Saturday, December 28, 2013

அஃதே இஃதே-8

(நல்ல மேய்ப்பர்...ஹி...ஹி..!)


GOOD SHEPHERD.

மேரியம்மா புள்ள ஏசய்யாவுக்கு பொறந்த நாளுனு ஊருக்குள்ள எல்லாம் பேசிக்கிட்டாங்க, நமக்கு யாருவூட்டு பொறந்த நாளு, கண்ணாலம்னாலும் ஒன்னுதேன் , ஊருல கண்ணாலம் மாருல சந்தனம்னு கெளம்பிடுறது , பொழுது சாயச்சொல்ல போய் கேக்கு சாப்புட்டு வரனும் ,பின்ன ஊருல நல்லது கெட்டதுனா என்னனு போய்க்கண்டுகிட வேணாமா?  அப்புறம் என்னத்துக்கு மனுசப்பயலா பொறந்தோங்கிறன்?

ராவுத்தர் "ரம்சான்" நோம்பு வச்சு பிரியாணி கொடுத்தாலும் திங்கிறது தான் ,நமக்கு அல்லா ச்சாமியும் ஒன்னுந்தேன்,அய்யனார் சாமியும் ஒன்னுந்தேன்! எந்த ச்சாமியாச்சும் நம்மள துள்ள துடிக்க  வெட்டணும்,கொல்லணும், அழிக்கணும்னு சொல்லுதா? அப்படி தூசானமாச்சொல்லுறதுலாம் யாரு? எல்லாம் அவனுங்கந்தேன் அதான் அவனுங்க ... கொடியப்பிடிச்சிக்கிட்டு வோட்டுக்கேட்டு வருவாய்ங்களே அவனுங்களேந்தேன்...முன்னலாம் கட்சி சின்னத்த காட்டி வோட்டுக்கேட்டாய்ங்க ... அப்புறம் ஊருக்குள்ள ஏகப்பட்ட பயப்புள்ளைக "தனி தனியா சின்னம்" போட்டுக்கிட்டு வோட்டுக்கேட்கவும் சாமிப்பேர சொல்லி ஓட்டுக்கேட்க "சண்டைய கெளப்பிவிட்டு" நம்ம ச்சாமிய கும்புடுற பயக எல்லாம் நமக்குதேன் வோட்டு போடனும் ,இல்லாங்காட்டி ஊருல எல்லாம் "அவனுங்க ச்சாமியாப்பூடும்னு" சொல்லி பயங்காட்டி வோட்டுக்கேட்க ஆரம்பிச்சுட்டானுங்க, இதெல்லாம் செய்யச்சொல்லி எந்த சாமிய்யா சொல்லிச்சு? சாமிக்கு அரசியல் தந்திரமும் தெரியாது ஆரியருங்க மந்திரமும் தெரியாது!

வெள்ளைக்கார தொரைங்க மொத மொதல்ல கப்பல்ல வந்து மேரியம்மாவுக்கு செலை வச்சு கோயில் கட்டணும்னு சொன்னப்போ ,மேரியம்மனும் நம்ம மாரியம்மனும் ஒன்னுதேன்னு நெனச்சவங்கலாம் யாரு? எல்லாம் நம்ம பயகதேன்... அதோட மட்டுமா விட்டாங்க மொத ஆளா முன்ன நின்னு செங்கல்,மணல் எல்லாம் கொடுத்து ,ஆளா பேரா நின்னு கோவில் கட்டவும் உதவுனாங்க கூடவே ஈசானிய மூலையில மொதக்கல்லு வச்சு ..கல்ப்பூரம் கொளுத்தி,தேங்காப்பழம் வச்சு படைச்சு ஒரு கோழிய அறுத்து காவுக்கொடுத்தா "தொட்டக்காரியம்" தொலங்கும்னு நல்ல வழியும் ச்சொன்னவய்ங்க தான் நம்ம மக்கள்,அம்ப்புட்டு வெள்ள மனசப்பூ!

