Saturday, March 17, 2012

பட்ஜெட் பம்மாத்து!-1பட்ஜெட் பம்மாத்து!-1

பட்ஜெட் என தாக்கல் செய்வது ஒரு ஜனநாயக கடமையாகவே ஆண்டு தோறும் நடக்கிறது.பட்ஜெட் வரைவுக்கும் வளர்ச்சிக்கும் உண்மையில் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? பட்ஜெட் ஒதுக்கீடுப்படி செலவு செய்யப்பட்டு அதன் பலன் கண்கூடாக காணப்பட்டுள்ளதா என்றெல்லாம் பார்த்தால் பெரிதாக ஒன்றுமே நடந்து இருக்காது. பின்னர் எதுக்கு இந்த காகித அறிக்கை அதற்கு  பெரிதாக மீடியா விளம்பரம் எல்லாம்? அரசியல்வாதிகளான நாங்களாம் பொறுப்பானவங்க, அரசு வருமானத்தை கணக்கு வழக்கில்லாம செலவு செய்யவில்லைனு மக்களை  நம்ப வைக்க தான் :-))

மக்களும் வருமான வரி சலுகை உயருமா, டிவி போட்டி ,ஐஸ்பொட்டி , ஐப்பாடு விலை குறையுமா ஏறுமானு கொஞ்ச நேரம் டீவில ஆர்வமாக பார்ப்பாங்க ,அவங்க எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப சில அறிவுப்புகள்  வரும் , அவ்வளவு தான் மக்களும் வழக்கமான எதிர்ப்பார்த்த பட்ஜெட் தான் னு வழக்கம் போல சொல்லிட்டு டீவி சீரியல் அல்லது மொக்கை டீமை இந்திய அணி வீழ்த்திய கிரிக்கெட் போட்டினு பார்த்து ரசிக்க கிளம்பிடுவாங்க.

பட்ஜெட் புள்ளிவிவரம் எல்லாம் சலிக்க சலிக்க பார்த்து ,படிச்சு இருப்பீங்க மீண்டும் நான் சலிக்க விரும்பவில்லை. எனவே  ஒரு சில பட்ஜெட் பம்மாத்துகளை மட்டும் அலசுகிறேன்.

திட்ட செலவு VS திட்டமில்லாத செலவு:

அரசாங்கத்தின் கணக்குபிள்ளையான நிதியமைச்சர் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையில் பல தலைப்புகளில் நிதி நிலைகளை சொல்லி இருப்பாங்க, அவை மொத்த நிதி, மூலதன வருவாய்,வரி வருவாய், செலவு, பற்றாக்குறை இத்தியாதி என போகும். அதில செலவு வகையறா எதுவென பார்த்தா திட்ட செலவு(plan expenditure), திட்டாத செலவு(non-plan expenditure) என்றெல்லாம் இருக்கும், 

இந்த இடத்தில தான் அரசியல்வாதிங்க வித்தைக்காட்டுவாங்க, திட்ட செலவு மீது தான்  பெருமளவு விவாதம், கணக்கு வழக்கு, மத்திய தணிக்கை என கிடுக்கிப்பிடிகள் உண்டாம் திட்டாத செலவுக்கு ஒன்றும் பெரிதாக கட்டுப்பாடுகள் கிடையாது , தோராயமாக இவ்வளவுனு சொல்லிட்டு ஒதுக்கி வைத்துக்கொள்வது.அப்போ சனநாயக நாட்டில மக்கள் பணத்தை செலவு செய்ய ஒரு கணக்கு இருக்கனும் தானே நிதி நிலை அறிக்கைனு கேட்கலாம் அதுக்கு அதான்யா இதுனு நிதி நிலை அறிக்கைய காட்டுவாங்க :-))

திட்ட செலவு நிதியே பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த ஒதுக்கப்படுவது , திட்டமில்லா செலவு அரசின் செலவீனங்களுக்காகவும் ,கடன்,மான்யம், இன்ன பிற என ஒதுக்கப்படுவது.திட்டமில்லா செலவு நிதி ஒதுக்கீடு அதிகம் இருக்கும் பட்ஜெட் பொருளாதார பார்வையில் சரியான பட்ஜெட் ஆக கருதப்படுவதில்லை.

