Monday, January 21, 2008

கோயிலும் உண்டியலும் தேவையா?

கோயில் உண்டியல்களில் காசுப்போடாதீர்கள் என்று இரண்டுப்பாகமாக ஒரு தொடர்ப் பதிவினை கண்ணபிரான் ரவி ஷங்கர் போட்டிருந்தார், அதில் கோவில்களை அரசுப்பார்த்துக்கொள்வதால் சீரழிகிறது, எனவே தனி நிர்வாக்குழு ஒன்றினை ஏற்படுத்தி அவர்கள் வசம் நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும் அதுவரைக்கும் கோவில் உண்டியலில் காசு போடக்கூடாது என்று சொல்லி இருந்தார்.

மேலோட்டமாகப்பார்த்தால் ஏதோ புரட்சிகரமான சீர் திருத்தம் கொண்டு வரும் ஆசையில் சொன்னது போல தெரிந்தாலும் , பதிவின் உள் நீரோட்டம் அபாயகரமான சாதிய மேலாண்மையை மீண்டும் கோவில்களில் நிறுவும் எண்ணத்தை கொண்டிருப்பது சிறிது உற்று கவனித்தாலே தெரியும்.

இந்து அறநிலையத்துறை என்பது பெயரளவில் முதலில் உருவாக்கப்பட்டது 1926 இல் , பின்னர் பல மாற்றங்களுடன் வளர்ந்து இன்றைய நிலையில் உள்ளது. இதில் 1991 இல் ஒரு சட்ட திருத்தம் போட்டு தன்னார்வலர்களை கொண்ட மாவட்ட கமிட்டி உருவாக்கி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள், ஆனால் அவர்கள் செயல் பாடு அத்தனை திருப்திகரமாக இல்லாததால் 96 இல் அது களைப்பட்டு, மீண்டும் ஆணையர்கள், அலுவலர்கள் வசம் முழு பொறுப்பும் அளிக்கப்பட்டது.

அரசாங்கத்துக்கு வேறு வேலை இல்லையா , ஏன் கோவிலை போய் கவனிக்கணும்? காரணம் அக்காலத்தில் கோவில்கள் அனைவருக்கும் உரியதாக இல்லாதிருந்தது, ஒரு சாராரின் கட்டுப்பாட்டில் இயங்குவது, சாதிய வேறுப்பாடுகளை அப்படியே காப்பது என செய்து பெரும்பாண்மை மக்களை வஞ்சித்தமையால் தான் அரசு கோவில்களின் நிர்வாகத்தில் உள் புக வேண்டியது ஆயிற்று.

ஆலயங்களில் பாகுபாடு இருப்பதை நீக்க ஆலய பிரவேசம் எல்லாம் செய்ய வேண்டியது ஆச்சு. போராடித்தான் இப்போதிருக்கும் நிலையைப்பெற்றோம்.இன்று வரையில் அனைவரும் அர்ச்சர்கள் ஆகும் வாய்ப்பு வழங்கப்படவே இல்லை, பெயரளவில் தான் இருக்கு.

இப்பொழுது மட்டும் பெரிதாக மாற்றம் வந்துவிட்டதா இன்னமும் கண்ட தேவியில் தேரோடினால் ஊரடங்கு உத்தரவு, ஒரு சாரருக்கு அனுமதி மறுப்புதேர் வடம் தொடக்கூட முடியாது எனத் தொடர்கிறதே எனலாம். ஆனால் அரசின் கையில் இருப்பதால் குறைந்த பட்சம் போராடி , நீதி மன்றம் மூலம் அனுமதி வாங்கலாம். ஆனால் ஏதேனும் ஒரு குழுவின் வசம் அளித்து விட்டால் என்னாவாகும், அவர்கள் வைத்ததே சட்டம் என்று அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் செயல்படுவார்கள்.

ஏன் ஒரு காலத்தில் முழுக்க தனியார் வங்கிகளாக இருந்ததை அரசுடைமாக்கியது, காரணம் பாமரனுக்கும் வங்கியின் பலன் அப்போது இருந்தவர்கள் தறவில்லை, அவர்களுக்கும் பலன் கிடைக்க அரசே வங்கிகளை எடுத்து நடத்தியது, சீர் திருத்தம் செய்தது, அது போல சமூக நீதி கிடைக்க அரசே கோவில்களை எடுத்து நடத்தி மக்களுக்கு குறைந்தப்பட்ச சம உரிமை அளீப்பது சிலர் கண்களை உறுத்துகிறது.