மேரியாத்தான்னா, வெள்ள சீலைக்கட்டி ,பொத்தவம் படிச்சு ,படையலுக்கு கேக்கு வச்சு கும்புடுறச்சாமி, மாரியத்தான்னா, மஞ்ச சீலைக்கட்டி , கரகம் எடுத்து கூழ் ஊத்திக்கும்புடுறச்சாமினு தான் நம்ம மக்க பார்த்தாங்க அதத்தாண்டி வேற எந்த வேத்துமையும் பார்க்க  நம்ம பாட்டன் பூட்டன்களுக்கு தெரியாதப்பூ!

படிக்காத சனங்களா இருந்தாலும் கும்புடுறதுல என்னப்பு சண்டைனு சமரசமா வாழ்ந்தவய்ங்க, ஆனா இப்ப எல்லாம் கொழாப்போட்டு படிச்சுப்புட்டு என்னமோ இன்டெரெட்டாம் அதுல போயி உஞ்சாமி பெருசா ,எஞ்சாமி பெருசா ,கறி சோறு துண்ணலாமா கூடாதான்னுலாம் சண்டைப்போட்டுக்கிறாய்ங்க!என்னத்த படிச்சாங்களோ தெரியலப்பு...படிப்பு இருக்கு ஆனா பண்பு இல்லையே... நான் என்ன செய்வேன்ன்ன்!!!

காலங்காலமா ஊருக்கு ஒரு சாமி,ஆளுக்கு ஒரு சாமினு கும்புட்ட மக்கந்தேன் ஆனா காஷ்மீர்  எல்லையில வெளிநாட்டான் சண்டைக்கு வரான்னா "வெற்றி வேல் வீரவேல்னு" சொல்லிக்கிட்டு துண்ட உதறி தலையில உருமாக்கட்டிக்கிட்டு வேட்டிய தார்ப்பாச்சா இழுத்து முடிஞ்சுக்கட்டிக்கிட்டு ,கன்னியாக்கொமரியில இருந்து ரயிலேறி மொத ஆளா ஓடிப்போய் யுத்தத்துல கலந்துக்கிட்டாய்ங்கப்பூ ,அதமாரியா இன்னிக்கு பெருசா படிச்ச பயப்புள்ளைக இருக்காங்க ...படிச்சதும் மொதல்ல எந்த வெளிநாட்டுக்கு ஓடிப்போலாம்னு ஊருல இருக்க எல்லா வெளிநாட்டுக்கம்பெனி வாசலுலவும் கெடையா கெடக்காய்ங்க.சாமிலாம் யாரு? யாருங்கிறேன்... எல்லாம் ஒருக்காலத்தில நம்ம பாட்டன் பூட்டன் தாத்தனா இருந்தவய்ங்கதேன் ,அவிங்க காலத்துக்கு பொறவு சாமியா நெனச்சு கும்புடுறோம், வடக்க, மலைக்கு அந்த பக்கம் ஆடு மேச்சுட்டு சனங்களுக்கு  நல்லகதி கிடைக்கனும்னு புத்திமதி சொன்னவருதேன் மேரியம்மா புள்ள ஏசய்யா, அதமாரி மலைக்கு இந்த பக்கமா மாடு மேய்ச்சுட்டு சனங்களுக்கு நல்ல புத்தி சொன்னவரு தான் கிச்சிணய்யா ... அவரு ஆட்டுக்கார வேலன்னா இவரு மாட்டுக்கார வேலன்... இதுல என்ன பெருசா ஒசத்தி தாழ்த்தினு மல்லுக்கட்டிக்கிட்டு நிக்க இருக்கு?

