Sunday, March 31, 2013

என்ன கொடுமை சார் இது-12(இந்த கொடுமைய பத்திலாம் மனித உரிமை கவுன்சிலில் புகார் கொடுக்க முடியாதா,அவ்வ்,ஹி...ஹி)

# இது தப்பா சார்?

(ஓர் அரசு அலுவலகத்தில் ஓர் அதிகாரிக்கும் ஊழியருக்குமிடையே நடைப்பெற்ற கற்பனை உரையாடல்)

அதிகாரி சார் ,கொஞ்சம் நில்லுங்க ,எனக்கு ஒரு டவுட்டு ,அதை உங்களால மட்டும் தான் கிளியர் செய்ய முடியும்..

என்ன கோந்த்சாமி ,காலையிலே உனக்கு டவுட்டா, உன் கடமை உணர்ச்சியை நினைச்சா ,கண்ணு கலங்குது, கேளு..கேளு, உன்னப்போல ஒரு சின்சியர் பெர்சனுக்கு உதவலைனா அப்புறம் என்ன அதிகாரி நான்.

நீங்களே சொல்லுங்க சார், ரேஷன் கடை கெவர்மெண்டு கடைத்தானே?

ஆமாய்யா அதுல என்னா சந்தேகம்?

அப்போ கெவர்மெண்டு கடையில நான் பொருள் வாங்கினா தப்பா சார்?

எவன் சொன்னான்,தப்பேயில்லை.

ஆபிசுக்கு வரும் போதே  வழியில ரேஷன் கடையில வீட்டுக்கா நான் வாங்கின சக்கரைய ஆபீஸுக்கு எடுத்து வந்தா தப்பா சார்?

ச்சே ...ச்சே தப்பேயில்ல ஒனக்கு நல்ல குடும்ப பொறுப்பு இருக்குபா, குட் கீப் இட் அப்!

அந்த சக்கரையில டேஸ்ட் பார்க்க கொஞ்சம் எடுத்து வாயில போட்டுக்கிட்டா தப்பா சார்?

இதுல என்ன தப்பிருக்கு ,நீ காசுக்கொடுத்து வாங்கின சர்க்கரை...நீ கொஞ்சம் வாயில எடுத்து போட்டுக்கிட்டா என்ன ,மூக்கில போட்டுக்கிட்டா என்ன, எல்லாம் உன் இஷ்டம்யா.

அப்புடி சொல்லுங்க சார், உங்களை தவிர இங்கே யாருக்குமே அறிவில்ல சார்.

ஹி...ஹி தாங்க்ஸ் ,ரொம்ப நல்லவன்யா ...அதான் என்னப்பத்தி நல்லா புரிஞ்சு வச்சிருக்க. நீ எதோ வேலை செஞ்சிட்டிருந்த போல ,சின்சியர் கய் ,யூ கேரி ஆன்!

நீங்க உங்க ரூமுக்கு போங்க சார், நான் என் வேலையை ஆரம்பிக்கிறேன்.

(குவார்ட்டர் புட்டியை பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுக்கிறார்)

யோவ் என்னய்யா ,வேலையை ஆரம்பிக்கிறேன்னு சொல்லிட்டு ,சரக்க எடுக்கிற? அதுவும் ஆபீஸ் டைம்ல?

சார் சரக்கு கடையை கெவர்மெண்டு தானே நடத்துது?

ஆமாம்...அதுக்குன்னு.

அப்போ சரக்கும் சக்கரைப்போல கெவர்மெண்ட்டு பொருள் தானே...

ம்ம்...ம்ம் அப்படியும் சொல்லலாம்ம்ம்...ஆனா

என்ன நோனா, கெவர்மெண்டு பொருள் தான் சார், நான் வீட்டுக்கு எடுத்து போறதுக்காக வரும் போதே வாங்கிட்டு வந்தேன், காசு கொடுத்து வாங்கின கெவர்மெண்டு பொருளை வச்சிருக்கிறது தப்பா சார்?

ச்சே சே தப்பேயில்ல, ஆமாம் வீட்டுக்கு எடுத்து போகத்தானே ,வச்சிக்க ,வச்சிக்க ....

ஆனால் கொஞ்சமா டேஸ்ட்  பார்க்க வாயில ஊத்திப்பேன்... நீங்களே சொல்லி இருக்கீங்க, நாம காசுக்கொடுத்து வாங்கின பொருளை டேஸ்ட் பார்க்க நாம சாப்பிட்டா தப்பில்லைனு... இப்போ சொல்லுங்க  , இது தப்பா சார்?

ஙே ...நீ டேஸ்ட் பார்க்க ஆசைப்பட்டது இதானா ... சர்க்கரை மேட்டரை சொல்லி சரக்கு மேட்டரை ஓபன் பண்ணி கவுத்துட்டானே ...அவ்வ்.

டேஞ்சரஸ் ஃபெல்லோ இனிமே இவங்கிட்டே உஷாரா இருக்கணும் ,பீ கேர் ஃபுல்!

என்ன சார் என்னமோ சொன்னிங்களே?

நான் என்னைய சொல்லிக்கிட்டேன், வர்ரட்டா!

(ஹி...ஹி ரொம்ப கொடுமையான எதாவது செய்தி சொல்லணும்னு நினைச்சேன் அப்படி எதுவுமே சிக்கலை, அதான் இப்புடி ஒரு மொக்கையை போட்டேன், நம்ம மொக்கையை விட லோகத்திலே பெரிய கொடுமை உண்டுங்களாண்ணா?)

என்ன கொடுமை சார் இது!

--------------------

# வரிவிலக்கு அரசியல்!
சில ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை அருகேயுள்ள திருக்கழுக்குன்றத்தினை சேர்ந்த பள்ளிமாணவன் "ஹிதேந்திரன்" இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து ,பின்னர் அவரது உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் உடலுறுப்பு தானம் குறித்து ஒரு பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.

இதனை மையமாக வைத்து மலையாளத்தில் டிராபிக் என்ற படம் எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பினை பெற்றது,எப்பவுமே நம்ம ஊரு சரக்குக்கு நம்ம ஊரில் மதிப்பிருக்காது,அதே சரக்கு வெளியூருக்கு போயிட்டு வந்தால் மதிப்பு அதிகமாகிடும்,அதே போல "மலையாள "டிராபிக்" படமும்  தமிழில் "சென்னையில் ஒரு நாள்" என்றப்பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. படமும் சுமாரா இருக்குனு கேள்வி. இதெல்லாம் எல்லாருக்கும் தெரியுமே, இதுல என்ன கொடுமையா இருக்குனு கேட்கிறிங்களா ? இருக்கு .

தமிழில் பெயர் வைத்து,தமிழ் கலாச்சாரத்துடன் உள்ள தமிழ்ப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு தமிழகத்தில் உண்டு. ஆனால் இந்த வரிவிலக்கு சென்னையில் ஒரு நாள் தமிழ்ப்படத்துக்கு கொடுக்கப்படவில்லை.

