Sunday, July 15, 2012

பசி!


பச்சரிசி நெல்லுச்சோறு கீரையோடவே

ஆக்கிவெச்ச மீன்கொழம்பு நாங்க கேக்கல

நாங்க கேட்டதெல்லாம் கேப்பக்கூழு-

இங்க ...கிடைச்சதெல்லாம் கம்பஞ்சோறு...

தான்னனா தானனா னானா...

என்ன திடீர்னு கானாப்பாட்டுன்னு பார்க்காதீங்க , கூடிய சீக்கிரம் "khana" வுக்கு ததுங்க்கினத்தோம் போட வேண்டியது வரும், அப்போ அரிசி சோறு சாப்பிட முடியாம எல்லாம் கேப்பை, கம்பு ,சோளம்னு தேடி ஓடணும் அதுவும் கிடைக்காத நிலை தான் இப்போ.

காரணம் முன்னரே பல முறை சொன்ன விவசாயம் நசிந்து வருவதே, ஏற்கனவே , இடு பொருள் விலை உயர்வு, கூலி உயர்வு, வேலைக்கு ஆட்கள் கிடைக்காமை , இதனால் விளைவிக்க ஆகும் செலவு , விற்பதால் கிடைக்கும் வருமானத்தினை விட குறைவாக இருப்பது, அப்படியும் பலர் விவசாயம் செய்ய காரணம், அவங்களுக்கு வேறு தொழில் தெரியாது என்பதாலேயே, இருப்பினும் தற்போது வேற வேலை செய்து பொழைப்போம் என பலரும் நகரத்துக்கு வந்து கட்டுமானம் இன்ன பிற கிடைத்த வேலையை செய்து பிழைக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள், நான் சொல்வது எஞ்சி இருக்கும் விவசாயிகளை ,ஆனால் தம் கட்டி கஷ்டப்படுவோம் என நினைப்பவர்களையும் இயற்கை கைவிட்டால் என்ன ஆவது?

பருவ மழை பொய்த்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு மழை இல்லை,இப்போ தான் லேசா மழை தூற ஆரம்பிச்சு இருக்கு, மேட்டூரில் தண்ணீர் திறந்து விட வில்லை, பம்செட் வச்சு இரைக்க மின்சாரம் இல்லை, டீசல் வச்சு ஓட்டலாம்னா விலை எங்கோ போய் விட்டது, பின்னர் விவசாயி எப்படி விதைப்பான், கண்ணீரும், வியர்வையுமே போதும் என சொல்லாதீர்கள்.

பல இன்னல்களுக்கு இடையே விதைத்து அறுவடை செய்தாலும் உழைப்பு,முதலீடு மற்றும் விளைச்சலுக்கு ஏற்ற விலையும் இல்லை. கடந்த குறுவையில் சரியான விளைச்சல் இல்லை என்பதை வைத்தே இப்போது அரிசி விலையை ஏற்றி விற்கிறார்கள், ஆனால் ஒரு போகம் சம்பாவில் கிடைக்கும் விளைச்சலே தமிழக உணவுத்தேவைக்கு போதும், போன சம்பாவிலேயே நிறைய விளைந்தது , அப்போதும் அதே விலைக்கு தான் விவசாயிகள் விற்றார்கள், அடுத்து குறுவையில் குறைவாக விளைந்தது அப்போதும் அதே விலை தான் விவசாயிக்கு, ஆனால் குறுவையில் குறைவான விளைச்சல், வரும் சம்பாவிலும் விளைச்சல் குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில் தற்போது வியாபாரிகள் அரிசி விலையை ஏற்றி விற்கிறார்கள்.

அதிக விளைச்சலோ குறைவான விளைச்சலோ, விவசாயிக்கு ஒரே விலை, ஆனால் அதை வாங்கி விற்கும் வியாபாரியோ விளைச்சல் குறைந்தால் விலை ஏற்றி விற்பார்கள், இன்றைய நிலையில் தமிழகத்தில் உள்ள தானிய கையிருப்பு ஒரு ஆண்டு விளைச்சல் இல்லை என்றாலும் உணவு அளிக்கும் வகையில் தான் இருக்கு,ஆனால் குறைவான விளைச்சல் என சொல்லி அரிசி விலை மட்டும் சந்தையில் ஏறுகிறது.ஏன் அதே போல குறைவான விளைச்சல் ஆனால் விவசாயிக்கு நெல்லுக்கு கூடுதல் விலை கொடுக்க கூடாது? காரணம் விவசாயியால் நெல்லை நீண்ட நாட்கள் கையிருப்பு வைத்திருக்க முடியாது, 90% விவசாயிகள் உடனே விற்றாக வேண்டிய சூழலில் உள்ளவர்கள், அவர்களே அறுவடைக்காலத்தில் குறைவான விலையில் விற்று விட்டு பின்னர் சுய தேவைக்கு அரிசியை கூடுதல் விலை கொடுத்து வாங்கி உண்ணும் நிலை,அல்லது ரேஷன் கடை அரிசி தான்.