இரா.முருகப்பன் என்பவர் தாழ்த்தப்பட்டவருக்கு ஒரு கோவில் கல்யாண மண்டபத்தை வாடகைக்கு அளிக்க மறுத்த சம்பவம் பற்றி பதிவு ஒன்றினை போட்டுள்ளார் , அதைப்படித்தால் தெரிய வரும் , தனிக்குழுக்களிடம் கோவில் போனால் என்னாகும் என்று. அக்கோவில் செங்குந்தர் இனத்தவரால் நிர்வாகிக்கப்பட்டு வருவது, ஏன் தரவில்லை என்று கேட்டதுக்கு எங்கள் சமூகத்தவரால் நடத்தப்படுவது நாங்கள் நினைப்பவர்களுக்கு தான் வாடகைக்கு தர முடியும் எங்கள் விருப்பம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இப்போது கண்ணபிரான் சொல்வது போன்று செய்தாலும் காலப்போக்கில் ஏதேனும் ஒரு ஆதிக்க சாதிகளிடம் கோவில் நிர்வாகம் மாட்டிக்கொண்டு , பின்னர் பரம்பரை தர்மகர்த்தா என்று கோவிலே ஒரு சிலர் கைக்கு போய்விடும்.

அரசின் கட்டுப்பாட்டில் கோவில்கள் இருக்கும் போதே ஆரியமாயைகள் தான் கோவில்களில் அதிகம் தலை விரித்தாடுகிறது என்பது வெட்ட வெளிச்சம்.

பழனிக்கோவிலை உதாரணம் காட்டி அது சீர்க்கெட அரசின் மெத்தனம் காரணம் என்றார், ஆனால் அரசினை ஆட்டிவைக்கும் சிலரின் கைங்கரியத்தால் அக்கோவிலை ஆரிய சக்திகள் ஆக்ரமித்தை அவர் ஏன் சொல்லவில்லை.

பழனி கோவிலை முதலில் நிர்மாணித்து செயல் படுத்தியது புலிப்பாணி சித்தர் ஆவார், அவர் ஏற்படுத்தி பிரதிஷ்டை செய்தது தான் நவப்பாஷாண சிலை(போகர் ச்செய்தார் அவருக்கு புலிப்பாணி சித்தர் உதவினார் என்றும் சொல்வார்கள், ஆனால் வழிப்பாட்டு உரிமை இவர் குடும்பத்தார் வசம் அப்போது) அக்கோயிலில் காலம் காலமாக பூஜை செய்யும் உரிமைப்பெற்றவர்கள் புலிப்பாணி சித்தர் வழி வந்தவர்களே. அங்கே அப்போதெல்லாம் பிராமண அர்ச்சர்கள் கிடையாது.

பிற்காலத்தில் புலிப்பாணி சித்தர் குடும்பத்தில் வாரிசு சண்டை, யார் நேரடி வாரிசு என்றெல்லாம் கிளம்பியது. அதனால் வழக்கும் போட்டார்கள் ,சைக்கில் கேப்பில் ஆட்டோ ஓட்டியக்கதையாக அக்குடும்பத்தில் இருப்பவர்கள் இரு தரப்பும் பூஜை செய்ய தடை விதித்து, அர்ச்சகர்களை உள் இறக்கியது அரசு என்றாலும் அதன் பின்னால் இருந்த சக்திகள் வேறு என்பது புரிந்திருக்கும்.

சிலை பலஹீனப்பட யார்க்காரணம் அர்ச்சர்கள் தானே. இதே அர்ச்சர்களை கண்டித்தால் வேறுக்கதையை கிளப்பி திசை திருப்புவார்கள்.ஆனாலும் அரசு நடவடிக்கை எடுக்க ஒரு வாய்ப்பு இப்போது உண்டு, இதுவே தனிக்குழுவிடம் போனால் இன்னும் மோசம் ஆகவே வாய்ப்புள்ளது.

தனியாக ஒரு கூட்டத்தினால் மட்டும் சொந்தம் கொண்டாடப்பட்டு நிர்வாகிக்கபடும் ஒரு கோவில் சிதம்பரம் நடராஜர் கோவில், அங்கு என்ன நிலை. ஏன் அவர்கள் மக்களுக்கு பெரிதாக சேவை செய்யவில்லை.

