Friday, August 24, 2012

Total recall:2007 ஆகஸ்ட்-5 தமிழ்ப்பதிவர் சந்திப்பு மற்றும் பட்டறை.வலைப்பதிவர்கள் சந்திப்பு ஆகஸ்ட் 26,2012 அன்று நடக்க இருப்பது அனைவரும் அறிந்ததே ,முதலில் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்தினை சொல்லிவிடுகிறேன்...

வலைப்பதிவு சந்திப்புக்கு வாழ்த்துக்கள்!அதிக இடித்தல் (hits)வாங்கும் நோக்கில் இச்சந்திப்பினை ஒட்டி பலரும் பலவிதமாக புனைவுகளை முன்வைத்து பதிவுகளை போட்டு இருக்கிறார்கள், பெரும்பாலான புனைவுப்பதிவுகள் "மது" என்ற ஒன்றினை முன்னிறுத்துகின்றன, ஆனால் அவர்கள் சொல்வது உண்மையில்லை என அவர்களுக்கே தெரியும்,இருந்தாலும் ஏதோ ஒரு மனமயக்கத்தில் அப்படியெல்லாம் பேசுகிறார்கள் என நினைக்கிறேன்.

தமிழ்ப்பதிவர் சந்திப்பில் இது ஒன்றும் முதல் பெரும் சந்திப்பும் இல்லை ,கடைசியான ஒன்றாகவும் இருக்கப்போவதில்லை, தொடரும் நிகழ்வாகவே இருக்கும்.இதற்கு முன்னர் இப்போது விட தொழிற்நுட்பம் ,பொருளாதாரம் என பல வகையிலும் பிந்தங்கிய காலமான 2007 இல் மிகப்பிரம்மாண்டமான பதிவர் சந்திப்பு மற்றும் பட்டறை ஒன்றினை ,இணையம்,கணினி என சகல தொழிட்பத்துடன் , நேரடி கற்றல் முகாமாக சென்னை பல்கலை வளாகத்தில் நடத்திக்காட்டி இருக்கிறார்கள் தமிழ்ப்பதிவர்கள் என்பதை தற்போது புதிதாக வந்தவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்,சில பழைய திமிங்கில பதிவர்களும் மறந்திருக்க கூடும் என்பதால் ஒரு டோட்டல் ரீகால் டு 2007 ஆகஸ்ட்-5 தமிழ்ப்பதிவர் சந்திப்பு மற்றும் பட்டறையினை இப்போது காணலாம்.


தமிழ்ப்பதிவர்களின் முதல் பெரும் பதிவு பட்டறைக்கு பெரிதும் உழைத்து முன்னெடுத்து சென்றப்பதிவர்களின் பட்டியல், நினைவில் இருந்து எழுதுவதால் சிலர் விடுப்பட்டிருக்கலாம், மன்னிக்கவும் ,மேலும் சில பதிவுகளை தேடி அவர்கள் பட்டறைக்குறித்து வெளியிட்ட அனுபவப்பதிவுகளையும் இணைத்துள்ளேன்.அனைத்தும் தேடி எடுக்க அவகாசம் இல்லை எனவே சில மட்டுமே இருக்கும், விடுபட்டவர்கள் மன்னிக்கவும்.

(தமிழ்மணத்தினை செதுக்கிய சிற்பி"காசி"அண்ணாச்சி,உடன்,முகுந்த்,இகரஸ் பிரகாஷ்.)

மா.சிவகுமார்,

"தமிழ்மணம்"காசி அண்ணாச்சி.

உண்மைத்தமிழன்,

செந்தழல் ரவி,

பொன்ஸ்,

சிந்தாநதி,

பாலபாரதி,

நாமக்கல் சிபி,

லக்கிலுக்'யுவகிருஷ்ணா"

"ஓசை"செல்லா.

வினையூக்கி,

விக்கி,

நந்தா,

ரவிஷங்கர்,

பெனாத்தல் சுரேஷ்,

மற்றும் பலர், pre production, execution,post production, என பலவகையிலும் பலரும் பங்காற்றினார்கள், tamilbloggers.org என்ற இணையத்தளம் முதற்கொண்டு உருவாக்கி தொழிற்நேர்த்தியுடன் செயல்பட்டார்கள்.எனவே எத்தனையோ பேரின் பங்களிப்புண்டு, அனைவரும் என் நினைவில் இல்லை,மேலும் அப்பொழுதும் நான் வாசகனாக/பார்வையாளனாக/முகமூடியாகவே இருந்தப்படியால் படித்தவற்றையே இங்கு சொல்கிறேன்."I din't have any first hand experince on that event" so errors and omissions except!


அன்றைய பதிவர் சந்திப்பு மற்றும் பட்டறையும், இன்றையப்பதிவர் சந்திப்பும் தற்செயலாக ஆகஸ்ட் மாதத்தில் அமைந்துள்ளது எனலாம்.

பெண்கள் பலர் பட்டறையில் ஆர்வமுடன் கலந்துக்கொண்டக்காட்சி!
-------------------

கீற்று இணையதளத்தில் பதிவர் பட்டறையின் சுற்றறிக்கை,நிகழ்ச்சி நிரல், என முதன்மை விவரங்கள் வெளிவந்தது .

கீற்று இணைய தளத்தில்...
பதிவர் பட்டறை-2007 ஆகஸ்ட்-5
எப்போ?
ஆகஸ்டு 5, 2007 - ஞாயிற்றுக் கிழமை

எங்கே?
சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறையின் அரங்கு - மெரினா வளாகம் (Marina Campus)

எவ்வளவு நேரம்?
காலை ஒன்பதரை மணி முதல் மாலை ஐந்து மணி வரை பட்டறை நடைபெறும்.

எதற்கு?
பதிவர்கள், அல்லது வலைஞர்களுக்கிடையில் ஒரு தொடர்பு-பின்னல்(network) உருவாக்குவது.
பயன் தரக் கூடிய தகவல்களை அளிப்பது.
புதியவர்களுக்கு வலைப்பதிவு, தமிழில் எழுதுதல் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல்
வலைப்பதிவர்களுக்கு தொழில் நுட்ப விபரங்களில் பயிற்சி தருதல்
பதிவுகள் மூலம் தொழில், தனி வாழ்க்கை மேம்படலுக்கு வழிகளை விவாதித்தல்
பதிவர்கள் ஒன்றிணைந்து வணிக முயற்சிகள், வணிகம் சாராத சேவை முயற்சிகள், தொழில் நுட்ப பணிகளை ஆரம்பிக்க வித்திடுதல்.
இணையத்தில் தமிழ் தழைக்க பணி புரிந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தல்
இன்னும் ஏதாவது சேர்க்க விரும்பினால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

மேலும் படிக்க அழுத்தவும்:
------------------------------------
(பட்டறையில் ஒரு பாடம்"எடுப்பவர் "விக்கி")

-----------------------------------
எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் திரு.பாமரன் (கோவை)அவர்கள் பதிவர் பட்டறைக்கு காணொளி மூலம் வாழ்த்து சொல்லியிருந்தார், இதற்கான முயற்சிகளை எடுத்தது பல்லூடக நிபுணராக அப்பொழுது விளங்கிய "ஓசை" செல்லா என்றப்பதிவர் ஆவார். போட்டோகிராபி இன் தமிழின் அங்கத்தினர்.

அவர் அப்போது உடனுக்குடன் புகைப்படங்கள் எடுத்து கைப்பேசி மூலம் பதிவேற்றி அசத்தினார், அப்போதைய இணைய வேகத்திற்கு அது அபாரசாதனை என்பதை நினைவில் கொள்ளவும்.

எழுத்தாளர் பாமரனின் வாழ்த்து.

----------------

பதிவுலநண்பர் மோகன் தாஸ் ,தனது பதிவர் பட்டறை அனுபவங்களை பகிர்ந்துள்ளார் ,இப்பொழுது படித்தாலும் சுவாரசியமாக இருக்கிறது.

மோகன் தாஸ் அவர்களின் பதிவில்...