படத்தின் தலைப்பு தமிழில் தான் இருக்கு ,கதையும் கலாச்சாரச்சீர்கேடாக இல்லை, உடலுறுப்பு தானம்னு நல்ல செய்தி தான், சரி ரீ மேக் என்பதாலா என்றால் ஏற்கனவே பல ரீமேக் படங்களுக்கு வரி விலக்கு கொடுக்கப்பட்டிருக்கு.

படத்தை தயாரித்தது ராதிகா ஷரத்குமாரின் "ரேடான் டீவி" , ஷரத்குமார் இரட்டை இலையில மூன்றாவது இலையா ஒட்டிக்கிட்டிருக்கிற அரசியல் தலைவர், அப்படி இருந்தும் ஏன் கேளிக்கை வரிச்சலுகை இல்லைனு பார்த்தால், ஹி...ஹி படத்தை வாங்கி வெளியிட்டு இருப்பது சன் பிக்சர்ஸ் ,அப்படிப்போடு அருவாள, ஏற்கனவே கழக குடும்பத்தார் தயாரித்த திரைப்படங்களான ஏழாம் அறிவு, ஓகே.ஓகேவுக்கும் கூட வரிச்சலுகை பிரச்சினை உண்டானது. இப்போ சென்னையில் ஒரு நாளுக்கு.

சன் பிக்சர்ஸ் அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஏகப்பட்ட தில்லாலங்கடிகள் செய்து அரசியல் துஷ்பிரயோகத்தில் ஈடுப்பட்டிருந்தாலும், அதற்காக இப்பொழுது ,உடலுறுப்பு தானம் எனும் ஒரு நல்ல கருத்தாக்கத்துடன் வந்துள்ள சென்னையில் ஒரு நாள் திரைப்படத்திற்கு கேளிக்கை வரி இல்லாமல் செய்வதெல்லாம் ரொம்பவே ஓவர், இப்படத்திற்கு அரசியல் செய்யாமல் விரைவில் வரிச்சலுகை கொடுக்கப்பட்டால் கொஞ்சம் கூடுதல் நாட்கள் ஓடும் வாய்ப்புள்ளது.

(இனியா-மலையாள படங்களில் இயல்பான "திறமையை" காட்டுபவர் சென்னையில் ஒரு நாளிலும் நடித்துள்ளார்)

அரசியல் வாழ்க்கை ஒரு வட்டம் மேல இருப்பவர் கீழ வருவதும்,கீழ இருப்பவர் மேல போவதும் இயல்பே, ஆனால் மேலிர்ந்தவர் கீழ வந்ததும் மேல சென்றவர் பழி வாங்காமல் நடந்து கொள்வதே அரசியல் நாகரீகம்.

அரசியல் நாகரீகம் என்ற சொல்லே வழக்கொழிந்து விடுமோ எனும் நிலையில் தமிழகம் உள்ளதை நினைத்தால் "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என அரசியல் நீதி சொன்ன தமிழகமா இது என கேள்வி எழும்புகிறது!

என்ன கொடுமை சார் இது!

------------------

#காவல் துறை உங்கள் நண்பன்!

சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் எல்லாம் ஹோலி கொண்டாடி இருக்காங்க, அட இந்தியா முழுக்க கூட கொண்டாடினாங்க அதுக்கின்னா இப்போனு கட்டைய போடாம கொஞ்சம் கவனியும் மக்களே,

ஹி...ஹி  வழக்கமா ஹோலிய சாக்கா வச்சு பயப்புள்ளைங்க ,பொண்ணுங்க மேல சாயம் பூசுறேனுனு தடவுறதுலாம் கூட நடக்கும் ,அதெல்லாம் வாலிப வயசு அப்படித்தான்னு விட்றலாம்.

ஆனால் உத்திரப்பிரதேசத்தில் உள்ள மொராதா பாத் நகரை சேர்ந்த "புத் பஜார் தானா காவல் நிலையத்தில்" பணிப்புரியும் சிலப்போலிசாருக்கும் ஹோலி கொண்டாடினா என்னனு ஆசை வந்திருச்சு ,ஆனாப்பாருங்க அன்னிக்கும் அவங்களுக்கு டியூட்டி ,அதுக்குனு ஹோலி கொண்டாடாம விட்ற முடியுமா,சாமி குத்தமாகிடாது? ஒரு தடவை முடிவு செய்துட்டா எங்க பேச்சை நாங்களே கேக்க மாட்டோம்னு உ.பி காவலர்கள் காவல் நிலையத்திலேயே ஹோலி ஹே ஹோலினு கொண்டாடி இருக்காங்க, அடக்கொண்டாட்டம்னா சரக்கு இல்லாமலா, அதுவும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் ஹோலினா வியாபாரிகள் தாராளமா ஸ்பான்ஸ்ர் அள்ளி விட்டிருப்பாங்க, எனவே எல்லாம் இஷ்டத்துக்கு தீர்த்தத்தை பருகிவிட்டு ஆனந்த பரவசமாகி ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்து "சகலகலா வல்லவனா" குத்தாட்டம் எல்லாம் போட்டுள்ளார்கள், சிலர் சரக்கு புட்டியை தலையில் வைத்து மாங்குயிலே பூங்குயிலேனு இந்தியில் பாடி கெரகாட்டம் எல்லாம் ஆடி அசத்தியுள்ளார்கள்.

உ.பி காவலர்கள் ரொம்ப நல்லவய்ங்களா இருப்பாங்க போல நாம மட்டும் தீர்த்தம் சாப்பிட்டு இன்பம் துய்த்தால் போதுமா நாளைய சமுதாயமாம் இளைஞர்களும் இன்பம் துய்க்க வேண்டாமா என கரிசனத்துடன், அவ்வழியே சென்ற பள்ளி மாணவர்களை கூப்பிட்டு சரக்கு கொடுத்து குடிக்க சொல்லி இருக்காங்க, உ.பி மாணவர்கள் உருப்படாதவர்கள் போல சரக்கெல்லாம் குடிக்க மாட்டோம் ,ஆத்தா அடிக்கும்னு அடம்பிடிச்சிருக்காங்க, ச்சே இளைய சமூகத்துக்கே பெருத்த அவமானம்! இதே நம்ம பயப்புள்ளைகளா இருந்தா "மச்சி இன்னொரு குவார்ட்டர் சொல்லேன்னு ஒன்னுமண்ணா கொண்டாட்டத்தில் அய்க்கியமாகி இருப்பாங்க :-))

ஆனாலும் உல்லாச கடமை தவறாத உ.பி. காவலர்கள் அடிச்சு குடிக்க வச்சிருக்காங்க, ச்சே என்ன ஒரு நல்ல மனசு ,நம்ம ஊருலவும் தான் இருக்காங்களே காவலர்கள் ,நான் காசுக்கொடுத்து தீர்த்தம் சாப்பிட்டு வந்தாலும், வழியில நிப்பாட்டி, ஊது ,வாய தொறனு சொல்லி வாயில கூட டார்ச் அடிச்சு டார்ச்சர் செய்றாங்கய்யா அவ்வ்!