அக்கோவிலை முழுக்க பங்கு போட்டு திண்பது தீட்சிதர்கள் தான்.உண்மையில் அக்கோவிலின் உரிமையும் சோழர்கள் வழி வந்த ஒரு ஜமீந்தாருக்கு(நடராஜபுரம்) தான் சொந்தம் ஆனால் காலப்போக்கில் அவரால் கோவிலின் செலவுகளை கவனிக்க முடியாமல் அக்காலத்தில் கோவில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் கையில் விட்டு ஒதுங்கிக்கொண்டார் அல்லது ஓரம் கட்டப்பட்டார். இப்பொழுதும் இது குறித்து வழக்குள்ளது.கோவில் நிர்வாகத்தை கையில் வைத்திருக்கும் பக்தி பழங்களான தீட்சிதர்கள் என்ன மேம்பாட்டினை செய்தார்கள்.

பொன்னம்பலத்தில் தேவாரம் பாடத்தடை விதித்தவர்கள் தான் இந்த தீட்சிதர்கள், அவர்களும் பாட மாட்டார்கள், பாடவரும் சிவாச்சார்யார்களையும் விட மாட்டார்கள். கோவிலுக்கு வெளியில் பிரகாரத்தில் பாடலாம் ஆனால் கர்ப்பக்கிரகத்தில் பாடக்கூடாது என்று இவர்கள் சொல்லக்காரணம் என்ன,கோயில் குறித்தான அதிகாரத்தை கையில் வைத்திருக்கிறோம் என்ற ஆணவம் தானே. இதுக்குறித்தும் வழக்கு நடைப்பெறுகிறது.

இக்கோவில் அரசின் கைவசம் இருந்தால் இப்படி மறுக்கவே முடியாது.

ஒரு தீட்சிதர் குடும்ப்பத்தில் உள்ள திருமணமான ஆண்களுக்கு கோவில் வருமானத்தில் பங்கு உண்டு என்று விதி அப்போது இருந்ததால் திருமணம் செய்து கோவில் பங்கினை வாங்க வழக்கொழிந்து போன பால்ய விவாகத்தை இன்றும் செய்து வருகிறார்கள்.மணமானால் கோவிலில் பூஜையும் செய்யலாம் அதில் கிடைக்கும் வருமானமும் வரும். இப்படி சுய தேவைகளுக்காக செயல்படும் இவர்களைப்போன்றவர்கள் எல்லாம் குழு அமைத்து அனைத்து கோயில்களையும் பார்த்துக்கொள்ள சொல்லனுமாம், பார்த்துகொள்வார்களா, பங்கு போட்டுக்கொள்வார்களா?

ஆர்ய மாயைக்கு சற்றும் சளைக்காமல் தான் இங்கிருக்கும் பூர்வீக தமிழர்களின் வசம் இருக்கும் கோவில் நிர்வாகங்களும் சீர்க்கெட்டுள்ளது. மதுரை ஆதீனம் மிகப்பெரியது அதன் வசம் பல சிவாலாயங்கள் உள்ளது ஆனால் என்னப்பயன் எல்லாம் வீணாகத்தான் போகிறது. ஆதீனமும் ஒரு தனியார் நிர்வாக அமைப்பு தானே அவர்கள் என்ன மேம்பட வைத்தார்கள். அரசியல் பேட்டி தருவது, நடிகைகளின் ஆட்டத்தினைப்பார்ப்பது என்று "விசேஷ ஆன்மீக சேவை"செய்கிறார்.

நங்க நல்லூரில் இருக்கும் தனியார் வசம் இருக்கும் கோவிலில் பக்தர்களிடம் அதிக விலைக்கு பூஜைப்பொருட்கள் எல்லாம் விற்க வைத்து நிர்வாகம் கொள்ளை அடிப்பதாக ஒரு பதிவர் கூட பதிவிட்டார்.

அரசு நிர்வாகம் மோசமாக இருந்தாலும் வாக்குகளை நினைத்தாவது ஒரு எல்லைக்குள் இருப்பார்கள், மேலும் சட்டப்படி கேள்விக்கேட்கலாம், தனியார் நிர்வாகக்குழு எனில் சர்வாதிகாரப்போக்கு தான் அதிகரிக்கும்.

இப்படி மக்கள் நம்பும் ஒரு விஷயத்தை அவர்களின் நம்பிக்கையை மூலதனமாக வைத்து ஆள் ஆளுக்கு பிழைப்பு நடத்தத்தான் பார்க்கிறார்கள். இப்படி இருக்கும் ஒரு அமைப்பு தேவையா, கோவிலும் வேண்டாம் உண்டியலும் வேண்டாம் என்று விட்டொழிக்கலாமே! மனக்கோவில் கண்ட பூசலார் என்ற நாயன்மாரே இருந்திருக்கிறார் எனவே மக்கள் மனதில் கோவில் கட்டி வழிப்பட்டாலே போதுமே!
-------------------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு: சம்பந்தப்பட்டப்பதிவுகள் தெரியாததால் சுட்டி இணைக்கவில்லை, விரைவில் செய்யப்படும்.