2012-13 நிதி நிலை அறிக்கையில்...

மொத்த செலவு =1490925.29
திட்ட செலவு= 521025.00
திட்டமில்லா செலவு= 969900.29
(கோடிகளில்)

இதில் பார்த்தால் திட்ட செலவை விட திட்டமில்லா செலவுகள் அதிகமாக இருப்பது தெரியும், அது மொத்த  செலவில் 65%  ஆகும்.அதாவது திட்டமிட்டு மக்களவை, தணிக்கை என ஒப்புதலுடன்  செய்யும் செலவுகள் குறைவாகவும் , முன் திட்டமிடப்படாமல் , தன்னிச்சையாக ஆள்வோர்  விருப்பப்படி செய்யப்படும்  செலவுகள் மிக அதிகம் என்பதும் தெளிவாகும்.திட்டமில்லா செலவுகளும் மத்திய தணிக்கைக்கு உட்பட்டது ஆனால் அதிகம் கேள்விகள் கேட்க முடியாது , மேலும் பல பாதுகாப்புகள் அரசுக்கு உண்டு, பாராளுமன்ற /அமைச்சரவை முன் ஒப்புதல் பெறாமல் தன்னிச்சையாக செலவு செய்யலாம்.உ.ம் இந்த நிதியறிக்கையில் இலங்கைக்கு கடனாக 290 கோடி ஒதுக்கி இருக்கிறார்கள் ,இப்படியான அயலுறவு செலவீனங்களாக 5148 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.அதெல்லாம் வெளியில் பேசப்படவே செய்யாது, ஆண்டு தோறும் இப்படி நடக்கிறது.

மத்திய திட்டக்குழுவுக்கான நிதி , இன்ன  பிற நிதிகளை திட்டமில்லா நிதி என்றப்பெயரில் ஒதுக்கி கையில் வைத்துக்கொண்டால் மத்தியில் ஆள்வோர் விருப்பம் போல ஒதுக்கலாம், செலவு செய்யலாம். 65% நிதி இப்படி மாட்டிக்கொள்வதால் தான் மாநிலங்கள் அவ்வப்போது மத்திய அரசை கெஞ்சுகின்றன. இணக்கமாக இல்லை எனில் காசுகிடைக்காது.

மேலும் இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் ஒவ்வோரு நிதியறிக்கையிலும் துண்டு விழுகிறது  என்பார்கள்  அது கோ ஆப்டெக்ஸ் துண்டல்ல நிதி துண்டு அதனை எப்படி சமாளிப்பார்கள் எனில் கடன் வாங்கியோ இல்லை பொது துறை பங்குகளை விற்றோ தான். பெரும்பாலும் துண்டு பெருசாக இருக்கும் போது சமாளிக்க  முடியாமல் அறிவித்தபடி சிலவற்றுக்கு நிதி ஒதுக்க மாட்டாங்க அப்படி நிதி நிறுத்தப்படும் வகையறாவில் திட்டமில்லா செலவு வராது  , எது எக்கேடு கெட்டாலும் இருக்கிற நிதியில் மிக அதிகபட்சம் திட்டமில்லா செலவுக்கு ஒதுக்கப்பட்டுவிடும் , மிச்சம் மீதி  இருக்கும் நிதி , இனிமேல் வாங்கப்போற கடன் என காசு கிடைத்தால் திட்ட செலவுகளுக்கு நிதி கிடைக்கும் இதனாலேயெ பல திட்டங்கள் ஆண்டாண்டுகாலமாக அறிவிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும் அவற்றின் இலக்கை அடைவதே இல்லை.இப்படி பாதியில் நிதி இல்லாமல் நின்று விடும் திட்டங்களுக்கு அடுத்த திட்டமில்லா செலவில் நிதி ஒதுக்கப்படும் என்று சொல்லப்படும் ஆனால் எந்த அளவுக்கு என்பது அப்போதைய நிலையைப்பொறுத்தே.திட்டமில்ல செலவு நிதி என்பது ஆள்வோரின் வசதிக்கு ஏற்ப பயன்ப்படுத்திக்கொள்ள சுதந்திரம் தரும் ஒரு கருவியாகும்.

