Saturday, February 16, 2013

விஷ்வரூபம்- விளங்காத ரூபம் ஆனக்கதை!


(ஹி...ஹி விஷேஷரூபம் இது)

விஷ்வரூபம் திரைப்படத்தினை புரிந்து கொள்ள ,ரசிக்க உலக அரசியல் அறிவும், பொது அறிவும் கொஞ்சம் தேவை என பெருமிதமாக லோகநாயகர் சொன்னப்பொழுது ரொம்ப மிகையாக விதந்தோம்புகிறாரோ என நினைத்தேன், ஆனால் அத்தகைய புரிதல் கொண்டவர்களால் மட்டுமே படத்தினை சரியாக  என்ன மாதிரியான படமென(genre) புரிந்துக்கொள்ள முடியும் என்பது படம் பார்க்கும் போது தான் தெரிந்தது, பலரும் பலவகையான விமர்சனங்களை வைத்துவிட்டார்கள்,ஆனால் அவர்கள் யாருக்கும் லோகநாயகர் வரையறுத்த முன் தகுதிகள் இல்லையென நினைக்கிறேன்,யாருமே இதுவரையில் சரியாக இது என்ன வகையான படம் என்றே சொல்லாமல் , மேம்போக்கா ஆக்‌ஷன் திரில்லர், ஸ்பை மூவி என எழுதி ஆங்காங்கே,ஆப்கான்,அமெரிக்கா,RAW,FBI, என துப்பிவிட்டு சென்றுள்ளார்கள்.

உண்மையில் விஷ்வரூபம் ,அமெரிக்க ராம்போ, பிரிட்டீஷ் ஜேம்ஸ் பான்ட் டைப் உளவாளிப்படங்களை ஸ்பூஃப்(Spoof) செய்து எடுக்கப்பட்ட நகைச்சுவைப்படமாகும்,ஆனால் சரியான முறையில் ஸ்பூஃபிங் காட்சிகளை சித்தரிக்கத்தவறிவிட்டார், இன்னும் கொஞ்சம் முயற்சித்திருந்தால் "ஹாட் ஷாட்ஸ், ஜானி இங்க்லீஷ் " போன்ற உலகத்தர ஸ்பூஃப் படமாக வந்திருக்கும் :-))

படமாக்கலின் போது இயக்குனர் லோகநாயகருக்கு ஸ்பூஃபிங் டைப்பில் எடுப்பதா, இல்லை சீரியஸான ஆக்‌ஷன் திரில்லர் வகையில் எடுப்பதா என மனக்குழப்பம் இருந்திருக்கும் போல ,படம் நெடுக அக்குழப்பம் பலக்காட்சிகளில் தெரிகிறது.

ஒரு காட்சியினை சீரியசாக எடுத்துவிட்டு அடுத்தக்காட்சியினை ஸ்பூஃப் செய்துள்ளார்,சில கிரேஸித்தனமான கிச்சு கிச்சு மூட்டும் வசனங்கள் ஆங்காங்கே தூவியுள்ளார் அவ்வளவே. இதனால் படம் பார்ப்பவர்கள் ஸ்பூஃப் அல்லது சீரியஸ் ஆக்‌ஷன் படமா என வகைப்பிரிக்க தெரியாமல் ,திரைப்படத்துடன் ஒன்றவியலாமல் போய்விட்டது.ஒரு நடிகராக தனது பணியினை சிறப்பாக செய்துள்ளார் ,ஆனால் ஒரு படைப்பாளியாக ,கதை, திரைக்கதை,இயக்கம்,வசனம் என கோட்டை விட்டுவிட்டார் எனலாம்.

இரண்டுங்கெட்டான் வகையில் படம் இருப்பதால் நாமும் நடுவாந்திரமாக படத்தினை அலசுவோம், யாரும் ஸ்பூஃப் படத்தில் ஏன் லாஜிக் பார்க்கிறாய் என்றெல்லாம் கேட்கப்படாது :-))

ஏன் எனில் படம் பார்க்கும் பாமர ரசிகனைப்பார்த்து உனக்கு உலக அரசியல் தெரியுமா, பொது அறிவு இருக்கான்னு ஒரு படைப்பாளி கேள்விக்குள்ளாக்கும் போது ,என்னைப்போல எந்த ஒரு பாமர ரசிகனும்,திருப்பி அதெல்லாம் கேள்விக்கேட்டவருக்கும் இருக்கான்னு உரசிப்பார்க்கவே செய்வான்!

படம் பார்க்கும் போது ஒரு கேள்வி என்னுள் எழுந்ததை ஏனோ தவிர்க்கவே முடியவில்லை, இந்திய அரசு ஸ்தாபனமான RAW(Research and Analysis Wing)இன் உளவாளியான நாயகன் அமெரிக்காவிற்கு உதவ ஆஃப்கான் போகிறார், தலிபான்களை அழிக்க உதவுகிறார்,சரி போகட்டும் ஏதோ நேசக்கரம் நீட்டுதல் எனலாம்,அப்புறம் அதன் தொடர்ச்சியாக நியுயார்க்கில் வைக்க இருக்கும் டர்ட்டிபாமை எடுக்க அமெரிக்க அரசுக்கோ, அதன் உளவு நிறுவனங்களுக்கோ தெரியாமல் ஏன் முயல வேண்டும்,இன்ன மாதிரி திட்டம்னு சொன்னா அவங்க பார்த்துக்க மாட்டாங்களா, அதைவிட்டுவிட்டு இந்திய அரசு பணத்தின் செலவில் ரா ஏஜண்ட் ராப்பகலா மாங்கு மாங்கு என நியுயார்க்கில் உழைக்க வேண்டிய அளவுக்கு  ராவுக்கு  அமெரிக்க விசுவாசம் இருக்குமா?

ரா என்பது இந்தியாவுக்காக வேலை செய்யும் அரசு உளவு நிறுவனமா இல்லை ,அமெரிக்காவிற்காக வேலை செய்யும் BPO Type உளவு நிறுவனமா?

(அமெரிக்க விஸ்வாசரூபம்)

ஹாலிவுட் ஹீரோக்கள் கூட அவங்க நாட்டு தேசப்பற்றினை விளக்கும் படத்தில் நடிக்கும் போது தான் பின்னணியில் அமெரிக்க கொடியுடன் போஸ்டர் போட்டுக்குவாங்க,லோகநாயகர்  இந்திய அரசின் உளவாளியாக நடிக்கும் போது அமெரிக்க கொடிப்பின்னணியுடன் போஸ்டர் டிசைன் செய்ய என்ன தேவையோ?அப்போத்தான் கதை அமெரிக்காவில் நடக்குதுனு மக்களுக்கு புரியும் என்றால்,பாதிக்கதை ஆப்கானில் நடக்குது,எனவே ஆப்கான் கொடிப்பின்னணியிலும் ஒரு போஸ்டர் டிசைன் செய்திருக்க வேண்டாமோ :-))

அமெரிக்கர்களுக்கு பிடிச்சமாதிரி ஸ்டோரி போர்ட்,போர்ட்ஃபோலியோ ஆல்பம் தயார் செய்யணும் என ஆசைப்பட்டால் இப்படித்தான்  அமெரிக்க கொடிப்போட்டு,ரா வை அமெரிக்காவிற்கு வேலை செய்ய வைத்து ஆக வேண்டும் :-))

லோகநாயகருக்கு ஹாலிவுட் ஆசை பெருக்கெடுத்துவிட்டதால், ஒரு படத்தினை 95 கோடியில்??!! எடுத்து அமெரிக்காவுக்கு  ஒரே அடியாக  சமர்ப்பணம் என சொல்லிட்டாரோனு நினைக்க தோன்றுகிறது.

ஸ்டார்ட் மியுஜிக்.....

இவன் யார் என்று தெரிகிறதா,

ஹாலிவுட் ஆசை புரிகிறதா,

தடைகளை தாண்டியே ஹாலிவுட் செல்வான் :-))

ஓஹ்ஹஹ.. ஹோ...ஹோஹோ,,,ஓ....

OPIUM WAR:

விஷ்வரூபம் திரைப்படம் தனது கதைக்களமாக  ஆஃப்கான், "தலிபான் தீவிரவாதம்-அமெரிக்கா" என எடுத்துக்கொண்டாலும் ,அதன் உண்மையான அரசியலையோ,பின் புலத்தையொ சற்றும் தொட்டுக்கூட பார்க்கவில்லை, வெறுமனே தலிபான் பயங்கரவாதம் அதை தடுத்து உலகப்போலீஸ் அமெரிக்காவையே காப்பாற்றும் இந்திய சூப்பர் ஹீரோவை!!??ப்பற்றிய படமாக அமைந்துள்ளது எனலாம்.

இந்த அண்டர் கவர் ஏஜண்ட்/போலீஸ் கதை எல்லாம் எம்ஜிஆரின் குடியிருந்த கோயில் காலம் தொட்ட பழமையான கதையாகும், ஒவ்வொரு ஹீரோவும் ஏதேனும் அண்டர் கவர் ஆபரேஷன் படத்தில் ஒரு முறையாவது நடித்திருப்பார்கள், முன்னர் லோகநாயகரே காக்கி சட்டை, விக்ரம் படங்களில் இதே வேலையை செய்துள்ளார், இன்னும் சொல்லப்போனால் விக்ரம் படத்தில் சலாமியாவில் செய்த சாகசத்தை ஆப்கன் - அமெரிக்கா கூட தொட்டுக்கொள்ள ஊறுகாயாக தலிபான் என திருப்பி சுட்ட தோசை தான் விஷ்வரூபம் :-))

ஆப்கனில் நடக்கும் ஆயுத போரட்டங்களின் உண்மையான பின்னணி என்னவெனப்பார்ப்போம்.

பொதுவாக அறியப்படுவது என்னவெனில் ஆஃப்கனை சோவியத் ஆக்ரமித்து இருந்தது ,அவர்களை விரட்ட அமெரிக்கா முஜாகிதின்களை வளர்த்து சண்டையிட்டது, சோவியத் வெளியேறிய பின் அமெரிக்கா, ஆஃப்கானை கைக்குள் வைத்துக்கொண்டதால் இன்றும் ஆயுதப்போராட்டம் தொடர்கிறது என்பதாகும்.

