Tuesday, January 29, 2013

கருத்து சுதந்திரமும் ,அறமும்.


(ஹி...ஹி இவ்வளோ கருத்து சுதந்திரம் கொடுக்கணும்னு சொல்றாங்களோ?)

ஒரு திரைப்படம் என்பது கலையாக்கமாகவோ அல்லது வணிக படைப்பாகவோ இருக்கலாம், ஆனால் அது பொது மக்களின் பார்வைக்கு உரியதா , பொது ஊடக வெளியில் அனைவரும் பார்க்கும் தகுதி ஒரு படைப்புக்கு இருக்கிறதா என தகுதி நிர்ணயம் செய்ய என்றே உருவாக்கப்பட்ட அமைப்பு ஒன்று உள்ளது ,அதன் பெயர் தான் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம்.

ஒரு திரைப்படம் பொதுமக்கள் பார்வைக்கு தகுதியானது என சான்றளிக்கப்பட்ட பின்னர் ,அதனை தடை செய்யவோ அல்லது மற்றவர்களின் கருத்துக்கேட்போ அவசியமில்லை. இது தொடருமானால் வருங்காலத்தில் எல்லாப்படத்துக்கும் ஏதேனும் ஒரு லெட்டர் பேடு இயக்கம் ,எதிர்ப்பு காட்டிக்கொண்டேயிருக்கும், அனைவருக்கும் படத்தினை போட்டுக்காட்டி அனுமதி வாங்கிக்கொண்டிருக்க முடியுமா?

அப்படியே ஆட்சேபம் இருப்பின் நீதி மன்றம் மூலமாக மட்டுமே முறையீடு செய்யப்பட வேண்டும், ஆனால் லெட்டர் பேடு வைத்திருப்பவர்கள் எல்லாம் நாங்க ஒரு இயக்கம் ,எங்கள் பின்னால் ஒரு கூட்டம் இருக்கு ,எனவே எங்களுக்கு திரையிட்டு காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என கிளம்புவது , மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் இறையாண்மையை கேள்விக்குள்ளாகுவதாகும்.

லோகநாயகரின் விஷ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய இயங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து , படம் வெளியிட தடை கோரியதும்,அவர்களுக்கு படத்தினை திரையிட்டு காட்டியது தவறான முன்னுதாரணம் ஆகிவிட்டது , இப்பொழுது பல லெட்டர் பேடு இயக்கங்கள் ,இதே பாணியில் கிளம்ப ஆரம்பித்துவிட்டன.

ஆனால் இந்நிலையில் இயக்குனர் அமீர் இத்தனை நாளாக ஏதோ அம்னீசியாவில் இருந்தது போல திடீர் என துயில் களைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அமீர் வெறும் இயக்குனராக இருந்திருந்தால் அவர் எப்போ அறிக்கை விட்டால் என்ன என சொல்லலாம், ஆனால் அவர் தான் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளர், மேலும் ஃபெப்சி அமைப்பின் தலைவர், இவ்விரண்டு பொறுப்புகளும் தமிழ் திரைப்படத்துறையின் மிக முக்கியமான பதவிகளாகும்.

இப்படியாப்பட்ட பொறுப்புகளை வகிக்கும் இயக்குனர் அமீர், 25 ஆம் தேதி தடை என கேள்விப்பட்டதும் தான் இப்பிரச்சினை குறித்தே அறிந்தது போல , இப்படம் குறித்து மொன்னையாக ஒரு அறிக்கை விட்டுள்ளார் அதில் , சட்டம் ஒழுங்கு கெடலாம் என தமிழக அரசு தடை விதித்துள்ளது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினை தாக்குகிறதா என தீர்மானிக்க வழக்கு நிலுவையில் உள்ளது, நான் இன்னும் படம் பார்க்கவில்லை எனவே பார்க்காமல் கருத்து சொன்னால் வேறுவிதமாக பிரச்சினைகள் உருவாகலாம் என்று சொல்லியிருக்கிறார்.

என்ன கொடுமை சார் இது ? அவரே முழுமையாக தணிக்கை அதிகாரிகள் பார்த்து சான்றளிக்கப்பட்ட படம் எனவும் சொல்லியுள்ளார்,அப்போ சென்சார் போர்டு சான்று எல்லாம் படத்தின் தகுதியை நிர்ணயிக்க போதுமானது என இயக்குநர் சங்க செயலாளராக இருப்பவருக்கு தெரியாதா? ஒரு இயக்குநராக தனிப்பட்ட முறையில்  எப்படி வேண்டுமானாலும் கருத்து சொல்லியிருக்கலாம்,ஆனால் ஒரு திரைப்பட அமைப்பின் பொறுப்பில் உள்ளவராக , அதன் அங்கத்தினராக உள்ள லோகநாயகரின் திரைப்படத்திற்கு  சென்சார் சான்றுக்கு பின்னும் ஏற்படுத்தப்பட்ட தடைகள்  செயற்கையானது என தெரிய வேண்டாமா?

சட்டப்படி ஒரு படைப்பு பொது மக்கள் பார்வைக்கு தகுதியானது என தீர்மானிக்கப்பட்டாயிற்று எனவே அதனை மட்டுமே கொண்டு ஆதரிக்க இயக்குனர் சங்க செயலாளருக்கு தார்மீக உரிமை உள்ளது, எனவே அவர் இத்தடையை கண்டித்து தான் அறிக்கை விட்டிருக்க வேண்டும், மேலும் லோகநாயகருக்கு இயக்குனர் சங்கம் அனைத்து வகையிலும் தார்மீக ஆதரவு அளித்திருக்க வேண்டும். ஆனால் இயக்குனர் அமீரோ பட்டதும் படாதுமாக , விளக்கெண்ணையில் ஊறிய வெண்டைக்காய் போல வழ வழ கொழ கொழ என அறிக்கை வெளியிட்டு தனது இருத்தலை மட்டுமே பதிவு செய்து கொண்டுள்ளார்.

இஸ்லாமிய இயக்கங்களை அடியொற்றி இப்பொழுது ஒரு லெட்டர் பேடு இந்துத்வா இயக்கமும் இயக்குனர் அமீரின் ஆதிபகவன் திரைப்படத்துக்கு எதிராக கிளம்பியுள்ளது , இப்பொழுது அமீர் இதனை தனியாக ,தனது சொந்தப்பிரச்சினையாக எதிர்க்கொள்வார இல்லை  திரையுலகின் ஆதரவை நாடுவாரா?

இஸ்லாமிய இயக்கங்களின் புகாரின் பேரில் விஷ்வரூபத்திற்கு தடை என ஒரு முன்னுதாரணம் உருவாகிவிட்டதால் , அதனடிப்படையில் அரசு அமீரின் படத்திற்கும் தடை விதித்தால் அமீர் நீதிமன்றத்தினை நாடி , தன்ப்பிரச்சினையை தீர்த்துக்கொள்வார அல்லது அறச்சீற்றம் காட்டுவாரா?

தடை என்னும் சூழல் வந்தால் இது மதச்சார்பற்ற நாடா, கருத்து சுதந்திரம் இல்லையா? சென்சார் போர்டு சான்று எதற்கு என கிடைக்கும் மேடையில் எல்லாம் மைக் புடிச்சு சாமியாடிற மாட்டாரு :-))

இஸ்லாமிய அமைப்புகளின் வேண்டுகோளுக்கு ஒரு தடை,இந்துத்வா அமைப்புகளின் வேண்டுகோளுக்கு ஒரு தடை என கணக்கை நேர் செய்யும் நோக்கில் அரசு செயல்படாலாம் ஆனால் இதன் பின்னால் ஒரு நுண்ணரசியலும் உள்ளது ,அது என்னவெனில் அப்படத்தினை தயாரித்து இருப்பது ஒரு கழக பிரபலம், எனவே ஆதிபகவான் திரைப்படம் வெளியாவதில் கண்டிப்பாக பிரச்சினை வெடிக்கும், அப்பொழுது திரையுலகினர் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள், இயக்குனர் அமீர் எப்படி பொங்குகிறார் எனப்பார்ப்போம் :-))

கொசுறு:


படத்தின் விளம்பரத்தில் இது " ஒரு மாஃபியுசோ ஆக்‌ஷன்காதல் கதை" என "tag line" போட்டுள்ளார், ஆகா இப்பவெல்லாம் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் உலகத்தரத்தில் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்களே என புல்லரிக்குது.

ஹி...ஹி நாம ஏற்கனவே மாஃபியுசோ வரலாற்றை எல்லாம் ஆய்வு செய்து பதிவிட்டிருக்கிறோம், இன்னும் சில பாகங்கள் எழுதும் அளவுக்கு சரக்கு இருக்கிறது விரைவில் தொடர்வோம். எனவே இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் கூடுகிறது,ஆனால் எனக்கென்னமோ ஆதிபகவன் நவீன தேவர் மகனாக "காட்ஃபாதர்" கட்டமைப்பில் இருக்குமோனு உள்ளுக்குள் ஒரு பக்‌ஷி கூவுது!

மாஃபியுசோ டான்கள் பற்றிய பதிவுகள்:

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: The DON- A guide to understand gangster films.

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: The DON- 2:A guide to understand gangster films

-----------------------
பின் குறிப்பு:

படம் மற்றும் தகவல் உதவி, கூகிள் மற்றும் தினமலர் ,இணைய தளங்கள்,நன்றி!
--------------------------

Thursday, January 24, 2013

உரமானிய ஊழல்.


(த்தோடா வவ்வாலு சொன்னது கூட நடந்துடுச்சு!!!)

கடந்த 31-12-2012 அன்று வெளியிட்ட "FDI IN RETAIL MARKET-2:வர்த்தகமும் நுகர்வோர் நலனும்" எனும் இடுகையில் இந்தியாவில் வழங்கப்படும் உர மானியத்தின் பயன் விவசாயிகளுக்கு பலனளிப்பதில்லை,மாறாக உர நிறுவனங்களுக்கு அதிகப்படியான லாபம் அளிக்கவே என்பதை ,சர்வதேச விலை ,இந்திய சில்லரை விலை மற்றும் லாப விகிதங்களை ஆதாரத்துடன் விளக்கியிருந்தேன்,

சுட்டி:

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: FDI IN RETAIL MARKET-2:வர்த்தகமும் நுகர்வோர் நலனும்.

குறிப்பிட்ட பகுதியை மீண்டும் இங்கு தந்துள்ளேன் ,முழுவதும் படிக்க சுட்டியை அழுத்தவும்.

கீழே காண்க.

//பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட்டின்  சர்வதேச விலை விவரங்கள் மற்றும் மானியம் ,சந்தை விலை நிலவரங்களை காண்போம்,


பொட்டாஷ் உரம்:

ஒரு டன் பொட்டாஷ் - 425 டாலர்/டன்.

இந்திய ரூபாயில் -425*50=21,250 ரூ மட்டுமே,

இந்திய விற்பனை விலையை விட சர்வதேச சந்தையில் விலை குறைவாகவே உள்ளது ,ஆனால் அதற்கு டன்னுக்கு மானியம் 14,777 ரூபாய்!

21,250 ரூபாய் மதிப்புள்ள பொட்டாஷ் உரத்தினை இறக்குமதி செய்து ரூ 24,000 என விலை வைத்து விற்க அம்மானியத்தொகையை அரசு அளிக்கிறது.

இதன்  மூல உர நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிகர வருவாய்=

14,777+24,000-21,250=17,527 ரூ.

சதவீத அடிப்படையில் வருவாய்=17,527/21,250*100=82.48%

போக்குவரத்து செலவு, கையாளும் செலவுகள் இருக்கும் தான் ஆனால் இப்படி 82.48 சதவீதம் அளவுக்கா இருக்கும்.


பாஸ்பேட் உரம்:

பாஸ்பேட்-524.08 டாலர்/டன்.

இந்திய ரூபாயில்,

524.08*50=27,252.16 ரூபாய்கள்.

இந்திய விற்பனை விலை ரூ =24,000

மாநியம்=18,474ரூ

நிகர வருவாய்=24,000+18,474-27,252.16=15,221.84 ரூ.

சதவீத அடிப்படையில்,=15,221.84/27,252*100=55.85%

இந்தியா 100 சதவீதம் பொட்டாஷ் உரங்களையும், 90 சதவீதம் பாஸ்பேட் உரங்களையும் இறக்குமதி செய்கிறது.

இவ்விரண்டு உரங்களையும் பெருமளவில் இறக்குமதி செய்து அதிக மானியம் கொடுக்கப்பட்டும் குறைவான விலையில் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்கவில்லை என்பதை மேற்கண்ட கணக்குகள் மூலம் எளிதாக புரிந்துக்கொண்டிருக்கலாம்.

அரசு அளிக்கும் மாநியம் அனைத்தும் உர நிறுவனங்களின் லாப விகிதத்தினை அதிகரிக்கவே பயன்ப்படுகிறது.//

தற்போது உரமானியத்தில் ஊழல் என புகார் வெளிப்படையாக கிளம்பியுள்ளது ,அது குறித்து அம்மையார் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளது என்னவெனில்,

//இந்தச் சூழ்நிலையில், ஜூன்  2012-ல் உர உற்பத்தி நிறுவனங்கள்  DAP உரத்தினை சில்லரை விலையில் மெட்ரிக் டன் ஒன்றுக்கு  25,000 ரூபாய் என சந்தையில் விற்பனை செய்தன என்றும், அரசு மெட்ரிக் டன் ஒன்றுக்கு 14,300 ரூபாய் மானியம் வழங்கியுள்ளது என்றும்; ஆனால், அதே காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட டி.ஏ.பி. உரத்தின்  விலை மெட்ரிக் டன் ஒன்றுக்கு  31,900 ரூபாய் தான் என்றும்;  போக்குவரத்து மற்றும் விநியோகச் செலவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், ஒரு டன்னிற்கு  5,000 ரூபாய் வரை உரக் கம்பெனிகள் எதிர்பாராத வகையில் கொள்ளை லாபம் ஈட்டியுள்ளன என்றும்;  MOP  உரத்தைப் பொறுத்தவரையில், 2011-2012 ஆம் ஆண்டில், மெட்ரிக் டன் ஒன்றுக்கு  16,054 ரூபாயை அரசிடமிருந்து மானியமாக பெற்றுக் கொண்டு உபரியாக 5,500 ரூபாயை உரக் கம்பெனிகள் எடுத்துக் கொண்டுவிட்டன என்றும்; மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா  மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் அழகிரியின் கவனத்திற்கு இவற்றை கொண்டு வந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும்,  3.8.2012 அன்று, உரத் தயாரிப்பு நிறுவனங்கள்,  DAP  உரத்தில் டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையிலும், காம்ப்ளெக்ஸ் உரத்தில் டன்  ஒன்றுக்கு சுமார் 6,000 ரூபாயையும் கபளீகரம் செய்துவிட்டன என்று  தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்; உர உற்பத்தி நிறுவனங்கள் பயன்பாட்டுச் சான்றிதழை சமர்ப்பித்து,  உரம் தயாரிப்பதற்கான விலையின் விவரங்களை மத்திய உரத் துறைக்கு தெரிவிக்க வேண்டுமென்று மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை இணை அமைச்சர்ஸ்ரீகாந்த் ஜெனா மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர்  மு.க. அழகிரிக்கு குறிப்பு வைத்ததாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.//

//ஆனால், வேளாண் தொழிலை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ள இந்திய நாட்டில், ஊழலுக்கு ஊக்கமளிக்கும் வகையில், தனியார் உர உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடையும் வண்ணம் உரக் கொள்கை  வகுக்கப்பட்டு, இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகள் சுரண்டப்பட்டு வருகின்றனர்.//

தகவல் உதவி: இன்னேரம் இணைய தளம்,நன்றி!

http://www.inneram.com/news/tamilnadu-news/tamilnadu-cm-jayalalitha-asked-pm-to-sack-alakiri-from-cabinet-8416.html

மேற்கண்ட செய்தியின் மூலம் எனது பதிவில் புள்ளிவிவரங்களுடன் ஆதாரப்பூர்வமாக முன்னரே சொன்ன தகவல்களை உறுதிப்படுத்தும் வண்ணம் ,அதே விவரங்களுடன் உரமானிய ஊழல் குறித்து புகார் எழுந்துள்ளது தெளிவாக தெரிகிறது.

இதே போல சமையல் எண்னை இறக்குமதிக்கு அளிக்கப்படும் மானியம் விரயமாகிறது என்பதையும் அப்பதிவில் விளக்கியிருக்கிறேன், அதிலும் ஊழல் என எப்பொழுது வெடிக்குமோ தெரியவில்லை :-))

நாம் தொடர்ந்து,விவசாயம் ,மாற்று எரிப்பொருள் ,சுற்று சூழல்,அறிவியல் என அலசி ஆய்வு செய்து எழுதினாலும் ,மக்கள் இதெல்லாம் இணையத்தில் இருப்பது தானே என்ன புதுசா எழுதிட்டான் என நினைத்துக்கொள்வது வழக்கம், இணையத்தில் இருந்தாலும் சரியான தகவலை தேடி எடுத்து, அதனைப்புரிந்துக்கொண்டு எழுதுவது எவ்வளவு கடினம் என சினிமா, அரசியல் என மொக்கை போடுபவர்களுக்கு எளிதில் புரியாது.

தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்,காலம் பதில் சொல்லும் என நம்ம கடமையை செய்வோம்!!!

