Friday, August 10, 2012

காட்டுப்பொறியின் கோக்கோ மர வளர்ப்பு திட்டம்.(cocoa tree project)


ரொம்ப நாளா மக்களை கோடிஸ்வரன் ஆக்கும் பெரும் லட்சியத்துடன் இயங்கி வந்த ஈமு கோழி வளர்ப்பு குபேரத்திட்டம் திடீர் என சிக்குன் குனியா வந்தாப்போல சமீபத்தில சுருண்டுக்கொண்டதை செய்திகளிலும், வலைப்பதிவுகளிலும் படித்திருப்பீர்கள்.

இந்த ஈமு திட்டம் வந்தப்போ எல்லாருமே அற்புத பணம் கொட்டும் திட்டம் என்றே சொல்லி வந்தார்கள், ஊடகங்களும் போட்டிப்போட்டு பிரபலப்படுத்தின, நவீன வேளாண்மை, வளரும் வேளாண்மை, நீங்களும் செய்யலாம் ஏற்றுமதின்னு டிசைன் டிசைனா பேருக்கொண்ட பத்திரிக்கைகள் "கவர்" வாங்கிக்கொண்டு பிரமாதமான கவர் ஸ்டோரிகளை எழுதித்தள்ளின.

ஓய்வூதியம் பெற்ற திரை விண்மீன்கள் முக்கால் இஞ்ச் மேக்கப்பில் கூசாமல் பொய்களை அள்ளிவீசி ஆளை சுண்டி இழுத்தார்கள். பீப்பிள் தொலைக்காட்சி எல்லாம் விளம்பரம்னே தெரியாத வகையில் செயல் முறை விளக்கம் போல நிகழ்ச்சிகளை நடத்தின.

இப்போ குமிழி உடைந்து , முதல் போட்டவர்கள் மூலையில் உட்கார்ந்து விட்டத்தினை வெறித்துக்கொன்டிருக்கிறார்கள். ஊடகங்களும் பதிவர்களும் கடசியில் தான் கொஞ்சம் விழித்துக்கொண்டு உண்மையை எழுதினார்கள்,ஆனால் அதற்குள் தலைக்கு மேல் வெள்ளம் போயாச்சு.

சரி இதெல்லாம் தெரியும் இப்போ என்னாத்துக்கு இந்த இழுவைன்னு கொந்தளிக்காதீங்க, அடுத்து ஒரு சமாச்சாரம் வருது இருங்க.

அதே போல விவசாயிகளை கோடிஸ்வரன் ஆக்கியே தீர்வது என இன்னொரு திட்டம் ஓடிக்கிட்டு இருக்கு, அதைப்பற்றி பார்க்கலாம்.

முன் எச்சரிக்கை:

இப்போது சொல்லப்போகும் திட்டம் ஈமு போல இழுத்து மூடும் திட்டமாகவும் இருக்கலாம்,அல்லது அள்ளிக்கொடுக்கும் அட்சயப்பாத்திரமாகவும் இருக்கலாம், ஆனால் என்ன நடக்கும் என தற்போது தெரியாத ஒரு திட்டம், வருங்காலமே பதில் அளிக்க முடியும்,ஆனாலும் ஈமு பார்த்த பின் ஒரு எச்சரிக்கை மணி அடிக்கிறது என்பதாலே ஒரு விழிப்புணர்வு நோக்கில் ஒருப்பதிவு. எனவே ஒரு நல்ல திட்டத்தினை குறை சொல்லிவிட்டேன் என யாரும் நினைக்க வேண்டாம்.ஏன் எனில் சந்தேகிக்க ஏராளமான சாத்தியங்கள் உள்ள ஒரு திட்டமே இப்போது நாம் பார்க்கப்போவது.

காட்டுப்பொறியின் கோக்கோ மரம்:
(கோகோ பழம்-பாட்)

நமக்கு வழக்கமாகவே வேளாண்மை மீது ஒரு ஈடுபாடு உண்டென்பதால் தூர்தர்ஷனின் வயலும் வாழ்வும் கூட அவ்வப்போது பார்த்து ரசிப்பதுண்டு(என்ன ஒரு ரசனைனு நினைக்காதிங்கோ) அதே போல தனியார் தொலைக்காட்சிகளில்" பீப்பிள் தொலைக்காட்சி" நிறைய பசுமையான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவதால் அதனையும் முன்னர் சில காலம் பார்த்து வைத்தேன் ,அப்போது கண்ணில் சிக்கியதை இப்போ எடுத்து விடுகிறேன்.