மேம்போக்காக இச்சம்பவங்கள் சரி என்றாலும் இதன் அடிப்படைக்காரணம் வேறு ஒன்றாகும்,

சரி சோவியத் வெளியேறிய பின் அமெரிக்காவிற்கு ஆஃப்கானில் என்ன வேலை? அங்கே இருக்க என்னக் காரணம்?

வளைகுடா நாடுகள் போன்று எண்ணெய் வளமும் இல்லையே ,பின் ஏன்?

எண்ணெய் மற்றும் எரிவாயு எடுத்து செல்லும் வழித்தடத்தில் உள்ளது என்பார்கள்?

அது உண்மையா என்றால் இல்லை, ஏன் எனில் அமெரிக்காவிற்கு எண்ணெயோ,எரிவாயுவோ ஆப்கான் வழியாக கொண்டு செல்ல முடியாது, தேவையும் இல்லை.

ஆஃப்கான் வழியாக கொண்டு செல்லப்படும் எரிவாயு ,எண்ணெய் என்பது இரானில் இருந்து வருவது மட்டுமே,இரான் அமெரிக்காவிற்கு விற்க விரும்புவதும் இல்லை அப்படியே செய்ய வேண்டுமானாலும் பெர்சியான் வளைகுடா மூலமே நிகழும் பின்னர் எப்படி ஆஃப்கான் எண்ணெய் எடுத்து செல்ல முக்கியம் என அமெரிக்கா கருத வேண்டும்?

ஆஃப்கான் வழியாக இரானின் எரிவாயு/எண்ணெய் எடுத்து செல்லப்பட வேண்டும் எனில் அது சோவியத்,சீனா,பாகிஸ்தான்,இந்தியா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சாத்தியம் ஆகும். ஆக மற்ற நாடுகளுக்காக பில்லியன் கணக்கில் டாலர்களை செலவு செய்து சண்டைப்போட அமெரிக்கா ஒன்றும் கேணையல்ல :-))

இன்னும் சொல்லப்போனால் சோவியத்,சீனா எல்லாம் அமெரிக்காவின் நட்பு வட்டமேயில்லை,இந்தியாவோ கழுவும் மீனில் நழுவும் மீன், நெருக்கம் எனப்பார்த்தாலும் சோவியத் பக்கமே,மேலும் இரானுடன் எண்ணெய் வர்த்தகம் இந்தியா செய்யக்கூடாது என அமெரிக்க அன்பாக மிரட்டுவதும் வழக்கம், ஏன் எனில்  இரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்துவிட்டு ,அணு தொழில்நுட்பம் இந்தியா அளித்துவிடும் என்ற அச்சமேயாகும்.

எனவே  ஆஃப்கானில் தலிபான்கள் இருந்தாலே இரானின் எண்ணெய் வர்த்தக வழி தடைப்படும் என்ற நிலையில், அமெரிக்கா எண்ணெய் வர்த்தக வழிக்காக பெரும் சண்டையிடுகிறது என்பதில் வலுவான காரணங்களேயில்லை.உண்மையில் அங்கிருந்து கொண்டு இரானின் எண்ணெய் வளம் வியாபாரம் ஆகாமால் தடுக்கும் வேலையை தான் அமெரிக்கா செய்கிறது.

பின் ஏன் என்றால் ,போதைப்பொருள் வருமானமாகும், எண்ணெய்ப்பணம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிய வருமானம் அளிக்கக்கூடியது ஓபியம் மூலம் வரும் வருமானம்.

கொஞ்சம் விரிவாக பார்ப்போம்,

1950 களுக்கு முன்னர் உலகின் மிகப்பெரிய போதை உற்பத்தி மையம் தென்கிழக்கு ஆசிய நாடுகளான, வியட்நாம், பர்மா,தாய்லாந்து,லாவோஸ் ஆகியனவாகும், இப்பிரதேசத்தினை கோல்டன் டிரையாங்கில் என்பார்கள். வியட்நாம்,லாவோசில் அமெரிக்கா போர்ப்புரிய ஒருக்காரணமே இப்போதை மருந்து வியாபாரப்பணம் என சொல்கிறார்கள்.

CIA பின்னிருந்து போதை மாபியாக்களை கட்டுப்படுத்தியது, உலகம் முழுக்க எவ்வளவு போதை மருந்து சப்ளை ஆக வேண்டும் என்பதையே நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கியது என பல போர் மற்றும் போதைமருந்து ஆய்வு எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள்.

இதனை லேசாக டான்களைப்பற்றிய எனது பழையப்பதிவில் சொல்லியிருப்பேன். CIA தனது சொந்தக்கட்டுப்பாட்டில் கார்கோ விமான சேவையையே நடத்தி ,போதைப்பொருளை கோல்டன் டிரையாங்கிளில் இருந்து கொண்டு சென்றது என்றால் ,போதைமருந்து வியாபாரத்தின் வருமான அளவை ,முக்கியத்துவத்தினை புரிந்துக்கொள்ளலாம்.

இப்போ ஆஃப்கான் எப்படி போதை வணிகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது எனப்பார்ப்போம், கோல்டன் டிரையாங்கிலை அமெரிக்கா கட்டுப்பாட்டில் வைத்திருந்தது போல, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சோவியத் யூனியன் கேஜிபி மூலம் கோல்டன் கிரெசெண்ட் எனப்படும் இரான்,ஆப்கான்,பாகிஸ்தான் பகுதிகளை கையகப்படுத்தி, போதை மருந்து வியாபாரத்தினை கட்டுக்குள் வைத்திருந்தது.

Hezb-i-Islami என்ற முஜாகிதின் இயக்கதின் தலைவர் "Gulbuddin Hekmatyar" மூலம் சோவியத் தனது செயல்ப்பாடுகளை செய்து வந்தது,எனவே அவர்களை ரெட் ஆர்மி என்பார்கள். ஆப்கானின் முக்கியமான ஓப்பியம் விளைச்சல் பகுதியான Helmand Valley ரெட் ஆர்மியின் கட்டுப்பாட்டில் இருந்தது.

என்ன கொடுமைய்யா இது பெரிய பெரிய நாடுகள் எல்லாம் போதை மருந்துக்கா அரசியல் செய்தன என நினைக்கலாம், ஆனால் உண்மை இது தான், அப்பெரிய நாடுகளின் உளவுத்துறைகளுக்கு பல்வேறு ராணுவ நடவடிக்கைகள்,இன்ன பிற அரசியல் வேலைகள் செய்ய ஆயுதம்,பணம் தேவை எனவே இத்தகைய வேலைகளை செய்துவந்துள்ளன. உளவுத்துறைகள் மட்டுமே செய்துவிட முடியுமா, அந்நாட்டு தலைவர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாங்களா எனக்கேட்டால் ,அதெல்லாம் சர்வதேச ரகசியம் :-))ஏதோ ஒரு அரசியல், ஆனால் 1950களில் கோல்டன் கிரெசெண்ட் சோவியத் கட்டுப்பாட்டுப்பகுதி, கோல்டன் டிரையாங்கில் அமெரிக்க கட்டுப்பாட்டுப்பகுதி எனப்புரிந்துக்கொண்டால் போதும்.

கோல்டன் டிரையாங்கில் பகுதியில் அமெரிக்காவிற்கு பலப்பிரச்சினைகள் மண்டையிடிக்கொடுத்த நிலையில் மாற்று இடம் தேடிய சூழலில் வியட்நாம் சண்டைக்கு பிறகு கோல்டன் டிரையாங்கிளில் அமெரிக்க கட்டுப்பாடு பெரிதும் தளர்ந்தப்போன சூழலில் ,அவர்கள் கண்ணை உறுத்தியது தான் சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த ஆஃப்கனை உள்ளடக்கிய கோல்டன் கிரசென்ட் பகுதி, நாம இந்த அல்லோகல்ல படுகிறோம் பங்காளி சோவியத் சத்தம் போடாமல் ஜமாய்க்கிறானே என்ற கடுப்பில் ஆஃப்கானில் அரசியலை துவங்கியது.

1960 -70 காலக்கட்டத்தில் ஆஃப்கன் முஜாகிதினில் தனக்கு என ஒரு பிரிவினை உருவாக்கிக்கொண்டு சோவியத்தினை எதிர்க்க வைத்தது. Mullah Nasim Akhundzada என்பவர் தலைமையில் ஹெமாண்ட் வேலி குழு என ஒன்று உருவாகி ரெட் ஆர்மியை விரட்டியடித்தது. அப்போ போராளியாக உருவாக்கப்பட்டவர் தான் முகமது ஓமர் , சோவியத் சிதைவுண்டப்பின் தானே வெளியேறிவிடவே, ஷேக் நஜிமுல்லா தலைமையில் ஒரு அரசை உருவாக்கி அமர்த்தியது அமெரிக்கா.

இடைப்பட்டக்காலத்தில் ஓமர் குண்டடிப்பட்டு ,பாகிஸ்தான் எல்லையில் சிகிச்சைப்பெற்று ,பின்னர் அங்கேயுள்ள மதாரசாவில் மார்க்கக்கல்வி பயின்று அங்கேயே மார்க்கப்பணியில் ஈடுபட்டார், அதனால் தான் முல்லா என அழைக்கப்பட்டார்.

அக்காலக்கட்டத்தில் ஆப்கானில் ஆட்சிப்புரிந்த ஷேக் நஜிமுல்லா ஷா, மக்களை சரியாக கவனிக்கவில்லை, ஊழல் பெருகி,பொருளாதாரம் சரிந்து அன்றாட வாழ்வு பெரும் சிக்கலாகிய சூழலில் ,மக்கள் எதிர்ப்பு தெரிவித்துப்போராட துவங்கினர் , அட இவனுங்க எதாவது செய்வானுங்கன்னு பார்த்தால் இன்னும் மோசமாக்கிட்டாங்களேனு முல்லாவாகிவிட்ட ஓமர் மீண்டும் ஆஃப்கானுக்கு வந்து சுமார் 60 நபர்களுடன் தலிபான் என்ற அமைப்பை உருவாக்குகினார். தலிபான் என்றால் பஷ்தூனில் "மாணவன்" என்று பெயர்.