ஆரம்பத்தில் இருந்தே முதல் முறையாக பட்டறை நடத்துகிறார்கள் என்ற எண்ணம் துளி கூட வராத அளவிற்கு பட்டறை நடத்தியவர்களின் செயல்பாடுகள் இருந்தன. நிறைய இடங்களில் "ச்ச எப்படி யோசிச்சு செஞ்சிருக்காங்க" என்று புருவம் தூக்கிக் கொள்ளும் கேள்விகள் வரும் அளவிற்கு நிறைய விஷயங்களைச் சின்ன சின்ன விஷயங்களானாலும் சரி பெரிய விஷயமானாலும் சரி செய்திருந்தார்கள். அவர்களுக்கு என் தனிப்பட்ட பாராட்டுக்கள், பட்டறைக்கு கீறிக் கூட ஒன்றும் செய்யவில்லை என்றாலும், சிறு சிறு நாடகங்கள் நடத்தி கல்லூரிகளில் விழாக்கள் நடத்தி - பங்குபெற்றவன் ஆதலால் நிச்சயமாய் அவர்கள் செய்திருந்த முன்னேற்ப்பாடுகள் பற்றி ரொம்பவும் பெருமையாகவே சொல்லமுடியும். நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தாலும்...

முழுவதும் படிக்க சுட்டியை அழுத்தவும்:
-------------

மோகன் தாசின் பதிவு மட்டும் இல்லை கண்ணும் பேசும் ,அதாவது கேமிரா கண்ணன் அவர் ,அவரது கேமராவில் சுட்ட பதிவர்ப்பட்டறையின் அழகானப்படங்கள் காண சுட்டியை அழுத்தவும்.

-------------------
"youthblogger" 'தருமிய்யா மற்றும் மாலன்
----------------------------

அக்காலத்தில் பெண்ப்பதிவர்களில் கலக்கியப்பதிவர்,போக்கிரி என்ற வலைப்பதிவின் ஓனர், வலைச்சரத்தின் ஆதாரம், என பல முகம் உண்டு.சென்னையில் நடந்த முதல் பதிவர் பட்டறைக்கு மிகவும் பாடுப்பட்டுள்ளார், அவரது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.படித்துப்பாருங்கள்.

பொன்ஸ் அவர்களின் பதிவில்...

முதல் அமர்வு தகடூர் கோபி தமிழ் குறியேற்றங்கள், விசைப்பலகை, போன்றவற்றை விளக்கினார். அப்போதே திருவள்ளுவர் அறை, இடம் கொள்ளாத கூட்டமாக திரளத் தொடங்கிவிட்டது. நின்றபடி எல்லாம் கேட்டார்கள் மாணவர்கள்.

அடுத்த அமர்வாக வந்த தமிழியின் ப்ளாக்கர், வோர்டுபிரஸ் விளக்கத்திற்கும் கூட்டம் அலைமோதியது. ஆர்வமாக கேட்டவர்கள், மிகவும் உதவியாக இருந்தது என்றும் சொன்னார்கள். ‘ஏங்க, அவரு, தமிழி பேராசிரியருங்களா? இத்தனை நல்லா எடுக்கிறாரே!’ என்று ஒருவர் என்னிடம் வந்து கேட்டுவிட்டுப் போனார்!

HTML அறிமுகம் கொடுக்க வந்த செந்தழல் ரவி, HTML மட்டுமின்றி ஒரு அடிப்படைக் கணிமை தொடங்கி வலைபதிதல் வரை மிகவும் விரிவாகவே சொல்லிக் கொடுத்துவிட்டார். செல்லாவின் ஒலி ஒளிப்பதிவுகள், கோபியின் எழுத்துரு மாற்றப் பயிற்சி என்று கேன்சலான பிற அமர்வுகளின் நேரமும் சேர்த்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம், ரவியின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு அமர்ந்து கேட்டனர் மாணவர்கள். இடையில் உணவு இடைவேளை எல்லாம் இருந்தும், தலைவர் தொடர்ச்சி விட்டுப் போகாமல் வகுப்பெடுத்ததாக கேள்வி!

முழுவதும் படிக்க செல்லவும்->

-------------------------------

(முகுந்த் ,ஈ-கலப்பையை செதுக்கிய இணையக்கார்பெண்டர்,உடன் மா.சி)

(நன்றி சொல்லும் பட்டறை நிர்வாகிகள், மைக் வைத்திருப்பவர் பாலபாரதி,நீலச்சட்டை கண்ணாடிக்காரர் மா.சி)

-------------------------------

அண்ணாச்சி உண்மைத்தமிழனை அறியாதோர் இருக்கமுடியாது, அவர் பதிவர் பட்டறைக்கு பெரிதும் உழைத்தவர், பஞ்சர் ஆன வண்டியை எல்லாம் வேர்வை வழிய மூச்சு வாங்கி தள்ளித்தான் பட்டறையை நடத்த உதவியுள்ளார்.மேற்கொண்டு நீங்களே படிச்சுப்பாருங்கள் அதிகமில்லை ஒரு 5 அல்லது 6 பதிவு கொஞ்சமா 500 பக்கத்தில் தான் எழுதி இருப்பார் :-))

உண்மைதமிழன் அவர்கள் பதிவில்...

இந்த முனையில் இருந்து அந்த முனைவரை வியர்வையில் குளித்தபடியே தள்ளிக் கொண்டு வந்தவன் நேரத்தைப் பார்த்தேன். மணி 10. இனி அவ்வளவுதான்.. ஆட்டோ புடிச்சு 500 ரூபாவுக்கு செலவுதான் என்று நினைத்து காளியப்பா மருத்துவமனை அருகே வந்து சோர்வாக நின்றேன்.

மேலும் படிக்க அழுத்தவும்:

Read more:# truetamilan
--------------

சிவபாலன் என்றப்பதிவர் அப்பொழுது புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வந்த செய்தியுடன் பட்டறைக்குறித்து தனது கருத்தினைப்பகிர்ந்த்துள்ளார்.


சிவபாலன் அவர்களின் பதிவில்...

மேலும் படிக்க அழுத்தவும்:
--------------------------------------------

(பட்டறை நடக்கும் போதே என்னா தில்லா குடிக்கிறாங்கப்பா ...ஹி...ஹி அது காப்பி தான்னு சொன்னா நம்பவா போகுதுங்க அப்ரண்டீசுகள்)


---------------------------------------------

பதிவர் ஜே.கேயின் பதிவில் அவரது பட்டறை அனுபவங்களை படித்துப்பாருங்கள்...

ஞாயிறு காலை, சிவக்குமார், பொன்ஸ் ஆகியோர் சில Extension Boxes கொண்டுவந்தார்கள். உண்மைத்தமிழன், தகடூர் கோபி, மற்றும் அதியமான் டெஸ்க்கை சரி செய்து கணினிகளை வரிசைப்படுத்த மிகவும் உதவினார்கள். பின் தான் எல்லா கணினிகளிலும் எ-கலப்பை நிறுவ வேண்டியதாயிற்று. 9 - 9.30 க்குள் 5 முறைக்கு மேல் மின்சாரம் நின்று வந்ததால், கொஞ்சம் கலக்கம் ஆகிவிட்டது.

மேலும் படிக்க அழுத்தவும்:

-----------------------------------------

(இந்த சேப்பு சட்டைக்காரர் யாருன்னு சரியா சொல்றவங்களுக்கு புதிய தலைமுறையின் ஒரு பழைய காப்பி சன்மானமா கிடைக்கலாம் :-))}

------------------------------------------

பதிவர் நந்தா அவர்கள் தனது அனுபவங்களைப்பகிர்ந்துக்கொண்டுள்ளார்.பட்டறை உழைப்பாளிகளில் ஒருவர்.

நந்தா அவர்களின்பதிவில்...

Physically challenged என்று சொல்லப்படுபவர்களில் ஒரு சிலர் வந்திருந்தனர். அவர்களில் கண்பார்வை குறைபாடு உடையவர்கள் என்னிடம் சொன்னது, “சார் இங்க பேசுனதை எல்லாம் கேக்க ரொம்ப ஆர்வமா இருக்கு. ஆனா நாங்க பண்றது இது சாத்தியமா?”. நான் அவர்களிடம் சொன்னது, நீங்கள் எழுதிதான் வலைப் பதிய வேண்டும் என்று அவசியமில்லை சார். ஒலிப்பதிவுகளாகவும் பதிவுகளிடலாம். நீங்கள் அதற்கு தயாராயிருந்தால் சொல்லுங்கள், உங்களது பதிவை வெளிச்சத்திற்குக் கொண்டு வர இங்கே பலர் இருக்கிறோம் என்று. அந்த அன்பர்கள் எங்களில் ஒரு சிலரின் தொலைபேசி எண்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க அழுத்தவும்.
------------------

ஓசை செல்லா அப்போதைய பல்லூடக விற்பன்னர், நிறைய புகைப்படங்களுடன் ,உடனுக்குடன் பட்டறையை இணையத்தில் ஏற்றினார், பட்டறைப்புகைப்படங்கள் நிறைய காணக்கிடைக்கின்றன.

