Tuesday, July 17, 2012

The DON- A guide to understand gangster films.ஹாலிவுட்டில் டான்(Don) வகை "mafia gangster"படங்கள் ஏக பிரசித்தம் அதில் மார்லன் பிராண்டோவின் "தி காட் ஃபாதர்"(The godfather) அல்டி மேட் எனலாம், இப்படம் மரியோ பூசோ (mario puzo)எழுதிய "தி காட் ஃபாதர்" என்ற நாவலின் அடிப்படையில், ஃபிரான்ஸிஸ் ஃபோர்ட் குப்போலா (Francis ford coppola)இயக்கியது.அதே போல குட்ஃபெல்லாஸ்(goodfellas), ஸ்கார்ஃபேஸ்(sacrface,1932 &1983) என பல புகழ்ப்பெற்ற டான் படங்கள் உண்டு.
(1932 முதல் ஸ்கார்ஃபேஸ்)

இந்தியாவில் டான் படங்களை முதலில் அறிமுகப்படுத்தி புகழ்ப்பெற செய்தது இந்தி திரைப்படங்கள் எனலாம், அதில் "அமிதாப் பச்சன் ஶ்ரீவத்ஸ்வா" நடித்து இன்றளவும் "டான்" வகைப்படங்களுக்கு முன்னோடியானது "டான் "என்ற பெயரில் வந்த இந்திப்படம் ஆகும். அக்காலத்தில் மிகப்பெரிய ஹிட் ஆன படம், இதனால் அமிதாப்பிற்கு இந்தி திரையுலகின் டான் என்ற பட்டப்பெயரும் உருவானது, இன்று ஷாருக் கான் எல்லாம் வந்துவிட்டாலும் "அமிதாப்பின் டான்" இமேஜ் அப்படியே தான் உள்ளது.
(1983 இல் அல்பாசினோவின் ஸ்கார்ஃபேஸ்)
(உண்மையான மாபியா டான் "ஸ்கார்ஃபேஸ்"அல் கேபோன்)

இந்தி " டான்" திரைப்படம் உருவானதை சுருக்கமாக பார்க்கலாம், நாரிமன் இரானி (Nariman.A.Irani)என்ற ஒளிப்பதிவாளர் மற்றும் தயாரிப்பாளர் "Zindagi Zindagi (1972) என்ற படத்தினை Sunil Dutt நடிப்பில் தயாரித்ததில் 10 லட்சம் கடனாளியாக்கிய சூழலில்,இயக்குநர் மனோஜ் குமாரின் " Roti Kapada Aur Makaan (1974), என்றப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், அப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த அமிதாப் பச்சன், ஜீனத் அமன்(jeenat aman), ப்ரன் (pran)மற்றும் அப்படத்தின் உதவி இயக்குநர் சந்திரா பரோட்(chandra barot) ஆகியோர் ,நாரிமன் இரானியின் கடன் சுமையை அறிந்து அவருக்கு உதவ ஒரு படம் செய்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள். அதற்கான கதையை சலிம்-ஜாவித் அக்தரிடம் கேட்டுள்ளார்கள், அவர்கள் கொடுத்த கதையில் "டான்" பாத்திரம் இருக்கவே படத்திற்கு டான் எனப்பெயரிட்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் "டான்" மற்றும் அதே போன்ற உருவமுடைய விஜய் என்ற அப்பாவி இளைஞனாகவும் அமிதாப் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.

இந்த டான் திரைப்படம் 1962 இல் ஷம்மி கபூர் நடிப்பில் வந்த "சைனா டவுன்" என்ற படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள். அதில் ஒரே உருவ அமைப்புள்ள அண்ணன் ,தம்பி ஆகவும், ஒருவர் டான்,மற்றவர் அப்பாவி ,பின்னர் ஆள்மாறாட்டம் எனக்கதை. இப்படமே தமிழில் எம்ஜிஆர் நடிப்பில் "குடியிருந்த கோயில்" என ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் என்.டி.ராமா ராவ் நடிப்பில்"பலே தம்முடு" எனவும் ரீமேக் செய்யப்பட்டு , அனைத்து மொழியிலும் சூப்பர் ஹிட் ஆனது.

