Monday, July 30, 2012

என்ன கொடுமை சார் இது-7


பில்லா-2 : ஒரு கண்ணோட்டம்.

பில்லா-2 ஒரு வழியா பார்த்தாச்சு , படம் வெந்ததும் வேகாததுமா பொங்கின சோறாட்டம் இருக்கு .அதுக்கு முதல் காரணம் "corporate film production house"கள் முதல் பிரதி அடிப்படையில் படம் எடுக்கும் சமீபத்திய தயாரிப்பு கலாச்சாரம் தான் காரணம் எனலாம்.

அஷோக்லெய்லாண்ட், ஃபோபர்ஸ் ஊழல் புகழ் இந்துஜா குழுமத்தின் படத்தயாரிப்பு பிரிவான "IN Entertainment"(ine)க்கு முதல் பிரதி அடிப்படையில் பழைய நடிகரும் தயாரிப்பாளரும், மோகன்லாலின் மாமனாருமான அமரர்.கே.பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸின் "சுரேஷ் பாலாஜி "கூட்டில் wideangle creations இப்படத்தினை தயாரித்துள்ளது.

முதல் பிரதியாக படம் எடுப்பது என்றால் தயாரிக்கும் போதே ஒரு தொகையை ஒதுக்கிவிடுவது கோடம்பாக்கம் கலாச்சாரம் அதன் அடிப்படையில் பணத்தை ஒதுக்கியதன் விளைவால் படம் ஏனோ தானோ என உருவாகியிருக்கிறது, பிரமாண்டம் எல்லாம் வார்த்தையில் தான் , ஹெலிகாப்டர் பயன்ப்படுத்தி ,வெளிநாட்டில் படம் எடுத்தால் பிரமாண்டம்னு சொல்லிக்கலாம்னு செய்து இருக்காங்க, உண்மையில் வெளிநாட்டில் படம் எடுப்பது இந்தியாவில் படம் எடுப்பதை விட சிக்கனமானது. இப்படத்திற்கு கூட ஜியார்ஜியா அரசு ஹெலிகாப்டர் எல்லாம் இலவசமாக கொடுத்தது முதல் பல உதவிகள் செய்துள்ளது.

பல நாடுகளில் அவங்களுடைய "லேண்ட் மார்க்,சுற்றுலா தலங்களை" படத்தில் காட்டினால் உதவி தொகை கூட கொடுப்பது வழக்கம். மலேஷியாவில் பெட்ரோனாஸ் டவர் படத்தில் தெரியும் படிக்காட்டினால் உதவித்தொகை உண்டாம்.எல்லாம் அவர்கள் நாட்டுக்கு சுற்றுலா விளம்பரமாக அமையும் என்று தான்.

அஜித்துக்கு சம்பளம் கொடுத்தது தான் படத்தில் மிகப்பெரிய செலவு, அப்புறம் கோட்டு ,கருப்பு குளிர்க்கண்ணாடி வாங்கிய வகையில் தான் அதிகம் செலவு ஆகி இருக்கும் :-))

மற்ற எல்லாரையும் அஜித் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு என "தூண்டில்" போட்டு அடிமாட்டு சம்பளத்திற்கு பிடிச்சு போட்டு இருப்பாங்க போல, பட்ஜெட்டை செயற்கையாக சுருக்கியதால் பில்லா-1 எடுத்த விஷ்ணுவர்தன்,நிரவ் ஷா எல்லாம் சம்பளம் கட்டுப்படியாகாமல் கழண்டுக்கொள்ள சக்ரி டோலெட்டி போன்ற அப்ரண்டீஸ் வச்சு படம் எடுத்துட்டாங்க போல.

படத்தில் தங்கள் இருப்பை ஓரளவுக்கு காட்டியவர்கள், கதையின் நாயகன் அஜித், ஒளிப்பதிவு இயக்குனர் ஆர்.டி.ஆர், "லார்ட் ஆஃப் தி ரிங் புகழ் "கணினி வரைகலை நிபுணர்,மது சூதனன் ஆகியோர் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் பெயர்ப்பட்டியலில் போட மட்டுமே பயன்ப்பட்டிருக்கிறார்கள்.

பார்வதி ஓமணக்குட்டி ..ஓணான் குட்டி போல இருக்கு, சொன்னால் தான் காதலா படத்தில் மும்தாஜ் அறிமுகம் ஆனப்போது ஓணான் குட்டியை விட அழகாய் இருந்தாப்போல தெரியுது,அழகிப்போட்டியில் எல்லாம் கலந்துக்கொண்டப்பார்ட்டின்னு பில்ட் அப் வேற,அழகிப்போட்டியில எதைப்பார்த்து அழகின்னு முடிவு பண்ணாங்களோ :-))

பிரேசில் அழகின்னா சும்மா செதுக்கி வச்ச சிலையாட்டம் இருக்கும்னு பார்த்தால் செத்துப்போன பல்லியாட்டம் இருக்கு புருணா அப்துல்லா , T.B patient கு எல்லாம் பிகினி போட்டு நடமாட விட்டு இருக்காங்கப்பா :-))

படத்தின் முக்கிய பெண் கதாப்பத்திரங்கள் ரெண்டும் நடமாடும் செட் பிராப்பர்டி என்ற அளவிலேயே படத்தில் பயன்ப்படுத்தப்பட்டு இருக்காங்க,அதுக்கு மேலோ/கீழோ சொல்ல எதுவும் இல்லை :-))

கதையின் நாயகன் அஜித் antagonist என்பதால் கொலைகளுக்கும் நியாயம் கற்பிக்கிறார்கள்.பகவான் ஶ்ரீகிருஷ்ணாவுக்கு அடுத்து omni potent and omni present உள்ளவரா பில்லா ...டேவிட் பில்லா ஆக நடிச்சு இருக்கார் தல, எல்லாம் வல்லவராக வீழ்த்த முடியா மாவீரனாக எல்லா இடத்திலும் தோன்றுகிறார்(trivia:ajith means unconquered in sanskrit) உச்சபட்சமாக வில்லன் டிமிட்ரியின் ஹெலிகாப்டரிலும் பிரசன்னம் ஆகி ,டிமிட்ரியை(oosaravelli,force fame vidyut jamwal) சம்ஹாரம் செய்கிறார்.

பில்லாவின் மண்டையில அடிச்சாலும்,சுட்டாலும்,கத்தியால் குத்தினாலும் terminator -2 இல் வரும் cyborgT-1000 போல அசராம திரும்ப திரும்ப வந்து நிறைய பேரின் கதையை டெர்மினேட் செய்றார், பேசாம டெர்மினேட்டர்-2 என்றே படத்துக்கு பெயர் வைத்திருக்கலாம் :-))


கேங்க்ஸ்டர் படம் என்பதால் கொலைகளும் மாபியா ஸ்டைலில் இருக்க வேண்டும் என கழுத்தில்/தொண்டையில் குத்துகிறார்கள். கிளைமாக்சில் கோவா அமைச்சரை காதில் குத்துகிறார்கள் என நினைக்கிறேன் படத்தில் சென்சார் கருதி சரியாக காட்டவில்லை.

ஐஸ் கட்டி உடைக்கும் "ice pick" வைத்து காதில் குத்தி கொல்வது மாபியா ஸ்டைல், அதே போல கழுத்தில்/தொண்டையில் பல முறை குத்துவார்கள், மேலும் ஒவ்வொரு கொலைக்கும் ஒரு பொருள் உண்டு,அதன் மூலம் ஒரு மெசேஜ் சொல்வார்கள். மாபியாக்கள் கொலை செய்யும் முறைக்கு "execution" என்பார்கள்.

வாயில் சுட்டுக்கொன்றால் ரகசியத்தினை உளறியதற்கு தண்டனை, காதில் சுட்டாலோ,குத்திக்கொன்றாலோ அவனுக்கு ஏதோ ரகசியம் தெரிந்துவிட்டது என்பதால் கொன்றதாக பொருள்.கண்ணில் சுட்டால் ,ஒருவன் பார்க்க கூடாத ஒன்றை பார்த்த சாட்சி விட்டு வைக்க கூடாது எனக்கொன்றதாக பொருள்.

காவல் துறை கொலை நடந்த முறை வைத்து மாபியாக்கள் செய்த கொலையா இல்லை தனி நபர் செய்த கொலையா என முடிவு செய்து அதன் அடிப்படையில் விசாரணை செய்வார்கள்.

பொண்ணு கொடுத்து பொண்ணு எடுப்பது போல படத்தில் அடிக்கடி சூட் கேஸ் கொடுத்து சூட் கேஸ் வாங்குறாங்க ,அப்படினா கள்ளக்கடத்தல் செய்றாங்களாம், கஸ்டம்ஸ்ல மாட்டிக்கிட்ட சரக்கை சர்வசாதாரணமா போய் எடுத்துக்கிட்டு வராங்க, அதில கூட புதுசா எதுவும் யோசிக்கவில்லை.
கதைப்படி படம் 90களில் நடப்பதாக வருகிறது,ஆனால் நடு நடுவே மொபைல் போனில் எல்லாம் பேசிக்கிறாங்க, அந்த காலக்கட்டத்தில் மாபியாக்களுக்கு தனியா ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்த ராசா யாரோ ?

புலம்பெயர் தமிழர் முகாமில் இரவில் ஒருவனை சர்வசாதாரணமாக சுட்டுத்தள்ளும் போலீஸ் அதிகாரி பில்லாவை மட்டும் போட்டு தள்ளாமல் கடத்தல் நாடகம் எல்லாம் ஆடுகிறார்.

வசனம் இரா.முருகன் மற்றும் ஜாபர் முகம்மது, எல்லா வசனமும் "குத்து வசனங்களா" பார்த்து பார்த்து செதுக்கி இருக்காங்க :-))

அஞ்சு நிமிஷம் முன்னரே போனால் வேலைவெட்டி இல்லாமல் அலையுறான் சொல்லிடுவாங்க, லேட்டா போனால் பொறுப்பில்லை சொல்லிடுவாங்க,சரியான டைமுக்கு போனால் தான் நம்பிக்கை வரும்னு ஒரு நிர்வாகவியல் தத்துவ வசனம் எல்லாம் இருக்கு,இதை எடுத்துக்கொடுத்தது அனேகமா நிர்வாகவியல்பற்றி புத்தகம் போட்ட அந்த பிரபலப்பதிவராக தான் இருக்கும்னு நினைக்கிறேன்:-))

சந்தை மதிப்புள்ள நாயகன் அஜித்தை வீண் அடித்துவிட்டார்கள் என்றே சொல்லலாம், இதே கதையை கொஞ்சம் ,பட்டி ,டிங்கரிங் பார்த்து எடுத்திருந்தால் சூப்பர் ஹிட் ஆகும் வாய்ப்புள்ளது ,தவறவிட்டு விட்டார்கள், அல்லது கார்ப்பரேட் பணம் ,நமக்கு என்ன எதையோ எடுத்து சுருட்டிக்கொடுத்துவிட்டு லாபத்துடன் ஒதுங்கிக்கொள்ளலாம் என முதல் பிரதி எடுத்த wide angle creations நினைத்து இருக்கலாம்.

