Friday, May 18, 2012

அமெரிக்க பொருளாதார சரிவும் ,வால்ஸ்ட்ரீட் முற்றுகையும்!அமெரிக்க பொருளாதார சரிவும் ,வால்ஸ்ட்ரீட் முற்றுகையும்!

இப்பதிவு மே-1 அன்று போட்ட "may day-1,occupy wall street,social justice, financial justice,என்ன இணைப்பு? " என்றப்பதிவின் தொடர்ச்சியே இப்பதிவு!

சமூக நீதி:(social justice)

பிறப்பால்,நிறத்தால் பாகுபாடு பார்க்கப்பட்டு ஒருவருக்கான உரிமைகள் மறுக்கப்படுவதை தடுத்து அனைவரும் சமம் என சொல்வது சமூக நீதி,

அப்படி சமூக சமத்துவம் மறுக்கப்படும் சூழலில் அதற்காகப்போராடுவது சமூக நீதிப்போராட்டம் எனலாம்.

உதாரணமாக கீழ்காண்பவற்றை சொல்லலாம்,

மேல் நாடுகளில் வெள்ளை,கருப்பு இனபேதம் நீக்கி உரிமைகளுக்காக போரடிய நிகழ்வுகள்.மார்ட்டின் லூதர் கிங்,ஜூனியர், மற்றும் ஆப்பிரஹாம் லிங்கன் போன்றோர் அமெரிக்காவில் சமூக நீதிக்காக செயல்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.தற்போது இனவாதம் பேசுவது,பழிப்பது போன்றவை குற்றம் என்னும் அளவில் சமூக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் வர்ணாசிரம வகைப்பாடுகளால் ஏற்பட்ட ஏற்ற தாழ்வு பேதங்களை நீக்க போரடிய நீண்ட வரலாறு உண்டு, அம்பேத்கர், பெரியார். ஆகியோரின் போராட்டங்கள் அவ்வகையே . முழுதும் இல்லையென்றாலும் சமூக நீதி அடைவதில் ஓரளவு வெற்றியடைந்துள்ளோம்.

உலக அளவிலும் சரி ,இந்தியாவிலும் சரி சமூக நீதி குறித்தான விழிப்புணர்வு, சம நிலை என்பன ஓரளவு சாத்தியமாகியுள்ளது எனலாம்.

சமூக நீதிப்போராட்டங்களை பற்றி பின்னர் முடிந்தால் தனிப்பதிவிடுகிறேன்.

ஆனால் இந்தியாவில் ஒருவரின் வாழ்வுக்கு ஆதாரமான பொருளாதார நீதி குறித்து பெரிதாக பேசப்பட்டதா ,போராடப்பட்டதா என்றால் கேள்விக்குறி தான் எஞ்சுகிறது.

ஒருவன் ஏழையாய் இருக்கிறான் என்றால் அவன் ஏழையாய் பிறந்துவிட்டான் அதற்கு அடுத்தவர்களோ அரசோ என்ன செய்ய முடியும் என பொதுவான அபிப்பிராயம் உருவாகியுள்ளதே காரணம் ஆகும்.

கம்யூனிஸ்ட்கள் இந்தியாவில் அதற்காக பாடுபடுவதாய் சொல்லிக்கொண்டாலும் எதுவும் நடைமுறையில் நிகழவில்லை,கொள்கையளவில் மட்டுமே அனைத்தும் பொதுவுடமையாக இருக்கு.


பொருளாதார நீதி(Financial justice)

வாழ்வதற்கு தேவையான வளங்கள்,பொருளாதார கூறுகள் ஆகியவற்றில் குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமை உண்டு.வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் கடமை என சொல்வதே பொருளாதார நீதி!

அனைத்து ஜனநாயக நாட்டின் அரசியலைப்பும், கொள்கைகளும் என்ன சொல்கிறது ஒவ்வொருவரின் வாழ்வுரிமைக்கும் , வாழ்வாதாரத்துக்கும் பாதுகாப்பும், சம உரிமையும் அளிக்கப்பட வேண்டும் என்றே சொல்கிறது. ஆனால் நடை முறை வேறாக இருப்பது கண்கூடு.