நமக்கு தெரிஞ்சதெல்லாம் சாமினா கும்பிட்டுக்கணும் சட்டம்னா மதிச்சு நடந்துக்கனும் அம்புட்டுதேன். அத்துவானக்காட்டுல புழுதி ஒழவு ஓட்டி சோளம் வெதைச்சுட்டு வாரோம் ,யாரு தண்ணி ஊத்துனா?அதுக்கெல்லாம் காவ ஆரு ? எல்லாம் முனிசுபரனும் அய்யனாருந்தேன் காவல், உடையவன் இல்லாம வேற ஆராச்சும் போய் கைய வச்சிட உடுவாய்ங்களா? மீறி கைய வச்சா "ரெத்தங்கக்கி சாவனும்" அம்புட்டு உக்கிரமான காவதெய்வங்க, அதமாரியே ஆடு ,மாடு மேச்சலுக்கு வுடுறோம் நாய்,நரினு ஒன்னும் சீண்டாம ,களவு போகமா அத்தனையும் வூடு வந்துறும் எல்லாம் சுடலை மாடன் காவல்,இம்புட்டு காவந்து செய்யுற ச்சாமிய நாமளும் சும்மா உடுவமா ... அறுப்பு முடிஞ்சதும் மொத நெல்லு,சோளம்,கம்பு ,கேவுருனு எதா இருந்தாலும் காவக்காத்த சாமிக்குந்தேன், பொங்க வச்சு ,கெடா வெட்டி படையல் போடாம வெள்ளாமையில இருந்து ஒரு குறுணிக்கூட விக்க மாட்டோம்ல.

அய்யனாரு, முனிஸ்பரன், சுடலமாடன்,கிச்சிணய்யானு எல்லா சாமியும் கும்பிட்ட மக்கய்தேன் ,அல்லாச்சாமி நம்ம நாட்டுக்கு வந்தப்போ அவரையும் கும்புட்டுக்கிட்டாய்ங்க, ஏசய்யா வந்தப்பவும் கும்புட்டுக்கிட்டாய்ங்க ,சாமிங்க பேருதேன் வேற ,ஆனா கும்புடுற மக்க யாரு எல்லாம் நம்ம மக்கந்தேன், பொறவு என்னத்துக்கு சண்டைங்கிறேன்?

சனத்தொகை போல சாமிங்களும் அதிகமாகி அடிதடியா ஆனப்போ, எலே காட்டுப்பயலுகளா எதுக்கு சண்டைனு திட்டி, பெரியார் "ராமசாமிய்யா" கூட்டம் போட்டு சொன்னப்போ அதுக்கும் மொத ஆளா ஓடிப்போயி "அய்யா வாழ்க"னு தொண்ட நரம்பு பொடைக்க கோசம் போட்டதும் நம்ம மக்கதேன்.

வடக்கத்திக்காரய்ங்க "இந்தி" தான் படிக்கணும்னு சொன்னப்போ ,காட்டுமிராண்டி பாஷைனு சொன்னாலும் அதான் எங்க பாஷை, தமிழ விட முடியாது ...தமிழை காப்பாத்த ரயிலை மறிடானு பெரியாரய்யா சொன்னதும் முன்ன ஓடிப்போயி தண்டவாளத்துல தலைய கொடுத்ததும் நம்ம மக்கதேன்.

சாமி இருக்குனு சொன்னாலும் இல்லைனு சொன்னாலும் தமிழன், தமிழ் நாடுனு சொன்னால் எல்லாருமே ஒன்னுக்கூடி தான் இந்த மண்ணுல நின்னாங்க,இனிமேலும் நிப்பாய்ங்க அதுல ஒரு மாத்தமும் வாராது.

மேரியம்மா புள்ள ஏசய்யாவுக்கு பொறந்த நாளுனு சொல்லி மாதாக்கோயில்ல மணியடிச்சு கூப்பிட்டுருக்காய்ங்க , மதிச்சு கூப்புடுறது மனுசத்தன்மை , அதை மதிச்சு போறது பெரிய மனுசத்தன்மை ... எனக்கு பெரிய மனுசத்தன்மை இருக்கு நா போய் கேக் சாப்புட்டு வாரேன்...வாரிகளா போவோம் ?

அந்த மாதாக்கோயில் மணி அடிக்குதய்யா ...