இதற்கு முன்னர் ஆட்லேப்ஸ், மோசர் பேயர், பிரமிட் சாய்மீரா, அய்ங்கரன் போன்ற கார்ப்பரேட் படத்தயாரிப்பாளர்களுக்கு இப்படி படம் எடுத்து தான் சங்கு ஊதினார்கள், இது போல படம் எடுத்துக்கொண்டிருந்தால் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கார்ப்பரேட்கள் படம் எடுக்க முன் வரமாட்டார்கள் என்பதை executive producer ஆக செயல்படும் தமிழ் தயாரிப்பு படாதிபதிகள் உணர வேண்டும்.

hollywood பாணியில் prequel ஆக வந்த முதல் தமிழ்/இந்தியப்படம் என்ற அளவில் தமிழ் சினிமா வரலாற்றில் பில்லா-2விற்கு ஒரு பெயர் கிடைக்கும்,மற்றப்படி ஹாலிவுட்டிற்கும் பில்லா-2 விற்கும் சுமார் 8,969 மைல் தூரம் (சென்னையில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் அவ்ளோ தூரத்தில் இருக்கு)

இது திரைப்படத்தின் மீதான விமர்சனம் அல்ல , படத்தின் மீதான என்னுடைய கண்ணோட்டமே, நீங்கள் விமர்சனம் என நினைத்தால் அதற்கு அடியேன் பொறுப்பல்ல :-))

என்ன கொடுமை சார் இது !
*****
பூட்டாத பூட்டுக்கள்.தலைவரே டாஸ்மாக்கிற்கு பூட்டுப்போடும் போராட்டம்னு அறிவிச்சாலும் அறிவிச்சிங்க ராத்திரி பத்து மணியானால் போதும் டாஸ்மாக் மதுபானக்கடையில இருந்து போன் போட்டு "கடைய பூட்டுற டைம் ஆச்சு சீக்கிரம் பூட்டு எடுத்துக்கிட்டு வாங்கன்னு" சொல்லிக்கலாய்க்கிறாங்க ...என்னால நிம்மதியா தூங்க முடியலை ...தூங்கி ஒரு வாரம் ஆச்சு அவ்வ்!

என்ன கொடுமை சார் இது!
*****

A Train to Hell.புது தில்லியில் இருந்து கடந்த சனியன்று சென்னைக்கு புறப்பட்ட தமிழ்நாடு விரைவு தொடர் வண்டி இன்று (30-07-12)அதிகாலை நெல்லூர் அருகே வரும் போது பெரும் தீவிபத்தில் சிக்கியுள்ளது, தீவிபத்திற்கு காரணம் மின் கசிவு என்கிறார்கள், எஸ்-11 தூங்கும் வசதியுள்ள பெட்டியில் பயணித்த 72 பயணிகளில் சுமார் 50 பேர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. உயிரிழந்தவர்கள் பெரும்பாலோனோர் தமிழகத்தினை சேர்ந்தவர்களாக இருப்பதற்கே வாய்ப்புள்ளது என்பது மிகவும் வருந்த தக்கது.


வழக்கம் போல மத்திய ரயில்வே அமைச்சர் முகுல் ராய் தலா 5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். இழப்பீடு இழந்த உயிர்களை மீட்டு தருமா?

தமிழகத்தில் திருச்சி ரயில் விபத்திற்காக பதவியை துறந்த அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் அமரர்."லால் பகதூர் சாஸ்திரியின்" ஆன்மா மன்னிக்குமா இவரை?

அவரது கட்சி தலைவி மம்தாவுக்கோ அரசியல் சண்டைப்போடவே நேரம் போதவில்லை, கட்சியின் அமைச்சர்கள் சரியாக வேலை செய்கிறார்களா என எங்கே கவனிக்க போகிறார்.

பெரும்பாலான இந்திய ரயில்ப்பெட்டிகள் பராமரிப்பு இன்றி குப்பை வண்டிப்போலவே இருக்கிறது. தண்டவாளங்களும், சிறியதும் பெரியதுமான பழைய பாலங்களும் பிரிட்டிஷ் காலத்தில் அமைக்கப்பட்டவையே,அவை அனைத்தும் வலுவிழுந்து இப்பவோ அப்பவோ இடிய,உடைய தயாராக இருக்கின்றன.

இதனாலேயே இந்தியாவில் அடிக்கடி தொடர் வண்டிகள் தடம் புரள்வது, தண்டவாளத்தில் வெடிப்பு என்றெல்லாம் நடக்கிறது.பலவீனமான சிறிய பாலங்களில் இரயில்கள் மெதுவாக இயக்கபடுவதாலே பயண நேரம் அதிகம் ஆகிறது. உலகிலேயே சராசரி வேகம் குறைவாக உள்ள ரயில்வே அமைப்பு இந்தியாவாகும்.


இந்திய ரயில்வே துறை தான் உலகிலேயே அதிக பணியாளர்களை கொண்ட ,உலகின் நான்காவது பெரிய இருப்பு பாதை ஸ்தாபனம் ஆகும், மொத்தம் 64,015 கி.மீ நீளம் கொண்ட இருப்பு பாதைகளும், ஒரு நாளுக்கு 10 மில்லியன் பயணிகள் பயணிக்கும் வசதியும் கொண்டது.மேலும் இங்கிலாந்தில் முதல் ரயில் இயக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே இந்தியாவில் மும்பை -தானே இடையே இருப்பு பாதை அமைக்கப்பட்டு 1853 இல் பயணிகள் புகைவண்டி பயணம் துவங்கப்பட்டுவிட்டது.

அதற்கும் முன்னரே 1837 இல் சென்னையில் ரெட் ஹில்லுக்கும் பரங்கிமலைக்கும் இடையே கற்களை ஏற்றி செல்லும் சரக்கு ரயில் இருப்புப்பாதை அமைக்கப்பட்டுவிட்டது.1856 இல் சென்னையில் முதல் பயணிகள் புகைவண்டி ராயபுரத்திற்கும் வாலாஜாவிற்கும் இடையே இயக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு வரலாற்று புகழ் வாய்ந்த இந்திய ரயில்வே துறை வெள்ளைக்காரர்கள் விட்டு சென்றப்போது இருந்தது போலவே இன்றும் செயல்ப்பட்டு வருவது நம் இந்திய அரசியல்வாதிகளின் செயல்படும் லட்சணத்திற்கு சான்றாகும்.நமக்கு பின்னால் ரயில் போக்குவரத்து ஆரம்பித்த சீனா எல்லாம் எவ்வளவோ முன்னேறி எங்கோ போய்விட்டது. நாம் தொழில்நுட்பத்திலும், பாதுகாப்பு விஷயத்திலும் இன்னும் அசட்டையாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ,உயிரிழப்புகள் சகஜமாகிவிட்டது.தினசரி இந்தியாவின் எங்கோ ஒரு பகுதியில் ரயில் விபத்து என செய்தி வருவது இயல்பான ஒன்றாகிவிட்டது.

இது போன்ற விபத்துக்களுக்கு காரணத்தினை மட்டும் அதிகாரிகள் வக்கணையாக கண்டுப்பிடித்து சொல்வார்கள் ஆனால் மீண்டும் நிகழாமல் தடுக்க எதுவும் செய்ய மாட்டார்கள், கேட்டால் டிவிஷன் ,மண்டலம், மத்தியம் எனப்போய் அமைச்சரிடம் அனுமதி வாங்கி வரவேண்டும் ,அதற்குள் ஆட்சி மாறி புது அமைச்சர் வந்திருப்பார் ,அவர் மீண்டும் ஆரம்பத்தில இருந்து எல்லாம் பார்க்க ஆரம்பிப்பார், இப்படியே ஒரு வேலையும் நடக்காமல் துருப்பிடித்து இற்றுப்போன ரயில்பெட்டிகளை வைத்து ஓட்டிக்கொண்டு இருப்பார்கள். அதில் டிக்கெட் வாங்க முண்டியடித்துக்கொண்டு மக்களும் நிற்பார்கள்.உயிரைப்பற்றி மக்களுக்கும் கவலையில்லை ஆள்வோருக்கும் கவலை இல்லை.நம் தேசமே சித்தம் போக்கு சிவன் போக்கு என அதுப்பாட்டுக்கு தானாக இயங்கிக்கொண்டு இருக்கு.

வெளியில் போய் மீண்டும் உயிரோடு வீட்டுக்கு திரும்புவது என்பதற்கு எவ்வகை உத்தரவாதமும் இல்லாத மரண தேசமாக விளங்குகிறது நம் நாடு. அவரவர் உயிருக்கு அவர்களே பொறுப்பு, உயிரோடு பிழைத்துக்கிடப்பது அதிஷ்டம் அல்லது பூர்வ ஜென்ம புண்ணியம் என்று தான் சொல்லவேண்டும்.

இரயில் பயணங்களில் விபத்துகள் முடிவதில்லை!

என்ன கொடுமை சார் இது!
---------

பின் குறிப்பு:

தகவல்,படங்கள் உதவி, விக்கி, கூகிள், யூட்யூப்,இந்து நாளேடு, ஆசியன் கரஸ்பாண்டன்ட் இணைய தளங்கள் நன்றி!

*****

Thursday, July 26, 2012

DAYLIGHT ROBBERY-கல்வி வியாபாரம்.

(மரத்தடிப்பள்ளி)

கல்வி வியாபாரம்:

தற்போது பொறியியல் படிப்பிற்கான இடங்களை நிரப்புவதற்கான ஒற்றை சாளர முறை கலந்தாய்வு அண்ணாப்பல்கலை,சென்னையில் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும்.இதில் அரசுப்பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும், அண்ணாப்பல்கலையுடன் இணைப்பு பெற்ற சுமார் 500க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 50% சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைப்பெறும்.

