Sunday, April 21, 2013

என்ன கொடுமை சார் இது-13

(ஹி...ஹி முன்னாலே போனால் நான் பின்னாலே வாரேன்)


காகதாளிய நியாயம்!

கூகிள்காரன் ஓசியில பிலாக்னு ஒன்னு கொடுத்தாலும் கொடுத்தான் ஆள் ஆளுக்கு ஒரு பிலாக் ஆரம்பிச்சுட்டு, எதையாவது கிறுக்கி தள்ள ஆரம்பிச்சுட்டாங்க, சில சமயம் நல்லாவும் எழுதி தொலைச்சுடுறாங்க, ஆனால் சிலர் பண்ணுற அலப்பரை இருக்கே அது ஒரு தனிரக பயங்கரமா இருக்கும், தான் ஒரு  திரைவிமர்சனம் எழுதினா மணிரத்னம்,ஷங்கர் வரைக்கும் படிக்குறாங்கல ஆரம்பிச்சு அமெரிக்க சனாதிபதி ஓபாமாவே என் வாசகர்,எனக்கு மெயில் அனுப்பினார் என்பதாக பெரும்பீத்து பீத்துறாங்கய்யா :-))

சரி அதுவாது போகட்டும்னு விடலாம், நேத்து மழை பெஞ்சா கூடா நான் முத்தாநேத்தே மழை வராப்போல இருக்குனு துவித்தர்ல சொன்னேன், பிளஸ்ல சொன்னேன் ,பிலாக்கர்ல சொன்னேன்னு சொல்லிக்கிறாங்க, இதமாரி தான் ஒருப்பதிவர் இருக்கார், அவர் எழுதுறத அவர தவிர நாலுப்பேர் படிச்சாலே அதிசயம், பிரபல திரட்டிகள் கூடக்கண்டுக்காத ஒரு டொக்குப்பதிவு வச்சுக்கிட்டு, எதையாவது எழுதிட்டு ,கொஞ்ச நாள் கழிச்சு நான் சொன்னா மாதிரியே நடந்துப்போச்சுனு ஓவரா பில்டப்பு கொடுக்கிறார்,

கொஞ்ச நாள் முன்ன லோகநாயகர் டிடிஎச் இல் படம் வெளியாகும் முன் வெளியிடுவேன்னு சொன்னதும், அதெல்லாம் சாத்தியமில்லைனு முழ நீளத்துக்கு ஒரு பதிவு போட்டு வெளக்கு வெளக்குனு வெளக்கினார், என்ன எழவு மாயமோ தெரியலை அதே போல டிடிஎச் இல் படம் வெளியாகவில்லை, அப்புறம் படம் வந்து ஒரு வாரத்தில் டிடிஎச் என லோகம் சொன்னார் ,ஆனால் இன்னிவரைக்கும் டிடிஎச் இல் படமே வரலை, உடனே அந்த வெளங்காவெட்டிப்பதிவர் பார்த்தீரா ...நான் அப்பவே சொன்னேன்ல என ஒரு அலப்பரைய கொடுத்தார் :-))

கெரகம் ஏதோ நல்ல நேரம் குத்து மதிப்பா சொன்னது போல நடந்துப்போச்சுனு மக்கள் பொறுத்துக்கொண்டார்கள், பின்னர் உரமானியத்தில் ஊழல் நடக்குதுனு ஒரு பதிவுப்போட்டார், ஒரு மாசம் கழிச்சு, உரமானிய ஊழல் பற்றி அம்மையார் ஒரு அறிக்கை விட்டாங்க, இதுல இன்னொரு கொடுமை என்னனா, அலப்பரைப்பதிவர் சொன்ன மாதிரியே கணக்கும் சொல்லி இருக்கவும், ஆசாமிக்கு உச்சந்தலையில கிர்ருனு ஏறிடுச்சு, நான் அப்பவே சொன்னேன்ல என அதை எடுத்து போட்டு ஒரு பதிவு போட்டு , காலரை தூக்கிவிட்டுக்கிறார்,எல்லாம் நேரம்யானு அப்பாவி பொதுமக்களும் ஏதோ போனாப்போவுதுனு அவர் பதிவை படிச்சு தொலைக்கிறாங்க என்பதை புரிந்துக்கொள்ளாமல் அடுத்த அலப்பரைக்கு அடிப்போட ஆரம்பிச்சுட்டார்.

சுட்டி:

உரமானிய ஊழல்.