Friday, January 18, 2008

பேராசை பிடித்த அமெரிக்க மாப்பிள்ளைக்குடும்பங்கள்!

பேராசைப்பிடித்த அமெரிக்க மருமகள்கள் என்று வசந்தம் ரவி ஒரு பதிவைப்போட்டு அலப்பரை செய்துள்ளார், நியாயமாகப்பார்த்தால் பேராசைப்பிடித்த மாமியார்கள் என்று தான் தலைப்பு வைத்திருக்க வேண்டும். வரதட்சனை வாங்காமல் எந்த அமெரிக்க மாப்பிள்ளை கல்யாணம் செய்தார், (அமெரிக்காவில் வாங்கும் சம்பளம், கிரீன் கார்ட் என அதற்கு தக்க வரதட்சணை அளவு ஏறும்)அதுவும் அளவுக்கதிகமாக வாங்குவது வழக்கம்.எனவே விலைக்கொடுத்து வாங்கிய மாப்பிள்ளையினை கட்டுப்படுத்தப்பார்ப்பது வாங்கியவரின் (பெண்ணின்) விருப்பம் தானே! உண்மையான பிரச்சினையைப்பேசாமல் வேறு ஏதோ ஒன்றினைப்பேசி திசை திருப்பும் பதிவினைப்போட்டு அனுதாபம் தேடும் செயல் மானங்கெட்ட செயல் அல்லவா?

நான் இந்தப்பதிவில் தற்ப்போது பெரிதாக எதுவும் சொல்லப்போவதில்லை, அமெரிக்க உத்தியோகம் (NRI என சொல்லி), அல்லது மென்பொருள் துறை உத்தியோகம் என சொல்லி வர தட்சிணைக்கறக்காமல் எத்தனை மாப்பிள்ளைகள் மணம் புரிந்துக்கொண்டார்கள் என்று அறிவதே! வாங்குற
வரதட்சணையை எல்லாம் வாங்கிட்டு அந்த பெண் அதை சொன்னால் இதை சொன்னால் என்று சொல்வதால் என்னப்பயன்!

பொதுவாக நான் கேட்கிறேன், எத்தனை NRI மாப்பிள்ளைகள் "எதுவும்" வாங்காமல் கல்யாணம் செய்து கொண்டிருப்பார்கள்? (அதுவும் பொண்ணு அழகாக , சிவப்பாக , குறைந்தப்பட்சம் டிகிரி+mca , அல்லது பொறியியல் படித்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை எல்லாம் உண்டு,அப்போத்தானே அமெரிக்காவிற்கு வந்தாலும் வேலைக்கு அனுப்பி கூடுதலாக வருமானம் பார்க்கலாம்),விரல் விட்டு எண்ணும் அளவில் கூட இருக்க மாட்டார்கள்!

Thursday, January 10, 2008

மொக்கைத்தோரணம்!

மொக்கை "tag" என்று ஒன்றை ஆரம்பித்து அதுக்கு என்னையும் தெரியாத்தனமாக கூப்பிட்டு இருக்காங்க பாசமலர்(என்னா ஒரு பாசம்!)... மொக்கைக்கும் எனக்கும் ரொம்ப தூரம்னு தெரியாம போய்டுச்சு அவங்களுக்கு(ஆனா நீ போடுறது எல்லாம் மொக்கை தானேனு யாரோ சொல்றது கேக்குது) எவ்வ்வளவோ செய்தாச்சு இதை செய்ய மாட்டோமா!

சரி என்னால முடிந்த மொக்கைய தீட்டுகிறேன்.மீண்டும் ஒரு முறை சிரிப்பு தோரணம்!
-----------------------------------------------------------------------------------------------

வாடிக்கையாளர்: என்னப்பா சர்வர் காபில ஈ மிதந்து பார்த்து இருக்கேன், இங்கே என்னடானா சிகரெட் பில்டர் மிதக்குதே?
சர்வர்: அதான் சார் பில்டர் காபி!
-----------------------------------------------

நபர்1: எதுக்கு அந்த பாடகர் 3 மைக் வச்சு அது பின்னாடி குத்துக்கால் போட்டு பாடுறார்?