ஓசை செல்லாவின் பதிவில்...


சந்திப்புக்கு முன் தினம் "தாகசாந்தியில்"தோழர்கள்


அடுத்தநாள் பட்டறையில் சுமார் இரண்டு மணி நேரம் ஓரமாக நின்று வகுப்பெடுக்காமல் பார்வையாளர் கூட்டத்தோடு கலந்து இணைய தொழில்நுட்ப வகுப்பெடுத்து அசத்திய "செந்தழல் ரவி" , (போதையில் இதெல்லாம் சாத்தியமா?) வேலைன்னு வந்த்துட்டா தீயாய் வேலை செய்வாங்க ,ஜாலின்னா பட்டாசா வெடிப்பாங்க அதான் தமிழ்ப்பதிவர்கள்.

மதுவுக்காக யாரும் பதிவர் சந்திப்போ, பட்டறையோ நடத்துவதில்லை, நிகழ்சிக்கு முன்னர், பின்னர், அவரவர் வசதிக்கு நண்பர்களுடன் அளவலாவ ஏதோ ஒரு இடத்தில் சந்தித்து தங்கள் கேளிக்கைகளை வைத்துக்கொள்வார்கள் என்பது கூட புரியாதவர்களுக்காகவே இப்படங்களை இணைத்துள்ளேன் மேலும் படங்கள் ஓசை செல்லாப்பதிவில் உள்ளது.

பி.கு: இப்படங்கள் செந்தழலுக்கோ மற்றவர்களுக்கோ மனவருத்தம் ஏற்ப்படுத்துமாயின் நீக்கப்படும், ஆனால் அனைத்துப்படங்களும் ஓசை செல்லாவின் தளத்தில் உள்ளது,நன்றி!


பட்டறைப்படங்கள்.

#http://chellaonline.blogspot.in/
-----------

குளோபல்வாய்ஸ் என்ற இணையத்தளத்தில் புகைப்படத்துடன்ன் வந்த செய்தியைக்காண செல்லவும்...


------------

பதிவர் சத்தியா ,அப்போதே கரைசல் செய்த ஒரு பதிவருக்கு விளக்கமாக பதில் கொடுத்துள்ளார்.

சத்தியா அவர்களின் பதிவில்...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார். உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும்
வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால்
பதிலளிக்க முயல்கிறேன்.

மேலும் படிக்க அழுத்தவும்:


------------------------------------

(சங்கத்தமிழர்கள் என நிறுபிக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர், முதுகு தெரியுது ,மூஞ்சு தெரியல ஒத்துக்க மாட்டோம்னு சொல்லிடாதிங்க!!)

------------------------------------

கப்பி கய் என்றப்பதிவர் ,பட்டறையின் பின்விளைவாய் ஒரு காமெடி பதிவுப்போட்டுள்ளார் ,படித்து மகிழுங்கள்.

கப்பிகய் பதிவில்...

பல பிரபலங்களும் எழுத்தாளர்களும் இந்தி திரைப்பட நடிகர்களும் பதிவெழுத ஆரம்பித்திருப்பதை அறிந்த நம் கோலிவுட் நட்சத்திரங்கள் தாமும் பதிவுலகிற்குள் எண்ட்ரி கொடுக்க ஆயத்தமாக வேண்டி வடபழனி கிரீன்பார்க் ஓட்டலில் டிஸ்கஷனில் இருக்கிறார்கள். ஹீரோவாக நடிக்க ஒரு புது இயக்குனரிடம் கதை கேட்க வரும் சந்தானம் அங்கிருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்து ஜோதியில் ஐக்கியமாகிறார்.

மேலும் படிக்க அழுத்தவும்:
---------------

பின்குறிப்பு:

#மா.சிவகுமார், தமிழ்மணம் காசி அண்ணாச்சி இன்னும் சிலரின் பதிவுகளையும் தேடிப்பார்த்து அவர்கள் அனுபவங்களையும் இடலாம் என நினைத்தேன் , சிக்க மாட்டேன்கிறது ,சீக்கிரம் அப்டேட் ஆக இணைக்கிறேன்.மேலும் பலர் விடுபட்டிருக்கலாம் அனைத்தும் நேரமின்மைக்காரணமே எனவே மன்னிக்கவும்.

#பதிவர் சந்திப்பு என்பது சும்மா சந்தித்து கதைத்துப்போக என வரலாறு தெரியாமல் பலர் பேசிக்கொண்டு இருப்பதால் "வரலாறு முக்கியம்" பதிவரே என தொகுத்து வெளியிட்டுள்ளேன், இதிலும் அரசியல் செய்ய யாரேனும் நினைத்தால் அடியேன் பொறுப்பல்ல!

# புகைப்படங்கள் காணொளி உதவி யூடியூப், ஓசை செல்லா, மோகன் தாஸ், கூகிள், தளங்கள், நன்றி!

# கருத்து சுதந்திரம் இல்லாதவர்கள் ,இவ்விடம் கருத்து கூற முயலவேண்டாம், அப்படி கூறினால் அவை நீக்கப்படும்.


********


Wednesday, August 22, 2012

அஃதே,இஃதே-2 :சென்னை தினம்,பாலகுமாரன், விளக்கடுப்பு,ரஜினி.மதராஸப்பட்டிணம்.

நாளை 22- 8- 2007 சென்னை (Madras) என்ற நகரம் தோன்றிய நாள். 1639 இதே நாளில் தான் சென்னை நகரம் அமைப்பதற்கான இடம் வாங்கும் ஒப்பந்தம் கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக ஃப்ரன்சிஸ் டே, மற்றும் ஆண்ருவ் கோகன் ஆகியோருக்கும் வெங்கடப்ப நாயக்கர் என்ற அக்காலத்திய ராஜாவுக்கும் இடையே நடந்தது. அந்நாளை சென்னை பிறந்த நாளாக கணக்கில் கொண்டு சென்னை டே கொண்டாடப்படுகிறது.

மேற்கொண்டுப்படிக்க செல்லவும்...


ஹி..ஹி சென்னை தினத்திற்கு தனியே பதிவு போட கொஞ்சம் சோம்பல் எனவே முன்னர் போட்ட பதிவுக்கு ஒரு விளம்பரம் :-))
********

பிடித்தால் படியுங்கள்:பாலகுமாரன் வலைப்பதிவு.எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு காலத்தில் இதயம்பேசுகிறது, குங்குமச்சிமிழ், பாக்கெட் நாவல்,மாலைமதி போன்ற பத்திரிக்கைகள் மற்றும் மாத நாவல் புத்தகங்களின் அமுத சுரபியாக ,காதலும் வாழ்வும் கலந்த நாவல்களையும், அவ்வப்போது உடையார் என சரித்திரமும் எழுதி , சுஜாதா போன்ற அறிவியல் கலந்து எழுதும் ஜனரஞ்சகமான எழுத்தாளார்களுக்கு ஈடுக்கொடுத்து ஓடிய இரும்பு எழுத்துக்குதிரை.

அவரது இரும்புக்குதிரை, மெர்க்குரிப்பூக்கள்,பயணிகள் கவனிக்கவும் போன்ற நாவல்களை படித்து அடடா என வியந்த விவரம் அறியாக்காலம் எல்லாம் கடந்து விட்டாலும் இன்றும் படிக்க தகுதியான நாவல்களே.

அவரது அனுபவங்களை தொகுத்து "பாலகுமாரன் பேசுகிறார்" என்ற பெயரில் வலைப்பதிவாக அவரது அனுமதியுடன் ஒரு வாசகர் வெளியிட்டுக்கொண்டிருந்தார் தற்சமயம் புதிதாக எதுவும் அதில் காணக்கிடைக்கவில்லை என்றாலும், பழையப்பதிவுகளே படிக்க சுவாரசியமாக இருக்கின்றன, ஆன்மீக கேள்விப்பதில்,சினிமா, அவரது எழுத்தனுபவம் என நிறையக்காணக்கிடைக்கிறது. தற்சமயம் அமரர்.யோகி.ராம்சுரத்குமார் (விசிறி சாமியார்) அவர்களின் சீடராக முழுக்க ஆன்மீகத்தில் பாலகுமாரன் அவர்கள் மூழ்கிவிட்டார் ,புதிதாக படைப்புகள் எதுவும் எழுதுவதில்லை.