பொருளாதார நீதி ,சமத்துவம் என யாரும் போராடவில்லையா எனக்கேட்கலாம், அதற்காக உருவானது தான் கம்யூனிசம். கம்யூனிசத்தின் மூலமே பொருளாதார சமத்துவமே, அனைவருக்கும் அனைத்தும் , என சொல்லி அனைவருக்கும் பொருளாதார ரீதீயாக மேம்படுத்த வளங்களை பகிர வேண்டும் என்று சொல்கிறார்கள்,ஆனால் எப்படி அந்த கொள்கையை அடைவது என்ற வழியினை அறியாமல் செயல்படுத்துவதில் சொதப்பியதன் விளைவே சோவியத் ருசியாவின் சிதைவுக்கு மூலகாரணம் ஆனது வரலாறு.

மே தினம், ஆக்குபை வால்ஸ்ட்ரீட்(occupy wallstreet), பொருளாதார நீதி எல்லாம் ஒரே புள்ளியில் இணைபவையே. மே தினம் உழைப்பாளர்களின் உரிமையையும், ஊதியத்தையும் நிர்ணயிக்க போராடிய தொழிலாளர் பொருளாதார நீதி போராட்டத்தின் அடையாளமே.

அதே போன்ற ஒரு போராட்டமாக வெடித்திருப்பது தான் ஆக்குபை வால்ஸ்ட்ரீட், ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கு தேவையான பொருளாதாரம் கிட்ட வேண்டும், அதை ஈட்ட அனைவருக்கும் சம உரிமையும் வாய்ப்பும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே அப்போராட்டம்.

பங்கு சந்தைக்கும் ,பொதுமக்களின் பொருளாதார சம நிலை, பாதிப்புக்கும் என்ன தொடர்பு? ஏன் அவர்கள் பங்கு சந்தைக்கு எதிராக அணி திரள வேண்டும் என கேட்கலாம் ,அதற்கு சில உதாரணங்களை காண்போம்.

உலக பொருளாதார சரிவின் மையப்புள்ளி:

தற்போது ஐரோப்பா, அமெரிக்கா முதல் இந்தியா வரை பெரும்பாலான நாடுகளில் பொருளாதா மந்த நிலையும் ,சரிவும் நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே, இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு முக்கியமான காரணமாக இருப்பது வணிக வங்கி, தொழில் வங்கி, நிதி நிறுவனங்கள் , பங்கு சந்தைகளின் செயல்ப்பாடும் அவற்றுக்கு அளிக்கப்படும் சிறப்பு சலுகை, விதி விலக்குகள் என்பதும் பலருக்கும் நம்ப கடினமாக இருக்கும் உண்மை, ஆனால் அமெரிக்க மக்கள் இதனை தெளிவாக புரிந்துக்கொண்டதாலே வால்ஸ்ட்ரீட்டை முற்றுகை இட்டுள்ளார்கள்.

எப்படி என இப்போது விரிவாக பார்ப்போம்,,

ஒருவர் வீடு வாங்க வங்கியிடம் வீட்டுக்கடன் வாங்கிறார், அவர் வாங்கிய கடனை சில ஆண்டுகளுக்கு வட்டியுடன் மாதத்தவணையாக கட்டுகிறார்.இதன் மூலம் வங்கிக்கு வருவாய் வரும். இது போல பலருக்கும் கடன் கொடுத்து மாதத்தவணையில் வசூலிக்கிறது. இது ஒரு வங்கியின் பொதுவான செயல்பாடு என்பது அனைவருக்கும் தெரியும்.

இப்படி கடன் "கொடுக்கல்-வாங்கல்" நிகழ்வு இரண்டு புள்ளிகளில் முடிந்தால் சிக்கலில்லை ஆனால் சிக்கலாக்கவே சில பொருளாதார கண்டுப்பிடிப்புகள் இருக்கு ,

ஒரு பத்து பேருக்கு கடன் கொடுத்து ,தவணை வசூலிக்கிறது வங்கி என வைத்துக்கொள்வோம், இதனை ஒரு வருவாய் என கணக்கில் கொண்டு அதனை ஒரு கடன் பத்திரம் ,ஷேர் போல மாற்றிவிடுவார்கள், இது போன்று பல வீட்டுக்கடன்கள் ஒன்றாக குவிக்கப்படும்(pool) இதன் மதிப்பினை கணக்கிட்டு ரேட்டிங்க் கொடுக்க சில நிறுவனங்கள் இருக்கு அவை கொடுக்கும் ரேட்டிங்க் அடிப்படையில் பங்கு வர்த்தகத்தில் பங்கு கொள்ளத்தக்க சான்றாக மாறிவிடும் இதனை டெரிவேட்டிவ்ஸ் (derivatives)என்பார்கள்.