அந்த அலப்பரைப்பதிவர் நவக்கிரகங்களுக்கும் நண்பனாகிட்டார் போல எந்த பதிவு போட்டாலும் அதுக்கு பின்விளைவாக இப்போலாம் ஒரு செய்தி மாட்டிக்குது,கச்சத்தீவு பற்றி ஒரு பதிவு போட்டு , கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி செல்லாது, அக்காலத்தில் திமுக பக்கோடா சாப்பிட்டுக்கிட்டு வேடிக்கை பார்த்தது ஏன் ? அப்படினு வில்லங்கமா ஒரு பதிவைப்போட்டார், ஆனாப்பாருங்க பதிவு வந்த சில நாட்களில் டெஷோ கூட்டமைப்பு சார்பாக ,கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது தவறு என உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போடப்படும்னு அறிவிப்பு வருது.

நீங்களே அந்த செய்தியப்பாருங்க,

//* கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும், வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், 368வது பிரிவின்படி, பார்லிமென்டின் பரிசீலனைக்கு வைத்து, சட்டம் இயற்ற வேண்டும். கச்சத்தீவைப் பொறுத்தவரை, அப்படி எந்தவொரு சட்டமும், இதுவரை நிறைவேற்றபடாததால், கச்சத்தீவை இலங்கைக்கு, ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது, அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது.
* எனவே, 1974ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு, இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், உச்சநீதி மன்றத்தை டெசோ அமைப்பு அணுகும்//

செய்தி மூலம்:
http://tamil.oneindia.in/news/2013/04/16/tamilnadu-teso-decides-approach-sc-cancel-kac-173503.html

ஹி..ஹி இதான் அந்த அலப்பரையின் தீர்க்க தரிசனப்பதிவு,
கட்சத்தீவு

அடப்பாவிகளா, 1974 இல் விட்டுக்கொடுத்துட்டு 2013 வரைக்கும் சும்மா குந்தியிருந்துட்டு , இப்போ வழக்குப்போடுவோம்னு அறிக்கை வெளியிட்டா, பொங்கலுக்கே பட்டாசு வெடிக்கிறவன், தீபாவளிக்கு சும்மா இருப்பானா அதுக்கு ஏற்றார்ப்போல  லட்டுப்போல செய்தி வந்து மாட்டிக்கிட்டதும், எல்லாம் என்னால தான், எம்பதிவை படிச்சப்பொறவு தான் "டேஷோ"தலிவருக்கு ஞானம் வந்து வழக்கு போட்டிருக்கார்னு டமாரம் அடிச்சுட்டு கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்!

ரொம்ப தாமதம் என்றாலும் 2008 இல் அம்மையார் வழக்கு போட்டாச்சு, அப்போலாம் சும்மா இருந்துட்டு இப்போ வழக்கு போட்டால் ,ஜட்ஜே கேட்பார் "ஏன் மிஸ்டர் 1974 இலே உங்க கட்சி தானே மாநில ஆட்சியில் இருந்துச்சு ,அப்போலாம் ஏன் வழக்குப்போடலைனு :-))

ஏதோ காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா இப்படி எதாவது நடந்து தொலைக்குது  அதுக்கெல்லாம் வெட்டிப்பந்தா விடப்படாதுனு சொல்லலாம்னு நானும் பார்க்கிறேன் ,ஆசாமி கண்ணுலவே சிக்க மாட்டேங்கிறப்படி, நீங்களாச்சும் எங்காவது பார்த்தா சொல்லி வையுங்க, அப்பவாவது நல்லப்புத்தி வருதா பார்ப்போம்.

(நீ கலக்கு மாமு ...ALL THE BEST!!!!)

என்ன கொடுமை சார் இது!
--------------------

எல்லாமே அரசியல்-2


(ஓடாது தெரிஞ்ச பின் உஷாரா ஏறி போராட்டம்)

#ஈழப்பிரச்சினைக்காக முதலில் லயோல கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் துவக்கினார்கள், பின்னர் பலக்கல்லூரி மாணவர்களும் துவக்கினார்கள்,இதையெல்லாம் பார்த்த சில வெள்ளந்தியான பதிவர்கள் ,அடடே என்னா ஒரு தமிழுணர்வு ,இது போல யாருக்கும் வருமானு சிலிர்த்துக்கொண்டு பதிவெல்லாம் போட்டார்கள்,ஆனால் அப்பொழுதும் மாற்றுப்பார்வைக்கு பெயர் போன அலப்பரை பதிவர் ,இப்போராட்டங்களின் பின்னால் இருக்கும் அரசியலை புட்டு புட்டு வைத்தார், ஆனால் சில நாட்களுக்கு பின்னர் போராட்டம் நீர்த்துப்போக ஆரம்பித்ததும் சிலிர்த்துக்கொண்டவர்கள் எல்லாம் மனசுக்குள் சலித்துக்கொண்டு , ஐபிஎல் பார்க்க போயிட்டார்கள்.

