Thursday, May 24, 2012

பங்கு சந்தையால் பயனடைவது யார்?
பங்கு சந்தைகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் தேவை என பொதுவான கருத்துண்டு,ஆனால் அதில் நடப்பது என்னமோ யூகங்களின் அடிப்படையிலான சூதாட்டமே, மேலும் பல்லாயிரங்கோடிகள் பங்கு வர்த்தகத்தில் புழங்கினாலும் அதன் பலன் யாருக்கு போய் சேருகிறது,சாமனிய மனிதனுக்கு அதனால் பலன் உண்டா என்பதையெல்லாம் அலசும் நோக்கில் இப்பதிவை எழுதுகிறேன்.அனைத்தும் வாசிப்பின் அடிப்படையில் உருவான எனது சொந்த பார்வையே,பிழை இருக்கலாம்,இல்லாமலும் போகலாம் ,மாற்றுக்கருத்து இருப்பின் கூறலாம்.

பங்கு சந்தையின் பலாபலன்களை புரிந்து கொள்ள ஒரு பணக்கார தொழிலதிபர், ஒரு சிறு தொழில் செய்பவர் ஆகிய இருவரை உதாரணமாக எடுத்துக்கொண்டு பார்ப்போம்.

முதலில் குப்பன் எனும் சிறு தொழில் செய்பவரைப் பார்ப்போம்,

குப்பன் ஒரு தேநீர்க்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்கிறார்,அவரது வாழ் நாள் லட்சியம் சொந்தமாக தேநீர் கடை ஆரம்பிப்பதே.உழைப்பில் கொஞ்சம் சேமிப்பு இருக்கு அதனுடன் இன்னும் கொஞ்சம் பணம் கிடைத்தால் போதும் கடை போட்டுவிடலாம் என்ற நிலை.

மேற்கொண்டு நிதிக்காக அனைத்து வங்கிகளுக்கும் படை எடுத்து பார்க்கிறார்,கஜானா திறப்பேனா என அடம் பிடிக்கிறது. வேறு வழி இல்லாமல் கந்து வட்டி கந்தனிடம் 50 ஆயிரம் வட்டிக்கு வாங்கி, கையில் உள்ளப்பணம் ,மனைவி நகை எல்லாம் அடகுவைத்து நிதி திரட்டிவிடுகிறார்.

கடைக்கு இடம் தேடியலைந்து ஒருவழியாக பிடித்து ,அங்கு கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் வரவில்லை என ,வண்டியில் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்து ,பல முறை கார்ப்பரேஷன் அலுவலத்துக்கு அலைந்து,கடைசியில் லஞ்சம் கொடுத்து கடைக்கு அனுமதி வாங்கி ஒருவழியாக தேநீர்க்கடையை ஆரம்பித்து விடுகிறார்.

வரும் வருமானம் எல்லாம் வட்டிக்கும், குடும்ப செலவுக்குமே சரியாக போய்விடுகிறது.மேற்கொண்டு கடையை விரிவுப்படுத்த நிதி இல்லை என்று ரொம்ப டைட்டாக ஓடுது வியாபாரம்.

இப்போது பணக்கார தொழிலதிபர் ஜூனியர் கும்பானி என்பவரைப் பார்ப்போம், பணக்கார குடும்பத்தில் தங்க ஸ்பூனோட பொறந்தவர்,ஆனாலும் சொந்தமாக ஒரு வியாபாரம் செய்யணும் என சுமார் ஒரு கோடி முதலீட்டில் ஒரு தேயிலைத்தூள் நிறுவனம் ஆரம்பிக்க நினைக்கிறார்.

இவர் இடம் எல்லாம் தேடவில்லை, ஆரம்பிக்க அனுமதி கேட்டதும் அரசே தொழிற்பேட்டையில் 5 ஏக்கர் நிலத்தை அடிமாட்டு விலைக்கு கொடுத்து விடுகிறது,மேலும் தடையில்லா மின்சாரம், குடிநீர் எல்லாம் கொடுக்கிறோம், கூடவே 7 ஆண்டுக்கு 100 சதவீத வரிவிலக்கு எல்லாம் சொல்லி தொழிலை துவங்க ஊக்குவிக்கிறது அரசு.