டெரிவேட்டிவ்ஸ் என்றால் ஒன்றிலிருந்து மதிப்பினை உருவாக்கி கொண்டு வருவது என பொருள்.

டெரிவேட்டிவ் மூலம் கிடைக்கும் பங்கு போன்ற சான்றுக்கு செக்யுரிட்டி என்று பெயர். இதனை பங்கு சந்தையில் வியாபாரம் செய்யலாம் அல்லது இன்னொரு பெரிய வங்கியில் அடகு வைத்து பணம் வாங்கலாம்,அல்லது விற்கலாம்.

வழக்கமாக ஒரு பொது வணிக வங்கி என்ன செய்கிறது என்றால் அதன் வசம் உள்ள செக்யீரிட்டிகளை இன்னொரு பெரிய தொழில் வங்கியிடம் விற்றுவிடும், இதனை மார்டேஜ் பேக்டு செக்யூரிட்டி (mbs-mortage backed securites)என்பார்கள்.

மார்ட்டேஜ் என்பது அடகு வைப்பது , வீடு என்ற பொருள் அடகாக வைக்கப்பட்டு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வந்த டெரிவேட்டிவில் இருந்து செக்யூரிட்டிக்கு வீட்டின் மதிப்பு அல்லது மாத தவணையே ஒரு பிணை என்பதன் பொருளே இது.

சிறிய வங்கி கொடுத்த கடனுக்கு இணையாக செக்யூரிட்டிகளை விற்று பணம் திரட்டி மீண்டும் கடன் கொடுக்க துவங்கிவிடும். இதன் மூலம் அதற்கு மீண்டும் மூல தனம் கிடைத்துவிடும்.

பெரிய வங்கி அந்த செக்யூரிட்டிகளை பங்கு சந்தையில் விற்று காசுப்பார்த்து விடும்.மேலும் ஒரு பாதுகாப்பிற்கு அந்த செக்யூரிட்டிகளை காப்பீடு நிறுவனங்களிலும் காப்பீடு செய்துவிடும்.இதனால் கடன் என்ற "ரிஸ்க்" பரவலாக்கப்பட்டுவிடும், கடன் வாங்கியவர்கள் திருப்பி செலுத்த தவறினாலும் சொந்தக்காசுக்கு இழப்பு குறைவாகிவிடும் அல்லது இழப்பு இருக்காது.

இப்போது இந்த சங்கிலித்தொடர் வர்த்தகத்தின் வருவாய் வழி என்ன எனப்பார்ப்போம்,

தவணை வசூலிக்கும் சிறிய வங்கி அதற்கு லாபமாக கிடைக்கும் வட்டியில் இருந்து ஒரு பங்கிணை ,பெரிய வங்கிக்கு கொடுக்கும் ,பெரிய வங்கி அதில் இருந்து டிவிடெண்ட் ஆக செக்யூரிட்டியை வாங்கியவர்களுக்கு கொடுக்கும்.

இதன் மூலம் என்ன நடக்கிறது என்றால் சிறிய வங்கி கொடுத்த கடன் தொகையானது பங்கு சந்தையில் இருந்து பல சிறிய ,பெரிய முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்டு விட்டது.உண்மையில் வீடு வாங்க கடன் கொடுத்தது வங்கியல்ல , பங்கு சந்தை முதலீட்டாளர்கள்.ஆனால் இடையில் செயல்படும் இரண்டு வங்கிகளும் பெருமளவு லாபத்தினை அடைவார்கள்,ஒரு பக்கம் வட்டி என்ற வருமானம் மறுப்பக்கம் பங்கு சந்தை வருமானம், ஆனால் பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறிய தொகை தான் கிடைக்கும். பின்னர் ஏன் அவர்கள் வாங்குறார்கள், வேறு ஒன்றும் இல்லை யூகத்தின் அடிப்படையில் பங்கு சந்தையில் விலை ஏறும் போது விற்று விட்டு அதில் லாபம் பார்க்க தான்.

ஒரு வங்கி நன்றாக செயல்ப்படும் போது ,அது என்ன டிவிடெண்ட் கொடுக்கும் என்றெல்லாம் பார்க்காமல் செக்யூரிட்டிகளின் விலைப்பங்கு சந்தையில் ஏறும் எனவே அவ்வப்போது விற்று வாங்கி லாபம் பார்த்துக்கொள்ளலாம் என்றே வாங்குகிறார்கள்.

