Sunday, July 29, 2007

வன விலங்குகளின் அறிவியல்பெயர்கள்!

மேலும் சில வன விலங்குகளின் அறிவியல் பெயர்களின்ப் பட்டியல்.
spotted deer
பொதுப்பெயர் - அறிவியல்பெயர்

1)ஆசிய யானை - எலிபஸ் மாக்ஸிமஸ் (eliphas maximus)

2)ஆப்ரிக்க யானை- லோக்சோடொன்டா ஆப்ரிகானா (loxsodonto africana)

3)நீர் யானை - ஹிப்பொபொட்டமஸ் ஆம்பிபியஸ் (hippopotomus amphibius)

4)காண்டா மிருகம் - டைசெரோஸ் பைகார்னிஸ் (diceros bicornis)

5)கருப்பு கரடி - உர்சஸ் அமெரிக்கனுஸ் (ursus americanus)

6)பாண்டா கரடி - ஆய்லுரோபோடா மெலனோலுகா (ailuropoda melanoleuca)

7)ஒட்டகசிவிங்கி - ஜிராபா கேமலோபார்டிலஸ் (giraffa camelopardilus)

8)அரேபிய ஒட்டகம்- கேமெலஸ் ட்ரோமெடரியஸ் (camelus dromedaris)

9) பேக்டீரியன் ஒட்டம் - கேமெலஸ் பேக்டெரியனுஸ் (camelus bacterinus)

10) வரிக்குதிரை - ஈக்யுடே ஈக்கஸ் (equidae equus)

11)கொரில்லா - கொரில்லா கொரில்லா (gorilla gorilla)

12) இந்திய நரி - வுல்ப்ஸ் பெங்காலன்சிஸ் (Vulpes bengalensis)

13) சிறுத்தை - பாந்ரா பார்டுஸ் (panthera pardus)

14)புலி - பாந்ரா டைகரிஸ் (panthera tigeris)

15)சிங்கம் - பாந்ரா லியோ (panthera lio)

16)வீட்டு எலி - முஸ் முஸ்குலஸ் (mus musculas)

17)மான்(Sambar) - செர்வஸ் யுனிகலர் (cervus unicolor)

18) புள்ளி மான் - செர்வஸ் ஆக்சிஸ் ஆக்சிஸ் (cervus axis axis)

Thursday, July 26, 2007

ஆத்தா ஆடு ,வளர்த்தா , கோழி வளர்த்தா .. பேரு வைச்சாங்களா...

அன்றாடம் நம் வீட்டிலும் சுற்றுபுறத்திலும் பார்க்கும் விலங்குகள் மற்றும் பறவைகளினை பொதுப்பெயரில் மட்டுமே பெரும்பாலோர் அறிந்து இருப்போம் அவற்றின் விஞ்ஞான பெயர்களை நினைவு கூர்வதில்லை, ஆத்தா வளர்த்த ஆடு ,கோழிக்கு என்ன அறிவியல் பேருனு தெரிஞ்சுக்கலாமா!

பொதுப்பெயர் - அறிவியல்ப்பெயர்

1)கோழி - கால்லஸ் டொமெஸ்டிகஸ் (Gallus domesticus)

2)வான்கோழி - மெல்லெக்ரிஸ் காலோபோவா (Melleagris gallopavo)

3)புறா - கொலம்பியா லிவியா ( Colombia livia)

4)வாத்து - ஆனஸ் பிளாடிரிங்கா(Anas platyrhyncha)

5)ஆடு - ஓவிஸ் ஏரிஸ் (Ovis aries)

6) செம்மறி ஆடு - கேப்ரா ஹிர்கஸ் (Capra hircus)

7) முயல் - ஒரிக்டோலாகஸ் க்யுனிகுலஸ ( Oryctolagus cuniculus)

8)பன்றி - சூஸ் க்ரோபா (Sus scrofa)

9) எறுமை - பபலஸ் பபாலிஸ் (Bubalus bubalis)

10)மாடு - போஸ் இன்டிகஸ் ( Bos indicus)

11) எருது - பைசன் பைசன் ((Bison bison)

12)குதிரை - ஈக்கஸ் கேபலஸ் (Equus caballus)

13) கழுதை - ஈக்கஸ் அசினஸ் (Equus asinus)

14) நாய் - கேனிஸ் பேமிலியாரிஸ் ( Canis familiaris)

15) பூனை - பெலிஸ் கேடஸ் (Felis catus)

கடைசியா சிங்கிளா வர சிங்கத்துக்கு பேரு தெரிஞ்சிக்காம போக கூடாதுல,

சிங்கம் - பேந்த்ரா லியோ (Panthera lio)

Wednesday, July 25, 2007

கணினி ஓவியம் - 3- கடல்புறா!

என்னைப்போல பெரிய பெயிண்டர்(பொங்கல் சமயத்தில் வீட்டுக்கு வெள்ளை அடிச்சிருக்கேன்ல) எல்லாம் களத்தில் இருக்கேனு தெரிஞ்சபிறகும் பலர் போட்டியில் குதித்து களத்தை சூடு ஏத்திக்கொண்டு இருப்பதால் இன்னும் கொஞ்சம் சிறப்பான ஒரு படம் காட்டலாம் என்று அடுத்த படைப்பை இறக்கியாச்சு. பார்த்து ரசியுங்கள்! புது புது வண்ணங்கள் படைப்பதால் நானும் பிரம்மனே!


கடல் புறானா வானத்தில் இருக்கும்னு நினைக்காதிங்க தண்ணில மிதக்குதே பாய்மரப்படகு அதான் என்னோட கடல்புறா!

மரத்தின் வயதினை அறிவது எப்படி!

(a car travel thru a giant redwood)

மனிதர்களின் வயதினை அவர்களது பிறப்பு சான்றிதழ் வைத்து அறியலாம், அது இல்லாதவர்களிடம் ஆண்டு, நாள் எல்லாம் அவர்கள் நினைவில் இருந்து சொல்வதை வைத்து தான் அறியவேண்டும், பலர் கப்சா விடக்கூடும் குறிப்பாக பெண்கள் வயதை குறைத்தே சொல்வார்கள்!

இப்படி எந்த சான்றும் இல்லாத , வாய் திறந்தும் பேசாத மரத்தின் வயதினை எப்படி கண்டுபிடிப்பது.உலகில் பல நூற்றாண்டுகண்ட மரங்கள் இன்றும் உயிரோடு உள்ளன.

சில மாண்புமிகு மனிதர்கள் நட்ட மரம் என்றால் பக்கத்தில் ஒரு பலகையும் நட்டுவைப்பார்கள். காட்டு மரங்களுக்கு அப்படி எதுவும் இருக்காதே!

மரங்களின் வயதைப்பற்றி ஆராயும் துறைக்கு டென்ரோகுரோனோலாஜி(Dendrochronology)

முதல் வழி நம்பகமானதும் செலவு பிடிக்க கூடியதுமான கார்பன் டேட்டிங். C-14(isotope) என்ற கார்பன் அணு சோதனை மூலம் வயதினை ஆண்டு,வினாடி சுத்தமாக சொல்ல முடியும்.

மற்ற முறை எளிய செலவு இல்லாத ஒன்று மரங்களில் காணப்படும் வருடாந்திர வளையங்கள்.எல்லா மரங்களிலும் குறுக்கு வாட்டில் அறுத்து பார்த்தால் பல வளையங்கள் இருக்கும் ஒரு வளையம் உருவாக ஒரு மரத்திற்கு ஒரு ஆண்டு ஆகும். இப்படி எத்தனை வளையங்கள் இருக்கிறதோ அத்தனை ஆண்டு வயதான மரம் என சொல்லலாம்!

வயதைக்கண்டுப்பிடிக்க எல்லா மரங்களையும் வெட்ட முடியாது எனவே மரத்தின் மையப்பகுதி வரை துளையிட்டு ஒரு சிறிய துண்டாக ஒரு மாதிரி எடுப்பார்கள், இதற்கு இன்கிரிமென்டல் போரர்(incremental borer) என்ற ஒரு குழல் போன்ற கருவி பயன்படுகிறது.