மார்கழி மாசக்குளிர் அடிக்குதய்யா ...!!!

ஓ ஏசய்யா தோ வாரோமய்யா ,வாரோம்!

 நீரும் பெரிய மனுசனா இருந்தா வாருமய்யா போலாம்..வரச்சொல்லோ "இரானி பாய்" டீக்கடையில தேத்தண்ணி குடிச்சிப்புட்டு வரலாம் ..இந்த குளிருக்கு சூடாத்தேத்தண்ணீ குடிச்சா தேவாமிருதமா இருக்குமய்யா... அடச்சும்மா வாரும் தேத்தண்ணிக்கு பைசா கூடா நானே கொடுக்கேன்...ஹி...ஹி இன்னிக்கு நாந்தேத்தண்ணி வாங்கி கொடுத்தா நாளப்பின்ன காப்பித்தண்ணி வாங்கி கொடுக்காமலா போயிரப்போறீர்? நீரும் பெரிய மனுசந்தேன்!!!

பின்குறிப்பு:

கடவுள் இருக்குனு நம்புறவன விட கடவுள் இல்லைனு நம்புறவன் "மனிதனாக "வாழ்கிறான்!

---------------------------

அவார்டுக்கு ஆப்பு!

ஆந்திராவின் புகழ் மிகு நடிகர்களான  "பெத்தராயுடு" மோகன்பாபு, மற்றும் நகைச்சுவை புயல் "பிரம்மானந்தம் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்ட பத்மாசிரி விருதுகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்க சொல்லி "ஆந்திர உயர் நீதி மன்றம்" உத்தரவிட்டுள்ளது.காரணமென்னவெனில் ,சமீபத்தில் மோகன் பாபு குடும்பத்தார் தயாரித்த "Denikaina Ready" என்ற தெலுங்கு படத்தின் விளம்பரம் மற்றும் டைட்டிலில் இருவரும் தாங்கள் பெற்ற பத்மசிரி விருதுகளை அடைமொழியாக பயன்ப்படுத்தி இருக்கிறார்களாம், அதற்கென்ன எல்லாரும் தமிழ் நாட்டில அதைத்தானே செய்கிறார்கள் என நினைக்கலாம், ஆனால் மத்திய அரசின் விருதுக்கான விதிமுறைகள் படி விருதுப்பெற்றவர் அவற்றினை பெயருக்கு முன்னால்,பின்னால் அல்லது விளம்பரம் , லெட்டர் பேட் ,விசிட்டிங் கார்ட் என எதிலும் பயன்ப்படுத்தக்கூடாதாம். மீறிப்பயன்ப்படுத்தினால் விருது ரத்து செய்யப்படுமாம்.

இது வரையில் மத்திய அரசாக அப்படி ரத்து செய்ததேயில்லை, ஆனால் இச்சட்டத்தினை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட பா.ஜக கட்சியினை சேர்ந்த ஒருவர் ,ஆந்திர உயர் நீதி மன்றத்தில் "பொது நல வழக்கு" தொடர்ந்துவிட்டார் ,அதனடிப்படியிலேயே ஆந்திர உயர் நீதி மன்றம் "விருதுகளை " இரு நடிகர்களும் தாங்களாகவே திரும்ப ஒப்படைத்து விடுமாறு உத்திரவிட்டுள்ளது.

செய்தி:

The AP High Court on Monday faulted the actors for prefixing the name of the award to their names in the credits of the Telugu movie Denikaina Ready that was released in 2012.

Chief Justice Kalyan Jyoti Sengupta pointed out that it would be better for the actors to surrender their awards to the Centre in view of the allegation as gentlemen, and to uphold morals.

The Chief Justice, along with Justice P.V. Sanjay Kumar, was dealing with a PIL filed by senior BJP leader N. Indrasena Reddy, who had challenged the alleged inaction of the Centre in not recommending to the President to annul the awards.

http://www.deccanchronicle.com/131224/news-current-affairs/article/mohan-babu-brahmanandam-get-hc-stick

செய்தி- டெக்கான் கிரானிக்கல், நன்றி!