இந்த பணப்பரிவர்த்தனை லாபம் எல்லாம் ஒழுங்காக போகும் எது வரை என்றால் வீட்டுக்கடன் வாங்கிய நபர் மாதத்தவணையை ஒழுங்காக கட்டும் வரையில் :-))

அதிக அளவில் செக்யூரிட்டிகளை உருவாக்க வங்கிகள் அதிகக்கடன் கொடுக்கும் ,இதனால் திருப்பி கட்ட வருமானம் இருக்கா என்றெல்லாம் யோசிக்காமல் கடனை அள்ளிவிட்டார்கள். சரியான வருமானம் மற்றும் கடன் திருப்பி செலுத்தும் சக்தியுள்ளவர்களை மதிப்பீடு செய்து பிரைம்(prime) என்றும் ஏற்கனவே சரியாக செலுத்த தவறிய கடன் வரலாறு கொண்டவர்களை சப்-பிரைம் (sub-primes)என்றும் வகைப்படுத்தினார்கள்.

முன்னர் சொன்னது போல அதிக அளவு கடன் கொடுக்க வேண்டும் என்று சப்-பிரைம் கடனாளிகளுக்கும் கடன் கொடுக்கப்பட்டது.ஒரு கட்டத்தில் பெரும்பாலோர் கடனை திருப்பி செலுத்தாமல் தவறவே சிறிய வங்கி பெரிய வங்கிக்கு பங்கு கொடுக்கமுடியாமல் கை விரிக்க , பெரிய வங்கி பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் கொடுக்காமல் கையை விரிக்க ,சந்தையில் தள்ளாட்டம் ஏற்பட்டது.

முன்னரே பெரிய வங்கி செக்யூரிட்டிகளை காப்பீடு செய்தது எனப்பார்த்தோம் அல்லவா அது எதற்கு என்றால் இது போல மார்டேஜ் பேக்டு செக்யூரிட்டிகள் மூலம் வரும் வருவாய் நின்றால் அதனை காப்பீடு நிறுவனம் தர வேண்டும் என்றே.பெரிய அளவில் நஷ்டம் வரும் போது பெரிய அளவில் காப்பீட்டு நிறுவனம் நஷ்ட ஈடு தரவேண்டியது இருக்கும். இப்படி செய்வதையும் கிரடிட் டிபால்ட் ஸ்வாப்(cds- credit default swap) என சொல்லிக்கொள்கிறார்கள்.

ஒரு சாதாரண வீட்டுக்கடனை ,வங்கி மாற்றி வங்கி எனக்கொண்டு போய் ,காப்பீடு நிறுவனம் ,பங்கு சந்தை , அதில் பல சிறு முதலீட்டாளார்கள் என சம்பந்தப்படுத்தி சிக்கலாக்குவது தான் பொருளாதார நிபுணத்துவம் :-))

சிறிய வங்கி என்னால் கொடுக்க முடியாது என மஞ்சள் கடுதாசி கொடுக்கிறேன் சொல்லும் பெரிய வங்கி காப்பீட்டு நிறுவனத்தை நெறுக்கும் தொகை பெருசா இருந்தா அதுவும் மஞ்சள் கடுதாசி என்று சொல்லிவிடும், இப்போ பெரிய வங்கியும் மஞ்சள் கடுதாசி என்று சொல்லிவிட்டால் போதும் பங்கு சந்தையில் செக்யீரிட்டிகளை வாங்கியவர்களுக்கு பட்டை நாமம் தான். இந்தக்கதை தான் அமெரிக்காவில் நடந்துக்கொண்டு இருக்கிறது.மேலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலை தான்.

இதற்கு உதாரணம் கோல்டுமேன் சாஷ்(goldman sachs),ஏ.ஐ.ஜி (american inter national group-AIG)ஆகியவை.ஏ.ஐ.ஜி அமெரிக்காவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் ,இவை இரண்டும் இது போன்ற மார்டேஜ் பேக்டு செக்யூரிட்டிஸ் இல் அதிக முதலீடு செய்து ஒட்டு மொத்தமாக கவிழ்த்து விட்டார்கள்.இப்போது மூடும் சூழல் வரவே அதனை மூடக்கூடாது என அமெரிக்க அரசு 185 பில்லியன் அமெரிக்க டாலர்களை மீட்பு தொகையாக கொடுத்துள்ளது, அதில் 12.5 பில்லியன் டாலர்களை கோல்டுமென் சாஷ்க்கு ஏ.ஐ.ஜி கொடுத்தது.