தனக்கு கதை எழுத சொல்லித்தந்ததே சுஜாதா தான் என தன்னை அவரின் சீடர் என வெளிப்படையாக ஒருப்பதிவில் பகிர்ந்திருக்கிறார்

மேலும் படிக்க செல்லவும் ...

தற்சமயம் தமிழ்மணம் போன்ற பிரபலதிரட்டிகளில் குப்பையான பதிவுகளே இடத்தை அடைத்துக்கொண்டு இருப்பதால், இது போன்ற சுவாரசியமான பதிவுகள் பழைய சரக்காக இருந்தாலும் ஆயிரம் மடங்கு மேல் எனவே வாசித்து தான் பாருங்களேன்!

********

ஒளிமயமான எதிர்காலம்.மகாராஷ்டிராவில் Phaltan என்ற இடத்தில் உள்ள Nimbkar Agricultural Research Institute (NARI) என்ற தன்னார்வ அமைப்பு கிராமப்புற இந்தியாவிற்கு தேவையான விவசாயம், சுகாதாரம்,மாற்று எரிப்பொருள் என பல வகையிலும் ஆய்வுகள் செய்து புதிய கண்டுப்பிடிப்புகளையும், முறைகளையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களுக்கு செலவில்லா/குறைவான செலவில் தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்ய உதவி வருகிறது.

அவ்வமைப்பினை சேர்ந்த பொறியாளார் -கண்டுப்பிடிப்பாளர் அனில் ராஜ்வன்ஷி புதிதாக ஒளிக்கொடுக்கும் அதே சமயத்தில் சமைக்கவும் பயன்ப்படும் அடுப்பு என ஒரு மண்ணெண்ணை விளக்கினை கண்டுப்பிடித்துள்ளார்.

கவுண்டமணிப்புகழ் பெட்ரோமாக்ஸ் விளக்கே தான் ஆனால் அதன் மேல் புறம் வெளியேறும் வெப்பத்தினை பயன்ப்படுத்தும் "வெப்பக்கடத்தியை" அமைத்து அதன் மூலம் அடுப்பாக சமைக்கவும் பயன்ப்படுத்துமாறு "விளக்கடுப்பு"(lanstove' (lantern combined with cook stove)வடிவமைத்துள்ளார்கள்.எனவே மின்சாரம் ,கேஸ் என இல்லாதவர்கள் வீட்டில் விளக்கெறியும் போதே சமைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் எரிபொருள் நிறைய மீதம் ஆகும், கிராமப்புற மக்களுக்கு செலவும் குறையும்.

இப்போது தமிழ்நாட்டில் உள்ள மின் தட்டுப்பாடு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு, மேலும் விலை எப்போது வேண்டுமானாலும் ஏற்றப்படலாம் எனும் நிலையைக்காணும் பொழுது நாமும் ஒரு "விளக்கடுப்பு" வாங்கி வைத்துக்கொள்வது லாபகரமான ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

*******

பாட்டொன்று கேட்டேன்.மீண்டும் ரியல் தல "சூப்பர் ஸ்டாரின்'" எளிமையான நடனத்துடன் ,எப்பொழுதும் அசத்தும் ஒரு பாடலின் காணொளி.இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த முள்ளும் மலரும் படத்தில் இப்பாடல் இடம்ப்பெற்றுள்ளது.


-----------------------

பின்குறிப்பு;

தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள்,யூடியூப், cnn-ibn news. இணைய தளங்கள் நன்றி!

*******


Saturday, August 18, 2012

சினிமா ரகசியம்-2:2D to 3D conversion.
சமீபகாலமாக உலக அளவில் மீண்டும் 3டி படங்கள் அதிகம் வர ஆரம்பித்து இருக்கின்றன, இதெல்லாம் திரையரங்கிற்கு வர தயங்கும் மக்களை வரவழைக்க செய்யப்படும் "கவர்ச்சி தந்திரங்களே" ஆகும். மேலும் பல பழைய 2டி படங்களும் 3டிக்கு மாற்றும் வேலைகளும் நடக்கின்றன,அத்தகைய முயற்சிகள் தமிழிலும் சூப்பர் ஸ்டாரின் "மெஹா ஹிட் படமான "சிவாஜி" மூலம் நடப்பெறுகின்றது. இப்பதிவில் 2டி யில் இருந்து 3டிக்கு மாற்றம் செய்வது எப்படி நடக்கிறது எனக்காண்போம்.


இவ்வாறு எடுக்கப்படும் பல 3டி படங்கள் உண்மையில் சொல்லப்போனால் உண்மையான 3டி படங்கள் கிடையாது, பலப்படங்கள் வழக்கம் போல 2டியில் எடுத்துவிட்டு பின்னர் போஸ்ட் புரொடெக்‌ஷனில் கணினி உதவியுடன் 3டி ஆக ரெண்டர் செய்யப்பட்ட படங்களே.

நேரடியாக 3 டி இல் எடுக்கும் போது இரண்டுக்கேமரா உதவியுடன் சற்றே மாறுப்பட்ட தூரத்தில் ஒரே காட்சியை எடுத்து ஒரு டெப்த் உருவாக்கி பின்னர் இணைத்து முப்பரிமாணக்காட்சியாக்குவார்கள். இப்படி அனைத்துகாட்சியும் படமாக்குவது கடினம், செலவும், நேரமும் ஆகும் என்பதால் முக்கியமான காட்சிகளை "உண்மையான ஸ்ட்டீரியோ ஸ்கோப்பில்" படமாக்கி கொண்டு மற்றக்காட்சிகளை போஸ்ட் புரோடக்‌ஷனில் 3டி ஆக மாற்றுவார்கள், இதனை டிஜிட்டல் 3டி என்பார்கள்.

அவதார், டின் டின் போன்ற 3 டியில் எடுக்கப்பட்ட படங்களிலேயே முழுக்க ஸ்டீரியோ ஸ்கோபிக் படப்பிடிப்பு கிடையாது.பெருமளவு டிஜிட்டல் 3டி யில் கன்வெர்ஷன்ன் செய்யப்பட்டதாகும்.

இப்படி செய்ய பல மென்பொருள்கள் இருக்கிறது, மாயா- ஃப்ளேர், அடோப் ஆஃப்டெர் எபெக்ட்ஸ், போன்றவற்றிலும் செய்ய முடியும்.

வழக்கமான படத்தினை 3டி ஆக இரு வகையில் செய்வார்கள், முழுக்க தானியங்கியாக, அதாவது முழுப்படத்தினையும் கணினியில் உள்ளீடு செய்து விட்டால் அதுவே 3டி ஆக மாற்றிவிடும், இதில் முழுத்தரமும் இருக்காது என்பதால், பகுதி மனிதர்கள் எடிட் செய்து தேவையான தரம் கொண்டுவருவார்கள்.

மாயா-ஃப்ளேரில் தேவையான எடிட்டிங் செய்து 2டி இல் இருந்து 3டி ஆக மாற்றும் காணொளி;


ஒரே படத்தின் பல அடுக்குகளை கொண்டு அல்லது டெப்த் ஆப் ஃபீல்ட் உருவாக்கி என 3டியாக மாற்றலாம்.

2டி + டெப்த் பிளஸ் என இதனை சொல்வார்கள், இன்னும் சில முறைகளைக்கொண்டும் வழக்கமான 2டி காட்சியை 3டிக்காட்சியாக மாற்ற முடியும். இப்படித்தான் டைட்டானிக் படம் 3டி ஆக மாற்றப்பட்டது.

இப்பொழது கணினிகளின் வேகமும், மென்ப்பொருளின் திறனும் வெகுவாக முன்னேறிவிட்டதால் வெகு எளிதாக 2டி யில் இருந்து 3டி ஆக மாற்ற முடியும்.

எல்.ஜி லைவ் 3டி சினிமா மேஜிக் எனப்படும் 3டி தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் வழக்கமான அனைத்து தொ.கா நிகழ்ச்சிகளையுமே 3டி யில் உடனே மாற்றிக்காட்டும்., மிக எளிய முறையில் செயல்ப்படும் அமைப்பு என்பதால் கொஞ்சம் பிசிறடிக்கலாம், ஆனால் இத்தொலைக்காட்சியில் 3டி படங்கள் நன்கு தெரியும். விலை 40,000 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது.