டான் படம் முடியும் முன்னரே நாரிமன் இரானி வேறு ஒருப்படப்பிடிப்பில் ஒளிப்பதிவு செய்யும் போது விபத்தில் சிக்கி மரணமடைந்து விட்டார், பின்னர் சந்திரா பரோட் ,அவரது குரு "இயக்குநர் மனோஜ் குமார் "உதவியுடன் "Khaike Paan Banaraswala" என்றப்பாடலையும் எடுத்து படத்தில் சேர்த்து 1978 இல் வெளியிட்டார், ஆனால் முதல் வாரத்தில் சரியாக வசூல் ஆகாமல் தோல்விப்படம் ஆகக்கூடிய சூழலில் "Khaike Paan Banaraswala" பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது, அதனை தொடர்ந்து மக்கள் வாய்மொழி விளம்பரத்தால் நன்கு ஓடி அவ்வாண்டின் மிகப்பெரிய ஹிட் ஆனது.படத்தின் மூலம் கிடைத்த வருவாய் நாரிமன் இரானியின் விதவை மனைவிக்கு கொடுக்கப்பட்டது. இப்படத்தினை முடித்து வெளியிட பல சிரமங்கள் ஏற்பட்டதால் "ஜீனத் அமன்" சம்பளம் வேண்டாம் என சொல்லிவிட்டார். மற்றவர்களும் குறைவான சம்பளத்திலேயே வேலை செய்துள்ளார்கள்.
(அக்கால "கனவுக்கன்னி" ஜீனத் அமன்)


படம் முடிந்தவுடன் பார்த்துவிட்டு படத்தில் "மஜாவா" ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் மனோஜ் குமார் அவரது செலவிலேயே எடுத்து சேர்த்த பாடல் தான் "Khaike Paan Banaraswala" (சூப்பர் ஸ்டாரின் பில்லாவில் வெத்தலைய போட்டேண்டி),அப்பாடலின் வெற்றியே படத்தினை வெற்றியாக்கியது. கடனில் சிக்கிய சக தயாரிப்பாளருக்கு அக்காலத்திலேயே உதவியுள்ளார்கள் இந்தி திரையுலகினர், எதை எல்லாமோ காப்பி அடிக்கும் தமிழ் திரைப்பட "பாக்ஸ் ஆபிஸ் கிங்"கள் இந்த நல்லப்பழக்கத்தினையும் காப்பி அடிக்கலாமே :-))

(கோலிவுட் டான்"சூப்பர் ஸ்டார்)

இந்தி டான் பின்னர் தமிழில் சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் பில்லா என வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது , அப்புறம் அஜித் நடிப்பில் பில்லா-1 ,2 என வந்து கலெக்‌ஷண் அள்ளியது, இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் டான் 1,2 என வந்து சூப்பர் ஹிட் ஆனது எல்லாம் அனைவரும் அறிந்ததே.

இந்திய திரையுலகின் நிரந்தர டான் "அமிதாப்" அவர்களின் டான் படத்தில் இருந்து "மே ஹூன் டான்"(Main hoon Don) பாடலின் காணொளி. இப்பாடலே தமிழில் "மை நேம் இஸ் பில்லா" ஆகியது. இந்தியில் கிஷோர்குமார் பாடியது, (தமிழ். எஸ்.பி.பி)

இது வரையில் திரையுலக "டான்" கதாப்பாத்திரங்களைப்பார்த்தோம், இனி டான், மாபியா போன்ற நிழல் உலக குற்ற சாம்ராஜ்யம் உருவான வரலாற்றைப்பார்ப்போம்.

டான் (don)என்ற சொல் "dominicus" என்ற இலத்தின் சொல்லின் சுருக்கப்பட்ட வடிவம் , அதன் பொருள் லார்ட், மாஸ்டர் என்பதாகும், இலத்தின் புழக்கத்தில் இருந்த இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் நிலச்சுவாந்தார்கள், பிரபுக்களை பெயருக்கு முன்னால் "டான்" எனப்போட்டு மரியாதையாக அழைப்பது வழக்கம். அதாவது ஒரு நிலப்பகுதியை ஆள்பவர்கள் எனலாம், "domain" என்பது "dominicus" இல் இருந்தே உருவானது.