மாணவர்கள் போராட்டத்தில் திடீர் திருப்பமாக , அதே லயோலா கல்லூரியில் இருந்து ஒரு பிரிவு மாணவர்கள் குழுவாக போய் 61 வயது ஆகியும் நரைகூடி கிழப்பருவம் அடையாத நித்திய இளைஞரான ,இளைஞரணி தலைவர் மு.க.இசுடாலினை(தமிழ்..தமிழ்) சந்தித்து இளைஞர் அணியில் ஐக்கியமாகி ,டெஷொவுக்கு ஆதரவாக போராடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

இதில் உள்ள இராச தந்திரம் என்னவெனில் , முதலில் ஈழப்பிரச்சினைக்காக போராடுவதாக சொல்லிக்கொள்ளும் மாணவர்கள் சைக்கிள் கேப்பில் டெஷோவை எதிர்க்கிறோம் எனவும் பதாகை பிடித்திருந்தார்கள், மேலும் தொடர்ந்து திமுகவிற்கு எதிரான விமர்சனங்களை வைத்தார்கள்,ஆனால் மறந்தும் ஆளுங்கட்சியை விமர்சிக்கவேயில்லை,இது மக்களிடயே கழகத்தின் இமேஜை டேமேஜ் செய்து வந்தது. இதனை கட்சி ரீதியாக எதிர்க்கொண்டால் எடுபடாது என புரிந்து கொண்டு ,இன்னொரு மாணவர் குழுவை வளைத்துவிட்டார்கள், இனி அவர்கள் மூலம் ஈழப்பிரச்சினைக்கான போராட்டம் ,அதே நேரம் டெஷோவையும் விளம்பரப்படுத்துவார்கள், வழக்கமாக எந்த ஒரு போராட்டத்திற்கும் காவல்துறை எளிதில் அனுமதி கொடுக்காது,அதுவும் ஆளுங்கட்சிக்கு விருப்பமில்லாத போராட்டம் எனில் அனுமதிக்கிடைப்பது குதிரைக்கொம்பு,

இப்பொழுது கழகத்தின் ஆதரவு மாணவரணிக்கு அனுமதி மறுத்தால், முன்னர் போராடிய மாணவர்களுக்கும் அனுமதி கொடுக்க இயலாது, அனுமதி கொடுத்தால் இரு தரப்புக்கும் கொடுக்க வேண்டும், அப்படிக்கொடுத்தால் கழகத்தின் டெஷோவிற்கு விளம்பரம் கிடைத்துவிடும்,எனவே அனுமதிக்க முடியாது ,அதே போல இனி முதலில் போராடிய மாணவர்கள் குழுவிற்கும் அனுமதி கிடைப்பது கடினம், மாணவர்களும் தடையை மீறி எல்லாம் போராட மாட்டார்கள்,எனவே இப்பொழுது தானாகவே மாணவர்கள் எழுச்சி அடங்கிவிடும், அல்லது இரு தரப்புக்கும் அனுமதிக்கொடுக்கப்படும் இதனால் கழகத்தின் இமேஜ் டேமேஜ் ஆகாமல் காக்கப்பட்டு விடும், இதுவே மஞ்சத்துண்டின் ராசதந்திரம்.

இச்சம்பவங்களே எந்த அளவுக்கு மாணவர்கள் போராட்டத்தின் பின்னால் அரசியல் இருந்து இயக்கியது என்பதனை விளக்கப்போதுமானது.

எல்லாமே அரசியல் தான்!

என்ன கொடுமை சார் இது!
-------------------------------

தனி ஆவர்த்தனம்!

ஆரம்பத்தில் பெரியாரின் திராவிடர் கழகம் திராவிட நாடு என தனி நாடு வேண்டும் என கோஷம் போட்டு வந்தது, பின்னர் தி.கவில் விருந்து பிரிந்த அண்ணதுரை அவர்கள் திமுக கண்டார், அவரும் திராவிட நாடு என முழங்கினார், பின்னர் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படவே ,மொழிவழி பிரிந்து இனவழி ஒன்று கூடுவோம் ,அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றெல்லாம் முழங்கினார்.

