாக பெயர்களோடு இருக்கு, அதில் ஒருவர் பெயர் கூட ஜோதா பாய் இல்லை. ஆனால் ஜெஹான்கீரின் (சலிம்) மனைவி பெயர் ஜோதா பாய் , எனவே தவறாக அக்பரின் மனைவி என்று சொல்கிறார்கள் படத்தையே தடை செய்ய வேண்டும் என்கிறார்கள்.

மூன்றாவதாக , தற்போதைய ராஜ்புதான ஜோத்பூர் அரச குடும்பம் , ஜோதா பாய் உண்மையான ஒருவரே, அவருக்கும் அக்பருக்கும் திருமணம் நடந்தது என்கிறார்கள்.

ஜோதா பாய் என்ற பெயர் வரக்காரணமே அவர் ஜோத்பூர் இளவரசி என்பதால் தான்.

எது எப்படியோ இலவசமாக படத்திற்கு விளம்பரம் கிடைத்து விட்டது.சரி நாமும் நம்ம பங்குக்கு வரலாற்றை தோண்டிப்பார்ப்போம் என்று பார்த்ததில்,

ஹிமாயுன் , ஷேர்ஷா சூரியிடம் போரில் தோல்வி அடைந்து தலைமறைவாக சுற்றியக்காலத்தில் ஹமீதா பானு என்ற பெண் மீது காதல் கொண்டு மணந்து கொண்டார், நாடோடி வாழ்க்கையின் போது இவர்களுக்கு பிறந்தவர் தான் அக்பர், இவர் இயற்பெயர் ஜலாலுதீன். அக்பர் என்றாலும் கிரேட் என்ற பொருள் தான், ஆனால் அவரை அக்பர் தி கிரேட் என்று சொல்வார்கள்(டபுள் கிரேட் போல).

அக்பரின் முதல் திருமணம் கொஞ்சம் விசித்திரமானது, அக்பர் ஆட்சியைப்பிட்க்க உதவியாக இருந்த பைராம் கான் என்ற அக்பரின் மாமா, இறந்ததும் அவரது மனைவியையே மணந்துக்கொண்டார், ஹிமாயுன் ஆட்சிப்பொறுப்பில் இல்லாதக்காலக்கட்டத்தில் பிறந்த அக்பரை வளர்த்ததே பைராம் கான் , அவர் மனைவி தான், எனவே அவர் வளர்ப்பு தாய் போன்றவராக கருதப்படவேண்டும், அக்பரை விட பல வயது மூத்தவர், அக்பருக்கு அப்போ 16 வயது தான் இருக்கும்.

அதன் பின்னர் பல திருமணங்கள் செய்துக்கொண்டார் அக்பர், , பலவும் போரில் வென்ற ராஜ்யங்களை தன் வசம் நிரந்தரமாக வைத்திருக்க செய்யப்பட்டதே.

ஆம்பரை சேர்ந்த ராஜபுத் இளவரசியை மணந்து அவருக்கு மரியம் ஸமானி என்று பெயர் வைத்துக்கொண்டார், அவர்களுக்கு பிறந்தவர் தான் ஜெஹான்கீர் என்ற சலிம்.

அக்பர் 34 திருமணங்கள் செய்துக்கொண்டதால் , கொஞ்சம் தளர்ந்து போய்விட்டார் போலும் அதன் பின்னர் போரை தவிர்க்க திருமணம் செய்ய நேரிட்டப்போது 12 வயதான சலிமுக்கு செய்து வைத்துவிட்டார், அப்படியான ஒன்று ஜோத்பூர் ராஜபுதான அரசர் ஆன உதய் சிங்கின் மகள் ஜோதா பாய்யுடன் ஆன திருமணம். அது மட்டுமல்லாமல் ராஜா பஹவான் தாஸ் என்ற ராஜபுதான அரசரின் மகள் மான் பாயுடனும் சலிமுக்கு திருமணம் நடந்தது.

இப்படித்தான் நான் படித்த புத்தகத்திலும் இருக்கு, ஆனால் சலிமின் மனைவியை எப்படி இப்போ அக்பருக்கு மனைவியாக மாற்றினார்கள் என்பது தெரியவில்லை. இல்லை ஒரே பெயரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள் என்று எடுத்துக்கொள்வதா? ஆனால் படக்குழுவினர் மொஹல்- இ- அசாமில் கூட அக்பரின் மனைவியாக ஜோதாபாய் கதாபாத்திரம் உள்ளது. இப்படமே மொகல் -இ- ஆசாம் அடிப்படையில் மாற்றி எடுக்கப்படுவது தான் என்று சொல்கிறது.

எது உண்மைனே தெரியவில்லை, ஒரே குப்பாச்சு குழப்பாச்சு செய்றாங்கப்பா!சரி படம் வந்தா அய்ஷ்வர்யா ராய் பச்சன் *எப்படி இருக்குனு பார்க்கிறதுக்காகவாது பார்க்கணும் :-))

பின்குறிப்பு: கல்வெட்டு சொல்லிய திருத்தத்திற்கு ஏற்ப * அய்ஷ்வர்யா "ராய் "பச்சன் என மாற்றப்பட்டுள்ளது!