ஸ்பெயினில் மிஸ்டர் என ஆங்கிலத்தில் சொல்வதற்கு இணையாக "டான்" என பெயருக்கு முன்னால் சேர்த்து சொல்வார்கள், உதாரணமாக டான் குவிசோட்(Don quixote), டான் ஜுவான் (Don juan)போன்ற கதாப்பாத்திரங்களை கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

டான் என்ற சொல் இங்கிலாந்தில் பிரபுக்களை "லார்ட்"(lord) என்று சொல்வதற்கு ஒப்பான மரியாதை மிக்க சொல் , பெண்களினை உயர்வாக அழைக்க பெயருக்கு முன்னால் "டோனா" (Dona)என்று சேர்த்து அழைப்பார்கள், டானின் பெண்பால் டோனா ஆகும்.லார்டுக்கு பெண்ப்பால் "லேடி" (Lady)ஆகும்,ஆனால் இப்பொழுது பொதுவாக பெண்களை எல்லாம் "லேடி" என்று அழைத்து விடுகிறோம் :-))

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ்,ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அனைவருக்கும் பட்டப்பெயர் "டான்" ஆகும். அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் பெயருக்கு முன்னால் "டான்"சேர்த்துக்கொள்ளும் வழக்கம் அக்காலத்தில் இருந்துள்ளது.அதே போல அப்பல்கலைக்கழக மாணவர்களும் தங்களை "டான்" என சொல்லிக்கொள்வதுண்டு. பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் விடுதி தலைவருக்கு "டான்" என்று பெயர். பெரும்பாலும் மாணவர்கள் மொழியாக அப்போது டான் என்ற சொல் பிரசித்தம் அடைந்து இருந்தது.

ரஷ்யாவில் ஓடும், வோல்கா நதியின் கிளை நதிக்கு பெயரும் டான் ஆகும், அதே போல இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பகுதியிலும் "டான்" என்ற சிறிய நதி ஓடுகிறது.இப்போ அவர்களை ஏன் டான் பெயரால் அழைக்கப்படுகிறார்கள் என்பது புரிந்திருக்கும்.

நிழல் உலகத்தினருக்கு டான், மாபியா என்றெல்லாம் பெயர வைத்து அழைக்க ஆரம்பிக்க காரணமானவை அக்காலப் பத்திரிக்கைகளும், எழுத்தாளர்களுமே, உண்மையில் கேங்க்ஸ்டர்கள் இடையே அப்படியான பழக்கம் அப்போது இல்லை, பின்னர் அவர்களும் பழக்கப்படுத்திக்கொண்டார்கள்.

டான் என்ற சொல் புழக்கத்திற்கு வந்த வழிப்பார்த்தோம் , அடுத்து "மாபியா" என்ற சொல் புழக்கத்திற்கு வந்த வழியைப்பார்ப்போம்.

mafia என்ற சொல் " mafioso"(mafiosi or mafiusi or mafiusu) என்ற இலத்தின் சொல்லின் குறுகிய வடிவம் ஆகும், " mafioso" என்றால் வீரமான , அல்லது சண்டைக்கு அஞ்சாதவன் என்று பொருள், சுருக்கமாக சொன்னால் ஒரு குழுவாக வம்பு சண்டைக்கு செல்பவர்கள், யாராவது சண்டைக்கு ஆட்கள் கேட்டால் போவார்கள், கூலிப்படை ,சண்டியர்கள் எனலாம்.

தெற்கு இத்தாலியில் உள்ள மேற்கு சிசிலியில்(sicily) பாலெர்மோ(palermo) என்ற இடத்தினை பூர்வீகமாக கொண்டு வாழ்ந்தவர்கள், 1842-60 காலக்கட்டங்களில் இத்தாலியில் புரட்சி நடைப்பெற்ற போது , கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து அரசப்படைகளை கொல்வது , அலுவலங்களுக்கு நெருப்பு வைப்பது என்று செய்துவிட்டு கிடைத்த பொருளை சுருட்டிக்கொண்டு செல்வது வழக்கம், மேலும் கலவரம் நடக்கும் இடங்களில் இவர்களும் புகுந்து துப்பாக்கியால் சுட்டு விட்டு கடைகளை கொள்ளையடிப்பது வழக்கம், இதனால் ஆரம்பத்தில் இவர்களையும் புரட்சியாளர்கள் என நினைத்துக்கொண்டது அரசாங்கம், பின்னரே கொள்ளையடிப்பது வேறு ஒரு கும்பல் எனக்கண்டுக்கொண்டார்கள்.

கலவரத்தின் போது கடைகளை சூறையாடும் உள்ளூர் ரவுடிகள் நம்ம ஊரிலும் உண்டு, எம்.ஜி.ஆர்,இந்திராக்காந்தி ஆகியோரின் மறைவின் போது ஏற்பட்ட கலவரத்தின் போது பலக்கடைகள் சூறையாடப்பட்டது நினைவிருக்கலாம்.