குழல் பகுதியை நன்கு முடுக்கி மரத்தின் உள்செலுத்துவார்கள் இதன் மூலம் மரத்தின் மையம் வரைஉள்ளப்பகுதி குழலின் உள் சேகரமாகிவிடும். அதனை எடுத்து வளையங்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பார்கள்.

இப்படி மரத்தின் வருடாந்திர வளையங்கள் மூலம் வயதை நிர்ணயிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை.1)துளையிடுவது மரத்திற்கு எந்தவகையிலும் சேதம் உண்டாக்கதவாறு இருக்க வேண்டும்.

2)விதையிலிருந்து மரம் உருவாகும் முதல் வருடத்தில் சிறு செடியாக இருக்கும் எனவே அப்போது எந்த வளையமும் உருவாகாது எனவே n+1 என வயது வரும்.

3)சில மரங்கள் ஏற்கனவே இருக்கும் மரத்தின் கிளைகளை நட்டு உருவான மரமாக இருக்கும் எனவே அதிலும் சில வலையங்கள் முன்னரே உருவாகி இருக்கலாம். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சில தோராயமாக வயதை அறியும் முறைகளும் இருக்கிறது.

மரத்தின் சுற்றளவை நமது மார்பளவு உயரத்தில் அளந்து கொண்டு அதில் இருந்து மரத்தின் விட்டம் ,ஆரம் கண்டு பிடிக்க வேண்டும்.

பின்னர் அதே வகை வேறொரு மரத்தின் ஆண்டு வளைத்தின் மாதிரியில் இருந்து ஒரு வளையத்தின் தடிமனை அளந்து கொள்ளவேண்டும்.ஒரே வகை சேர்ந்த மரங்கள் பெரும்பாலும் ஒத்த தடிமன் உள்ள வலையங்களையே உருவாக்கும். இப்போது நாம் கண்டுப்பிடிக்க வேண்டிய மரத்தின் ஆரத்தை வளையத்தின் தடிமனால் வகுத்தால் வருவது மரத்தின் வயது ஆகும்.

உதாரணம்:

மரத்தின் சுற்றளவு c = 2x22/7xR,
இதிலிருந்து R=50 இன்ச் என வைத்துக்கொள்வோம்
வளையத்தின் தடிமன் =0.5 இன்ச்
ஃ வயது= R/0.5= 50/0.5= 100 ஆண்டுகள்.

Tuesday, July 24, 2007

கணினி ஓவியம் - 2

கணினிப்போட்டிக்கு இன்னொரு படம் , கோயில் குளம்!

கணினி ஓவியம்!

சிந்தாநதி கணினிஓவியப்போட்டி நடத்துவதால் நமது கிறுக்களையும் அனுப்ப வாய்ப்பு கிடைத்து விட்டது, கண்ணை பதம்பார்க்கும் படம் இதோ!

The water falls!

Monday, July 23, 2007

ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி?

மேட்டுர் அணைக்கு 10 tmc தண்ணீர் கர்னாடக திறந்து விட்டது என்றெல்லாம் செய்திதாள்களில் படித்து இருப்பீர்கள் , அவர்கள் எப்படி 10 tmc சரியாக திறந்து விட்டார்கள் , அல்லது நாம் தான் 10 tmc சரியாக வந்ததா என்று அளந்து சரி பார்ப்பது எப்படி , ஆற்றில் வரும் தண்ணீரை எப்படி அளப்பார்கள் என்றெல்லாம் சந்தேகம் வந்து இருக்கும் உங்கள் அனைவருக்கும்.

ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி?, tmc என்றால் என்ன ?, நீரை கன அளவுகளில் தான் சொல்வார்கள் லிட்டர் என்பதெல்லம் சிறிய அளவுக்கு அதிகம் எனில் கன அடிகளில் , நீர் வெளியேறும் வேகத்தை கியூசெக்(cusec= cubic feet per sec)), எத்தனை கன அடி நீர் ஒரு வினாடியில் வெளி ஏறுகிறது எனக்கணக்கிடுவார்கள்.tmc(thousand million qubic feet) என்றால் ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.ஒரு கன அடியில் 28.3 லிட்டர் இருக்கும்.

ஒரு நதி அல்லது கால்வாயில் ஓடும் நீரின் அளவை கணக்கிட சில முறைகள் உள்ளது.

சிறிய அளவில் அளப்பதற்கு நீர் கரன்ட் மீட்டர் பயண்படும் சாதாரணமாக வீட்டில் குடிநீர் இணைப்பில் இது போன்ற கருவி பொருத்தப்பட்டிருக்கும் ,

பெரிய அளவில் அளக்க ,

1)வெயர் முறை(weir method)
2)டாப்ளர் முறை பயன்படும்!
வேறு சில முறைகளும் உள்ளது, பெரிதும் பயன்படுவது இவையே!

வெயர் முறை என்பது வேறொன்றும் இல்லை, தண்ணீர் வெளியேறும் வாயிலின் கனப்பரிமானங்களை கணக்கிடுவதே.

உதாரணமாக கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் அளவில் ஒரு திறப்பு மட்டும் இருக்கும் , எனவே ஒரு வினாடிய்ல் அந்த திறப்பின் மூலம் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட்டால் போதும் ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிடலாம்.

கொஞ்சம் பெரிய கால்வாய்களில் இது போன்ற திறப்பை பெரிதாக வைத்து
உயரத்தை அளவிட்டு விடுவார்கள்

(weir construction)
இத்தனை அடி உயரத்தில் நீர் போனால்
இவ்வளவு தண்ணீர் பாய்ந்துள்ளது எனக்கணக்கிடுவார்கள்.

காவிரி போன்ற பெரிய நதிகளில் இப்படி அணைக்கட்டாமல் , ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்து எடுத்து அங்கே நதியின் அகலம் , ஆழம் எல்லாம் கணக்கிட்டு உயரத்தை காட்ட ஒரு பெரிய கம்பத்தில் அளவிட்டு நட்டு விடுவார்கள் எத்தனை அடி உயரம் தண்ணீர் எவ்வளவு நேரம் அக்குறிப்பிட்ட இடத்தை கடந்து சென்றது எனக்கணக்கிட்டு மொத்த நீர் பாய்ந்த அளவை கண்டுபிடிப்பார்கள்.

இதிலும் நவீன முறை டாப்ளர் ராடார் பயன்படுத்துவது.

உயரமான இடத்தில் (அ) அணைக்கட்டின் மீதே டாப்ளர் ரேடார் எனப்படும் ஒலியை அனுப்பி மீண்டும் திரும்ப வாங்கும் கருவியை பொருத்தி விடுவார்கள். இந்த ரேடார் நீரோட்டத்தின் வேகத்தை கணக்கிட மட்டுமே, மற்றபடி நதியின் அகலம் ,ஆழம் கடக்கும் வேகம் இதனை கொண்டு நீரின் கன அளவை கண்டு பிடித்துகொள்வார்கள்.

நதியின் அடிமட்டத்தில் மேடு பள்ளங்கள் இருக்கும் அதன் விளைவாக நீரின் மேற்பறப்பில் வேகம் ஒரு இடத்தில் அதிகமாகவும் ஒரு இடத்தில் குறைவாகவும் காட்டும் , இதனை ரேடாரில் பதிவு செய்வது கடினமாக இருக்கும். எனவே நதியின் குறுக்கே குறைந்த மட்ட அணை ஒன்றைக்கட்டுவார்கள் இது எப்படி இருக்கும் எனில் நீர் மட்டத்தில் ஒரு சுவர் போல இருக்கும் அதன் மீது நீர் வழிந்தோடும் எனவே அக்குறிப்பிட்ட இடத்தில் நீரின் மேற்பறப்பு சமமாகவும் , ஒரே வேகத்திலும் இருக்கும். எதிரொலிக்க வசதியாக நீரில் சில எதிரொலிக்கும்
பொருட்களையும் மிதக்க விட்டு அனுப்புவார்கள் , டாப்ளர் ரேடார் அனுப்பும் ஒலியை அவை கன கச்சிதமாக எதிரொலித்து அனுப்பும் எனவே துல்லியமாக நீரோட்டதின் வேகத்தை கணக்கிடலாம், அதைக்கொண்டு மொத்தமாக பாயும் நீரின் கன அளவை சொல்வார்கள்.
( low head dam)


பிள்ளிகுண்டு என்ற இடத்தில் கர்நாடக மேட்டூர்க்கு அனுப்பும் நீரை இப்படி அளந்து அனுப்பும் , அதனை நாம் மீண்டும் மேட்டுரில் அளந்து பார்ப்போம்.இரண்டு அளவிற்கும் 20 சதவித ஏற்ற தாழ்வு(அவர்கள் 10 tmc அனுப்பினால் இங்கே 8 tmc தான் காட்டுகிறதாம்) இருப்பதாக ஒரு தனி தாவா வேறு இருக்கிறது.

