Thursday, August 16, 2012

மசாலா மர்மங்கள்.(food adulteration)


இந்தியா பரந்து விரிந்த, பல கலாச்சாரங்களை கொண்ட ஒரு ஒருங்கிணைந்த நாடு, மக்களின் மொழி ,இனம் என வேறுப்பட்டிருப்பதை போல அவர்களின் உணவுப்பழக்க வழக்கங்களும், உணவும் வேறுப்பட்டே இருக்கிறது, உணவின் பெயர், செய்முறை என பல வேறுப்பட்டாலும் அனைத்து உணவுக்கும் மூலப்பொருட்களும், அதில் சேர்க்கப்படும் வாசனை ,மற்றும் சுவையூட்டி, நிறமி ,மசாலாக்கள் ஆகியவை ஒன்றாகவே இருக்கும்.

உணவு தயாரிக்கப்படும் மூலப்பொருட்கள், மசாலா,நிறமி,சுவையூட்டிகள் பொதுவாக விலை அதிகம் என்பதால் மலிவான மற்றும் தரக்குறைவான , தீங்கு விளைவிக்கும் பொருட்களை கலநது விடுகிறார்கள்.மேலும் கலப்படங்களை எளிதாக அடையாளம் காணவும் ,சிலவற்றை தவிர்த்தலும் நமது உடல் நலனுக்கு உகந்தது.

உணவுக்கலப்படங்களை வெளிச்சம் போட்டும் காட்டுவதோடு அவற்றினை அடையாளங்காணவும், தவிர்க்கவும் சில வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.

பால்:அனைவரும் அருந்தும் ஒரு இயற்கையான உணவு. இதிலும் கலப்படம் செய்யப்படுகிறது. பெரும்பாலும் தண்ணீர் கலந்து விடுவார்கள். அது கூட பரவாயில்லை உறைகளில் அடைக்கப்பட்ட பாலே அதிகம் இப்போது பயன்ப்படுத்தப்படுகிறது, அவற்றில் நன்கு திக் ஆக இருக்க தாவர "ஸ்டார்ச்" கரைசலை கலக்கிறார்கள். மைதா மாவு போன்றவையே ஸ்டார்ச்.சில சமயங்களில் சோயா பாலையும் கலப்பதுண்டு.

மேலும் செயற்கை பாலும் கலக்கப்படுகிறது, இது சலவைத்தூள், யூரியா கொண்ட கலவையால் செய்யப்படுகிறது இதனை ஆய்வகத்தில் தான் கண்டறிய முடியும் என்பதால் எளிதில் கண்டறிய முடியாது.

மேலும் மெலாமைன் எனப்படும் பிளாஸ்டிக் வேதிப்பொருளையும் கலக்கிறார்கள், இது யூரியாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது.இதனை கொண்டு உடையாத பிளாஸ்டிக் தட்டு, கிண்ணங்கள் தயாரிக்கிறார்கள். இதில் மிக அதிக புரோட்டின் மூலக்கூறும், நைட்ரஜனும் இருப்பதால் வெண்ணை எடுக்கப்பட்ட நீர்த்த பாலை கெட்டியாக காட்ட சேர்க்கிறார்கள்.

உடல் எடைக்க்கூட்டப்பயன்ப்படும் ஊட்டச்சத்து மாவு, பால் பவுடரில் மெலமைன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குழந்தைகள் உணவு, பால்ப்பொருட்களில் மிக அதிக மெலமைன் கண்டறியப்பட்டுள்ளது.

2008 இல் சீனாவிலேயே இப்படிக்கலப்பட பால் பொருட்களை தயாரித்தற்காக மரணத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மெலாமைன், யூரியா கலப்பட பால் தொடர்ந்து அருந்தி வந்தால் கேன்சர் வரும் வாய்ப்புள்ளது,மேலும் சீரணக்கோளாரு இன்ன பிற உபாதைகளும் வரும்.