இத்தாலியில் புரட்சி முடிந்து புதிய ஆட்சி அமைந்ததும், கொள்ளையடிக்க முடியாமல் போகவே ,அங்குள்ள நிலப்பிரபுக்களின் ஆரஞ்சு, எலுமிச்சை தோட்டங்கள், மற்றும் வயல்களில் திருடுப்போவதை தடுக்கும் காவலர்கள் பொறுப்பினை செய்தார்கள், ஏன் எனில் அங்கு திருடுவதும் " mafioso" வகை மக்களே, எனவே அவர்களை அடக்க மற்றொரு " mafioso" குழுவை வேலைக்கு வைத்தார்கள் நிலப்பிரபுக்கள்.அவ்வாறு பாதுகாப்பு அளிப்பதற்கு அளிக்கும் பணம் பிஸ்ஸோ(pizzo=protection money) எனப்பட்டது.

இம்முறை நம்ம ஊரிலும் அக்காலத்தில் உண்டு "கள்ளர்கள்" திருடுவதை குலத்தொழிலாக செய்வதும் அவர்களிடம் இருந்து பாதுகாக்க மறவர்களை பணிக்கு வைப்பதும் வழக்கம், அரவாண் படத்தில் "கரிகாலன்" பாத்திரம் இப்படியான ஊர்க்காவலன் வேடத்திலும், பசுபதி கள்ளனாகவும் நடித்திருப்பதைக்காணலாம்.

" mafioso" க்கள் தங்களுக்கு வேலைக்கொடுத்து பணம் கொடுக்காத பண்ணைகளில் அவர்களே திருட ஆள் அனுப்பவும் செய்தார்கள், பணம்கொடுக்காத நிலப்பிரபுக்களை மிரட்டவும் செய்தார்கள்." mafioso" தங்களுக்குள் ஆளுக்கு ஒரு பகுதி எனப்பிரித்துக்கொண்டு இதனை ஒரு குடும்பத்தொழிலாக செய்ய ஆரம்பித்தார்கள். 26(100கும் மேல் உண்டு)குடும்பங்களின் கீழ் பல குழுக்களாக பிரிந்து வேலை செய்தார்கள்.

எத்தனை நாளுக்கு தான் பண்ணைகளில் மிரட்டி கப்பம் வசூலிப்பது என மெல்ல நகரப்பகுதிகளில் வணிகர்களையும் மிரட்டி கப்பம்(protection money) கேட்டார்கள், கொடுக்காதவர்களின் கடைகளை சூறையாடுவது வழக்கம்,மேலும் சரக்கு வாகனம் செல்லும் போது நடு வழியில் கொள்ளை அடித்து விடுவார்கள், அதெல்லாம் செய்யாமல் இருக்க "கப்பம்" செலுத்த வேண்டும், 26 குடும்ப குழுக்கள் இருந்ததால் ஒரு குழுவின் பாதுகாப்பு பெற்ற வியாபாரியின் உடைமையை மற்ற குழு கொள்ளை அடிப்பது அடிக்கடி நிகழும்.

" mafioso" க்கள் சட்டத்திற்கு புறம்பானவர்கள் என்றாலும் தொழில்பக்தி,நேர்மை உடையவர்கள், அவர்களிடம் கப்பம் செலுத்தி பாதுகாப்பு பெற்றவர்களுக்காக உயிரையும் கொடுத்து சண்டைப்போடுவார்கள்,இதனால் அடிக்கடி " mafioso" க்கள் இடையே குழுச்சண்டை ,கொலை எல்லாம் நடக்கும், இப்படியான தொடர் அடிதடி, கொலைகளின் விளைவாக 5 " mafioso" குடும்ப குழுக்கள் மட்டுமே பெரிய குழுவாக வளர்ந்து நின்றது,மற்ற குழுக்கள் எல்லாம் இந்த ஐந்தில் அடங்கிவிட்டது.

இக்காலக்கட்டத்தில் தான் " mafioso" க்கள் ஒரு முறையான நிர்வகிக்கப்படும் குழுவாக மாறினார்கள், ஒவ்வொரு குழுவின் ஆளுகைக்கும் உட்பட்ட பகுதியை டிஸ்ட்ரிக்ட்(district) என பிரித்துக்கொண்டார்கள், அங்கு மட்டுமே கப்பம் வசூலிக்க வேண்டும், அப்பகுதியின் அதிகாரப்பூர்வமற்ற நிலப்பிரபுக்கள் ஆனார்கள், இதனாலேயே "டான்"(don) என மற்றவர்கள் அழைக்கலானார்கள், அப்போதும் கூட அவர்களுக்குள் டான் என்றோ மாபியா என்றோ சொல்லிக்கொள்ள ஆரம்பிக்கவில்லை.