இதனையொட்டி தனியார்ப்பொறியல் கல்லூரிகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் ஒதுக்கப்ப்படும் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு பொறியியல்ப்படிப்புகளுக்கான புதிய கல்விக்கட்டணத்தினை ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் உயர்த்தி அண்ணாப்பல்கலை அறிவித்துள்ளது,
கட்டண உயர்வு விவரம்

கவுன்சிலிங் இடங்கள்:

பழைய கட்டணம்: ரூ.32,500
புதிய கட்டணம்: ரூ.40,000
அதிகரித்த கட்டணம்: ரூ.7,500

நிர்வாக ஒதுக்கீடு இடங்கள்:

பழைய கட்டணம்: ரூ.62,500
புதிய கட்டணம்: ரூ.70,000
உயர்வு: ரூ.7,500

இவற்றில், தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில், கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவருக்கு, ஏற்கனவே 40 ஆயிரம் ரூபாயாக இருந்த கட்டணம், 45 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் அங்கீகாரம் பெறாத கல்லூரிகளில் சேரும் மாணவருக்கு, 40 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டண அறிவிப்பில் கவனிக்க வேண்டியது என்னவெனில் ,அண்ணாப்பல்கலை அறிவித்துள்ள இக்கட்டணம் ஓர் ஆண்டு முழுவதற்குமான கட்டணம், ஆனால் கல்லூரிகளோ இக்கட்டணத்தினை ஒரு செமஸ்டருக்கு என வசூலித்து வருகின்றதாக தெரிய வருகிறது. இது இப்போது மட்டுமல்ல ,முன்னர் இருந்தே ஆண்டுக்கட்டணத்தினை செமஸ்டர் கட்டணமாக வசூலித்து வந்துள்ளார்கள்.ஆனால் அப்போது சில கல்லூரிகளே அப்படி செய்து வந்துள்ளன. , தற்சமயம் அனைத்துக்கல்லூரிகளும் இந்நடவடிக்கையில் ஈடுபடுகின்றனவாம்.

தேசியத்தரக்கட்டுப்பாட்டு சான்று பெற்றக்கல்லூரிகளில் 45,000,மற்றவை 40,000 என ஓர் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தினை ஒரு செமஸ்டருக்கு வசுலிப்பதன் மூலம் ஆண்டுக்கு இரு மடங்கு கட்டணமாக முறையே 90,000, மற்றும் 80,000 ஆயிரம் என மாணவர்களிடம் வசூலித்து கொள்ளையடிக்கின்றன தனியார் பொறியியல் கல்லூரிகள். இது மட்டும் அல்லாமல் விடுதி, பேருந்து , புத்தகம்,நோட், லேப் என பல கட்டணங்கள் உண்டு.

பல்கலை கழக வட்டாரத்தில் தெரிந்தவர்கள் மூலம் விசாரித்ததில் இது ஆண்டுக்கட்டணம் என்றே சொல்கிறார்கள், ஆனால் மாணவர்கள் வட்டத்தில் செமஸ்டருக்கு என்று சொல்கிறார்கள்.அரசு அறிவித்த கட்டணம் மட்டும் வசூலிப்பதாக சொல்லிக்கொள்ளும் கல்லூரிகளும் இப்படியாக இரு மடங்கு கட்டணம் வசூலிப்பது , மாணவர்களின் பெற்றோருக்கும் தெரியவில்லையா, இல்லை அரசுக்கும் தெரியவில்லையா , இது பற்றி வெளியில் அதிகம் தெரியாமலே பெரும் கல்வி கட்டணக்கொள்ளை நடப்பதாக தெரிகிறது.

இது குறித்து முறையான அரசு அறிவிப்பின் நகல் கிடைக்குமா என தேடிக்கொண்டிருக்கிறேன், கிடைத்தால் சரியான விளக்கம் கிடைக்கும்.

இது நான் கேள்விப்பட்டதை வைத்து சொல்வது , எந்தளவு சரியாக இருக்கும் என தெரியாததால் கொஞ்ச நாளாக தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தேன். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் ஆண்டுக்கட்டணம் என உறுதியாக சொல்லிவிட்டார்கள், கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டண நிலையை உறுதி சொல்ல முடியாத நிலை காரணம் ,பல கல்லூரிகளில் பலப்பெயரில் வசூலிக்கிறார்கள், பலரையும் கேட்டுவிட்டேன் அனைவரும் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் தான் சொல்கிறார்கள்.சென்னையில் ஒரு பெயர்ப்பெற்ற கல்லூரியில் ஆண்டுக்கு 1,70,000 வாங்குகிறார்களாம். இதெல்லாம் எந்தக்கணக்கில் என்றே புரியவில்லை :-))

வங்கியில் கல்விக்கடன்:

பெரும்பாலும் வங்கியில் கல்விக்கடன் கொடுக்கவில்லை மாணவர்களை அலையவைக்கிறார்கள் ,மாணவர்கள் பாவம் என்பது போலவே செய்திகள் அதிகம் வருகின்றது. ஆனால் வங்கிக்கல்விக்கடனின் மறுபக்கத்தினை பார்த்தால் பயங்கரமாக இருக்கிறது.

இது வரையில் கல்விக்கடன் பெற்றவர்களில் 50% சதவீதம் பேர் கடனை திருப்பி செலுத்தவே இல்லையாம். மேலும் கல்விக்கடன் கொடுக்கும் வங்கிகள் எல்லாம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளே , தனியார் வங்கிகள் கல்விக்கடன் கொடுப்பதில்லை. கடன் வசூலாகவில்லை எனில் அதனை வாராக்கடன் என அறிவித்து , செயல்ப்படாத சொத்து (Non performing assets)என தேசிய வங்கிகள் அறிவித்து விடும்.புள்ளி விவரத்தில் பார்த்தால் அவை வங்கியின் சொத்து மதிப்பாக தெரியும் ஆனால் வங்கியின் உண்மையான சொத்து மதிப்பு குறைவாக இருக்கும் என்பதால் ஆண்டு தணிக்கை அறிக்கையில் வங்கியின் நிகர லாபம் குறைவாகவே இருக்கும்.

வங்கி நட்டம் அடையும் எனில் அதனை சரிக்கட்ட அரசு தான் நிதி ஒதுக்க வேண்டும், அது மக்கள் பணம் தானே, எனவே வங்கியில் கடன் வாங்கிப்படித்துவிட்டு கட்டாமல் போகும் மாணவர்கள் எல்லாம் மக்கள் பணத்தில் படித்தவர்களே. அவர்கள் மக்கள் பணத்தினை எடுத்து தனியார் கல்வி வியாபாரிகளுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறார்கள்.

(சென்னை சித்தாலப்பாக்கத்தில் உள்ள அரசுப்பள்ளி)

வங்கியில் கல்விக்கடன் கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள் எல்லாம் உண்மையான ஏழை மாணவர்களே, ஓரளவு நடுத்தர வர்க்க மாணவர்கள் யாரையாவது சிபாரிசு பிடித்து ,வங்கி நிர்வாகியை சரிக்கட்டி கடன் வாங்கிவிடுகிறார்கள்,அவர்களே கடைசியில் கடனைக்கட்டாமல் போவது.

மேலும் பொருளாதர் ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் கீழ் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டிக்கு அரசு மாநியம் அளிக்கிறது.ஆனால் இம்மாநியமும் நடுத்தரவர்க்க மாணவர்களுக்கே போய் சேர்கிறது.ஆனால் அரசின் பார்வையில் எல்லாம் ஏழை மாணவர்களுக்கு போய் சேர்வதாக கணக்கில் வந்து விடுகிறது. நடுத்தர வர்க்க மாணவர்கள் ஏழை மாணவர்களின் மாநியத்தினை அனுபவிக்க வங்கி கடன் கொடுக்க வேண்டுமா?

வங்கிகள் கல்விக்கடன் கொடுப்பதிலும் பாரபட்சமாக நடந்துக்கொள்வதால் உண்மையான ஏழை மாணவனின் கல்விக்கனவு நிறைவேறாமல் இன்றும் கஷ்டப்படுகிறான், ஆனால் ஊடகங்களோ வங்கிகளை மட்டும் குற்றம் சாட்டிவிட்டு , மாநியத்தினை முறைகேடாக அனுபவிக்கும் மாணவர்களை கண்டுக்கொள்வதில்லை.

கல்விக்கட்டணம் எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லை , அதனை வங்கிக்கடனாக கொடுக்க வேண்டும், திருப்பிக்கட்டுவதும் கட்டாததும் எங்கள் இஷ்டம் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள் போலும். வங்கிக்கடன் கொடுக்கவில்லை என்று குறை சொல்லும் முன்னர் , கடன் வாங்கிப்படிக்க வைக்கும் அளவுக்கு கல்விக்கட்டணம் அதிகமாக இருப்பதை ஏன் என கேள்விக்கேட்க ஒருவரும் முன்வருவதில்லை.

வங்கியின் பணமோ, மக்களின் பணமோ ,எப்படியாவது வசூலித்து கல்வி வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்பதையே இன்றைய கல்வி வியாபாரிகள் கொள்கையாக வைத்துள்ளார்கள்.

நம் மக்களும் சரியான வேலைக்கிடைக்காவிட்டால் இக்கடனை எப்படி அடைப்பது என்று யோசிப்பதில்லை, வேலை கிடைக்கவில்லை என்றால் கடனை கட்ட தேவையில்லை, யார் வந்து கேட்கப்போகிறார்கள் என்ற எண்ணம் மேலோங்கிவிட்டதாக தெரிகிறது.

இன்றைய நிலையில் ஒரு பொறியல் கல்லூரி மாணவனுக்கு வேலை உத்தரவாதமோ இல்லையோ நான்கு லட்சத்துக்கு குறையாமல் கடன்காரன் ஆகிடுவது நிச்சயம்.இப்படியான கல்வி சூழல் நிலவும் ஒரு நாடு வளமான,வலிமையான நாடாக எப்படி மாறும்.

வசதியில்லாத எத்தனையோ மாணவர்கள் வங்கிக்கடன் வாங்கும் சூத்திரம் தெரியாமல் கலைக்கல்லூரியில் தான் படித்துக்கொண்டிருக்கிறார்கள், வசதிப்படைத்த ,வங்கியில் கடன் வாங்கும் சூத்திரம் தெரிந்தவர்களே பொறியியலில் சேர முடிகிறது. அந்த சூத்திரம் என்பது வேறொன்றும் இல்லை எல்லா வங்கியிலும் கமிஷன் வாங்கிக்கொண்டு கடன் பெற்று தர ஏஜெண்டுகள் உள்ளார்கள். அவர்களுக்கு உரிய கட்டிங்க் கொடுத்து விட்டால் , கேள்வியே இல்லாமல் கடன் கொடுக்கப்பட்டுவிடும்.கமிஷன் கொடுக்க தேவைப்படும் குறைந்த பட்ச பணமும் கையில் இல்லாத ஏழைமாணவர்களுக்கு வங்கிக்கடன் எட்டாக்கனியே.

இதன் மூலம் கல்வி வியாபாரிகளுக்கு வியாபாரமும் நன்றாக நடக்கிறது. ஊடகங்களும் கடன் கொடுக்காத வங்கியினை மட்டுமே வெளிச்சம் போட்டுக்காட்டும், ஆனால் கடன் வாங்கியவர்கள், மற்றும் கட்டாதவர்கள், போலியாக வறுமைக்கோட்டுக்கு கீழ் என சொல்லி வட்டியில் மானியம் பெற்று பலன் அடைந்த வசதியானவர்களையோ அல்லது கட்டணக்கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவனங்களையோ கண்டுக்கொள்வதே இல்லை.