சோதனை:

நீர் கலந்த பாலை லேக்டோ மீட்டர் மூலம் கண்டறியலாம். அனைவரிடமும் அக்கருவி இருக்க சாத்தியமில்லை. இதனை மாற்று வழியில் கண்டுப்பிடிக்கலாம், பாலின் அடர்த்தி எண் 1.026 ஆகும் அதாவது நீரை விட அடர்த்தியானது. ஒரு லிட்டர் நீர் ஒரு கிலோ.கிராம் இருக்கும். ஆனால் ஒரு லிட்டர் பால் 1கிலோ 26 கிராம் இருக்க வேண்டும், ஹி..ஹி எடைப்போட்டு கண்டுப்பிடிங்க :-))

#ஸ்டார்ச் கலந்த பாலை அயோடின் சோதனை மூலம் கண்டுப்பிடிக்கலாம், கொஞ்சம் பாலைக்கொதிக்க வைத்து ஆறிய பின் சில துளிகள் அயோடின் சேர்த்தால் பால் நீல நிறமாக மாறினால் ஸ்டார்ச் உள்ளது என்பதை அறியலாம்.

ஐஸ்கிரீம்:

இதில் நன்கு நுரைப்புடன் மென்மையாக வர வேண்டும் என சலவைத்தூள் சேர்க்கிறார்கள், இதனைக்கண்டறிய சிறிது எலுமிச்சம் சாறு விட்டால் நுரையுடன் பொங்கினால் சலவைத்தூள் கலப்படம் ஆனப்பொருள் ஆகும்.

கடுகு:


கடுகில் ஆர்க்கிமோன் விதைகளை கலந்து விடுவார்கள். இவ்விதை பக்கவாதம் உண்டாக்க கூடியது.

சோதனை:

ஆர்க்கி மோன் விதைகள் மேல் மெல்லிய சுருக்கம் இருக்கும். மேலும் நசுக்கினால் உட்புறம் வெள்ளையாக இருக்கும், கடுகின் உட்புறம் இளம்மஞ்சளாக இருக்கும்.

சீரகம், கருஞ்சீரகம், நற்சீரகம்:

காட்டுப்புல்லின் விதைகளை கலந்துவிடுவார்கள், மேலும் கருஞ்சீரகத்தில் காட்டுப்புல்லின் விதையில் கருப்பு சாயம் தோய்த்து கலப்பார்கள்.

சோதனை:

தண்ணீரில் சிறிதளவு சீரகம் போட்டால் சாயம் போகும்,கையால் அழுத்தி தேய்த்தாலும் சாயம் ஒட்டும். மேலும் புல்லின் விதைகள் மேலே மிதக்கும்.

மிளகு:

மிளகில் ,பப்பாளி விதைகளை கலப்பார்கள், மேலும் மினரல் ஆயிலால் பாலிஷ் செய்து விற்பார்கள்.

சோதனை:

நீரில் சிறிது மிளகைப்போட்டால் பப்பாளி விதைகள் மிதக்கும்.

மஞ்சள்:

இப்பொழுதெல்லாம் மஞ்சள் தூளாக பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுகிறது, இவற்றில் மஞ்சள் தூளோடு பிற மலிவான தானியங்களின் மாவு கலக்கப்ப்படும், குறிப்பாக ராகி, கம்பு மாவு கலந்துவிடுவார்கள், நிறத்தினை அதிகரிக்க "லெட் குரோமேட் "என்ற நிறமியை சேர்ப்பார்கள்.

மஞ்சள் கிழங்கிலும் லெட் குரோமேட் கொண்டு வேகவைக்கும் போதே நிறம் சேர்க்கிறார்கள்.

சோதனை:

நீரில் கலப்பட மஞ்சள் தூளைக்கரைத்தால் நல்ல நிறம் கொடுக்கும், மேலும் மாவு போன்றவை வெண்மையாக அடியில் தங்கும்.

மேலும் உறுதி செய்ய கொஞ்சம் எலுமிச்சம் சாறு சேர்த்தால் நீலம்/ ஊதா நிறமாக கரைசல் மாறும்.