ஆனால் இதுக்கெல்லாம் மொத்தமாக ஆப்பு வைக்கும் விதமாக கி.பி 1962 இல் இந்திய அரசியல் சட்டத்தின் 19 ஆம் பிரிவில் ஒரு திருத்தம் கொண்டு வந்தார்கள், இதனை பதினாராவது அரசியல் சட்டத்திருத்தம் அல்லது தனிநாடு தடைச்சட்டம் என்றார்கள். மேலும் இதனடிப்படையிலேயே பதவிப்பிரமாணமும் எடுக்க வேண்டும்.

இச்சட்டத்திருத்தத்தின் படி , இந்தியாவில் இயங்கும் எந்த ஒரு அமைப்போ, தனிநபரோ தனி நாடு என கோரிக்கை வைத்து இயங்கக்கூடாது, அப்படி செய்தால் தேர்தலில் போட்டியிடத்தடை விதிக்கப்படும், தேவைப்பட்டால் நிரந்தர தடையே விதிக்கப்படும்.

சட்ட திருத்த விவரங்களுக்கு காண்க...

http://indiacode.nic.in/coiweb/amend/amend16.htm

இச்சட்டத்திருத்த மசோதா விவாதத்தின் போது ராஜ்யசபாவில் அண்ணா அவர்கள் தம் கட்டி நீண்ட எதிர் விவாதம் எல்லாம் செய்தார் ஆனாலும் ,சட்டத்திருத்த மசோதா அபார வெற்றிப்பெற்றது, இனிமேல் திராவிட நாடு எனப்பேசினால் தேர்தல் தடை என்ற சூழலில் , தனிநாடுக்கோரிக்கைக்கு மூடுவிழா நடத்திவிட்டு , மத்தியில் கூட்டாச்சி ,மாநிலத்தில் சுயாட்சி என புதிய கோஷம் உருவாக்கிக்கொண்டார், அதாவது ஃபெடரல் கவெர்ண்மெண்ட் அமைப்பில் மாநிலங்களுக்கு அதிக தன்னாட்சி உரிமை கேட்பதாகும்.

இந்த பழைய மேட்டரெல்லாம் எதுக்குனு கேட்கிறிங்களா விடயம் இருக்கு, அண்ணா காலத்திலே ஊத்தி மூடப்பட்ட, ஒரு சமாச்சாரத்தினை பற்றி இப்பவும் ஒரு அரசியல் தலைவர் பேசிக்கிட்டு இருக்கார், அவர் வேறு யாருமல்ல புரட்சிப்போராளி குருமா ச்சே திருமா தான்.அவருக்கு அவ்வாறு பேசுவது அரசியல்சட்டப்படி தடை செய்யப்பட்டது என தெரியுமா என தெரியவில்லை,

சமீபத்தில் நடந்த அம்பேத்கார் பிறந்த நாள் விழாவில் வீர உரையாற்றிய திருமா, நான் நாடாளுமன்றத்திலேயே தனித்தமிழ் நாடு வேண்டும் எனக்குரல் கொடுத்தேன் என சொல்லி இருக்கிறார்.(செய்தி ஜூவியில் வந்துள்ளது)

இவ்வாறு நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினரின் கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் சில முரணான கருத்துக்களையும் சொல்லலாம்,ஆனால் யாரேனும் ஒரு உறுப்பினர் ஆட்சேபம் தெரிவித்தால் அவைக்குறிப்பில் இருந்தும் நீக்கப்படும், மேலும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தால் ,சபாநாயகர் விரும்பினால் இடைநீக்கமும் செய்யலாம்.சட்ட மன்றமோ,நாடாளுமன்றமோ சபாநாயகருக்கு "வானாளவிய அதிகாரம்"உண்டு என்பது கடந்த கால வரலாறு!

எனவே நாடாளுமன்றத்தில் பேசினேன் என சொல்லிக்கொண்டு மேடைப்போட்டு பேசிக்கொண்டு இருந்தால் ,யாரேனும் தேர்தல் ஆணையத்திடம் ஆதாரப்பூர்வமாக புகார் அளித்தால் தேர்தலில் கலந்துக்கொள்ள தடைவிதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. சூனா சாமியின் கவனத்திற்கு  இதெல்லாம் இன்னும் செல்லவில்லை போல ,தெரிந்தால் உடனே பெட்டிஷன் போட்டு அலப்பரையை கொடுக்கலாம்.(ஹி...ஹி ,வருங்காலத்தில் அப்படி நடந்தால் அடியேனின் தீர்க்க தரிசனத்தின் அருமையை  நினைவு கூறவும்)

இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு  நடைப்பெற சாத்தியமுல்ல தெலுங்கானா தனிமாநில கோரிக்கைக்கே  தெலுங்கான மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்கவில்லை, அப்படி இருக்க சட்டத்தின் படி நிறைவேற வாய்ப்பேயில்லாத தனிநாடு பற்றிப்பேசினேன் என பெருமையாக பேசி மக்களின் உணர்ச்சிகளை தூண்டி அரசியல் செய்ய நினைக்கும் அரசியல் தலைவர்களை என்னவென்பது?