ஹி...ஹி நாமளும் பஞ்ச் டயாலாக்கு பேசுவதற்கு ஒரு காலம் வரும்னு காட்டத்தான் இந்த பதிவு :-))

வரலாறு முக்கியம் மக்களே!!
------------------------------------------

Wednesday, January 23, 2013

என்ன கொடுமை சார் இது-10

(ஹி...ஹி...WISHINGரூபம் இது)

#சட்டி சுட்டதடா!

டிடிஎச் இல் அரங்க வெளியீட்டுக்கு முன் விஷ்வரூபம் வெளியாகும் என லோகநாயகர் சொன்னப்போது பல விசிலடிச்சான் குஞ்சுகளும் யதார்த்தம் புரியாமல் மானாவாரியாக பினாத்தி வந்த போது ,உண்மையான நிலையை ஆதாரப்பூர்வ அலசி வெளியிட்டது , புள்ளி விவர ஆய்வுகளுக்கு புகழ்ப்பெற்ற ஒரு கில்லாடிப்பதிவர் மட்டுமே(ஹி...ஹி), ஆனால் உண்மையான நிலவரம் புரியாமல் பலர் ,லோகநாயகருக்கும் , அந்த கில்லாடிப்பதிவருக்கும் வாய்க்கா வரப்பு தகறாறு போல புனைவுகளை சொல்லி திரிந்தது செம காமெடி.

டிடிஎச் இல் வெளியீடு பின்வாங்கப்பட்டு திரையரங்கத்தில் வெளியிடுவது தவிர வேறு வழியில்லை என்ற நிலை வந்தப்போதும் "மீசையில் மண் ஒட்டவில்லை" என்பது போல என்ப்படம் நான் தான் தேதி சொல்வேன் என தத்துப்பித்துவென பேசினார் லோக நாயகர்,ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் சொன்ன தேதி தான் இப்போ படம் வெளியாகும் தேதி என்பது சொல்ல மறந்த கதை. :-))

500  தியேட்டர்கள் தமிழ் நாட்டில் தர முன்வந்துள்ளார்கள் ,அதனால் தான் டிடிஎச் இல் முதலில் வெளியிடவில்லை என தானாகவே வேற சொல்லிக்கிறார், கார்த்தி படமே சுமார் 700 தியேட்டர்களில் தமிழ் நாட்டில் வெளியாகும் காலமிது.

படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து டிடிஎச் இல் வெளியாகும் என்ற நிலை வந்த பின்னும், என் வழி பின்னால் பொது வழியாகும்னு புதுமை படைச்சாப்போல இன்னமும் சொல்லிக்கொண்டிருப்பது அதை விட பெரிய காமெடி.

படம் வெளியான பின்னர் டிடிஎச் இல் நான்காவது நாளிலேயே இந்திப்படங்கள் வருகிறது( இதனையும் முன்னரே சொல்லியாச்சு), அப்படி இருக்கும் போது ஏற்கனவே இருக்கும் வழியில் போய்விட்டு தானே புது வழியினை முதன் முதலில்  உருவாக்கியது போல ஒரு மாயத்தோற்றம் உருவாக்கி சிற்றின்பம் அடைவதேன் :-))


மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்து, யூ டீவி தயாரித்த "கிராண்ட் மாஸ்டர் " என்ற மலையாளப்ப்படம் மே -3,2012 அன்று திரையரங்கில் வெளியான அன்றே அமெரிக்கா,கனடா ஆகிய நாடுகளில் நெட்ஃப்ளிக்ஸிலும் 'ராச நடைப்போட்டு' வெளியானது.

அப்போதெல்லாம் மலையாள திரையுலகில் பெரிதாக கரைச்சல் இல்லை ஏன் எனில் , படத்தின் பட்ஜெட் மற்றும் தியேட்டரில் அதிகம் வெளியாகாத இடங்களில் மட்டும் மாற்று முறையான நெட்ஃப்ளிக்ஸ், டிடிஎச் என வெளியானால் யாருக்கும் இழப்பு இருக்காது என்பதால் ஆகும்.

பெருவாரியாக திரையரங்கில் வெளியாகும் இடத்திலும் ஒரு நாள் முன்னதாக டிடிஎச் இல் வெளியிடுவது கண்டிப்பாக திரையரங்க வசூலை பாதிக்கும் என்பதால் தான் தமிழகத்தில் எதிர்ப்பு, ஆரம்பத்தில் டிடிஎச் இல் பணம் கூறையைப்பிய்த்துக்கொண்டு கொட்டும் என மனக்கணக்குப்போட்டு செயல்ப்பட்டதன் ,பலன்  பொங்கல் அன்று வெளியிட முடியாமல் போனதே, பொங்கலை ஒட்டி சுலையாக ஐந்து விடுமுறை நாட்கள் கிடைத்தது ,படம் வெளியாகி இருக்குமானால் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் கிடைத்திருக்கும், அதனை இழந்தது தான் மிச்சம். படு மொக்கையான அலெக்ஸ் பாண்டியன் கூட பொங்கல் விடுமுறையில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி கல்லாக்கட்டியது. எனவே படம் வாங்கியவர்களுக்கு பெரிய அளவில் சேதாரம் இல்லை.

மேலும் டிடிஎச் புக்கிங்கில் பெரிய அளவு வருமானம் வரவில்லை, ரசிகர்களும் ஆர்வம் காட்டவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகிவிட்டதால், லோகநாயகருக்கு பெரிய ரசிகர்கள் பின்ப்புலம் இருக்கு என்ற மாயையும் உடைந்துப்போனது தான் மிச்சம்!

இதில் அல்வா வாங்கியது , லோகநாயகர் சொன்னதை நம்பி 1000 ரூவா பணங்கட்டிய சில,பல ஆர்வக்கோளாறு அப்பாவிகள் தான், படம் தியேட்டரில் வெளியான பின் டிடிஎச்சில் பார்க்க ஆயிரம் என்பது டைரக்ட் டு ஹோம் கொள்லை :-))

பெரிய பட்ஜெட்டில் லோகநாயகர் நடித்தால் விலைப்போகாத நிலை உள்ளது என்பதும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது, எனவே இனி வரும் காலங்களில் எந்த தயாரிப்பாளரும் லோகநாயகரை நம்பி பெரிய அளவில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள்.

எந்த ஒரு நடிகருக்கும் படம் எளிதாக கேட்ட விலைக்கு போகும் நிலையை வைத்தே "மார்க்கெட்" உள்ளது என்பார்கள், எப்பொழுது ஒரு நடிகரின் படத்தினை சொன்ன விலைக்கு வாங்க ஆள் இல்லையோ அவர்களுக்கு மார்க்கெட் போய்விட்டது என்பார்கள் சுருக்கமாக "ஃபீல்ட் அவுட்" என்பார்கள்.

கிட்டத்தட்ட "ஃபீல்ட் அவுட்" நிலைக்கு லோகநாயகரே தன்னைக்கொண்டு போய் நிறுத்திக்கொண்டார் எனலாம், இனி தயாரிக்கவும், வாங்கவும் திரையுலகில் அனைவரும் தயங்குவார்கள், சொந்தமாக தயாரித்து, வெளியிட்டுக்கொண்டால் மட்டுமே களத்தில் நிற்க முடியும் என்ற நிலைக்கு தானே உள்ளாக்கி கொண்டு விட்டார்.

இத்தனை நாளும் லோகநாயகரின் படங்கள் எம்ஜியில் விலையானது , டிடிஎச் இல் பெரிதாக பணம்  வரும் என்ற நப்பாசையில் சதவீதத்தில் வெளியிடுகிறேன் என ஒப்புதல் வாக்கு மூலம் வேறு கொடுத்துவிட்டார், எனவே டிடிஎச் இல் வெளியாகாத நிலையிலும் இப்பொழுதும் சதவீதத்தில் தான் வெளியாகிறது, எனவே இனி வருங்காலத்தில் லோகநாயகர் படம் வெளியானாலும் சதவீதத்தில் வெளியிட சொல்வார்கள், இவ்வாறு வெளியிடுவது தயாரிப்பு தரப்புக்கு பெரிய " ரிஸ்க்" எனவே இனிமேல் வெளித்தயாரிப்பாளர்கள் யாரும் முன் வந்து ரிஸ்க் எடுக்க மாட்டார்கள்.

எனவே விஷ்வரூபம் என்ற ஒரே படத்தின் மூலம் லோகநாயகரின் தமிழ் சினிமா பயணம் ஒரு இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது  எனலாம், படம் வெளியாகி வெற்றிகரமாக தயாரிப்பு செலவினை மீட்டெடுத்தால் மட்டுமே கொஞ்சம் நிம்மதி மூச்சு விடமுடியும்.

ஆனால் அதற்கும் ஆப்பு வைப்பது போல இஸ்லாமிய அமைப்புகள் கொடி பிடிக்க ஆரம்பித்துவிட்டன  இந்த இடத்திலும் லோகநாயகரின் தப்புக்கணக்கே காரணம்.

படம் தயாரிக்கப்பட்டு ரொம்ப நாட்களாகிறது , ஜனவரி 11 இல் வெளியாகும் என்ற நிலை இருந்தப்போது கூட படத்தினை போட்டுக்காட்ட எண்ணவில்லை,இத்தனை நாளாக போட்டுக்காட்டாதவர் திடீர் என ஏன் போட்டுக்காட்ட வேண்டும்? இலவசமாக விளம்பரம் கிடைக்கும் என நினைத்து போட்டுக்காட்டினார், ஆனால் அவர் எதிர்ப்பார்த்ததைவிட எதிர்ப்பு அதிகமாகி , வளைகுடா நாடுகளில் தடை என பிரச்சினை விஷ்வரூபம் எடுத்துள்ளதால் இப்பொழுது பின்னால் பற்றிக்கொண்டது :-))

மேலும் சமீபத்திய செய்தியாக , தமிழக அரசும் தடை விதித்துள்ளதாக தெரிகிறது. ஆரம்பத்தில் ஜெயா டீவிக்கு சேட்டலைட் உரிமம் கொடுத்துவிட்டதால் எதிர்ப்புகள் வராது என பலரும் சொன்ன நிலையில் , இச்செய்தி ஒரு திருப்பு முனை எனலாம், அனேகமாக டிடிஎச் ஒளிப்பரப்பில் சன் டிடிஎச் ஐயும் சேர்த்துக்கொண்டதன் பின் விளைவாக இருக்கலாம் என நினைக்கிறேன்.


தணிக்கை அறிக்கை:http://cbfcindia.gov.in/html/uniquepage.aspx?lang=TAMIL&va=vishwaroopam&Type=search

படத்தில் ass, bitch, bastard, matherchood , போன்ற வசைச்சொற்கள் ஒலிநீக்கம் செய்யப்பட்டுள்ளது, வெடித்து சிதறுவது, கையை வெட்டுவது, கழுத்தை அறுப்பது போன்ற காட்சிகள் உட்பட 10 வெட்டுக்களுடன் U/A  கொடுத்துள்ளார்கள்.

அரசியலமைப்புள்ள ஒரு நாட்டில், சட்டப்பூர்வமாக இயங்கும் தணிக்கை அமைப்பால்  பொது மக்கள் பார்க்கலாம் என சான்றளிக்கப்பட்ட பின் , அதில் உள்ள கருத்துக்கள் ஏற்புடையது அல்ல ,வெளியிட கூடாது என இஸ்லாமிய அமைப்புகள் சொல்வது யதேச்சதிகாரம் ஆகும்.

இப்படி படத்தினை போட்டுக்காட்டாமல்,துப்பாக்கி பட பாணியில்  வெளியிட்டு விட்டு பின்னர் எதிர்ப்பு காட்டினால் ,கொஞ்சம் கட் செய்து விட்டோம்னு சொல்லி ஒரு அறிவிப்பு விட்டு இருக்கலாம் , கூடுதலாக அடுத்த படத்தில் ஒரு இஸ்லாமியராக நடிப்பேன், ஒரு இஸ்லாமிய பெண்ணை ஹீரோயினாக நடிக்க வைப்பேன்னு சொல்லி சமாதானக்கொடியை ஆட்டியிருந்தால் துப்பாக்கி போல ஹிட் ஆகிடும்:-))துப்பாக்கி படம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் காரைக்காலில் ஷமினா என்ற தியேட்டரில் 25 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது, தியேட்டரும் இஸ்லாம்மியருக்கு சொந்தமானது ஆகும்.

எப்படி எனில் படத்தில அப்படி என்ன நம்மளைப்பத்தி தப்பா சொல்லி இருக்காங்கன்னு பார்க்க ஒரு தடவை படம் பார்ப்பாங்க, அப்புறம் சொன்னாப்போல காட்சிகள் நீக்கி இருக்கானு உறுதி செஞ்சுக்க இன்னொரு தடவை படம் பார்ப்பாங்க ,எனவே படம் கண்டிப்பா ஹிட் ஆகிடும் :-))

லோகநாயகர் இனியும் நிம்மதியா நல்ல முறையில் படம் எடுக்கணும் என்றால் அவரை சுற்றி இருந்துக்கொண்டு  தப்பா ஆலோசனை வழங்கும் விசிலடிச்சான் குஞ்சுங்க கூட்டத்தினை விரட்டிவிட்டாலே  போதும் அவரு பொழச்சுப்பார்.

ஹி...ஹி அப்படியே ஆக்கப்பூர்வமான முறையில் ஆலோசனை வேண்டுமெனில் என்னைப்போன்றவர்களை அனுகலாம் :-))

என்ன கொடுமை சார் இது!
***********

# திருட்டு கரும்பு இனிக்கும்!

இந்த கொடுமையும் லோகநாயகரை முன் வைத்தே, டிடிஎச் இல் வெளியிடுவது திருட்டு டிவிடியை ஒழிக்கும் என ஆருடம் சொன்னார், ஆனால் மக்கள் திருட்டு டிவிடி தியேட்டரை விட விலை மலிவாக இருப்பதால் தான் பார்க்கிறார்கள் என்ற அடிப்படை உண்மையை மறந்துவிட்டார்.

டிடிஎச் இல் பார்க்கும் கட்டணம், நியாயமானதாகவும், படம் நன்றாக இருந்தால் மட்டுமே டிடிஎச் இல் பார்ப்பார்கள், ஒரு படம் டிடிஎச் இல் வருகிறது என்பதற்காகவே அனைவரும் பார்க்க மாட்டார்கள்.

திருட்டு டிவிடியை ஒழிப்பது என்பது தயாரிப்பாளர்கள் கையில் தான் உள்ளது. சிங்கப்பூர் ,மலேஷியா, அமெரிக்காவிற்கு விற்கப்படும் திரைப்படங்களில் இருந்து தான் திருட்டு டிவிடி தயாராகிறது, அதனை திருட்டு டிவிடி என சொல்வதே தவறு , அய்ங்கரன், லோட்டஸ் ஆகிய நிறுவனங்கள் 5.1 இல் தரமான டிடிவிடிக்களை விற்கிறார்கள், அதுவும் பெயர், ,முகவரி தொலைப்பேசி எண் , இமெயில் எல்லாம் விலாவாரியாகப்போட்டு :-))டிவிடியில் முகவரி...


அமெரிக்கா, சிங்கப்பூர் ,மலேஷியாவில் டிவிடி விற்கும் உரிமையா கொடுத்தார்கள், விநியோக உரிமைத்தானே கொடுத்தோம் என இந்த தயாரிப்பாளர்கள் ஏன் கேட்பதில்லை?

அப்படிக்கேட்டால் வெளிநாட்டு விநியோக உரிமையை ஒருத்தரும் வாங்க மாட்டாங்க ,எனவே வந்த வரை லாபம் என  கேள்வியே கேட்காமல் வெளிநாட்டுக்கு விற்கிறார்கள் ,அவர்களும் டிவிடி தயாரிச்சு உலகமெங்கும் விற்கிறார்கள், தமிழ்நாட்டில் ஒரு வாரத்திலேயே தரமாக 5.1 இல் டிவிடி கிடைப்பது இப்படித்தான்,இதில் படம் வந்ததும் ஹீரோவும், தயாரிப்பாளரும் திருட்டு டிவிடிஐ ஒழிக்க வேண்டும் என கமிஷ்னர் அலுவலம் போய் பேட்டிக்கொடுப்பதை பார்த்தால் உலகமகா நடிப்புடா சாமினு சொல்ல தோன்றும் :-))

இந்த கொடுமையில இன்னொரு கொடுமையும் சேர்த்தே சொல்லுறேன், டிடிஎச் இல் வெளியாகிறது என செய்தி வந்ததுமே  ,ஒரு கத்துக்குட்டி,300 கோடிக்கு புக்கிங் ஆகி சரித்திர சாதனைனு முகநூல் ,வலைப்பதிவு  போஸ்டர் ஒட்டியது , அப்படி புரளியக்கிளப்பிவிட்டவர் இதே போல பல புரளிகளை கிளப்பிவதில் வல்லவர், ஒரு காலத்தில் நடிகை சினேகவுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு திருமணம் செய்யப்போவதாக ஒரு புரளியைக்கிளப்பியவர்.

மேற்படி நபர் ,மச்சக்காரன் படத்திற்கு சிங்கப்பூர் ,மலேஷிய விநியோகம் வாங்கிவிட்டு திருட்டு டிவிடி தயாரிக்க முயன்றப்போது கையும் களவுமாக மாட்டி உதைக்கூட பட்டார்னு செய்தியுண்டு, திரையுலகில் இருப்பவர்களுக்கு எப்படி திருட்டு டிவிடி உருவாகிறது ,யார் செய்கிறார்கள் என தெரியும், ஆனாலும் எந்த முயற்சியும் செய்யாமல் ,புதுசு புதுசா ஒரு காரணம் சொல்வதே வாடிக்கையாகப்போய்விட்டது.