காவல் துறை உங்கள் நண்பன்! என தமிழ்நாட்டில் சொல்லி வாயாலே வடை சுடும் நிலையில், நடைமுறையில் செய்துக்காட்டிய உ.பிக்காவலர்களின் நல்ல எண்ணம் புரியாத "பாப்பரசி" மீடியாக்கள் ,காவலர்களின் குத்தாட்டத்தை எல்லாம் காணொளியாக எடுத்து தொலைக்காட்சியில் போட்டுவிட்டதால் , நல்லிதயம் படைத்த கருணை மிகு காவலர்கள் விசாரணைக்கு உள்ளாகியுள்ளனர்.

நல்லதுக்கே காலமில்லையா, தான் பெற்ற இன்பம் பெறுக இவ்விளைய சமுதாயம் என சரக்கு ஈந்தோரின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சும் கொடுஞ்சமூகத்தினை தட்டிக்கேட்க யாருமே இல்லையா?

அய்யகோ என்ன கொடுமை சார் இது!

செய்தி மூலம்: http://www.dinamalar.com/news_detail.asp?id=678169

நன்றி!
------------------------

# அள்ளு அள்ளு ,தள்ளு தள்ளு!
படத்தில் காண்பது ,சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை NH-45C ஆகும். இந்த இடம் பண்ருட்டி அருகே தென்ப்பெண்ணையாற்றின் அருகே இருக்கும் கண்டரக்கோட்டை(கண்டராதித்த சோழன் கோட்டை என்பதன் திரிபு) என்ற ஊருக்கு அருகில் உள்ளது .இன்னும் நான்கு வழியாக்கப்படவில்லை, அதற்கான டென்டர் விட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாச்சு. இப்போது இருப்பது இரட்டைவழிப்பாதை தான் , ஆனால் படத்தில் பார்த்தால் மாட்டுவண்டி போகும் மண்ப்பாதை போல இருக்கேனு நினைக்கலாம் ...ஹி ..ஹி உண்மையில மண்ப்பாதையே தான்.

 இங்கு தென்ப்பெண்ணையாற்றில் அரசு மணல் அள்ளும் மையம் செயல்படுகிறது , ஆற்றில் இருந்து மணல் அள்ளி அருகே கரையோரம் கொட்டி வைத்து பின்னர் லாரிகளில் ஏற்றி அனுப்புவார்கள். இவ்வாறு தினசரி பல நூறு லாரிகள் இரவும் பகலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக மணல் லோடுடன் இப்பகுதியில் சாலையில் ஏறி இறங்குவதால் இப்பகுதியில் சில நூறு மீட்டர்களுக்கு சாலையே காணாமல் போயிடுச்சு, அவ்வப்போது மண்ணள்ளி போட்டு நிரவி விட்டுவிடுகிறார்கள். அப்படியான மண்சாலையைத்தான் படத்தில் பார்த்தீர்கள்.

மழைக்காலத்தில் நிலமை இன்னும் மோசமாகிவிடும், வாகனங்கள் சேற்றில் சிக்கிவிடும், சிறிய ரக கார்கள் சிக்கி நின்றுவிடும்.  இதுக்குறித்தெல்லாம் யாரும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை, எப்பொழுதுமே இவ்விடம் புழுதிப்பறக்கும் மண்சாலையாகவோ அல்லது சேற்றுவயலாகவோ தான் இருக்கிறது.

(மணல் குவாரியில் கர்ம சிரத்தையுடன் மண்ணள்ளுகிறார்கள்)

இங்கு கனரக வாகனங்கள்  இயங்குவது அரசுக்கு நன்கு தெரியும் அப்படி இருக்கும் போது சாலையை அதிக எடை தாங்கும் வகையில் தரமாக போடலாம், அல்லது அளவுக்கு அதிகமாக மணல் லோடு ஏற்றுவதை தடுக்கலாம், ஆனால் எதுவும் செய்வதாக தெரியவில்லை, பெரிய விபத்து எதுவும் ஏற்படும் வரையில் அரசு எந்திரம் கண்டுக்கொள்ளாது என்றே நினைக்கிறேன்.

வாழ்க வளமுடன் ,2020 இல் இந்தியா தான் வல்லரசு!

என்ன கொடுமை சார் இது!
----------------

பின்க்குறிப்பு:

தகவல்,மற்றும் படங்கள் உதவி,

விக்கி,கூகிள்,தினமலர் இணைய தளங்கள்,நன்றி!
**********************

Friday, March 15, 2013

எல்லாமே அரசியல்!


(ஹி...ஹி இந்த ரண களத்திலும் ஒரு கிளு கிளுப்பு? )


இலங்கையில் நடைப்பெற்ற இனப்படுகொலையை கண்டித்து, உரிய தீர்வு கிடைக்க வேண்டி அரசியல் ரீதியான பல போராட்டங்கள்,கண்டனங்கள் எழுந்துள்ளன, தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ உணர்வுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றளவில் இதற்கான ஆதரவு எப்பொழுதும் மக்களிடம் உண்டு.

அரசியல் இயக்கங்களை தாண்டி மாணவர்களும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் செய்கின்றனர், அத்தகைய ஒரு வெளிப்பாடாக லயோலா கல்லூரி மாணவர்கள் கடந்த மார்ச் எட்டாம் தேதி காலவரையற்ற சாகும் வரை உண்ணாவிரதம் ஒன்றை அறிவித்து பன்னிரெண்டாம் தேதி முடித்துக்கொண்டுள்ளார்கள், லயோலா கல்லூரி மாணவர்கள் அல்லாமல் பிறக்கல்லூரி மாணவர்களும் உண்ணாவிரத போராட்டத்தை கையிலெடுத்துள்ளார்கள், ஆனால் இவையெல்லாம் அரசியல் நாடகங்களின் ஓரங்கமாகவே இருக்கிறதோ என சந்தேகிக்க தூண்டும் அம்சங்கள் பலவும் காணப்படுகின்றன.

மாணவர்களின் சிந்தனை மற்றும் எழுச்சி தேவை ,அது சரியே எனவும் நினைக்கிறேன் ஆனால் அரசியல் சதுரங்கத்தில் அவர்கள் அறிந்தோ,அறியாமலோ பகடையாக்கப்படுகிறார்களோ என நினைக்கவும் வேண்டியதாகிறது. நாட்டில் எல்லாமே அரசியல் தானோ என நினைக்கும் போது அயர்ச்சியாகிறது.