பின்னர்ப்படிப்படியாக போராடி ,ஷேக் நஜிமுல்லாவை தொறத்திவிட்டு ,முல்லா முகமது ஓமர் ஆட்சியையே பிடித்து விடுகிறார், ஆனால் அதிபர் என சொல்லாமல் "ஸ்பிரிச்சுவல் ஹெட்" ஆக  Commander of the Faithful of the Islamic Emirate of Afghanistan என ஆட்சியும் செய்தார்.

அக்காலத்தில் பாகிஸ்தான்,ஈரான்,சவுதி,ஐக்கிய அரபிய எமிரேட்ஸ், இன்னும் சில நாடுகள், முல்லா முகமது ஓமரை  ஒரு அதிபராக அங்கிகரித்தன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐ.சி.814 நேபாளில் இருந்து காந்தகாருக்கு கடத்தப்பட்ட போது ஆப்கானில் அதிபராக இருந்தது முல்லா ஓமர் தான்.அப்போது பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை ஆப்கானுக்கு அனுப்பி பேச்சுவார்த்தைக்கு தாலிபன்களை மீடியேட்டராகக்கொண்டு நடத்திய பேரத்திற்கு பின் இந்திய சிறையில் இருந்த Maulana Masood Azhar, Sheikh Omar and Mushtaq Zargar என்ற மூன்று பயங்கரவாதிகளை விடுதலை செய்த பின்னர் விமானம் மற்றும் பயணிகள் மீட்கப்பட்டனர். இச்சம்பவத்தின் போது ரூபின் கத்யால் என்ற இந்தியப்பயணி விமானக்கடத்தல்கார்களால் குத்திக்கொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம்.

ஒசாம பின்லேடனுக்கே ஆஃப்கானில் அடைக்கலம் கொடுத்து, அல்கைதா மற்றும் தலிபான்கள் பெரிய அளவில் போராட பின் புலமே முல்லா ஓமர் தான், அவர் தான் ஆப்கானில் கிங்க்,ஓசாமா அல்ல அதனால் தான் ஓசாமா பிடிபட்ட பின்னரும் முல்லா ஓமரால் இன்னும் தப்பிப்பிழைக்க முடிகிறது.ஆனால் திரைப்படத்தில் ஓசாமாவின் ஒரு அல்லக்கை ரேஞ்சில் ஓமரைக் காட்டியிருப்பார்கள்.

அமெரிக்க நேட்டோ கூட்டுப்படையினர் தலிபான்களை தலைமறைவாக தொறத்தும் முன் வரையில் ஓபியம் உற்பத்தி மற்றும் வியாபாரத்தினை தலிபான்கள் கையில் வைத்திருந்தார்கள், 10 சதவீத விற்பனை வரி செலுத்திவிட்டு யார் வேண்டுமானாலும் ஓபியம் பயிரிடலாம், பின்னர் அவை அறுவடை செய்யப்பட்டு , எல்லைக்கடந்து கொண்டு செல்வது, வியாபாரம் எல்லாம் தலிபான்கள் மூலம் நடக்கும்.

இப்பணம் கொண்டே ஆயுதங்கள் வாங்கப்பட்டு போரிட்டார்கள். ஆஃப்கானில் மட்டும் சுமார் 2-3 பில்லியன் டாலர் மதிப்பில் ஓபியம் உற்பத்தியாகும்,ஆனால் அதன் சர்வதேச மதிப்பு சுமார் 180 பில்லியன் டாலர்கள். வழக்கம் போல உற்பத்தி செய்பவனுக்கு மிக குறைவான லாபமே.

ஓபியம்:
Papaver somniferum எனப்படும் பாப்பி (கசகசா செடி)செடியின் முதிராத காயின் மீது சில வெட்டுக்களை கீறிவிட்டால் வடியும் பால் போன்ற திரவத்தினை lachryma papaveris- பாப்பியின் கண்ணீர் என்பார்கள்,இதனை உலரவைத்தால் கிடைப்பது பழுப்பு நிற ஓபியம் ஆகும்.

இம்முறையில் ஒரு ஏக்கருக்கு சுமார் 4-5 கிலோ ஓப்பியம் மட்டுமே கிடைக்கும், இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஓபியம் மிக தரமானது.

இதன் பின்னர் பாப்பி பாட், தண்டு என அனைத்தையும் அமிலத்தில் கறைத்தும் ஓபியம் உற்பத்தி செய்யப்படும், இதனை பல முறை சுத்திகரித்தால் மட்டுமே சுமார் 50%  வீரியமுள்ள தூய ஓப்பியம் கிடைக்கும், பலரும் பல வகையில் ஓப்பியம் தயாரிப்பதாலும், பல வகை தரத்தில் ஓபியம் கிடைக்கும், ஆனால் சந்தையில் நுகர்வோருக்கு பெரும்பாலும் கலப்பட ஓபியம் தான் கிடைக்கும்,அதில் சுமார் 10% ஓபியம் மற்றதெல்லாம் தாவரக்கழிவு, விலங்குகளின் சாணியாகும் :-))

இன்றைய தேதியில் ஆஃப்கானில் இருந்து உலகத்தேவைக்கான அளவில் 80-90% ஓபீயம் கிடைக்கிறது என ஐக்கியநாடுகளின் போதை மருந்து மற்றும் குற்றவியல் அலுவலகம் அறிவித்துள்ளது.


(ஓபியம் பயணிக்கும் பாதை)

ஓப்பியம் என்பது பல மார்பைன் வகை போதைப்பொருள் மற்றும் மருந்து தயாரிக்க மூலப்பொருளாகும், அதன் வடிவம், தூய்மை அதிகரிக்க அதிகரிக்க விலை மிக உயரும்.

ஒரு கிலோ ஓப்பியத்தில் இருந்து 10 % ஹெராயின் உற்பத்தி செய்யலாம், 10%= 100 கிராம், ஒரு கிலோ ஓப்பியத்தின் விலையே சுமார் 1000-1500 டாலர்களே

ஆனால் ஒரு கிராம் 50% தூய  ஹெராயின் விலை சுமார் 150 டாலர்கள்,

அப்படி எனில் 100 கிராம் ஹெராயின் விலை 150,000 டாலர்கள்,ஒரு கிலோ ஒப்பியத்தின் மதிப்பை விட 100 மடங்கு கூடுதலாகிவிடுகிறது.எனவே பெட்ரோலிய, ஆயுத வியாபாரங்களுக்கு அடுத்து அதிக லாபம் தரக்கூடிய ஒரு வியாபாரம் ,அதுவும் மிக குறைவான விலைக்கு வாங்கி ,சர்வதேச சந்தையில் 100 மடங்கு விலையில் விற்கலாம்.

அமெரிக்க நேட்டோ படைகள் பெருமளவு ஆஃப்கானை கைப்பற்றிய பின்னரும் எப்படி இவ்வளவு உற்பத்தியாக முடியும் என்றால்  மேற்சொன்னக்காரணமே, அமெரிக்காவின் ஆசையே அதானே அப்புறம் உற்பத்தியாகாமல் என்ன செய்யும்?

(நேட்டோ டாங்க் ஓபியம் வயலில் ரோந்து செல்கிறது)

அமெரிக்கா ஆஃப்கானில் நுழைந்தவுடன் ஓப்பியம் பயிரிட்டவர்களை அழைத்து உங்கள் ஓபியம் பயிரை அழிக்க மாட்டோம், இன்னும் நிறைய பயிரிடுங்கள், நாங்கள் பாதுகாப்புக்கொடுக்கிறோம் என சொல்லியிருக்கிறது.மேலும் அடிக்கடி வானொலி மூலம் ஓப்பியம் பயிரிடுங்கள் வளமாக வாழுங்கள் என வயலும் வாழ்வும் நிகழ்ச்சிகளும் நடத்தியுள்ளார்கள் :-))

தலிபான்கள் கையில் இருந்த ஓபியம் வியாபாரம் இப்பொழுது அமெரிக்க ஆதரவுடன் நடக்கிறது, இதனால் 2001 இல் இருந்ததை விட 5 மடங்கு அதிக ஓபியம் ஆப்கானில் உற்பத்தியாகின்றதாம்,இதனையும் சொல்வது ஐக்கியநாடுகளின் அறிக்கை :-))

அமெரிக்க நுழைவுக்கு பின்னர் ஓபியம் உற்பத்தி அதிகம் ஆகி இருப்பதை வைத்து தான் சர்வதேச ஊடகங்கள் அமெரிக்காவின் பின்னணியில்லாமல் இது சாத்தியமில்லை என ஆய்வு செய்து எழுதியுள்ளன.

இப்பொழுது தலிபான்கள் அமெரிக்க ஆதரவு ஓபியம் வியாபாரத்திற்கு பத்வா விதித்து அழிக்கிறார்கள், அவர்களுக்கு வரிக்கட்டும் ஓப்பியம் விவசாயிகளை காப்பாற்றுகிறார்கள் அதே போல அமெரிக்கா செய்கிறது. இப்படித்தான் அங்கு சண்டை முடிவில்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது.

//"Respected people of Helmand. The soldiers of ISAF and the Afghan national army do not destroy poppy fields," it said. "They know that many people of Afghanistan have no choice but to grow poppy. ISAF and the Afghan national army do not want to stop people from earning their livelihoods."

The message was drafted by British officers and carried on two local stations in Afghanistan's largest province. It infuriated senior Afghan officials - including the president, Hamid Karzai - who demanded an explanation. The Afghan government has been under intense western pressure to rein in the burgeoning drugs trade. Opium cultivation soared 59% last year, earning local traffickers £1.2bn. The spike was concentrated in Helmand.//

link:

http://www.guardian.co.uk/world/2007/apr/27/afghanistan.declanwalsh


2001 இல் தலிபான்கள் விரட்டப்பட்டு ,ஹமீத் கர்சாய் தலைமையில் ஒரு அரசினை நேட்டோ படைகள் மூலம் அமெரிக்கா நிறுவியது, அப்பொழுது 2001 இல் தலிபான்கள் முந்தைய காலத்தில் அறுவடை செய்து வைத்திருந்த சுமார் 4500 டன்கள் ஓப்பியம் நேட்டோ படைகள் வசம் சிக்கியது,பெயருக்கு கொஞ்சம் அழித்துவிட்டு பெரும்பகுதியை நேட்டோ ராணுவம் அமுக்கிவிட்டது என புலனாய்வுப்பத்திரிக்கைள் தெரிவிக்கின்றன. எனவே மேற்கொண்டு ஓப்பியம் விளைந்தால் நேட்டோ ராணுவமே பலனடையும் என தலிபான்கள் 2001ஆம் ஆண்டில் ஓப்பியத்துக்கு தடை விதித்ததால் ஓப்பியம் உற்பத்தி வெகுவாக ஆப்கானில் குறைந்தது.