கோல்டு மேன் சாஷ் நட்டம் என சொன்னாலும் அதன் ஊழியர்களின் ஆண்டு சம்பளம் மட்டுமே 30 பில்லியன் டாலர்களாக இருக்கிறது என்றால் என்ன காரணம் லாபத்தில் மிக அதிக விகிதத்தை அவர்களே அனுபவிக்க முடிவு செய்து, அவர்கள் மட்டும் தாராளமாக செலவு செய்துக்கொண்டு முதலீட்டாளர்களுக்கு கொடுக்க பணம் இல்லை என ஏமாற்றலாம் என்பதாலேயே. நிலமை மோசமானால் , மஞ்சள் கடுதாசி கொடுப்போம் என அரசை மிரட்டுகிறார்கள்.

இது ஒரு உதாரணம் தான் இது போல பல வங்கிகள், பல மஞ்சள் கடுதாசிக்கதைகள் அமெரிக்காவில் இருக்கு.இதே போல வியாபார ரீதியான செக்யூரிட்டிகளும் உண்டு, அதிலும் பலத்த நட்டமே எனவே ஒட்டு மொத்தமாக அமெரிக்க பங்கு சந்தை ஆட்டம் போடவே அமெரிக்க அரசு பல பில்லியன்களை மீட்பு தொகையாக செலவிட்டுள்ளது.இதெல்லாம் பார்த்த அமெரிக்க பொது ஜனம் போங்கி எழுந்தது தான் வால் ஸ்ட்ரீட் முற்றுகை , அவர்களின் பொருளாதார நீதியின் கோரிக்கையே பங்கு சந்தையை மூடிவிட வேண்டும் என்பதே.

ஏன் மூடச்சொல்கிறார்கள்? ஏன் எனில் ஒரு சதவீத மக்களே பங்கு வர்த்தகத்திலும் , வியாபாரத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள், 99% மக்கள் இதற்கு வெளியில் இருக்கிறார்கள், அவர்களுக்கோ வேலை வாய்ப்பு பிரச்சினை, வீட்டுப்பிரச்சினை என ஆயிரம் பிரச்சினை இருக்கு அதனை சரி செய்ய அரசு முயலாமல் ஒரு சதவீத பங்கு சந்தை முதலீட்டாளர்களை காக்க பெருமளவு பணத்தினை செலவு செய்கிறது ,அப்பணம் 99% மக்களுக்கும் உரியதே அவர்களின் வரிப்பணம். ஆனால் அவர்களுக்கு எதுவும் இல்லை,வாழ்வோ நாளுக்கு நாள் மோசமாகிறது.

இதற்கெல்லாம் காரணம் பங்கு சந்தை இருப்பது தானே ,யாருக்கு வேண்டும் அது மூடுங்கள் என வால்ஸ்ட்ரீட் முற்றுகைக்கு திரண்டுவிட்டார்கள். அவர்கள் அனைவரும் நியுயார்க் மன்ஹாட்டன் சதுக்கம் அருகே வால்ஸ்ட்ரீட் அருகில் லிபெர்டி பார்க் என்ற இடத்தில் முகாமிட்டு தொடர்ந்து முழக்கமிட்டு வருகிறார்கள். திரைப்பட நடிகை ரோசன் பார் முதல் நாளும் பின்னர் இயக்குனர் மைக்கேல் மூர் போன்ற பிரபலங்கள் எல்லாம் நேராக வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிக்கைகளில் வந்த செய்திகட்டுரைகள், தொலைக்காட்சி செய்தியின் அடிப்படையில் வேலைவாய்ப்பின்மை, மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்றுக்கூடி உருவானது தான் வால்ஸ்ட்ரீட் முற்றுகை என்பது குறிப்பிடத்தக்கது.காவல் துறை எவ்வளவோ முயன்றும் அப்புறப்படுத்த முடியவில்லை, இதுவே நம்ம ஊரா இருந்தா காவல் துறை பின்னி பெடல் எடுத்து இருக்கும், அமெரிக்காவில் மனித உரிமைகளுக்கு நல்ல மதிப்பும், பாதுகாப்பும் உள்ளதால் எதுவும் செய்ய முடியவில்லை.