யே யப்பா உடனே உணர்ச்சி பொங்க ,நீ எல்லாம் தமிழனா, மாணவர்கள் போராட்டத்தை களங்கப்படுத்துவதும் ஒரு பொழைப்பா, ஏ தமிழ் நண்டே ,உன் நொள்ளைக்கண்ணை வச்சிக்கிட்டு சும்மா இரும் என கொந்தளிக்காதீர்கள் என்னருமை புரட்சி புடலைங்காய்களே, என்ன சொல்ல வருகிறேன் என சற்றே நிதானமாக வாசித்து உள்வாங்கிக்கொண்டு அப்புறமாக தீர்ப்பெழுத பேனா எடுங்களேன்!

(கம்யூனிச பாணியில் பறை முழங்க போராட்டம்)

லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டுப்பேர் கடந்த எட்டாம் தேதி ஈழ இனப்படுகொலையை கண்டித்து உண்ணாநிலை போராட்டம் என அறிவித்தனர், முதலில் நுங்கம்பாக்கத்தில் உள்ள AICUF(All India Catholic University Federation ) வளாகத்தில் ஆரம்பிக்க சென்றனர்,ஆனால் அவ்விடம் இலங்கை தூதரகத்திற்கு வெகு அருகில் இருப்பதால் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழலாம் என காவல் துறை அனுமதி மறுக்கவே, பின்னர் கோயம்பேட்டில் உள்ள ஒரு "தனியார் இடத்தில்" தங்கள் உண்ணாநிலை போராட்டத்தினை துவக்கினர்.

இங்கு கவனிக்க வேண்டியது ,காவல் துறை அவ்வளவு எளிதில் உண்ணாநிலை போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்காது, காவல் துறை அனுமதி என சொல்லப்பட்டாலும் அது ஆட்சியாளரின் முடிவை பொறுத்தே என்பதால், அனுமதி கொடுக்கப்பட்டது ஆளுங்கட்சி தலைமையின் விருப்பத்தின் படியே என அறியலாம்.

பல பத்திரிக்கைகளும் கோயம்பேட்டில் உள்ள தனியார் இடம் என்றே எழுதின ,அது என்ன சிறப்பான தனியார் இடம், உண்ணா நிலைப்போராட்டத்திற்கு என யாராவது கட்டிடம் கட்டி வாடகைக்கு விடுகிறார்களா,அல்லது வீட்டை வாடகைக்கு எடுத்து போராட்டம் நடக்கிறதா?

இக்கேள்வி ரொம்ப அவசியாம என நினைக்கலாம்,ஆனால் அவசியம் ஆகிறது.

இப்போ சின்னதா ஒரு பிளாஷ் பேக் அடிப்போம்,

ஆகஸ்ட்,2011 இல் காஞ்சிபுரம் மக்கள் மன்றம் என்ற தன்னார்வ அமைப்பின் உறுப்பினரான செங்கொடி என்பவர், ராஜிவ் கொலைவழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகிய மூவரின் தண்டனையை விலக்ககோரி ,காஞ்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து மாண்டார்.

காஞ்சி மக்கள் மன்றம் என்பது குளோரியா ஜெசி என்பவர் தலைமையின் கீழ் இயங்கும்,கம்யூனிச சித்தாந்தங்கள் அடிப்படையில் இயங்கும் ,கிருத்துவப்பின்னணிக்கொண்ட ஒரு மக்கள் சேவை இயக்கம் ஆகும். இவர்களுக்கு PUCL(PEOPLE'S UNION FOR CIVIL LIBERTIES) மற்றும் Madras Social Service Society (MSSS-இவ்வமைப்பு the official organ for social work in the Archdiocese of Madras-Mylapore), ஆகியவற்றின் ஆதரவும் ,ஒத்துழைப்பும் உண்டு.

அரசியல் ரீதியாக மக்கள் மன்றத்தின் போராட்டங்களுக்கு மதிமுக, பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மற்றும் சமீபமாக வேல் முருகனின் தமிழர் வாழ்வுரிமைக்கட்சி, மற்றும் பழ.நெடுமாறன், சேவ் தமிழர் இயக்கம் ,மே-17 இயக்கம், ஆகியன ஆதரவளிப்பதும் ,கூட்டுப்போராட்டங்கள் செய்வதும் வழக்கம்.

காஞ்சி மக்கள் மன்றத்திற்கு சென்னைக்கோயம்பேட்டில் ஒரு அலுவலகம் உள்ளது(உரிமையாளர் அவர்களா அல்லது கம்யூனிச இயக்கமா என தெரியவில்லை), அதற்கு தீக்குளித்து உயிர் நீத்த செங்கொடியின் பெயரை சூட்டி செங்கொடி மன்றம் என அழைக்கப்படுகிறது. லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்திய தனியார் கட்டிடம் தான் இந்த செங்கொடி மன்றம்!

எதற்கு பத்திரிக்கைகள் மீண்டும் ,மீண்டும் சென்னைக்கோயம்பேட்டில் உள்ள தனியார் இடம் என "சிறப்பாக" தனித்து சொல்ல வேண்டும்? காரணம் என்னவெனில் செங்கொடி மன்றம் என சொல்லப்பட்டால் அவ்வியக்கம்,அதன் சார்புக்கட்சிகளின் நிலை எளிதில் வெளிப்பட்டுவிடும் என்பதாலே.

இப்போராட்டம் லயோலாக்கல்லூரி மாணவர்கள் தானே முன்னெடுத்தார்கள் இதற்கெல்லாம் எப்படி பொறுப்பாவார்கள் எனலாம், லயோலாக்கல்லூரி AICUF இன் ஒரு அங்கம், இது Archdiocese of Madras-Mylapore, ஒரு அங்கம்.இவர்களோடு சென்னை சமூக கூட்டமைப்புக்கும், அதனோடு மக்கள் மன்றதுக்கும் தொடர்பு உள்ளதை பார்த்தோம். மேலும் வைக்கோவிற்கும் கிருத்துவ அமைப்பினருக்கும் இணக்கமான உறவுண்டு, எனவே எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளது.


அதெல்லாம் சரி ,மாணவர்களின் எழுச்சியான போராட்டத்தில் இவர்கள் தொடர்பு இருந்தால் என்ன ,நல்ல நோக்கத்திற்காக தானே போராடினார்கள் என நினைக்கலாம், ஆனால் இவர்களின் தொடர்பால் மாணவர்களின் போராட்டத்தினை வைத்து ஆளுங்கட்சி ஒரு அரசியல் சதுரங்கம் ஆடியுள்ளதாக நினைக்கிறேன்.

மாணவர்களின் உண்ணாநிலைப்போராட்டத்தினை காவல் துறைக்கொண்டு ஆளுங்கட்சி அடக்கியிருக்கிறது எனவே இப்போராட்டத்தினை ஆளுங்கட்சி விரும்ப வழியில்லை, மேலும் மாணவர்கள் தி.முக.,காங்கிரஸ் கட்சியினரையும் எதிர்த்துள்ளார்கள் எனவே இதில் என்ன அரசியல் இருக்கிறது என நினைக்கலாம். ஆனால் அரசியல் நீரோட்டத்தில் பல வெளியில் தெரியாத உள்நீரோட்டங்களே என்பதை புரிந்துக்கொண்டால் உண்மை தெளிவாகும்.

