Friday, September 14, 2012

அஃதே,இஃதே-3யார் சிந்தனையாளர்கள்?

சென்னையில் நடந்த அன்ன தான விழாவில் ஒருவர் பேசியதாவது, மற்ற ஜாதினருக்கு தானம் அளிப்பதை விட பிராமணர்களுக்கு தானம் அளிப்பது மிகவும் சிறந்தது எனப்பேசினார், அதற்கு விவேகானந்த அய்யா அவர்கள், இக்கருத்தில் நல்லதும் உண்டு ,தீயதும் உண்டு. நாட்டில் உள்ள எல்லா பண்பாடுகளும் பிராமணர்களிடையே நடைமுறையில் உள்ளன,நாட்டின் சிந்தனையாளர்களாகவும் அவர்களே உள்ளனர்,அவர்களை சிந்தனையாளர்களாக ஆக்குகின்ற வாழ்க்கை வழியை அடைத்துவிட்டால் நம்ம் நாடு முழுவதும் பெரும் துன்பத்துக்குள்ளாகும் என சொன்னார்.

விவேகானந்த அய்யாவின் கூற்றினை கட்டுடைத்து பார்த்தால்,

# பிராமணர்களுக்கு மட்டுமே சிந்திக்க தெரியும்??!!

# அவர்களை சிந்தனையாளர்களாக உருவாக்க அவர்களுக்கு நிறைய தானம் செய்ய வேண்டும் .

அல்லது தானம் கொடுத்து சொகுசாக வாழ வைத்தால் சிந்திக்க மாட்டாங்கன்னு சேம் சைட் கோல் அடிக்கிறாரா?

# பிராமண சிந்தனைகள் ஊற்றெடுக்கவில்லை எனில் நாட்டுக்கு பெரிய துன்பம் உண்டாகிடும்.

பிராமண சிந்தனை ஊற்றெடுத்து என்ன நாடு வளமாச்சுன்னு எனக்கு ஒன்னியும் பிரியலை.

ஹி..ஹி எதையவாது படிப்போமேனு தேடினப்போ எப்போவோ வாங்கி சும்மா கிடந்த , விவேகானந்தரின் " கொழும்பு முதல் அல்மோரா வரை" என்ற பயணக்கட்டுரை நூல் கிடைச்சது, கொஞ்சம் பக்கங்கள் மானாவாரியா படிச்சதில் சிக்கினது தான் மேற்கண்டது.

500 பக்கமுள்ள இந்நூல் வெறும் 38 ரூவா தான் அதனாலேயே இந்நூலை வாங்கியிருப்பேன் என நினைக்கிறேன். மலிவான விலையில் விற்க காரணம் இராமகிருஷ்ண மட வெளியீடும், அதற்கு டீ.வி.எஸ் குழுமத்தின் சுந்தரம் நிதிநிறுவனத்தின் பண உதவியும் ஒரு காரணம்.

---------------
"பாசி"ட்டிவ் எனர்ஜி.ஃப்ரான்ஸ் நாட்டை சேர்ந்த உயிர் வேதியல் அறிஞர் " Pierre Calleja" என்பவர் பாசியில் இருந்து மின்சாரம் தயாரித்து தெரு விளக்கு எரிய வைக்கும் ஒரு அமைப்பினை உருவாக்கியுள்ளார்.

இவ்வகையான பாசியை தண்ணீர் கொண்ட கலத்தில் வைத்து பகலில் வெயில் படும் படி வைத்துவிட்டால் காற்றில் உள்ள கரியமில வாயு மற்றும் , கதிரவனின் ஆற்றலை ஈர்த்து மின்சாரமாக மாற்றி அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின்கலத்தில் சேமித்து வைத்துவிடும், பின்னர் இரவில் தெருவிளக்கினை ஒளியூட்டலாம். இதன் மூலம் நகரத்தில் வாகன போக்குவரத்தினால் உருவாகும் கரியமில வாயு குறைவதோடு, மின்சாரம் தயாரிக்கும் போது உருவாகும் கரியமில வாயு இன்ன பிற வாயுக்களும் உற்பத்தியாவது குறையும், சுற்று சூழல் பாதுகாக்கப்படும்.