உபரி தகவல் மேட்டூர் அணை(length- 1700 m, height 120 ft) என்று சொன்னாலும் அதற்கு பெயர் ஸ்டான்லி நீர் தேக்கம் ஆகும் . மொத்த கொள்ளளவு 93.4tmc.

Saturday, July 21, 2007

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்!


விமானத்தை கண்டு பிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள்னு எல்லாரும் படிச்சு இருப்பிங்க ஆனா அவர்களுக்கு முன்னரே விமானத்தை கண்டு பிடித்து இருக்காங்க சிலர் அதனை மேம்படுத்தி ஒரு உருப்படியான செயல் வடிவம் தந்தது தான் ரைட்ஸ் வேலை.

வரிசையா விமானக்கண்டு பிடிப்பில் ஈடுபட்டவர்களை பார்ப்போம்!

1)பறக்கும் எந்திரம் பற்றி முதலில் பிள்ளையார் சுழி போட்டது லியோனார்டோ டாவின்சி தான்(france) அவர் ஓவியர் மட்டும் அல்ல ஒரு கண்டுபிடிப்பாளரும் கூட ,

2) சர் ஜார்ஜ் கேய்ல் (england)என்பவர் ஆர்னிதாப்டர் என்ற பறக்கும் எந்திரம் வடிவமைத்தார்.

3)W.Sஹென்சன் (england) என்பவர் மோனொ பிளேன் என்று ஒன்றை வடிவமைத்தார்.

4)கிளமென்ட் ஆடர் (france) என்பவர் நீராவி மூலாம் ஒரு விமானத்தை 50 மீட்டர் தூரம் பறக்கவைத்தார்.

5)ஓடோ லிலிந்தால் (german)என்பவர் கிளைடர் மூலம் வானில் பறந்து காட்டினார்.

6)இதன் பின்னரே ரைட் சகோதரர்கள்(america) தங்கள் முயற்சியில் இறங்கினார்கள் , கிட்டி ஹாக் , வடக்கு கரோலினா பகுதியில் முதல் பறக்கும் எந்திரத்தை பறக்க விட்டார்கள். அது பை பிளேன் எனப்படும் , 500 மீட்டர்கள் வரைக்கும் பறந்தது , பின்னர் அரை மணி நேரம் வானில் பறந்து காட்டினார்கள், இதன் பின்னறே விமானங்களின் வளர்ச்சி முழு வீச்சை எட்டியது.

விமானம் பறக்ககாரணம் , ஒரு விமானத்தின் மீது செயல்படும் விசைகள் என்னவெனப்பார்ப்போம்!1) மேல் தூக்கும் விசை(lift),

இந்த விசை விமானத்தின் இறக்கைகளின் வடிமைப்பினால் பெறப்படுகிறது. இறக்கையானது மேல் புறம் வளைந்து காணப்படும் அதனால் காற்றில் ஒரு அழுத்த வித்தியாசம் உருவாக்கப்படும். மேல் புறம் அழுத்தம் குறையும் அதே சமயத்தில் இறக்கையின் கீழ்புறம் அழுத்தம் மிகும். எனவே இறக்கைப்பறப்பு மேல் நோக்கி தூக்கப்படும் அதனால் விமானம் மேல் கிளம்ப்பும் , இது விமான எடையை சமன் செய்ய வேண்டும்.அப்போது தான் தொடர்ந்து விமானம் காற்றில் மிதக்கும்.

2) அதற்கு எதிறாக கீழ் நோக்கி செயல்படும் எடை(weight)

3) முன்னோக்கி செயல்படும் உந்து சக்தி(thrust)
இது விமானத்தின் மூக்கில் உள்ள புரோபெல்லர்கள் சுழல்வதால் கிடைக்கிறது ... ஒரு எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன் எப்படி காற்றை உள் இழுக்கிறதோ அப்படி செயல்படும் அதன் மூலம் விமானம் முன்னோக்கி நகர்த்தப்படும்.

4) இதற்கு எதிறாக பின்னோக்கி செயல்படும் இழுவை சக்தி(drag)

காற்றோடு விமானம் உரசுவதால் ஏற்படும் பின்னோக்கிய இழுவை சக்தி இது , இதனை உந்து சக்தி சமன் செய்ய வேண்டும்.

மேல்நோக்கி செயல்படும் விசை விமான இறக்கை மூலம் எப்படி பெறப்படுகிறது என்பதை விளக்கமாக பார்ப்போம்,

இது இரண்டு விதிகளின் படி விளக்கபடுகிறது ,

1) பெர்னோலி விதி,
2) நியூட்டன் இரண்டாவது இயக்கவியல் விதி!

பெர்னோலி விதிப்படி ...

1)வேகமாக ஒரு திரவம் செல்லும் போது அழுத்தம் குறையும்,

2)ஒரு நீர்மம் ஒரு குறிப்பிட்ட சூழலில் இரண்டாக பிரிக்கும் போது இரண்டும் சம தூரத்தை சம நேரத்தில் கடக்கும்.

எனவே பெர்னோலி விதியை செயல்ப்படுத்தும் ஒரு கட்டமைப்பு காற்றில் மிதக்கும்,இதனை காற்றுச்சட்டம் (ஏர் பிரேம்/ஏர் ஃபாயில்) என்பார்கள். இதற்காக விமானத்தின் இறக்கை மேல்புறம் குவிந்து வளைவுடன் இருக்கும் அதனால் மேல்புறம் அதன் பரப்பளவு அதிகமாக இருக்கும்  அதே சமயம் கீழ்புற்ம் சமமாக இருக்கும், எனவே  குறைந்த பறப்பு!

எனவே இறக்கையின் முன்புறம் மோதும் காற்று இரண்டாக பிரிந்து செல்லும் போது மேல் செல்லும் காற்று அதிக தூரத்தை கடக்க நேரிடும் , அதே நேரத்தில்  கீழ் செல்லும் காற்று குறைந்த தூரம் கடக்கும் , ஆனால் இரண்டும் இறக்கையின் பின் புறம் ஒரே நேரத்தில் சந்திக்க வேண்டும்.

எனவே தானகவே மேல் செல்லும் காற்றின் வேகம் அதிகரிக்கும், அதனால் குறைந்த அழுத்தம் உண்டாகும் அதனுடன் ஒப்பிடுகையில் கீழ் செல்லும் காற்று அழுத்தம் அதிகம் இருக்கும் எனவே இறக்கையின் மீது மேல் நோக்கி ஒரு விசையை உண்டாக்கும்.

இந்த விசையை அதிகரிக்க காற்று இறக்கையின் மீது மோதும் கோணத்தை அதிகரிப்பதன் மூலம் அதிக விசைய பெற செய்யலாம்.

நியூட்டனின் விதிப்படி ,விசை = முடுக்கம்xநிறை,
கீழ்புறம் செல்லும் காற்றினை கீழ் நோக்கிய கோணத்தில் திசை திருப்பினால் மேலும் லிப்ட் கிடைக்கும்.

எனவே கீழ் செல்லும் காற்றின் அளவை அதிகரித்தும் , அதனை கீழ் நோக்கிய கோணத்தில் இடப்பெயர்ச்சி செய்ய வைக்க வேண்டும். எவ்வளவு காற்று கீழ் நோக்கி இடப்பெயர்ச்சி செய்றதோ அவ்வளவு எடையை மேல் நோக்கி நகர்த்த முடியும்.

இதனை அதிகரிக்க விமான இறக்கைகளின் பின் விளிம்பில் நகரும் தன்மையுள்ள நீள்ப்பட்டிகள் (எயிலிரான்)இணைக்கபட்டு இருக்கும்.