தி.மு.க கூட்டணியினர் டெசோ அமைப்பினை உயிர்ப்பித்து மீண்டும் ஈழ விவகாரத்தில் தங்களை முன்னிலைப்படுத்த ,இழந்த இமேஜை தூக்கி நிறுத்த பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறார்கள்,அதன் ஒரு அங்கமாக ஐ.நாவுக்கு மனு,புது தில்லியில் மார்ச்-10 இல் டெசோ கருத்தரங்கு, தமிழகத்தில் மார்ச்-12 இல் வேலை நிறுத்தப்போராட்டம் என பிசியோ பிசியாக தீயாக வேலை செய்ய பார்க்கிறார்கள்.

இந்நிலையில் எட்டாம் தேதி மாணவர்களுக்கு உண்ணாநிலைப்போராட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்படுகிறது, பின்னர் சரியாக பதினோராம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் காவல் துறை கைது செய்கிறது. விடிந்தால் டெசோ பந்த்!

இதில் உள்ள நுண்ணரசியல் என்னவெனில் மறுநாள் நடைப்பெற்ற பந்தினை விட மாணவர்கள் கைது என்ற செய்தி முன்னிலைக்கு வந்துவிட்டது.

மேலும் கல்லூரிகள் இயங்காமல் இருந்தால் பந்துக்கு ஆதரவு மாபெரும் வெற்றி என திமுக சொல்லிக்கொள்ள முடியாது, கல்லூரிகள் மூடப்பட்டுக்கிடந்தால் அது மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு என்றே பார்க்கப்படும் நிலை.

அப்படிப்பார்த்தாலும் ஆளும்தரப்புக்கெட்டப்பெயர் தானே என நினைக்கலாம், எனக்கு ஒரு கண்ணு போனாலும் எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகனும் சித்தாந்தம் தான் :-))

மேலும் மாணவர்கள் வைத்துள்ள கோரிக்கைகளையும்,அவர்களின் டெசோ எதிர்ப்பு நிலையையும் பார்த்தால் , ஆளும்தரப்பை கோபப்படுத்த விரும்பவில்லை என்பது தெளிவாகும்.

மாணவர்களின் கோரிக்கைகள்:

1)We strongly condemn the US-draft resolution. Do not pass it at UNHRC

2)What took place in Ilangkai [Sri Lanka] is not merely war crimes or violations of human rights, but planned genocide

3)International investigation and referendum are the only solutions for the Tamils. Government of India should propose a resolution to bring in international investigation and to conduct a referendum on independent Tamil Eelam.

4)A proposal should be made to remove the Deputy High Commission of the Sinhala chauvinistic State from the Tamil soil [Tamil Nadu]. India should severe all diplomatic relations with Ilangkai [Sri Lanka].

5)Government of India, accepting the request of the "Tamil Nadu State Government", should implement economic sanctions on Ilangkai [Sri Lanka].

6)On behalf of the "Tamil Nadu State Government", a foreign relations department should be created to assure the security of global Tamils.

7)No Asian country should be a member in the [international] investigation committee.

8)Killing Tamil Nadu fishermen should be stopped immediately.

9)If the Government of India is not finding solution to the question of Eezham Tamils, we will not pay any taxes from Tamil Nadu. We, students, will actively engage in this campaign.

சட்டப்பேரவையில் அம்மையார் கொண்டு வந்த தீர்மானத்தையும்,மாநில அரசையும் முன்னிறுத்த வேண்டியும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.அதாவது ஆளுங்கட்சியினரின் அதிகாரப்பூர்வமற்ற ஒரு போரட்டமாக கருத வாய்ப்புள்ளது,ஆனால் கைது ,அடக்குமுறை என்பது போலவும் ஒரு தோற்றம்,என்ன அரசியலப்பா இது?


உண்ணா நிலைப்பந்தலில் ,மாணவர்களுடன் "ஜென்டில் மேன்" வைகோ,ஹி...ஹி பளீர்னு பாலிஷ் அடிச்சு ஷீ,டக் இன் கெட்டப்பில் ,ஒரு கார்ப்பரேட் எக்சிகியூட்டிவ் போல இருப்பதால் ஜென்டில்மேன் என சொன்னால் தப்பில்லை தானே.

மாணவர்கள் தான் பாவம் திடீர்னு அவசரமா உண்ணா நிலைக்கு வந்துவிட்டதால் கருப்பு சட்டை வாங்க நேரமில்லை போல எல்வீஸ்னு எழுதிய கருப்பு பனியனை ,உள் பக்கம் வெளிப்பக்கமா வருமாறு திருப்பிப்போட்டு சமாளிச்சு இருக்காங்க!


மாணவர்களுடன் ,நள்ளிரவில் கைது செய்யப்பட்டவர்கள்,

//Activists Mallai sathya and Manimaran from MDMK,  Thirumalai from AISF, Senthil from the Save Tamils Movement, Arun shourie from the Tamil Nadu Makkal Katchi, Ilaya raja from the Tamil Thesiya Maanavar Iyakkam, movie directors Ram, Kalaignan and Gauthaman and few activists from the May 17 movement were among the arrested.//

நள்ளிரவில் கைது செய்யப்படும் பொழுதும் கூட கைதாகியுள்ளவர்கள் யார் எனப்பார்த்தால் மல்லை சத்யா உள்ளிட்ட 200 மதிமுக கட்சியினர் மற்றும் பலர் ,இதன் மூலம் மதிமுகவின் பங்கு என்னவென புரிகிறது. இப்போராட்டக்களத்தில் மதிமுகவினரின் பின்புலம் இருப்பதாலோ என்னவோ புதிய புரட்சி அவதாரம் "நாம் தமிழர்" சீமான் சீனுக்கு வராமலே ஒதுங்கிக்கொண்டுள்ளார்.

(முகமலர்ச்சியுடன் முதல்வர், கூட்டணி மறுமலர்ச்சி காணுமா?)

கம்யூனிஸ்டுகள் ஏற்கனவே அம்மையாருடன் இணக்கமான அரசியலில் உள்ளனர், சமீபத்தில் வைகோவின் மது பான பாதயாத்திரையில் திடீர் சந்திப்பு என அம்மையாருடன் புதிய அரசியல் மலர்ச்சியுடன் மதிமுக,இவை எல்லாம் வரும் நாடாளுமன்றத்தேர்தலை ஒட்டிய புதிய கூட்டணிக்கான அச்சாரங்களாக மாறக்கூடும்.


லயோலா கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தினை துவக்கிய இதரக்கல்லூரிகளில் சென்னை கிருத்துவ கல்லூரி, நெல்லை புனித சேவியர் கல்லூரி, திருச்சி ,புனித ஜோசப் கல்லூரிகள் எல்லாம் AICUF அங்கத்தினரே.