செய்தி:

Nag Ravi Corporate Chief or Thief
Posted by Editor on November 9th, 2007
Nag Ravi Corporate Chief or Thief

Insight Media has offices in Singapore, Canada, New Zealand, Malaysia, UAE, USA and Mauritius with Head Quarters in Chennai.. Insight’s local and overseas distributions include Sivaji, Kireedam, Veerappu and the forthcoming, Bommalattam, Machchakkaran and Vambusandai. Besides Tamil film audio, the company has also brought out a VCD titled Padmini .

The Legend on the legendary actor and educational CDs at rock bottom prices to contain piracy. The ostentatious Nag Ravi, also known as Sneha’s former lover was caught in the act of taking a camera print of Machakaran at Devi Sridevi preview theatre. Ravi was beaten up by the producer Nanthagopal but he managed to escape and is now absconding, while the manager of the preview theatre Eknath and the operator was also beaten up. Ravi and his Insight Media were the overseas distributors of Machakaran. They had taken seven prints of the film from the Lab, but only dispatched six of them on Tuesday evening mainly to Malaysia and Singapore.

http://www.kollywoodtoday.net/news/nag-ravi-corporate-chief-or-thief/

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!

என்ன கொடுமை சார் இது!

*******************

# அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!

அஞ்சா நெஞ்ச அண்ணனும், காமாண்டர் தம்பியும் அக்னி நட்சத்திரமாய் அவ்வப்போது உரசிக்கொள்வது வழக்கம், அடுத்த தலிவரு தம்பித்தான்னு சொன்னதும் சங்கரமடமா இதுனு அண்ணன் சாமியாடினார்.

அதுக்கு கொஞ்ச நாளுக்கு முன்னர் , எனது எதிரிகளை இயற்கை பார்த்துக்கொள்ளும்னு சாபம் எல்லாம் விட்டது நினைவிருக்கும். இதனை வைத்து சில அரசியல் வதந்திகளும் அப்போது உலவியது, ஆனால் அதில் உண்மை இருக்குனு  நம்பத்தகுந்த வட்டாரங்களில் ஒரு தகவலும் உலாவுது(எந்த அளவுக்கு நம்பகம்னு தெரியாது கேள்விப்பட்டதை சொல்கிறேன்),  இளையவர் இப்பொதெல்லாம் அடிக்கடி லண்டன் பயணமாவதே மருத்துவ சோதனைக்கு தான் எனவும் ,அவருக்கு ஆரம்ப நிலை இரத்தப்புற்று நோய் எனக்கண்டுப்பிடித்திருப்பதாகவும், அதற்கு ரகசிய சிகிச்சை எடுக்கவே ஏதேனும் ஒரு காரணத்தினை முன்னிட்டு லண்டன் செல்வதாக சொல்கிறார்கள், ஒராண்டுக்கு முன்னர் இருந்தே சிகிச்சை நடக்கிறதாம்.இப்பொழுது அரசல் புரசலாக பலருக்கும் தகவல் கசிந்து , கட்சியின் மேல்மட்டத்திலேயே சூடாகப்பேசப்படும் வதந்தி இது தான்.

இதனை நம்புவதா வேண்டாமா என தெரியவில்லை!

என்ன கொடுமை சார் இது!
-------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

CBFC.gov.in,kollywoodtoday.net, wiki, google,இணைய தளங்கள் நன்றி!
---------------------

Sunday, January 20, 2013

மொக்கைத்தோரணம்-2

(அய்யோடா மொக்கையை ஆரம்பிச்சுட்டானே ...இனிமே எப்ப இத நிறுத்துவானோ?...)

# செல் மொழி.

செல்லெடுத்து செல்வான் சினங்கொள்வான் அவ்விடத்து
சிக்னல் இல்லை எனில்.
------------------
மண் மணத்துடன் சமையல்!

# பிராபல்யப்பதிவர்;என்ன சாம்பாரில் மண்ணு நொர நொரங்குது?

பி.பவின் மனைவி:நீங்க தானே மண் மணத்தோட சமையல் செய்ய சொன்னிங்க,அதான் கொஞ்சம் மண்ணள்ளி சாம்பாரில் போட்டேன்!!!
-----------------
அடியேன் பிழையா?

#பதிவர்-1: எதுக்கு அந்த பிராபல்யப்பதிவரை புத்தக சந்தையில் வச்சு அடிச்சீங்க, அவர் எழுதுவது புடிக்கலைனா படிக்காமல் இருக்கலாமே?

பதிவர்-2: நீங்க வேற, நான் அவர் பதிவுகளின் தீவிர வாசகன், அவர் தான் புத்தகக் காட்சியில் அடியேன்! அப்படினு பதிவு போட்டிருந்தார், ஆசையா அடிக்க சொல்லுறாரே அடிக்கல்லைனா தப்பா நினைச்சுப்பாருன்னு அடிச்சேன், அது தப்பா?

---------------------------

சிறப்புக்கழிவு உண்டு!

# பிராபல்ய பதிவரின் மனைவி: ஏங்க நேத்து புத்தகக் சந்தைக்கு போனத நம்ம வீட்டு பால்காரரிடம் சொன்னிங்களா?

பிராபல்ய பதிவர்:  ஆமாம் அதுக்கென்ன?

பி.ப.மனைவி: சொன்னதோட இருக்கக்கூடாது, புத்தக சந்தையில 10% சிறப்புக்கழிவு கொடுக்கிறாங்க, இவ்வளவு நாளா பால் வாங்குறேன் , நீ ஒன்னும் சிறப்பு கழிவு தறக்கூடாதுன்னு கேட்டிங்களாம், அதான் ஒரு கூடை சாணிய எடுத்து வந்து அய்யா கேட்ட சிறப்பு கழிவுனு கொடுக்கிறான் , தேவையா இது?

பிராபல்யப்பதிவர்: ஹி...ஹி ..ஹி, அது வந்து ...
----------------------------

கிடைத்தால் கேட்பேன்!

# அப்ரண்டீஸ் பதிவர்; அண்ணே  அவரை எதுக்குன்னே கெட்ட வார்த்தையில் திட்டி அடிக்க போனிங்க?

புத்தக சந்தையில் அப்பளம் விற்பவர்: பின்ன என்ன தம்பி, நானே பொண்டாட்டி நகைய அடக்கு வச்சு ,கடை வாடகைக்கு எடுத்து ,அப்பளம் சுட்டு விக்குறேன், அவரு ஏதோ பிராபல்ய பதிவராம் ,எங்கிட்டே வந்து ஒரு அப்பளம் வாங்கிட்டு , குடிக்க மினரல் வாட்டர் வேணும், நான் கிடைத்தால் கேட்பேன்னு முகநூல் சங்க தலைவர்னு சொல்லுறான், அதான் கடுப்பாயி , மருவாதியா போயிடு இல்லைனா கொதிக்கிற எண்ணைய எடுத்து மூஞ்சில ஊத்திருவேன்னு சொல்லி விரட்டிவிட்டேன் , ஆமாம் உனக்கு என்ன தம்பி வேணும் அப்பளம் மட்டும் போதுமா இல்ல....

அப்ரண்டீஸ் பதிவர்: ஹி...ஹி எனக்கு அப்பளம் மட்டும் போதும், நீங்க தூக்கிப்போட்டாக்கூடா கேட்ச் புடிச்சுப்பேன்( அய்யோடா நல்ல வேளை நானும் ஒரு பதிவர்னு சொல்லிக்கலை ,மூஞ்சு தப்பிச்சுது)
------------------------

எதை செய்தாலும் பிளான் பண்ணி செய்யணும்!

#அப்ரண்டீஸ் பதிவர்: அண்ணே வணக்கம்னே, புத்தக சந்தைக்கு வந்தீங்களா?

பிராபல்யப்பதிவர்: ஆங்க் ...உழவர் சந்தைக்கு வந்தேன் கேள்வியப்பாரு?

அப்ரண்டீஸ்: ஹீ...ஹி சும்மா ஒரு சம்பிரதாயத்துக்கு கேட்டால் ஏன்னே கோச்சுக்கிறிங்க, அது சரி கையில சுருட்டி என்னமோ வச்சு இருக்கீங்களே ,என்னதுண்ணே,காலண்டரா?

பிராபல்யம்: நான் எதை செய்தாலும் பிளாண் பண்ணி செய்வேன், அதான் புத்தக சந்தைக்கும் பிளாணோட வந்திருக்கேன்.(பிளாணை காட்டுகிறார்)

அப்ரண்டீஸ்: என்னணே ஏதோ வீட்டு புளுப்பிரிண்ட் பிளாண் போல இருக்கு?

பிராபல்யம்: ஹி...ஹி பிளாணோட வந்திருக்கேன்னு தானே சொன்னேன், எந்த பிளாணா இருந்தா என்ன , எப்பவும் கையில ஒரு பிளாண் இருக்கணும் :-))

அப்ரண்டீஸ்:ஙே...
------------------------------

பார்க்கிங் கலாட்டா:

# பார்க்கிங் கட்டணம் வசூலிப்பவர்: சார் டூ விலர் நிறுத்தினா 10 ரூபா பார்க்கிங் கட்டணம்.

பிராபல்யப்பதிவர்: இது என்ன அநியாயக்கொள்ளையா இருக்கு, நான் யார் தெரியும்ல , கிடைத்தால் கேட்பேன் முகநூல் சங்கத்தலைவர், பிராபல்யப்பதிவர் எங்கிட்டேயேவா...

பா.க.வசூலிப்பவர்: நீங்க யாரா வேணா இருக்கட்டும் டூ வீலர் நிறுத்தினா 10 ரூபா கட்டணம் கொடுக்கணும்.

பிரால்யப்பதிவர்:  இன்னொருக்கா நல்லா சொல்லுங்க, 2 வீலர் நிறுத்தினா 10 ரூபா கொடுக்கணுமா?

பா.க.வசூலிப்பவர்: ஆமாய்யா...ஆமாம்.... 2 வீலர் நிறுத்தினா 10 ரூபா கொடுக்கணும்!

பிராபல்யப்பதிவர்: பேச்சு மாறக்கூடாது,வண்டிய நிறுத்தினா தானே காசு கொடுக்கணும், நான் வண்டிய நிறுத்தாமல் படுக்க வச்சிடுறேன் , இப்போ காசுக்கொடுக்க மாட்டேன் , நான் யாரு கிடைத்தால் கேட்பேன் தலைவரு என்கிட்டேவா ...எப்பூடி?

பா.க.வசூலிப்பவர்: நீ போ மோனே தினேஷா ...(மனதுக்குள் ,எஞ்சினை கழட்டி வித்துற வேண்டியது தான்)
------------------------------

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

#பிராபல்யப்பதிவர்; சார் ...சார்.. ஒரு பரதேசி எனக்கு போன் செய்தான் ,அதை அட்டண்ட் செய்றதுக்குள்ள என் பையன் காணாம போயிட்டான், செவப்பு கலர் கட்டம் போட்ட சட்டையும், சோட்டா பீம்னு முதுகில் எழுதி இருக்கும்,

புத்தக சந்தை உதவி மைய அறிவிப்பாளர்; சார் கொஞ்சம் பொறுமையாக உட்காருங்க, நீலக்கலர் கட்டம் போட்ட சட்டை, கார்கோ பேண்ட் , பாக்கெட் புல்லா வாட்டர் பாட்டில்,சிப்ஸ்னு வச்சிருப்பார்னு சொன்னது எல்லாம் சரியா இருக்கு, இப்போ தான் உங்க மகர் வந்து நீங்க காணாமல் போயிட்டதாகவும் கண்டுப்பிடிச்சு வச்சிருக்க சொல்லிட்டு  புத்தக சந்தைய சுத்திப்பார்க்க போயிருக்கார், அவர் திரும்பி வர்ர வரைக்கும் இப்படி ஓராம உட்கார்ந்து வெயிட் பண்ணுங்க .

பிராபல்யப்பதிவர்: ஙே....
------------------------

புத்தக பட்டியல் போடுவதன் அவசியம்!

அப்ரண்டீஸ் பதிவர்: தல , எல்லாப்பதிவர்கள் கிட்டேயும் என்ன புத்தகம் வாங்கினீங்கண்ணு கேட்டு ,கேட்டு பட்டியல் போடுறிங்களே , அதை எல்லாம் வச்சு பதிவு போடத்தானே? இவ்வளவு கூட்டத்திலும் உங்க கடமை உணர்ச்சிய நினைச்சா கண்ணு கலங்குது தல....

பிராபல்யப்பதிவர்: ஹி...ஹி யார், யார் என்ன புத்தகம் வாங்கி இருக்காங்க, அதில் நல்ல புத்தகம் ,நான் படிக்காத புத்தகம் எதுனு தெரிஞ்சுக்கத்தான், அப்போ தானே பின்னாடி ஓசிக்கேட்க வசதியா இருக்கும் எப்பூடி?

அப்ரண்டீஸ்: தெய்வமே நீங்க எங்கேயே போயிட்டிங்க ...அவ்வ்வ்!!!
-----------------------

(எவ்ளோ புத்தகம் ... இதெல்லாம் வவ்வாலு தான் படிப்பான் ,நமக்கு ஆகாது)

# புத்தக சந்தையில் இப்படியும் ஒரு அறிவிப்பு(வைக்கப்படலாம்):

" புத்தகமே வாங்காமல் ,புத்தகங்களை மட்டும் வளைச்சு வளைச்சு படம் எடுக்கும் பதிவர்களின்  கேமரா, மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்படும்"!!!
----------------------

பின்குறிப்பு:

#இந்த மொக்கைகள் யாவும் அடியேனின் சுயக்கற்பனையே, இயல்பு வாழ்க்கை மாந்தர்களையோ, சம்பவங்களையோ குறிப்பிடுவன அல்ல, அப்படியும் மீறி யாரேனும்  நினைத்தால் அது தோற்றப்பிழையே, அடியேன் பொறுப்பல்ல.

# படங்கள் உதவி கூகிள்,நன்றி!
------------------------------

Tuesday, January 15, 2013

கால்நடைச் செல்வம்.


(ஹி...ஹி..கண்ணா கரும்பு தின்ன ஆசையா?)

அனைவருக்கும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்!

பாரத நாடு பழம் பெரு நாடு நீரதன் புதல்வர் இந்நிலை மறவாதீர் , இப்பாடல் நமக்கு மட்டும் அல்ல நம்ம ஊரு மாடுகளுக்கும் பொருந்தும், நம்ம நாடு உலகிலே மிக அதிக எண்ணிக்கையில் கால்நடைகளை கொண்ட நாடு, இச்சாதனை இன்று நேற்றல்ல பன்னெடுங்காலமாக தொடர்ந்து வரும் சாதனையாகும்.

விவசாயமே பிரதான பொருளீட்டும் தொழிலாக கொண்டு உலகம் இயங்கிய காலத்தில் விவசாயத்தொழிலின் உச்சத்தில் நின்ற நாடு இந்தியா, எனவே உலக அளவில் செல்வ செழிப்பான நாடுகளில் முதலிடத்தில் இருந்தது.

விவசாயம் செய்ய நிலத்துக்கு அடுத்து இன்றியமையாத மூலதனம் கால்நடைகள் ஆகும், கால்நடைகளில் உழவு மாடு, கறவை மாடு, இரண்டுக்கும் பயன்ப்படும் வகை என உண்டு. அனைத்து வகை கால்நடைகளிலும் மிக அதிக எண்ணிக்கையில் உற்பத்தி திறனுடன் இந்தியா விளங்கியதாலேயே விவசாயத்தின் உச்சத்தினை தொட முடிந்தது.


உழவு மாட்டினை உயிருள்ள டிராக்டர் எனலாம், டிராக்டருக்கு எரிபொருள் செலவு செய்தால் உழலாம் ஆனால் உரம் கொடுக்காது, அதே சமயம் உழவு மாட்டுக்கு உணவு கொடுத்தால் உழும், வண்டி இழுக்கும், கறவை மாடுகளின் இனவிருத்திக்கு பயன்ப்படும், மேலும் சாணமானது உரமாகவும் பயன்ப்படும்.

மாட்டுக்கு  என தனியாக உணவு  உற்பத்தி செய்யத்தேவையில்லை, மனிதர்கள் பயன்ப்படுத்தாத தாவர கழிவுகள், வைக்கோல், பிண்ணாக்கு என எஞ்சியவையே உணவாக பயன்ப்படும், எனவே விவசாய உற்பத்தியில் எந்த பொருளும் விரயமாகாமல் சிக்கனமாக விவசாயம் செய்யலாம்.

(காங்கேயம் காளை,காங்கேயன்=கங்கையின் மைந்தன்,முருகன்)

எந்திர மயமாக்கல் விவசாய உற்பத்திக்கு தேவை எனினும், இந்தியா போன்ற கால்நடை மிகுந்த நாட்டில் எந்திர மயமாக்கல் விவசாய செலவீனங்களை அதிகரிக்கவே செய்கிறது, பாரம்பரிய எளிய விவசாயத்தில் உற்பத்தி செலவினை விவசாயி தீர்மானிக்க முடியும், எந்திர மயமாக்கப்பட்ட விவசாய உற்பத்தியில் எரி பொருள், இரசாயன உரம், பூச்சி மருந்து விலை என அனைத்தும் புறக்காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன, எனவே உற்பத்தி செலவு இன்னதென விவசாயியால் திட்டவட்டமாக முடிவு செய்ய இயலாது, அதே சமயம் விளைப்பொருளின் கொள்முதல் விலையும் விவசாயி கையில் இல்லாத சூழலில் , உற்பத்திக்கும் வியாபாரத்துக்கும் இடையில் விவசாயி வெறும் பொம்மையாக உழைப்பை சிந்திவிட்டு பலனை யார் கொடுப்பார்கள் என தெரியாத சூழலில் வாழ்கிறான்.