கொத்தமல்லி தூள்:

இதில் மரத்தூள், தவிடு, மற்றும் உலர்ந்த மாட்டு சாணி கலக்கப்படுகிறது.

சோதனை:

நீரில் கரைத்தால் மரத்தூள்,தவிடு மேலே மிதக்கும், மேலும் சாணிக்கரைந்து துர்நாற்றம் வரும்.

மிளகுத்தூள்;

இதில் கொத்தமல்லி தூள், பிறத்தானிய மாவு சேர்க்கப்படுகிறது.

சோதனை:

சுவை மற்றும் வாசனை மூலம் மட்டுமே அறிய முடியும் அல்லது நுண்ணோக்கி மூலம் காண வேண்டும்.

பச்சைப்பட்டாணி, பச்சை மிளகாய் மற்றும் காய்கள்:பசுமையாக இருப்பதாக காட்ட மாலச்சைட் கிரீன்(Malachite Green ) எனப்படும் பச்சை நிறமியில் தோய்த்து விற்கிறார்கள்.

சோதனை:

வெள்ளைநிற ஈரத்துணியால் துடைத்தால் சாயம் ஒட்டும்,தண்ணீரில் அலசினாலே நிறம் போவதனைக்காணலாம், இதுவும் கேன்சர் உண்டாக்கும் நிறமியாகும்.

தற்போது மல்லிகைப்பூக்களுக்கும் பச்சை சாயம் பூசப்படுகிறது :-))

கிராம்பு ,ஏலக்காய்:

இவற்றில் இருந்து எண்ணையை எடுத்துவிட்டு வெறும் சக்கையை மட்டும் விற்கிறார்கள், எண்ணை எடுக்கப்பட்ட கிராம்பு,ஏலக்காய் உடன் கொஞ்சம் நல்லவற்றையும் கலந்து விற்கிறார்கள்.

வாசனை, சுவை மூலம் மட்டுமே இதனைக்கண்டுப்பிடிக்க முடியும்.

மிளகாய்த்தூள்:


இதில் செங்கல் தூள், சோப்பு கல் எனப்படும் சுண்ணாம்புக்கல் தூள், மேலும் மரத்தூள் , தவிடு என நன்கு அரைத்து கலந்துவிட்டு "சூடான் டை" எனப்படும் சிவப்பு நிறமியை சேர்த்து ரத்த சிவப்பில் மிளகாய்த்தூள் விற்கிறார்கள்.

சோதனை:

தண்ணீரில் கரைத்தால் நிறம் போகும், மேலும் கலப்படங்கள் வெள்ளையாக அடியில் தங்கும்.

கடந்தாண்டு பல பிரபல நிறுவனங்களின் மிளகாய்த்தூள் அமெரிக்காவில் கைப்பற்றி அழிக்கப்பட்டுள்ளது.

(அரசின் நோட்டீஸ்)

மேலும் கேரளாவில் ஈஸ்டர்ன் மசாலா தயாரிக்கும் மிளகாய்த்தூளில் சூடான் டை கலப்பு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு அவர்கள் அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப வைத்திருந்த மொத்த சரக்கும் அழிக்கப்பட்டது. சூடான் டை எனப்படுவது துணிகளுக்கு சாயமேற்றப்பயன்ப்படுவது, உணவில் கலந்தால் கேன்சர் வரும் என தடை செய்யப்பட்டது.

ஈஸ்டர்ன் மசாலா நிறுவனத்தில் ரெய்டு நடத்தி மிளகாய்த்தூளை அழிக்கும் காட்சி:


ஆனால் பின்னர் ஈஸ்டர்ன் மசாலா நிறுவனம் அப்படி எதுவும் நடக்கவில்லை ,என அதிகாரிகளை சரிக்கட்டிவிட்டு மறுப்பு செய்தி அறிவிப்பு வெளியிட்டார்கள் எனவும் தகவல்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன.

