Tuesday, April 24, 2012

ஓகே.ஓகே சர்ச்சை மற்றும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிச்சலுகை தேவையா?

தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரிச்சலுகை, என்பது பின்னர் தமிழ் வளர்ச்சிக்கு உதவும் படங்களுக்கு என்றெல்லாம் மாறி வரிச்சலுகை தொடர்கிறது.

இத்தகைய வரிச்சலுகை திரைப்படங்களுக்கு தேவையா என்றால் இல்லை என்று தான் சொல்வேன்,திரையுலகில் புழங்கும் பணம் பெரும்பாலும் கருப்பு பணமே, மேலும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என யாரும் உண்மையான வருமானத்துக்கு ஏற்ப வருமான வரியும் செலுத்துவதில்லை, அப்படி இருக்கையில் கேளிக்கை வரியும் கட்டாமல் முழுக்க அனுபவிக்க திரையுலகம் துடிப்பதும், அதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் செவி சாய்ப்பதும் ஜனநாயக கேளிக்கூத்தே.

சில திரைப்படங்களில் இது போல காட்சி வரும் ,ஹீரோ ஏதோ கோல்மால் செய்து பெரிய வியாபாரக்காந்தம் ஆகிடுவார் , போட்டியாளர் அல்லது வில்லன் குருப் வருமான வரித்துறைக்கு போட்டுக்கொடுத்துவிடும், அவர்களும் வந்து சோதனை செய்து விட்டு உங்க கணக்கு எல்லாம் சரியா இருக்கு ஆனால் தொழில் தொடங்க மூல தனம் எப்படி வந்தது, யார்க்கொடுத்தா , அதுக்கு வரிக்கட்டி இருக்கீங்களா என கிடுக்கி போடும். ஆனால் நிஜத்தில் அப்படிலாம் கிடுக்கிப்போடுவதேயில்லை , அப்படிப்போட்டா இந்த ஓ.கே.ஓகே தயாரிப்பாளர் என்ன சொல்லுவாராம் எல்லாம் எங்க நைனாக்கொடுத்த துட்டு என்றா :-))(ஏன்பா வருமான வரித்துறை ஆப்பீசர்ஸ் இதெல்லாம் கண்டுக்க மாட்டிங்களா?)

திரையரங்குகளில் இருந்து கிடைக்கும் கேளிக்கை வரி என்பது உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சி போன்றவற்றிற்கான ஒரு வரி வருவாய்.அற்ப தொகையாக இருந்தாலும் நிர்வாக செலவுகளுக்கு பயன்ப்படும் , அது மக்களுக்கு பயன்ப்படும் அதனைப்பறித்து செல்வந்தர்களான சினிமாக்காரர்களுக்கு கொடுக்க எதற்கு ஒரு மக்களாட்சி அமைப்பு?

 மக்களுக்கும், சமுதாயத்துக்கும் பயனுள்ள சிறப்பான கருத்தாக்கம் கொண்ட படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கலாம், அப்படி அளிக்கப்படும் விலக்குக்கு ஏற்ப கட்டணம் குறைக்கப்பட்டே முன்னர் எல்லாம் டிக்கெட் விற்கப்படும் ,ஆனால் இப்போது அளிக்கப்படும் வரிசலுகைக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் குறைக்கப்படுவதேயில்லை அப்படி இருக்கும் போது எதற்கு வரிச்சலுகை?டிராபிக் ராமசாமிகள் எது எதுக்கோ பொது நல வழக்கு போடுறாங்க, வரிச்சலுகைக்கு ஏற்ப அரங்க கட்டணம் குறைக்கப்படனும்னு ஒரு பொது நல வழக்குப்போட்டால் என்ன?

எனக்கு தெரிந்து வரிச்சலுகைக்கு ஏற்ப கட்டணம் குறைத்து வசூலிக்கப்பட்ட கடைசி தமிழ் திரைப்படம் பாரதி தான், அப்படத்திற்கு பள்ளிகள் எல்லாம் தாங்களே மாணவர்களை அழைத்து வந்த்துக்காட்டின.