படம்:

ஆனால் அதன் பின்னர் ஆண்டு தோறும் ஓப்பியம் உற்பத்தி அதிகரிக்கவே செய்தது, காரணம் அமெரிக்க நேட்டோ படை பல குழுக்களை உருவாக்கி ஓப்பியம் பயிரிட ஊக்குவித்ததே.ஒரு பக்கம் அமெரிக்க ராணுவம் போதைப்பொருட்களுக்கு எதிராக போராடி வருவதாக செய்திகள் பரப்பி வந்தாலும் , உற்பத்தி என்னமோ குறையவேயில்லை என்பதை நியுயார்க் டைம்ஸ் மோப்பம் பிடித்து போதைமருந்து வியாபாரத்தின் பின்னால் ஹமித் ஹர்சாயின் சகோதரர் "அஹ்மத் வாலி ஹர்சாய்" மற்றும் அவருக்கு பின்னால் CIA உள்ளதாகவும் கட்டுரை வெளியிட்டது.

செய்தி:

//KABUL, Afghanistan — Ahmed Wali Karzai, the brother of the Afghan president and a suspected player in the country’s booming illegal opium trade, gets regular payments from the Central Intelligence Agency, and has for much of the past eight years, according to current and former American officials.//

http://www.nytimes.com/2009/10/28/world/asia/28intel.html?_r=2&

ஆப்கானில் இருந்து சரக்கு யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் வெளியில் கொண்டு சேர்க்க வேண்டிய வேலை அஹ்மத் ஹர்சாயுடையது இதற்காக சிஐஏ சம்பளமும் அவருக்கு கொடுத்துள்ளது ,என நியுயார்க் டைம்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.

படத்திலும் தவ்பீக் என்ற பெயரில் ஒரு கதாபாத்திரம் எளிய விவசாயின் அன்பளிப்பு என ஓபியம் கொடுக்கும், ஆப்கானில் விவசாயம் என்றால் ஓபியம் பயிரிடுதலே,மேலும் ஓபிய வியாபாரி தான் பணம் கொடுக்கிறார் என ஓமர் பேசும் காட்சியும் உண்டு,ஆனால் கொஞ்சம் மிகையாக அல்லா கொடுக்கிறது தான் இந்த தவ்பீக் கொடுப்பது என ஒரு வசனம் வேறு பேசுவார், என்ன கொடுமை சார் இது ,இப்படி சொல்வது போதை பொருள் விற்பது அல்லாவின் ஆசியுடன் செய்வதாக ஆகாதா? மேலும் அல்லாவுக்கு இணை வைத்து தவ்பீக்கை உயர்வாக சொல்வது போலவும் இருக்கே :-))தவ்பீக் விருந்து கொடுக்கும் வீட்டுக்கு செல்லும் வழியில் சில் அவுட்டில் ரோஜா தோட்டம் போல காட்டியிருப்பது ஓபியம் வயல்களே, ஓப்பியம் செடி தொலைவில் இருந்து பார்க்க ரோஜா போலவே இருக்கும். ஓபியம் வயலை தெளிவாக படம் எடுக்க வாய்ப்பில்லை என்பதால் ரோஜா தோட்டத்தினை சில் அவுட்டில் காட்டியிருக்கவும் வாய்ப்புள்ளது.

ஆப்கானில் அமைதியற்ற சூழல் நிலவ உண்மையான காரணம் என்னவென இப்பொழுது புரிந்திருக்கும், இவ்வுண்மையை பற்றி திரைப்படம் சிறிதும் பேசாமல் ,ஆஃப்கானில் ஓபிய வியாபாரத்தினை தலிபான்கள் மட்டுமே செய்வதாக காட்டியிருப்பார்.

# லோகநாயகர் அறிமுகக்காட்சியில் கதக் ஆடுவதை அனேகம் பேர் சிலாகித்து என்ன நளினம் என விதந்தொம்பிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் ஒரு திரைப்பட நடனமாக எளிமையாக ஆடுவதாக நடித்திருக்கிறார் என்று மட்டுமே சொல்லலாம், அதுவும் நாட்டியம் சொல்லித்தரும் குருவும் கேமராப்பார்த்து அபிநயம் பிடிப்பார், பின்னால் ஆடுபவர்களும் கேமிராவை நோக்கி தான் ஆடுவார்கள், அப்படினா குரு என்ன அபிநயம் காட்டினார்னு மாணவிகள் எப்படி முதுகைப்பார்த்து  கற்றுக்கொள்வார்கள்?.

ரொம்ப சினிமாத்தனமான கேமிராக்கோணம் அது, வழக்கமா ஹீரோ ஆடியன்ஸ் பார்த்து "மெசேஜ் சொல்ல",.பஞ்ச் டயலாக் சொல்ல பயன்ப்படுத்தும் கேமிராக்கோணம் இது. இப்படிக்காட்டினால் தான் ஆடும் அழகான பொண்ணுங்க முகமும்,ஹீரோ முகமும் ஆடியன்ஸ் ஒரே சமயத்தில் பார்க்க முடியும்,ஆனால் உலகத்தரமான படத்தில இப்படிலாம் ஆர்ட்டிபிசியலா மசாலப்படங்களை போலவே கேமிராக்கோணங்களை வைக்கலாமா :-))

இதை விட இன்னொன்று என்னனா, நாயகர் ஒரு அபிநயம் முடிச்சு சிருங்கார பாவம் காட்டிட்டு இருப்பார், பின்னணி நாட்டியத்தாரகைகள் பூ எடுத்து போட்டு ,ஒரு சுத்து சுத்தி வேற என்னமோ ஆடிட்டு இருப்பாங்க , குரு ஆடுறாப்போல ஆட வேணாமோ :-))

# ஒரு பிரைவேட் டிடெக்டிக் பின்னாடி வர்ரான்னு தெரியுது,ஆனால் அதே வேர்ஹவுஸ் வரைக்கும் ஏன் போகனும் ,அம்மாம் பெரிய ஒளவாளிக்கு தெரிய வேண்டாமோ, அதை விட காமெடி, மாமா பின்னடியே தடியன் வரான்  என்ன செய்யன்னு அப்பாவியாக்கேட்பார், முட்டாள் ஓடுனு வேற இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுப்பார் சேகர் கபூர், இம்புட்டு தத்தியாவா ரா ஏஜண்ட் இருப்பார், அப்பாவி வேடம் தான் போட்டு இருக்காரே ஒழிய கதைப்படி உண்மையில் அப்பாவியில்லை தானே ,ஒரு வேளை பாத்திரத்தோட ஒன்றிப்போய் விஷ்வநாத்தாக இருக்கும் போது முழுக்க தத்தியா இருக்கணும்னு நினைச்சுட்டாரா?

# நிருபமா(பூஜா)வின் ஆண் நண்பன் தீபக்குடன் வந்து நாயகரை விசாரணை செய்யும் காட்சியில் , ஃபரூக் என்பவருக்கு அழைப்பு விடுத்து அவர்கள் வரும் வரையில் ரா ஏஜண்ட் தேமே என இருப்பது ஏனோ?  இடைப்பட்டக்காலத்தில் ஏதேனும் செய்து தப்பியிருக்கலாம்.

ஃபரூக் குழுவினர் வந்தால் ஏதேனும் உண்மைக்கண்டுப்பிடிக்கலாம் என சும்மா இருந்தார் என்றால், அவர்கள் இருப்பிடம் எல்லாம் முன்னரே தெரியும் எனவே அங்கேயே போய் முன்னரே பிடித்து விசாரித்து இருக்கலாமே?

ஒரு வேளை வந்த குழு ,கண்டதும் சுட்டுக்கதையை முடித்து இருந்தால் என்னாவது? நமக்கு தெரியும் இது தமிழ்ப்படம், ஹீரோவை அப்படிலாம் பொட்டுனு கொன்றுட மாட்டாங்கன்னு ஆனால் உண்மையான சம்பவம் எனில் ,தீவிரவாத குழுவிடம் மாட்டினால் ,கதம்,கதம் தானே :-))

தமிழ் சினிமாவில் என்றில்லை உலக அளவில் எல்லா ஆக்‌ஷன் படங்களிலும் ,மற்றவர்களை பொட்டுனு போட்டு தள்ளும் வில்லன் ஹீரோவை மட்டும் கொல்லாமல் கட்டி வைத்து தனது சொந்தக்கதை,எதிர்கால திட்டம் என விலாவாரியாக  உலகத்து கதையை எல்லாம் பேசிட்டு, அப்பவும் கொல்லாமல் , 24 மணிநேரத்தில் ஏதேனும் ஒரு நேரத்தில் வெடிக்கிறமாதிரி ஒரு சின்ன வெடிக்குண்டை,அதுவும் நல்லா டைம் தெரியிறாப்போல டைமருடன் செட் செய்து காலுக்கு அடியில் வச்சுட்டு ,கையை,காலை கட்டிப்போட்டுவிட்டு ,குட் பை சொல்லிட்டு போவது தான் வழக்கமாக இருக்கிறது :-))

அப்படிக்கட்டிப்போடும் போது தனியாக்கட்டிப்போடவே மாட்டாங்க கூட ஒரு பொண்ணையும் சேர்த்து கட்டிப்போடுவாங்க, போற வரைக்கும் பேச்சுத்தொணைக்கு போல :-))

ஹீரோ  வழக்கம் போல குண்டு வெடிக்க ஒக்கே ஒக்க செகண்ட் இருக்கும் போது ,குண்டை செயலிழக்க செய்து தப்பிச்சென்று, டேக் ஆஃப் ஆகும் விமானத்தையோ, ஹெலிகாப்டரையோ தாவிப்பிடிச்சு சண்டைப்போட்டு வில்லனை கொன்றொழிப்பார் :-))

அதைப்போலவே இப்படத்திலும் கட்டிப்போட்டு அடிச்சப்பிறகு ,ஹீரோ நமாஸ் செய்யணும் எனக்கேட்டதும் ,பண்பான மார்க்கப்பந்துவான வில்லன் கட்டவிழ்க்க ,அப்புறம் என்ன ஹீரோ விஸ்வரூபம் எடுப்பதை தவிர வேறென்ன செய்வார் :-))

ஆனாலும் சண்டைக்காட்சி கிரிஸ்ப்பா, யாரு அடிச்சாலும்,சுட்டாலும் ஹீரோ மேல படாத போல நன்றாகவே அமைக்கப்பட்டிருக்கும்.

ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வில்லன் ஜேம்சை சுடும் முன்னர் உன் கடைசி ஆசை என்னனு அன்பா கேட்பார், ஜேம்ஸ் ஒரு தம் அடிச்சுக்கிறேன் என சொன்னதும் பெர்மிஷன் கிராண்டட் ஆகும், ஜேம்ஸ் "எம்.ஐ.6" கொடுத்த ஸ்பெஷல் ஃபில்டர் சிகரட்டை பத்த வச்சு ஒரு பஃப் இழுத்துட்டு வில்லன் குருப் மேல சிகரெட்டை போட்டதும் வெடிச்சிறும்,அப்புறம் என்ன ஜேம்ஸ் பாண்ட் எஸ்கேப் தான் :-))

கொல்வதற்கு முன் ஹீரோவின் கடைசி ஆசையை நிறைவேற்ற நினைக்கும் மெல்லிதயம் படைத்த நல்ல வில்லன்கள் இருக்கும் வரையில் ஹீரோவை யாராலும் ஒன்னியும் பண்ணிக்க முடியாது என்பது உலகப்பட நியதி :-))

#
படத்தில் ஆப்கானியர்களை கூட ஒழுங்காக சித்தரிக்கவில்லை,ஆப்கானியர்கள் அரேபியர்கள் அல்லர், அவர்கள் பஷ்தூன் இனக்குழுவினர்,அவர்களின் கலாச்சாரமே வேறு அனைவரும் ,தாடியுடன், மீசையும் வளர்ப்பார்கள்,ஆனால் படத்தில் அனைவரும் மீசையை மழித்துவிட்டு தாடியுடன் ,அரேபிய வகாபியப் பாணியில் இருப்பார்கள்.ஓசாம பின் லேடன், முல்லா முகமது ஓமர் ஆகியோரின் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும் ,தாடி ,மீசை தான் அவர்கள் கலாச்சாரம் என்பது.


இரானில் பதின்மர் ஷியா குழு வகையினர் ,அவர்களும் மீசை,தாடியுடன் தான் இருப்பார்கள், இன்னும் சொல்லப்போனால் அரசுப்பணி புரிய மீசை அவசியம் அங்கே.

 ஓமர் தமிழ்நாட்டில் இருந்தேன் என சொல்வதே அவர் தமிழ்ப்பேசுவதை ஜஸ்டிபை செய்ய என்றார்கள்,ஆனால் அவர் கூட இருக்கும் சலிம் என்ற பாத்திரமும் தமிழ் பேசும், போதாதற்கு அமெரிக்காவில் இருக்கும் ஜிகாதிகளும் தமிழ் பேசுறாங்க, ஃபாரூக் என்பவர் ஒப்பன்மவனேனு எல்லாம் லோக்கல் ஸ்லாங்கில் பேசி சிரிக்க வைக்கிறார் :-))

# ஒரு போஸ்டரைக்காட்டி இவரு பெரிய ஜிகாதி ,5,00,000 பரிசுனு ஒரு டயலாக் சொன்னதும்,தலிபான்கள் முதல்மரியாதை கொடுத்து நாயகரை குழுவில் சேர்த்துக்கொள்கிறார்கள், இதற்கு மண்டையில மூளை என்ற வஸ்துவே இல்லாதவர்கள் என  தலிபான்களை சொல்லி இருக்கலாம் ;-))

தலிபான் மற்றும் அல்கயிதாவில் ஊடுருவலை செய்ய  முடியமால் ஆனானப்பட்ட சிஐஏ வே முழிக்க காரணமே அவர்களின் செயல்படும் முறையே, எந்த ஒருவருக்கும் ஒரு நிலைக்கு மேல் அடுத்த நிலையில் யார்,என்ன செய்கிறார்கள் என்றே தெரியாது, முல்லா ஓமர், ஓசாமவின் புகைப்படங்கள் என காட்டப்படுவதே பல காலத்திற்கு முன்னர் எடுத்தவை ,தற்போது முல்லா ஓமர் எப்படி இருப்பார் என தெரியாது, இந்த படமே அவருதான்னும் தெரியாது என சிஐஏ அதிகாரிகளே குழம்பிப்போய் கிடக்கிறார்கள்,அந்த அளவுக்கு ரகசியமான, பாதுகாப்பாக இயங்கக்கூடிய குழு தலிபான்கள்.

ஜிகாதியாக செயல்ப்படும் நபர் ஒரு தனிநபரேயல்ல, அவர் ஏதேனும் ஒரு ஜிகாதி குழுவில் இருந்தேயாக வேண்டும்,எனவே ஒரு ஜிகாதிப்பற்றி குழுவில் இருப்பவருக்கு நன்கு தெரியும், அக்குழுக்களைப்பற்றி தலிபான்,அல்கயிதா போன்றோர்க்கு நன்கு தெரியும்,எனவே ஒரு ஜிகாதியைப்பற்றி எக்குழுவை சேர்ந்தவர் என்பதன் மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.

அப்படி இருக்கும் போது ஒரு தனி நபர் ரா தேடும் புகழ்ப்பெற்ற ஜிகாதியாக தனியே உருவாவது இஸ்லாமிய ஜிகாதி செயல்பாட்டில் இல்லை, அப்படியே யாரேனும் எந்த ஜிகாதிக்குழுவுக்கும் அறிமுகமே இல்லாமல் ,தன்னம் தனியே உருவாகி இருந்தால் ஆரம்பத்திலேயே கண்டுப்பிடித்து தங்களுடன் இணைத்து இருப்பார்கள், இப்படி ரா நோட்டீஸ் போட்டப்பிறகு தான் ஆள் யார்னே தெரிகிறது என்றால் நம்பவே மாட்டார்கள்.

அப்படியே திடீர் என முளைத்த ஒரு ஜிகாதி வந்தாலும் கண்காணிப்பில் தான் வைத்திருப்பார்கள்,ஆனால் வந்ததும் என்னமோ "National security guards commando Training" எடுத்து வந்த சிறப்பு அதிகாரிப்போல கூப்பிட்டு எல்லாருக்கும் பயிற்சிக்கொடுக்க வைக்க மாட்டாங்க,அதை விட எல்லா திட்டம் பற்றியும் புதுசா வந்த ஆளுக்கிட்டே எப்படி ஒப்புதல் வாக்குமூலம் போல சொல்லுவாங்க, தலிபான்களின் முக்கிய தலைவருக்கு தவக்களை அளவுக்கு கூட மூளை வேலை செய்யாது என்பது போல படத்தில் காட்டியிருப்பார்.

ஷியாவோ,சன்னியோ,அகமதியாவோ அவர்கள்  இருக்கும் ஊர் ஜமாத்தில் இணைந்திருப்பார்கள், அங்கே குடும்ப விவரமும் இருக்கும், அப்படி செய்யவில்லை என்றால் ,இறந்த பின் புதைக்க இடம் கொடுக்க மாட்டார்கள்,மேலும் திருமணத்தையும் ஜமாத்தில் பதிவு செய்ய முடியாது.
இஸ்லாமிய சமுதாயத்தில் ஜாமாத் முறையில் உள்ள சிறப்பு என்னவென்றால் ஒருவர் எந்த ஊருனு சொன்னாப்போதும் ,அவரோட ஜாமத்தை தொடர்பு கொண்டால் போதும் மொத்த ஜாதகமும் வெளியில் வந்துவிடும்.

அரபி,உருது என எதுவுமே தெரியாத ஒருவர் ,விஸாம் அகமத் காஷ்மீரி, சயீத் காஷ்மீரி பையன் என சொன்னவுடன் உண்மையான தாலிபான்களா இருந்தா வாயப்பொளந்துக்கிட்டு ஒத்துக்க மாட்டாங்க, எந்த ஊரு ஜமாத்துனு கேட்டு மொத்த விவரமும் தெரிஞ்சுக்கிட்டு, உளவாளி இல்லைனு உறுதிப்படுத்திப்படுத்தாமல் கிட்டே சேர்க்கவே மாட்டாங்க, உளவாளினு தெரிஞ்சா  வெட்டி ஊறுகாய் போட்டிட மாட்டாங்க.இது போன்று ஜிகாதி அமைப்புகள் மிக நெருக்கமாக பின்னப்பட்ட வலையாக செயல்ப்படுவதால் தான் சிஐஏ போன்ற உளவு நிறுவனங்களால்,ஊடுருவி தகவல்களையே அறிய முடியமால் சிரமப்படுகின்றன.

#இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதும் ஆப்கானில் நடந்ததை சொன்னேன் ,எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு எனவே தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் எதிர்க்க தேவையில்லை என்றார், அவர் சொல்வது உண்மை எனில் உயிருடன் இருக்கும் முல்லா ஓமர் கதாப்பாத்திரத்தை எப்படி வில்லனாக சித்தரித்தார்? இந்திய சென்சார் போர்டு விதிப்படி உயிருடன் இருப்பவரைப்பற்றி படம் எடுக்க வேண்டும் எனில் அவரிடம் இருந்து தடையில்லை என சான்று பெற வேண்டும்.