இந்துஸ்தான் டைம்சில் வந்த எல்ஜி. 3டி தொ.காவின் விமர்சனக்கட்டுரை;


2D to 3D conversion feature:

Let's say you are a Big B fan and your favourite movie is Deewar. Let's also add your favorite dialogue to this "Tumhara pass kaya hai.... mere pass ma hai". Now you can transform this into a 3D experience. LG 3D Cinema Smart TV allows conversion of existing pictures into 3D mode quite easily. The conversion feature is easy. Big B has bashed the baddies it's now time to feel the power of his punch. You can increase the "depth" feature to 20 (maximum) for maximum 3D effect. For the dialogues you could do 3D sound zooming. It's a lot of power in your hands in terms of conversion to 3D.

முழு விவரம் அறிய சொடுக்கவும் சுட்டியை:

3டி யில் படம்பிடிப்பதைக்காட்டும் காணொளி,


-----------
நல்ல கிராபிக்ஸ் கார்ட், நினைவகம், வேகமான சிபியு இருந்தால் யார் வேண்டுமானாலும் வீட்டில் இருந்தே 2டி இல் எடுக்கப்பட்ட படத்த்இனை 3டிக்கு மாற்றலாம், அவ்வாறு 2D to 3D Conversion Test Using Xilisoft 3D Video Converter கொண்டு மாற்றியதை ஒருவர் யூடூயூபில் வெளியிட்டுள்ளார், நீங்களும் காணுங்கள்.

வீடியோ டைம் லைனில் 3டி என இருப்பதை அழுத்திவிட்டு , 3டி கண்ணாடி அணிந்து பார்த்தால் 3டியில் தெரியும்.

மேலும் 3டி என இருப்பதில் ஆப்ஷன் பகுதியில் பார்க்கும் முறையை கண்ணாடி இல்லாமல் என மாற்றியும் பாருங்கள், இரண்டு தனித்தனி காட்சிகள் பக்கம்,பக்கமாக காட்டும்.

இதை எல்லாம் நாம் செய்ய வேண்டியதில்லை மென்ப்பொருளே கொடுக்கப்பட்ட காட்சியினை இரண்டுக்காட்சிகளாக மாற்றி தேவையான டெப்த்தினை உருவாக்கி 3டி ஆக காட்டும்.தற்பொழுது தமிழில் மிகப்பெரும் வெற்றிப்பெற்ற சூப்பர் ஸ்டாரின் "சிவாஜி" படத்தினை 3டியில் மாற்றுவதாக செய்திகள் வருகின்றது, ஆனால் வழக்கம் போல "ரொம்பக்கஷ்டப்பட்டு" மாற்றுவதாக பில்ட் அப் கொடுக்கிறார்கள், மேலும் அவர்கள் சொல்வது போல பிரேம் ,பிரேம் ஆக கட் செய்தெல்லாம் 3டி ஆக்க மாட்டார்கள், அப்படி செய்ய முதலில் புளு மேட்/கிரீன் மேட்டில் எடுத்தக்காட்சியாக இருக்க வேண்டும். மேலும் அப்படி எல்லாம் செய்யத்தேவையே இல்லாதவாறு கணினி மென்ப்பொருள்களின் அல்காரிதம் அனைத்தினையும் பார்த்துக்கொள்ளும்.மொத்தப்படத்தினையும் கணினியில் உள்ளீடு செய்துவிட்டு தேவையான இடங்களில் பேராமீட்டர்களை நன்கு கணித்து எந்தக்காட்சி, பொருள் முன்னால் நீள வேண்டும், பேக்ரவுண்ட் எப்படி இருக்க வேண்டும் என சரிப்பார்த்தால் போதும், அல்லது சில அளவீடுகள் கொடுத்து முழுதாக கணினியே மாற்றம் செய்யவும் வைக்கலாம்.

ஒரு தொலைக்காட்சியில் லைவ்வாக மாற்றம் செய்யும் போது கணினியில் செய்ய ரொம்ப கஷ்டப்பட வேண்டாம் என்பது புரிந்திருக்கும், நல்ல தரமாக காட்சி வரவே கொஞ்சம் மெனக்கெட வேண்டும் மற்றப்படி மண்டை உடைக்கும் சமாச்சாரமில்லை 2டி யில் இருந்து 3டிக்கு மாற்றுவது.

இப்பொழுது பல லேப்டாப்புகளும் 3டி வசதியுடன் சந்தையில் கிடைக்கிறது, ஏசர், சோனி வயோ, டெல் என பல பிராண்டுகளும் கொண்டு வந்துவிட்டன.நாம் 2டி அல்லது 3டி எனமாற்றி வைத்துக்கொண்டு பார்க்க வேண்டியது தான். 3டியில் எடுக்கப்பட்டவை நல்ல தரமான காட்சியுடனும் 3டி யில் மாற்றியது கொஞ்சம் சுமாராகவும் இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை.
-----------
பின்குறிப்பு;
தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள்,யூடுயூப்,இந்துஸ்தான் டைம்ச் இணைய தளங்கள். நன்றி!
---------------

Thursday, August 16, 2012

மசாலா மர்மங்கள்.(food adulteration)


இந்தியா பரந்து விரிந்த, பல கலாச்சாரங்களை கொண்ட ஒரு ஒருங்கிணைந்த நாடு, மக்களின் மொழி ,இனம் என வேறுப்பட்டிருப்பதை போல அவர்களின் உணவுப்பழக்க வழக்கங்களும், உணவும் வேறுப்பட்டே இருக்கிறது, உணவின் பெயர், செய்முறை என பல வேறுப்பட்டாலும் அனைத்து உணவுக்கும் மூலப்பொருட்களும், அதில் சேர்க்கப்படும் வாசனை ,மற்றும் சுவையூட்டி, நிறமி ,மசாலாக்கள் ஆகியவை ஒன்றாகவே இருக்கும்.

உணவு தயாரிக்கப்படும் மூலப்பொருட்கள், மசாலா,நிறமி,சுவையூட்டிகள் பொதுவாக விலை அதிகம் என்பதால் மலிவான மற்றும் தரக்குறைவான , தீங்கு விளைவிக்கும் பொருட்களை கலநது விடுகிறார்கள்.மேலும் கலப்படங்களை எளிதாக அடையாளம் காணவும் ,சிலவற்றை தவிர்த்தலும் நமது உடல் நலனுக்கு உகந்தது.

உணவுக்கலப்படங்களை வெளிச்சம் போட்டும் காட்டுவதோடு அவற்றினை அடையாளங்காணவும், தவிர்க்கவும் சில வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.

பால்:அனைவரும் அருந்தும் ஒரு இயற்கையான உணவு. இதிலும் கலப்படம் செய்யப்படுகிறது. பெரும்பாலும் தண்ணீர் கலந்து விடுவார்கள். அது கூட பரவாயில்லை உறைகளில் அடைக்கப்பட்ட பாலே அதிகம் இப்போது பயன்ப்படுத்தப்படுகிறது, அவற்றில் நன்கு திக் ஆக இருக்க தாவர "ஸ்டார்ச்" கரைசலை கலக்கிறார்கள். மைதா மாவு போன்றவையே ஸ்டார்ச்.சில சமயங்களில் சோயா பாலையும் கலப்பதுண்டு.

மேலும் செயற்கை பாலும் கலக்கப்படுகிறது, இது சலவைத்தூள், யூரியா கொண்ட கலவையால் செய்யப்படுகிறது இதனை ஆய்வகத்தில் தான் கண்டறிய முடியும் என்பதால் எளிதில் கண்டறிய முடியாது.

மேலும் மெலாமைன் எனப்படும் பிளாஸ்டிக் வேதிப்பொருளையும் கலக்கிறார்கள், இது யூரியாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது.இதனை கொண்டு உடையாத பிளாஸ்டிக் தட்டு, கிண்ணங்கள் தயாரிக்கிறார்கள். இதில் மிக அதிக புரோட்டின் மூலக்கூறும், நைட்ரஜனும் இருப்பதால் வெண்ணை எடுக்கப்பட்ட நீர்த்த பாலை கெட்டியாக காட்ட சேர்க்கிறார்கள்.