இவ்வழக்கின் அடிப்படையில் தமிழ் நாட்டில் பலரும் விருதினை திரும்ப ஒப்படைக்கும் சூழல் உருவாகலாம் , லோகநாயகர் முதற்கொண்டு பலரும் சிக்கும் வாய்ப்புள்ளது.


லோகநாயகரின் பட விளம்பரங்களில் தவறாமல் "பத்மசிரி" எனப்போடப்பட்டிருக்கும், இணையத்தில் அப்படிப்பட்ட படத்தினை தேடிய போது அவரது ரசிகமணி "சந்தியர்கரண்" என்பவரின் தளத்தில் கிடைத்த படம் இது.படத்திற்கு நன்றி!
இசைப்புயல் ஏ.ஆர்.ரெஹ்மானும் பெயருக்கு முன்னால் "பத்மசிரி" எனப்போட்டுக்கொள்வதை அனுமதித்துள்ளார்.

தெனாலி பட டைட்டிலில் "பத்மசிரி" ஏ.ஆர்.ரெஹ்மான் என வந்துள்ளது.

இன்னும் வைரமுத்து,விவேக் போன்றோரும் விருதினை பெருமையாக திரைப்பட டைட்டிலில் பயன்ப்படுத்தியுள்ளதை பார்த்திருக்கிறேன். படங்கள் கிடைத்தால் அவற்றையும் இணைக்கிறேன்.

சூப்பர் ஸ்டார் அவர்களும் "பத்மவிபூஷன்" விருது பெற்றுள்ளார் ,ஆனால் அவரது விளம்பரங்கள் விருதுடன் காணக்கிடைக்கவில்லை, தலைவரு வழி எப்பவும் தனி வழி தான் , சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை விட வேற பட்டம் தேவையில்லைனு நினைச்சு ஆரம்பத்திலேயே தவிர்த்துவிட்டார் போல!

# மன்னாதி மன்னர்!


புரட்சித்தலைவர் என அன்புடன் அழைக்கப்படும் "எம்சிஆர்" அவர்களின் திரை கலையுலக பயணம் அமெரிக்க இயக்குனர் எல்லீஸ். ஆர்.டங்கனின் "சதிலீலாவதி"(1936) படத்தில் ஒரு சிறிய வேடத்தில் காவலராக நடித்ததில் இருந்து தான் துவங்கியது. இதே படத்தில் தான் எம்.ஆர்.ராதா,டி.எஸ்.பாலையா ,என்.எஸ்.கிருட்டிணன் ஆகியோரின் திரையுலக பயணமும் துவங்கியது. ஹி...ஹி ...இப்படத்தில் தான் தமிழ் சினிமாவின் "ஐடெம் சாங்க்" கலாச்சாரத்தின் முதல் புள்ளியாக ஒரு "காபரே" டான்ஸ் பாட்டும் இடம்பிடித்தது. அதன் பின் வெளியான படங்களில் "கிளப் டான்ஸ்" இல்லைனா படம் ஓடாதுனு கலையுலக சிற்பிகளே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் அவ்வ்!


சில பல சிறிய வேடங்களை தாண்டி பின்னர் "ராஜகுமாரி"(1947) படத்தில் இருந்து கதையின் நாயகனாக நடிக்க துவங்கினார், இப்படி வெற்றிகரமாக திரையுலகில் பவனி வந்த காலத்தில் கி.பி 1953 இல்  "ஜெனோவா" என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் மலையாள திரையுலகிலும்  கதாநாயகனாக அறிமுகமானர். இப்படமே எம்சிஆரின் ஒரே மலையாளப்படம் ஆகும்.