பெப்பர் ஸ்பிரே அடித்த காவல் துறை அதிகாரியை வீடியோ எடுத்து உடனே இணையத்தளத்தில் போட்டனர் .இதனால் காவல் துறையை பலரும் கண்டிக்க ,காவல் துறை பகிங்கர மன்னிப்பு கேட்டுள்ளது.இவர்கள் போராட்டத்தில் இணையம் பெரும் பங்கு வகிக்கிறது, வலைப்பதிவு, டிவீட்டர், முக நூல் என அனைத்திலும் உடனுக்குடன் பகிர்ந்துவிடுகிறார்கள். இதனால் அமெரிக்கா முழுவதும் பரவி ஆக்குபை லாஸ் ஏஞ்சல்ஸ், ஆக்குபை கலிபோர்னியா என பல குழுக்கள் உருவாகிவிட்டது.

ஆக்குபை வால்ஸ்ட்ரீட் இணையதளம்:


விக்கிப்பீடியா சுட்டி:


மேலும் அனானிமஸ் ஹேக்கர்ஸ் (anonymous hackers)என்ற குழு உருவாகி வன்முறை பிரயோகிக்கும் காவல் துறை அதிகாரிகளின் குடும்ப விவரம், உறுப்பினர்கள் புகைப்படத்தினை எல்லாம் வலைப்பதிவில் போட்டு எச்சரிக்கவும் செய்வதால் காவல் துறையினர் கதிகலங்கிப்போய் உள்ளனர்.

முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் தான் தொழிலாளர் போராட்டம் நடந்து ,மே தினம் உருவானது, அங்கு தான் இப்போது பொருளாதார நீதி வேண்டி வால்ஸ்ட்ரீட் முற்றுகையும் நடக்கிறது ,கம்யூனிசம் பேசும் நாடுகளில் கூட மக்கள் இத்தகைய எழுச்சிக்காட்டவில்லை , ஏன் இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளிலும் என்ன நடந்தாலும் என்ன செய்ய எல்லாம் அப்படித்தான் நடக்கும் என மக்கள் வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள். மற்ற நாடுகளை விட அமெரிக்க ஜனநாயகம் மக்களை சுதந்திர கருத்துக்களுடன் உருவாக்கியுள்ளது எனலாம்.

இந்தியாவிலும் பங்கு சந்தை செயல் படுவது சிலரின் நலனுக்காக தான், 99% மக்களுக்கும் அதற்கும் தொடர்பே இல்லை,ஆனால் அரசு பங்கு சந்தைக்கு காட்டும் அக்கரையை மக்களிடம் காட்டுவதேயில்லை. இதை எல்லாம் கேள்விக்கேட்டு ,பொருளாதார நீதி வேண்டும் என மும்பை பங்கு சந்தையுள்ள தலால் ஸ்ட்ரீட் முற்றுகை ஒன்று நடந்தால் நன்றாக இருக்கும், ஆனால் அதை எல்லாம் யோசிக்க கூட இங்கு பலருக்கும் தோன்றுவதே இல்லை என்பது தான் ஆச்சர்யமானது!

ஐ.பி.எல் கிரிக்கெட் இருக்கு ,மஜ்ஜாவா சினிமா இருக்கு , டீ.வி சீரியல் இருக்கு அப்புறம் என்ன பெருசா வேண்டும் ? பல ஆயிரம் கோடி ஊழல் செய்தான்னு தெரிஞ்சாலும் தியாகியா சித்தரித்து வாழ்த்தி வணங்கி போஸ்டர் ஒட்டவும் மாலைப்போடவும் தயாரா ஒரு அடிமைக்கூட்டம் இருக்கும் நாட்டில் நாமும் கூட்டத்தில் ஐக்கியமாகி குவார்ட்டர் கிடைக்குமா என பார்ப்பதே புத்திசாலித்தனம் என வாழ பழகியவர்கள் நாம் ... வேறென்ன சொல்ல ..ஜெய் ஹோ ..ஜெய் ஹோ !

பின்குறிப்பு:

#சிற் சில பிழைகள் இருக்கலாம் ,சில நினைவில் இருந்து எழுதப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டினால் திருத்தப்படும்.

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள், விக்கி, ஆக்குபை வால்ஸ்ட்ரீட், இணைய தளங்கள், நன்றி!

*****