நம் நாட்டில் கடனோ ,கல்வியோ ஏழைகளுக்கு என்றும் எட்டாக்கனி தான் ,ஏழைகளின் பெயரால் யாருக்கோ பலன் போய் சேர்ந்துவிடும்.

----------
பின் குறிப்பு:

படம் உதவி, கூகிள், இந்து நாளேடு,நன்றி!

*****

Sunday, July 22, 2012

The DON- 2:A guide to understand gangster films

அல் பாசினோ-காட்பாதர்

இப்பதிவில் இத்தாலி மாபியாக்களின் அமைப்பினையும் ,அவர்களின் வழக்கங்களையும் காணலாம், சில நிழல் உலக தாதாக்களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட சில படங்களையும் அலசலாம்.

Sicilian Mafia Commission -Cupola

இத்தாலியின் தெற்குப்பகுதி, சிசிலி தீவின் பாலர்மோவில் தான் மாபியாக்களின் ராஜாங்கம் முதலில் ஆரம்பித்தது ,அவர்கள் தான் மாபியா இனக்குழுவினர், பின்னர் மற்றப்ப்குதியிலும் பல வன்முறை,கப்பம் வசூலிக்கும் குழுவினர் உருவானார்கள், அவர்களையும் மாபியாக்கள் என்றே பத்திரிக்கைகள் குறிப்பிட்டன.

சிசிலியின் மேற்கில் பாலெர்மோ பகுதியை சேர்ந்த மபியுசோ இனக்குழுவினரை வெளியுலகம் மாபியா என்றாலும் அவர்கள் தங்களை "la cosa nostra" என்றே அழைத்துக்கொள்வார்கள்.

இப்படி நூறுக்கும் மேற்பட்ட குழுக்கள் , சண்டைகள் என போய் முடிவில் 5 முதல் 10 குற்றப்பரம்பரை குடும்பம் மட்டுமே தலை தூக்கியது, அவர்களுக்குள்ளும் சண்டை வரவே , இதெல்லாம் தவிர்க்க என்ன செய்யலாம் என யோசித்து உருவாக்கியதனை கமிஷன் என்றார்கள்,இலத்தினில் குபோலா என்றார்கள், இது மிகவும் பிற்காலத்தில் உருவான அமைப்பு, இப்போது குழு வடிவமைப்பில் உச்ச நிலையை அமைப்பு என்பதனை நினைவில் வைத்துக்கொண்டால் போதும்.
Family -Cosca- borgata

மபியுசோ குழுவில் ஒவ்வொரு குற்ற குழுவும் ஒரு குடும்பம் எனப்பட்டது ,இதனை cosca என்றனர் ,இச்சொல் ஆர்ட்டிசோக்/தர்ஸ்ட்டில் என்ற தாவரத்தின் இலை சுருண்டு முள் போல காட்சியளிப்பதில் இருந்து உருவானது, அதாவது முள் போல கூர்மையான, ரகசியமானவர்கள் எனப்பொருள்ப்படும். borgata என்றும் சொல்வார்கள் அதன் பொருள் கிராமம் ஆகும்,அதாவது ஒரே கிராம மக்கள் எனப்படும். மாபியா குடும்பம் என ஆங்கில வழக்கில் உருவானது.

குடும்பம் என்று சொன்னாலும் அனைவரும் திருமண வழி உறவில் இணைந்தவர்கள் அல்ல , நெருக்கமான ,நம்பிக்கையான இத்தாலியர்களின் குழு எனலாம். இதனை சகோதரத்துவம்(brethren,brotherhood) என்றும் சொல்வார்கள்.

ஒரு மபியூசோ குடும்பம் லா கோசா நோஸ்ட்ரா எனப்படும் , அவர்களே இன்னொரு மபியோசோ வை சந்திக்கும் போது , பெயர் எல்லாம் சொல்லாமல் "la cosa nostra" என சொன்னால் போதும் அப்படி எனில் "our thing " தமிழில் சொன்னால் நம்ம இனம் ,என்பது போல. அதற்கு மற்ற மபியோசோ குடும்பம்
la stessa cosa என சொல்ல வேண்டும் ,அதற்கு பொருள் "the same thing" அதாவது நானும் அதே இனம் தான்னு சொல்லிப்பாங்க.

சினிமா ஒப்பீடு:

பில்லா-2 வில் இளவரசு "திருச்சிற்றம்பலம்" என சொன்னதும் "சிவ சிதம்பரம்னு" பதில் சொல்வதை குறிப்பிடலாம். அனேகமாக இந்த இத்தாலிய வழக்கத்தினை மாற்றிப்பயன்ப்படுத்தி இருக்க வேண்டும். ஏற்கனவே முஸ்லீம்கள் வழக்கான சலாம் அலைக்கும், வாலேக்கும் சலாம் எல்லாம் நன்கு தெரிந்து ஒன்றாகிவிட்டதால் , புதுசா ஒரு முறையை பிடித்து இருக்கலாம்,ஆனாலும் சைவ சிந்தாந்தவாதிகளை மாபியா அளவுக்கு காட்டியது எடுபடவில்லை என்றே சொல்லலாம்.

Boss (Capofamiglia) ·

ஒவ்வொரு லா கோசா நோஸ்ட்ராவுக்கும் ஒரு தலைவர் இருப்பார், அவரே வயதில் மூத்தவர், அவரை குடும்ப தலைவர் என்ற பொருளில் Capofamiglia , Capo = கேப்டன், தலைவர் , famiglia= குடும்பம். ஆங்கில வழக்கில் பாஸ் என சொல்வது வழக்கம். டான் ,மாபியா என்பதெல்லாம் அவர்களுக்கே தெரியாது.
ரியல் டான் "லுசியானோ லெஜியோ"

ஒரு பாஸ் ஆரம்பத்தில் சாதாரண வீரன் ஆக குழுவில் சேர்ந்துபடிப்படியாக "பாஸ்' நிலைக்கு உயரலாம், இதற்கு அனைத்து கேப்டன்களும் ஆதரவு அளிக்க வேண்டும், மற்ற உறுப்பினர்களும் ஆளுக்கு ஒரு ஓட்டுப்போடுவார்கள்,பெரும்பாலும் கேப்டன்களில் மூத்தவர் துணைத்தலைவராக இருப்பார் ,அவரே "பாஸ்" ஆக பதவி உயர்வு பெருவார், அப்போது மற்ற கேப்டன்களில் யாரேனும் போட்டிக்கு வந்தால் தேர்தல் நடக்கும்.

பெரும்பாலும் "பாஸ்"உயிரிரோடு இருக்கும் போதே ,புதிய "பாஸ்" யார் என சொல்லிவிட்டு ஓய்வு பெறுவது வழக்கம், சமயங்களில் இன்னார் தான் தலைவர்னு சொன்னால் குழப்பம் வரலாம்னு தள்ளிப்போட்டுக்கொண்டு போய் ,பாஸ் இறந்த பின் தேர்தலோ, சண்டையோ நடக்கவும் செய்யும்.

எல்லாம் நம்ம கழக அரசியல் போல தான், மஞ்சள் துண்டு தலைவருக்கு வந்த குழப்பம் போல வரும், சரி இருக்கும் வரைக்கும் நாமே தலைவரா இருந்துட்டு போவோம்,அப்புறம் திறமை இருக்கவன் அடிச்சுப்புடிச்சு தலைவனாக ஆகிக்கட்டும் என்று இருப்பவர்களும் உண்டு.

1967 இல் ஒரு முன்னால் மாபியாவான ஜோசப் வலச்சி என்பவர் அப்ரூவராக மாறி அமெரிக்க கோர்ட்டில் சொன்னப்போது தான் "லா கோசா நோஸ்ட்ரா" என்றப்பெயரில் தான் இயங்கிவந்தார்கள் என்பதே வெளியுலகிற்கு தெரியவந்தது, அது வரையில் டான், மாபியா என சொல்லி வந்தது எல்லாம் பத்திரிக்கையாளர்களின் கைவண்ணம்.

டான், மாபியானு எல்லாம் பத்திரிக்கையில வருவது உங்களுக்கு தெரியுமானு கேட்டப்போது எங்களுக்கு பெரும்பாலும் எழுதப்படிக்கவே தெரியாது ,நாங்க எங்க பத்திரிக்கைலாம் படிக்கன்னு திருப்பி கேட்டார். உண்மையில மாபியாக்கள் பெரும்பாலோர் ஆரம்பபள்ளிக்கு மேல படித்ததே இல்லை, பெரும்பாலான வெற்றிகரமான டான்கள் கை நாட்டே.

இத்தாலியில் ஆரம்பக்காலத்தில் இப்படி மிரட்டி பணம் வாங்குபவர்களை "பிளாக் ஹேண்ட்" என்பார்கள். காரணம் ரொம்ப எழுதப்படிக்க தெரியாது என்பதால் மிரட்டி பணம் கேட்டு கடிதம் அனுப்பும் போது அதிகம் எழுத மாட்டார்கள், ஒரு சவப்பெட்டி (அ) கத்தி(அ) தூக்கு கயிறு படம் போட்டு ,கீழே ஒரு கையை கறுப்பு வண்ணத்தில் வரைந்து , 1000 டாலர் கொடு என்று மட்டும் எழுதி அனுப்புவார்கள்.

இந்த லெட்டர் வாங்கினவன் பாடு அதோ கதி தான், பயந்து போய் 1000 டாலர் கொடுத்தால் அடுத்த மாசம் 2000 டாலர் கேட்டு கடிதம் வரும். :-))

சினிமா ஒப்பீடு:

ராணுவ வீரன் படத்தில சிரஞ்சீவி"ஒற்றைக்கண்ணன்" என சொல்லிக்கொண்டு இப்படி கடிதம் போட்டுக்கிட்டு இருப்பார், சூப்பர் ஸ்டார் தான் மக்கள் கிட்டே எதிர்த்து போராடணும் சொல்வார். இப்போவும் இந்தியாவில் நக்சல் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இப்படியான கடித மிரட்டல்கள் உண்டு.

Underboss (Sotto capo) ·

பாஸ் நிலைக்கு அடுத்து உள்ளது Sotto capo அப்படி எனில் Sotto =சின்ன,capo= தலைவன், சுருக்கமா சொன்னா மம்மூட்டி என்ற "தளபதி"னு சொல்வாரே சூப்பர் ஸ்டாரை அந்த பதவி. பாஸ் ஓய்வு அல்லது மரணத்திற்கு பின் இவர் பாஸ் ஆவார், அல்லது சிறையில் இருக்கும் காலத்தில் பிரதிநிதியாக செயல்படுவார்.பெரும்பாலும் மூத்த கேப்போ ரெஜிம் ஒருவர் துணைத்தலைவராகவோ அல்லது "பாஸ்" இன் மகனோ இருப்பார்கள். பாஸ் இன் மகன் என்பதாலேயே அவரால் அடுத்து தலைவராக எல்லாம் ஆக முடியாது,அனைத்து கேப்போ ரெஜிம்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Consigliere (Advisor) ·

Consigliere என்றால் ஆலோசகர் என்று பொருள். இதில் இருந்து தான் கவுன்செலர், கான்சுல்லேட் எல்லாம் உருவாச்சு. தலைவருக்கு ஆலோசனை சொல்லும் அறிவாளிகள், மந்திரி போன்றவர்கள், இவர்களை தான் குட்பெல்லாஸ் என சொல்வது. சண்டைக்கு துப்பாக்கி, கத்தி தூக்கிட்டுலாம் பெரும்பாலும் போகமாட்டார்கள், அரசியல்வாதி, போலீஸ் என அனைவருடனும் பேரம் பேசி சரிக்கட்டுவது, வியாபாரத்தொடர்புகளை செய்வது, குழுவில் சண்டை வந்தால் சமரசம் செய்வது என சாத்வீகமான வேலை செய்வார்கள்.நிதி நிர்வாகத்தினை செய்வது இவர்களே.

