Monday, August 27, 2007

உள்ளது உள்ளபடி - 2:விவசாய தொழிலாளர்களின் நகர்ப்புர இடம் பெயர்வும் விளைவுகளும்

இந்தப்பதிவு "உள்ளது உள்ளபடி -ஓகை அவர்கள் பார்வைக்கு" என்றப்பதிவின் தொடர்ச்சியாக வருவது.அப்பதிவை படித்து விட்டு தொடர்ந்தால் இதன் அர்த்தம் எளிதாக புரியும்.
அப்பதிவு ஓகை அவர்களின் பதிவிற்கு பதிலாக எழுதப்பட்ட ஒன்று எனவே ஓகை அவர்களின் பதிவிற்கான சுட்டி: ஓகை

கிராமங்களில் வாழ்ந்த விவசாயி , விவசாய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு , வருமானம் இவற்றின் காரணமாக நகர்ப்புரங்களுக்கு இடம் பெயர்வது அதிகரித்து வரும் சூழலில் , அவர்களுக்கு கிடைப்பது சிறிய வருமானம் ஆனால் அவர்கள் அதற்காக இழப்பது அதிகம். கிராம , நகர்ப்புர வசிப்பிட சூழல், மற்றும் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை ஒப்பீட்டளவில் காண்போம்!
நகரத்தில் சாலை ஓரம் வசிக்கும் நிலை!
வசிப்பிடம்:

கிராமத்தில் ,
ஏழையாக இருந்தாலும் சொந்தமாக குடிசை என்று ஒன்று இருக்கும் , அது எவ்வளவு மோசமான குடிசையாக இருந்தாலும் அவனுக்கே உரியது , அதற்கு வாடகை எதுவும் இல்லை.

நகரத்தில்,
வேலை தேடிவரும் இடத்தில் தங்க வசதிகள் பெரும்பாலும் செய்து தருவதில்லை. அவன் வாங்கும் சொற்ப சம்பளத்தில் வாடகை வீடு பிடிப்பது சாத்தியம் இல்லை. எனவே சாலை ஓரங்களில் , அல்லது பாலங்கள் அடியில் , கட்டுமான பணி நடைபெறும் இடத்திலே தகர கூறை வேய்ந்த இடங்களில் பலருடன் இடத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும்.

பெண்கள் , வயது வந்த பெண் குழந்தைகள் வைத்து இருப்பவர் பல கஷ்டங்களை சந்திக்க நேரிடும், அவர்களுகு பாலியல் ரிதியான பல தொந்தரவுகள் ஏற்படலாம், பாதுகாப்பு இருக்காது.

குடிநீர்:
கிராமத்தில் ,
குடிநீர் வேண்டும் என்றால் கிணரு , குளம் , அடி பைப்புகள் என ஏதோ ஒன்று இருக்கும் , தேவைப்பட்ட நேரத்தில் போய் நீர் கொண்டு வரலாம். குளிப்பது , துணி துவைப்பது எல்லாம் ஒரு பிரச்சினை அல்ல.

நகரத்தில் ,
குடிநீர் லாரி எப்போது வருகிறதோ அப்போது தான் பிடிக்க முடியும் . குளிப்பது , துணி துவைப்பது எல்லாம் பெரும் பிரச்சினை. வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒரு முறை குளிக்க இயலும்.கிராமத்தில் சுத்தமாக வாழ்ந்தவர்கள் நகரத்தில் அசுத்தமாக வாழ வேண்டும்.

உணவு:
கிராமத்தில்,
சமையல் கூழோ ,கஞ்சியோ வீட்டில் பொறுமையாக சமைத்து உண்ணலாம், அரிசி , போன்ற சமையல் பொருட்கள் வாங்க வேண்டி இருக்காது. அல்லது அரிசியை நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டை மூலம் வாங்கலாம். காய்கரிகள் , கீரை எதுவும் வாங்கும் நிலை இல்லை , பெரும்பாலும் இலவசமாக வீட்டு பின்புறம் தானே பயிரிட்டு பயன்படுத்திக்கொள்வார்கள். விறகு ,வரட்டி எல்லாம் செலவில்லாமல் கிடைக்கும் .

நகரத்தில்,
குறைந்த சம்பளத்தில் உணவு விடுதிக்கு எல்லாம் போய் சாப்பிட முடியாது. எனவே சமைக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்தும் கடையில் வாங்கி தான் செய்ய வேண்டும். வேலைத்தேடி வந்த இடத்தில் குடும்ப அட்டையும் பயன்படுத்த முடியாது.விறகு கிடைக்கவில்லை என சாலை ஓரம் கிடக்கும் குப்பைகளை எல்லாம் எரித்து சமைக்கும் சூழலும் ஏற்படும்.

குழந்தை வளர்ப்பு:
கிராமத்தில்,
குழந்தைகள் அனைத்தும் பள்ளிக்கு போகும் என்று சொல்ல இயலாவிட்டாலும் , குறைந்த பட்சம் மதிய உணவிற்காக துவக்கப் பள்ளிக்கு போகும் குழந்தைகள் அதிகம் இருக்கும். அப்படி படிக்க போகாத போதும் குழந்தைகள் பாதுகாப்புடன் இருக்கும். ஏதோ ஒரு வகையில் வீட்டிற்கு உதவியாக இருப்பார்கள் , உ.ம் ஆடு ,மாடு மேய்ப்பது , அல்லது விறகு பொறுக்கி தருவது என. அவர்கள் கெட்டுப்போவதற்கு வாய்ப்புகள் குறைவு.