விமானத்தின் மீது மோதும் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் லிப்ட் அதிகம் கிடைக்கும் என்பதால் தான் விமானம் பறப்பதற்கு முன் வேகமாக ஓட்டப்படுகிறது.

மேல் எழும்பி பறக்க ஆரம்ப்பித்ததும் முன் செலுத்தும் விசை ப்ரொபெல்லர்கள் மூலம் பெறப்படுகிறது.

மேல் எழும்ப ,கீழ் இறக்க .. இறைக்கைகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டிகளை மேல்/ கீழ் நோக்கி நகர்த்துவன் மூலம் செய்யலாம்!

இடம், வலமாக திரும்ப வால்ப்பகுதியில் உள்ள செங்குத்தான அமைப்பு, ரட்டர் எனப்படும் அதனுடன் இணைந்த பட்டிகளை இடது வலதாக திருப்புவதன் மூலம் திருப்பலாம்.

மேற்சொன்ன தத்துவத்தின் அடிப்படையிலேயே நவீன விமானங்கள் உட்பட அனைத்தும் வானில் வட்டமிடுகின்றன.வாய்ப்பு கிடைத்தால் வானில் பறந்துப்பாருங்கள்!

----------------

பட்டம் பற ... பற ... எப்படி பறக்கிறது...

சின்ன வயதில் எல்லோரும் பட்டம் பறக்க விட்டு இருப்பீர்கள், அப்படி பறக்க விட்ட எல்லாரும் ஒருவகையில் வானூர்தி பொறியாளர்கள் தான். பட்டம் பறக்க என்ன தத்துவமோ அதன் அடிப்படையில் தான் விமானங்கள் பறக்கிறது. ரைட் சகோதரர்கள் கூட தங்களது விமான மாதிரி செய்வதற்கு முன் பட்டம் பறக்கவிட்டு தான் பறத்தல் குறித்தான சந்தேகங்களை தீர்த்துக் கொண்டார்கள்!

பட்டம் பற ... பற ... எப்படி பறக்கிறது...

பட்டம் என்பது சதுரமான ஒரு காகிதம் அதன் மீது ஒரு புறம் இருந்து வேகமான காற்று மோதுகிறது ... அப்படி மோதும் காற்று தடைப்பட்டு தொடர முடியாது ஆனால் பட்டம் தவிர்த்த பகுதிகளில் காற்று கடந்து செல்லும் எனவே பட்டத்தின் நேர் பின் புறம் காற்றின் அழுத்தம் குறையும் எனவே முன் பகுதியில் உள்ள கூடுதல் காற்ரழுத்தம் காரணமாக ஏற்படும் விசை பட்டத்தினை பின் நோக்கி தள்ளும்...அதே சமயம் பட்டம் தறைக்கு ஒரு கோணத்திலும் இருப்பதால் அதே கோணத்தில் காற்று செல்லும் அதனை தொடர்ந்து பட்டமும் மேல்னோக்கி தூக்கப்படும்.

இப்படியாக பட்டம் பறக்க ஆரம்ப்பிக்கிறது எளிதாக தெரிந்தாலும் இதன் அடிப்படை தான் விமானம் இயங்க காரணம்.

பெர்னோலி என்பவரின் நீர்மவியல் விதி இதில் செயல்படுகிறது
சுருக்கமாக அதனைப் பார்ப்போம்,

அழுத்தம் + இயக்க ஆற்றல்/ பருமன் = மாறிலி

இது தான் பெர்னோலியின் தத்துவத்தின் சூத்திர வடிவம்
{v^2 \over 2}+gh+{p \over \rho}=\mathrm{constant}

where:

v = fluid velocity along the streamline
g = acceleration due to gravity
h = height of the fluid
p = pressure along the streamline
ρ = density of the fluid
எந்த ஒரு பொருள் அதன் எடைக்கு சமமான காற்றினை இடப்பெயர்ச்சி செய்கிறதோ அதனால் பறக்க முடியும் , மனிதனால் அவன் எடைக்கு இணையான காற்றினை இடப்பெயர்ச்சி செய்ய முடியுமானால் பறவை ஆகலாம்.நீரில் நீந்துவதும் இப்படி தான்! பறவைகள் அத்னால் தான் எடைகுறைவாக , குழல் போன்ற எலும்புகளும், கொண்டு உள்ளது எனவே எளிதாக பறக்க முடிகிறது.
விமானம் பறப்பதை பிறகு பார்ப்போம்!

Thursday, July 19, 2007

நினைவிருக்கும் வரை...

என் நினைவுகளின்

ஆக்டோபஸ் கரங்கள்

கடந்த காலம் ,

நிகழ் காலம்

எதிர்காலம் என

எல்லா திசைகளிலும்

துழாவி என் இருப்பை

நினைவுருத்துகிறது

என் விருப்பமின்றி!

என்னையே தொலைத்த தருணங்களிலும்

நான் என்ற

என் நினைவைத்தொலைத்ததில்லை!

கசப்போ ,இனிப்போ எனது எண்ணங்களின் தொகுப்பே

என்னை தாங்கி நிற்கும் வேர்கள்!

என்றாவது என் நினைவுகள்

மரிக்கலாம்

எனவே என் நினைவுத்தடங்களை

விட்டு செல்கிறேன் இவ்விடம்!

சூப்பர் ஸ்டார்களின் நட்சத்திர கூட்டம்!

நட்சத்திரங்களை ஒரு குழுவாக சேர்த்து அதன் வடிவம் ,தூரம், இயல்புக்கு ஏற்றார்போல பிரித்து நட்சத்திர கூட்டங்கள் என பெயரிட்டு அழைக்கிறார்கள், இது வரை 88 நட்சத்திரக்கூட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 12 மட்டுமே ஜாதகவியல் அடிப்படையில் ராசி நட்சத்திர கூட்டங்கள் எனப்படுகிறது.

சோடியாக் என்பது "zoo" அதாவது விலங்குகள் கூட்டம் என்பதிலிருந்து வந்தது "circle of animals "என்பார்கள்
12 இல் 10 பெயர்கள் விலங்கு பெயர்கள் என்பதை நினைவில் கொள்க!

சரி எதற்கு 12 நட்சத்திரக்கூட்டம் மட்டும் ஜோதிடவியல் எடுத்துக்கொண்டது , பூமி சூரியனை சுற்றிவருவதை ஒரு வட்டம் என எடுத்துக்கொண்டால் , வட்டத்தின் மொத்த டிகிரிகள் 360 அதை தலா 30 டிகிரிகள் எனப்பிரித்தால் 12 வரும் , 30 டிகிரி அளவுக்கு வட்டப்பாதையில் பூமி கடக்க ஒரு மாதம் வரும். எனவே 12 மாதம் , 12 ராசி நட்சத்திரக்கூட்டம். எனவே தான் ஜோதிடர்கள் ஒவ்வொரு மாதமும் சூரியன் இந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறான் என்பார்கள்.

ராசி நட்சத்திர கூட்டங்கள்!

தமிழ் - ஆங்கிலம்

1)மேஷம் - ஏரிஸ்
2)ரிஷபம் - டாரஸ்
3)மிதுனம் - ஜெமினி
4)கடகம் - கேன்சர்
5)சிம்மம் - லியோ
6)கன்னி - விர்கோ
7)துலாம் - லிப்ரா
8)விருட்சிகம் - ஸ்கார்பியன்
9)தனுஷ் - சாஜிட்டரியஸ்
10)மகரம் - கேப்ரிகார்ன்
11)கும்பம் - அக்குவரிஸ்
12) மீனம் - பிஸ்செஸ்

மூல நட்சத்திரங்கள் மொத்தம் 27 அவற்றின் தமிழ் பெயர்களும், வானவியல் பெயர்களும். சமஸ்கிருதத்தில் சூட்டப்பட்ட பெயர்களை தான் தமிழிலும் பயன்படுத்துகிறோம் ,தமிழில் தனியே பெயர்கள் இருக்கிறதா? தெரிந்தால் கூறுங்கள்.