மற்ற கலைக்கல்லூரிகள், சட்டக்கல்லூரிகளும் போராட்டத்தில் கலந்துள்ளன,ஆனாலும் அனைத்தும் ஒருங்கிணைக்க ஒரு அரசியல் இயக்கம் பின்னிருந்துள்ளதை தெளிவாக காணலாம்.ஏன் எனில் இலங்கைக்கு கண்டனம் என கோரிக்கை பதாகைகளுடன் டெசோவை புறக்கணிக்கவும் எனவும் பதாகைப்பிடித்து நிற்கிறார்கள்!

படம்.


ஆளுங்கட்சி , தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல் , டெசோ பலூனில் காற்றையிறக்க இரு கோடுகள் தத்துவப்படி டெசோவை சின்னதாக காட்ட மாணவர்கள் போராட்டத்தினை அடக்குவது போல் நடவடிக்கை எடுத்து , பெரிதாக வளர்க்கிறது எனலாம். ஒருக்கட்டத்தில் தனது பேர் கெடாமல் செய்ய மாணவர்கள் கோரிக்கையை "எனது அரசு" ஏற்கிறது என பெருந்தன்மையான அறிக்கையே கூட அம்மையாரிடம் இருந்து வரலாம், அப்படி வந்துவிட்டால் ,மீண்டும் ஈழத்தாய் பட்டம் சூடி மகிழ சீமான் தயாராக இருப்பார் என சொல்லவும் வேண்டுமோ?

டெசோ என்பது வெண்ணைக்கூட வெட்ட உதவாத மொன்னைக்கத்தி என்பதில் மாற்றுக்கருத்தேயில்லை,ஆனால் மொன்னைக்கத்தியாக இருந்தாலும் என்னோடதாக்கும் என போராட்டத்தில் குதித்து பெயர் வாங்கப்பார்க்கும் திமுகவின் ஆசையில் ஒரு லோட் மண்ணள்ளி போடும் விதமாக அம்மையார் இராச தந்திரமாக மாணவர்கள் போராட்டத்தினைப் பயன்ப்படுத்திக்கொள்வதாக நினைக்கிறேன்.

லயோலா கல்லூரி மாணவர்களும் சொல்லி வைத்தார்ப்போல 12 தேதியுடன் உண்ணாநிலைப்போராட்டத்தினை நிறுத்திக்கொண்டார்கள், அரசு நிர்பந்தம் என சொல்லலாம்,ஆனால் நிர்பந்தம் வரும் என தெரிந்து தானே சாகும் வரைப்போராட்டம் என குதித்தார்கள்,அரசைப்பற்றி  12 தேதிக்கு அப்புறம் தான் தெரிய வந்ததா? இப்பொழுது நடக்கும்  போராட்டத்தில் மாணவர்கள் எத்தனை சதவீதம் உறுதியாக நிலைப்பார்கள்,என்று மங்கலம்பாடுவார்கள் என சொல்ல முடியாது.

ஆனால் அதற்குள் நம்ம இணைய சேகுவேராக்கள் ஒரு முன் முடிவுடன் என்ன என்னமோ பொங்கிக்கொண்டிருக்கிறார்கள். யாராவது இப்போராட்டங்கள் பற்றி கேள்விக்கேட்டுவிட்டாலே போதும் , உடனே அறச்சீற்றம் கொண்டு கண்கள் சிவக்க ,காது மடல் சிலிர்க்க , ஒரு நீண்ட சொற்பொழிவை ஆரம்பிக்கிறார்கள்,ஒரு கணினியும்,இணையமும் இருந்துவிட்டால் என்ன  வேண்டுமானாலும் எழுதுவியா, நீ என்னிக்காவது போராடி இருக்கியா,வலினா என்ன தெரியுமா,இரத்தம் பார்த்து இருக்கியா , யாரும் எதுவும் பேசக்கூடாது பேசினால் உனக்கு தமிழுணர்வு இல்லை, இது மாணவர்களை கொச்சைப்படுத்தும் செயல் என ஏதேச்சதிகாரமா தீர்ப்பு எழுதி தள்ளுகிறார்கள்.

என்னைப்பொறுத்த வரையில் மாணவர்களோ,பொதுமக்களோ தன்னெழுச்சியாக ,சுயநல அரசியலற்று போராட வேண்டும், ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் காணோம்.

எல்லாமே அரசியல் தானோ?
--------------

பின் குறிப்பு:

# நாம் எந்த அரசியல் கட்சியின் ஆதரவாளனும் அல்ல, செய்திகளில் படிப்பதை வைத்து எனது அவதானிப்பினை வெளிப்படுத்தியுள்ளேன், இதில் பிழையொன்றுமில்லை, அதெல்லாம் முடியாது நீ அந்தக்கட்சி ஆதரவாளன் தான் என ஏதேனும் ஒரு சாயம் பூச ஆசைப்பட்டால் நானென்ன செய்ய, சாயம் பூசி உங்க கொலை வெறியை தணித்துக்கொள்ளவும், ஆனால் பூசுறது தான் பூசுறிங்க நல்ல சேப்பு சாயமா பூசிட்டு போங்க அப்போவாச்சும் கொஞ்சம் கலர் கூடுதா பார்ப்போம் :-))

#படங்கள் மற்றும் தகவல் உதவி,

சேவ் தமிழ், தமிழ் நெட், விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
--------------------------

Monday, March 04, 2013

என்ன கொடுமை சார் இது-11


(ஹி...ஹி ஆடைக்கட்டி வந்த நிலவோ?)


வெட்கம் கெட்ட விளம்பர மோகம்!