(சிவப்பு சிந்தி மாடு)

அதிக அளவில் கால்நடைகள் இந்தியாவில் இருந்த போதிலும் பால் உற்பத்தியில் மிகவும் பின் தங்கியிருக்கிறோம், இதற்கு காரணம் இந்திய மாடுகளின் பால் உற்பத்தி திறன் குறைவாக உள்ளது என நம்ம நாட்டு ஆய்வாளர்கள் சொல்கிறார்கள், இதனை நிவர்த்தி செய்ய ஐரோப்பிய நாடுகளின் உயர் உற்பத்தி ரக மாடுகளை கொண்டு கலப்பினம் செய்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அரசு பல திட்டங்களைப்போட்டு செயல்படுத்தி வருகிறது, கேட்பதற்கு மிகவும் நல்ல திட்டம் போல தெரிந்தாலும் உண்மை வேறாக உள்ளதாக பல வேளாண் அறிஞர்களும், உயிர் தொழில்நுட்ப வல்லுனர்களும் கண்டுப்பிடித்துள்ளார்கள்.

அது எப்படி எனப்பார்ப்போம்.

அமெரிக்காவில் மாட்டிறைச்சி மற்றும் பால் பண்ணை தொழில் மிகவும் வளர்ச்சியடைந்த ஒரு தொழிலாகும்.

அவர்கள் கூடுதல் இறைச்சி மற்றும் பால் உற்பத்தி பெருக்கத்திற்கு நம்பி இருப்பது இந்திய வகை மாடுகளை தான் என்பது மறைக்கப்பட்ட உண்மையாகும்.

(பிரம்மன் வகை காளை- Bos indicus)

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரம்மன் வகை எனப்படும் Bos indicus மாடுகள் பெரிதாக,வலுவாக வளரக்கூடியவை, இறைச்சி மற்றும் பால் உற்பத்திக்கு பயன்படுபவை.மிக அதிக இழுவைத்திறன் கொண்டவை.

ஐரோப்பிய வகை மாடுகளை Bos taurus என்பார்கள், மறபணு ரீதிய இந்திய மாடுகளை விட தரம் குன்றியவை,இந்திய வகை மாடுகளின் சிறப்பம்சம் என்னவெனில்,

குறைந்த வெப்பமும் தாங்கும், அதிக வெப்பமும் தாங்கும்.இந்திய மாடுகளின் வியர்வை சுரப்பிகளின் எண்ணிக்கை மிக அதிகம் இருப்பதே இதற்கு காரணம்.

மேலும் வெகு அடர்த்தியான உரோமங்கள் உள்ளவை, உரோமங்களுக்கு அடியில் கருமை நிறத்தோல் இருப்பதால் வெப்பத்தினை சீராக பராமரிக்க வல்லவை.

மேலும் பிரம்மன் வகை மாடுகள் தளர்வான மேல் தோலினை கொண்டவை எனவே தேவைக்கு ஏற்ப உடல் மேற்பரப்பினை அதிகரித்து வெப்ப வெளியீடும் அளவை அதிகரிக்க ,குறைக்க வல்லவை.

இவ்வகை மாடுகளின் உடலில் இயற்கையாக ஒருவகை திரவம் சுரக்கும் ,இது பூச்சிகளை இயல்பாக விரட்ட வல்லது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம்.

(சாஹி வால் மாடு)

இந்தியாவை பிரிட்டீஷார் ஆண்டப்பொழுது ,இந்திய பிரம்மன் வகை மாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன, அவற்றை போஸ் ஈரோப்பியன் வகையுடன் கலப்பினம் செய்தார்கள்,மேலும் நெல்லூர், கிர், கிருஷ்ணாவாலி வகை மாடுகளும் ஏற்றுமதி செய்யப்பட்டு அமெரிக்காவில் கலப்பினம் செய்யப்பட்டது.

ஆதாரப்ப்பூர்வமாக  Dr. Hilton Briggs, author of Modern Breeds of Livestock என்ற நூலில் இத்தகவல்கள் உள்ளது. இவரது நூலில் உள்ள தகவல் என்னவெனில்,

1849 இல் Dr. James Bolton Davis of Fairfield County, South Carolina, என்பவர் இரண்டு ஜோடி போஸ் இன்டிகஸ் காளைகளை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்து ,கலப்பின முயற்சிகளை மேற்கொண்டுள்ளார், இவர் அப்போது துருக்கி சுல்தானுக்கு கால்நடை ஆலோசகராகவும் செயல்ப்பட்டு வந்துள்ளார், இதனால் அங்கும் இந்திய மாடுகள் பரவியது.

பின்னர் 1854 இல் St. Francisville, LA வை சேர்ந்த Richard Barrow என்ற வேளாண் அறிஞரின் சேவையைப்பாராட்டி பிரிட்டீஷ் அரசே ஒரு ஜோடி போஸ் இன்டிகஸ் மாடுகளை அன்பளிப்பாக அளித்துள்ளது,அவர் உருவாக்கிய கலப்பினத்துக்கு பாரோவ் பிரீட் என்றப்பெயர் வைக்கப்பட்டது, பின்னர் படிப்படியாக கலப்பினங்கள் செய்யப்பட்டு இன்றைய அமெரிக்க பிரம்மன் வகை மாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய மாடுகளே இன்றைய அமெரிக்காவின் மாட்டிறைச்சி மற்றும் பால் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன.

அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் ஆஸ்திரேலியா, பிரேசில் போன்ற நாடுகளிலும் மிக அதிக அளவில் இந்திய மாடுகளை கொண்டு உருவாக்கிய கலப்பினங்களே உள்ளன. அவர்கள் சுய உற்பத்திக்கு மட்டுமில்லாமல் இப்பொழுது இம்மாடுகளை இனவிருத்தி செய்ய என்று பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள், மலேசியாவில் உள்ள மாடுகள் அனைத்தும் இந்திய கலப்பின மாடுகளே ஆனால் அனைத்தும் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு செய்வதை ஜெனிட்டிக்கல் பைரசி என்கிறார்கள், இப்போது நாமே நினைத்தாலும் இந்திய மாடுகளை ஏற்றுமதி செய்ய இயலாது, ஏன் எனில் போஸ் இன்டிகஸ் வகை மாடுகளை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில் போன்றவை தங்கள் நாட்டு மாடு என பதிவு செய்துக்கொண்டுள்ளார்கள்.

(இந்திய கிர் வகை பசு-பிரேசிலில் அதிகம் பால் கொடுத்து சாதனை)

பிரேசிலில் கடந்தாண்டு மிக அதிக பால் கொடுத்த மாடு என சாதனை செய்திருப்பது குஜராத்தினை சேர்ந்த கிர் வகை மாடு ஆகும், ஷேரா எனப்பெயரிடப்பட்டுள்ள இம்மாடு ஒரு நாளில் 62 லிட்டர் கறந்துள்ளது.வெப்பமான நாடுகளில் வெப்பத்தினையும் தாங்கி கொண்டு பால் உற்பத்தியும் அதிகம் கொடுக்கும் வகை என்பதால் இவ்வகை மாடுகளை பல நாடுகளும் விரும்புகின்றன.

எனவே பிரேசிலில் உற்பத்தி செய்யப்படும் மாடுகளுக்கு உலக அளவில் நல்ல சந்தை ஏற்பட்டுள்ளது, உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கறவை மாடுகளை ஏற்றுமதி செய்வதில் பிரேசில் முன்னணி வகிக்கிறது ஆனால் அவை யாவும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மாட்டினங்கள். இந்தியாவிற்கு தான் அதன் மறபியல் உரிமை உண்டு ,நாம் கண்டுக்கொள்ளாமல் விட்டதால் அவர்கள் திருடி தங்கள் பொருளாக அறிவித்துவிட்டார்கள்.

ஆனால் இந்தியாவில் பால் உற்பத்தியை அதிகரிக்கிறோம் என சொல்லிக்கொண்டு குளிர்நாடுகளான டென்மார்க்,ஹாலந்து, ஆகிய நாடுகளில் இருந்து ஜெர்சி வகை மாடுகளை இறக்குமதி செய்து கலப்பினம் உருவாக்கிக்கொண்டுள்ளோம்.

மேலும் இந்திய மாடுகளில் ஜீன்களில் சர்க்கரை நோயை குறைக்கும் ஏ2 ஜீன் அல்லிகள் உள்ளதாகவும்,ஐரோப்பிய மாடுகளில் ஏ 1 அல்லில்கள் தான் உள்ளது எனவும் இது சர்க்கரை நோய்,உடல் பருமன், மற்றும் இதயநோய்களை அதிகரிக்கும் எனவும் கர்நாலில் உள்ள தேசிய கால்நடை  மறபணு ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது.

செய்தி:

 A recent study by Karnal-based National Bureau of Animal Genetic Resources (NBAGR) showed Indian cows have a rich A2 allele gene which helps them produce healthier milk. The frequency of this A2 allele in Indian breeds is 100 per cent whereas in exotic cattle breeds it is less than 60 per cent. Imported breeds posses A1 allele, which is considered to be associated with diabetes, obesity and cardiovascular

http://news.outlookindia.com/items.aspx?artid=725938

இவற்றை எல்லாம் பார்க்கும் போது அன்றே மக்கள் திலகம் எம்ஜிஆர் பாடிய(நடித்த) பாடல் தான் நினைவுக்கு வருகிறது,

என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்

ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்

ஒழுங்காய் பாடு படு வயல்காட்டில்

உயரும் உன்மதிப்பு அயல்நாட்டில் ...

விவசாயி ...விவசாயி!


(என்னா ஆக்டிங்க் ....என்னா ரன்னிங்க் ...தலிவரு ஆல்வேய்ஸ் ராக்ஸ்)

பிற்சேர்க்கை:

 கலப்பினமாக்கலால் அழிந்து வரும் இந்திய நாட்டு மாடுகள் குறித்து முன்னர் இட்ட இடுகைகள்.


1)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-1

2)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-2


--------------------
பின்குறிப்பு:

தகவல்கள் மற்றும் படங்கள் உதவி,

கூகிள், விக்கி,

http://www.ansi.okstate.edu/breeds/cattle/brahman/

http://www.ilri.org/InfoServ/Webpub/fulldocs/SmHDairy/chap5.html

http://devinder-sharma.blogspot.in/2012/07/brazil-is-biggest-exporter-of-indian.html

http://agritech.tnau.ac.in/animal_husbandry/animhus_cattle%20_breed.html
இணைய தளங்கள் ,நன்றி!
-----------------------

அஃதே,இஃதே-6.


(ஹி...ஹி மனதை பொங்க வைக்கும் பொங்கல்!)

தை-1 :தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 தைப்பொங்கலின் இன்சுவையை மென்மேலும் கூட்டும் வகையில் தை முதல் நாளே தமிழ்ப்பொங்கும் தமிழ்ப்புத்தாண்டும் பிறப்பது சர்க்கரை பொங்கலில் தமிழ்த்தேனும் கலந்துண்பதற்கு ஒப்பாகும்.

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தை முதல் தேதியே தமிழ்ப்புத்தாண்டு என விரிவாக விளக்கும்  சில கட்டுரைகள்:

# http://tamilvalluvam.org/KuralArticalPage.asp?Id=13

# http://valavu.blogspot.in/2007/01/blog-post.html

கி.பி 1921 இல் மறைமலை அடிகள் தலைமையில் ஒரு தமிழறிஞர்கள் குழு கூடி , தமிழ்ப்புலவர் திருவள்ளுவரின் பிறந்த ஆண்டினை கணக்கிட்டு , அதன் அடிப்படையில் ஒரு தமிழ் நாட்காட்டி உருவாக்கினார்கள்.

திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு 31 என எடுத்துக்கொண்டு அது முதல் ஆண்டுக்கணக்கினை துவக்கினார்கள், எனவே இவ்வாண்டு 2012 +31 எனக்கூட்டினால் 2043 வரும்.

தமிழ் மாதங்கள்:

சுறவம்- தை

கும்பம் - மாசி

மீனம் - பங்குனி.

மேஷம் -சித்திரை

விடை- வைகாசி

இரட்டை- ஆனி

கடகம் - ஆடி

மடங்கல்- ஆவணி

கன்னி -புரட்டாசி

துலை - அய்ப்பசி

நலி- கார்த்திகை

சிலை- மார்கழி.

தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என முன்னர் நான் இட்ட இடுகை:

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: புத்தாண்டு வாழ்த்துகள்!- தைப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை!

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!

*****

பண்டிகைகளும் பயணங்களும்:

உலகம் முழுவதும் நவீன வளர்ச்சியின் தாக்கத்தால் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு,மனிதர்களின் வாழ்வில் பல முன்னேற்றங்களை கொண்டு வந்திருந்தாலும் இந்தியாவில் அதன் தாக்கம் என்னமோ அனைவரையும் சென்றடையவில்லை என்றே நினைக்க வைக்கிறது ,ஒவ்வொரு முறை மேற்கொள்ளும் விழாக்கால பயணங்கள்!

சில முன் யோசனை முத்தண்ணாக்கள் வெகுஜாக்கிரதையாக பொங்கலுக்கு ஒரு மாதமுன்னரே இருக்கைகளை முன்ப்பதிவு செய்திருந்தார்கள் அவர்கள் பாடு கொண்டாட்டம் தான், ஆனால் தங்கள் புறப்பாடு எப்போது என தீர்மானிக்க இயலாத நடுத்தட்டு மக்கள் ,எப்படியாவது சமாளித்துக்கொள்ளலாம் என நினைத்து பொங்கலுக்கு முதல் நாள் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து , அரசையும் ,போக்குவரத்து கழகத்தையும் சுத்த மோசம் என வசைப்பாடிக்கொண்டிருந்தார்கள் :-))

சென்னையில் பேருந்து, தொடர்வண்டி என அனைத்திலும் கால் வைக்க இடமில்லாத அளவுக்கு பிதுங்கி வழிந்தாலும் மக்கள் கொஞ்சமும் அசராமல் எப்படியோ தொற்றிக்கொண்டு ஊர் போய் சேர்ந்தால் போதுமென கிடைத்த கேப்பில் எல்லாம் தங்களை சொறுகிக்கொண்டு , பொங்கல் கொண்டாட ஊர் நோக்கிப்பயணப்படலானார்கள்.

சொந்தமாக கார் வைத்திருந்தவர்கள் வளர்ப்பு நாய் சகிதம் மூட்டைக்கட்டிக்கொண்டு கிளம்பி விட, கார் இல்லாத மக்கள் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது ரெண்டு பசங்களையும் , பின்னாடி மனைவி, இன்னொரு பையன் என ஏற்றிக்கொண்டு வீரப்பயணம் கிளம்பிவிட்டார்கள். ஒருவர் தனது ஸ்கூட்டரில்  மொத்த குடும்பத்தையும் ஏற்றிக்கொண்டு சென்றதையும் பார்த்தேன் , தேசிய நெடுஞ்சாலை 45 இல் இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் உண்டானது,இதனால் எல்லா டோல் கேட்டிலும் பெரும் வரிசை உருவாகி , டோல் கேட்டை கடக்கவே அரைமணி நேரத்திற்கு மேலானது.

டோல் கேட்:இவ்வளவு அரும்பாடுப்பட்டு ஊருக்கு வந்தாலும் வழக்கம் போல தொலைக்காட்சிகளில் காட்டப்படும் உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என கூவிப்போடப்படும் பாடாவதி தமிழ்ப்படங்களையும், தொலைக்காட்சிப்பெட்டிக்கண்டுப்பிடித்த நாள் முதலாக அரங்கேறி வரும் சாலமன் பாப்பையா வகையறாக்களின் என்ன மக்களே நான் சொல்லுறது சரி தானய்யா பட்டிமன்ற பேச்சுக்களையும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், இதுக்காய்யா படிக்கட்டில தொங்கிட்டு 200-300 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டீர்கள் :-))

இதுக்கு பேசாமா ஊருல ஊட்டோட இருந்து இருக்கலாமே!

*******
புத்தக சந்தை- 2013: A TEASER.

பொங்கலுடன் சேர்ந்தாற்ப்போல புத்தக திருவிழாவும் வருவது சென்னையின் சிறப்பு எனலாம், ஆனால் அச்சிறப்பே பல நேரங்களில் மண்டையை குடைய வைக்கிறது, என்னிக்கு ஊரு கிளம்புவது என்றே தீர்மானிக்க இயலாத ஆசாமி நான் இதில் என்னிக்கு புத்தக சந்தைக்கு போவது என தீர்மானம் எடுக்க வேண்டிய கூடுதல் சுமை வேறு வந்து மண்டையை குடைந்தால் என்ன தான் செய்வதாம் , வழக்கம் போல இன்று போய் நாளைவானு ஒத்தி வைப்பு தீர்மானம் தேன் :-))

பொங்கல் முடிந்தவுடன் போய் ஒரு ரவுண்டு அடிக்கலாம்னு எழுதப்படாத தீர்மானம் இயற்றியாச்சு , ஒரு வாரத்திற்குள் எல்லா நூல்களையும் கபளீகரம் செய்துவிட மாட்டார்கள்  சென்னை வாழ் பெருமக்கள் என்ற  ஒரு அபார நம்பிக்கை தான் :-))

சில பழங்கால பதிவர்கள் வழக்கம் போல சுஜாதா தாத்தாவின் கத புத்தகங்களையே காணததை கண்டது போல இன்னும் தொடர்ந்து அள்ளிக்கொண்டிருப்பார்கள் என்பதால் ,மற்ற நூல்கள் எல்லாம் புத்தக சந்தை துவக்க நாளன்று வச்சது வச்ச மாதிரியே இருக்கும் ,இனிமேல் நான் போய் தான் எல்லாத்தையும் கலைச்சு போடணும் :-))

என்ன ஒரு தலைக்கனம்னு நினைக்கலாம், நம்ம பதிவர்கள் எழுதும் புத்தக சந்தைப்பதிவுகளை தொடர்ந்து படிச்சாலே தெரியும் ,எல்லா ஆண்டும் ஒரே மாதிரியே எழுதியிருப்பார்கள் , ஒரு வேளை முன்னர் எழுதிய புத்தக சந்தை பற்றிய பதிவையே காபி&பேஸ்ட் செய்வார்களோ என்னமோ?

