Tuesday, January 29, 2013

கருத்து சுதந்திரமும் ,அறமும்.


(ஹி...ஹி இவ்வளோ கருத்து சுதந்திரம் கொடுக்கணும்னு சொல்றாங்களோ?)

ஒரு திரைப்படம் என்பது கலையாக்கமாகவோ அல்லது வணிக படைப்பாகவோ இருக்கலாம், ஆனால் அது பொது மக்களின் பார்வைக்கு உரியதா , பொது ஊடக வெளியில் அனைவரும் பார்க்கும் தகுதி ஒரு படைப்புக்கு இருக்கிறதா என தகுதி நிர்ணயம் செய்ய என்றே உருவாக்கப்பட்ட அமைப்பு ஒன்று உள்ளது ,அதன் பெயர் தான் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம்.

ஒரு திரைப்படம் பொதுமக்கள் பார்வைக்கு தகுதியானது என சான்றளிக்கப்பட்ட பின்னர் ,அதனை தடை செய்யவோ அல்லது மற்றவர்களின் கருத்துக்கேட்போ அவசியமில்லை. இது தொடருமானால் வருங்காலத்தில் எல்லாப்படத்துக்கும் ஏதேனும் ஒரு லெட்டர் பேடு இயக்கம் ,எதிர்ப்பு காட்டிக்கொண்டேயிருக்கும், அனைவருக்கும் படத்தினை போட்டுக்காட்டி அனுமதி வாங்கிக்கொண்டிருக்க முடியுமா?

அப்படியே ஆட்சேபம் இருப்பின் நீதி மன்றம் மூலமாக மட்டுமே முறையீடு செய்யப்பட வேண்டும், ஆனால் லெட்டர் பேடு வைத்திருப்பவர்கள் எல்லாம் நாங்க ஒரு இயக்கம் ,எங்கள் பின்னால் ஒரு கூட்டம் இருக்கு ,எனவே எங்களுக்கு திரையிட்டு காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என கிளம்புவது , மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் இறையாண்மையை கேள்விக்குள்ளாகுவதாகும்.

லோகநாயகரின் விஷ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய இயங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து , படம் வெளியிட தடை கோரியதும்,அவர்களுக்கு படத்தினை திரையிட்டு காட்டியது தவறான முன்னுதாரணம் ஆகிவிட்டது , இப்பொழுது பல லெட்டர் பேடு இயக்கங்கள் ,இதே பாணியில் கிளம்ப ஆரம்பித்துவிட்டன.

ஆனால் இந்நிலையில் இயக்குனர் அமீர் இத்தனை நாளாக ஏதோ அம்னீசியாவில் இருந்தது போல திடீர் என துயில் களைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அமீர் வெறும் இயக்குனராக இருந்திருந்தால் அவர் எப்போ அறிக்கை விட்டால் என்ன என சொல்லலாம், ஆனால் அவர் தான் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளர், மேலும் ஃபெப்சி அமைப்பின் தலைவர், இவ்விரண்டு பொறுப்புகளும் தமிழ் திரைப்படத்துறையின் மிக முக்கியமான பதவிகளாகும்.

இப்படியாப்பட்ட பொறுப்புகளை வகிக்கும் இயக்குனர் அமீர், 25 ஆம் தேதி தடை என கேள்விப்பட்டதும் தான் இப்பிரச்சினை குறித்தே அறிந்தது போல , இப்படம் குறித்து மொன்னையாக ஒரு அறிக்கை விட்டுள்ளார் அதில் , சட்டம் ஒழுங்கு கெடலாம் என தமிழக அரசு தடை விதித்துள்ளது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினை தாக்குகிறதா என தீர்மானிக்க வழக்கு நிலுவையில் உள்ளது, நான் இன்னும் படம் பார்க்கவில்லை எனவே பார்க்காமல் கருத்து சொன்னால் வேறுவிதமாக பிரச்சினைகள் உருவாகலாம் என்று சொல்லியிருக்கிறார்.

என்ன கொடுமை சார் இது ? அவரே முழுமையாக தணிக்கை அதிகாரிகள் பார்த்து சான்றளிக்கப்பட்ட படம் எனவும் சொல்லியுள்ளார்,அப்போ சென்சார் போர்டு சான்று எல்லாம் படத்தின் தகுதியை நிர்ணயிக்க போதுமானது என இயக்குநர் சங்க செயலாளராக இருப்பவருக்கு தெரியாதா? ஒரு இயக்குநராக தனிப்பட்ட முறையில்  எப்படி வேண்டுமானாலும் கருத்து சொல்லியிருக்கலாம்,ஆனால் ஒரு திரைப்பட அமைப்பின் பொறுப்பில் உள்ளவராக , அதன் அங்கத்தினராக உள்ள லோகநாயகரின் திரைப்படத்திற்கு  சென்சார் சான்றுக்கு பின்னும் ஏற்படுத்தப்பட்ட தடைகள்  செயற்கையானது என தெரிய வேண்டாமா?

