Tuesday, April 03, 2012

INDIA INC.,

இந்திய பொருளாதாரத்தை பற்றி சொல்லும் போது ரொம்ப உயர்வாக,  யானை ,தூங்கும் புலி என டெர்ராக சொல்வார்கள் பொருளாதார வல்லுனர்கள் ,அதை கேட்கும் போதெல்லாம் மனசுக்குள்ள மத்தாப்பு வெடிக்கும் ,நாம ஏழை நாடு இல்லை ஏழையாக்கப்பட்ட நாடு, எதிர்காலத்துல இந்தியா சும்மா தக தகன்னு ஒளிரும், யானை போல பிளிரும் என்றெல்லாம் 70  எம்.எம் இல் 7.1 டால்பி சர்ரவுண்டு சவுண்டில் கலர் கலராக கனவு வரும் , வயலுக்கு அறுவடை செய்ய ஆடிக்காரில் போகும் காலம் வெகு தூரமில்லை , கவலைப்படாதடா கைப்புள்ள, நீ தூங்குனு இழுத்துப்போர்த்திக்கிட்டு கனவுக்கண்டுக்கொண்டிருந்தேன்.

கனவு மெய்ப்பட காலம் இன்னும் வரவில்லையோ இல்லை என்னைப்போல கனவு நம்ம ஆட்சியாளர்களுக்கு வரவில்லையோ தெரியவில்லை, அவங்க போடுற திட்டமெல்லாம் பார்க்க பிரமாண்டமாகவும் கேட்க பிரமிப்பாகவும் இருக்கு, ஆனால் அதன் பலன் மட்டும் நம்ம வீட்டுக்கு வராம அம்பானி , ஆதித்ய பிர்லானு விலாசம் மாறிப்போயிடுது. அடுத்த தடவை நமக்கும் யோகம் வரும் அப்போ  ராச லட்சுமி வாசக்கதவ  தட்டுவான்னு காத்திருந்தால் ,தபால்காரார் கபால்னு ஒரு காகிதத்த வீசிட்டுப்போறார் , வீட்டக்காலி செய் , 8 வழி விரைவு சாலை வரப்போகுதுனு சொல்லுது சர்க்கார் காகிதம்.

வயக்காடு இங்கே கிடக்க வீட்டை கொடுத்துட்டு எங்கே போக என கவலை கருவண்டா மனசைக்குடைய , ராசா அப்படிலாம் உன்னை கஷ்டப்பட விட மாட்டோம்   , உன் வயலையும் கொடு அங்கே சிறப்பு பொருளாதார மண்டலம் வருது , ஊரைக்காலி செய்துட்டு நிம்மதியா பஞ்சம் பொழைக்க எங்கே வேண்டுமானாலும் போய்க்கோனு அடுத்த நாளே இன்னொரு ஓலை வருது.அதைப்பார்த்ததும் என் ஆடிக்கார் கனவு ஆடிக்காத்துல பறந்த கூளமா பறந்துப்போச்சு!

என்ன தான் நடக்குது நாட்டுல?  யார் , ஏன் இப்படி என்னை ஆடிக்கார் வாங்க விடாம தடுக்கிறாங்க ?எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமினு சர்க்கார் ஆபிசுக்கு போனா , நாட்டோட வளர்ச்சிக்கு தான்  தம்பி எல்லாம், இதெல்லாம் செஞ்சா தான் நாடு நல்லா இருக்கும், நாலு பேர் நல்லா இருக்கணும்னா இதெல்லாம் செய்யணும் , இதை விட பெருசு பெருசா திட்டமெல்லாம் நாடு முழுக்க வரப்போகுது தம்பிப் போப்பா போ ...போனு பத்தி விடுறாங்க! அப்போ அந்த நாலு பேருல நானும் ஒருத்தன் இல்லையா ? நான் நல்லா இருக்க வேண்டாமா? நானும் இந்த நாட்டுக்குடிமன் தானே , என்னைய விட்டுப்புட்டு யாரோ நாலு பேரு நல்லாருக்கணும்னு சொல்லுறாகளே ,சரி அந்த நாலு பேரு யார் ,என்ன தான் திட்டம் போடுறாங்கனு தெரிஞ்சுக்காம விடக்கூடாதுனு நம்ம குல தெய்வம் கூகிளாண்டவரை  வழக்கம் போல உதவிக்கு கூப்பிட்டேன் ,அவரும் நம்பினார் கெடுவதில்லைனு அருள்பாலித்தார்.நான் கண்ட பாரத பொருளாதார பெருவளர்ச்சி திட்டங்களில் ஒன்று தான் "டெல்லி மும்பை இண்டஸ்ட்ரியல் காரிடார்" இங்கு அழுத்தி முழு விவரம் காண்கவும்.
DMICடெல்லி மும்பை இண்டஸ்ட்ரியல் காரிடார்:

டெல்லிக்கும் மும்பைக்கும் இடையே டெல்லி,யு.பி,ஹரியானா, இராஜஸ்தான்,குஜராத், மஹாராஷ்ட்ரா என ஆறு மாநிலங்கள் வழியாக சுமார் 1500 கி.மீ நீளத்திற்கு 10 வழி விரைவு சாலை மற்றும் இணையாக சரக்கு ரயில் இருப்பு பாதை போட்டு ஒரு மஹா பொருளாதார சிறப்பு மண்டலம் உருவாக்க இருக்கிறார்கள்.

அதன் சிறப்பு அம்சங்கள்:

#1500 கி.மீ 10 வழி சாலை மற்றும் இருப்பு பாதை.

#சாலை மட்டும் அல்ல சாலைக்கு இரு புறமும் தலா 150 கி.மி அகலத்திற்கு இடம் கையகப்படுத்தப்படும். அங்கு 6 மண்டலங்களாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்ப்படும்.

#மொத்த நிலப்பரப்பு 1500*300=450000 ச.கி.மீ.

# வெளியேற்றப்படும் மக்கள் எண்ணிக்கை 180 மில்லியன் அதாவது 18 கோடி. தமிழ் நாட்டின் மக்கள் தொகையைப்போல இரண்டரை மடங்கு. இந்தியாவில் மிக பெரிய அளவில் மக்களை புலம்பெயர வைக்கும் திட்டம் இது ஒன்று தான் என நினைக்கிறேன்.


#திட்ட மதிப்பு 90 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது சுமார் 450000 கோடி ரூபாய்.
இது ஒரு அரசு, தனியார் கூட்டு நிறுவனம் , அரசுக்கு 49% பங்கு, தனியாருக்கு 51%

# திட்டத்தின்  தலைவர் மத்திய நிதியமைச்சர், இயக்குநர்கள் 6 மாநில முதல்வர்கள்,மற்றும் தனியார் நிறுவங்களை சேர்ந்தவர்கள்.

கேட்க நல்லாத்தானே இருக்கு ,நாடு வளர இதெல்லாம் செய்ய வேண்டாமா என்று பொதுவாக நினைக்க தோன்றும், கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தால் விளைவுகளின் தாக்கம் தெரியும்.

18 கோடி மக்களை வெளியேற்றி கொண்டு வரும் திட்டத்தால் பலன் அடைய போவது யார்? இப்படி  ஒரு திட்டம் அவசியம் தேவையா? கேட்டால் கிடைக்குமா பதில்!

18 கோடி மக்கள் எங்கு குடியேற்றம் செய்யப்படுவார்கள், அவர்கள் வாழ்வாதாரம் என்ன ஆகும்.அவர்களுக்கு அங்கு கண்டிப்பாக வேலைக்கொடுக்க போவதில்லை.

#18 கோடி  மக்களை இடம் பெயர செய்து விட்டு எத்தனைப்பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் ? எதுவும் விவரம் சொல்லப்படவில்லை.

#வனங்கள்,இயற்கை சூழல் பாதிப்பு பற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள், அதுவும் விவரம் இல்லை.

# பொருளாதார ரீதியாக இதன் பலன் நாட்டுக்கு கிடைக்குமா? கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. 100 சதவீத வரி சலுகை , இன்ன பிற சலுகை அளிக்கப்படுகிறது. மேலும் திட்டத்துக்கு நிதி  திரட்டுவதிலேயே ஒரு டகால்டி செய்கிறார்கள்.

அதாவது 51% நிதி கொடுக்கும் தனியார்கள் அதனை கடன் மூலம் திரட்டுவார்கள் ,ஜப்பானிய வங்கி கொடுக்கிறது, அதே சமயம்  அவர்களும் பங்கு தாரர்கள்.

இது எப்படி எனில் கிடைக்கும் வருவாயில் கடன் தவணையை கட்டி அடைக்க வேண்டும் பின்னர் எஞ்சியதை 49:51 என பங்கு தாரர்கள் பிரித்துக்கொள்வார்கள்.கொடுத்த கடனையும் வட்டியோட வசூலித்துக்கொண்டு லாபத்திலும் பங்கு(அப்படித்தான் அவர்கள் தளத்தில் இருக்கு, சுட்டியில் சரிப்பார்த்துக்கொள்ளவும், எனக்கு இந்தளவு தான் புரிந்தது.)