நாயகன் படம் எடுத்த போது, அப்பொழுது உயிருடன் இருந்த வரதா பாயின் கதை என சொன்னதால் சென்சார் போர்டு சான்றளிக்க மறுத்த சம்பவத்தினை ,சமீபத்தில் கூட தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் நினைவு கூர்ந்தார்.
செய்தி:

//After the completion of shooting Kamal Haasan and Mani Ratnam had a press meet, where they made a statement that the movie was based on Varadaraja Mudaliar’s life. After this, the censor board at Chennai refused to permit the release of the movie, since it was based on a living person. I appealed to the revising committee at Bombay. They said that they would permit us to release the film if I got a letter stating that it was not based on Varadaraja Mudaliar’s life. I asked Kamal Haasan to help me. He simply refused, stating that he was busy shooting another movie. Hence, with great difficulty, I contacted Mathiolli Shanmugam, a writer and good friend of mine, and through him met Varadaraja Mudaliar, who gave us a letter. Only then did the Censor appellate board at Bombay permit us to release the film. To call the movie his “baby” and not be bothered about its release is a reflection on Kamal Haasan’s ‘sincerity’.//

அதனடிப்படையில் பார்த்தால் சென்சார் போர்ட் இப்படத்திற்கும் சான்றளிக்க மறுத்திருக்க வேண்டும், இதன் அடிப்படையில் தான் அரசு வழக்கறிஞர் உயர் நீதி மன்றத்தில் சென்சார் சான்று அளித்ததில் முறைகேடு என வாதிட்டு இருக்க வேண்டும்,ஆனால் மக்களோ சிரித்தார்கள்.

ஒரு வேளை வெளிநாடாகிய ஆப்கனில் ஒருவர் உயிருடன் இருந்தால் என்ன என சென்சார் போர்ட் நினைத்திருக்கலாம், அல்லது முல்லா ஓமருக்காக யாரும் வழக்குப்போட போவதில்லை என நினைத்திருக்கலாம்.

# வேர்ஹவுசில் இருந்து தப்பி வெளியில் ஓடிவரும் பூஜாவுக்கு என ஒரு கார் சாவியுடன் ,திறந்தே காத்து நிற்கிறது ,ஒரு வேளை  உதவி மனப்பான்மையுள்ள தீவிரவாதிகள் போல :-))

#வேர்ஹவுஸ் சண்டைக்காட்சிக்கு பின்னர் ,வீட்டுக்கு வந்து தையல் போட்டு,முடிவெட்டிக்கொண்டிருக்கும் பொழுது அங்கே எப்படி FBI சரியாக வர முடிந்தது,அக்காட்சிக்கு பின்னரே ஓமர் FBI யில் சொல்லலாம் என போன் செய்வதாகவும் காட்சி வருகிறது.

#அதனை தொடர்ந்து வரும் கார் சேசிங் காட்சியின் போது ஓமர் பக்கவாட்டில் ,நாயகர் குழுவினை விரட்டி வருகிறார், மிக முக்கிய புள்ளியான ஓமரே கண் முன்னே வரும் போது அவரை மடக்கி பிடிக்க நினைக்க வேண்டாமா?

பின்னால் FBI  வருகிறது எனலாம், ஆனால் கடைசியில் FBI  இடம் மாட்டிக்கொண்டு ,நான் ஆனானப்பட்ட ரா ஏஜண்ட் என இந்திய பிரதமரையே பேச வச்சு சொல்லும் வேலையை ,ஓமரைப்பிடித்துக்கொடுத்துவிட்டு ,சொல்லி இருக்கலாம், டர்ட்டி பாம் டென்ஷனே இல்லாமல் படம் அங்கேயே முடிந்து இருக்கும்,நமக்கும் தலைவலி மிச்சம் :-))

அல்லது FBI  விரட்டிக்கொண்டு இருக்கும் போதே ஓமர் குழுவினரை விரட்டி ஒரு டபுள் சேஸ் ஆக வைத்து செம ஆக்‌ஷன் சீனாக காட்டியிருக்கலாம்.

அது என்னமோ தெரியலை பரபரப்பான நகரத்தில் சேசிங் நடக்குது ஒரு இடத்தில் கூட டிராபிக் சிக்னல் இல்லை, ரெட் விழலை, ரோட்டில் டிராபிக் நெரிசல் இல்லை, ஃப்ரியா சொய்ங்க்...சொய்ங்க்னு கார் ஓட்டிக்கிட்டுப்போறாங்க :-))


டர்ட்டி பாம்:

# கிளைமாக்சில் சீசியம் டர்ட்டி பாம் என தெரிந்த பின்னும் FBI  சும்மா நாலுப்பேரோட போய் ரவுண்ட் அப் செய்கிறது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில்., அணு வெடிப்பொருள்,கதிர்வீச்சு சம்பந்தமான புலனாய்வு மற்றும் பாதுகாப்புக்கு என அமெரிக்காவில் தனியே
Department of Energy, Office of Intelligence and Counterintelligence என ஒருத்துறை உள்ளது.அதே போல 16 வகையான புலனாய்வு அமைப்புகள் அமெரிக்காவில் உள்ளன, அங்கே  FBI என்பது நம்ம ஊரு சிபிஐ போல கொஞ்சம் டம்மியான அமைப்பே ஆனால் கடைசி வரை  FBI தவிற வேறு யாரும் எட்டிப்பார்க்காதது போல காட்டியிருப்பார்கள்.

சீசியம்-132 என்பது அறை வெப்ப நிலையில் திரவமாக இருக்கக்கூடிய ஒரு உலோகம், இதன் ஐசோடோப்பான சீசியம்-137 க்கு தான் கதிரியக்க தன்மை உண்டு.

மேலும் அணுநிறை எண் -137, அணு எண்-55 உள்ள சீசியம் ஐசோடோப் ஒரு அணுப்பிளவை உபப்பொருள், அதற்கு அயனியாக்கும் காமா கதிர்வீச்சினை வெளியிடும் தன்மை உண்டே ஒழிய ,நியுட்ரானை வெளியிடும் தன்மையில்லை, அதனால் அணுப்பிளவை வினையினை தொடர்ந்து செய்ய முடியாது,அதாவது சீசியம்-137 கொண்டு அணுகுண்டு செய்ய முடியாது.அதற்கு செயின் ரியாக்‌ஷன் செய்யக்கூடிய யுரேனியம்,புளுட்டோனியம் போன்ற அணுப்பொருட்கள் தேவை.

யுரேனியத்தில் பல ஐசோடோப்புகள் உண்டு, யு-238 என்பது பொதுவாக கிடைக்கக்கூடியது அதற்கு அணுப்பிளவு ,கதிரியக்கம் இல்லை, ஆனால் யு-235 என்ற ஐசோடோப்புக்கு உண்டு, இது 0.75%  அளவே இயற்கையில் உள்ளது, எனவே யு-238 ஐ என்ரிச் செய்து 3-4% யு-235 கொண்டதாக மாற்றியே அணு உலைகள்,மற்றும் அணுகுண்டுகளில் பயன்ப்படுத்துகிறார்கள்.அவ்வாறு அணுப்பிளவை நடக்கும் போது மட்டுமே சீசியம் -137 உருவாகும், இயற்கையில் ,அவ்வுலோகம் பூமியில் இல்லை. நியுக்ளியார் வெடிப்பின் போது ஏற்படும் Fall out இல் சீசியம் 137 இருக்கும், இதன் அரை ஆயுட்காலம் 30 ஆண்டுகள் ,அது வரையில் அணுகுண்டு வெடித்த இடத்தில் கதிர்வீச்சு இருக்கும்.மேலும் அணு உலைகளில் பயன்ப்படுத்திய யு-235 அணு எரிப்பொருள் ராட்களில் இருந்து சீசியம்- 137  பிரித்தெடுக்கப்பட்டு ,புற்று நோய்க்கான ரேடியோ தெரபி மற்றும் ஸ்கேனிங் போன்றவற்றிற்கு பயன்ப்படுகிறது.

டர்ட்டி பாம் எனப்படும் சீசியம் -137 கொண்ட பாம் அணுகுண்டு அல்ல,  ஒரு சாதாரண வெடிப்பு பொருள்களான ஆர்.டிஎக்ஸ்,சி-4,டி.என்.டி  என ஏதேனும் ஒன்றினை கொண்ட ஒரு வெடி குண்டே, அதனுடன் சீசியம் குளோரைடு உப்பினை தூளாக இணைத்து தயாரிக்கப்படும் வெடிகுண்டாகும், வெடிப்பொருள் வெடிக்கும் போது காற்றில் சீசியம்-137 துகள்கள் பரவி கதிரியக்கத்தினை உண்டாக்கும். அதன் மூலமே மனிதர்களுக்கு தீங்கு உருவாகும்.

எனவே டர்ட்டி பாம் இருக்கு என தெரிந்தது அந்த இடத்துக்கு FBI  செல்லும் போது கூட "பாம் ஸ்குவாடினை' அழைத்து செல்லாமல் தேமே எனப்போவது போலக்காட்டியிருப்பது FBI  ஐ உள்ளூர் டி-1 போலிஸ் ஸ்டேஷன் போலீஸ் அளவுக்கு காமெடியாக காட்டுகிறது.

நியுக்ளியர் ஆன்காலஜி:

# இதில் இன்னொரு காமெடி நியுக்ளியர் ஆன்காலாஜியில் டாக்டர் பட்டம் பெற்ற நாயகி FBI  அதிகாரியிடம் சீசியம் டர்ட்டி பாம் பற்றி தெரியும் என சொல்ல இரண்டாம் வாய்ப்பாடு சொல்வது போல அணு எண்,நிறை எண்,மெல்டிங் பாயிண்ட் என எல்லாம் சொல்வார், உடனே உங்களுக்கு நிறைய தெரியுது என FBI  ஆபிசர் பம்முவார், ஆனால் நாயகி மூச்சுவிடாமல் சொல்லுவது கதிரியக்கமற்ற சீசியம் 132 பற்றி ,அணு எண் 55, நிறை எண்-132.09 என சொல்வார் ,கொஞ்சம் டயலாக்கையும் கவனிங்க மக்களே :-))

நியுக்ளியர் ஆன்காலஜி படிக்க அடிப்படையில் மருத்துவம் படித்திருக்க வேண்டும், ஆன்காலஜி நர்ஸ் ஆக இருக்க நர்சிங் பட்டம் படித்திருக்க வேண்டும், விலங்குகளுக்கான ஆன்காலஜி படிப்பும் உள்ளது அதற்கு கால்நடை மருத்துவம் படித்திருக்க வேண்டும்.
(வெரி "ஷார்ப்" ஆன்காலஜிஸ்ட்)


ஆனால் படத்தில் நியுக்ளியர் ஆன்காலஜியில் தான் டாக்டர் அவருக்கு  மருத்துவம் தெரியாது என ,காயத்துக்கு தையல் போடும் காட்சியில் லோகநாயகர் சொல்கிறார் :-))

நியுக்ளியர் பிசிக்ஸ் போன்றவை தான் ஆய்வு மருத்துவப்படிப்பு,ஆன்காலஜிக்கு மருத்துவம் படித்திருக்க வேண்டும்.