சினிமா ஒப்பீடு:

இந்த ஆலோசகர் பாத்திரங்களும் எல்லாப்படத்திலும் பார்த்திருக்கலாம், நாயகனில் வரும் டெல்லிக்கணேஷின்"அய்யர்" பாத்திரம், தளபதியில் வரும் மறைந்த திரு. நாகேஷின் "பந்துலு" பாத்திரம், ரன்னில் வரும் மறைந்த திரு.விஜயன் பாத்திரம் போன்றவர்கள்.

உண்மையில் தலைவருக்கு அடுத்து துணைத்தலைவர் இருந்தாலும் இந்த ஆலோசகர் அவரை விட சக்தி வாய்ந்தவர். லா கோசா நோஸ்ட்ராவில் அனைவரும் இத்தாலியை பூர்வீகமாக , அதுவும் சிசிலி , பாலெர்மோ எனப்பார்த்து தான் சேர்ப்பார்கள். குறைந்த பட்சம் , தாய் தந்தையரில் யாரேனும் ஒருவர் இத்தாலியராக இருக்க வேண்டும்.

ஆலோசகராக வர மட்டும் அப்படி இன ரீதியாக பார்க்க மாட்டார்கள், டானுக்கு நம்பிக்கையானவர்களா என்று மட்டும் பார்ப்பார்கள். பெரும்பாலும் டானின் பால்யகால நண்பர்களே ,ஆலோசகர்களாக வருவார்கள்.ஆனால் அவர்கள் தலைவருக்கு பின் தலைவராக பதவிக்கு வரவும் முடியாது, திடீர் என தலைவர் செத்துவிட்டால் புது தலைவரை தேர்ந்தெடுக்க உதவலாம், கடைசிவரைக்கும் ஆலோசகராக மட்டுமே இருக்கலாம்.

ஒரு லா கோசா நோஸ்ட்ராவில் இத்தாலியர் அல்லாதவர் உறுப்பினராக முடியாது , மேலும் சந்தர்ப்பவசமாக தலைவர் ஆனாலும் மற்ற லா கோசா ஏற்றுக்கொள்ளாது ,கொலை செய்ய பொது அறிவிப்பு செய்துவிடுவார்கள்.

ஆனால் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மெல்ல கட்டுப்பாடுகள் தளர்ந்தது, அதுவும் அமெரிக்க மாபியாவில் மட்டும்.அமெரிக்காவிலும் கடைசி வரைக்கும் தூய லா கோசா நோஸ்ட்ராவினை தொடர விரும்பியவர்களை "moushtache pete" என்றார்கள் , பெரும்பாலான பழைய மாபியாக்கள் பெரிய மீசை வைத்திருப்பார்கள் என்பதால் அப்படி அழைக்கப்பட்டார்கள்.புதிய தலைமுறை மாபியாக்களை இளம் துருக்கியர்(young turks) என்பார்கள். ஆனால் புதிய தலைமுறை கொலைஞர்களுக்கு அவர்களது கட்டுப்பாடுகள் பிடிக்காததால் அவர்களை கொன்றுவிட்டு ,லா கோசா சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்தார்கள்.அமெரிக்க மாபியா குழுவினரை விவரிக்கும் போது விரிவாக பார்க்கலாம்.

Capodecina (Caporegime) ·

Caporegime எனப்படுபவர்கள் தான் உண்மையான தளபதிகள், தலைவர், துணைத்தலைவர், ஆலோசகர் எல்லாம் ஒருவர் தான் இருப்பார்கள் Caporegime கள் மட்டும் குழுவின் பலத்துக்கு ஏற்ப பலர் இருப்பார்கள்.சுருக்கமா சொன்னால் இவர்கள் படைப்பிரிவு தலைவர்கள், ஒரு Caporegime கீழ் பொதுவாக 10 படை வீரர்கள் இருப்பார்கள்,அதற்கு மேலும் தேவைக்கு ஏற்ப ஆட்களை வைத்துக்கொள்வதுண்டு.களத்தில் இறங்கி வேலை செய்பவர்கள் இவர்கள் தான், இவர்கள் கூட முக்கியமான வேலையை தான் செய்வார்கள்.

ஒரு டானின் கீழ் இருக்கும் ஒவ்வொரு கேப்போ ரெஜ்ஜிம்களும் ஒரு குட்டி டான் ,தனியே அவர் வசதிக்கு ஏற்ப ஆட்கள்,ஆயுதங்கள் வைத்துக்கொண்டு தொழில் செய்வார், ஒரே டானின் கீழ் இருக்கும் கேப்போ ரெஜிம்களுக்குள்ளும் சண்டை ,கொலை எல்லாம் நடக்கும் ,அப்போது டான் கூப்பிட்டு சமாதானம் செய்து வைப்பார், டான் சொல்லியும் கேட்கவில்லை எனில் மரண தண்டனை தான்.

அடுத்த டான் யார் என நிர்ணயிக்கும் சண்டையில் சில ,பல கேப்போ ரெஜிம்களை போட்டு தள்ளி ஒருவர் டான் ஆக மாறுவதும் நடக்கும். சில கேப்போ ரெஜிம்கள் வயசான டானையே போட்டு தள்ளிவிட்டு ,"டானாக" முடி சூட்டிக்கொள்ளவும் செய்வார்கள்.

சினிமா ஒப்பீடு:


ஆரண்ய காண்டம்(2009-10) என்ற படம் தமிழின் முதல்"neo noir" வகைப்படம் எனலாம் ,இப்படத்தில் "தாதா சிங்கப்பெருமாள்" ஜாக்கிஷெராப்பிற்கே அறிவுரை சொல்லி "அவரது "தளபதி (அ)கேப்போ ரெஜிம் பசுபதி" "சம்பத்ராஜ்" பகைத்துக்கொள்வார், எனவே சம்பத்தை போட உத்தரவுக்கொடுத்துவிடுவார் ஜாக்கிஷெராப், பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு ஜாக்கி ஷெராப் இறந்த பின் இனிமே நான் தான் எல்லாம் என சொல்லி "சம்பத்" தனக்கு தானே "தாதாவாக "பட்டம் சூட்டிக்கொண்டு தலைவராக ஆகிவிடுவார்.

ஆர்ப்பாட்டமாக,வண்ண மயமான தாதா படங்களையே பார்த்து பழகிப்போன தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் அடக்கி வாசிக்கும் ஆரண்ய காண்டம் போன்ற இயல்பான படங்களை பிடிக்காமல் போனதால் வணிக ரீதியாக வெற்றிப்பெறவில்லை.

இயக்கம்,தியாகராஜன் குமாரராஜா, இசை,யுவன், தயாரிப்பு.சரண்.எஸ்.பிபி.

சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த முதல் பட இயக்குனர் என இரண்டு தேசிய விருதுகள் பெற்றது.மேலும் தெற்காசிய சர்வதேச படவிழாவில் ஜூரிகளால் சிறந்தப்படம் எனவும் தேர்வு செய்யப்பட்டது.

Soldato (Soldier) -operai:

வீரர்கள் ,இவர்கள் தான் கடை நிலை ஊழியர்கள், நிறைய வேலை செய்யணும், cugine /operai என சொல்வார்கள்.ஆனால் ஒரு லா கோசா நோஸ்ட்ராவில் வீரனாக சேர்வது சுலபமான காரியமில்லை. முதலில் இத்தாலிய பூர்வீகம் இருக்கணும், அப்புறம் நல்லா "தொழில்" செய்வான் இவனை எனக்கு ஒரு 10-15 வருஷமா தெரியும்னு லா கோசா நோஸ்ட்ரா உறுப்பினர்கள் இருவர் "சான்று" கொடுக்கணும். ஏன் எனில் இத்தாலியராக இருந்தாலும் அரசு பணி, போலீஸ்,ராணுவச்சேவைனு எப்போவாது செய்து இருந்தாலும் சேர்த்துக்க மாட்டாங்க, ஏன் எனில் "போக்கிரி" விஜய் போல ரவுடியாக நடிச்சு உளவுப்பார்க்க வரலாம்னு ஒரு முன்னெச்சறிக்கை தான்.

அப்படி இருந்தும் அமெரிக்க மாபியா கூட்டத்தில் டான்னி பிராஸ்ஸோ என்ற அண்டர் கவர் போலீஸ் அதிகாரி வேலை செய்து ,மாபியாக்களை பிடித்துள்ளார், அதனை அமெரிக்க மாபியா பகுதியில் காணலாம்.


(ஹி...ஹி ..போக்கிரினி)

எனவே பல இளைஞர்கள், சில ,பல ஆண்டுகள் லா கோசா நோஸ்ட்ராவில் சேராமல் அவங்களுக்காக வேலை செய்துக்கொண்டு இருப்பார்கள். என்றாவது ஒரு நாள் நம்மையும் சேர்த்துக்கொள்வார்கள் என.ஏன் அவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்றால் முதல் காரணம் நல்ல வருமானம், 1900 ஆண்டுகளிலேயே ஒரு கொலைக்கு 2000 டால்ர் என்ற அளவில் எல்லாம் விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள், அக்காலத்தில் அது பெரும் தொகையாகும்.

அப்புறம் லா கோஸ்ட்ராவில் ஒரு அங்கத்தினர் என்றால் யாருமே மேல கைய வைக்க மாட்டாங்க, அப்படி கைய வைக்கணும் என்றால் இன்னொரு லா கோசா நோஸ்ட்ரா ஆளுங்களால் மட்டுமே முடியும். இதனால் "untouchables' என்ற பட்டப்பெயர் இவர்களுக்கு உண்டு.இத்தாலியில் Uomini D’onore – என்பார்கள் அதன் பொருள் ”Men of Honor”. லா கோசா நோஸ்ட்ராவில் உறுப்பினர்களாக இருப்பது மரியாதையான ஒன்றாக கருதப்பட்டது.