" mafioso" என்றப்பெயர் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது 1863 இல் எழுதப்பட்ட " I mafiusi di la Vicaria, " or "The Beautiful People of Vicaria." என்ற நாடகத்தின் மூலமே, இதனை Giuseppe Rizzotto and Gaetano Mosca, என்பவர்கள் எழுதினார்கள். இந்நூலில் பாலெர்ம்மோ சிறையில் சண்டையிட்டுக்கொண்ட இரண்டு குற்ற குழுக்களை விவரித்து " mafioso" க்கள் என சொல்லிருந்தார்கள், அதன் பின்னரே " mafioso" என்பவர்கள் பயங்கரமான குற்றவாளிகள் எனப்பரவ ஆரம்பித்தது, பின்னர் சுருங்கி மாபியா ஆகிவிட்டது.

மாபியாக்கள் என்ன தான் திறமையான வீரர்கள் ஆக இருந்தாலும் எப்படி மக்கள் கட்டுப்பட்டார்கள், அரசாங்கம் என்ன செய்தது என்று கேள்வி எழலாம், இதற்கெல்லாம் பின்னால் வாட்டிகனும், பிற்காலத்தில் பெரியண்ணன் அமெரிக்காவும் உதவியாக இருந்தது என்பதும் ஒரு காரணம்.

இப்போது ஆரம்பக்காலத்தில் வாட்டிகன் மறைமுகமாக உதவியதைக்காணலாம். " mafioso" க்கள் பற்றி ஒரு அதிகாரப்பூர்வமற்ற வரலாறு உண்டு, அக்காலத்தில் கிருத்துவ மதத்தினை ஏற்காமல், கிருத்துவர்களை கொலை செய்த பழங்குடியின குழுக்களும்(catalan marauders) இருந்தன ,அவர்களிடம் இருந்து கிருத்துவர்களை காக்க போர்ப்பயிற்சி பெற்ற ஒரு ரகசிய குழுவை வாட்டிகன் உருவாக்கி பழங்குடியினரை வேட்டையாட வைத்தது என்கிறார்கள்.அப்படிப்போர்ப்பயிற்சி பெற்ற குழுக்கள் தான் " mafioso" குழு என்பதாகும்.

இதற்கு ஆதாரம் என எதுவும் இல்லை,ஆனால் வாட்டிகன் பல அரசியல், போர் என செய்து தான் கிருத்துவத்தினை நிலை நாட்டியது என்பதனையும் மறுக்க முடியாது. ஃப்ரீ மேசன்(freemason), சிலுவை போர் என எல்லாம் வரலாற்று ரீதியாகவும் ஆதாரங்கள் இருக்கு. தி பிரைஸ்ட் (the priest)என்ற படத்தில் இரத்தக்காட்டேரிகளை வேட்டையாட என ஒரு போராளிக்குழுவை வாட்டிகன் (கிருத்துவ தலைமை பீடம்) உருவாக்கியதாக கதை சொல்லப்பட்டிருக்கும். இவ்விடத்தில் பழங்குடியினரை இரத்தக்காட்டேரிகள் என உருவகப்படுத்தி இருக்கலாம் என நினைக்க தோன்றுகிறது.