//You will need a degree in medicine and obtain a license.  In addition, you will likely need to undergo residency training in oncology and a license to practice oncology.  Depending on where you live, you may first need to complete a Bachelor's degree before going into medical school to obtain the degree in medicine.  Students in certain countries may enter medical school directly from high school. //
link:
http://admissionsuccess.com/Types/medicalspecialties/oncologist.htm

நான் கேள்விப்பட்டதை வைத்து சொல்கிறேன்,யாரேனும் மருத்துவர்கள் சரியா எனக்கூறவும். இணையத்திலும் நான் சொன்னது போலவேயுள்ளது.


# ஆஃப்கானில் ஓப்பியம் வியாபாரியின் 'ஓப்பியத்தில்' டிராக்கர் டிவைசை மறைத்து வைக்கிறார், அந்த ஓப்பியம் வியாபாரி அதனை யாருக்கேனும் ஓப்பியம் என வழக்கம் போல அன்பளிப்பாகவோ,அல்லது விற்றோ இருந்தால் என்ன செய்ய? மேலும் அந்த ஓப்பிய வியாபாரி ஓசாமாவை பார்க்க கண்டிப்பாக வருவார் என என்ன நிச்சயம்,அல்லது வரும் போது ஓப்பிய பார்சலை மூட்டைக்கட்டிக்கொண்டு வருவான் எனவும் சொல்ல முடியாதே? அப்படி இருக்கும் போது ஓப்பியத்தில் வைத்து வியாபாரியின் பையில் வைப்பது நேட்டோ படைக்கு இடம் அறிய உதவுகிறது  என காட்டுவது ரொம்ப கத்துக்குட்டித்தனமாக இருக்கிறது.

மேலும் இப்பொழுது உள்ள நவீன மின்னணு தொழில்நுட்பத்திற்கு "பழைய கால டிரான்ஸ்ஸிஸ்டர் ரேடியோ" அளவுக்கா டிராக்கர் டிவைஸ் செய்வாங்க, அதுவும் ரெட் "led light" வேற கண்ணை சிமிட்டிக்கிட்டு இருக்கும்:-))

சின்னதா ஒரு பாரசிட்டமால் டேப்லெட் அளவுக்கெல்லாம் டிராக்கர் டிவைஸ் உள்ளதாக பழைய படங்களிளேயே காட்டியாச்சு, இவ்வளவு ஏன் சமீபத்தில் வந்த துப்பாக்கிப்படத்தில் விஜய் ஒரு டிராக்கர் டிவைசை உடம்புக்குள் இஞ்செக்ட் செய்வதாக தமிழ்ப்படத்திலேயே காட்டியாச்சு :-))

அமெரிக்காவை விட அட்வான்ஸ் டெக்னாலஜியை  இந்திய ராணுவ நுண்ணறிவு துறை பயன்ப்படுத்துகிறது என இக்காட்சியின் மூலம் லோகநாயகர் காட்டியதாக நாம் பெருமைப்படலாம் :-))

# ஆஃப்கானில் ரா ஏஜண்ட் வேலை செய்யும் போது அமெரிக்க நேட்டோ படைகளுடன் ஒரு கூட்டு வேலை என்பதாக காட்டிவிட்டு, நியுயார்க்கில் அமெரிக்க அரசுடன் ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் தனியே ஏன் ரா வேலை செய்ய வேண்டும்? இங்கும் ஜாயிண்ட் ஆபரேஷன் என்றல்லவா காட்டியிருக்க வேண்டும்.

அப்படி தனித்தே ஒரு நாட்டின் உளவு அமைப்பு இன்னொரு நாட்டில் ஒரு வேலை செய்தால்  ,அது அந்த நாட்டை காக்க என சொன்னாலும் அதுவும் உளவு வேலையே,அப்படி எல்லாம் ரகசியமாக உளவு வேலை செய்தால் அதுக்கே ஆப்படிப்பாங்க,அந்தளவுக்கு ரகசியமாக உளவு வேலை செய்து அமெரிக்காவை காப்பாற்ற வேண்டிய அவசியம் இந்திய அரசு நிறுவனமான ராவுக்கு ஏன்? மேலும் கொஞ்சம் தவறி ரா ஏஜண்ட் கொல்லப்பட்டோ அல்லது சரியாக கண்டுப்பிடிக்காமல் போய் குண்டு வெடித்திருந்தால் ,பின்னர் நடக்கும் புலன் விசாரணையின் போது ரா தான் அந்த வேலையை செய்தது என்ற பழியோ அல்லது ரா ஏஜண்ட் டபுள் ஏஜண்டாகிட்டார்னோ கதை மாறிவிடும். சொதப்பலாக எடுக்கப்பட்ட தாண்டவம் படத்திலேயே இதை காட்டியிருப்பார்கள்.

இன்னும் சொல்லப்போனால் தாண்டவம் படத்தின் கதைக்கும் விஷ்வரூபம் படத்தின் கதைக்கும் பெரிய வித்தியாசமில்லை. தாண்டவத்தில் விக்ரம் இஸ்லாமிய ஜிகாதியாக ஊடுருவி ஒரு ஆபரேஷன் செய்வதாக ஆரம்பத்தில் லேசாக காட்டியிருப்பதை, இங்கே தலிபான் குழுவில் ஊடுருவுவதாக் விலாவாரியாக காட்டியிருக்கிறார்கள், தாண்டவத்தில் குண்டு வெடித்த பின் பழி வாங்குவார், இதில் குண்டு வெடிப்பை தடுப்பார், இரண்டுமே ரா ஏஜண்ட் கதை என ஏகப்பட்ட ஒற்றுமைகள்.

# வேர்ஹவுசில் ஒரு குண்டு, அப்பார்ட்மென்டில் ஒரு குண்டு என வெடித்த பின்னும் FBI எந்த வித தீவிரமும் காட்டாமல் சாவகாசமாக செயல்படுகிறது,  நடுவில் காமெடியான விசாரணைகள் வேறு!. ஓமர் சாவகாசமாக பிரைவேட் ஜெட் பிடிச்சு , போன் செய்து வெடிக்க வைக்கப்பார்ப்பார் :-))

ஆனால் இயல்பில் உடனே தேசமே ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டு ,தீவிரமாகிவிடுவார்கள்.

# நைஜீரியன் ,பேரு அப்பாசி, பணம் பரிமாறப்பட்டிருக்கு அப்போ அவன் தான் ஜிகாதி, டர்ட்டி பார்ம் வெடிக்க வைக்க போறான்னு ரொம்ப தீவிரமான நிலையிலும் "wild guess" செய்துக்கொண்டா இருப்பார்கள்,நாயகி அப்போ சந்தேகம் கேட்பதாக காட்டி சமாளித்தாலும், அப்படி செய்வது புலனாய்வு அமைப்புகளின் சரியான செயல்பாடா? பட்டியலில் இருப்பவர்கள் அத்தனைப்பேரையும் அள்ளிக்கிட்டு வந்து விசாரிக்க வேண்டாமா?

அப்பாசியை "மார்க்" செய்த பின்னரும் அவனை அப்படியே போக விட்டு அவன் செய்வதை எல்லாம் வேடிக்கையா பார்ப்பார்கள்,பார்த்தவுடன் கோழி அமுக்குவதை போல அமுக்கி விசாரிக்க வேண்டாமா? ஒரு வேளை வீட்டுக்குள் போனதும் பாம்மை வெடிக்க செய்திருந்தால் என்ன செய்வார்களோ?

மேலும் மிக முக்கியமான "மாஸ்டர் மைண்ட்" ஓமர் நியூயார்க்கில் இருப்பதை FBI க்கு சொல்லி அலர்ட் செய்திருந்தால் யாரும் தப்பிவிடாமல் கண்காணிக்க இயலும்,ஆனால் அப்படி செய்யாமல் இவர்கள் பாட்டுக்கு அப்பாசியை தேடிக்கொன்டு போய்விடுவார்கள்,உண்மையில் அப்பாசி ஜிகாதி இல்லை எனில் ஓமர் வெடிக்க வைத்துவிட்டு கிளம்பிவிட மாட்டாரா?

இரட்டைக்கோபுர வெடிப்புக்கு பின், ஓசாமா பின் லேடன் வேட்டைக்கு பின் ,ஓமர் ஜாலியாக நியுயார்க் வீதிகளில் SUV ல  ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து  சுத்திட்டு ,டர்ட்டி பாம் செட் செய்துவிட்டு ,பிரைவேட் ஜெட் புடிச்சு தப்பிக்கிறார், ஆனால் எந்த பதட்டமும் இல்லாமல் அமெரிக்க அரசு இயந்திரம் செயல்படுகிறது,இப்படிலாமா அசட்டையாக அமெரிக்க உளவுத்துறை செயல்படும், ஆனாலும் ரொம்ப ஓவரா FBI  ஐ ஸ்பூஃப் செய்திருக்கார் லோகநாயகர் :-))


# ஃபாரடே ஷீல்ட்:மைக்ரோ வேவ் ஓவன் என்பது ஒரு இன்வெர்ட் ஃபேரடே கேஜ் வகையாகும், மைக்ரொ வேவ் ஓவனில் இருந்து கதிர்வீச்சு வெளியில் வராமல் தடுக்கவல்லது, ஆனால் உள்ளே செல்வதை 100% தடுக்காது.

மேலும் ஓவன் மூடி இருக்கும் போது தான் ஃபேரடே ஷீல்ட் ஆக செயல்பட முடியும், முழுவதும் மூடிய நிலையிலேயே 100% கதிர்வீச்சை தடுப்பதில்லை என்பதால், பேஸ் மேக்கர் போன்ற கருவிகள் பொருத்தியவர்கள், மைக்ரோவேவ் ஓவன் செயல்படும் போது அருகில் செல்லக்கூடாது என அறிவுறுத்தல் உண்டு.பொதுவாக மைக்ரோவேவ் ஓவன் செயல்படும் பொழுது ஒரு மீட்டர் தூரம் தள்ளியே இருப்பது உடல் நலத்திற்கு நல்லது என்கிறார்கள்.