வலைப்பதிவுகளின் மூலம் பலப்பதிவர்களும் எழுத்தாளராக அவதாரமெடுக்கும் வேகம்  ஆண்டு தோறும் மர்மக்காய்ச்சலை விட வேகமாக பரவுவது ஏற்கனவே அவதாரமெடுத்து எழுத்து சிம்மாசனத்தை ஆக்ரமித்துக்கொண்டுள்ள பழம்பெரும் எழுத்தாளர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது :-))

பல ஒலக எலக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளை விட அதிகமாக நம்ம பதிவர்களின் நூல்கள் விற்பது , தமிழ் வலைப்பதிவுகள் மற்றும் பதிவர்களின் சாதனை எனலாம்.

பதிவர்களின் சில படைப்புகளும் இவ்வாண்டு அச்சுவடிவில் வெளியாகின்றன ,அவைப்பற்றி,

 பிரபலப்பதிவர் திருப்பூர் ஜோதிஜி  லோகநாயகரை விட பெரிய ஆளா இருப்பார் போல ,அவரோட டாலர் நகரம் எனும்  நூலை பொங்கல் ரிலீஸ் இல்லைனு  சனவரி 27 அன்று திருப்பூரில் வெளியிடுகிறார் :-)),

வாழ்த்துக்கள் ஜோதிஜி!மேலதிக தகவல்களுக்கு ஜோதிஜியின் வலைப்பதிவினை காண்க,

http://deviyar-illam.blogspot.in/2013/01/blog-post_13.html

#பலப்பதிவர்களின் வலைப்பதிவுகளை தொகுத்து எதிர்க்குரல் என்ற பெயரிலும் ஒரு நூல் வெளியாகிறது. கொஞ்சம் "மார்க்க"மான நூலாக அச்சிலும் கொண்டு வந்திருப்பார்கள் போல , "Tag line" உம் இஸ்லாமோ போஃபியா VS இஸ்லாமியப்பதிவர்கள் என ஒரு மார்க்கமாக இருக்கு :-))

எதிர்க்குரல் நூல் வெளியீட்டு குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!மேலதிக தகவல்களுக்கு பதிவர் சிராஜின் வலைப்பதிவினை காண்க,

http://vadaibajji.blogspot.in/2013/01/vs.html

# மேலும் சிலப்பதிவர்களின் நூல்களும்  வெளி வருகின்றன என தகவல்கள் உலா வருகின்றன,அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
---------------------

Wednesday, January 09, 2013

சினிமா ரகசியம்-6: DTH-Disaster To Haasan.


(ஹி...ஹி நம்ம DTH- Direct To HeartU)

குறள் 471:

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

கலைஞர் உரை:

செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.

மு.வ உரை:

செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.

திருவள்ளுவரை சும்மாவா பொய்யா மொழிப்புலவர்னு சொன்னாங்க, 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எப்படி திட்டமிட்டு ஒரு செயலை செய்ய வேண்டும், எப்படி சாதக,பாதகங்களை கணக்கிட வேண்டும் என்றெல்லாம் நச்சுன்னு ரெண்டே வரியில சொல்லிட்டார், உலகின் மிக சிறந்த துவித்தர் யாருன்னு என்னைக்கேட்டால் கண்ணை மூடிக்கிட்டு திருவள்ளுவர் பேரைச்சொல்வேன் :-))

ஆறு டிடிஎச் சேவைகளில் படம் வெளியிடுவதாக செய்தி வெளியானதுமே , 300 கோடி வசூல் என்றெல்லாம் கூச்சமேயில்லாமல் சில விசிலடிச்சான் குஞ்சுகள் புரளியை பரப்பின, உண்மையில் அதில் பாதியளவுக்கு தேரியிருந்தாலும் தியேட்டர்களை நம்பாமல் டிடிஎச் இல் வெளியிட்டு இருக்கமாட்டாரா என்ன? சில லட்சங்கள் அளவுக்கு தான் டிடிஎச் மூலம் வருமானம் தேரியிருக்கிறது, அந்த தொகைக்கு டிடிஎச் இல் வெளியிடுவது தற்கொலைக்கு சமம் என்பதால் தியேட்டர்களிடம் மீண்டும் சரணாகதியாகிவிட்டார் லோக நாயகர்.

கவனத்தில் கொள்ளவும்:

மொத்தமாக பட வெளியீட்டை தள்ளி வைத்திருப்பதோடு, டிடிஎச் ரிலீஸ் பட வெளியீட்டுக்கு முன்னர் இல்லை என்பதாக செய்திகள் வெளியானதன் அடிப்படையில் எழுதப்பட்டப்பதிவு.

 திரையரங்க வெளியீட்டுக்கு முன் டிடிஎச் ரிலீஸ் உண்டா என்பதை இது வரையில் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை, ஆனால் டிடிஎச் இல் பட வெளியீட்டுக்கு பின்னர் வெளியானாலும் ஆகலாம், அப்படி செய்யும் பட்சத்தில் 1000 ரூபாய் கட்டணம் என்பதற்கான மதிப்பேயில்லை,எனவே முன்பணம் கட்டியவர்கள் திரும்பக்கேட்டால் கொடுக்க வேண்டிய சூழல் வரும்.

டிடிஎச் வெளியீடு என தொடர் விளம்பரங்களை செய்த டிடிஎச் சேவையாளர்கள் ,வாங்கிய கட்டணத்தினை திரும்ப தருவதற்கு வாய்ப்பில்லை, அப்படி தர வேண்டும் எனில் அவர்கள் செய்த விளம்பரத்திற்கு கட்டணம் கேட்கும் வாய்ப்புண்டு. பின்னர் இலவச விளம்பரத்திற்காகவா அவர்கள் டிடிஎச் சேவையினை நடத்துகிறார்கள், எனவே டிடிஎச் இல் முன் வெளியீடு என்ற முறையினை இடியாப்ப சிக்கலாக்கிவிட்டதால், இனி தயாரிப்பாளர்கள் டிடிஎச் இல் பட வெளியீட்டுக்கு முன்னர் வெளியிடலாம் என யோசிக்கவே அஞ்சும் சூழலும், டிடிஎச்சுக்கு பணம் கட்ட ரசிகர்கள் அஞ்சும் சூழலும் உருவாகிவிட்டது எனலாம்.

(எனக்கு ஒரு காயம்னா பரவாயில்லை என் படத்துக்கு காயம்னா தான் தாங்கமுடியலை..அபிராமி ..அபிராமி)

டிடிஎச் முன்பதிவு தோல்வியடைய காரணங்கள்:

# டிடிஎச் இல் அரங்க வெளியீட்டுக்கு முன் வெளியிடுவது சிறுமுதலீட்டு படங்களுக்கே ஏற்றது,மேலும் குறைவான கட்டணம் என இருந்தால் மட்டுமே ஓரளவுக்கு மக்கள் பார்ப்பார்கள்.

30 சதவீத மக்கள் ஒரு வேளை முழுசாக உணவுண்ண வழியில்லாமல் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தேசத்தில் ஒரு திரைப்படத்திற்கு 1000 ரூ என விலை நிர்ணயம் செய்வதே மிகப்பெரிய மனிதாபிமானமற்ற செயல் எனலாம்.ஆனாலும் சில விசிலடிச்சான் குஞ்சுகள் மனசாட்சியேயில்லாமல் , ஆகா புரட்சி செய்துவிட்டார் லோக நாயகர் என கூவினாலும்,மக்கள் வழக்கம் போல மவுனப்புரட்சி செய்து புறக்கணித்துவிட்டார்கள்.

நீதி: அமிர்தமே என்றாலும் சாமானியன் வாங்கும் விலையில் விற்கப்பட்டால் மட்டுமே சந்தையில் வெற்றியடையும்.

# ஏழைகளை குறிவைத்து இத்திட்டம் செயல் படுத்தவில்லை உயர்வர்க்க மக்களை கவர எனலாம், ஆனால் உயர்வர்க்க மக்களின் விருப்பத்தேர்வு லோகநாயகரின் படங்களாக இருந்தால் மட்டுமே பார்ப்பார்கள், உயர் வர்க்க மக்களும் முன்ப்பதிவு செய்யவில்லை என்பது குறைவான முன்ப்பதிவுகளின் எண்ணிக்கை காட்டுகிறது, ஏன் எனில் அவர்கள் பார்க்க விரும்பும் தரத்தில் இப்படம் இல்லை என அவர்கள் எண்ணமாக இருக்கிறதே.

நீதி: நமக்கான டார்கெட் ஆடியன்ஸ் யார் என தீர்மானித்து ஒரு படைப்பை உருவாக்க வேண்டும்.

# நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் ,பாடல் வெளியீட்டுக்கு பெரிய அளவில் கூட்டம் திரண்டது எனவே டிடிஎச் வெளியீட்டுக்கும் பெருமளவில் ஆதரவு கிடைக்கும் என கணக்கு செய்திருக்கலாம்,ஆனால் ரசிகர்கள் கூட்டம் கூடிய அளவுக்கு , முன்ப்பதிவில் ஆர்வம் காட்டவில்லை என்பது இப்போது தெளிவாகிறது.

வழக்கமாக திரையரங்கில் வெளியிடும் போது ஒவ்வொரு ஊரிலும் உள்ள ரசிகர் மன்றத்தினர், முதல் காட்சியை ரசிகர் மன்றக்காட்சியாக வெளியிட்டு ,ரசிகர்களிடம் ஒரு பிரிமியம் தொகையை வசுலீப்பார்கள் ,இவ்வாறு கிடைக்கும் லாபத்தினை வைத்தே மன்ற செயல்பாடுகளின் செலவுகளை சமாளிப்பார்கள், இத்தொகை ஓரளவுக்கு தான் உதவும், பல ரசிகர்களும் சொந்தக்காசை செலவு செய்வதை பல முறைப்பார்த்துள்ளேன், ஆனாலும் ரசிகர் மன்றக்காட்சி நடத்துவது மன்ற நிர்வாகிகளுக்கு ஒரு பெருமையான விஷயம், கிடைக்கும் சொற்ப லாபம் ரசிகர் மன்ற செலவுகளுக்கு கொஞ்சம் உதவியாக இருப்பதே போதும் என்றெல்லாம் ஆறுதல் பட்டுக்கொள்வார்கள்.

ஆனால் அதற்கெல்லாம் வேட்டு வைப்பது போல ,முதல் நாள் இரவே 1000 ரூ தொகையில் படம் ஒளிபரப்புவதாக சொன்னதும் ,ரசிகர் மன்றக்காட்சி என்ற தனிச்சிறப்பும்,பெருமையும் அடிபட்டு போய்விட்டது, முதல் நாள் இரவு 1000 ரூ செலவு செய்து பார்த்துவிட்டு எத்தனை ரசிகர்கள் அடுத்த நாள் ரசிகர்மன்ற காட்சிக்கும் அதிக கட்டணம் கொடுக்க முன்வருவார்கள், எனவே டிடிஎச் ஒளிப்பரப்பு வெற்றியடைந்தால் ரசிகர்கள்,ரசிகர் மன்றங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என நினைத்த லோகநாயகரின் தீவிர ரசிகர்களும் சத்தம் போடாமல் ஒதுங்கிவிட்டதால் எதிர்ப்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் முன்ப்பதிவும் வேகமெடுக்காமல் முடங்கிவிட்டது.

காலங்காலமாக  படம் ரிலீஸ் அன்று போஸ்டர் அடித்து,தோரணம் கட்டி ,கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் என செய்து, படப்பொட்டிக்கு பூசைப்போட்டு கொண்டாடிய ரசிகர்களை ,துச்சமாக நினைத்து பணத்திற்காக டிடிஎச் ஒளிபரப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்ததை தீவிர ரசிகர்கள் ரசிக்கவில்லை,அவர்களின் மனக்குமுறலின் மவுன கீதமே டிடிஎச் முன்ப்பதிவுக்கு மூடுவிழா நடத்தியது எனலாம்.

நீதி: சுயநலத்திற்காக உடனிருப்பவர்களை புறக்கணித்தால் வெற்றியடைய முடியாது.

# தமிழகத்தில் சென்னை நீங்கலாக எல்லாப்பகுதிகளிலும் கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது, குறைந்த பட்சம் 12 மணி நேரம் மின் வெட்டு ,பல இடங்களில் உட்சக்கட்டமாக 16-18 மணி நேர மின்வெட்டெல்லாம் உள்ளது.

இதனால் பல இடங்களில் சிறு,குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு குறைந்துவிட்டதால் பலரும் வருமானமின்றி கஷ்ட ஜீவனமே செய்கிறார்கள்.

பெரிய நிறுவனங்களோ மூன்று ஷிப்ட் என்பதை குறைத்து ஒரு ஷிப்டில் ஓடிக்கொண்டிருக்கின்றன, கூடுதல் ஊழியர்களுக்கு வேலை "கட்", வழக்கமான ஊழியர்களுக்கு  மாதச்சம்பளமே சரியாக வருமா என தெரியாத நிலையில் பல தொழிலாளர்கள் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போன்ற சூழலில் வாழ்ந்து வருகிறார்கள்.

விவசாயிகளின் நிலையோ இன்னும் மோசமான நிலையில் உள்ளது, பருவ மழை பொய்ப்பு,காவிரியில் நீர் வரத்தில்லை, போர், கிணறு மூலம் பாசனம் செய்யலாம் என்றால் மின்சாரம் இல்லை, பலரும் கடனை வாங்கி டீசல் பம்செட் வைத்து பயிர் கருகாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற பொருளாதார சிக்கலினால் இம்முறை தீபாவளியன்று கூட வழக்கமான வியாபாரமில்லை, மக்களிடமும் குதூகளம் ,கொண்டாட்டம் எல்லாம் குறைவாகவே பல இடங்களிலும் காணப்பட்டது.

இம்மாதிரியான பொருளாதார சிக்கலானக் காலக்கட்டத்தில் தீவிர ரசிகர்களும் ஆடம்பரமாக 1000 ரூக்கொடுத்து படம் பார்க்கணுமா என யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள், மேலும் வீட்டில் உள்ளவர்களும் இப்போ இருக்கிற நிலைக்கு இதெல்லாம் தேவையா எனக்கேள்விக்கேட்பார்கள்,எனவே வீட்டில் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக படம் பார்க்கும் சூழல் பெரும்பாலான வீடுகளில் இல்லை. அதன் விளைவே பலரும் டிடிஎச் முன்ப்பதிவு செய்யாமல் தவிர்த்து விட்டார்கள் எனலாம்.

நீதி: மழை பெய்யும் நேரத்தில் உப்பு விற்கப்போகக்கூடாது!

# வழக்கமாகவே லோகநாயகரின் படங்கள் "அடல்ட் கண்டென்ட்"(முதிர்ச்சியடைந்த பார்வையாளர்களுக்கு எனக்கொள்க) வகையறா எனவே வழக்கமாகவே  பெரும்பாலோர் குடும்பம் ,குழந்தைக்குட்டிகளை அழைத்துக்கொண்டு லோகநாயகர் படம் பார்க்க திரையரங்கிற்கு செல்ல யோசிப்பார்கள். இந்நிலையில் 1000 ரூ பணங்கட்டி வீட்டு வரவேற்பறையில் படம் பார்க்கும் சூழலில் பசங்களை படம் பார்க்க கூடாது என தடுக்க முடியாது,அவர்களோடு சேர்ந்து பார்க்கும் போது சில தர்மசங்கடமான காட்சிகளும், வசனங்களும் வந்தால் நெளிய வேண்டிய சூழல் வரும், மேலும் அது போன்ற சந்தர்ப்பத்தில் "கண்ணா அப்பாவுக்கு தாகமா இருக்கு ஒரு கிளாஸ் தண்ணி எடுத்து வா" என சொல்லி சமாளிக்கலாம் எனப்பார்த்தால் இக்கால வாண்டுகள் செம சுட்டிங்க தாகமா இருந்தா நீங்களே போய் குடிங்க, இப்படித்தான் சின்னப்பசங்களை வேலை வாங்குவீங்களான்னு "டாண்ணு" திருப்பிக்கொடுக்குங்கள் :-))

எனவே வசதியான உயர் நடுத்தரக்குடும்பத்தினரும் எதுக்கு சொந்த செலவில் சூனியம் வச்சுக்கணும் என டிடிஎச் முன்ப்பதிவை தவிர்த்துவிட்டார்கள் எனலாம்.

நீதி: நுகர்வோர் கண்ணோட்டத்தில் ஒரு தயாரிப்பினை சந்தைப்படுத்தலின் போது அணுக வேண்டும்,இல்லையெனில் முட்டு சந்தில் மாட்டிக்கொள்ள நேரிடும்.