இப்போது வரிச்சலுகை அளிக்கப்படும் படங்களுக்கு மாணவர்கள்,சிறார்களை அழைத்து செல்ல முடியுமா? கண்டிப்பாக முடியாது அந்த அளவுக்கு ஆபாசம் காட்சியிலும் வசனத்திலும்.சந்திரனின் மேடுப்பள்ளங்களை உயர்சக்தி தொலை நோக்கியில் தெளிவாக காட்டுவது போல கதாநாயகியின் மேடு,பள்ளங்களை சூம் வைத்து அட்சரசுத்தமாக குளோஸ் அப்பில் காட்டுவதே கேமிரா மேன்களின் தலையாயப்பணியாக இன்றைய  திரைப்படங்களில் உள்ளது.அதுவும் நாபிக்கமலத்தின் மீது தீராக்காதல் கொண்டு கேமிரா அங்கேயே சுற்றி சுற்றி வரும் :-))
அதுக்கும்  கீழ காட்ட தணிக்கை அனுமதிப்பதில்லை, அனுமதித்தால் எல்லாமே வெட்ட வெளிச்சமா 70 எம் எம் ,சினிமாஸ்கோப்பில் காட்ட கலைவியாபாரிகள் தயாரே :-))

லிட்டர் கணக்கில் ரத்தம் தெரிக்க கொலை வெறியுடன் சண்டைக்காட்சிகளில் வன்முறை கொடிக்கட்டிப்பறக்கிறது.ஒரே அடியில் ஒன்பது பேர் பறந்து போவார்கள், யாரு அடிச்சா பூமி அதிர்ந்து , தலை சுத்துதோ அவன் தான் ஹீரோ என பஞ்சர் டயலாக் வேறு :-))

சரி ஓ.கே ஓகே சமாச்சாரத்துக்கு வருவோம், கொலை வெறிப்படத்துக்கு எல்லாம் வரி விலக்கு அளித்துவிட்டு எங்க படத்துக்கு தரவில்லை , விதி என்றால் எல்லாருக்கும் பொருந்தும், எங்களை புறக்கணித்தது அரசியல் பழி வாங்கல் என பேட்டி எல்லாம்  கொடுக்கிறார் ஜூனியர் தளபதி நடிகர்.

கேட்கும் போது அட பாவமே என தோன்றத்தான் செய்கிறது, கடந்த ஆட்சிக்காலத்தில் சிவாஜி எல்லாம் பெயர்ச்சொல் எனவே மொழியில்லை என்றும், தசாவதாரம் எல்லாம் தமிழ்ச்சொல் என்றும் கண்டுப்பிடித்து வரிச்சலுகை கொடுத்தார்கள் :-))

ஆனால் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்ட ஒச்சாயி என்றப்படத்திற்கு வரிச்சலுகை தராமல் அலையவிட்டார்கள் ,வழக்கு கூட தொடுத்தார்கள் என நினைவு , பல வகையிலும் போராடி ,பின்னர் திருமாவளவன், தா.பாண்டியன் சிபாரிசு எல்லாம் வாங்கி பின்னர் ஒரு வழியாக வரிச்சலுகையும்  பெற்றார்கள் ஆனால் அதற்குள் படமும் தியேட்டரை விட்டு ஓடிவிட்டது.

அப்போது வந்த செய்திக்கான சுட்டி:

ஒச்சாயி

புதுமுக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களைக்கொண்டு சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படம் என்பதால் ஊடகங்களும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை, இப்போது ஓ.கே.ஓகே படத்திற்காக ஆராய்ச்சி மணியை அடிக்கும் பிராபல்ய பதிவர்களும் ,அப்போது ஒச்சாயியை கண்டுக்கொண்டாற்போல் தெரியவில்லை.சின்ன பட்ஜெட் படங்களை கண்டாலே வெறுப்பவர்களுக்கு அதெல்லாம் எப்படி தோன்றும்.

இப்போதைய சூழலில் படங்களின் தரம் மற்றும் இன்றும் வரிச்சலுகை இருக்கும் போது அரசியல்ப்பார்க்காமல் ஓ.கே.ஒ.கே விற்கு வரிச்சலுகை கொடுத்திருக்கலாம். பின்னர் எதுக்கு இதெல்லாம் சொன்னேனா, நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கனு சீன் போடுகிறார்களே அப்போ ஆட்சியில் இருக்கும் போது இவர்களும் வரிச்சலுகையில் அரசியல் செய்து விளையாடினார்கள் என்பதை நினைவுப்படுத்த தான் :-))

ஹி..ஹி ஒச்சாயியோட சாபம் தான் ஓ.கே.ஓகேவுக்கு வரிச்சலுகை கிடைக்க விடாம செய்துவிட்டது என நினைக்கிறேன் :-))

புவி தினம் ஏப்ரல்-22 எனும் ஏகாதிபத்தியங்களின் ஏய்ப்பு!