கராத்தே வீரர் ஷிஹான் ஹீசைனி அடிக்கடி விளம்பரத்துக்காக எதையாவது செய்வார் ,அதுவும் அம்மையார் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் காலங்களில் எல்லாம் தன் மீது கவனத்தினை திருப்ப தவறாமல் ரத்தத்தில் படம் வரைவது, அல்லது கோணங்கி தனமாக  எதையாவது செய்து கவனம் ஈர்க்க முயல்வார், அதன் உச்சக்கட்டமாக்க இப்பொழுது ஒரு பைத்தியக்காரத்தனமான வேலை செய்துள்ளார், சுமார் 11.5 லிட்டர் மனித இரத்தத்தினை மைனஸ் 27 டிகிரி செல்சியசில் உறைய வைத்து அதனைக்கொண்டு அம்மையாரின் மார்பளவு(BUST)  ஒரு சிலை செதுக்கியுள்ளார் , இதற்கு அவர் நடத்தும் வில்வித்தை பயிற்சி நிலைய மாணவர்களிடம் இருந்து  இரத்தம்  சேகரித்துள்ளார்,மேலும் அவர் ரத்தமும் பயன்ப்படுத்தி இருக்கிறார்.இதற்காக எட்டு ஆண்டுகளாக அவரது இரத்தத்தினை சேகரித்து வைத்திருந்தாராம், இப்படி செய்வதற்கு பதில் இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு தானமாக கொடுத்திருக்கலாம், ஒரு யூனிட் இரத்தம் என்பது சுமார் 200 மிலி என நினைக்கிறேன், எனவே 11.5 லிட்டர் ரத்தமும் சுமார் 57 யூனிட் அளவுக்கு வருகிறது, சாதாரணமாகவே 2 யூனிட் இரத்தம் இருந்தாலே ஒரு மேஜர் ஆபரேஷன் செய்யலாம்,எனவே சுமார் 114 மேஜர் ஆபரேஷன்களை இவர் சிலை வடிக்க பயன்ப்படுத்திய ரத்தித்தின் மூலம் செய்திருக்கலாம்,அத்தனை உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்,எத்தனையோ பேர் ஆபரேஷன்களுக்கு ரத்தம் கிடைக்காமல் அலைகிறார்கள், இணையம், தொலைக்காட்சி என விளம்பரமெல்லாம் கொடுக்கிறார்கள், ஆனால் ஒரு மனிதன் தனது அல்ப விளம்பர மோகத்திற்காக  விலைமதிப்பில்லா மனித இரத்தத்தினை சிலையாக்கி வீணடித்துள்ளார், இதனையும் தொலைக்காட்சிகள் செய்தியாக்கி மகிழ்கின்றன, இதற்கெல்லாம் ஒரு தண்டனையும் கிடையாதா?

என்ன கொடுமை சார் இது!
-------------------

கடலில் கரையும் கண்ணீர் துளிகள்!

இலங்கையில் முள்ளி வாய்க்கால் கோரச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிறது ,அப்பொழுதே புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் குடுப்பத்தார் கொல்லப்பட்டது குறித்தான படங்கள் நக்கீரன் பத்திரிக்கை முதல் பல பத்திரிக்கைகளிலும்,இணைய தளங்களிலும்  வெளியானது,ஆனால் சில  தமிழக அரசியல் தலைவர்கள் இறப்பினை உறுதிப்படுத்தாமல் பிரபாகரன் உயிரோடு வருவார் என்பதாகவே மேடைகளில் பேசிவந்தனர், இவ்வாறு செய்வதால் போராட்டம் முடிவுக்கு வராமல் தொடரும் என நினைத்தார்களோ என்னமோ,ஆனால் அப்படிப்பேசியது ,நடந்த படுகொலைகளின் தீவிரத்தினை   உணரவிடாமல் மக்களை செய்து விட்டது என்பேன்.சில ஆண்டுகள் கடந்த பின் இப்பொழுது சேனல் நான்கில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் துப்பாக்கியால் துளைக்கப்பட்டு இறந்த காட்சியினை வெளியிட்ட உடன் , தமிழக அரசியல் தலைவர்கள் இது நாள் வரையில்  கேள்வியேப்படாமல் இன்று தான் கேள்விப்பட்டது போல பேசுவது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது, இவர்கள் ஈழ மக்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அங்கு நடக்கும் சம்பவங்கள் தங்களுக்கு மட்டும் தெரிய வரும் என்பது போல இத்தனை நாட்களாக பேசி வந்தது  எல்லாம் கட்டுக்கதையா?

கோரச்சம்பவம் நடந்த அன்றே உண்மையை விளக்கி  பேசியிருந்தால் தமிழக மக்களின் மனதில் ஒரு மாற்றம் கொண்டு வந்திருக்கும், ஆனால் மொன்னையாக ,தெளிவில்லாமல் பேசி நடந்த கோரச்சம்பவத்தின் தாக்கம் தமிழக மக்களின் மனதில் பதியவிடாமல் செய்துவிட்டார்கள்.

ஒரு போராளி ஒரு அதிகார மையத்திற்கு எதிராக போராடினால் அவனை மட்டுமே  எதிரியாக பார்க்க வேண்டும், ஆனால் அவனது குடும்பத்தினரையும் எதிரியாக நினைத்து ஒரு சிறுவனைக்கூட விட்டு வைக்காமல் அழித்துவிட்டு ,சர்வதேச அரங்கில் ஒரு நாட்டின் அதிபர் என தலை நிமிர்த்தி ஒரு  மனிதன் நடக்கிறான்,அதனை உலக நாடுகளும் வேடிக்கைப்பார்ப்பதை எல்லாம் பார்த்தால்,மனித குலம் நாகரிமடைந்துவிட்டது, நாம் வாழும் உலகம் ஜனநாயக விதிகளுக்குட்பட்டு இயங்குகிறது என்பதெல்லாம் வெறும் ஏட்டு சுரக்காயாக கற்பிக்கப்படும் சித்தாந்தங்கள் மட்டுமே என்பது தெளிவாகிறது.

மேலும் இராச பக்சே, பாலச்சந்திரன் படுகொலைக்கும் இலங்கை இராணுவத்துக்கும் தொடர்பில்லை என்கிறார் விட்டால் இலங்கைக்கும் ,இலங்கை இராணுவத்துக்குமே தொடர்பில்லை என்று சொன்னாலும் நாம் வேடிக்கை மட்டுமே பார்ப்போமாக :-))

நல்ல வேளை சின்னப்பையன் ,அப்பா போன துக்கம் தாங்காமல் ,ஒரு துப்பாக்கிய எடுத்து நெஞ்சில ஐந்து முறை அவனே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டான் என சொல்லாமல் விட்டார்களே என நிம்மதியடையலாம்.


இதில் சேனல் நான்கு பல தவணைகளாக ஆண்டுக்கணக்கில் காணொளிகளை வெளியிட்டு வருவதும் சரியல்ல, ஒரு கோரச்சம்பவத்தினை தங்கள் சேனலின் டி.ஆர்பி ரேட்டிங்க் அதிகரிக்க உதவும் ஒரு நிகழ்ச்சியாக பயன்ப்படுத்துகிறார்கள் ,மேலும் படுகொலைகளை படமெடுத்தவர்களோ நல்ல விலைக்கு பேரம் பேசி கொஞ்சம் கொஞ்சமாக விற்பதாகவும் தெரிகிறது, இதனை போர்க்குற்ற ஆவணமாக கருதி சரியான காலத்தில் முழுமையாக வெளிப்படுத்தினால் தான் ,பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலன் தரும், கொலை செய்யப்பட்டவர்களுக்கும் அஞ்சலியாக அமையும், ஏன் எனில்  சேனல் நான்கின் காணொளிகள் மட்டுமே இப்பொழுது உள்ள ஒரே போர்க்குற்ற ஆவணம், ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்திலும் இந்த ஆவணப்படங்கள் காட்டப்பட்டுள்ளது, ஆனால் முழுமையாக காட்டாமல் பகுதியாக காட்டுவதால் சரியான தாக்கம் ஏற்படுத்தாமல் போய்விடக்கூடிய அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டு சேனல் நான்கு செயல்ப்பட வேண்டும்.