இன்னும் பலக்காரணங்களை பட்டியலிட முடியும், இங்கு சில முக்கியமான காரணிகளை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன்.

ஒரு திரைப்படத்தின் முகமதிப்பு என்பது நாயகன்,இயக்குனர், நாயகி, மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் சந்தை மதிப்பினை வைத்தே, மொத்த சந்தைமதிப்பினை கடந்து ஒரு திரைப்படத்தினை தயாரித்தால் அது எவ்வளவு தான் நல்லப்படமாக இருந்தாலும் லாபகரமாக விலைப்போகாது.

மேலும் இப்படத்தில் லோகநாயகரைத்தவிர மற்றவர்கள் அனைவருமே சந்தை மதிப்பேயில்லாதவர்கள் என்பது மிகப்பெரும் பின்னடைவு எனலாம்.

லோகநாயகரின் சந்தை மதிப்பினை உணராமல் அதிக பட்ஜெட்டில் தயாரித்ததே விஷ்வரூபம் திரைப்படத்தினை சந்தைப்படுத்துவதில் சிக்கலை உருவாக்கியது ,இப்படம் 50 கோடிக்குள் முடிக்கப்பட்டிருந்தால் எவ்வித பிரச்சினையும் இன்றியும் சுமார் 10 கோடி லாபத்தில் படத்தினை விற்று இருக்க முடியும்.

ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டவேண்டும், உலகப்படமாக எடுத்தாலும் சந்தை மதிப்பினை கணக்கிட்டு தயாரிக்க வேண்டும்.

இப்படம் இன்னொரு ஆளவந்தானாக ,ஹே ராமாக இல்லாமல் சிறப்பாக இருக்குமானால் பெரும் நட்டம் தவிர்த்து ,தப்பிக்க வாய்ப்புண்டு, அவ்வாறு இருக்கும் என நம்புவோம்,வெற்றிப்பெற வாழ்த்துக்கள்!
---------------------

பின்குறிப்பு:

நாம் அனைத்து வகையான திரைப்படங்களையும் பார்க்கும் ஒரு சராசரி திரைப்பட ஆர்வலன், உலகப்படம், உள்ளூர் படமென்ற பாகுபாடுகள் எதுவுமின்றி திரைப்படங்கள் மற்றும் அவற்றின் தொழில்நுட்ப விவரங்களை ஆர்வமாக அவதானிக்கும் ஆர்வலன், எனவே எவ்வித விருப்பு வெறுப்புமின்றி ஒரு தொழில்நுட்ப ஆர்வலனாக  இப்பதிவினை எழுதியுள்ளேன்,எனவே எனக்கும் லோகநாயகருக்கும் வாய்க்கா ,வரப்பு தகராறு என்ற ரீதியில் யாரேனும் மனப்பிராந்திக்கொண்டிருந்தால் அடியேன் பொறுப்பல்ல :-))

நன்றி!
------------------------

தகவல் மற்றும் படங்கள் உதவி:

திருக்குறள்.காம்,தினமலர்,விக்கி,கூகிள் இணைய தளங்கள் நன்றி!

Tuesday, January 08, 2013

பில்லா-2 என்கிற பெயரைச்சொல்லவா!

வாலிப,வயோதிக,பதிவர்களே,கமெண்டர்களே,அனானிகளெ, பினாமிகளே உங்கள் அனைவருக்கும் அடியேனின் அனேக கோடி நமஸ்காரங்கள்! சில பல காலமாக அஞ்ஞாத வாசம்(பூ வாசம் தெரியும் இது என்ன புது வாசம்னு எல்லாம் கட்டையப்போடப்படாது) சென்றிருந்தமையால் எண்ணமிகு வண்ணப்பதிவு மலர்கள் பூத்து குலுங்கி கமழ்ந்திடும் வண்ணத்தமிழ் சோலையாம் தமிழ்மணத்திலே எண்ணால் சிறகடித்து பறக்கவியலாமல் போய்விட்டது.

போதும் நிறுத்து ஓடிப்போன கழுதை... கெட்டால் குட்டி சுவர்னுதிரும்ப வந்திருக்க நேரா அதை சொல்லி தொலைக்காமல் தகர டப்பாவில கூழாங்கல் போட்டா மாதிரி என்னாப்பேச்சு அப்படினு நீங்க திட்டுறது கேட்குது...எனவே ...மேட்டருக்கு போயிடுறேன்.

தமிழ் ஸினிமாவில பல பல பிரபலங்கள் அரசாட்சி செய்து போய் உள்ளார்கள், சிலரது ஸினிமா பெயர் தெரியும் சிலரை சுருக்கமாக அழைப்பார்கள், ஆனால் அவர்கள் முழுப்பெயர் அவ்வளவாக வெளியில் தெரியாது.

எம்ஜிஆர் அப்படினா பல்லு முளைக்காத பச்சப்புள்ளைல இருந்து பல்லுப்போன பாட்டி வரைக்கும் தெரியும், முழுப்பெயர் என்ன கேட்டா பலர் எம்.ஜி.ராமச்சத்திரன் சொல்வார்கள், எம்.ஜி அப்படினு கேட்டா மினிமம் கியாரண்டினு சில ஸினிமா வியாபாரிகள் அறிவுத்திறன் காட்டக்கூடும்(,ஹி..ஹி.) வெகுசிலர் மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் என்று பொட்டில அடிப்பாங்க.

எம்ஜிஆர் படங்கள் எல்லாம் வசூலில் சக்கைப்போடு போடும் என்பதால் மினிமம் கியாரண்டி ராமச்சந்திரன் என்றே செல்லமாக சொல்வார்களாம்.நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முழுப்பெயர் வி.சி.கணேசன் =விழுப்புரம் சின்னையா கணேசன் ஆகும்.

எனக்கு இப்படியான பிரபலங்களின் முழுப்பெயர் தெரிந்து கொள்ள எப்பவும் ஆவல் உண்டு, எனவே அவ்வப்போது இணையத்தில் தேடி தெரிந்து கொள்வதுண்டு, தெரிந்தவரகளிடம் கேட்பதும் உண்டு, அப்படி தெரிந்து கொண்டதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

1)AVM=ஆவிச்சி மெய்யப்பன்

2)L.V.PRASAD= அக்கினேனி லக்ஷ்மி வரப்பிரசாத் ராவ்.

3)S.S.VASAN=சுப்ரமணியம் ஶ்ரீனிவாசன்

4)M.N.NAMBIYAR=மஞ்சேரி நாராயண நம்பியார்

5)M.S.VISVANATHAN=மனயங்காத்த சுப்பிரமணியன்
விஸ்வநாதன்.

6.T.K.RAMAMOORTHI=திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசாமி ராமமூர்த்தி

7)K.V.MAHADEVAN= கிருஷ்ணன் கோவில் வெங்கடாச்சலம் மஹாதேவன்

8)T.R.MAHALINGAM= தென்கரை ராமகிருஷ்ணன் மஹாலிங்கம்

9)M.K.THYAGARAJA BAGAVADR=மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர்

10)S.G.KITTAPPA=செங்கோட்டை கங்காதர அய்யர் கிட்டப்பா(மனைவி கே.பி.சுந்தராம்பாள்)

11)T.M.SOUNDARA RAJAN= தொகுளுவா மீனாட்சி அய்யங்கார் சவுந்தரராஜன்

12)S.P.BALASUBRAMANIAM= ஶ்ரீபதி பண்டிதராயல பாலசுப்ரமணியம்

13)K.J.YESUDOSS= கட்டச்சேரி ஜோசப் ஏசுதாஸ்

14)L.R.ESHWARI= லூர்து மேரி ராஜேஷ்வரி

15)M.S.SUBBU LAKSHMI= மதுரை ஷண்முகவடிவு சுப்புலக்‌ஷ்மி

16)K.B.SUNDRAMBAL= கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்

17)A.M.RAJAH= ஏமலா மன்மதராஜு ராஜா, ஜிக்கி= பி.ஜி.கிருஷ்ணவேணி சுருக்கமா ஜி.கே அதுவே ஜிக்கி ஆகிடுச்சு, இவர் ஏஎம்.ராஜாவின் மனைவியாவார்.

18)S.V.RANGA RAO= சாமர்லா வெங்கட ரெங்காராவ்

19)M.R.RADHA= மோஹன் ராஜாகோபால ராதாகிருஷ்ணன் அல்லது மோஹன் என்பதற்கு பதிலாக மதராஸ் ராஜகோபால ராதாகிருஷ்ணன் என்கிறார்கள்.

20)CHANDIRABABU= ஜோசப் பனிமயதாஸ் ரோட்ரிகஸ் சந்திரபாபு.


மேலும் சில பல பெயர்கள் இருக்கு பின்னர் பார்க்கலாம் அவற்றை.


இதப்படிச்சுப்புட்டு உன்ன எப்படி பாரட்டுறதுனே தெரியலைனு நீங்க கண்கலங்கலாம்! உன்ன பாராட்டணும்னு எண்ணும் போது வார்த்தைகள் அப்படியே   அருவியா கொட்டுது, ஆனால் அத பின்னூட்டமா எழுத நினைக்கும் போது வார்த்தைகள் முட்டுதுனு சிண்டைப்பிச்சுக்கலாம், அதனால உங்க சிரமத்த குறைக்க சில டெம்பிளேட் பின்னூட்டங்கள் தயாரிச்சு வச்சு இருக்கேன், நீங்க காபி பேஸ்ட் பண்ணா  போதும்....காபி பேஸ்ட்  பண்ணினா மட்டும் போதும்(நீங்க வேணா கூட கண்மணி, பொன்மணி போல வவ்வால் வல்லவர், நல்லவர்னு எதாவது அங்காங்கே தூவிக்கலாம்)

கும்மி பதிவர்களுக்காக:# வடை எனக்கு!

#ரைட்டு!

# வெல்கம் பேக் வவ்ஸ்!

#இருங்க படிச்சுட்டு வரேன்!

வவ்வால் ரசிகர் மன்றத்தினருக்கு:


(இன்னும் கொஞ்ச நாளில் கொடி பறக்க விட்ருவோம்ல)

# அபூர்வ தகவல்களை!?? அள்ளித்தருவதில் வல்லவன்யா நீ!

#நீ ஒரு நடமாடும் யமாகாபீடியா!

#தமிழ் மணம் கண்டெடுத்த தத்துவஞானி!

#வவ்வால் நீ கூகிளை விட வேகமானவன்,விவேகமானவன்!


மண்டகப்படி பதிவர்களுக்கு:

#இத்தனை நாள் நிம்மதியா இருந்தோம், உன்னைக்காணோம்னு யார்யா இங்க ஆட்கொணர்வு மனுப்போட்டது?

#இனிமே தமிழ்மணம் விளங்கிரும்!

#உன் பதிவை டிம்பக்டுவில் தடை செய்தாச்சு!
(தடை செய்ய சுட்டி ;தூக்கிட்டோம்@போட்டுதாக்கு.காம்)

#நீ யார்னே எனக்கு தெரியாது கமெண்ட் போட மாட்டேன்!(போன் நம்பர், ரேஷன் கார்டு காட்டினாத்தான்)(அதான் போட்டாச்சுல)


ஹி..ஹி..ஹி இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை...கூகிளை விட வேகமா மவனே ரெண்டு போட்டா அத விட வேகமா ஓடுவேனு நீங்க பொங்குறது தெரியுது ச்சும்மா தமாசு தான்!
Monday, January 07, 2013

கற்றது தமிழ்-4.


(அய்யோடா ....என்னையும் தமிழ்படிக்க சொல்வானோ?)

தமிழில் பிற மொழிச்சொற்களை தவிர்ப்பது, மேலும் பிழையாக திரிந்து விட்ட சொற்களை திருத்துவது என பலர் இணையத்தில்  முயற்சிக்கிறார்கள்(hi...hi) ,மிகவும் நல்ல முயற்சி,ஆனால் சிலர் பிழையை திருத்துவதாக நினைத்துக்கொண்டு  புதிய பிழைகளை உருவாக்கவும் செய்கிறார்கள், அப்படிப்பட்ட சில  பிழையான பிழை திருத்தங்கள் (அப்படினு நினைக்கிறேன்)என் கண்ணில் சிக்கின ,அவற்றை என் பங்கிற்கு கொஞ்சம் அலசி முடிந்தளவு  சீராக்கும் முயற்சியே இப்பதிவு.

சில்லரை:

சிறிய அளவிலான ஒரு தொகையை,பணத்தினை சில்லரை என்பார்கள், ஆனால் சில்லரையில் "ரை" என சிறிய "ர"வராது, "றை" என பெரிய "ற" பயன்ப்படுத்த வேண்டும் என சிலர் சொல்கிறார்கள், ஆரம்பத்தில் நானும் "சில்லறை என்றே பயன்ப்படுத்தினேன். ஆனால் அதன் பொருள் வேறாக இருப்பதை பின்னர் கண்டறிந்தேன்.

சில்லறை தான் சரி என்பவர்களின் வாதம் என்னவெனில்,

சில்லரையை , சில +அரை ,என பிரித்து ,சிலப்பாதிகள் என பொருள் வருகிறது இது தவறு ,

ஆனால் அறை என்றால் பகுதி எனவே

சில +அறை =சில்லறை

என்பதே சரி என்கிறார்கள்.

ஆனால் அறை என்றால் ஆங்கிலத்தில் ரூம் (Room)என சொல்லப்படுவதை குறிக்கும்,  எனவே சில +அறை என்றால் "Few rooms" ஆகிவிடுமே :-))

மேலும் "சில்" என்றால் குளிர்ந்த எனப்பொருள் வரும், அப்படி எனில் சில்லறை என்பதற்கு குளிர்ந்த அறை ,"Airconditioned Room" அல்லது cold room, என சொல்வதாகிவிடுகிறதே?

சில்லரை என்ற சொல் தமிழில் மட்டும் இல்லை பல மொழிகளிலும் இருக்கிறது , வடமொழியில் சில்லர் வியாபார் (chillar vyapar,chillar=coin)என சில்லரை வியாபாரியை சொல்கிறார்கள்.

ஸ்பெயினில் sillar என்றால் ஒரு துண்டு கல் எனப்பொருள். chillara = making noise,நாணயங்கள் ஒலி எழுப்புவதால் சில்லரை நாணயம் என சொல்வதும் புழக்கத்தில் வந்திருக்கலாம். சல்லிக்காசு என அக்காலத்தில் நடுவில் ஓட்டை உள்ள நாணயத்தினை சொல்வதுண்டாம், சல்லிப்பைசா கிடையாது என பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. காசு என்பதில் இருந்து தான்  cash என்ற சொல் உருவானது என்றும் சொல்கிறார்கள்.

ஆங்கிலத்தில் "silly" என்றால் அற்பமான என்ற பொருள் உள்ளதையும் கவனத்தில் கொள்ளலாம்,எனவே உலக அளவில் மொழிகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவே இருந்துள்ளது, பின்னர் தனித்தனியே வளர்ச்சியடைந்து தனி வடிவம் பெற்றிருக்கலாம் என பல மொழியியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

எனவே சில்லர் என்ற சொல் பல மொழிகளிலும் சிறிய அளவை(பொருள்) குறிக்க பயன் படுகிறது எனலாம்.

தமிழிலும் "சில்லு" என்ற சொல் சிறிய, துண்டான ஒரு பொருளை குறிப்பதாக பயன் பாட்டில் உள்ளது.

உடைந்த பானை துண்டு, கூறை வேயும் மண் ஓட்டின் துண்டுப்பகுதியை எல்லாம் "ஓட்டாஞ்சில்லு" என்போம், அதனை வைத்து கட்டம் போட்டு ஆடும் விளையாட்டுக்கு "பாண்டியாட்டம்" என்று கூட பெயருண்டு.

தேங்காயை சிதற விட்டால் கிடைக்கும் சிறிய துண்டினை தேங்காசில்லு என்று சொல்வதுண்டு. அதை பொறுக்குபவர்களை தேங்கா சில்லு பொறுக்கி என அழைப்பதுண்டு ,அமைதிப்படை படத்தில் சத்யராஜ் தேங்காசில்லு பொறுக்கியாக வந்து அரசியலில் விசுவரூபம் எடுப்பார் :-))

எனவே சில்லு என்றால் சிறிய அளவினை குறிப்பது என்பது தெளிவாகிறது.

அரை என்றால் பாதி என்பது அனைவருக்கும் தெரியும், எனவே ரொம்ப சிறிய அளவிலான ஒரு தொகை என்பதை குறிக்க சல்லி,சில்லு ஆகியவை வழுவி சில்லு +அரை = சில்லரை என புழக்கத்தில் வந்திருக்கலாம்.

ஒரு வேலை பாதியில் நின்றுவிட்டால் "அரை" வேலை நடந்திருக்கிறது என சொல்லாமல் அரையும் குறையுமா நடந்தது என்பது வழக்கம், முழுவதுமாக முடியவில்லை என்பதை அழுத்தமாக சொல்ல கூடுதலாக "குறை" என்ற சொல்லையும் சேர்த்துக்கொள்வது போல, எனவே பெரிய தொகை இல்லை ரொம்ப சிறிய தொகை அதுவும் சிறிய அளவிலான நாணயங்களாக என சொல்ல "சில்லரை காசு"என்ற பதம் பயன்படுத்தப்பட்டு ,புழக்கத்தில் வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

எனவே சிறிய அளவிலான தொகைக்கு பொருட்களை விற்பதை ,சிறு வணிகம் அல்லது சில்லரை வணிகம் என்பது சரியானதே.