பீப்பிள் தொலைக்காட்சியில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவது ஒரு நல்ல விடயம் என்றாலும் அவற்றில் பெரும்பாலும் தனியார் நிகழ்ச்சிகளே. சமூக நோக்கில் ஒளிப்பரப்புவது போன்று செயல் முறை நிகழ்ச்சியாக ஒளிப்பரப்ப படுகிறது. நிகழ்ச்சி துவங்கும் முன் இது ஒரு விளம்பரத்தாரர் நிகழ்ச்சி என்று போட்டு விடுவதன் மூலம் கம்பெனி பின் விளைவுகளுக்கு பொறுப்பாகாது என்று போடுவது கேள்விக்குறியை உண்டாக்குகிறது.

அப்படியான விளம்பர தாரர் நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பாவது மலரும் எர்த் என்ற நிகழ்சியாகும் இதில் பெரும்பாலும் ஈமு போன்ற குபேர முதலீட்டு திட்டங்களை விளம்பரம் என்றே தெரியாதவாறு ஒளிப்பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அதில் இப்போதெல்லாம் அடிக்கடி வருது தான் "காட்டுப்பொறியின் கோக்கோ மர வளர்ப்பு திட்டம்" ஆகும்.

கோகோ எனப்பொதுவாக அழைக்கப்படும் "Theobroma cacao also cacao tree and cocoa tree" எனப்படும் மரம் ஒரு தோட்டப்பயிர் ஆகும், தென் அமெரிக்காவினை தாயகமாக கொண்டது , நாடுக்கண்டுப்பிடிக்கப்போன "கிரிஸ்டோபர் கொலம்பஸால்" தென் அமெரிக்காவில் கண்டு அறியப்பட்டு உலக நாடுகளுக்கு அறிமுகமானது. பின்னர் ஸ்பானியர்கள் பெருவை பிடித்து ஆள முட்படும் போது ஐரோப்பியாவில் பயிரிட எடுத்து வந்து இப்போது உலகில் பல இடங்களில் பயிராகிறது.

கோகோ மரத்தின் பழங்களின் கொட்டைகளில் இருந்து தான் சாக்கலேட்டின் மூலப்பொருள் கிடைக்கிறது, மேலும் கோகோ கோலா குளிர்ப்பானத்திலும் பயன்ப்படுத்தப்படுகிறது.
(கோக்கோ கொட்டைகள்)

கோகோ கொட்டையில் இருக்கும் தியோபுரோமைன் என்ற அல்கலாய்டே சுவைக்கு காரணம், அது காபியில் உள்ள காபினுக்கு இணையானது.

சாக்கலேட் கோகோ அல்லாமல் இன்னொரு வகையில் இருந்து தான் உலகப்புகழ்ப்பெற்ற கோகைன் என்ற போதைமருந்தும் தயாரிக்கப்படுகிறது.

வரலாறுப்போதும் , நம்ம நாட்டில் என்ன நடக்கிறது எனப்பார்ப்போம்.

(கோக்கோ பவுடர்)

நம் நாட்டில் சாக்கலேட் தயாரிக்க பெரும்பாலும் இறக்குமதி கோகோவே பயன்ப்படுகிறது, இறக்குமதியை குறைக்க உள்நாட்டில் சாகுபடி செய்யலாம் என 1970 முதல் இந்திய தோட்டக்கலை துறையால் ஊக்குவிக்கப்பட்டு பயிரிடப்படுகிறது.

கேரளா, மற்றும் கர்நாடகா கோகோ சாகுபடியில் முன்னணியில் உள்ள் மாநிலங்கள் ஆகும் ஆனால் அம்மாநிலங்களில் பாக்கு, தென்னை, மிளகு,அல்லது ரப்பர் தோட்டங்களில் ஊடுபயிராகவோ அல்லது கலப்பு பயிராகவோ தான் சாகுபடி செய்யப்படுகிறது என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

இப்போ மலரும் எர்த் நிகழ்ச்சிக்கு வருவோம், அந்நிகழ்ச்சியில் காட்டுப்பொறியின் விளம்பர நிகழ்வாக கோகோ சாகுபடியை ஊக்குவித்து நடத்தும் நிகழ்சியில் என்ன சொல்லப்படுகிறது என்றால்,