உடல் எடைக்க்கூட்டப்பயன்ப்படும் ஊட்டச்சத்து மாவு, பால் பவுடரில் மெலமைன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குழந்தைகள் உணவு, பால்ப்பொருட்களில் மிக அதிக மெலமைன் கண்டறியப்பட்டுள்ளது.

2008 இல் சீனாவிலேயே இப்படிக்கலப்பட பால் பொருட்களை தயாரித்தற்காக மரணத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மெலாமைன், யூரியா கலப்பட பால் தொடர்ந்து அருந்தி வந்தால் கேன்சர் வரும் வாய்ப்புள்ளது,மேலும் சீரணக்கோளாரு இன்ன பிற உபாதைகளும் வரும்.

சோதனை:

நீர் கலந்த பாலை லேக்டோ மீட்டர் மூலம் கண்டறியலாம். அனைவரிடமும் அக்கருவி இருக்க சாத்தியமில்லை. இதனை மாற்று வழியில் கண்டுப்பிடிக்கலாம், பாலின் அடர்த்தி எண் 1.026 ஆகும் அதாவது நீரை விட அடர்த்தியானது. ஒரு லிட்டர் நீர் ஒரு கிலோ.கிராம் இருக்கும். ஆனால் ஒரு லிட்டர் பால் 1கிலோ 26 கிராம் இருக்க வேண்டும், ஹி..ஹி எடைப்போட்டு கண்டுப்பிடிங்க :-))

#ஸ்டார்ச் கலந்த பாலை அயோடின் சோதனை மூலம் கண்டுப்பிடிக்கலாம், கொஞ்சம் பாலைக்கொதிக்க வைத்து ஆறிய பின் சில துளிகள் அயோடின் சேர்த்தால் பால் நீல நிறமாக மாறினால் ஸ்டார்ச் உள்ளது என்பதை அறியலாம்.

ஐஸ்கிரீம்:

இதில் நன்கு நுரைப்புடன் மென்மையாக வர வேண்டும் என சலவைத்தூள் சேர்க்கிறார்கள், இதனைக்கண்டறிய சிறிது எலுமிச்சம் சாறு விட்டால் நுரையுடன் பொங்கினால் சலவைத்தூள் கலப்படம் ஆனப்பொருள் ஆகும்.

கடுகு:


கடுகில் ஆர்க்கிமோன் விதைகளை கலந்து விடுவார்கள். இவ்விதை பக்கவாதம் உண்டாக்க கூடியது.

சோதனை:

ஆர்க்கி மோன் விதைகள் மேல் மெல்லிய சுருக்கம் இருக்கும். மேலும் நசுக்கினால் உட்புறம் வெள்ளையாக இருக்கும், கடுகின் உட்புறம் இளம்மஞ்சளாக இருக்கும்.

சீரகம், கருஞ்சீரகம், நற்சீரகம்:

காட்டுப்புல்லின் விதைகளை கலந்துவிடுவார்கள், மேலும் கருஞ்சீரகத்தில் காட்டுப்புல்லின் விதையில் கருப்பு சாயம் தோய்த்து கலப்பார்கள்.

சோதனை:

தண்ணீரில் சிறிதளவு சீரகம் போட்டால் சாயம் போகும்,கையால் அழுத்தி தேய்த்தாலும் சாயம் ஒட்டும். மேலும் புல்லின் விதைகள் மேலே மிதக்கும்.

மிளகு:

மிளகில் ,பப்பாளி விதைகளை கலப்பார்கள், மேலும் மினரல் ஆயிலால் பாலிஷ் செய்து விற்பார்கள்.

சோதனை:

நீரில் சிறிது மிளகைப்போட்டால் பப்பாளி விதைகள் மிதக்கும்.

மஞ்சள்:

இப்பொழுதெல்லாம் மஞ்சள் தூளாக பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுகிறது, இவற்றில் மஞ்சள் தூளோடு பிற மலிவான தானியங்களின் மாவு கலக்கப்ப்படும், குறிப்பாக ராகி, கம்பு மாவு கலந்துவிடுவார்கள், நிறத்தினை அதிகரிக்க "லெட் குரோமேட் "என்ற நிறமியை சேர்ப்பார்கள்.

மஞ்சள் கிழங்கிலும் லெட் குரோமேட் கொண்டு வேகவைக்கும் போதே நிறம் சேர்க்கிறார்கள்.

சோதனை:

நீரில் கலப்பட மஞ்சள் தூளைக்கரைத்தால் நல்ல நிறம் கொடுக்கும், மேலும் மாவு போன்றவை வெண்மையாக அடியில் தங்கும்.

மேலும் உறுதி செய்ய கொஞ்சம் எலுமிச்சம் சாறு சேர்த்தால் நீலம்/ ஊதா நிறமாக கரைசல் மாறும்.

கொத்தமல்லி தூள்:

இதில் மரத்தூள், தவிடு, மற்றும் உலர்ந்த மாட்டு சாணி கலக்கப்படுகிறது.

சோதனை:

நீரில் கரைத்தால் மரத்தூள்,தவிடு மேலே மிதக்கும், மேலும் சாணிக்கரைந்து துர்நாற்றம் வரும்.

மிளகுத்தூள்;

இதில் கொத்தமல்லி தூள், பிறத்தானிய மாவு சேர்க்கப்படுகிறது.

சோதனை:

சுவை மற்றும் வாசனை மூலம் மட்டுமே அறிய முடியும் அல்லது நுண்ணோக்கி மூலம் காண வேண்டும்.

பச்சைப்பட்டாணி, பச்சை மிளகாய் மற்றும் காய்கள்:பசுமையாக இருப்பதாக காட்ட மாலச்சைட் கிரீன்(Malachite Green ) எனப்படும் பச்சை நிறமியில் தோய்த்து விற்கிறார்கள்.

சோதனை:

வெள்ளைநிற ஈரத்துணியால் துடைத்தால் சாயம் ஒட்டும்,தண்ணீரில் அலசினாலே நிறம் போவதனைக்காணலாம், இதுவும் கேன்சர் உண்டாக்கும் நிறமியாகும்.

தற்போது மல்லிகைப்பூக்களுக்கும் பச்சை சாயம் பூசப்படுகிறது :-))

கிராம்பு ,ஏலக்காய்:

இவற்றில் இருந்து எண்ணையை எடுத்துவிட்டு வெறும் சக்கையை மட்டும் விற்கிறார்கள், எண்ணை எடுக்கப்பட்ட கிராம்பு,ஏலக்காய் உடன் கொஞ்சம் நல்லவற்றையும் கலந்து விற்கிறார்கள்.

வாசனை, சுவை மூலம் மட்டுமே இதனைக்கண்டுப்பிடிக்க முடியும்.

மிளகாய்த்தூள்:


இதில் செங்கல் தூள், சோப்பு கல் எனப்படும் சுண்ணாம்புக்கல் தூள், மேலும் மரத்தூள் , தவிடு என நன்கு அரைத்து கலந்துவிட்டு "சூடான் டை" எனப்படும் சிவப்பு நிறமியை சேர்த்து ரத்த சிவப்பில் மிளகாய்த்தூள் விற்கிறார்கள்.

சோதனை:

தண்ணீரில் கரைத்தால் நிறம் போகும், மேலும் கலப்படங்கள் வெள்ளையாக அடியில் தங்கும்.

கடந்தாண்டு பல பிரபல நிறுவனங்களின் மிளகாய்த்தூள் அமெரிக்காவில் கைப்பற்றி அழிக்கப்பட்டுள்ளது.

(அரசின் நோட்டீஸ்)

மேலும் கேரளாவில் ஈஸ்டர்ன் மசாலா தயாரிக்கும் மிளகாய்த்தூளில் சூடான் டை கலப்பு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு அவர்கள் அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப வைத்திருந்த மொத்த சரக்கும் அழிக்கப்பட்டது. சூடான் டை எனப்படுவது துணிகளுக்கு சாயமேற்றப்பயன்ப்படுவது, உணவில் கலந்தால் கேன்சர் வரும் என தடை செய்யப்பட்டது.

ஈஸ்டர்ன் மசாலா நிறுவனத்தில் ரெய்டு நடத்தி மிளகாய்த்தூளை அழிக்கும் காட்சி:


ஆனால் பின்னர் ஈஸ்டர்ன் மசாலா நிறுவனம் அப்படி எதுவும் நடக்கவில்லை ,என அதிகாரிகளை சரிக்கட்டிவிட்டு மறுப்பு செய்தி அறிவிப்பு வெளியிட்டார்கள் எனவும் தகவல்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன.