கும்பானியும் தொழிற்சாலை ஆரம்பித்து ஊட்டியில் பச்சை தேயிலையை கிலோ 20 ரூக்கு வாங்கி வந்து அரைத்து பொடியாக ஒரு கிலோ 300 என சல்லீசாக கொளை லாபத்தில் விற்கிறார், அந்த தேயிலைக்கு ஃப்ரீரோசஸ்னு அழகா பேரும் வச்சுக்கிறார்(ரோசாவுக்கும் டீக்கும் என்னையா சம்பந்தம்?)

பேரு மட்டும் வச்சாப்போதுமா ,அதை விளம்பரப்படுத்த ,ஃபிரிஷா என்ற கோலிவுட்/பாலிவுட் நடிகையை வச்சு விளம்பரம் எடுத்து விடுறார், அந்தம்மணியும் வாங்குன காசுக்கு வஞ்சணையில்லாம தம்மாத்துண்டு துணிய உடுத்திக்கிட்டு வந்து என் மேனி எழிலுக்கு காரணம் ஃப்ரிரோசஸ் டீ தான் ??!! சொல்லுது.

மேலும் உங்களுக்கு ஏன் ஃபிரிரோசஸ் புடிக்கும்னு இந்த நம்பருக்கு கால் செய்து சொல்லுங்கன்னு கொஞ்சலா சொன்னதும் ,ஒரு நிமிடத்துக்கு 10 ரூபா புடுங்கிடுவான்னு தெரியாம பல ரசிகக்கண்மணிகள் கால் செய்து ரெக்கார்டட் வாய்ஸ் கேட்டு பூரிப்பது தனிக்கதை ;-))

பிரிஷா குடிச்ச டீயத்தான் !!?? குடிப்பேன்னு மக்களும் போட்டிப்போட்டு ஃபிரிரோசஸ் டீத்தூளை வாங்கி குடிக்கவே கும்பானிக்கும் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டுது ,நல்ல லாபமும் வருது ,வராதா பின்ன 20 ரூ டீத்தூளை 300 ரூனு வித்தா ?

நம்ம டீக்கடை குப்பன் கூட பிரிரோசஸ் டீத்தூளை தான் வாங்குறார்னா பார்த்துக்கோங்க.

இப்படியே ஒரு மூன்று ஆண்டுகள் ஓடுது, கும்பானி அவரோட ஃபிரீரோசஸ் டீக்கம்பெனிய பங்கு சந்தையில் இறக்குறார், ஒரு கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தை நிதி தணிக்கை மற்றும், மதிப்பீடு நிறுவனங்கள் 100 கோடினு மதிப்பீடு செய்கிறது.அது எப்படின்னு எல்லாம் கேட்கக்கூடாது அதான் சந்தை மதிப்பு செய்வது என்ற பொருளாதார நிபுணத்துவம் :-))

ஒரு பங்கு பத்து ரூ என்பதை புக் பில்டிங் முறையில 120 ரூ என மதிப்பிடப்பட்டு ஐபிஓ வெளியிடப்படுகிறது,இதற்கென "lead run book managers" என book building process செய்ய தனி அமைப்புகள் இருக்கு, கமிஷன் வாங்கிக்கிட்டு ,வேலைய கச்சிதமா முடிச்சுக்கொடுப்பாங்க. மக்களும் போட்டிப்போட்டு வாங்குறாங்க. இப்போ போட்டக்காசை விட பல மடங்கு கும்பானிக்கு திரும்ப கிடைச்டுச்சு, இனிமேல் டீத்தூளை விற்கவில்லை என்றாலும் கவலையே இல்லை.

இங்கே குப்பனின் நிலை என்னாச்சுனு பார்த்தா அவரோ இன்னமும் மூன்று ஆண்டுக்கு முன்னர் வாங்கிய 50 ஆயிரம் கடனையே அடைக்க முடியாமல், கந்து வட்டி கந்தனை பார்த்தாலே தலையில் முக்காடுப்போட்டுக்கொண்டு ஓடிவிடுகிற நிலையில் இருக்கார்.