நபர்2:அவர் கிரிக்கெட் விக்கெட் கீப்பராம் ஸ்டம்ப் மாதிரி 3 மைக் வச்சு இருந்தா தான் பாட வருமாம்!
------------------------------------------------------------------

சபாநிர்வாகி பாடகியிடம்: நீங்க வீட்டில தொட்டிலில் குழந்தையைப்போட்டு ஆட்டி தூங்க வைக்க பாடிக்கத்துக்கிட்டதுக்காக மேடைல பாடும் போதும் ஒரு தூளி கட்டி வைக்க முடியாதும்மா!
----------------------------------------------------------------

காவலன்1:நம் மன்னர் சர்வேச பாண்டியர் வலைப்பதிவு ஆரம்பித்ததில் இருந்து ரொம்ப மாறிவிட்டார்..
காவலன் 2: ஏன்?
காவலன்1:இளவரசிக்கு சுயம்வரத்தில் போட்டி வைப்பதற்கு பதில் அவரது வலைப்பதிவில் "இச்சுனு ஒரு கதை" எழுதும் போட்டி வைத்து சிறந்த கதை எழுதும் மன்னனுக்கே இளவரசி என்று அறிவித்து விட்டாரே!
-----------------------------------------------------------------------------

காவலன்1: மன்னருக்கு வலைப்பதிவு மோகம் அதிகரித்து விட்டது, அவர் வலைப்பதிவில் பின்னூட்டங்கள் அதிகம் வரவில்லை என , நாட்டு மக்கள் அனைவரும் தினசரி ஒரு பின்னூட்டம் ஆவது போட வேண்டும் இல்லை என்றால் சவுக்கடி என்று அறிவித்து விட்டாரே!
--------------------------------------------------------

சர்வேச பாண்டிய மன்னன்: மந்திரியாரே இன்று என் வலைப்பதிவில் புதிதாக எதுவும் பின்னூட்டம் வந்திருக்கிறதா பார்த்து சொல்லும்!

மந்திரி: மன்னர் மன்னா நீங்கள் ரகசியமாக பக்கத்து நாட்டு அரசனின் வலைப்பதிவில் அனானி கமெண்டாக போட்டு ஆபாசமாக திட்டியதை ஐ.பி வைத்து கண்டு பிடித்து விட்டானாம் , போர் தொடுத்து வருவதாக உங்கள் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டுள்ளான்!
-----------------------------------------------------------------

மன்னர் சர்வேச பாண்டியர்: மந்திரியாரே, நான் இந்த நாட்டின் மன்னன் ஆனால் என்பதிவை விட உங்கள் பதிவுக்கு அதிகம் ஹிட்ஸ் வருகிறதே எப்படி?

மந்திரி: மன்னா,நான் வீக் எண்ட் பதிவு என்று போட்டு அதில் நம் அரண்மனை நர்த்தகிகளின் நடன வீடியோவைப்போடுகிறேன்! அதான் ஹிட்ஸ் அதிகம் வருகிறது!
---------------------------------------------------------------------------------

மந்திரி: மன்னா நீங்கள் ஒலையில் செய்தி கொண்டு வரும் புறாவை பிடித்து வறுத்து சாப்பிடும் ரகசியம் பக்கத்து நாட்டு அரசனுக்கு தெரிந்து விட்டது போலும்!

மன்னர்: எப்படி சொல்கிறீர்கள் மந்திரியாரே!
மந்திரி: இந்த முறை புறாவுக்கு பதில் காக்காவின் மீது வெள்ளைப்பெயிண்ட் அடித்து செய்தி அனுப்பியுள்ளானே!
----------------------------------------------------------------------------

மன்னர்: என்ன மந்திரியாரே இம்முறை செய்தி எடுத்து வந்த புறாவுக்கு ஒரு கால் தான் இருக்கிறது?

மந்திரி: பக்கத்து நாட்டு அரசர் "மிஸ்டு கால் "அனுப்பியுள்ளாராம், சிம்பாலிக்காக சொல்கிறார், நீங்கள் தான் செய்தி என்ன என்று கேட்டு இன்னொரு புறா அனுப்ப வேண்டுமாம்!
------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:
இதற்கு மேலும் நான்கு மொக்கையர்களை தொடர அழைக்க வேண்டுமாம், யாரை அழைப்பது என்று தெரியவில்லை. எனவே இப்பதிவைப்படிக்கும் யாரேனும் நான்கு பேர் பொறுப்பேற்று மொக்கை சேவை புரிய "திறந்த வெளி அழைப்பு" வைக்கிறேன்!