அப்படி இருக்கும் போது மைக்ரோ வேவ் ஓவன் மூடியை திறந்த நிலையில் ,டர்ட்டி பாமின் மீது கவிழ்த்துவிட்டு ,அது செல்போன் சிக்னலை தடுக்கிறது ,ஜீனியஸ் என்பதெல்லாம் காதுல பூக்கூடையை வைக்கும் வேலை :-))

நீங்களும் செய்யலாம் ஃபேரடே ஷீல்ட்:

செல்போனை ,அலுமினியம் ஃபாயில் கொண்டு நன்கு சுற்றி வைத்துவிட்டாலே போதும் ,சிக்னல் கிடைக்காது. அலுமினியம் ஃபாயில் எலெக்ட்ரோ மேக்னடிக் சிக்னல்கள் ஊடுருவ அனுமதிக்காது,எதிரொளித்து திருப்பிவிடும்!

ஏற்கனவே சொன்னது போல டர்ட்டி பாம் என்பது அணுகுண்டு அல்ல, அதில் உள்ள வழக்கமான வெடிப்பொருளை வெடிக்காமல் செயலிழக்க செய்ய பாம் ஸ்குவாடாலேயே முடியும் ,என்பதால் FBI  பாம்ஸ்குவாடினை அழைத்து சென்றிருந்தாலே போதும்.

ஆனால் படத்திலோ FBI  என்பது தெண்ட தீவட்டிகளின் கூடாரம் என்பதாக காட்டியிருப்பார்கள் ,அமெரிக்காவில் ரிலீசான படத்தை உண்மையான FBI  காரன் மட்டும்  பார்த்தான் ஃப்ளைட் புடிச்சு வந்து லோகநாயகரை என்க்கவுண்டர் செய்தாலும் செய்யக்கூடும் :-))

# தாலிபான்,FBI.CIA.Raw,டர்ட்டிபாம், சீசியம்,ஆன்காலஜி, என சீரியசாக சொல்லவேண்டிய சப்ஜெக்டினை காமெடியாக தப்பும் ,தவறுமாக சித்தரித்து படம் எடுத்திருப்பதே ஸ்பூஃப் செய்யத்தான் என்பதை  புரிந்துக்கொள்ள உலக அரசியல்,பொது அறிவு தேவை என்பதால் தான் லோகநாயகர் அப்படி சொன்னார் என்பது இப்பொழுது புரிந்து இருக்குமே :-))

# படத்தில் பாராட்ட ஒன்றுமேயில்லையா என நினைக்கலாம், ஆப்கான்,அமெரிக்கா என கொஞ்சம் மாறுப்பட்ட களத்தில் கதையினை காட்டியிருப்பது, ஹாலிவுட்  வார் ஆக்‌ஷன் படங்களை பார்த்தவர்களுக்கு ரொம்ப பழகி இருந்தாலும் மற்றவர்களுக்கு புதுசா தெரிய வாய்ப்புண்டு.

ஹெலிகாப்டர், டாங்க்,துப்பாக்கி ,ராகெட் லாஞ்சர் என காட்டி ஏகப்பட்ட பட்டாசு வெடிக்க நிறைய செலவு செய்திருக்கிறார், அரங்க அமைப்புக்கே நிறைய செலவு செய்து ஓரளவு தத்ரூபமாக காட்டியுள்ளார்.

பல ஹெலிகாப்டர் சண்டைக்காட்சிகள் தனி ,தனி ஷாட்களாக எடுத்து இணைத்துள்ளார் ,ஏரியல் வியுவில் காட்டினால் செட் போட்டிருப்பது தெரிந்துவிடும் என தவிர்த்து முடிந்த வரையில் செட்டினை அறிய முடியாமல் ,செட்,பின்னணி லேன்ட் ஸ்கேப், ஹெலிகாப்டர் என தனி லேயர்களை கொண்டு கம்போஸிட்டிங் செய்து இயல்பாக காட்ட முயற்சித்து இருப்பது.

ஆப்கான் காட்சிகள்,லேண்ட் ஸ்கேப் என ஜோர்டான்,பெட்ரா ஆகியப்பகுதிகளில் கொஞ்சமே கொஞ்சம் எடுத்து இணைத்துவிட்டு , முழுக்க அப்பகுதி என நம்ப வைத்தது.

சேகர் கபூர் தவிர அனைவருக்கும் ஒட்டு தாடி வாங்கிக்கொடுத்து, ஓரளவுக்கு இயல்பாக காட்டியிருப்பது, ஒட்டுத்தாடி பசையின் பிடுங்களுக்கும் நடுவில் அனைவரும் இயல்பாக நடித்திருப்பது என சொல்லலாம்.

#இந்த படத்துக்கு இரண்டாம் பாகம் வரும்னு வேற மிறட்டுறார்,சோதனை மேல் சோதனை :-))

இப்போது  மார்க்கப்பந்துக்கள் உபயத்தால் கல்லாக்கட்டிட்டார், அடுத்தப்பாகத்தினை கண்டுக்காம விட்டாலே காணாமல் போயிடும்,செய்வார்களா?
-------------------------------


பிற்சேர்க்கை:

IMDB RATING:

படம் வருமுன்னர் டிடிஎச், பின்னர் மார்க்கப்பந்துக்கள் எதிர்ப்பு,தடை என்ற வகையில் விளம்பரம் அள்ளியது போல இப்பொழுது திடீர் என IMDB RATING வைத்து விளம்பரம் கிளப்ப சில விசிலடிச்சான் குஞ்சுகள் திட்டம் போடுவதாக தெரிகிறது, இந்த IMDB RATING பின்னால் உள்ள சூட்சமத்தினைப்பார்ப்போம்.

# IMDB  இணைய தளத்தில் ,ஒரு மெயில் ஐடி கொடுத்து யார் வேண்டுமானாலும் ஒரு பயனர் கணக்கு துவக்கிக்கொண்டு ,பிடிச்ச படத்துக்கு ஓட்டு குத்தலாம்.

# ஒரு மெயில் ஐடி- ஒரு அக்கவுண்ட்- ஒரு ஓட்டு என IMDB வகுத்துள்ளது, எனவே நிறைய மெயில் ஐடி உருவாக்கி,நிறைய கணக்கு துவக்கி ,நிறைய ஓட்டினை யார் வேண்டுமானாலும் போட முடியும்.

# இதனால் படம் வந்ததும் ,நிறைய ஓட்டுக்கள் விழுந்து எளிதில் முதலிடம் வரும் வாய்ப்புள்ளது.

# சில நாட்களுக்கு பின்னர் புதிய வாக்குகள் வரவில்லை எனில் ,ஆரம்பத்தில் இருந்த ரேட்டிங் குறைய ஆரம்பிக்கும்.

உ.ம்: ஆரம்பத்தில் சுமார் 10,000 வாக்குகளுடன், IMDB RATING -9.5 பெற்று ஒரு படம் முதலிடத்தில் இருக்கலாம்,ஆனால் தொடர்ந்து புதிய வாக்குகள் விழவில்லை எனில் ,ரேட்டிங் 9.5 இல் இருந்து சரிந்து 2,3 எனக்கூட முடியும்.

காரணம் IMDB RATING அமைப்பில்  weighed average ஓட்டிங் என்ற முறையை பயன்ப்படுத்துகிறார்கள்.

#  weighed average ஓட்டு என்பது எப்படி எனில் நீண்ட கால ,மற்றும் ரெகுலர் ஓட்டர்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படும். ஆரம்பத்தில் அனைத்து வாக்குகளும் சமமாக கணக்கிடப்பட்டு ரேட்டிங்க் காட்டுவார்கள், சில நாட்களுக்கு பின்னர்  weighed average ஓட்டுக்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு புதிய ரேட்டிங்கினை அறிவிப்பார்கள். இதன் மூலம் ஒருப்படம் வெளிவந்ததும் ஆர்வக்கோளாறில் பல கணக்குகள் துவங்கி ஓட்டுப்போட்டவர்களின் ஓட்டுக்களின் மதிப்பு குறைக்கப்படும்.

மேலும் தொடர்ந்து ஓட்டுக்கள் விழுந்துக்கொண்டிருந்தால் மட்டுமே , ரேட்டிங்க் தக்க வைக்கும் வகையில் IMDB RATING இயங்குகிறது.

# ஆல் டைம் பெஸ்ட் மூவிக்களுக்கு இம்முறையுடன், IMDB இணையதள நிர்வாகிகளிடமும் வாக்குகள் பெறப்படும்,அதன் அடிப்படையில் வெயிட்டட் ஆவரேஜ் கணக்கிட்டு ரேட்டிங் கொடுக்கிறார்கள்.

#IMDB RATING முறையில் அனைத்து வாக்குகளும் சம மதிப்பில் இல்லை,எப்படி கணக்கிடுகிறார்கள் என்பதை வெளியிட மாட்டோம் என IMDB நிர்வாகம் அறிவித்துள்ளது.

எந்திரன் வெளியாகி ஓராண்டுக்கும் மேலாகிவிட்டதால் அதன் ரேட்டிங்க் தற்சமயம் குறைவாகவே இருக்கும், தற்போது வெளியான படமென்பதால் விஷ்வரூபத்தின் ரேட்டிங் உயர்வாக இருக்கும், இன்னும் சில நாட்கள் போனதும் ,வெயிட்டட் ஆவெரேஜ் முறையில் ரேட்டிங் குறைந்து விடும் :-))

IMDB RATING செயல்படும் முறைப்பற்றி IMDB இணைய தளத்தில் விளக்கங்கள் உள்ளது.

இங்கு காணலாம்:

http://www.imdb.com/help/show_leaf?votestopfaq
---------------------


பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://www.larouchepub.com/other/1995/2241_golden_crescent.html

http://www.unodc.org/unodc/en/drug-trafficking/index.html

http://www.un.org/apps/news/story.asp?NewsID=39186

http://www.pbs.org/wgbh/pages/frontline/shows/heroin/etc/history.html,

விக்கி,கூகிள்,IMDB. இணைய தளங்கள்,நன்றி!
------------------------------