இத்திட்டங்கள் எல்லாம் ஆய்வு நிலையில் வெற்றிகரமாக இயங்குகின்றன, வணிக ரீதியில் விலை குறைவாக தயாரிக்க முடிந்தால் பெருமளவு மின் தேவையை இயற்கையாக பெறலாம் ,மேலும் அபாயமான அணு உலைகள் கட்டுவதும் தேவைப்படாது.

மேலும் பாசிகள் மூலம் பெருமளவில் மின்சாரம் தயாரிக்கவும் உலக அளவில் சோதனைகள் நடந்துக்கொண்டுள்ளன, நம் நாட்டில் வழமை போல நிலக்கரி, அணு உலை என தீரா ஆர்வத்துடன் வேலை நடக்கிறது :-))

தேவையே கண்டுப்பிடிப்பின் தாய்! நம் தேவைகள் புதிய தீங்கில்லா மாற்று எரிசக்திகளை உருவாக்கினால் மட்டுமே எதிர்காலத்திற்கு நல்லது.

------------------------

சந்தையில் புதுசு:மின் வெட்டில் மின்னும் விளக்கு.

மேற்கண்ட படத்தில் உள்ள லெட் விளக்கு ஒரு சீனத்தயாரிப்பாகும், இதில் ஒரு சிறிய ,மின்கலமும்,மின்னேற்றியும் உள்ளது ,வழக்கமான மின் விளக்குகளை பொறுத்துவது போல "தாங்கியில்"(ஹோல்டரில்" ),மாட்டலாம். தானாக மின்னேற்றம் ஆக்கிவிடும், மின்வெட்டு ஆகும் போது சேமித்த மின்சாரம் மூலம் தானாகவே எரியும், சுமார் 3 மணி நேரம் வரையில் ஒளி கொடுக்கும். விலை 150 ரூவிலிருந்து இருக்கிறது,படத்தில் இருப்பது 150 ரூ, அடுத்து 200, 250 என கூடுதல் ஒளிரும் திறனுடன் விளக்குகள் இருக்கிறது.

எப்படி இருக்கிறது சோதனை செய்ய ஒன்றை வாங்கினேன் , நன்றாகவே இருக்கிறது ,இன்னும் இரண்டு வாங்கி மாட்டலாம் எனப்பார்க்கிறேன். தலை கீழ் மின்மாற்றி சேமகலம் வாங்க வசதி இல்லாதவர்களுக்கு நல்ல பயனுள்ள ஒன்று எனலாம்.

மக்களுக்கு பயனுள்ள பொருட்களை எளிமைப்படுத்தி புதிய வகையில் மலிவாக கொடுப்பதில் சீனர்கள் எப்போதும் முந்திக்கொள்கிறார்கள், நல்ல மூளைக்காரர்கள் தான்!

---------------------

பாட்டொன்று கேட்டேன்!

ஹி... ஹி... மீண்டும் ஒரு சூப்பர் ஸ்டார் பாடல் காணொளி.சூப்பர் ஸ்டாருக்கு நடனம் அவ்வளவாக வருவதில்லை என்றாலும் வருவதை வச்சு அழகாக பாடல் காட்சிகளில் நடித்து , நடனமாட தெரியவில்லை என்ற குறையே தெரியாமல் பாடலை ஹிட் ஆக்கிவிடுவார்(அதான்யா நடிப்பு), அப்படியான எப்போதும் பசுமையான ஒரு பாடல் பொல்லாதவன் திரைப்படத்திலிருந்து.


-----------------
பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள், யூடியூப், டிஜிடெய்லி ,இணைய தளங்கள் ,நன்றி!
************