1)அஷ்வினி - ஷெராடன்(பீட்டா ஏரிட்டிஸ்)

2)பரணி - 35 - ஏரிடிடிஸ்

3)கிரித்திகா - அல்சியோன்

4)ரோகினி - அல்டிப்ரான்

5)மிருக ஷீர்ஷம் - ஹேகா

6)அர்த்ரா - அல்ஹேனா

7)புனர்வாசு - கேஸ்டர் மற்றும் போல்லக்ஸ்

8)புஷ்யா - டெல்டா கேன்ரி

9)ஆஷ்லேஷா - எப்சிலான் ஹைட்ரா

10)மஹா - ரெகுலஸ்

11)பூர்வ பால்குனி - ஸோஸ்மா

12)உத்தர பால்குனி - டேன்போலா

13)ஹஸ்தம் - டெல்டா கார்வி

14)சித்ரா - ஸ்பிகா

15)ஸ்வாதி - ஆர்க்டஸ்

16)விசாகா - ஸூபென் எல்ஜெனுபி

17)அனுராதா - ஸ்சூபா

18)ஜேஷ்தா - அன்டாரெஸ்

19)மூலம் - ஷாவ்லா

20)பூர்வஷதா - டெல்ட்டா சாஜிட்டாரி

21)உத்ர ஷதா - ஸிக்மா சாஜிட்டாரி

22)ஷ்ரவன் - ஆல்டாய்ர்

23)தனிஷ்தா - ரோடனேவ்

24)ஷத தாரகா - லாம்ப்ட அக்வாரி

25)பூர்வ பத்ர பாதம் - மார்காப்

26)உத்ர பத்ர பாதம் - அல்ஜெனிப்

27)ரேவதி - -ஸீடா பிஸ்ஸியம்

Tuesday, July 17, 2007

ஓடு பாதை இல்லாமல் மேலெழும்பும் விமானங்கள்!

( விமானம் தாங்கி கப்பலின் ஓடு தளம்!)


சென்னைக்கு அமெரிக்காவின் USSநிமிட்ஸ் CVN- 68 என்ற அணு ஆற்றல் விமானம் தாங்கி கப்பல் வந்து சென்றதை அனைவரும் அறிவார்கள். சாதாரணமாக நீண்ட ஓடுபாதை தேவைப்படும் விமானங்கள் எப்படி ஒரு கப்பலின் மேல் தளத்தில் உள்ள குறுகிய பறப்பில் இருந்து பறக்கிறது என தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும். இதற்காக சில சிறப்பு உத்திகளை பயன்படுத்துகிறார்கள்.

முதல் விமானம் ஒரு கப்பலின் மேல் தளத்தில் இருந்து பறந்தது 1910 ஆம் ஆண்டு நவம்பர் 14 அன்று USS பிர்மிங்காம் என்ற கப்பல் தளத்தில் இருந்தே , விமானத்தை ஓட்டியவர் யூஜென் எலி(eugene ely) என்பவர். கப்பல் மேலிருந்து ( முதல் விமானம் தாங்கி USSபர்மிங்காம் கப்பல்.)

கிளம்பியதும் கிட்டத்தட்ட கடலில் விமானம் விழுந்து பின்னர் திறமையாக தண்ணீர் பறப்பை முத்தமிட்ட விமானத்தை மேலே கிளப்பிக்கொண்டு சென்று விட்டார்.மொத்தம் 5 நிமிடங்கள் மட்டும் பறந்தாலும் சரித்திரம் படைத்து விட்டார்.

விமானாம் தாங்கி கப்பல்கள் சாத்தியம் என்பதை இதன் பின்னரே உணர்ந்து ராணுவத்தில் பயன்படுத்தப் பட்டது.

சாதாரணமாக 3000 - 4000 மீட்டர் ஓடுதளம் தேவை ஆனால் மிகப்பெரிய கப்பல் ஆனா நிமிட்சில் உள்ள ஓடுதளம் 320 மீட்டர் தான் எனில் எப்படி விமானங்கள் குறுகிய தூரத்தில் மேல் கிளம்பும்?( நேரான ஒரு ஓடுபாதை படம்)

ஆரம்ப்பத்தில் இலகுவான போர்விமானங்களை மேலே கிளப்ப சற்றே சாய்வான ஓடு தளம் அமைத்தார்கள், அதன் மூலம் கூடுதல் விசை கிடைக்கப் பெற்றது.
(சாய்வான ஓடுபாதை படம்.)

அதிக ராணுவ தளவாடங்கள் ஏற்றி செல்லும் போது இவ்விசை பற்றவில்லை, எனவே கவன்கல் நுட்பம்(catapult)
எனப்படும் ஒரு உத்தியை பயன்படுத்தி மேலே கிளப்பினார்கள்.

கப்பல் மேற்தளத்தில் உள்புதைந்த வாறு ஒரு பிஸ்டன் போன்ற அமைப்பு இருக்கும் அதனுடன் விமானத்தின் சக்கரங்கள் இணைக்கப்பட்டிருக்கும் ,அந்த பிஸ்டன் மிகவேகமா முன் செல்லும் அதனுடன் இனைந்த விமானமும் முன் எடுத்து செல்லப்படும் , விசையுடன் உந்தி தள்ளிவிட்டு இணைப்பு விடுவித்துக்கொள்ளும்.

இதிலும் நவினமாக லீனியர் மோட்டார் இழுவை என்ற உத்தியும் பயன்படுகிறது ,இதன் அடிப்படையில் தான் புல்லட் டிரெயின்கள் வேகமாக இயங்குகிறது.

இது போன்ற முறைகள் இல்லாமல் சில சிறிய ராக்கெட்டுகளை விமானத்தின் பக்கவாட்டில் பொருத்தி குறைந்த தூரத்திலும் மேல கிளப்புவார்கள்(RATO = rocket assisted take off). இத்தகைய ராக்கெட்டுகளுக்கு பூஸ்டர் ராக்கெட் என்பார்கள்.
(ராக்கெட் உதவியுடன் மேலெழும்பும் விமானம்!)

அப்துல்கலாம் இந்திய விமானப்படைக்காக இந்தியாவிலேயே பூஸ்டர் ராககெட்டுகளை வடிவமைத்ததில் ஈடுபட்டவர். பின்னாளில் அந்த பூஸ்டர் ராக்கெட்டுகள் தான் அக்னி ஏவுகணைகளாக மேம்படுத்தப்பட்டது. அக்னி சிறகுகள் புத்தகத்தில் இது பற்றி விரிவாக எழுதியுள்ளார் கலாம்.

இதே போன்று ஜெட் உதவியுடன்


விமாங்கள் மேலே கிளப்புவதும் உண்டு. (JATO = jet assisted take off)

இது சாதாரணமாக வடிவமைக்கப்பட்ட போர் விமானங்களை குறைந்த தூரத்தில் மேலே கிளப்புவது . ஆனால் இது போன்று ஓடுபாதையே இல்லாத இடத்திலும் மேலே கிளம்பும் வகையில் வடிமைக்கப்பட்ட சிறப்பு விமானங்களும் உள்ளது அவை வெர்டிகலாக மேலே கிளம்பும் ஹெலிகாப்டர்கள் போன்று, அவற்றின் மூக்கிலும் பெரிய புரொபெல்லர்கள் இருக்கும்.

மின்காந்த சக்தி கொண்டு விமானத்தை செலுத்தும் முறை ஒன்று ஆய்வில் உள்ளது , பரிசோதனைகள் வெற்றி அடைந்தால் அம்முறையில் போர் விமானங்கள் குறைந்த தூரத்தில் மேல் கிளம்பும்!

Thursday, July 12, 2007

கடலில் அலையடித்தால் வீட்டில் விளக்கெறியுமா?

கடலில் அலையடித்தால் வீட்டில் விளக்கெறியுமா?

மின்சாரம் இல்லாத உலகில் இனி மனிதன் இருக்க மாட்டான் , நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக்கொண்டேயுள்ளது , பொறக்கும் போதே கைல செல்ஃபோன், கம்பியூட்டர் நு தான் பொறக்குறாங்க இப்போ, எல்லாத்துக்கும் மின்சாரம் வேணுமே, அரசு இலவச மின்சாரம் தருமா? அதுக்கு எங்கே போகும், ஆனால் கடல் தரும் மின்சாரம் அதுவும் இலவசமா, இது ஒரு மின்சார கனவு இல்லை , உண்மை!