கும்பானிக்கு வியாபாரம் நல்லா போகுது, நிறைய சம்பாதிக்கிறார் ,அப்போ அரசுக்கும் நிறைய வருமான வரிக்கட்டுவார்னு நினைப்பீங்க தானே அதுவும் இல்லை, அப்போ வரியைக்கட்டாமல் ஏய்க்கிறாரா என்றால் அப்படியும் சொல்ல முடியாது ஆனால் அரசாங்கமே சலுகை கொடுக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கும்பானியோட சம்பளம்னு எதுவும் காட்டிக்க மாட்டார்,அப்படியே காட்டினாலும் அது சொற்ப தொகையா இருக்கும். அவருக்கு வரும் வருமானம் அவரது நிறுவனத்தில் அவருக்கு இருக்கும் பங்குகளின் மூலம் வரும் டிவிடென்ட் வருமானம் எனக்காட்டுவார்,அப்படிக்காட்டினால் கேப்பிட்டல் கெயின் டாக்ஸ் அடிப்படையில் வரிப்போடுவாங்க,

வழக்கமான வருமான வரி விகிதம் ஆனது,

2 லட்சம் வரை - வரி இல்லை,

2-5 லட்சம்-10%

5-8லட்சம் வரை-20%

8 லட்சத்திற்கு மேல் 30% வரி ஆகும்.

ஆனால் தொழிலதிபர்கள் ,பங்கு சந்தை முதலீட்டாளர்கள் ஆகியோர் லாங்க் டெர்ம் கேபிட்டல் கெயின் டாக்ஸ் என்ற வகையில் ஒரே விகிதமாக 20% வரிக்கட்டினாலே போதும், அந்தப்பணத்தையும் ,நிறுவனத்தின் பொது வருமானத்தில் இருந்து கட்டிடுவாங்க,அப்படித்தான் கேப்பிட்டல் கெயின் டாக்ஸ் விதி இருக்கு.

இப்போ டீக்கடை குப்பனுக்கே வியாபாரம் நல்லா சூடுப்பிடிச்சு நல்ல லாபம் வருதுனு வச்சுக்கோங்க, அவருக்கு ஆண்டு வருமானம் 10 லட்சத்தினை தாண்டிவிட்டால் போதும் 30% வரிக்கட்ட சொல்லுவாங்க.ஏன் எனில் அவர் பங்கு சந்தையில் இல்லை என்பதாலே அப்படி.

குப்பனுக்கு மட்டுமில்லை நாம் அனைவருக்குமே அப்படியான வருமான வரி விகிதம் தான்.

இதனை எப்படி சொல்கிறார்கள் என்றால் உழைப்பின் மூலம் வரும் வருமானத்திற்கு அதிக வரியும் ,மூல தனத்தின் மூலம் வரும் வருமானத்திற்கு குறைவான வரியாம்.

இப்படிலாம் நடக்குதா என நீங்கள் நினைக்கலாம், கடந்த ஆண்டு இந்தியாவில் அதிக வருமான வரிக்கட்டியது உலகின் முன்னணி இந்திய பணக்காரர் ஆன அம்பானிகள் அல்ல ,ஒடிஷாவை சேர்ந்த ஒரு இரும்பு தாது சுரங்க அதிபரே ஆவார், 95 கோடி ரூ வருமான வரிக்கட்டி சாதனைப்படைத்துள்ளார். மேலும் முதல் மூன்று இடங்களும் ஒடிசா இரும்பு தாது அதிபர்களுக்கே போய்விட்டது.

செய்திக்கான சுட்டி:


இதை ஏதோ நான் பங்கு சந்தை, மற்றும் பெரும் பணக்காரர்கள் மீது ஏதோ கடுப்பில் சொல்கிறேன் என நினைக்கலாம் சிலர், ஆனால் இதை எல்லாம் சொன்னது பங்கு சந்தையின் குரு என சொல்லப்படும் வாரென் பஃபெட் ஆவார், நான் இந்தியாவுக்கு ஏற்றாப்போல ஒரு உதாரணக்கதைய மட்டுமே சொன்னேன் :-))

வாரன் பஃபெட் கட்டுரை:


மேலும் அவர் பெரும்பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும், என்னிடமும் வசூலித்துக்கொள்ளுங்கள் என வெளிப்படையாக எழுதியுள்ளார். சுட்டியில் சென்று முழுவதும் படிக்கவும்.