அம்மா தினம், அப்பா தினம், காதலர் தினம், சுற்று சூழல் தினம், புவி  தினம் என டிசைன் டிசைனா நாட்களை அறிவித்து மெத்த படித்தவர்களின் மூலமாக அதனை நினைவு கூற ,மற்றும் கொண்டாட வைத்து அதெல்லாம் தெரியாமல் இருந்தால் அவனை  முட்டாள் என சித்தரிப்பதே  இன்றைய நவீனம், என்னைப்பொறுத்தவரையில் அதெல்லாம் கொண்டாடி மகிழ்பவர்களே கடைந்தெடுத்த முட்டாள்கள் என்பேன் .

ஏன் எதற்கு என்ற சிறிதும் கேள்வி இல்லாமல் எவனாவது எதையாவது சொன்னால் அதை செய்வதும், அதை  வேறு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என பதிவு போட்டு பொழுது போக்கும் கணினி அறிவுள்ள முட்டாள்களின் உலகமாகவே தமிழ் பதிவுலகம் இருக்கிறது.

நாட்களை அறிவித்து கொள்கைகளை கடைப்பரப்புவதன் பின்னணியில் ஏகாதிபத்தியம் என்கிற முன்னேறிய நாடுகளின் வணிக சுயநலமே ஒழிந்து இருக்கின்றது என்பது பாமரனுக்கு தெரியாமல் அல்லது புரியாமல் இருக்கலாம் , கணினி ,இணையம் என தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்க வாய்ப்புள்ள பதிவுலகில் இருப்பவர்களோ ஈ அடிச்சான் காப்பியாக பொது புத்தியில் உலாவ விடும் செய்திகளையே பதிவாக ஆக்கி பொழுது போக்குவதற்கு இவர்கள் ஏன்?

அதான் திணிக்கப்பட்ட கருத்துக்களை பரப்புரை செய்ய ஏகப்பட்ட தொலைக்காட்சிகள்,அச்சு ஊடகங்கள் இருக்கே. அதையே பிரதி எடுத்து திரும்ப வாந்தி எடுக்கும் பதிவர்கள் எப்படி மாற்று ஊடகம் ஆவார்கள்? சொந்த கருத்து, சுய தேடல் இருக்காதா?

வலைப்பதிவுகள் என்பது புதிய , புரட்சிகர ,மாற்று சிந்தனைகளை கொண்டு வர ஒரு வாய்ப்பு ஆனால் வணிக ஊடகத்தில் சொல்லப்படுவதையே மறுபிரதி எடுக்க இந்த கொம்பன்கள் தேவையே இல்லை.

எவனாவது சிட்டுக்குருவி அழிகிறது சொன்னால் அப்படியே ஆமாம் சிட்டுக்குருவியே காணோம்னு கண்ணை மூடிக்கொண்டு பதிவ போடுவார்கள், புவி தினம் என்று சொன்னால் போதும் டெம்பிளேட்டாக புவி வெப்பமாதல் இன்ன பிற சேர்த்து உலகை காப்போம்னு அறிவுறைக்கூறி ஒரு  பதிவு, ஏன் ,எதற்கு எப்படி என்ற கேள்விகள் கிடையாது.

புவி தினம் என ஜல்லி அடிப்பதெல்லாம் வளர்ச்சி அடைந்த  நாடுகளின் சுய நல பிரச்சாரங்கள், மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் ஒரு சில அறிவு ஜீவிகளுக்கு டைம் பாஸ் சமாச்சாரங்கள், என பல உள்ளடி சமாச்சாரங்கள் இருப்பதை தெரிந்துக்கொள்ளாமலே இன்று ஒரு பதிவு போட "சப்ஜெக்ட்" கிடைத்து விட்டது என எதையும் யோசிக்காமல் பதிவ போட்டு ஹிட்ஸ் வாங்க அலையும் கூட்டம் தான் வலைப்பதிவுலகில் அதிகம் பெருகிப்ப்போய் கிடக்கு, ஒரு 5 நிமிடம் ஒதுக்கி இதை எல்லாம் ஊருக்கு சொல்லும் உத்தமோத்தம நாடுகளின் லட்சணத்தை இணையத்தில் தேடி அறிய எவரும் முன் வருவதில்லை.

புவி தினம் ,உலகை அழிவில் இருந்து காப்போம் என உலகுக்கே அறிவுறை சொல்லுபவர்களின் உண்மை நிலவரத்தை அடுத்தப்பதிவில் காண்போம்.

தொடரும்.