ஜெனோவா திரைப்படம் கிருத்துவ புராணத்தின் அடிப்படையில் உருவான திரைப்படமாகும், இப்படத்தில் ராணி ஜெனோவாக "பி.எஸ்.சரோஜாவும்" யூதமன்னர் சிப்ரஸாக "எம்சிஆரும்" நடித்தனர். இயக்கம் எஃப்.நாகூர், இசை.எம்.எஸ்.விசுவநாதன்(முதல் மலையாள இசையமைப்பு).

கி.பி 1953 ஆம் ஆண்டின் ஈஸ்டர் தினத்தன்று திரையிட திட்டமிடப்பட்டு , தயாரிப்பு சிக்கல்களால் 13 நாட்கள் தாமதமாக வெளியானாலும் ,அவ்வாண்டின் மிகப்பெரிய மலையாள வெற்றிப்படமாக "ஜெனோவா" அமைந்தது.பின்னர் இரு மாதங்களுக்கு பிறகு தமிழிலும் அதே பெயரிலேயே மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாயிற்று.

கதைப்படி மன்னர் சிப்ரசின் மனைவி ஜெனோவா, திருமணம் ஆகி சில நாட்களில் போருக்காக மன்னர் பரதேசம் சென்றுவிடுகிறார்,ஆனால் அப்பொழுதே ராணி "ஜெனோவா" கருவுற்றுவிடுகிறார். அது மன்னருக்கு தெரியாது.

சிப்ரஸ் போர்க்களத்தில் இருக்கையில் மந்திரி "கோலோ"(மலையாளத்தில் ஆலப்பி வின்சென்ட்,தமிழில் பி.எஸ்வீரப்பா)வுக்கு ராணி ஜெனோவா மீது மையல் உருவாகி அடைய முயற்சிக்கிறார்,அவ்வேளையில் நம்பிக்கையான வேலையாள் "கார்த்தோஸ்" குறுக்கிட்டு ராணியை காப்பாற்றுகிறார், வெளிப்படையாக தனது சதியை காட்டிக்கொள்ள இயலாத நயவஞ்சக "மந்திரி" ராணிக்கும் வேலைக்காரன் "கார்த்தோசுக்கும்" கள்ளத்தொடர்பு எனக்கதைக்கட்டி ,இருவரையும் சிறையில் அடைக்கிறார்.


யுத்தம் முடிந்து வரும் மன்னர் "சிப்ரசோவும்" மந்திரியின் பேச்சினை நம்பி ,ராணி ஜெனோவாவினை நாடுக்கடத்திவிட்டு, வேலையாள் "கார்த்தோசுக்கு" மரணதண்டனை விதிக்கிறார். கர்ப்பிணியாக காட்டில் திரியும் ராணி ஜெனோவாவினை காக்கும் பொருட்டு "மேரியம்மா" பிரசன்னம் ஆகி சுகப்பிரசவம் ஆக செய்து , தாயையும் சேயையும் காக்கிறார். அவர்கள் காட்டிலேயே வாழ்கிறார்கள்.

இதற்கிடையில் நயவஞ்சக மந்திரி "மன்னர் சிப்ரசோவை" சிறையில் அடைத்து ஆட்சியைப்பிடிக்கிறார்,ஆனால் படைத்தளபதிக்கும்(எம்.ஜி.சக்கரபாணி) மன்னராக ஆசை எனவே அவரும் கிளர்ச்சி செய்கிறார், இடையில் மன்னரின் விசுவாசிகள் ,மன்னரை மீட்கிறார்கள் , மூன்று தரப்பாக சண்டை நடக்கிறது, படைத்தளபதி மட்டும் இறக்கிறார், மந்திரி கோலோ தப்பிவிடுகிறார்.