பல்வேறு இடைஞ்சலுக்கும் இடையிலும் விவசாயம் செய்ய ஒரு கூட்டம் இருக்கு, ஆனால் அவர்களுக்கு சந்தை விலையின் பலாபலன்கள் சென்று சேராமல் எத்தனை நாளைக்கு நட்டத்தில் விளைவிப்பான், இன்று கொஞ்சம் விளைச்சல் சரிந்தததையே காரணம் காட்டி விலை ஏற்றுகிறார்கள், விவசாயம் முழுவதும் சீர் குலைந்து உற்பத்தி வெகுவாக குறைந்தால் ஒரு கிலோ அரிசி 100 ரூபாய் என்ற அளவுக்கு கூட போகும், ஆனால் அப்போதும் விவசாயிக்கு நன்மை இருக்காது எல்லாம் வியாபாரிக்கே போகும், ப.சிதம்பரம் போன்ற பொருளாதார சக்திகள் மினரல் வாட்டருக்கு 15 ரூ , ஐஸ்கிரீமிற்கு 20 ரூ கொடுக்கும் போது ,அரிசி விலை ஏறினா வாங்கி சாப்பிட மாட்டீர்களா எனக்கேட்க தயங்க மாட்டார்கள்.

அரிசி விலையின் பலன் அதனை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு போய் சேராத நிலையில் விலை உயர்வு சகஜம் தான் ,வாங்கி சாப்பிடுங்கள் என சொல்வது குரூர நகைச்சுவை என்றே சொல்லலாம்.உரிய பலன் கிடைக்காத நிலையில் விவசாயம் அழிந்தால் என்னாவது என்ற கவலை பணம் படைத்தோருக்கு இல்லை, அரிசி இறக்குமதி செய்துக்கொள்ளலாம் என்பார்கள், ஆனால் முழுக்க இறக்குமதி செய்யும் போது விலையை கட்டுப்படுத்தி மிக அதிக விலைக்கே விற்பார்கள், அதனை சாமானியன் வாங்க முடியுமா? அவனுக்கு தான் விலையில்லா அரிசி ரேஷனில் இருக்கே எனலாம், அது எல்லாம் உள்நாட்டில் அரிசி உற்பத்தி இருக்கும் வரையில் தான், உற்பத்தி குறைந்தால் அங்கும் பெரிய வரிசை வரும் ,அனைவருக்கும் அரிசி கிடைக்காமல் அடி தடி உருவாகும்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு விவசாயி நிலத்தில் தொடர்ந்து உழைக்க செய்ய அவனது உழைப்பு,முதலீடு மற்றும் விளைச்சலுக்கு ஏற்ற வருமானம் கிடைக்க வேண்டும்,அப்படி செய்யவில்லை எனில் வருங்காலத்தில் பருவ மழை பொய்ப்பினால் உணவு தட்டுப்பாடு வராது, விவசாயம் செய்ய ஆள் இல்லாமல் உணவு தட்டுப்பாடு வரும், அப்படி ஒரு நிலை வந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் வியாபாரிகளே, ஏன் எனில் உணவு தட்டுப்பாடு வரும் சூழலில் அனைவருக்கும் இறக்குமதி அனுமதி அரசு கொடுக்கும், அதனை வைத்து வாங்கி இஷ்டப்பட்ட விலைக்கு விற்று லாபம் பார்ப்பார்கள், இப்படி சந்தர்ப்பவாதமாக லாபம் பார்க்கும் மனிதர்கள் எல்லாம் வெளிநாட்டில் இருந்து வரவில்லை ,அவர்களும் இந்தியர்களே :-))

வால்மார்ட் போன்றோர் கொள்ளை அடிப்பார்கள் என சொல்லும் சிவப்பு சட்டைகள் மறைமுகமாக உள்நாட்டு வியாபாரிகளின் கொள்ளைக்கு ஆதரவு அளிக்கிறார்கள் எனவே தான் உள்நாட்டு வியாபாரிகள் கடந்த சீசனில் ஒரு குவிண்டால் 1180 ரூ க்கு வாங்கிவிட்டு இப்போது , விளைச்சல் குறையும் என்ற கணிப்பில் விலை ஏற்றி விற்பதனை கண்டுக்கொள்வதில்லை,அவர்களை பொறுத்த வரையில் அன்னிய சக்தியை எதிர்க்க வேண்டும் ஆனால் உள்நாட்டு சக்தி என்ன செய்தாலும் கவலை இல்லை,நல்ல கொள்கை விளங்கிடும் நாடு.