பாலச்சந்திரன் படுகொலை குறித்து, விரிவாகவும் தெளிவாகவும் தனது கருத்துக்களை மூத்த பத்திரிக்கையாளரும் ,வலைப்பதிவருமான திரு. அமுதவன் அவர்கள் ஒரு பதிவிட்டுள்ளார்,அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.

அமுதவன் பக்கங்கள்: பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலை…….நமக்குள் எழும் கேள்விகள்

# இதில் நம்ம ஊர் அரசியல் கட்சிகள் இன்னமும் வழக்கம் போல மேடைக்கச்சேரி மட்டுமே செய்துக்கொண்டுள்ளன. கழகமோ ராஜ்ய சபாவில் பேசி அதன் மூலம் மற்றக்கட்சிகளுக்கு புரிய வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வைப்போம் , ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியாவை ஓட்டளிக்க செய்வோம் என்கிறது, எனக்கு ஒன்னு விளங்கவில்லை  தி.மு.க மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தானே , கூட்டணிக்கட்சியாக மத்திய அரசை நேரடியாக வலியுறுத்தி ஒரு முடிவெடுக்க  வைக்க  முடியாதா? அப்படி பேசக்கூட முடியாத நிலையில் என்ன கூட்டணி வேண்டிக்கிடக்கு?

இதில் உட்சபட்ச கொடுமை என்னவெனில் ராஜ்யசபாவில் விவாதம் முடிந்த அன்றே காங்கிரசை சேர்ந்த ஒரு மத்திய அமைச்சர் (சல்மான் குர்ஷித்) சொல்கிறார் ,இலங்கை எதிரி நாடல்ல, ஜெனிவாவில் என்ன முடிவெடுப்போம் என்பதை இப்பொழுது சொல்ல முடியாது என்கிறார், இதன் மூலமே ராஜ்யசபாவில் தொண்டைக்கிழிய பேசினால் எல்லாம் வேலைக்காவாது என்பது நன்கு புலப்படும்.

தி.முக இப்படி செய்வதற்கு பதில் கொக்கு தலையில் வெண்ணை வைத்து கொக்கு பிடிக்க முயற்சிக்கலாம் :-))

என்ன கொடுமை சார் இது!
--------------

படிப்பது இராமாயணம் இடிப்பது பரிணாமம்!

வழக்கமாக மார்க்கப்பந்துக்கள் பரிணாமம் இல்லை ,உலகம்,உயிர்கள் அனைத்தும் அல்லா படைத்தார், விரித்தார் என கதை விடுவது வழக்கமே, ஆனால் அவர்களோடு சோடிப்போட்டுக்கொண்டு சில வைதீக மதப்பற்றாளர்களும் இப்பொழுது பரிணாமம் இல்லைனு கிளம்பி இருக்கிறார்கள்.

இதில் என்ன காமெடி எனில் , மார்க்கப்பந்துக்களை பொறுத்த வரையில் அறிவியல் பார்வைக்கொண்ட நாத்திகர்களும் காஃபீர்கள் தான் , இறை நம்பிக்கைக்கொண்ட வைதீக மதப்பற்றாளர்களும் காஃபீர்கள் தான்,ஆனால் நாத்திகர்கள் முன் வைக்கும் பரிணாமவியல் கோட்ப்பாட்டினை எதிர்க்க மட்டும் மார்க்கப்பந்துக்கள் வைதீகர்களுடன் கைக்குலுக்கிக்கொள்கிறார்கள் :-))

வைதீக மதப்பற்றாளர்கள் பரிணாமத்தினை கேள்விக்குள்ளாக்க ,மார்க்கப்பந்துக்கள் கேட்ட அதே கேள்வியான , பரிணாமத்தில் இடைப்பட்ட உயிரினத்தின் படிமம் இருக்கிறதா எனக்கேட்கிறார்கள், அதாவது மனிதன் குரங்கிலிருந்து உருவானவன் என்றால் மனிதனுக்கும் குரங்குகிற்கும் இடைப்பட்ட வடிவில் ஒரு உயிரினம் இருக்க வேண்டும்,அதன் படிமம் எங்கே என கேட்கிறார்கள்.

இக்கேள்வியை அரேபிய மதத்தினை பின்ப்பற்றுபவர்கள் கேட்கலாம்,ஏன் எனில் அவர்களுக்கு இராமாயணமெல்லாம் தெரியாது, படித்திருக்க மாட்டார்கள்,ஆனால் சதா சர்வகாலமும் ,எம்பெருமான் கிருஸ்ணாவின் சரச சல்லாப லீலைகளை நினைத்து புளகாங்கிதம் அடையும் வைதீகர்கள் அப்படி எல்லாம் கேட்கலாமோ?

பகவான் பெருமாளின் தசாவாதரங்களில் ஒன்றான இராமாவதாரத்தின்  மகிமையை போற்றிப்பாடும் இராமாயணத்திலேயே பரிணாமத்திற்கு ஆதரவான சான்றுகள் உள்ளது, நம்பாதாவர்கள் கீழ்க்கண்ட படத்தினை காணவும்.அனுமார் மனிதனைப்போல் இருகால்களில் நிற்கிறார், உடலும் மனித உடலை ஒத்துள்ளது ,ஆனால் குரங்கு போல முகமும்,வாலும் உள்ளது,இதன் மூலம் குரங்கிற்கும்,மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினம் இருந்தது தெளிவாகிறது, அனுமான் படத்தினை பார்த்த பின்னும் பரிணாமத்தினை நம்பாதவர்கள், பகவான் எடுத்த தசாவதாரத்தினையும் நம்பாதாவர்கள் ஆவார்கள் :-))

இராமாயணத்தினை படித்துவிட்டு பரிணாமத்தினையும் எதிர்க்க நினைக்கும் வைதீகர்கள் படிப்பது இராமாயணம் இடிப்பது பரிணாமம் என்ற செயலை செய்யலாமா?

என்ன கொடுமை சார் இது!
---------------

மதமெனும் போதை!
புதுவை அண்ணா சாலையில் இராஜா திரையரங்கம் அருகில் இப்புண்ணியமிகு திருக்கோவில் உள்ளது, மாலை வேளையில் பக்த கோடிகள் பெரும் திரளாக வருவது வாடிக்கை. கோபுர தரிசனம் கோடி புண்ணியமாம் எல்லாம் கன்னத்துல போட்டுக்கோங்க!


கோயிலைபார்த்து பரவசமானீர்களா,வாங்க அப்படியே பக்தி பரவசமாகி ஏகாந்தமான பக்தர்களையும் தரிசிப்போம் ..........


பக்தி பெருக்கெடுத்த சில பக்தர்கள், புதுவையின் புகழ்மிகு புண்ணிய தீர்த்தம் அருந்திவிட்டு அம்மனிடம் அடைக்கலமாகிவிட்டார்கள் போலும் :-))

என்ன கொடுமை சார் இது!
----------------

பின் குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி ,

விக்கி,கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
-------------------