பின்னர் ராணி ஜெனோவா நிரபராதி என அறிந்து தேடிச்செல்லும் மன்னர் சிப்ரசை ,மந்திரி கோலோ காட்டில் வழிமறித்து தாக்குகிறார்,சண்டையின் முடிவில் மந்திரி கொல்லப்படுகிறார்,ஆனால் காயமுற்ற மன்னர் சிப்ரசோ மயக்கமாகிவிடவே ,அப்பொழுது அங்கு வரும் அவரின் கானக புதல்வன் கண்டெடுத்து மீட்டு அன்னையுடன் சேர்க்கிறார், பின்னர் மனமாச்சரியங்கள் ஒழிந்து ,நாடு திரும்பி அனைவரும் மகிழ்வாக வாழ்வதாக "பாசிட்டிவ்" ஆக படத்தினை முடித்து மங்கலம் பாடுகிறார்கள்.

இப்படத்திற்கு மலையாளத்தில் எம்சிஆருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தது செபாஸ்தியன் குஞ்சு மற்றும் குஞ்சு பாகவதர் ஆகும். ஒரு மலையாளப்படத்தில் நாயகருக்கு முதன் முதலில் டப்பிங் கொடுக்கப்பட்டது இப்படத்தில் தானாம். பாடல்களை ஏ.எம்.ராஜா மற்றும் பி.லீலா பாடியுள்ளனர்.பின்னாளில் தமிழ் திரையுலகின் மாபெரும் வசூல் சக்ரவர்த்தியாக மாறியப்பின்னரும் "ஜெனோவா" படத்தின் போது ஏற்பட்ட தாக்கத்தினால் கிருத்துவ புராணப்படமொன்றில் ஏசுநாதராக நடிக்க வேண்டும் என்ற ஆசை எம்சிஆருக்கு ஏற்பட்டது. ஆனால் சரியான நேரமே வாய்க்கவில்லை போலும், பின்னர் 1971 இல் மலையாள சினிமா தயாரிப்பாளர் ஜோசப் என்பவர் "ஏசுநாதர்" என்றப்பெயரிலேயே அவரின் வாழ்க்கை வரலாற்றை தயாரிக்க இருப்பதாக கூறி எம்சிஆரை அனுகவும் ,மகிழ்வுடன் சம்மதித்துள்ளார், மேக் அப் எல்லாம் போட்டு "ஏசுநாதர்" கெட் அப்பில் எம்சிஆரின் புகைப்படத்துடன் பத்திரிக்கை விளம்பரங்களும் கொடுக்கப்பட்டன. ஆனால் ஏனோ  வெளியில் சொல்லப்படாத சில பல காரணங்களால் பின்னர் அப்படம் கைவிடப்பட்டது.இத்திரைமுயற்சி எம்சிஆரின் திரைப்பட வாழ்க்கையில் நிறைவேறாத ஆசைகளில் ஒன்றென சொல்கிறார்கள். படம் உருவாகாமல் போனதற்கு காரணம் "வழக்கம்" போல எம்சிஆரின் இழுத்தடிப்பு எனவும் ,இல்லை படத்தயாரிப்பாளரின் வேறு படங்கள் தோல்வி அடையவே பண முடையால் தடைப்பட்டது என்கிறார்கள் ஒரு சிலர். இன்னும் சிலரோ , படத்தயாரிப்புக்காக வெளியிட்ட விளம்பரத்தில் வந்த "ஏசுநாதர்" உருவ  எம்சிஆரின் படத்தினையே ஏசுநாதராக கருதி மக்கள் வழிப்பட ஆரம்பித்துவிட்டார்களாம்  ,எனவே படம் வெளியானால் மக்களை தவறாக வழிநடத்தியதாக ஆகிவிடும் எனக்கருதி எம்சிஆரே படத்தினை நிறுத்திவிட்டு தயாரிப்பாளருக்கு செலவிட்ட தொகையினை அளித்துவிட்டார் என்கிறார்கள். உண்மை என்னவென எம்சிஆருக்கும் ,தயாரிப்பாளருக்கும் மட்டுமே தெரியும்!!!

எம்சிஆரின்  நினைவு நாள் december-24.
----------------------------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

# http://www.hindu.com/mp/2010/04/05/stories/2010040550910400.htm

# http://www.hindu.com/mp/2011/04/25/stories/2011042550900500.htm

விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
---------------------------------------