சுவீட் எடு கொண்டாடு:


கேசரி, லட்டு ஆகியவற்றில் சிவப்பு நிறத்திற்காக கேசரிப்பவுடர் எனப்படும், மெட்டானில் எல்லோ நிறமியே பயன்ப்படுகிறது. இதுவும் ஒரு கேன்சர் உருவாக்கும் ஒரு இரசாயன நிறமி ஆகும்.

உண்மையான கேசரிப்பவுடர் என்பது குங்குமப்பூவின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவது, பூவின் மகரந்த இழைகளே குங்குமப்பூ என பயன்ப்படுவது, எனவே மற்றப்பாகங்களை பொடியாக அரைத்து செய்யப்படுவது கேசரிப்பவுடர் ஆகும் , இதனை தண்ணீரில் பவுடரை போட்டதும் நிறம் மாறாது , கொதிக்க வைத்தால் மட்டுமே நிறம் கொடுக்கும். இது விலை அதிகம் என்பதால் சிவப்பு நிறமியை பயன்ப்படுத்துகிறார்கள்.அனைத்து இனிப்பகத்திலும் தெரிந்தே கலந்து தயாரிக்கிறார்கள், நாமும் தெரிந்தே லட்டு ,கேசரி என சாப்பிடுகிறோம்.

மேலும் இந்த கேசரிப்பவுடர் பாதாம் பால் என கடைகளில் விற்கப்ப்படும் பாலிலும் கலக்கப்படுகிறது.மெட்டானில் எல்லோ நிறமி , தந்தூரி சிக்கன்,பஜ்ஜி,பிரியாணி,காரக்குழம்பு, முறுக்கு, என சிவப்பு நிறம் தேவைப்படும் அனைத்து உணவுகளிலும் வியாபாரிகளால் கலப்பட்டு விற்கப்படுகிறது.


வெள்ளித்தாள் இனிப்பு:பல வட இந்திய இனிப்புகளில் வெள்ளி பூச்சு இருக்கும் , இந்த வெள்ளியிலும் கலப்படம் உண்டு, உண்மையான வெள்ளி விலைக்கூட என்பதால், அலுமினியம், ஈயம், குரோமியம் கலந்து விடுகிறார்கள், மேலும் இதற்கு பயன்ப்படும் வெள்ளி கழிவு சுத்திகரிப்பு மூலம் கிடைக்கும் வெள்ளியாகும். எனவே 100% தூய்மையான வெள்ளியாக இருக்க வாய்ப்பே இல்லை.

இப்படிப்பட்ட கலப்பட வெள்ளியால் மூளைப்பாதிப்பு,நரம்புக்கோளாறு, வாதநோய்கள் வரலாம்.

இதில் இன்னொரு தீங்கு என்னவெனில், இவ்வெள்ளித்தாள் தயாரிக்கும் முறையாகும்.

மாட்டின் குடலை வெட்டி சிறுத்துண்டுகளாக்கி ஒரு புத்தகம் போல் தயாரித்து ஒவ்வொருப்பக்கத்திலும் சிறு துண்டு வெள்ளியை வைத்து அதன் மீது சுத்தி/ மரசுத்தி வைத்து அடித்து தட்டி தட்டி மிக மெல்லிய வெள்ளித்தாள் ஆக்குவார்கள்.


இப்படி தயாரிக்கும் போது மாட்டுக்குடலின் சிறுப்பகுதிகள் ,இரத்ததுளிகள், வெள்ளித்தாளில் ஒட்டிக்கொண்டுவிடும், எனவே வெள்ளித்தாள் போர்த்திய இனிப்புகள் சைவம் அல்ல என இஸ்கோன் தளத்திலும் போட்டிருக்கிறார்கள்.

To know more about silver foil click the link:
இன்னும் சிலக்கலப்படங்கள் இருக்கிறது, முடிந்தால் பிறகுப்பார்ப்போம்.

---------------
பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி:

கூகிள்,விக்கி,யூடூயூப்,தி இந்து, டெக்கான் கிரானிக்கில், அக்மார்க் இணையத்தளங்கள் நன்றி!

*********

Tuesday, August 14, 2012

ஸொ"தந்திரம்"!(freedom)
தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ?
அக்கா அக்கா என்று நீ அழைத்தாய்
அக்கா வந்து கொடுக்கச்
சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?

-பாவேந்தர் பாரதிதாசன்.

*******


அல்லாருக்கும் ஸொதந்திர தென வாய்த்துகள்!

இப்படிக்கு

ஒரு இந்தியக்குடிமகன்,

வவ்வால்.

----------

பின்குறிப்பு:

நன்றி தமிழ் பல்கலை இணைய தளம்&யூடுயூப்.

Saturday, August 11, 2012

அஃதே ,இஃதே-1தலைப்பில் என்னமோ ரெண்டு இட்லி ஒரு வடை போல ஒரு எழுத்தை போட்டு இருக்கானே என நினைக்க வேண்டாம் அதுக்கு பேரு தான் தமிழ் ஆயுத எழுத்து, என்ன ஆயுதமா? அக்கால கேடயத்தில் மூன்று குமிழ்கள் இருப்பது போல எழுத்தும் அமைந்து இருப்பதால் ஆயுத எழுத்து என்று பெயர் வைத்தார்கள்னு சின்ன வயசில எங்க தமிழய்யா சொல்லிக்கீறார்.

இந்த ஆயுத எழுத்து ரொம்ப சுவாரசியமானது, ஃ ல் மூன்று புள்ளி ஒரு முக்கோணத்தினை உருவாக்குவது போல அமைத்து அதற்கும் ஒரு பொருளோட எழுத்து என வடிவமைத்து ஒலி கால அளவில் அரை மாத்திரைனு (அனாசின் மத்திரையில பாதியான்னு கேட்டா போலி டாக்குடர் கிட்டே புடிச்சு கொடுத்துபுடுவேன்)வேற சொன்ன தமிழர்கள் உண்மையில் அறிவுக்கூர்மை மிக்கவர்களே, இதில மிக எளிமையாக முக்கோணவியல் வருது ஆனால் முக்கோணவியல் என்ற கணித அறிவியல் எல்லாம் பின்னரே வந்தது. ஒரு வேளை நம்ம பழந்தமிழருக்கு எல்லாம் தெரிந்திருக்கலாம், ஆனால் வழக்கம் போல அவங்க குடும்பம் , பரம ரகசியம் என பாதுகாத்து பின்னர் யாருக்கும் பொருள் தெரியாம போய் இருக்கலாம்.

ஃ இன் தமிழ் ஒலியியல் மற்றும் பயன்ப்பாடுகள்:

ஆங்கிலத்தில் "F" ஒலிக்கு தனியாக தமிழில் எழுத்து இல்லை என்பதால் ஃ ஐ சேர்த்து எழுதினால் எஃப் ஒலி கிடைக்கும் என்கிறார்கள்.

Fan என்ற மின்விசிறியை அப்படியே ஆங்கில ஒலியில் தமிழில் எழுத முற்பட்டால் "பேன் "என்றால் தலையில் இருக்கும் பேன் ஆகிவிடும் அபாயம் இருப்பதால் ஃபேன் என தமிழில் எழுதலாம்.இரும்பினை எஃகு என எழுதவும் பயன்ப்படுது ,சிலர் எக்கு என எழுதி நம்மை எக்கிப்பார்க்கவும் சொல்வார்கள்.சிலபேர் ஆங்கில சொல்லில் தமிழில் எழுதி திட்டுவதாக நினைத்துக்கொண்டு "பக் யூ" என்கிறார்கள் ஒரு எழவும் புரியலை இனிமே ஃ போட்டு எழுதவும் :-))

நம்ம சித்தர்கள் ஓலைச்சுவடிலாம் அப்படித்தான். யாருக்கும் லேசில் புரியாது அவங்க சிஷ்யகோடிகளுக்கு மட்டும் சொல்லிக்கொடுத்துட்டு செத்து போய்டுவாங்க,இப்போ அதனால தான் பல அரிய மூலிகைகள் பற்றி தெரியாமலே போயிடுச்சு, இப்போ ஆய்வு செய்பவர்கள் அக்காலத்திலேயே எயிட்ஸ்க்கு மருந்து சொல்லி இருக்காங்க சித்தர்கள்னு சொல்வது ஆச்சரியமான ஒன்று. முதல் ஆச்சர்யம் அக்காலத்துல எயிட்ஸ் இருந்தது என்பது(all in the game) ரெண்டாவது அதற்கு உடனே மருந்தும் கண்டுப்பிடிச்சது.