ஆனால் இந்தியாவிலோ இப்படி பேசக்கூட ஒருவரும் தயாரில்லை, எப்படி எல்லாம் வரிக்கட்டாமல் தவிர்க்கலாம் என பல திட்டங்கள் போடுகிறார்கள், அதற்கு மன்னு மோகன் அரசும் பலமாக ஒத்துழைக்கிறது.

அப்படி தொழிலதிபர்களுக்கு சாதகமாக போட்ட திட்டம் தான் சிறப்பு பொருளாதார மண்டலம், அவற்றில் ஏகப்பட்ட சலுகைகள்,

#முதலீட்டுக்கு 100% வருமான வரி விலக்கு.

#உற்பத்தி பொருளுக்கு, லாபத்திற்கு, முதல் 7 ஆண்டுகளுக்கு 100% வரிவிலக்கு பின்னர் ,25%,அப்புறம் 50% என ,மொத்தம் 15 ஆண்டுகளுக்கு வரிச்சலுகை.

#பத்திரப்பதிவு, முத்திரை தாள் கட்டணம் இல்லை.

# மறு விற்பனையில் கிடைக்கும் லாபத்திற்கும் வரி இல்லை.

உ.ம்: சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2 ஏக்கர் இடம் இருக்கு,ஆரம்பத்தில் குறைவான விலைக்கு வாங்கிய இடத்தை சில ஆண்டுகளுக்கு பின்னர் அதில் ஒரு ஏக்கரை அதிக விலைக்கு விற்றால் அதற்கு வரி கிடையாது.

சாதாரண குடிமக்கள் அப்படி தங்கள் இடத்தினை விற்று லாபம் சம்பாதித்தால் கேபிட்டல் கெயின் டாக்ஸ் எனக்கட்ட வேண்டும்.

# வெளியில் இருக்கும் துணை நிறுவனங்களில் இருந்து பொருட்கள் வாங்கினாலும் அதற்கும் விற்பனை வரி,சேவை வரி இல்லை.

#500 மில்லியன் டாலர் வரை வெளிநாட்டு நிதியமைப்புகளிடம் கடன் பெற அனுமதி பெற வேண்டியது இல்லை.

இப்படிப்பல சலுகைகள் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் வேலை வாய்ப்பையும்,உற்பத்தியை பெருக்க தானே அரசு செய்கிறது எனலாம், ஆனால் அப்படி நடப்பது இல்லை என்பதற்கு அமெரிக்காவே உதாரணம்.ஏன் எனில் இந்த திட்டத்தையே அமெரிக்காவைப்பார்த்து தான் மன்னு மோகன் காப்பி அடித்துள்ளார்.

அமெரிக்காவில் 60-70 களிலேயே இத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுவிட்டது.நிறைய உற்பத்தி ஆனது என்னமோ உண்மை தான் ஆனால் இப்போது என்ன ஆனது என்றால் குமிழி உடைந்து விட்டது என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.

ஏன் எனில் 1000 பேர் செய்ய வேண்டிய வேலையை நவீன எந்திரங்கள்,கணினி என வைத்து 100 பேரைக்கொண்டே இத்தகைய சிறப்பு தொழிற்சாலைகளில் முடித்து விடுவதால் ஆரம்பத்தில் சில வேலைவாய்ப்புகள் உருவானாலும் நீண்டக்கால நோக்கில் வேலை வாய்ப்பின்மையே உருவாக்குகிறது.

பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறார், ஏழை மேலும் பரம ஏழை ஆகிறான்!இதுவே நவீன பொருளாதார சித்தாந்தத்தின் பலன்!

பின்குறிப்பு:

தகவல்,படங்கள் உதவி,

நியுயார்க் டைம்ஸ்,டைம்ஸ் ஆப் இன்டியா,கூகிள், ரெடிப் இணைய தளங்கள்,நன்றி!