இவர்கள் கோசா நோஸ்ட்ராவில் அடிப்படையில் வீரர்கள் என்றாலும் முக்கியமாக சண்டைப்போடுவதே இவர்கள் தான், மேலும் ரவுடி கூட்டத்தில் புகுந்து புறப்படுபவர்களும் இவர்களே, இவர்கள் துணிச்சலாக வேலை செய்யக்காரணம் , இவங்களை தொட்டவங்களை லா கோசா நோஸ்ட்ரா சும்மா விடாது , மேலும் இவர்கள் சண்டையில் செத்துவிட்டால் , குடும்பத்துக்கு கடைசி வரை உதவித்தொகை கொடுப்பார்கள்.

சினிமா ஒப்பீடு:


தளபதியில் சூப்பர் ஸ்டார் "சூர்யா", தேவராஜ் "மம்மூட்டியின்" ஆளை அடித்து போட்டதும் , தேவராஜ் கோவமாக கிளம்புவார், அப்புறம், சூர்யா "ஆனால் நியாயம்னு ஒன்னு இருக்கு தேவராஜ்னு சொன்னதும் என்ன நியாயம்னு கேட்டு சூர்யாவை தளபதி ஆக்குவார், இதெல்லாம் சினிமாவில் தான், நிஜத்தில் நல்லவனோ ,கெட்டவனோ ,குழு ஆளை தொட்டால் தொட்டவன் செத்தான். இது இத்தாலிய மாபியாவில் மட்டுமில்லை, நம்ம ஊரிலும் உண்டு.சின்ன சின்ன தாதா குருப்புகளே பழிக்கு பழி வாங்கிட்டு இருக்கும்.

இத்தாலியில் லா கோசா நோஸ்ட்ரா ஆளை ஒரு சாதாரண ரவுடி கொலை செய்துவிட்டால் ,அது வரைக்கும் எலியும் ,பூனையுமாக இருந்த லா கோஸ்ட்ரா எல்லாம் கூட ஒன்றாக தேடி வேட்டை ஆடும். இன்னொரு லா கோஸ்ட்ரா நோசா கொன்று இருந்தால் அதனுடன் கேங்க் வார் நடத்துவார்கள்.காரணம் நாம செத்தாலும் நமக்காக தலைவர் சண்டைப்போடுவார்னு மற்றவர்களுக்கு அப்போ தான் நம்பிக்கை வரும் உயிரைக்கொடுத்து வேலை செய்வாங்க என்பதற்காக.

இறந்தவர்கள் குடும்பத்துக்கு உதவ என ஒரு தனி நிதியும் ஒதுக்கி வைத்திருப்பார்கள்.ஒரு கார்ப்பரேட் போல ஒருங்கிணைந்து செயல்படுவார்கள், அதனால் தான் ஆர்க்கனைஸ்டு கிரைம் என்றால் மாபியா என்று பெயர். லா கோசா நோஸ்ட்ராவில் சேர ஒரு பதவிப்பிரமாணம் உண்டு அதனை ஒமெர்ட்டா என்பார்கள். அடுத்து அதனை காணலாம்.

Associate:

கூட்டாளி என சொல்லலாம், இத்தாலிய பூர்வீகம் இல்லாமல் , லா கோசா நோஸ்ட்ராவுக்கு நம்பகமாக யார் வேலை செய்தாலும் அவர்களை "Associate:" என்பார்கள். அடிப்படை வீரனாக சேரும் முன்னரர் இப்படிக்கூட்டாளியாக பல இத்தாலிய இளைஞர்களும் வேலை செய்துக்கொண்டு இருப்பார்கள்.

லஞ்சம் வாங்கிக்கொண்டு ஒத்துழைக்கும் போலீஸ்,நீதிபதி, அரசு வழக்கறிஞர், அரசியல்வாதி முதல் ,லா கோசா நோஸ்ட்ராவிற்காக "காண்ட்ராக்ட்" கொலை செய்பவர்கள் வரை அனைவரும் Associate களே.

காசுக்கு கொலை செய்வதை "காண்ட்ராக்ட்" என்பார்கள், லா கோசா நேரடியாக சில கொலைகள் தான் செய்யும் பெரும்பாலும் "காண்ட்ராக் கில்லிங்" தான்.

மாபியாக்களின் காண்ட்ராக்ட் கிடைக்காதா என சின்ன கிரிமினல்கள் எல்லாம் எப்போதுமே காத்திருப்பார்கள் காரணம் நல்ல வருமானம், மேலும் இப்படி விசுவாசமாக வேலை செய்தால் ஒரு நாள் நமக்கும் கோசா நோஸ்ட்ராவில் ஒரு பதவி கிடைக்கும் என்பதால்.ஆனால் இதில் போலீஸில் மாட்டிக்கொள்வதைவிட பல ஆபத்துகள் உண்டு, கொன்றவனின் கூட்டம் திருப்பி பழி வாங்க வரும். மேலும் சாட்சி இருக்கக்கூடாது என ஆர்டர் கொடுத்த லா கோசா நோஸ்ட்ராவே ஆளை காலி செய்துவிடுவதும் உண்டு.

இப்படிலாம் திட்டம் போட்டு வேலை செய்ததால் தான் மாபியா டான்கள் யாருமே சட்டப்படி தூக்கு தண்டனையோ, இல்லை முழு ஆயுள் தண்டனையோ அடைந்தது இல்லை. சாட்சியே இல்லை என்பதால் வரி ஏய்ப்பு வழக்கில் தான் கைது செய்வார்கள் :-))

பதவி ஏற்பு-ஒமெர்ட்டா(omerta):

லா கோசா நோஸ்ட்ராவிற்கு ஆட்கள் தேவைப்படும் போது ஏற்கனவே அவர்களுக்கு வேலை செய்தவர்களில் திறமையானவர்களை குழுவில் சேர்க்க நினைக்கும் போது "opens the books" என சொல்வார்கள், அப்படியானால் ஒரு புத்தகம் வைத்துக்கொண்டு அதில் பதிவு செய்வார்கள் என நினைக்ககூடாது, ஆட்கள் எடுக்கிறார்கள் என்பதனை சொல்லும் வழக்கு, பில்லா படத்தில் வருவது போல சிவப்பு டைரி எல்லாம் வைத்திருக்க மாட்டார்கள், எந்தவித ஆவணமும் வைத்துக்கொள்ளவே மாட்டார்கள். எல்லாம் மனக்கணக்கு தான்.

ஏற்கனவே குழுவில் உள்ளவர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களை அழைத்து அனைவர் முன்னிலையிலும் பதவிப்பிரமாணம் எடுக்க வைப்பதற்கே ஒமெர்ட்டா -Omertà, the mafia code of silence என்று பெயர்.

பதவி ஏற்பவரின் ஆட்காட்டி விரலில் கத்தியால் கீறி ரத்தம் எடுத்து அதனை கன்னி மேரி, அல்லது செயிண்ட் பிரான்சிஸ் (St. Francis of Assisi ) போன்ற புனிதத்துறவியின் படத்தின் மீது தெளிக்க வைப்பார்கள்.

பின்னர் அப்படத்தினை கையில் வைத்திருக்க கொளுத்தி எரியும் படத்தினை கடைசி வரையில் வைத்துக்கொண்டு உறுதி மொழி எடுக்க சொல்வார்கள்,

உறுதி மொழி:

" உயிருள்ளவரையில் விசுவாசமாக இருப்பேன் ,என் ஆத்மாவை நரகத்தில் இப்படம் எரிவது போல எரித்தாலும் துரோகம் செய்ய மாட்டேன்,என் ஆத்மா எரிந்துவிட்டது, இப்போது உயிருடன் உள்ளே நுழைந்து இக்கணம் முதல் இறந்தவனாக வெளியேறுகிறேன்"

மேற்கண்டவாறு உறுதி மொழி எடுத்தவர்களை "made-man" என்பார்கள்,அதாவது அன்று தான் புதிதாக உருவானதாக பொருள்.,எக்காலத்திலும் போலீசுக்கு காட்டிக்கொடுக்க மாட்டார்கள்,காட்டிக்கொடுத்தால் ,பரிசு மரணம் தான்.

இன்னொரு லா கோசா நோஸ்ட்ரா தாக்கினாலும் போலீஸில் புகார் அளிக்கவும் மாட்டார்கள். எதுவாக இருந்தாலும் அவர்களே தீர்த்துக்கொள்வார்கள்.

ஒரு மாபியா கேங்க்வாரில் சுடப்பட்டு 14 குண்டுகளுடன் உயிருக்கு போராடியவனை போலீஸ் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து வாக்கு மூலம் வாங்க பார்த்துள்ளது, உன்னை சுட்டது யார்னு கேட்டதற்கு ,என்னை யாருமே சுடவில்லைனு சொல்லிட்டு செத்துட்டான். அந்த அளவுக்கு கட்டுப்பாடானவர்கள்.

இப்படி எக்காலத்திலும் போலீசில் வாய் திறக்காதவர்களை பெருமையாக "Stand up guy" என்பார்கள்.

அது நாள் வரையில் பல கொலைகள் செய்திருந்தாலும் பதவி ஏற்பினை உறுதி செய்ய "ஒரு கொலையை" செய்ய வேண்டும், முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக "காண்ட்ராக்ட் கொலை" செய்ய ஒரு உத்தரவினை "பாஸ்" கொடுப்பார் ,அதனை செய்து முடிக்கவில்லை எனில் பதவி ஏற்பு ரத்து செய்யப்பட்டு "தகுதி'நீக்கம் செய்துவிடுவார்கள்.

சினிமா ஒப்பீடு:

புதுப்பேட்டைப்படத்தில் தனுஷ் ஒரு கொலையை தற்செயலாக செய்துவிட்டு ஒரு கேங்கில் சேர்ந்திருக்கும் போது , எதாவது செய்தால் தான் சேர்க்க முடியும் என சொல்லி , ஒரு ஆள் கையை எடுக்க அனுப்பப்படுவது இது போல தான்.

தனுஷ் படத்தில் சொதப்பினாலும் "சரி நீ நல்லா வேலை செஞ்சேன்னு சொல்லுறேன் இனிமே இப்படி செய்யாதே ,கவனமா இருன்னு அறிவுரையுடன் சேர்த்துக்கொள்ளப்படுவார் ஆனால் நிஜத்தில் தகுதி இல்லைனு சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

இந்தியில் பல மாபியா டான் படங்கள் வந்திருந்தாலும் யதார்த்தமாக சில படங்களே வந்திருக்கின்றன, பெரும்பாலான படங்களில் அடிமட்டத்தில் சேர்ந்து ஒரே பாட்டில் பெரிய டானாக மாறிவிடுவார்கள், ஆனால் நிஜத்தில் "காசுக்கு வேலை செய்து அடுத்தக்கட்டம் போவதற்குள் செத்துவிடுபவர்களே அதிகம்.ஆயிரத்தில் ஒரு மாபியா வீரன் தான் "டான்" பதவி அடையும் வரைக்கும் உயிரோடு இருக்க முடியும்.