திட்டமில்லா செலவு வகையில் பெரும்பகுதி போவது  ஆள்வோரின், அரசு அதிகாரிகளின் செலவுக்கே ,  அதுக்கு இல்லாத பணமா ? எடுத்துக்கோ என எடுத்துக்கொள்ள போடுவது தான் பட்ஜெட் :-))  அதனால் தான் பொறுப்பா எம்.பி,எம்.எல்.ஏ சம்பளத்தை அப்போ அப்போ ஏற்றிக்கொள்வது வீட்டுப்படி,பயணப்படி, இலவச தொலைப்பேசி, அப்போ அப்போ சுற்றுலா என எல்லாத்துக்கும் பணம் ஒதுக்கப்பட்டுவிடும்.

நம்ம பிரதமர் வாய தொறந்து உள்நாட்டிலேயே பேசுவதில்லை ஆனாலும் சும்மாச்சுக்கும்  ஒரு டைம் பாஸுக்கு வெளிநாட்டுக்கு போய் ஒரு டீக்குடிச்சுட்டு கை குலுக்கி போட்டோவுக்கு போஸ் கொடுக்கவே பல கோடிகள் செலவு ஆகும் .இப்படி பல்ல பயணங்கள் ,செலவுகள் ,பாதுகாப்பு என எல்லாம் திட்டமில்லா செலவு என்றப்பெயரில் திட்டமிட்டு ஒதுக்கப்படுவதாலேயே சாத்தியமாகிறது!இதில் அமெரிக்க அதிபரை ஒப்பிடுகையில் நம்மாளுக்கு செலவு கொஞ்சம் தான் என்பது ஒரு ஆறுதலான சமாச்சாரம் :-))

மகளீர் நலன் , குழந்தைகள் நலன், கிராமப்புற மேம்பாடு என ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான கோடிகளில் நிதி  ஒதுக்கப்படுவதாக வரும் அறிவிப்புகளை நாமும் பார்த்துக்கொண்டே இருக்கிறோம் , இந்த 50 ஆண்டுக்காலத்துக்கும் மேலான அறிவிப்புகளின் படி நிதி ஒதுக்கப்பட்டிருந்தால் இந்தியாவில் இருக்க எல்லா பெண்களும், குழந்தைகளும், கிராமங்களும் பலன் அடைந்து எங்கோ போய் இருப்பாங்க ,கல்விக்கு என அறிவிக்கப்பட்ட நிதி அறிவித்தார் போல கொடுக்கப்பட்டிருந்தால் இந்தியா 100% கல்வி அறிவுப்பெற்று இருக்கும், எல்லாக்கிராமத்திலும் அதி நவீன பள்ளிகள் இருந்திருக்கும். ஆனால் அப்படியான அதிசயம் எதுவுமே நிகழவில்லையே ஏன்?


கடந்த பத்தாண்டுகளாக பார்த்தால் இந்திய நிதிநிலை அறிக்கையின் மதிப்பு உயர்ந்துக்கொண்டே வந்திருக்கும் ஆனால் அதே விகிதத்தில் வளர்ச்சி  உயர்ந்திருக்காது இந்த இடத்தில் ஜிடிபி மொத்த மதிப்பு உயர்ந்து தானே இருக்கு என கேட்கலாம் ஆனால் அது மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கவில்லை ,உணவுப்பொருள் விலை வீக்கம்,பணவீக்கம்  ஆகியவை குறைந்தபாடில்லை, நாட்டின் வளர்ச்சி ஆமைவேகத்தில் மட்டுமே  என்பதையும் கவனிக்க வேண்டும். அம்பானி 2003 இல் இருந்ததை விட பெரிய பணக்காரர் ஆக 2012 இல் உயர்ந்தது போல தான் நாட்டின் வளர்ச்சி இருக்கு. பணக்காரன்மேலும் பணக்காரன் ஆகிறான் ஏழை மேலும் ஏழை ஆகிறான், காரணம்  நம்ம ஆட்சியாளர்கள் நிதியை சரியான முறையில் முதலீடு செய்யாமையே.