நகரத்தில்,
புதிதாக வந்த இடத்தில் பள்ளியில் சேர்ப்பதில் பிரச்சினை இருக்கும். எங்கு வேலை கிடைக்கிறதோ அங்கு என இடம் மாறும் சூழலில் பலரும் பள்ளியில் சேர்ப்பதில்லை. எனவே பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் சாலை ஓரம் இருக்கும் சிறுவர்கள் என்ன செய்வார்கள், பிச்சை எடுக்க போவார்கள் சிலர்,குப்பை பொறுக்கலாம் , அதில் கிடைக்கும் காசை பெற்றோர்க்கு தெரியாமல் செலவு செய்வார்கள் , புகை பிடித்தல் , பான் பராக் என பல தீய பழக்கங்களும் கற்றுக்கொள்வார்கள். வருங்காலத்தில் தீய நட்பினால் குற்றவாளியாகவும் நேரிடலாம்.

சமூக பாதுகாப்பு:
கிராமத்தில் ,
ஒரு சமூக பாதுகாப்பு இருக்கும், எல்லோரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்களாக இருப்பார்கள் அசம்பாவிதம் ஏற்பட்டால் உதவிக்கு ஆட்களும் வருவார்கள்.

நகரத்தில் ,
புது இடம் , அங்கேவே இருக்கும் அடாவடி ஆட்கள் தகராறு ,செய்தால் அடித்தால் வாங்கிக்கொண்டு தான் இருக்க வேண்டும். பெண்களை கிண்டல் செய்தால் , பாலியல் தொல்லை கொடுத்தால் கூட எதுவும் செய்ய இயலாது. காவல் நிலையத்தில் சொன்னால் கூட சாலை ஓரம் இருப்பவர்கள் தானே என அலட்சியம் காட்டுவார்கள்.

உடல் ஆரோக்கியம்:
கிராமத்தில்,
இருக்கும் வரை அவர்கள் உடல் ஆரோக்கியம் தானாகவெ நன்றாக இருக்கும் , காரணம் சுத்தமான சூழல். அவ்வபோது சாதாரண காய்ச்சல் தலை வலி தவிர வேறு எதுவும் வருவதில்லை

நகரத்தில்,

அனைத்து விதமான வியாதிகளும் வரும். ஒரு ஆய்வறிக்கையில் இப்படி இடம் பெயர்ந்து வேலை செய்வோரால தான் எய்ட்ஸ் அதிகம் பரவுகிறது. நகரத்தில் வேலை செய்து விட்டு திரும்புபவர்களால் கிராமங்களிலும் எய்ட்ஸ் தற்போது பரவி வருகிறது என தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பணிச்சூழல்:
மேலும் கிராமத்திலிருந்து வருபவர்களுக்கு மிக குறைந்த கூலியே தருகிறார்கள், ஒரு ஒப்பந்த தாரர் வசம் இவர்கள் மாட்டிக்கொள்ளும் சூழலும் உண்டு. அதிக நேரம் வேலைக் குறைந்த கூலி என இவர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள்.பல இடங்களில் கொத்தடிமை போன்று ஆகும் நிலையும் ஏற்படும்.
பணி நிரந்தரம் இல்லை. எல்லா நாட்களுக்கும் வேலை கிடைக்கும் எனவும் சொல்ல இயலாது.

இப்படி பலவற்றையும் ஒப்பிட்டு பார்க்கையில் மிக குறைந்த ஒரு தொகைக்காக தங்களது வாழ்க்கையை சீர் அழித்துக்கொள்ளும் நிலை தான் இப்படி இடம் பெயரும் விவசாய தொழிலாளர்களுக்கு நேரிடுகிறது.

நகரத்தில் ஏற்படும் செலவீனங்கள் போக அவர்கள் கையில் எஞ்சுவது ஒரு சொற்ப தொகை தான் அதனைக்கொண்டு வருங்காலத்தை வளப்படுத்துவதும் இயலாது, எனவே மீண்டும் மீண்டும் கூலி வேலை தேடி நகரம் , நகரமாக அலையும் ஒரு நாடோடி வாழ்க்கை தான் அவனுக்கு கிடைக்கிறது!

அப்படி எனில் இவர்கள் வாழ்கை என்னாவது ,இதற்கு என்ன தீர்வு,
கிராமப்புற வேலை வாய்ப்பை பெருக்குவது, அவர்களுக்கு கிராமத்திலே தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதும் ஆகும். இது பற்றி முந்தைய பதிவில் கொஞ்சம் விரிவாகவே பார்த்தோம்.
சுருக்கமாக சொன்னால் கிராமத்தை சிறு நகரம் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும். அதற்கு ஏற்றவாறு அரசு திட்டங்கள் போடவேண்டும்.

இல்லை எனில் இடம் பெயர்பவர்களின் வருகையால் ஏற்படும் திடீர் மக்கள் தொகைப்பெருக்கத்தால் நகரங்கள் திணறி விடும்! நகரத்தில் அனைவருக்கும் அனைத்து வசதியும் செய்து தருவது சாத்தியம் இல்லாது போய்விடும்!

காணாமல் போகும் நாட்டுக்காளைகள் - தொடர்ச்சி புகைப்படங்கள்

யோகன் அவர்கள் நாட்டுக்காளைகள் படங்கள் கிடைத்தால் போட சொல்லிக்கேட்டார் , இணையத்தில் தேடியதில் பெரும்பாலான காளைகள் மாட்டியது சில காளைகள் மட்டும் கண்ணில் சிக்கவில்லை , கிடைத்தவரை போட்டுள்ளேன் படத்தை பார்த்துவிட்டு யாரும் ம்மா.... ம்மா என்றெல்லாம் கத்தக்கூடாது!