மேலும் 1860 இல் புரட்சி முடிந்து இத்தாலியில் சார்டினா கிங் "Victor Emmanuel" தலைமையில் உருவான ஃபாசிஸ்ட் அரசு வாட்டிகனுக்கு எதிராக செயல்பட்டது, வாட்டிகனை தன்னாட்சி பெற்ற அரசாக கருத முடியாது,போப்பும் இத்தாலி அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டவர் என சொன்னது. பின்னர் 1870 இல் வாட்டிகனை(அப்போது அது நகரம் அல்ல,போப்பின் இருப்பிடம் மட்டுமே,மவுன்ட் வாட்டிகன் என மலையும், அவ்விடத்திற்கு பெயர் புனிதக்கடல்(holy sea) எனப்பட்டது, வாட்டிகன் நகர் என 1927 இல் சூட்டப்பட்டது),ரோம் ஆகியவற்றை கைப்பற்றி ரோமை ஒருங்கிணைந்த இத்தாலியின் தலைநகராக Victor Emmanuel அறிவித்துவிட்டு ,போப்புக்கு என சில இடங்களும் ,மாநியமும் மட்டும் அளித்தார்.இதனை law of guarantees என்ற பெயரில் போப் பியுஸ்-9க்கு தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த போப் பியுஸ்-9 (pope "Pius IX "), 1870 இல் ஒரு பிரகடனம் செய்தார்" ரோமன் கத்தோலிக்க கிருத்துவர்கள் யாரும் இத்தாலி அரசின் சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட தேவையில்லை ,அப்படிக்கட்டுப்படுவது கிருத்துவுக்கும், ஏசு கிருத்துவுக்கும் எதிரானது(anti catholic) , ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவர் போப் மட்டுமே என்று .இதனை பயன்ப்படுத்தி கொண்ட மாபியாக்கள் இத்தாலியின் வணிகர்கள், நிலப்பிரபுக்கள் அனைவரிடமும் இனி உங்களுக்கான நீதி மன்றம்,சட்டம் ,ஒழுங்கு எல்லாம் நாங்கள் தான், உங்கள் பாதுகாப்புக்கு நாங்களே பொறுப்பு என்று அறிவித்தார்கள்.எந்த பிரச்சினை என்றாலும் மாபியாக்களையே அணுக வேண்டும்,அதுவே கிருத்துவ கொள்கைக்கு உட்பட்டது என பிரச்சாரம் செய்து கொண்டார்கள்.

மக்களும் கிருத்துவத்தின் மீது இருந்த பற்றினாலோ அல்லது அரசின் மீது இருந்த வெறுப்பினாலோ அல்லது மாபியாக்களின் மீது இருந்த பயத்தினாலோ ஏதோ ஒன்றினால் மாபியாக்களுக்கு கட்டுப்பட ஆரம்பித்தார்கள். மாபியாக்களுக்கு மாதம் தவறாமல் கப்பம் கட்டப்பட்டது. மாபியாக்கள் நகரின் சூதாட்ட விடுதி, கள்ளச்சாராயம், போதை மருந்து,வட்டித்தொழில்,விபச்சாரம் என அனைத்து சட்ட விரோத தொழிலையும் கைவசம் எடுத்துக்கொண்டு சாம்ராஜ்யத்தினை விரிவுப்படுத்தினார்கள்.துறைமுகங்களில் சரக்கு ஏற்றுவது இறக்குவது முதல் அனைத்தும் மாபியாக்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

இதில் மேலும் இன்னொரு காரணமும் இருந்தது அப்போது வ்ட்டித்தொழில்,வங்கி இவற்றை முழுக்க ஆக்ரமித்து இருந்தது யூதர்களே, அவர்கள் இத்தாலிய அரசுக்கு பண உதவி எல்லாம் செய்து வந்தார்கள்,அவர்களது நிதி நிறுவனங்களை முடக்கி " mafioso" க்களின் நிதி நிறுவனம் வளர ஆரம்பித்தது, எனவே யூதர்களின் வியாபாரம் முடங்குவதை வரவேற்று ரோமன் கத்தோலிக்கர்கள் மாபியாவுக்கு ஆதரவு கொடுத்தார்கள்.ஆனால் பின்னாளில் மாபியாக்களிடம் கடன் வாங்கினால் மரணம் என்ற அளவுக்கு மாபியாக்கள் கடுமையாக நடந்துக்கொண்டது தனிக்கதை.

மாபியாக்கள் நன்கு வளர்ந்து வலுவான நிலையில் இணையான நிழல் உலக அரசாங்கம் நடத்தும் நிலையை அடைந்து விட்டதால் தங்களை நிர்வாக ரீதியாக வடிவமைத்துக்கொண்டு , சட்ட திட்டங்கள் எல்லாம் உருவாக்கிக்கொண்டார்கள்.

நிர்வாக அமைப்பு,சட்ட திட்டங்கள் , பிற்கால மாபியாக்களின் வளர்ச்சி, அதில் பெரியண்ணன் அமெரிக்காவின் பங்கினை அடுத்தப்பதிவில் பார்க்கலாம்.

---------
பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள்,

விக்கி,கூகிள்,நியு என்சைக்கிளோபீடியா,நியு அட்வென்ட்,யூடியூப் இணைய தளங்கள் நன்றி!
*******