அரசின் வருவாய் 2003-12 காலத்தில்,

475146 ,506382 ,526626 ,578869 ,739842 ,839935 ,1025883 1190898 ,1343384, 1490713

2003 இல் அரசின் மொத்த வருவாய்=  475114 கோடிகள்,

2012 இல் அரசின் மொத்த வருவாய் =1490713 கோடிகள்

ஒப்பிட்டு பார்த்தால் முழுசாக பத்து லட்சம் கோடி ரூபாய் அரசின் வருவாய் அதிகரித்து இருப்பதைக்காணலாம்.

இப்போது ஒரு சாதாரண குடிமகனின் வருவாய்க்கேற்ற வாழ்கை தர முன்னேற்றம் எப்படி மாறும் என்பதை ஒப்பீட்டு பார்த்தால் அரசின் செயல்படா தன்மை நன்கு விளங்கும்,

2003 இல் 10000 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தால் வாழ்க்கை தரம் சுமாராகவே இருக்கும் , சென்னை புற நகரில்  தவணையில் கூட வீடு வாங்க முடியாது ஆனால் 2012 இல்  அவரது சம்பளம் 50000 என உயர்ந்திருக்குமானால் அவருக்கு கார், வீடு என மாத தவணையில் வாங்கும் திறன் கண்டிப்பாக வந்திருக்கும். அதாவது வாழ்கை தரத்தில் மேம்பாடு சம்பள உயர்வுடன் ஏற்படுவதைக்கண்கூடாக காணலாம்.

அதே மேம்பாடு நாட்டிற்கு ஏன் ஏற்படவில்லை? ஏன் எனில் வருவாய் உயர உயர  விரய செலவுகளை ஆள்வோர் அதிகரித்துக்கொண்டே போனது தான் காரணம்.

உதாரணமாக தினக்கூலி வேலை செய்பவன் 100 ரூ சம்பளம் வாங்கும் போது 50க்கு சரக்கு அடித்துவிட்டு 50ரூ வீட்டு செலவுக்கு கொடுக்கிறார்,அதை வைத்து குடும்பத்தை ஏதோ சமாளித்து ஓட்டுகிறார் அவர் மனைவி. அதே நபர்  200 சம்பளம் வாங்கும் போது 150க்கு சரக்கு அடித்துவிட்டு 50 ரூ வீட்டுக்கு கொடுத்தால் வீட்டில் சுபிட்சம் நிலவுமா? வறுமையும் பற்றாக்குறையுமே தாண்டவமாடும்.

மேற்சொன்ன கதை தான் அரசாங்கத்திலும் நடக்கிறது வருவாய் உயர உயர திட்டமில்லா செலவுகளில் அதிகம் செலவு செய்து வளர்ச்சியை பின் தள்ளுகிறார்கள். திட்டமில்லா செலவில் அமைச்சர்கள், எம்பிக்கள் , அரசு அதிகாரிகள் என அவர்களுக்கான செலவே அதிகம்.  வருவாயை திரட்டி மக்களுக்கு செலவு  செய்ய ஆகும் சர்வீஸ் சார்ஜ் ஆக ஆள்வோர் எடுத்துக்கொள்வது அதிகம் , அதாவது சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம் கதை தான்!

இந்தியா பிறந்ததில் இருந்து பல நிதி நிலை அறிக்கைகளை மவுன சாட்சியாக பார்த்து வந்திருக்கிறது  ,இத்தனைக்கண்டபிறகும் ஏதும் பெரிதாக மாற்றம் வந்தப்பாடில்லை . அவற்றை எல்லாம் ஒரே பதிவில் அலசிவிட முடியாது , எனவே சில முக்கியமான துறைவாரியாக அடுத்தடுத்து பார்க்கலாம் ,அதற்கான  ஒரு முன்னுரையே இப்பதிவு.அடுத்த பதிவில் விவசாயத்திற்கான ஒதுக்கீடு அது யாருக்கு பலன் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.