வரும் பருவத்தில் விளைச்சல் குறைந்து, செலவு அதிகம் ஆனாலும் விவசாயிக்கு ஒரு குவிண்டாலுக்கு 1180 ரூ தான் கிடைக்க போகிறது, இதனை சிலர் உணர்ந்து கொண்டு ஏன் நஷ்டத்தில் விவசாயம் பார்க்கணும் என நிலத்தை சும்மா போட முன்வந்தாலும் வரலாம், அப்படி ஆகும் பட்சத்தில் சாகுபடி பரப்பு குறைந்து அரிசி உற்பத்தி வெகுவாக சரிந்துவிடும் எனவே அடுத்த ஆண்டு அரிசி விலையை வியாபாரிகள் இரட்டிப்பாக்கவும் தயங்க மாட்டார்கள் ஏன் எனில் அவர்கள் கைவசம் ஏற்கனவே வாங்கிய ஸ்டாக் நிறைய இருக்கிறது, இது தான் சாக்கு என லாபம் பார்க்கவே விழைவார்கள், அப்புறம் முதலில் பார்த்த கானா பாடலை நாம் எல்லாம் கூட்டாக பாடி பசி மறந்து இன்புறலாம் :-))

விவசாயி என்பவன் தன்னம்பிக்கையுடன் உழைக்க தயாராகவே இருக்கின்றான், ஆனால் அவனுக்கு கிடைப்பதெல்லாம் ஏமாற்றமும் , வறுமையும் தான் எனில் எத்தனைக்காலம் அவனும் அதற்கு தயாராக இருப்பான்?

உழவனின் உற்சாகத்தினை காட்டும் , நம்பிக்கையை விளக்கும் ஒரு திரைப்பாடல் இது, மக்களை பெற்ற மகராசி படத்தில் உழுதுக்கொண்டே நடிகர் திலகம் மண்டைய லட்சணமாக ஆட்டி ,ஆட்டி பாட்டில் நடித்திருப்பது ஒரு தனிரகம் :-))


நெல் விளையற பூமியடா
விவசாயாத்த பொறுப்பா கவனிச்சு செய்யறோமடா
உண்மையா உழைக்கிற நமக்கு
எல்லா நன்மைகளும் நாடி வந்து கூடுதடா

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னகண்ணு
பசும் தழைய போட்டு பாடுபடு செல்லகண்ணு

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னகண்ணு
பசும் தழைய போட்டு பாடுபடு செல்லகண்ணு

ஆத்தூறு கிச்சடி சம்பா பாத்து வாங்கி வித விதச்சி
ஆத்தூறு கிச்சடி சம்பா பாத்து வாங்கி வித விதச்சி
நாத்த பரிச்சி நட்டு போடு சின்னகண்ணு
தண்ணிய ஏத்தம் பிடிச்சு எறச்சு போடு செல்லகண்ணு
நாத்த பரிச்சி நட்டு போடு சின்னகண்ணு
தண்ணிய ஏத்தம் பிடிச்சு எறச்சு போடு செல்லகண்ணு

கருத நல்லா விளைய வெச்சு மருத ஜில்லா ஆள வெச்சு
கருத நல்லா விளைய வெச்சு மருத ஜில்லா ஆள வெச்சு
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னகண்ணு
நல்லா அடிச்சி துருத்தி அளந்து போடு செல்லகண்ணு

ஏன்றா பல்ல கட்டுற

கருத நல்லா விளைய வெச்சு மருத ஜில்லா ஆள வெச்சு
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னகண்ணு
நல்லா அடிச்சி துருத்தி அளந்து போடு செல்லகண்ணு

பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே
பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்கு சின்னகண்ணு நீயும்
வித்து போட்டு பணத்த எண்ணு செல்ல கண்ணு
விருதுநகர் வியாபாரிக்கு சின்னகண்ணு நீயும்
வித்து போட்டு பணத்த எண்ணு செல்ல கண்ணு

சேர்த்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்ன கண்ணு உங்க
அம்மா கையில கொடுத்து போடு சின்ன கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்ல கண்ணு

சேர்த்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கயில கொடுத்து போடு சின்ன கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்ல கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்ல கண்ணு

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்ன கண்ணு
பசும் தழைய போட்டு பாடுபடு செல்லகண்ணு

------

என்னோட மற்ற விவசாயப்பதிவுகளையும் பாருங்க,விவசாயம் செய்வதன் நிகர லாப ,நட்டங்கள், பல காலமாக விவசாயிகளின் உழைப்பு சுரண்டப்பட்டு வருவதும் புரிய வரும்.
இந்தப்பதிவுகளையும் பார்க்கவும்.---------
பின்குறிப்பு:

படங்கள் கூகிள், காணொளி யூட்யூப், நன்றி!

*****