இப்படி ஒரு கேங்கில் சேர்ந்து பெரிய டானாக ஆசைப்பட்டு கடைசியில் செத்துவிடும் இளைஞனை மையமாக வைத்து இந்தியில் வந்த ஒரு படம் தான்
Saleem Langde Pe Mat Ro (1989).

இயக்கம்: சயீத் அக்தர் மிர்சா,
இசை:ஷரங்க் தேவ்.
ஒளிப்பதிவு: விரேந்திர சைனி.
தயாரிப்பு :NFDC,


அதிகம் பிரபலமில்லாத பவன் மல்ஹோத்ரா என்ற தொலைக்காட்சி நடிகர் "சலீம்" ஆக வளரும் தாதாவாக நடித்திருப்பார், படத்தில் நடித்த சக நடிகர்கள் , மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் புனே திரைப்படக்கல்லூரியை சேர்ந்தவர்கள். இப்படத்தில் ஹீரோவின் நண்பனாக அப்துல்லா என ஒரு சின்ன வேடத்தில் லகான் புகழ் இயக்குனர் "அஷ்தோஷ் கோவ்ரிகர்" நடித்திருப்பார். சரியான விளம்பரம் இல்லாமல் வந்தப்படம் என்பதால் தோல்வியடைந்து விட்டது.

ஒரு வேளை படம் வெற்றியடைந்திருந்தால் அஷுதோஷ் கோவ்ரிகர் நடிப்பில் கவனம் செலுத்தி இருப்பார், நமக்கு லகான் கிடைத்திருக்காது.ஹீரோவாக நடித்த பவன் மல்ஹோத்ராவும் ஷாருக்கான் ,அமீர்கான் போல வந்திருக்க கூடும்.


1989 இல் சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றிப்பெறவில்லை எனினும் சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதினையும், சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருதையும் பெற்றது. சிட்டி ஆப் காட் 92 இல் வந்தது ஆனால் அதற்கு முன்னரே வந்த இப்படத்தில் அதில் வருவது போன்ற காட்சிகள் இருக்கும்.

கதைப்படி நாயகன் சலீம் , தாராவியில் சரியான வேலையின்றி கஷ்டப்படும் ஒரு இளைஞன், அவனது அப்பாவுக்கு மில் வேலை போய்விடும், திருமண வயதில் ஒரு தங்கை, என குடும்ப நெருக்கடியினால் , பணம் சம்பாதிக்க வேறு வழியின்றி அந்த பகுதி தாதாவுக்கு வேலை செய்து கொடுத்து சம்பாதிக்கொண்டு இருப்பார்.

சந்தர்ப்ப சூழலால் கடத்தல் தொழில் செய்வது குறித்து குற்ற உணர்வுடன் இருக்கும் ஹீரோவுக்கு ,சகோதரியை மணம் செய்ய இருப்பவர் அடிக்கடி திருந்த சொல்லி அறிவுரை சொல்லிவரும் நிலையில் , ஹீரோவும் மனம் திருந்தி வாழ நினைப்பார்,ஆனால் அந்த தாதாவுக்கு இது பிடிக்காது என்பதால் கத்தியால் குத்தி சாலையில் போட்டுவிடுவார், உயிருக்கு போராடிகொண்டு இருக்கும் நிலையில் , மும்பையில் இது போல பல சலீம்கள் இருக்கிறார்கள், இவன் போனால் இன்னொரு சலீம் தாதாவுக்கு வேலை செய்ய வருவார்கள் என ஒரு மெசேஜுடன் படம் முடியும்.

Saleem Langde Pe Mat Ro என்றால் சலீமிற்காக அழாதீர்கள் என்பதாகும், Dont cry for salim,the lame என நேரடியான பொருள் வரும் ஆனால் ஹீரோவை lame என்ன சொல்வது அவரது நடக்கும் விதம்,கையை எல்லாம் லூசாக ஆட்டும் விதத்திற்காக மட்டுமே,மற்றபடி ஊனமுற்றவர் அல்ல, ஆனால் மறைமுகமாக வன்முறையாளர்களை மன ஊனமுற்றவர்கள் என இயக்குநர் சொல்லவருவதாகவும் சொல்லலாம்.

குறைந்த பட்ஜெட் படம் என்பதால் செட் எதுவும் போடாமல் தாராவியிலே எடுத்தப்படம். காட்சிகள் எல்லாம் இயல்பாகவே இருக்கும். மேலும் சலீம் வன்முறையாளனாக மாறியதற்கு காரணம் அப்போது சமூகத்தில் நிலவிய இந்து ,முஸ்லீம்கள் இடையே நிலவிய சண்டையே காரணம் என்பது போல படத்தின் களம் அமைந்திருக்கும், முஸ்லீம் என்பதால் யாருமே நம்பி அப்போது வேலைக்கொடுக்கவில்லை , தாதாவை தவிர எனவே ஒருவன் குற்றவாளியாக சந்தர்ப்ப சூழலே காரணம் என சொல்லப்பட்டிருக்கும். கடைசியில் கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்ற நீதியும் இருக்கும் :-))

இந்தப்படத்தினை யாரும் பார்க்கவில்லையே என வருந்த வேண்டாம், பெரும்பாலோனோர் தமிழில் பார்த்திருப்பீர்கள் ,ஆனால் வேறு பெயரில், லோகநாயகர் நடிப்பில் வந்த "சத்யா" படத்தின் மூலம் இப்படம் தான்.

கல்யாணத்திற்கு காத்திருக்கும் தங்கை, அப்பாவி அப்பா, வேலை இல்லாத அண்ணன், சின்ன சின்ன ரவுடித்தனம் செய்து ,அடியாளாக போய் ,மனம் திருந்தி கத்திக்குத்து எல்லாம் வாங்கி பின்னர் பழி வாங்கல் என தமிழில் போய் இருக்கும். ஹீரோ வசிக்கும் சூழல்,வீடு ,நண்பர்கள் என அனைத்தும் இந்திப்படத்தில் வருவது போல தமிழிலும் இருக்கும்.

பின்னர் ராம் கோபால் வ்ர்மா இந்தியில் சத்யானு எடுத்தப்படத்திற்கும் "சலீம் லாங்டே தான் மூலம்.மிஸ்கினின் சித்திரம் பேசுதடிக்கும் இப்படத்துடன் கொஞ்சம் தொடர்பு உண்டு. அப்படத்தின் ஹீரோ பவன் மல்ஹோத்ரா 1989 ஆண்டின் சிற்ந்த நடிகருக்கான விருதுப்போட்டியில் கடைசிவரைக்கும் முன்னேறி, வடக்கன் வீரக்கதா மம்மூட்டியிடம் தோல்வியடைந்ததாக விக்கி கூறுகிறது.


இப்படத்தின் விமர்சனம் அல்ல இது, வண்ணமயமான கோட் ,சூட் தாதா , கவர்ச்சி கன்னிகளின் பிகினி தரிசன படங்களுக்கு மட்டுமே மக்களிடம் வரவேற்பு கிடைக்கிறது, யதார்த்தமான தாதா படங்களுக்கு அதிகம் வரவேற்பு கிடைப்பதில்லை என்பதால் வெளியில் தெரியாமல் போய்விடுகிறது,எனவே சுருக்கமாக இப்பதிவில் சேர்த்துள்ளேன்.
சில மாபியா வழக்கங்கள், மற்றும் வழக்கு சொற்கள்:

goumada-comare- துணைவி:


வழக்கமாக திரைப்படங்களில் எல்லாம் "டான்" கூடவே ஒரு ஃபிகர் சிக்குனு வருமே அவர்களுக்கு பெயர் தான் comare(சென்னையில் கூட சிலர் லோக்கலாக ஒரு மாதிரியான பெண்களை கொமாருனு சொல்கிறார்கள்). டான் யாருடனாவது பேசும் போது கூட பக்கத்தில் வைத்திருப்பார், ஆனால் மனைவி கிடையாது, திருமணம் செய்யாமல் கூடவே வைத்திருக்கும் துணைவி.காட் மதர் என்றும் சொல்வார்கள்.

துணைவி மீது மற்றவர்கள் உரிமைக்கொண்டாட கூடாது,யாராவது விளையாட்டுக்காட்டினால் மரண தண்டனை விதிக்கப்படும்.

கட்டுப்பாடுகள்:

ஒமெர்ட்டா விதிப்படி ,பொதுமக்கள், அரசு அதிகாரிகள், போலீஸ்,நீதிபதிகள் என யாரையும் தேவை இல்லாமல் கொல்லக்கூடாது. மேலும் உத்தரவு இல்லாமல் எந்த கொலையும் செய்யக்கூடாது. முடிந்தவரையில் லஞ்சம் கொடுத்து அனைவரையும் வாங்கிவிடுவார்கள், வேறு வழியே இல்லை எனில் கொலை செய்ய உத்தரவு கொடுக்கப்படும். அதற்கு மற்ற டான்களிடம் அனுமதி வாங்க வேண்டும். ஒரு டானுக்கு பிரச்சினைக்கொடுக்கும் அதிகாரியை அனுமதி வாங்காமல் கொலை செய்தால் , மற்ற டான்கள் ஒன்று சேர்ந்து அந்த டானை கொன்றுவிடுவார்கள்.

ஒரு அரசு அதிகாரியை கொன்றால் அரசு அதிகம் கவனம் செலுத்தும் ,தொழில் பாதிக்கும் என நினைப்பார்கள்,வெளிப்படையாக எந்த சல சலப்பும், இல்லாமல் வேலை செய்ய நினைப்பார்கள். ஆனால் நிறைய கொலைகள் நடக்கிறதே எனலாம் ,அதெல்லாம் அடிமட்ட ஆட்கள் அவசரப்பட்டு செய்வது, அப்படி செய்தவர்களை டான் தண்டித்து விடுவார்.

ஒரு காவல் துறை அதிகாரியை கொலை செய்துவிட்டால் ,காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் ,டானுக்கு தகவல் கொடுக்கும், இல்லை கூப்பிட்டு வைத்து பேசும்,பெரும்பாலான காவல் துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள்,நீதிபதிகள்,அரசியல்வாதிகள் மாபியா சம்பள பட்டியலில் இருப்பவர்களே. அப்படி லஞ்சம் கொடுப்பதை "கிஃப்ட்" என்பார்கள்.பின்னர் டானே கொலை செய்த மாபியா ஆளை கொலை செய்ய உத்தரவு கொடுத்து கதையை முடித்து விடுவார். இதனாலே பெரும்பாலும் டான்கள் கைது ஆவது இல்லை.

off the record: டான் அனுமதி இல்லாமல் செய்யும் வேலைக்கு பெயர், அடிக்கடி off the record ஆக ஒருவர் வேலை செய்வதாக புகார் வந்தாலும் , டான் கொலை செய்துவிடுவார். ஒரு குழுவில் இருப்பவர் அடிக்கடி பிரச்சினையாக சொல் பேச்சு கேளாமல் வேலை செய்துக்கொண்டிருந்தால் ,அவனை தேவையில்லாத நபர் என கொலை செய்ய உத்தரவு கொடுத்துவிடுவார்.

on the record:
டான் உத்தரவின் படி செய்யப்படும் குற்றச்செயல்.

call in: மாபியா குழுவில் பிரச்சினையான ஒரு நபரை டான் அழைக்கிறார் என்றால், அது மரண தண்டனைக்கு என அர்த்தம், எனவே அழைப்பு கொடுக்கப்பட்டது என்று சொன்னால் அந்த நபர் ஊரை விட்டு ஓடிவிடுவது வழக்கம், அப்படி ஓடியவர்கள் எந்த மாபியா குழு கண்ணில் பட்டாலும் கொன்று விடுவார்கள்.