பொதுவா மின்சாரம் , அனல் ,புனல்( எண்ணை ஊத்துற புனல் இல்லிங்கோ), அணு மின்சாரம் எனத்தான் தயாரிக்கப்படுகிறது , இவைகளால் பல சுற்று சூழல் மாசு ஏற்படுவதால் , தற்போது மரபு சாரா மின் உற்பத்தி பக்கம் அரசாங்கம் திரும்பியுள்ளது.

அப்படி மரபு சார மின்சார தயாரிப்புகளில்,

காற்றாலை,
சூரிய சக்தி ,
புவி வெப்ப சக்தி ,
கடல் அலை மின்சாரம் என தயரிக்கப்படுகிறது.

இப்பொ அலை அடிச்சா ஷாக் அடிக்கும் மின்சாரம் எப்படினு வருதுனு லேசா பார்ப்போம்!

கடலும் ,ஆறும் சந்திக்கும் இடங்கள் , அல்லது கடலை ஒட்டியுள்ள கடல் நீர் ஏரிகள்(லகூன்)
ஆகியவற்றில் ஒரு தடுப்பணைக்கட்டுவார்கள் அதில் ஒரு வாய்க்கால்,அல்லது குழாய்களை அமைத்து அதனுடன் டர்பைன் பொருத்தி அதனைக்கொண்டு மினுற்பத்தி செய்வார்கள்.இதனல் சில சுற்று சூழல் பாதிப்பு உண்டு , கழிமுகஙளில் வரும் பறவைகள் ,மற்றும் அது சார்ந்த உயிர் மண்டலம் பாதிக்கப்படும்.

இதனை தவிர்க்க கடலில் அலை மின்சார உற்பத்தி மைங்களை தற்போது அமைக்கிறார்கள்.

நடுக்கடலில் தூண்களை அமைத்து அதனுடன் டர்பைன் மற்றும் ஜெனெரேட்டர்கள் பொருத்தி நீர் அடி நீரோட்டத்தின் விசையை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள், இதிலும் ஒரு மேம்பாடு செய்து நீரில் மூழ்கி இருக்கும் டர்பைன்களும் அமைக்கிறார்கள்.நல்ல கடல் அடி நீரோட்டம் ,அலையடிக்கும் இடங்களில் மிக பெரிய அளவில் மின்னுற்பத்தி செய்யலாம்.

நிலவுக்கும் பூமிக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பு சக்தி மாறுபாடுகளினால் அலை உற்பத்தி ஆகிறது எனவே ஒரு முறை அமைத்து விட்டால் காலா காலத்திற்கும் இலவச மின்சாரம் தான்!

என் கடல் நிறைவதில்லை!

மழைக்காலங்களில்

குளங்கள் நிரம்பி வழிகின்றது

ஏரிகள் நிரம்பிவழிகின்றது !

ஆறுகள் பெருக்கெடுத்தோடுகின்றன

எல்லா மழைகாலங்களிலும்

கடல் மட்டும்

காத்திருக்கிறது எல்லா பெருமழையையும்

பேராவலுடன் பெற்றுக்கொள்ள!

நானும் அப்படித்தான்!

அன்றும் இன்றும்!

ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டகாலத்தில் அவர்களது தாக்கதின் விளைவாக நம் நகரங்கள் மற்றும் தெருக்க்களுக்கு அவர்கள் பெயரை வைத்து சென்று விட்டார்கள் தற்போது அந்த பெயர்களுக்கு நம்மவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது சென்னையில் அவ்வாறு பெயர் மாற்றம் பெற்ற தெருக்களின் பட்டியலைப்பார்ப்போம்!

மவுண்ட் ரோட் - அண்ணா சாலை

பூனமல்லி ஹை ரோட் - பெரியார் ஈ.வி.ஆர் சாலை

எட்வர்ட் எல்லியட்ச் ரோட் - டாக்டர்.ராதா கிருஷ்ணன் சாலை

எல்லியட் பீச் ரோட் - சர்தார் படேல் சாலை

மவ்பரிஸ் ரோட் - டி.டி.கே சாலை

கமாண்டர் இன் சீப் ரோட் - எத்திராஜ் சாலை

நுங்கம்பாக்கம் ஹை ரோட் - உத்தமர் காந்தி சாலை

வாரென் ரோட் - பக்தவசலம் சாலை

லாயிட் ரோட் - அவ்வை ஷண்முகம் சாலை

ஆலிவர் ரோட் - முசிரி சுப்ரமணியம் சாலை

மான்டியத் ரோட் - ரெட் கிராஸ் சாலை

பைகிராப்ட்ஸ் ரோட் - பாரதி சாலை

பர்ஸ்ட் லைன் பீச் ரோட் - ராஜாஜி சாலை

ராயபேட்ட ஹை ரோட்- -திரு.வி.க சாலை

லாட்டிஸ் பிரிட்ஜ் ரோட் - டாக்டர் முத்து லஷ்மி சாலை மற்றும் கல்கி. கிருஷ்ண மூர்த்தி சாலை

சேமியர்ஸ் ரோட் - பசும்பொன்.முத்துராமலிங்கம் சாலை.

கிரிபித் ரோட் - மகா ராஜபுரம் சந்தானம் சாலை

வால் டாக்ஸ் ரோட் - வ.வு.சி சாலை.

ஆர்காட் ரோட் - என்.எஸ்.கே சாலை

உங்களுக்கு தெரிந்த பெயர் மாறிய சாலைகளையும் சொல்லுங்கள். அப்படியே முடிந்தால் இந்த சாலைகள் இருக்கும் இடத்தை சொல்லுங்கள் பார்ப்போம்!

Wednesday, July 11, 2007

பெயரின் மறுபக்கம்!

1)P.T.உஷா - "பிளவுல்லகண்டி தெக்க பரம்பில் ".உஷா

2)S.P.பால சுப்ரமணியம் - " ஷ்ரிபதி பண்டித ராயுல ".பாலசுப்ரமணியம்.

3)K.J.ஏசுதாஸ்- "கட்டசேரி ஜோசப்". ஏசுதாஸ்.

4)A.R. ரஹ்மான் - "அல்லா ரக்கா. ரஹ்மான்" (அ) A.S. திலிப் குமார்

5)M.S.சுப்புலஷ்மி - மதுரை சுப்ரமணி அய்யர் .சுப்பு லஷ்மி

6)மனோ - நாகூர் பாபு

7)P.B. ஷ்ரினிவாஸ் - "பிரதிவாதி பயங்கரம் "ஷ்ரினிவாஸ்

8)மணிரத்னம் - "கோபால ரத்னம்" சுப்ரமணியன்

9)பாரதி ராஜா - P.சின்னசாமி

10)K.பாலசந்தர் - கைலாசம் பாலசந்தர்

11)சிரஞ்சீவி - கோனிடேலா சிவசங்கர வர பிரசாத்.

12)N.T.ராமா ராவ் - "நந்த மூரி தாரக".ராமராவ்

13)S.V.ரங்கா ரவ் - "சாமர்லா வெங்கட்ட" ரங்கா ராவ்

14)T.R.பாப்பா - சிவசங்கரன்

15)L.R. ஈஷ்வரி - "லூர்து மாரி" ஈஷ்வரி

16)S.G. கிட்டப்பா - செங்கோட்டை கங்காதர கிட்டப்பா

17)M.R.ராதா - மெட்ராஸ் ராஜகோபால. ராதா கிருஷ்ணன்.

18)சின்னி ஜெயந் - கிருஷ்ணமூர்த்தி நாரயணன்.

19)V.V.S.லஷ்மண் - வங்கி பரப்பு வெங்கட் சாய் லஷ்மண்

20)கவாஸ்கர் - சுனில் மனோகர் கவாச்கர்

21)கபில் தேவ் - கபில் தேவ் ராம்லால் நிகாஞ்

இன்னும் பல பெயர்களின் பின்புலம் பற்றி தேடிக்கொண்டுள்ளேன் , தெரிந்தவர்கள் கூறலாம் , உதாரணமாக ,எம்.எஸ்.விச்வநாதன், எம்.கே.டி., டி.எம்.சவுந்தர் ராஜன் போன்றோரின் பெயர்களுக்கு.