சுவீட் எடு கொண்டாடு:


கேசரி, லட்டு ஆகியவற்றில் சிவப்பு நிறத்திற்காக கேசரிப்பவுடர் எனப்படும், மெட்டானில் எல்லோ நிறமியே பயன்ப்படுகிறது. இதுவும் ஒரு கேன்சர் உருவாக்கும் ஒரு இரசாயன நிறமி ஆகும்.

உண்மையான கேசரிப்பவுடர் என்பது குங்குமப்பூவின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவது, பூவின் மகரந்த இழைகளே குங்குமப்பூ என பயன்ப்படுவது, எனவே மற்றப்பாகங்களை பொடியாக அரைத்து செய்யப்படுவது கேசரிப்பவுடர் ஆகும் , இதனை தண்ணீரில் பவுடரை போட்டதும் நிறம் மாறாது , கொதிக்க வைத்தால் மட்டுமே நிறம் கொடுக்கும். இது விலை அதிகம் என்பதால் சிவப்பு நிறமியை பயன்ப்படுத்துகிறார்கள்.அனைத்து இனிப்பகத்திலும் தெரிந்தே கலந்து தயாரிக்கிறார்கள், நாமும் தெரிந்தே லட்டு ,கேசரி என சாப்பிடுகிறோம்.

மேலும் இந்த கேசரிப்பவுடர் பாதாம் பால் என கடைகளில் விற்கப்ப்படும் பாலிலும் கலக்கப்படுகிறது.மெட்டானில் எல்லோ நிறமி , தந்தூரி சிக்கன்,பஜ்ஜி,பிரியாணி,காரக்குழம்பு, முறுக்கு, என சிவப்பு நிறம் தேவைப்படும் அனைத்து உணவுகளிலும் வியாபாரிகளால் கலப்பட்டு விற்கப்படுகிறது.


வெள்ளித்தாள் இனிப்பு:பல வட இந்திய இனிப்புகளில் வெள்ளி பூச்சு இருக்கும் , இந்த வெள்ளியிலும் கலப்படம் உண்டு, உண்மையான வெள்ளி விலைக்கூட என்பதால், அலுமினியம், ஈயம், குரோமியம் கலந்து விடுகிறார்கள், மேலும் இதற்கு பயன்ப்படும் வெள்ளி கழிவு சுத்திகரிப்பு மூலம் கிடைக்கும் வெள்ளியாகும். எனவே 100% தூய்மையான வெள்ளியாக இருக்க வாய்ப்பே இல்லை.

இப்படிப்பட்ட கலப்பட வெள்ளியால் மூளைப்பாதிப்பு,நரம்புக்கோளாறு, வாதநோய்கள் வரலாம்.

இதில் இன்னொரு தீங்கு என்னவெனில், இவ்வெள்ளித்தாள் தயாரிக்கும் முறையாகும்.

மாட்டின் குடலை வெட்டி சிறுத்துண்டுகளாக்கி ஒரு புத்தகம் போல் தயாரித்து ஒவ்வொருப்பக்கத்திலும் சிறு துண்டு வெள்ளியை வைத்து அதன் மீது சுத்தி/ மரசுத்தி வைத்து அடித்து தட்டி தட்டி மிக மெல்லிய வெள்ளித்தாள் ஆக்குவார்கள்.


இப்படி தயாரிக்கும் போது மாட்டுக்குடலின் சிறுப்பகுதிகள் ,இரத்ததுளிகள், வெள்ளித்தாளில் ஒட்டிக்கொண்டுவிடும், எனவே வெள்ளித்தாள் போர்த்திய இனிப்புகள் சைவம் அல்ல என இஸ்கோன் தளத்திலும் போட்டிருக்கிறார்கள்.

To know more about silver foil click the link:
இன்னும் சிலக்கலப்படங்கள் இருக்கிறது, முடிந்தால் பிறகுப்பார்ப்போம்.

---------------
பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி:

கூகிள்,விக்கி,யூடூயூப்,தி இந்து, டெக்கான் கிரானிக்கில், அக்மார்க் இணையத்தளங்கள் நன்றி!

*********