இப்படி குழுவை விட்டு உயிருக்கு பயந்து ஓடியவர்கள் போலீஸ் அப்ரூவராக மாறிவிடுவதுண்டு. அவர்களை rat -எலி என்பார்கள். எலிக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசை "baby sitter" என்பார்கள். எலியை எந்த மாபியாக்குழுவும் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் கொன்றுவிடுவார்கள்.


chase: சின்ன சின்ன பிரச்சினை, சரியான தகுதி இல்லைனா ,கொல்லாமல் தொறத்திவிடுவார்கள்,ஆனால் அதன் பிறகு எந்த தொழிலும் செய்ய கூடாது,செய்தால் மரணத்தண்டனை.

empty suit: திறமையில்லாமல் நானும் ரவுடி தான் என மாபியா குழுவினரோடு சும்மா திரிபவர்களை வெற்றுக்கோட்டு என்பார்கள். தலைநகரம் வடிவேலு போல :-))

piece: என்றால்"gun " , எல்லாரும் பீஸ் வைத்திருப்பார்கள். நம்ம ஊரில் "பொருள்" வைத்திருக்கியா என்றால் ஆயுதம் இருக்கா என்று கேட்பது போல.


pinched: கைது செய்யப்படுவதை குறிப்பது.

joint: என்பது சிறைச்சாலை ,ஏன் எனில் அங்கு பல மாபியாக்கள் குழுவினரை ஒன்றாக அடைத்து வைப்பதால்.இல்லை எனில் படிக்கப்போயிருப்பதாக பெருமையாக சொல்லிக்கொள்வார்கள் "go away to college " என்பார்கள்.

fence: உலகம் முழுக்க நெட் ஒர்க் வைத்து கடத்தி விற்கும் வலையமைப்பபின் பெயர்.பெரிய டான்களே இப்படி வைத்திருப்பார்கள்.

swag : கள்ளக்கடத்தல் பொருள், நம்ம ஊரில் மால், கிரே குட்ஸ் என்றெல்லாம் சொல்வதுண்டு.

Capo di tutti capi:

என்றால் " Boss of bosses " மாபியாக்குழுவிலேயே சக்தி வாய்ந்த டானை குறிப்பது,ஆனால் இப்படி யாரும் வெளிப்படையாக சொல்லிக்கொள்ள மாட்டார்கள்,அப்படி சொல்லிக்கொள்பவரை மற்ற டான்கள் கூட்டு சேர்ந்து கொன்றுவிடுவார்கள்.பத்திரிக்கைகள் மட்டுமே அவ்வப்போது யாரையாவது " Boss of bosses " என சொல்லும், அப்படி சொல்லப்பட்ட டானிடம் நீங்க தான் " Boss of bosses " ஆ எனக்கேட்டால் அய்யோ அது நானில்லைனு அலறுவார்.

அப்படி சிலர் தானாகவே " Boss of bosses " என பெருமையாக சொல்லிக்கொண்டு சில நாளிலே செத்துப்போனவர்களும் இருக்காங்க.

kiss of death:(மரண முத்தம்)

ஒரு டான் இன்னொருவரை(ஆணோ,பெண்ணோ)பொது இடத்தில் கன்னம்,நெற்றி என முத்தமிட்டால், அவரைக்கொல்லப்போவதாக அர்த்தம், பெரும்பாலும் சகபோட்டியாளரான டானை விருந்துக்கு அழைத்து இப்படி செய்வார்கள், துணிச்சலான "டான்"எனில் அவரும் இவருக்கு பதில் முத்தம் கொடுப்பார், அதன் பொருள் நானும் உன்னை கொல்ல போறேன் , யாரு யாரை போடுறாங்க பார்க்கலாம்னு சவால் விடுவது. இப்படித்தான் கேங்வார் ஆரம்பிக்கும்.


மாபியாக்கள் இயங்கும் விதம்:

மாபியா டான் என்பவர் எந்த குற்றமும் நேரடியாக செய்ய மாட்டார், என்ன செய்ய வேண்டும் என துணைத்தலைவரிடம் சொல்வார், அவர் அதனை கேப்டனிடம் சொல்வார் ,கேப்டன் சரியான வீரனை தேர்ந்தெடுத்து அனுப்புவார், இல்லை எனில் ஒப்பந்த வேலையாக "கூட்டாளிகளுக்கு" கொடுப்பார்.


பணம் வாங்கிக்கொண்டு கொலை செய்ய தனியாக இருப்பவர்களை "காண்ட்ராக்ட் கில்லர், ஹிட் மேன்" என்பார்கள். அவர்கள் லா கோசா நோஸ்ட்ரா உறுப்பினராக இருக்க தேவை இல்லை.எந்த டானுக்காக,ஏன் கொலை செய்கிறோம் என்றே அவர்களுக்கு தெரியாது, எனவே மாட்டிக்கொண்டாலும் டானுக்கு பிரச்சினையே வராது.

எல்லா டானும் வெளியில் தெரியும் படியாக டெக்ஸ்டைல், கெமிக்கல் என ஏதேனும் தொழில் செய்வார்கள், கேட்டால் நான் தொழில் அதிபர், நான் டான் இல்லை என்றே சொல்வார்கள்.

குற்றத்தொழில்கள்:

கப்பம் வசூலிப்பது, சாராயம் காய்ச்சுவது, ஆட்கடத்தல், கொலை, விபச்சாரம், சூதாட்டம், வட்டித்தொழில், போதைமருந்து தயாரிப்பது,கடத்துவது ஆகியவை.மேலும் தேர்தலில் மிரட்டி வாக்களிக்க வைப்பது, எனவே எந்த அரசியல்க்கட்சியும் இத்தாலியில் மாபியாக்களை பகைத்துக்கொள்ளாது.

இதனையும் நேரடியாக செய்ய மாட்டார்கள், யாரையாவது செய்ய வைத்து அவர்கள் தொழிலுக்கு பாதுகாப்பு கொடுத்து ,அதற்கு என பாதுகாப்பு பணம் என வசூலித்துக்கொள்வார்கள். அப்படியே சாட்சி சொல்ல யாரேனும் முன் வந்தால் ,பின்னர் காணாமல் போய்விடுவார்கள் , எனவே எந்த டான் மீதும் குற்றத்தினை நிறுபிக்க ஆதாரமே இருக்காது, வேற வழி இல்லாமல் ,வருமான வரி ஏமாற்றியது என வழக்குப்போடுவது மட்டுமே ஒரே வழி.
--------------------
மற்ற மாபியா குழுக்கள்:

இத்தாலியில் இருந்த மற்ற இனக்குழு குற்றப்பரம்பரை குடும்பத்தார்கள், இவர்களை மாபியாக்கள் என்ற பெயரில் ஒப்புக்கு கூட சொல்லக்கூடாது,ஆனாலும் குழுவாக திட்டமிட்டு செயல்ப்படும் குற்றப்பரம்பரை அல்லத் கூட்டத்திற்கு எல்லாம் மாபியா என்று அழைக்கும் பழக்கம் உருவாகிவிட்டது.

மற்ற இனக்குழு மாபியாக்கள்:

the Camorra (from Campania),

கம்பேனியா பிராந்தியத்தில் நேப்பில்ஸ் பகுதியை சேர்ந்தவர்கள், கேப்போ -தலைவன், மோரா என்பது ஒரு வகையான விரல்களை மறைத்து ,நீட்டி என ஆடும் சூதாட்டம் ஆகும். அப்படிப்பட்ட சூதாட்டக்குழு தலைவனாக இருப்பவர்கள் மற்றும் உறுப்பினர்கள் எனக்கொண்டு உருவான "குற்ற கூட்டம்" இதிலும் 100க்கும் மேற்பட்ட குழுக்கள் உண்டு, இவர்கள் அன்னைவரும் ஸ்பெயினை பூர்வீகமாக கொண்டவர்கள்.கி.பி.1417 முதல் இவர்களுக்கு வரலாறு உள்ளது.

the 'Ndrangheta (from Calabria),

இத்தாலியின் கலபாரியா பிராந்தியத்தினை சேர்ந்த இனக்குழு the 'Ndrangheta என்றால் வீரமானவர்கள் என கிரேக்க மொழியில் பொருள். இவர்கள் குற்ற செயலில் ஈடுபடுதாக 1880 க்கு பிறகே அறியப்பட்டார்கள், மொத்த்ம் 160 பிரிவுகள் இவர்களிடையே உண்டு.

the Stidda (southern Sicily)

பழைய பாரம்பரியம் பெரிதாக இல்லாமல் பலக்குற்றவாளிகள் ஒன்றாக இணைந்து உருவாக்கிய அமைப்பு.இதன் பொருள் நட்சத்திரம் என்று பெயர். தோள்பட்டையில் ஒரு வட்டத்தில் ஐந்து நீலவண்ணப்புள்ளிகளை நட்சத்திரவடிவில் பச்சைக்குத்திக்கொள்ள வேண்டும் அனைத்து உறுப்பினர்களும்.

the Sacra Corona Unita (from Apulia).

புனிதக்கிரீடம் என்ற பெயரில் செயல்ப்பட்ட ஒரு மாபியாக்குழு, மிகவும் பிற்காலத்தில் உருவான அமைப்பு , ரொம்ப சிறிய குழு, பெரும்பாலும் சிறிய அளவிலான கேடிகளை கொண்டு உருவாக்கப்பட்ட குழு.

---------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள், விக்கி,யூடியுப்.கூகிள்,கேங்ரூல்,கிரைம் கல்ச்சர்,இணைய தளங்கள் நன்றி!

*****

அடுத்தப்பதிவில் ,இத்தாலியில் மாபியாக்களை அடக்க நடந்த முயற்சிகள், அமெரிக்காவிற்கு புலம்ப்பெயர்ந்தது,பிஸ்ஸா கனெக்‌ஷன் பின்னர் ஏற்பட்ட போதை மருந்துக்கடத்தலின் அபரிமிதமான வளர்ச்சி,உலகபோர் -2 இல் மாபியாக்களின் பங்களிப்பு எனக்காணலாம்.
---------