அருகாமை:

பக்கத்தில் இருக்கும் ஒன்றை அருகாமையில் உள்ளது என சொல்வதுண்டு,ஆனால் அச்சொல் தவறானது , எதிர்மறையான பொருளினைக்கொண்டது என சிலர் சொல்கிறார்கள்.

அதற்கு அளிக்கும் விளக்கம் என்னவெனில்,

ஒன்றை தெரிந்து இருப்பது அறிவது, தெரியாமல் இருப்பது அறியாமை,

அருகு என்றால் பக்கத்தில் இருப்பது, அருகாமை என்றால் பக்கத்தில் இல்லை எனவே அருகாமை என்றால் தொலைவில் உள்ளது,அதனை பக்கத்தில் இருக்கு என சொல்லப்பயன்ப்படுத்தக்கூடாது என்கிறார்கள்.

ஆனால் "அருகாமை" என்ற சொல் சரியான தமிழ் சொல் என தமிழ் இணைய பல்கலையும், சென்னைப்பல்கலை அகரமுதலியும் சான்றுரைக்கின்றன.

அப்படி எனில் அருகாமை என்ற சொல் சரியா,தவறா?

அருகு என்ற சொல்லின் பல வடிவங்களை காண்போம்.

அருகல்,அருகன்,அருகர்,அருகிய,அருகுதல்,அருகாமை,அருகாண்மை.

http://www.tamilvu.org/slet/servlet/lexpg?pageno=130&x=0&y=0

அருகு என்றால் குறைந்து வருவது, சுருங்கி வருவது என்றப்பொருளில் பயன்ப்படுத்தப்படுகிறது.,

சிட்டுக்குருவிகள் நகரத்தில் அருகி வருகின்றன என சொல்வதுண்டு.

தூரம் குறைவாக இருப்பதை அருகில் என சொல்லலாம் என்பது சரியே ஆனால் அதனை வைத்து அருகாமை தவறு என சொல்ல முடியாதே.

அறிவின் எதிர்ச்சொல் அறியாமை  ,மை,ஆமை என முடிவது எதிர்ச்சொல்லை குறிக்கும்னு வேற ஒரு விளக்கம் கொடுக்கிறார்கள்.

அப்படி எனில் ,

இல் என்றால் இல்லை எனப்பொருள்,

தமிழில் "இல்பொருள் உவமையணி "என ஒன்று உண்டு.

அப்படி எனில் இல்லைக்கு எதிர்ச்சொல் இல்லாமை ஆகிவிடுமா?எதிராகப்பொருள் அளிக்க வேண்டும், அதாவது இருக்கு என :-))

ஆனால் இல்லாமை என்றால் இல்லை என்று தான் பொருள் ,அப்படி எனில் அருகாமை என்றால் மட்டும் அருகில் இல்லை என எதிர்மறையாக எப்படி பொருள் வரும்?

"மை" என்ற விகுதி எதிர்ப்பொருளை அளிப்பதல்ல, "மை" என்றால் உடையது, அங்கு உள்ளது என சுட்டப் பயன்படுவது.

உதாரணம்.

கறுப்பு , கரிய நிறமாக இருப்பது ,இதனை "கறுமை" என்பார்கள்.

ஆ+மை என விகுதியில்  சேர்த்தால் எதிர்மறைப்பொருள் தரும் என்றால்,"இல்= இல்லை"க்கு எதிர்மறையாக இல்லாமை வர வேண்டும் அப்படியும் வரவில்லை.

ஒரு சொல்லின் விகுதியில் "ஆ" சேர்ப்பதால் எதிர்மறை சொல்லாக்கலாம் என தமிழில் ஒரு விதியுண்டு ஆனால் அதுவே பொதுவிதியன்று.

கனி= பழம்

கனி +ஆ= கனியா என்றால் பழமில்லை எனலாம், ஆனால் அது மட்டுமே எதிர்ச்சொல் என ஆகி விடாது.ஏன் எனில் காய் என தனித்த எதிர்ச்சொல் ஒன்றும் உள்ளது.

ஹி..ஹி ...அப்போ காய்+ஆ = காயா என்றால் பழம் ஆகிடுமா?

காயா(த) கானகம் என்றால் வெயில் படாத காடு என்று பொருள் வரும்!

ஒரு சொல்லுடன் ஆ,ஏ,ஓ என விகுதியில் சேர்ப்பதால் வினா,வியப்பு போன்ற சொற்களை உருவாக்கலாம்னு வேற தமிழ் இலக்கணம் சொல்லுதே !!!

இலக்கிய ரீதியாக  கனியா என சொல்வதை பொதுமைப்படுத்தி ஒரு சொல்லின் விகுதியில் " ஆ +மை" சேரும் போது எதிர்மறைச்சொல் ஆகிவிடும் என அருகாமைக்கும் சொல்வது சரியல்ல,எப்படி எனப்பார்ப்போம்.

அருகு என்றால் பக்கமாக இருப்பது, அருகாமை என்றாலும் பக்கத்தில் இருப்பதே,

அருகு என்பது வினைச்சொல் , அதற்கு வினைப்பெயர்ச் சொல் "அருகம்" ஆகும்.அருகம்புல் என சொல்வது கூட இதனால் தான் ,அருகம்புல் ஒன்றோடு ஒன்றாக தொடர்ச்சியாக ,நெருக்கமாக,கிளைத்து வளரும் புல். அருகம்புல் ஒரு இடத்தில் வளர்ந்து விட்டால் அழிக்கவே  முடியாது , ஒரு புல்லின் கணுவில் இருந்து இன்னொரு புல் முளைத்து "வலை"ப்போல பரவி விடும். அதாவது அருகருகே புல் முளைத்துக்கொண்டே போகும், அழிக்க இயலாத புல் அருகம் புல்.

இப்படி வலைப்போல அருகருகே உருவாகும் புல் என்பதால் மண் அரிப்பு உள்ள இடங்களில் இப்புல்லினை வளர்ப்பார்கள்.

ஏரி ,குளக்கரை, பாலங்கள் கட்டிய இடங்களின் சரிவில் ,மழையால் மண் அரிக்காமல் இருக்க ,அருகம்புல்லினை நடவு செய்வது வழக்கம்.

தொடர்பு அற்றுவிடாமல் இருக்க வேண்டும், உறவு நிலைத்து நிற்க வேண்டும் என்பதனை சூசகமாக சொல்லவே கல்யாணம், இன்ன பிற சடங்குகளின் போது அருகம்புல்லினை பயன்படுத்துகிறார்கள், அதே போல வாழை மரம் கட்டுவதும், வாழையடி வாழையாக வம்சம் தொடர வேண்டுமாம்!

ஒரு புல்லுக்கு கூட எப்படிலாம் யோசித்து பெயர் வைக்கிறாங்க பாருங்கய்யா :-))

எனவே ,

அருகாமை=அருகம்+ அமை

புணர்ச்சி விதிகளின் படி, ஒற்றெழுத்து செல்ல ,வரு மொழியில் உள்ள "அ" நிலை மொழியில் உள்ள "க"உடன் சேர்ந்து நெடில் "கா"ஆகி ,அருகாமை ஆகிவிடுகிறது.

அருகில் அமைந்துள்ள இடம் என்பதை அருகாமை இடம் எனலாம்.

இது எப்படினு இன்னும் புரியவில்லை எனில் ,

வெங்கடாஜலம் என்பதையோ ,விருத்தாஜலம் என்பதையோ பிரித்து எழுதிப்பாருங்கள் :-))

********

முயற்சிக்கிறேன்:

முயற்சி =effort.

இது ஒரு வினைப்பெயர்ச்சொல் , ஒரு செயலை செய்ய முற்படுவதை  முயற்சிக்கிறேன் என சொல்வார்கள்.

இதுவும் தவறு என்கிறார்கள், சரி எப்படினு பார்ப்போம்.

முயல் என்பது தான் வேர்ச்சொல் எனவே முயல்கிறேன் என சொல்ல வேண்டும் முயற்சிக்கிறேன் என்றால் முயல் சிக்கப்போகுது என சொல்வதாகும் என்கிறார்கள்.

அடடா இப்படிலாம் கூட பிரிச்சு பொருள் உண்டாக்கலாமா :-))

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்.

என திருக்குறளிலும் முயற்சி என்ற சொல் உள்ளது.

முயற்சி என்ற வினைப்பெயர்ச்சொல்லின் வழக்கு  வடிவம் தான் முயல் என சென்னைப்பல்கலை அகரமுதலி சொல்கிறது.

http://www.tamilvu.org/slet/servlet/srchlxpg?editor=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&key_sel=Tamil&GO.x=38&GO.y=15

 முயற்சி என்பது தனிச்சொல் , அதனை முயற்சிக்கிறேன் என எழுதினால், முயல் +சிக்குறேன் என பிரிக்க கூடாது,

தட்டு, தட்டுகிறேன்,

ஒட்டு , ஒட்டுகிறேன்,

பாடு ,பாடுகிறேன்

என்பது போல முயற்சிக்கிறேன் எனவும் சொல்லலாம்.

முயல் என்பது ஒரு தனிப்பெயர்ச்சொல், முயல்கிறேன் என சொன்னால் முயலாக போகிறேன் என சொல்வதாகுமே :-))

மேலும் , முயற்சி செய்யாமல் இருப்பதை முயல்+ஆமை=  முயலாமை என உதாரணம் காட்டுகிறார்கள்.

அயல் என்றால் வேறு, அடுத்த எனப்பொருள்.

வேற்று நாட்டினை அயல்நாடு என்பார்கள்.

அப்போ வேற்று நாட்டுக்கு போகாமல் இருப்பதை "அயலாமை" எனலாமா?

அயர்ச்சி = சோர்வு.

அயர் +ஆ =அயரா, அயராது,அயராமை என எதிர்மறையிலும் சொல்லலாம்.

அயர்ச்சி  என்பதன் எதிர்ச்சொல் எழுச்சி ,எனவே எழுச்சியுடன் என சொல்லிவிட்டாலும் அயராமை என்ற பொருள் கிடைக்கிறது, எனவே ஒரு சொல்லுடன் ஆ+மை என சேர்த்து உருவாக்குவது எல்லாம் எதிர்ச்சொல் என்ற அடிப்படையில் எல்லா சொல்லுக்கும் பொறுத்த தேவையில்லை.

முயற்சிக்கு முயல் தான் வேர்ச்சொல் என கண்டுப்பிடித்தது போல அயர்ச்சிக்கு அயல் தான் வேர்ச்சொல், என கண்டுபிடித்து அயலாமை என்றால் சோர்வின்மை என சொன்னால் என்னாவது :-))

கடல் , அது இல்லை என  எதிர்க்கூற்றாக சொல்ல கடல்+ஆ+மை =கடலாமை என சொன்னால் கடலில் இருக்கும் "tortoise" வந்து கடிச்சிடாதா :-))

(கனி= Fruit (n), கடல்=sea(n) , எனவே கனிக்கு எதிர்ச்சொல் கனியாமைனு சொல்வதன் அடிப்படையில் இவ்வுதாரணம், மக்கள் பெயர்ச்சொல்லுக்கு ஆ+மை சேர்த்தால் எதிர்மறை ஆகாது என இலக்கணம் சொல்லக்கூடும்  என்பதால் இந்த பின் ஜாமீன்)

------------------------

கோர்த்து:

கோர்த்தல்,கோர்வை என்றால் ஒன்றோடு ஒன்று சேர்ப்பது.தொடர்ச்சியாக இருப்பது.

ஆனால் அப்படி எழுதுவது தவறு ,கோவை என்ற சொல்லின் அடிப்படையில் ,"கோத்து"என்பதே சரியான சொல்  என "ர்" அ விட்டுவிட சொல்கிறார்கள், ஆப்பீசர்ஸ் இங்கே யாரு "ர்" அ விட்டாங்கன்னு கவுண்டர் போல தான் கேட்கணும் :-))

கோர்வை என்பதன் வழக்கு சொல் தான் கோவை ,அதனடிப்படையில் சொல்லப்படும் கோத்து என்பதும் வழக்கு சொல்லே.

கர்நாடக இசையில் ஒரு இசைக்குறிப்பை மூன்று முறை சொல்வதை கோர்வை என்கிறார்கள்.

“Korvai” is a Tamil word used in South Indian
Carnatic music to designate a pattern or composition that is usually
played three times."

அதனால் தான் இசையமைத்து வாசிப்பதை இசைக்கோர்வை என்கிறார்கள். பல இசைக்குறிப்புகள் தொடுக்கப்படுகின்றன என்பதை கோர்வை என்ற சொல் குறிக்கின்றது.

ஒன்றாக தொடுப்பதை கோர்வை எனலாம் ,இதனை வழக்கில் கோவை எனவும் சொல்லலாம், ஆனால் இலக்கணப்படி கோர்வை என்ற சொல்லே சரியானது.

எனவே கோர்ப்பது என்பதுவும் சரியான சொல்லே.

நான்மணிக்கோவை,ஆசாரக்கோவைனு நூல்கள் உள்ளதால் கோவை சரியான சொல் என்கிறார்கள்.

சில்லரை கோர்வை என்ற நூலை டி.எஸ்.ராமானுஜம் அய்யங்கர் எழுதி இருக்கிறாரர்னு கூகிள் வேற காட்டுது,அப்போ கோர்வை என்ற சொல் இலக்கிய ரீதியாகவும் இருக்கு என தெரிகிறது.

சரம் என்ற சொல் சர்த்தல் என்ற சொல்லில் இருந்து உருவானது.

சேர் - சேர்த்தல்,சேர்வை.

போர்- போர்த்தல் ,போர்வை.

பார்- பார்த்தல்,பார்வை.

வியர்- வியர்த்தல்,வியர்வை.

எல்லாவற்றிலும் "ர்" விட்டு சொன்னால் கொச்சையான வழக்கு மொழி தான் கிடைக்கும்.
--------------

உண்மை:

உள் +மை =உண்மை.

உள் என்றால் உள்ளே ,உள்ளம் ,ஆன்மா, இதயம் என்பதை எல்லாம் குறிக்கும்.

மை என்றால் இருப்பது.

அதாவது ஒன்றின் உள் பொதிந்து இருப்பது உண்மை. உள்ளதை உள்ளபடியே சொல்வதே உண்மை எனலாம்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D

உண்மை என்பதற்கு ஆங்கிலத்தில்  "Fact" என பலரும் நினைத்துக்கொள்வதுண்டு. ஆனால் இலத்தினீல் ஃபேக்ட் என்றால் செய்,செய்வது,செயல்படுவது,

 Fact= action,from Latin word factum "event, occurrence," lit. "thing done,".செயற்கையாக செய்யப்படுவதை "Factitius" என்பார்கள். எனவே தான் தொழிற்சாலைக்கு Factory  என்று பெயர், மனிதன் உற்பதி செய்வதை Manufacture என்கிறோம்.

அப்புறம் எப்படி உண்மைக்கு ஃபேக்ட்  எனப்பெயர் வந்தது ?

Fact =செய்யப்பட்டது ,  அதாவது செய்யப்பட்ட செயலில் என்ன செய்தார்கள் ,எப்படி செய்தார்கள் என்பதை கவனிக்க ,பார்க்க முடியும், மீண்டும் செய்து பார்த்து இப்படித்தான் நடந்தது என நிறுவ முடியும். எனவே நடைப்பெற்ற ஒரு செயலில் என்ன நடந்தது என  கண்டுப்பிடிப்பதை "Fact finding" என சொல்வதால் , காலப்போக்கில் ஃபேக்ட் என்பது உண்மை என்ற வழக்கில் ஆங்கிலத்தில் புழங்கலாயிற்று.
------------------------------------
பின் குறிப்பு:

இணையத்தில் வாசித்ததன்  அடிப்படையில் எனக்கு எழுந்த அய்யங்களை மய்யமாக வைத்து எனக்கு புரிந்த அளவில் இப்பதிவு, சரியான விளக்கம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை, யாரேனும் விளக்கினாலும் தன்யனாவேன்,நன்றி!
--------------------------

Friday, January 04, 2013

அஃதே,இஃதே-5.

(ஹி...ஹி அழகை அனுபவிக்கனும் ஆராயக்கூடாதாம்)

DTH-SWOT ANALYSIS:

பொருளாதாரத்தில் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலில் ஒரு பொருள் அல்லது சேவையினை புதிதாக அறிமுகப்படுத்துவதற்கு முன் ,சந்தைப்படுத்துவதில் உள்ள சாதக,பாதகங்கள் மற்றும் வெற்றிகரமாக இயங்க உள்ள வாய்ப்புகளை முன்கூட்டியே கணிக்க SWOT ANALYSIS என்ற முறையினை பயன்ப்படுத்துவதுண்டு , 


SWOT என்பது ஒரு பொருள்,அல்லது சேவையின் வெற்றியினை தீர்மானிக்க வல்ல நான்கு முக்கிய காரணிகளான ,

S- STRENGTH

W- WEAKNESS

O- OPPORTUNITY

T- THREATS

ஆகியவற்றின் சுருக்கம் ஆகும்.

இந்நான்கு காரணிகளுக்கு தொடர்பிலான விவரங்களை தொகுத்து , பாதகங்களை விட சாதகங்களின் சதவீதம் அதிகமாக இருக்குமெனில் அப்பொருள் அல்லது சேவை சந்தையில் வெர்றியடையும் என முன்னதாக தீர்மானிக்க இயலும், இதன் அடிப்படையிலே தயாரிப்பதா இல்லையா என முடிவெடுப்பார்கள்.

தமிழ் சினிமாவில் இது போன்று முறைப்படுத்தப்பட்ட்ட சந்தை சிந்தனைகள் இல்லை என்றாலும் ஒரு தோராயமான கணக்கீடுகள் ,கணிப்புகள் செய்வதுண்டு.