திருமாவிற்கு அரசியல் சட்ட நிலை என்னனு தெரிஞ்சு பேசினாரா, தெரியாம பேசினாரானு தெரியலை ஆனால் எதைப்பேசினாலும் நம்ப ஒரு கூட்டம் இருக்கும் வரையில் அரசியல் கட்சிகளுக்கு வாழ்வுதான் :-))

என்ன கொடுமை சார் இது!
---------------

வாய்ப்பும்,வரமும்:கருப்பு வெள்ளைக்காலப்படங்களில் வரும் ஜாலியான பாட்டுக்களை டப்பாங்குத்து பாட்டுக்கள் என்பார்கள், கிராமிய இசையின் பின்னணியில் பாடல் அமைக்கப்பட்டிருக்கும்.

இப்ப வரும் படங்களில் ஜாலியான பாட்டு என்றால் குத்துப்பாட்டு என்பார்கள், ஆனால் இசைனு சொல்லிக்கிறாப்போல எதுவும் இருக்காது, வெறும் டம்முக்கு டிப்பான் டப்பானு ஒரு பீட்ஸ் தான் பாட்டு முழுக்க ஓடும்.

மாமா ...மாமா மாமா ஏமா...ஏமானு ஜாலியான டப்பாங்குத்தாக இருப்பினும், பாட்டின் நடுவில் "தாலிக்கட்டும் முன்னே கை மேனியில் படலாமானு "கலாச்சாரமும் பேசு(பாடு)கிறார்கள் :-))

இப்போலாம் டாடி மம்மி வீட்டில் இல்லைனு நேரா இன்விட்டேஷன் தான் :-))

இந்த பாட்டில உள்ள கவனிக்க தக்க அம்சம் என்னவெனில் ,பாடலுக்கு ஆடும் ஆண் நடிகர் தான்,அவர் பெயர் "கள்ளப்பார்ட் நடராஜன்",அக்கால நாடகங்களில் வில்லனாக நடிப்பவர்களை "கள்ளப்பார்ட்"என்றும் ஹீரோவை "ராஜ பார்ட்" என்றும் சொல்வார்கள்.

நாடக நடிகர்கள் எல்லாருமே நடனம்,இசை என கற்றுக்கொண்டவர்களே, எனவே வில்லன் நடிகராக நாடகத்தில் நடித்தவர் என்றாலும் செமையா "உட்கார்ந்து எழுந்து" என குத்தாட்டம் போட்டிருக்கார். பாட்டின் நடுவில் எம்.ஆர்.ராதாவும் கனவாக ஒரு சில குத்துக்கள் போட்டிருக்கார்.

இப்படிலாம் நடனம் ஆடத்தெரிந்த நாடக நடிகர் பெரிய நடிகராக வந்தாரா என்றுப்பார்த்தால் இல்லை ,கடைசியில் பார்த்தால் தேவர் மகன் படத்தில் ரேவதிக்கு அப்பாவாக " மாயன் பார்த்தால் எங்களுக்கு தான் பிரச்சினை போயிடுங்க தம்பி " என அழுகாச்சி வசனம் பேசி நடித்தவர் இவர் தான் என தெரிய வருகிறது.

திறமை இருக்கும் பலருக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை, ஆனால் திறமை என பெரிதாக இல்லாதவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு ,கிடைத்து பின்னர் திறமையை வளர்த்துக்கொண்டு பெரிய அளவில் வந்துவிடுவதும் நடக்கிறது. வாய்ப்பு கிடைப்பதை விட வரம் கிடைக்க வேண்டும் போல!

இப்போலாம் சினிமாவில ஹீரோவாக ஆகணும் என்றால் ஹீரோவிற்கு மகனாக பிறந்திருக்க வேண்டும், அரசியலில் முதல்வராக /தலைவராக ஆக வேண்டும் என்றால் முதல்வருக்கு மகனாக பிறந்திருக்க வேண்டும் என ஆகிவிட்டது.

என்ன கொடுமை சார் இது!
--------------

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

விக்கி,கூகிள்,ஜீவி,நன்றி!
**********