Monday, July 09, 2007

சில ஊர்களின் இன்னாள் ,முன்னால் பெயர்கள்:

இன்னாள் - முன்னால்

1)பழனி - திருஆவினன் குடி

2)திருசெந்தூர் - திருசீரலைவாய்

3)பழமுதிர் சோலை - பழம் உதிர் சோலை.

4)திருத்தணி (அ) திருத்தணிகை - செருத்தணிகை

5)மதுரை - மாதுரையும் பேரூர்.

6)செங்கல்பட்டு - செங்கழுநீர்ப்பட்டு!

7)பூந்த மல்லி - பூவிருந்தன் வல்லி.

8)ஆர்காட் - ஆருக் காடு!

9)சோளிங்கர் - சோழ சிங்கபுரம்.

10)சிவகங்கை - நாலுகோட்டை

11)சிதம்பரம் - தில்லை

12)தருமபுரி - தகடூர்

13)ஷ்ரிவில்லிபுதுர் - நாச்சியார் கோயில்

14)அருப்பு கோட்டை - திரு நல்லுர்

15)எக்மோர் - எழுமூர்

16) சிந்தாதரி பேட்டை - சின்ன தறிப் பேட்டை .

17) கோடம்பாக்கம் - கோடலம் பாக்கம்

18)திருவல்லிகேணி - திரு அல்லி கேணி

19) பழவந்தாங்கல் - பல்லவன் தாங்கல்

20)தாம்பரம் - குண்சீல நல்லுர் (அ) தர்மபுரம்

இன்னும் பல ஊர்களின் பெயரையும் தேடி வருகிறேன் தெரிந்தால் நீங்களும் சொல்லுங்கள்

Saturday, July 07, 2007

புறக்கணிப்பின் வலி

வெயிலில் நிற்கும்

மரங்கள் தரும்

நிழலில் நடக்கிறார்கள் மனிதர்கள்!

நானோ நிழலை புறக்கணித்து

வெயிலில் நடக்கிறேன்,

எனக்கென துணையாய்

பின் தொடரும்

என் நிழலை புறக்கணிக்க

என்னாலாகாது!

எனக்கு தெரிந்த

புறக்கணிப்பின் வலி

என் நிழலுக்கு தெரிய வேண்டாம்!

பின்குறிப்பு:-
கண்டிப்பாக இதை கவிதை என நான் கூறவில்லை வாசிப்போர் அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!

Friday, July 06, 2007

தெரிந்த பெயர்களும் தெரியாத பெயர்களும்.

நமது சரித்திரத்திலும் ,மற்றும் உலக புகழ் பெற்றவர்களையும் நாம் ஒரு பெயரில் அறிந்து வந்திருக்கிறோம் ஆனால் அவர்களுக்கு இன்னொரு பெயர் இருப்பது அவ்வளவாக வெளித்தெரிவதில்லை.(எனக்கு இன்னொரு பேரு இருக்கு "பாட்ஷா"னு ரஜினி சொல்வது போல!)

புகழ்பெற்ற பெயர் - இயற்பெயர்

ஜீசஸ் கிரைஸ்ட் - ஜெகோவா or ஜோஷ்வா( ஜீசஸ் - காப்பவர் , கிரைஸ்ட் - தூதன் என்று சூட்டப்பட்ட பெயர் )

பாபர் - ஜாஹிர்ருதின்

ஹிமாயுன் - நஸ்ஸிருதின்

அக்பர் - ஜலாலுதின்

ஜெஹான்கிர் - நூருதின்

ஷா ஜெஹான் - குர்ரம்

அவ்ரங்கசெப் - ஆலம் கிர்

நூர்ஜஹான் - மெஹ்ருன்னிஸா

மும்தாஜ் - பானு பேகம்

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் - மணிக்கர்னிகா

பூலித்தேவன் - காத்தப்ப துரை

மருது பாண்டி - மருதையன்

வீரபாண்டிய கட்ட பொம்மன் - கருத்தப்பாண்டி

ஊமைத்துரை - சிவத்தையா

தீரன் சின்னமலை - தீர்த்த கிரி

திருப்பூர் குமரன் - குமரேசன்

பாரதியார் - சுப்பையா (சுப்ரமணியம் என்பதை சுப்பையா என தான் அழைப்பர்கள்)

மருத நாயகம் - கான் சாகிப் யூசுப் கான்

மறைமலை அடிகள் - வேதாச்சலம்

பரிதிமாற்கலைஞர் - சூரிய நாரயண சாஸ்திரிகள்

திரு.வி.க - திருவாரூர் .விருத்தாசலம்.கல்யாண சுந்தரம்.
(விருத்தாச்சலம் என்பது அவர் தகப்பனார் பெயர்)

கலைஞர் கருணாநிதி - தட்சிணா மூர்த்தி( இதுவே இயற் பெயர் , பின்னர் மாற்றிக்கொண்டார்)

எம்.ஜி.ராமச்சந்திரன் - ராம்சந்தர் என்றபெயரில்தான் நாடகங்களில்
நடித்தார், (எம் - மருதூர், ஜி - கோபால மேனன்)

ஜெ.ஜெயலலிதா - கோமள வல்லி

ரஜினி காந்த் - அனைவருக்கும் தெரியும் "சிவாஜி ராவ் கெயிக்வாட்" என்று ஆனால் அவர் நடத்துனராக வேலை செய்த போது குண்டப்பா என்று செல்லமாக அழைக்கப்பட்டர்!

இப்படி அதிகம் வெளியில் தெரியாத பெயரைக்கேட்டாலே ச்சும்மா அதிருதுல.. ..

சக்ரவர்த்தி அசோகர்!


சந்திரகுப்த மெளரியர்

மவுரிய பேரரசின் முதல் மன்னர் சந்திரகுப்த மெளரியர் ஆவார் ,மவுரியர்கள் ஆண்ட நாடு மகத நாடு அதன் தலை நகரம் பாடலி புத்திரம், இது தற்போதைய பீகாரின் தலை நகரம், பாட்னா என அழைக்கப்படுகிறது.இவர் இடையர் குலம் , அல்லது சூத்திரர் என சிலர் கூறுவர், மயில்கள் அதிகம் உள்ள இடத்தில் இருந்தவர் என்பதால் மயுரா எனப்பட்ட இடத்தில் வளர்ந்தவர் அதனால் மவுரியர் எனப்பட்டார் என்பர். இன்னும் சிலர் நந்த வம்ச மன்னருக்கும் முரா என்ற காட்டுவாசி பெண்ணுக்கும் பிறந்தவர் என்பர். முராவின் மகன் என்பதே மவுரியா ஆகியது என்பர்.காட்டில் இருந்த சந்திரகுப்தரை நந்த மன்னரால் அவமானப்படுத்தப்பட்ட சாணக்கியர் சந்தித்து அவரைக் கொண்டு நந்த மன்னரை வென்று சபதம் தீர்த்தார்.

சந்திரகுப்தர் மிக சிறப்பாக ஆட்சி செய்து மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவினார்.தென்னிந்தியா வரைக்கும் தன் ஆளுகையின் கீழ் கொணர்ந்தார். இவர் தனது கடைசி காலத்தில் சமண மத துறவியாகி பெங்களூர் அருகே உள்ள சிரவண பெலகுலாவில் பத்திரபாகு என்ற முனிவர் துணையுடன் துறவு வாழ்கை வாழ்ந்து உயிர் துறந்தார் ,இதனாலேயே அங்குள்ள மலைக்கு சந்திர கிரி என்ற பெயர் வந்தது.

பிந்துசாரர்

சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர் ஆவார், பிந்துசாரர் கருவில் இருக்கும் போதே அவர் தாய் இறந்துவிட்டதால் , சுஷ்ருதர் என்ற புகழ்பெற்ற மருத்துவ மேதை முழுதும் வளர்ச்சியடையாத குழந்தையை எடுத்து ஒரு ஆட்டின் /மானின் கருப்பையில் வைத்து வளர்த்து 10 மாதங்களுக்கு பின்னர் பிறக்க செய்தார் என கூறுகிறார்கள், இதனாலே பிந்து சாரர் என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள்(பிந்து என்றால் ஆடு அல்லது மான் எனப்பொருள் படும்).

பிந்து சாரர் திருநெல்வேலி வரைக்கும் படை எடுத்து வந்து வென்றதாக கூறுகிறார்கள்.இவருக்கு 12 மனைவிகள் 101 புதல்வர்கள் அவர்களில் ஒருவர் தான் அசோகர்.