தயாரிப்பு முன் ஆலோசனைகளின் போது,ஒரு படத்தின் கதையை கேட்டதும் இது வில்லேஜ் சப்ஜெக்ட் வில்லேஜில் எடுபடும் நகரத்தில் ஓடாது , ராமராஜன் நடித்தால் எடுபடும், மாதவனுக்கு செட் ஆகாது என்பது போன்ற முன்கணிப்புகளை இவ்வகையில் சேர்க்கலாம்.

இப்போது அரங்க வெளியீட்டுக்கு முன்னர் , டிடிஎச் மூலம் திரையிடுவதற்கு ஸ்வாட் ஆய்வு செய்து பார்க்கலாம்.

பலம்(S- STRENGTH):

# படம் பார்க்க விருப்பமிருந்தும்,திரையரங்கு செல்ல விரும்பாதவர்கள்.

#திரையிட வாய்ப்பில்லாத இடங்களிலும் உள்ள பார்வையாளர்களை சென்றடைதல்.

நேர்மறை எண்ணிக்கை = +2

பலவீனம்(W- WEAKNESS):

# பெரிய திரையில் பார்க்கும் அனுபவத்தினை அளிக்காது.

# படம் நன்றாக இல்லை எனில் , நெகட்டிவ் விமர்சனம் பரவுதல்.

# திரையரங்குகளின் ஓப்பனிங் கலெக்‌ஷன் பாதிப்படைதல்.

#டிடிஎச் இல் பார்த்தவர்கள் மீண்டும் திரையரங்கு செல்ல மாட்டார்கள்.

#மிக அதிக கட்டணம்.

# ஒரே முறை மட்டுமே ஒளிபரப்புதல்.

எதிர்மறை எண்ணிக்கை = -6

மேற்கண்ட இரண்டுகாரணிகளும் அகக்காரணிகள், மேலும் இவற்றின் சாதக அம்சங்களை தீர்மானிப்பது உற்பத்தியாளரின் வசம் உள்ளது,எனவே அதிக பட்சமாக சாதகமான வகையில் சந்தைப்படுத்தலுக்கு ஏற்றார்ப்போல செயல்படும் வகையில் திட்டமிட முடியும்.வாய்ப்புகள்(O- OPPORTUNITY):

# வழக்கமான வருவாய் வாய்ப்போடு புதிய வருவாய் வாய்ப்பினை உருவாக்குதல்.

நேர்மறை எண்ணிக்கை= +1

மிரட்டல்கள்(T- THREATS):

# அரங்க வெளியீட்டுக்கு முன்னர் ஒளிபரப்புவதால், விரைவாகவும், தரமாகவும் திருட்டு டிவிடி உருவாகும் வாய்ப்பு.

# பகிர்வு முறையில் ஒரே கட்டணத்தில் பலரும் பார்க்க வாய்ப்புள்ளது.

# கேபிள் டீ.வி போன்றவற்றில் டிடிஎச்  ஃபீட் ஒளிபரப்பும் வாய்ப்புள்ளது.

# மின் தடையினால் சேவை பாதிப்பு.

# மோசமான வானிலையால் ஒளிபரப்பு தடை பட வாய்ப்புள்ளது.

# 1000 ரூபாய் செலவழித்து பார்க்கும் வருவாய் திறனுள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது.

# திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு.

எதிர்மறை எண்ணிக்கை= -7

வாய்ப்புகள்,மிரட்டல்கள் இரண்டும் புறக்காரணிகளாகும் எனவே இவற்றின் சாதக,பாதகங்களை உற்பத்தியாளர் தீர்மானிக்க முடியாது, அதிக எதிர்மறைகூறுகள் உருவாகாத வகையில் நிர்வகித்து சந்தைப்படுத்துதல் வேண்டும்.

சாதக,பாதக கணக்கீடு:

மொத்த நேர்மறை = +3 

மொத்த எதிர்மறை = -13

நிகர மதிப்பு= -10

முடிவு:

 டிடிஎச் இல் அரங்க வெளியீட்டுக்கு முன்னர் வெளியிடுவதில் சாதகங்களை விட பாதகங்களே அதிகம் மேலோங்கி இருப்பதால், இத்திட்டம் வெற்றியடைய வாய்ப்புகள் மிகவும் பலவீனமாக உள்ளது எனலாம்.
**********

மனித வேட்டை:
ZERO DARK THIRTY  என்ற ஹாலிவுட் திரைப்படம் , ஒசாமா பின் லேடனை அமெரிக்க கப்பற்படை அதிரடி வீரர்கள் வேட்டையாடி கொன்றதை , சி.ஐ.ஏ நிபுணர்களின் கலந்தலோசனையுடன் ,உண்மைச்சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற விளம்பரத்துடன் ,கடந்த டிசம்பர் மாதம்  வெளியாகி நல்ல பாராட்டினையும் பெற்றுள்ளது.

ZERO DARK THIRTY என்றால் அதிரடிப்படையினரின் சங்கேத மொழியில் நள்ளிரவு பன்னிரண்டு மணி முப்பது நிமிடம் என்பதாகும். ஒவ்வொரு வகையான அதிரடிப்படையின் ஆபரேஷனுக்கும் ஒரு சங்கேத பெயர் சூட்டுவது வழக்கம், ஆபரேஷன் நடத்த திட்டமிட்டநேரத்தினையே சங்கேதப்பெயராக வைத்து படம் எடுத்துள்ளார்கள்.

TRAILER:ஆனால் சி.ஐஏ அதிகாரிகள்,அமெரிக்க செனட்டர்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதோடு , அப்படம் முழுக்க கற்பனையானது, அதிகாரப்பூர்வமாக யாரும் சம்பவங்களை விவரிக்கவில்லை, மேலும் அமெரிக்க அரசின் அதிரடி நடவடிக்கையை கொச்சைப்படுத்தும் வண்ணம் உள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

ஒசாமா பின் லேடனின் இருப்பிடத்தினை அறிய கைது செய்யப்பட்ட அல்கய்தா தீவிரவாதிகளை கடுமையாக சித்திரவதை செய்து பெறப்பட்ட தகவல்களின் உதவியுடனே அமெரிக்க அதிரடிப்படை செயல்படுவதாக படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதே , அரசு அதிகாரிகளின் எதிர்ப்புக்கு காரணமாகும்.

ஆனால் அமெரிக்க ஊடகங்களும் ,விமர்சர்களும், இப்படம் ஒபாமா அரசுக்கு ஆதரவான படம், அமெரிக்க தேர்தலுக்கு முன்னர் ஒபாமாவின் இமேஜை உயர்த்திக்காட்ட வெளியிடுவதாக இருந்து,பின்னர் எதிர்ப்புகளால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு டிசம்பரில் வெளியானது என்ன்கிறார்கள்.

இந்த படத்தில் இன்னொரு சுவாரசியம் என்னவெனில் பாகிஸ்தானில் படப்பிடிப்பு செய்வது ஆபத்தானது என கருதி, இந்தியாவில் சண்டிகரில் படம் பிடித்தார்கள், சில செட்டுகள்,கிராபிக்ஸ் மூலம் சண்டிகரை இஸ்லாமாபாத்தாக படத்தில் காட்டியுள்ளார்கள்.

கடந்தாண்டு மார்ச்சில் சண்டிகரில் படம்பிடிக்கும் போது பாகிஸ்தான் கொடியை ஏற்றிவைத்து படப்பிடிப்பு செய்தது அப்போது சர்ச்சையை உருவாக்கியது சிலருக்கு நினைவிருக்கலாம்.

இப்படத்தினை இயக்கியவர் , ஹர்ட் லாக்கர் திரைப்படத்தின் மூலம் ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் இயக்குனர் எனப்பெருமை பெற்ற "Kathrine Bigelow" ஆவார்.வழக்கமாக பெண் திரைப்பட இயக்குனர்கள் என்றால் பெண்ணியம் சார்ந்த மென்மையான கதையம்சங்கள் உள்ள படைப்புகளை தான் உருவாக்குவார்கள் என்ற பிம்பம் உண்டு, அதனை உடைத்து பல அதிரடி ஆக்‌ஷன் ,அட்வெஞ்சர் வகை படங்களையே இவர் உருவாக்கி வருகிறார். டைட்டானிக்,அவதார், போன்ற ஆஸ்கர் விருதுகள் வென்ற படங்களை இயக்கிய புகழ்மிகு ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் முன்னால் மனைவி  "Kathrine Bigelow" என்பது குறிப்பிட தக்கது. ஆஸ்கார் ஜோடின்னு கூட சொல்லலாம்.

************

காற்றுள்ளபோதே கரண்ட் எடுத்துக்கொள்:
தமிழகத்தில் வழக்கமாகவே மின்வெட்டு தலைவிரிச்சு டான்ஸ் ஆடும், அதுவும் கோடைகாலம், காற்றடிக்காத காலம் என்றால் இன்னும் அதிகமாகிடும், இதனை எல்லாம் தீர்க்க நிரந்தரமாக மின்னுற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றாலும், நாம் பயன்படுத்தும் மின்னுற்பத்தி திட்டங்களில் இன்னமும் சில புதுமைகளை புகுத்த வேண்டியது அவசியமாகும்.

அணு,அனல்,புனல், சூரிய சக்தி,காற்றாலை என பல வகையிலும் மின் உற்பத்தி திட்டங்கள் இந்தியாவில் செயல்ப்படுத்துப்பட்டு வந்தாலும், அவை எல்லாம் வெகுகாலத்துக்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட அமைப்பிலும், தொழில்நுட்பத்திலுமே பயன்ப்படுத்தி வருகிறோம்.

காற்றாலை மின் உற்பத்தியிலேயே பல நவீன மாற்றங்கள்,மற்றும் நடைமுறை படுத்துவதில் புதிய வழிகளை மேலை நாடுகளில் கொண்டு வந்துவிட்டார்கள்.

நம் நாட்டில் ஒரு காற்றாலை அதிக பட்சமாக 1.25 மெகா.வாட் என்ற அளவிலேயே வடிவமைக்கப்படுகிறது, ஆனால் மேலை நாடுகளில் ஒரே காற்றாலை மூலம் 3 -5 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய அளவில் வடிவமைத்துப்பயன்படுத்த துவங்கிவிட்டார்கள். இதன் மூலம் குறைவான இடத்தில் அதிக காற்றாலை மின் உற்பத்தி பெறமுடியும்.

ஒரு காற்றாலை மின் உற்பத்தி அமைப்பில்  ,,அதன் உற்பத்தி திறன்(capacity), மற்றும் ஆற்றல் திறன்(efficiency) ஆகிய இரண்டு காரணிகள் முக்கியமானது ஆகும்.

1.26 மெகாவாட் என்பது அதன் உற்பத்தி ஆற்றல் அளவு. ஆனால் சராசரியாக அதன் உற்பத்தி திறன் 30% மட்டுமே ஆகும்.

உற்பத்தி திறன் என்பது காற்றின் இயங்கு விசையோடு தொடர்புடையது,  காற்றாலை அமைக்க இடம் தேர்வு செய்ய அதிக இயங்குவிசையோடு காற்று வீச வாய்ப்புள்ள இடங்களையே தேர்வு செய்வார்கள்.

ஒரு காற்றாலை எத்தனை திறனுடன் காற்று விசையை ,மின்சாரமாக மாற்ற வல்லது எனக்கணக்கிட, காற்றாலை விசிறியின் வீச்சு பரப்பினையும்,காற்றின் இயங்கு திசைவேகம் மற்றும் விசை ஆகியவற்றினை கணக்கிட வேண்டும்.

காற்றாலையின் திறன் என்பது ,கிடைமட்டத்தில் வீசும் காற்றின் இயங்கு விசையை ,செங்குத்து அச்சில் சுழலும் விசிறிகள் வெட்டுவதால் எத்தனை சதவீதம் திருப்பு விசையாக மாற்றி மின் உற்பத்தி செய்கிறது என்பதாகும்.

இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு இயங்கு விசையில் காற்றாலை சக்தி கிடைக்கும் எனக்கணக்கிட்டு ,அதற்கு ஏற்ப அங்கு காற்றாலை பண்ணைகள் அமைக்கலாமா ,வேண்டாமா என முடிவெடுப்பார்கள்.

காற்றாலை திறனை மதிப்பிடல்:

ஒரு காற்றாலையின் நிகர உற்பத்தி திறன்

=காற்றின் இயங்கு விசை* விசிறிகளின் குறுக்குவெட்டு வீச்சு* உற்பத்தி திறன்.

ஒரு இடம் கடல் மட்டத்திலிருந்து இருக்கும் உயரம், மற்றும் வீசும் காற்றின் வேகத்தினை வைத்து அவ்விடத்தின் சாராசரி இயங்கு விசை கணக்கிடப்படும்.இது வாட் அல்லது கிலோ வாட்டில் அளவிடப்படும்.

காற்றாலை விசிறிகளின் நீளத்திற்கு ஒரு வட்டமாக சுழல்கிறது, எனவே விசிறியின் நீளத்தினை ஆரமாக கொண்ட வட்டத்தின் பரப்பளவே குறுக்கு வெட்டு பரப்பு.

3 மெ.வாட் மின்னுற்பத்தி ஆற்றல் உள்ள காற்றாலையின் விசிறியின் நீளம் 45 மீட்டர்கள் இருக்கும்.

எனவே வட்டத்தின் பரப்பு= பை*ஆரம்*ஆரம்
                                  =22/7*45*45
                                  =6360.ச.மீ.

இங்கிலாந்தின் காற்றாலை ஆணையத்தின் தளத்தில் இருந்து இத்தகவல்களை பெற்றுள்ளேன்,அவர்கள் கெண்ட் என்ற இடத்தின் சராசரி காற்றின் இயங்குவிசையை வைத்து கணக்கிட்டுள்ளார்கள்,எனவே அதனை அப்படியே பயன்ப்படுத்திக்கொள்ளலாம்.

காற்றின் இயங்கு விசை = 713வாட்/ஹவர்

ஆற்றல் திறன்=30% 


எனவே ஒரு காற்றாலை செய்யும் மின்னுற்பத்தி

  = 6360*713*30/100

  =1.36 மெ.வாட்.

சீராக காற்றுவீசினால்,ஒரு மூன்று மெகாவாட் காற்றாலையால் ஒரு மணி நேரத்துக்கு  1.36 மெ.வாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்ய முடிகிறது எனில் நம் நாட்டில் 1.25 மெ.வாட் காற்றாலை ஒரு மணி நேரத்துக்கு சுமார் 400 கிலோ வாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்ய முடியும் என்பதனை கணிக்கலாம்.

எனவே நமது மின் தேவையை மரபுசாரா ஆற்றல் மூலம் பூர்த்தி செய்ய அதிக ஆற்றல் உள்ள காற்றாலைகளை நிறுவ வேண்டியது அவசியம் ஆகும்.

ஆனால் மேலை நாடுகளில் இதோடு விடவில்லை, காற்றாலை மின் உற்பத்தியில் காற்றாலையின் அளவு மற்றும் ,திறன் ஆகியவை ஒரு லிமிட்டிங் ஃபேக்டராக இருந்தாலும் காற்றின் இயங்கு விசை (kinetic energy)சார்ந்து ஆய்வு செய்ததில், கடல் மட்ட உயரம் குறைய குறைய காற்றின் இயங்கு விசை கூடுவதை அறிந்தார்கள், மேலும் நிலப்பரப்பில் உள்ளதை விட கடல் பரப்பில் வீசும் காற்றின் இயங்கு விசை அதிகம் என அறிந்தார்கள்.நிலபரப்பில் இருந்து கடலுக்குள் செல்ல செல்ல காற்றின் இயங்கு விசை அதிகம் ஆகிறதாம், இதற்கு காரணம் காற்றின் அடர்த்தி நீர் பரப்பின் மீது கூடுதலாக இருப்பதும் ஒரு காரணம்.

எனவே நிலபரப்பில் காற்றாலைகளை அமைப்பதை விட ,கடற்பரப்பில் காற்றாலைகள் அமைத்தால் அதிக மின்னாற்றல் பெற முடியும் என கண்டுப்பிடித்து ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் கடலில் ஆழம் குறைவான இடங்களிலும், ஆழம் அதிகமான இடத்திலும் கூட நிலை நிறுத்தப்பட்ட மிதவை அமைப்புடன் காற்றாலை நிறுவி அதிக காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்து நிலபரப்பிற்கு ஆழ்கடல் மின்வடங்கள் மூலம் மின்சாரம் கொண்டு வருகிறார்கள்.

நம் நாட்டிலும் சுமார் 6,500 கிலோ மீட்டர் நீளகடற்கரை உள்ளது அதனை ஒட்டிய கடல் எல்லைப்பரப்பும் மிக அதிகம் , மேலும் கச்சத்தீவு ,இந்தியா - இலங்கை இடையே ஆழம் குறைவான கடற்பரப்பும் உள்ளது, அங்கெல்லாம் காற்றாலைகள் அமைத்தால் காற்றாலை மின் உற்பத்தி பெருகும், மின் வடம் மூலம் நிலப்பரப்புக்கு மின்சாரம் கொண்டு வந்துவிடலாம்.

கடலில் காற்றாலை அமைப்பதன் மூலம் விலைமதிப்புள்ள பெருமளவு இடங்கள் மீதமாகும் அவற்றினை மற்ற தொழில் தேவைகளுக்கு பயன்ப்படுத்திக்கொள்ளலாம்.

----------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

hollywoor reporter,the guardian,washington post,wiki,google,youtube இணைய தளங்கள் நன்றி!
--------------------------