சட்டப்படி ஒரு படைப்பு பொது மக்கள் பார்வைக்கு தகுதியானது என தீர்மானிக்கப்பட்டாயிற்று எனவே அதனை மட்டுமே கொண்டு ஆதரிக்க இயக்குனர் சங்க செயலாளருக்கு தார்மீக உரிமை உள்ளது, எனவே அவர் இத்தடையை கண்டித்து தான் அறிக்கை விட்டிருக்க வேண்டும், மேலும் லோகநாயகருக்கு இயக்குனர் சங்கம் அனைத்து வகையிலும் தார்மீக ஆதரவு அளித்திருக்க வேண்டும். ஆனால் இயக்குனர் அமீரோ பட்டதும் படாதுமாக , விளக்கெண்ணையில் ஊறிய வெண்டைக்காய் போல வழ வழ கொழ கொழ என அறிக்கை வெளியிட்டு தனது இருத்தலை மட்டுமே பதிவு செய்து கொண்டுள்ளார்.

இஸ்லாமிய இயக்கங்களை அடியொற்றி இப்பொழுது ஒரு லெட்டர் பேடு இந்துத்வா இயக்கமும் இயக்குனர் அமீரின் ஆதிபகவன் திரைப்படத்துக்கு எதிராக கிளம்பியுள்ளது , இப்பொழுது அமீர் இதனை தனியாக ,தனது சொந்தப்பிரச்சினையாக எதிர்க்கொள்வார இல்லை  திரையுலகின் ஆதரவை நாடுவாரா?

இஸ்லாமிய இயக்கங்களின் புகாரின் பேரில் விஷ்வரூபத்திற்கு தடை என ஒரு முன்னுதாரணம் உருவாகிவிட்டதால் , அதனடிப்படையில் அரசு அமீரின் படத்திற்கும் தடை விதித்தால் அமீர் நீதிமன்றத்தினை நாடி , தன்ப்பிரச்சினையை தீர்த்துக்கொள்வார அல்லது அறச்சீற்றம் காட்டுவாரா?

தடை என்னும் சூழல் வந்தால் இது மதச்சார்பற்ற நாடா, கருத்து சுதந்திரம் இல்லையா? சென்சார் போர்டு சான்று எதற்கு என கிடைக்கும் மேடையில் எல்லாம் மைக் புடிச்சு சாமியாடிற மாட்டாரு :-))

இஸ்லாமிய அமைப்புகளின் வேண்டுகோளுக்கு ஒரு தடை,இந்துத்வா அமைப்புகளின் வேண்டுகோளுக்கு ஒரு தடை என கணக்கை நேர் செய்யும் நோக்கில் அரசு செயல்படாலாம் ஆனால் இதன் பின்னால் ஒரு நுண்ணரசியலும் உள்ளது ,அது என்னவெனில் அப்படத்தினை தயாரித்து இருப்பது ஒரு கழக பிரபலம், எனவே ஆதிபகவான் திரைப்படம் வெளியாவதில் கண்டிப்பாக பிரச்சினை வெடிக்கும், அப்பொழுது திரையுலகினர் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள், இயக்குனர் அமீர் எப்படி பொங்குகிறார் எனப்பார்ப்போம் :-))

கொசுறு:


படத்தின் விளம்பரத்தில் இது " ஒரு மாஃபியுசோ ஆக்‌ஷன்காதல் கதை" என "tag line" போட்டுள்ளார், ஆகா இப்பவெல்லாம் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் உலகத்தரத்தில் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்களே என புல்லரிக்குது.

ஹி...ஹி நாம ஏற்கனவே மாஃபியுசோ வரலாற்றை எல்லாம் ஆய்வு செய்து பதிவிட்டிருக்கிறோம், இன்னும் சில பாகங்கள் எழுதும் அளவுக்கு சரக்கு இருக்கிறது விரைவில் தொடர்வோம். எனவே இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் கூடுகிறது,ஆனால் எனக்கென்னமோ ஆதிபகவன் நவீன தேவர் மகனாக "காட்ஃபாதர்" கட்டமைப்பில் இருக்குமோனு உள்ளுக்குள் ஒரு பக்‌ஷி கூவுது!

மாஃபியுசோ டான்கள் பற்றிய பதிவுகள்:

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: The DON- A guide to understand gangster films.

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: The DON- 2:A guide to understand gangster films

-----------------------
பின் குறிப்பு:

படம் மற்றும் தகவல் உதவி, கூகிள் மற்றும் தினமலர் ,இணைய தளங்கள்,நன்றி!
--------------------------