இப்போ ஆங்கில மருத்துவத்தில் எயிட்ஸ்க்கு உருப்படியா ஒரு மருந்தும் இன்னும் வரவில்லை அதற்கே கிளினிக்கல் லேபரேட்டரி ஆய்வுகள் உச்சத்துல இருக்குன்னு சொல்லிக்கிறாங்க.

ஃ பற்றிய சிறப்பு பதிவல்ல இது, இதுநாள் வரையில் ரொம்ப கொடுமைன்னு தோன்றுவதை "என்ன கொடுமை சார் இது". என தொடராக போட்டு வந்தேன்(ஆமாம் இவரு தொடரு போடுற அளவு பெரிய பதிவரு) ஒரு மாதத்திற்கு 30 பதிவு கூட போட துப்பு இல்லாத துப்பு கெட்டவனுக்கு எதுக்குய்யா தொடருன்னு நீங்க கேட்கலாம். ஹி..ஹி என்னை பொறுத்தவரையில் ஆண்டுக்கு ஒன்று என ஒரே தலைப்பில் தொடர்ச்சியாக போட்டாலும் தொடர் தான் :-))

எனவே இனிமேல் நேரம் கிடைக்கும் போது பிடித்தது ,படித்தது, பார்த்தது ,வம்பு வளர்த்தது என எல்லாத்தையும் இங்கே சொல்லிவிட்டு கொடுமையை அங்கே சொல்வேன் என சகப்பதிவர்களுக்கும் ,பதிவர்களுக்கு எல்லாம் மேலே இருப்பதாக நினைக்கும் பதிவுலக பிரம்மாக்களுக்கும், தமிழ் நேயர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன். எனக்கு வாசகர்கள் என தனியே கிடையாதுங்கோ :-))

ஓ.கே போகலாம் நாம உள்ளே -அஃதே,இஃதே,

பாட்டொன்று கேட்டேன்.

அக்கால மாஸ் ஹீரோக்களில் எம்ஜீஆர் தான் உச்சம் எனலாம் , அனேகமாக ஹீரோவுக்கு இண்ட்ரோ சாங்க் வைக்கும் கான்செப்ட் அவரால் தான் பாப்புலர் ஆச்சுன்னு நினைக்கிறேன்(ஆகா என்னமா தமிங்கிலம் நீச்சல் அடிக்குது,இப்படி எழுதினால் தான் பிராபல்ய பதிவர் ஆகலாம்னு சொல்றாங்க)

எம்.ஜீ ஆருக்கு பிறகு அந்த கான்செப்டில் நிறைய பேர் முயற்சித்து இருக்கலாம் ஆனால் வெற்றிப்பெற்றது நம்ம" ரியல் தல" மட்டுமே , ரியல் தல என்றால் அது சூப்பர் ஸ்டார் மட்டுமே , அவர் ஒரு சூப்பர் ஹிரோ அந்தஸ்துக்கு வந்தப்பிறகு எல்லாப்படத்திலும் ஒரு இண்ட்ரோ சாங்க் அல்லது சமூகத்துக்கு கருத்து சொல்லும் பாட்டு இருக்கும்.

சிவாஜில அப்படி ஒரு சாங்க் நான் வைக்கலைனு ஏ.ஆர் ரெஹ்மான் பேட்டிக்கொடுத்தாலும் பல்லே லக்கா பல்லே லக்கான்னு போடவே செய்தார் என்பதை மக்கள் உணரணும்.

எனவே சூப்பர் ஸ்டாரின் எப்பொழுதும் பச்சையான (ever green)ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் அறிமுக பாடல் உங்களுக்காக.


சூப்பர் ஸ்டாரின் ஓப்பனிங்க் சாங்கில என்ன விசேஷம்னா "பல்லி போல சுவத்தில ஒட்டிக்கிறது ,தவளை போல ஜம்படிக்கிறது, பாம்பு போல நெளியறது" போன்ற வித்தைகள் எதுவும் இல்லாமல் ஜஸ்ட் ஒரு வாக், ஒரு லுக் , கையை விஷ்க்,விஷ்க்னு வீசுவது மட்டும் தான் ஆனால் அதுக்கே அல்லு சில்லு பறக்கும், தியேட்டர் அல்லோகளப்படும். இந்த கால நண்டு சிண்டு ஸ்டார்கள் கற்றுக்கொள்ள ஒரு பாடம் இதில் இருக்கு.

பின் குறிப்பு:

சொல்லாததும் கருத்தே ,ஹி...ஹி இந்த பாட்டில் யாருக்கோ நான் மெசேஜ் சொல்கிறேன்னு யாரேனும் நினைத்தால் அது அவர்களின் மனப்பிராந்தியே(நெப்போலியனா?)

அமீர் கானும் அரைவேக்காடு முட்டையும்!-A story about “Own. Worst. Enemy".அக்ஷாத் வர்மா ,இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் படித்து,சினிமாவில் நுழையணும் என ஆசையுடன் ஒரு வெண்ணைக்கதையை எழுதி எடுத்துக்கொண்டு ஹாலிவுட்டில் முட்டி மோதிப்பார்த்து விட்டு , ச்சீ..ச்சீ புளிக்கும் என மும்பைக்கு வந்து பலரையும் பார்த்துள்ளார்,எல்லோரிடமும் கதையும் சொல்லி இருக்கிறார் எல்லாம் மண்டைய மண்டைய ஆட்டிக்கதை கேட்டுவிட்டு அப்புறம் சொல்லுங்க என்ன விஷயமா வந்தீங்க என்று நக்கல் அடித்துள்ளார்கள்.

என் கதையை வச்சு படம் எடுக்கணும் சார் அதுக்கு தானே கதை சொன்னேன் என்று கேட்டால் நான் எதுக்கு உங்க படத்தை தயாரிக்கணும் என அதி அற்புதமான கேள்விக்கேட்டுள்ளார்கள்.

கொஞ்ச நாள் மும்பையை அலசிவிட்டு வெறுத்துப்போய் மீண்டும் அமெரிக்கா போய் விடலாம்னு முடிவு செய்து விட்டு போகும் முன் ஆமீர்கானைப்பார்க்கலாம் என முயற்சித்து பார்க்க முடியாமல் போகவே ,ஸ்கிரிப்ட் பைலை கொடுத்துவிட்டு ஊருக்கு வண்டியேறிவிட்டார்(ஃப்ளைட்ல தானே ஏறனும்னு சிலர் என்னை மடக்குவாங்கலாம்)

சுமார் ஓராண்டுக்கு பின்னர் திடீர் அழைப்பு ஆமிர்கானிடம் இருந்து, உடனே அக்‌ஷத் வர்மா தனது நண்பருடன் பொட்டியைக்கட்டிக்கொண்டு மும்பைக்கு ஓடி வந்து ,இறங்கின கையோடு ,காலோடு ஆமீர் அலுவலகம் போனால் ...

வெண் திரையில் காண்க என சொல்ல மாட்டேன் டெல்லி பெல்லி (delhi belly)எப்படி உருவாச்சு என்பதை அப்படத்தின் கதாசிரியர் ஒரு பேட்டியில் சொன்னதன் தமிழாக்கம் இது முழு சரக்கும் படிக்க போகவும் இங்கே ....

ஹி...ஹி டெல்லி பெல்லி படத்தின் கதையை பாதியா கட் செய்து தமிழில் படம் எடுத்தால் என்ன பெயர் வைப்பார்கள்? சரியான பதில் சொல்வோருக்கு பரிசாக நான் ஒரு வாரம் தொடர்ந்து பின்னூட்டம் போடுவேனாம் :-))
சும்மாவே இவன் இம்சை தாங்காது , இதில ஒரு வாரம் பின்னூட்டம் போடுறானாம் ஆளைவிடுப்பா சாமின்னு ஓடினால் சாமி கண்ணை குத்திடும் :-))

just a simple beginning for me and a big leap for tamil blogging!

(ஹி...ஹி என்னா ஒரு தலைக்கனம்னு நினைக்கலாம் நீல் ஆம்ஸ்ட்ராங்க் சொன்னதை லைட்டா உல்டா அடிச்சேனுங்க)

(a simple beginning start ஆவது இப்படித்தான்...ஹி...ஹி)
******