# பொருளாதாரம், மற்றும் தொழில் வளர்ச்சி பெருக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது சரியே.

ஜி.எஸ்.டி சாலை 4 வழியாக போட்டார்கள் , தங்க நாற்கர சாலை எல்லாம் வந்தது, ஆனால்  சாலையின் இரு புறமும் இருந்த இடத்தின் மதிப்பும் உயர்ந்தது. அது நிலத்தின் உரிமையாளருக்கு தானே பலன் அளித்தது. தொழிற்சாலையோ ,வீட்டு மனையோ எதுவாகினும் நில உரிமையாளரை சென்றடையும்.

ஆனால் டெல்லி மும்பை திட்டத்தில் மட்டும் , சாலையை நாங்கள் போடுகிறோம் எனவே அதன் பயனும் எங்களுக்கு தான் என 300 கி.மி அகலத்திற்கு நிலம் கையகப்படுத்துகிறார்கள்.

மக்கள் நல அரசு எனில் உட்கட்டமைப்பு வசதியை செய்துக்கொடுத்து பலனை மக்களை அனுபவிக்க விட வேண்டும் ஆனால் இப்போதைய அரசு ஏதோ தனியார் முதலாளியைப்போல போட்டக்காசுக்கு பலன் எனக்கு தான் என செயல்படுகிறது .
உண்மையில் இது மக்களால் ,மக்களுக்காக,மக்களாலாயே உருவான மக்களாட்சியா அல்லது இந்தியா பிரைவேட் லிமிட்டட் என்ற கம்பெனிக்கு ஆட்சியை குத்தகைக்கு விட்டிருக்கிறோமா? என்ற கேள்வி வருவதை தவிர்க்க முடியவில்லை.

மேலும் 4.5 லட்சம் கோடியையும் ஒரே ஆண்டில் முதலீடு செய்யப்போவதில்லை அப்படி இருக்க ஏன் கடன் , மற்றும் கடன் கொடுத்தவரும் பார்ட்னர் என லாபத்திலும் பங்கு என இரண்டு முறை பணம் கொடுக்க வேண்டும். பேசாமல் அரசே  ஆண்டுக்கு 1 லட்சம் கோடி என ஒதுக்கி திட்டத்தை முடிக்கலாம். முழுப்பயனும் அரசுக்கும் , மக்களுக்கும் என ஒரு திருப்தியாவது இருக்கும்

18 கோடி மக்களிடம் இருந்து நிலத்தை அடி மாட்டு விலைக்கு பறித்து ஒரு சில தொழிலதிபர்கள் பயன் பெற அரசே முன்னின்று தரகு வேலைப்பார்ப்பது மக்களாட்சியை மகா கேவலப்படுத்துவதாக உள்ளது.அக்காலத்தில் மேலை நாடுகள் தங்களது தொழில்,வியாபாரத்தை பெருக்க நாடுப்பிடித்து காலனி அமைக்க கப்பலில் ஆயுதங்களுடன் வந்தார்கள் ,இப்போது அவர்களது ஏஜண்ட்களையே அந்நாட்டின்  முக்கியமான பொறுப்பில் அமர வைத்து அதே காலனியாதிக்கத்தை தொடர்கிறார்கள் என்று சொன்னால் மிகையல்ல.

விடுகதை நேரம்:

இப்போது ஒரு புதிர், இதற்கு விடை தெரிந்தும் கூறாவிட்டால் அவர்களது வலைப்பதிவு எந்த திரட்டியிலும் இணையாது , பின்னூட்டங்களும் வராது, ஹிட்ஸ் கிடைக்காது, எதிர் மறை ஓட்டுக்கள் கிடைக்கும்.! உஷார்!


"The United Nations Conference on Trade and Development" என்பது WTO,IMF,WORLD BANK  போன்ற சர்வதேச நிதியமைப்புகளுக்கு கொள்கை வகுத்து ஒருங்கிணைத்து செயல்பட வைக்கும் ஒரு அமைப்பு ஆகும் , அதில் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் போன்ற புகழ்மிகு பல்கலைகளில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு இந்திய மேதைக்கு  வேலைக்கிடைத்தது. பின்னாளில் அவர் இந்தியாவுக்கு வந்து வேறு ஒரு நல்லப்பணியில் அமர்ந்தாலும்  அவரது செயல்பாடுகளை பார்க்கும் போது அவருக்கு இன்னமும் பழைய பாசம் போகவில்லையோ என நினைக்க வைக்கிறார்.அவர் யார்?
---------------------------

பின்குறிப்பு:

தகல் மற்றும் படங்கள் உதவி dmic,rediff இணைய தளங்கள் ,நன்றி!