பிந்து சாரருக்கு பிறகு அரியணை ஏறுவதில் ஏற்பட்ட போரில் 99 உடன் பிறந்த சகோதரர்களையும் அசோகர் கொன்றதாக ஒரு வரலாறு உண்டு. திஷ்யா என்ற ஒரு சகோதரியை மட்டும் கொல்லவில்லை என்கிறார்கள்.

சக்ரவர்த்தி அசோகர்!(B.c 271 - 232)

அசோகர் பிந்து சாரருக்கும் அவரது பிராமண மனைவி சுமத்திராங்கி என்பவருக்கும் பிறந்தவர் , சிலர் அவர் செல்லுகஸ் நிக்கேடர் என்ற கிரேக்க மன்னன் மகள் என்பார்கள்.

அசோகரின் இளம் வயதில் அவந்தி நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார் அப்போது தேவி எனப்படும் வணிக குலப்பெண்ணை காதலித்து மணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்களே மகேந்திரனும் , சங்கமிதிரையும் ,பின்னாளில் இவர்களை இலங்கைக்கு புத்த மதத்தினை பரப்ப அனுப்பினார்.

கலிங்க போருக்கு முன்னர் அசோகர் கொடுங்கோலராக இருந்துள்ளார், தனது அரண்மனையில் ஒரு சித்திரவதை கூடம் அமைத்து தவறு செய்பவர்களை பல வகையிலும் தண்டித்துள்ளார். அசோகர் கரிய நிறமும் , அழகற்றவராகவும் இருந்துள்ளார் இதனை கிண்டல் செய்த அந்தப்புற பெண்கள் 1000 பேரை கழுவில் ஏற்றி கொன்று உள்ளார்.

சந்திர குப்தர் , பிந்து சாரர் போன்றவர்கள் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வென்றுள்ளார்கள். ஆனால் சில கால இடைவெளிக்கு பிறகு அவர்கள் தனித்து இயங்க ஆரம்பித்துள்ளார்கள் , எனவே ஒரே அடியாக கலிங்க நாட்டை அடக்க அசோகர் விரும்பினார்.

கலிங்க நாடு என்பது தற்போதுள்ள ஒரிஸா, மகத நாடு தற்போதையா பிகார்,. கலிங்க நாட்டை ஆட்சி செய்தது கரவேளர்கள் என்ற அரச வம்சம். கலிங்க மன்னர் இன்னார் தான் எனப் பெயர் குறிப்பிடப்படவில்லை எந்த வரலாற்று நூலிலும்.

கலிங்க நாட்டின் மீது படை எடுத்து அதனை நிர்மூலமாக்கினார் அசோகர். அப்போரில் 1,50,000 வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர், சுமார் 1,00,000 வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டனர்.இக்கொடிய போர்க்களக்காட்சியை கண்டு தான் அசோகர் மனம் மாறி, புத்த சமயத்தை தழுவி ,சமாதானம் தழைக்கப் பாடுபட்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் இப்போருக்கு முன்னரே அசோகர் புத்த மதத்திற்கு மாறி விட்டார் என்பார்கள். அசோகரின் காதல் மனைவி தேவி புத்த மதம் சார்ந்தவர் , அவரை மணக்கும் போதே புத்த மதத்தினை தழுவி விட்டார் ஆனால் முழுதாக புத்த மதக்கொள்கையின் மீது ஈடுபாடு கொள்ளாமல் இருந்துள்ளார். போரின் கொடிய விளைவைகண்ட பிறகே முழுதும் மனம் மாறி உயிர்க்கொலை துறந்தார், பின்னர் உலகம் முழுவதும் புத்தம் பரவ வழி செய்தார்.

அசோகருக்கு தேவி என்ற மனைவி தவிர வேறு பல மனைவிகள் உண்டு அந்த வகையில் ,குணாளன் , ராதா குப்தர் என்ற மகன்கள் உண்டு.இதில் குணாளன் அழகு மிகுந்தவர் எனவே அவர் மீது அசோகரின் மற்றொரு மனைவியான திஷ்யரக்ஷதா என்பவர் ஆசைக்கொண்டார், ஆனால் குணாளன் தனது சிற்றன்னையின் விருப்பதிற்கு இணங்கவில்லை எனவே வஞ்சகமாக அவரை வெளினாட்டுக்கு வேலை இருக்கிறது என அனுப்பி அங்கு வைத்து தனது ஆட்கள் மூலம் கண்களை குருடாக்கி விட்டார் எனவும் ஒரு சில நூல்களில் உள்ளது.

கண் இழந்த குணாளன் எப்படியோ மீண்டும் தலைநகரம் வந்து பாடலிபுத்திரத்தின் வீதிகளில் பாட்டுப்படி பிச்சை எடுத்துள்ளார். அவரது குரலை அடையாளம் கண்டு அசோகர் விசாரித்து உண்மை அறிந்து ,திஷ்யரக்ஷதாவின் தலையை துண்டித்தார்(இப்படி ஒரு கதையம்சம் கொண்ட சிவாஜிகணேசன் நடித்த படம் கூட உண்டு பெயர் சாரங்கதாரா).

தனது சொத்துக்கள் அனைத்தையும் புத்த சங்கத்திற்கு தானம் அளித்து விட்டு கட்டிய உடையுடன் எளிமையாக வாழ்ந்தார். அவரது இறுதிக்காலம் மிகவும் துனபமானதாகவும், தனிமையாவும் அமைந்தது. இருந்த செல்வம் அனைத்தையும் தானம் செய்துவிட்டதால், அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த மற்றொரு மகன் ராதாகுப்தர் என்பவர் அசோகரை புறக்கணித்து கவனிக்காமல் விட்டு விட்டார்.

தேவனாம்பியாச பிரியதர்ஷன் என்ற பெயரிலேயே அசோகர் ஆட்சி புரிந்தார் ,அவர் எழுதிய கல்வெட்டுக்களிலும் இதே பெயர் காணப்பட்டது எனவே அசோகர் தான் அந்த புகழ்பெற்ற கலிங்கப்போர் புரிந்த சக்ரவர்த்தி என்பது நீண்ட நாட்களுக்கு தெரியாமல் இருந்தது , பின்னர் ஒரு வெள்ளைக்கார ஆய்வாளர் தான் இருவரும் ஒருவரே என்பதனை மெய்ப்பித்தார் இல்லை எனில் இன்று நமக்கு அசோகர் குறித்த விவரங்கள் தெரியாமலே போய் இருக்கும்.வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்திலேயே சாராநாத் ஸ்தூபி போன்றவை அகழ்வராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டது. அது வரையில் அசோகருக்கான வரலாறே இந்தியாவில் இல்லை, வாய்மொழி தகவல்களும், நாட்டுப்புற பாடல்களும் மட்டுமே இருந்தன.

அசோகருக்கு பினனர் வந்தவர்கள் அவர் அளவுக்கு திறமை பெற்றவர்கள் அல்ல என்பதாலும் ,அசோகர் படை வீரர்களை கலைத்து புத்தமத பிரச்சாரத்திற்கு அனுப்பிவிட்டதாலும் மவுரிய அரசர்கள் வலிமையின்றி இருந்தார்கள். மேலும் புத்த மதத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பிராமண அறிஞர்கள் அரசை கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர். இதைப்பயன்படுத்திக்கொண்டு மவுரிய அரசில் தளபதியாக இருந்த புஷ்யமித்திர சுங்கர் எனப்படும் பிராமண தளபதி கடைசி மவுரிய அரசன் ஆன பிருக்ரதா என்பவரை நயவஞ்சகமாக கொன்று சுங்க வம்ச அரசை நிறுவினார். அத்துடன் மாபெரும் மவுரிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

பின் குறிப்பு:-

அசோகர் என்றால் சாலை ஓரங்களில் மரம் நட்டார், குளம் வெட்டினார் , சத்திரம் கட்டினார் என்பது வரைதான் பள்ளிகளில் சொல்கிறார்கள் என்பதால் என்னால் முடிந்த ஒரு சுருக்கமான அசோக சரித்திரம். பிழை இருப்பின் திருத்தம் தரலாம்!