காட்டுப்பொறி நிறுவனம் ,கோகோ நாற்றுகள் ,உரம் ,எப்படி பயிரிடுவது என்ற ஆலோசனை எல்லாம் வழங்கும் நாமும் சுமார் ஒரு லட்சம் அதற்கு கொடுத்து விட வேண்டும், பின்னர் மரம் வளர்ந்து காய்க்க துவங்கியதும் காய்களில் இருந்து எடுக்கப்படும் கொட்டைகளை அவர்களே நல்ல விலைக்கு வாங்கிகொள்வார்கள்,அதுவும் நம் தோட்டத்திற்கே வந்து, விவசாயி தோட்டத்தினை விட்டு அங்கு இங்கு அலைய தேவையில்லை.இதைப்படிக்கும் போதே எங்கோ கேட்ட நினைவு வருமே :-))

ஆமாம் எல்லாம் ஈமு ஃபார்முலாவே தான், ஏன் இவ்வளவு ஆர்வமாக காட்டுப்பொறி செயல்ப்படுகிறது எனக்கேட்டால், அவர்கள் தான் இந்தியாவிலே ஸ்வீட் எடுக்கொண்டாடு என சாக்கலேட் தயாரிப்பதில் பெரியவர்களாம். எனவே அவர்களுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் டன்கள் கோகோ விதைகள் தேவைப்படுகிறதாம் ,பெருமளவு சர்வதேச சந்தையில் வாங்கியே தற்போது தயாரிக்கப்படுவதாகவும் , இனிமேல் உள்நாட்டில் உற்பத்தி செய்ய விவசாயிகளை ஊக்குவித்து அவர்களே ஒப்பந்த முறையில் வாங்கி எல்லா விவசாயிகளையும் பெரும்பணக்காரர்கள் ஆக்க என ஒரு சிறப்பான திட்டம் தீட்டி செயல்படுத்துவதாக சொல்கிறார்கள்.

திட்டத்தினைப்பற்றி கேட்கும் போதே ஜிவ்வுன்னு இருக்கவே நாமும் போட்டுப்பார்க்கலாமா என அப்போது ஒரு புரட்சிகரமான சிந்தனை எனக்குள்ளும் எட்டிப்பார்த்தது அப்புறம் வழக்கம் போலவே குப்புர அடிச்சு தூங்கிப்போச்சு :-))

இத்திட்டத்தில் இருக்கும் சில உள்குத்துக்களைப்பார்ப்போம்,

கோகோ நாற்று ,உரம், ஆலோசனைக்கு என நம்மிடம் முன்னரே பணம் வாங்கிவிடுவார்களாம், பணம் இல்லை எனில் நம் நிலத்தின் மீது வங்கிக்கடனும் பெற்று தர கருணையுடன் உதவுவார்களாம்.

அப்படி செய்தால் மட்டுமே நம்மிடமே மீண்டும் விதைகளை வாங்க்கிக்கொள்வார்கள், நாமாக எங்காவது கோகோ நாற்று வாங்கி நட்டு உற்பத்தி செய்யக்கூடாதாம் ,வாங்க மாட்டார்கள்.

மேலும் உரம் அவர்கள் தருவதை வாங்க வேண்டும் , அப்போ தானே கொடுத்த காசுக்கு கணக்கு வரும் :-))

கோகோ தேவை என்பவர்கள் விவசாயி அவனே நட்டு உற்பத்தி செய்தால் ஏன் வாங்க மாட்டேன்கிறார்கள்? என்ற கேள்விக்கு விடையில்லை.

எனது அவதானிப்பு என்னவெனில் நாற்று ,உரம் என விற்பதிலேயே பெரும் லாபம் கிடைக்கும் அதனை அடையவே இப்படி ஒரு ஒப்பந்தம்,ஆனால் அவர்கள் சொல்வது தரமான கலப்பின நாற்றுகள் அவர்களிடம் மட்டும் இருக்கிறதாம்,தரத்திற்காகவே அப்படியாம். நம்புறவங்க நம்பலாம்.

மரக்கன்று நட்டால் காய்ப்பு துவங்க சுமார் 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும், அதுவரைக்கும் நாம் உரம் வாங்கிக்கொண்டு இருக்க வேண்டும், வெளியில் உரம் வாங்கினால் செல்லாது. ஆகா நல்லா இருக்கே டீலிங். :-))

சரி 5 ஆண்டு ஆனப்பிறகு கோகோ விதையை திரும்ப வந்து வாங்குவாங்களா? அதுக்கு என்ன உத்தரவாதம் என்றால் நாங்க ரொம்ப பெரிய நிறுவனம் ஏமாற்ற மாட்டோம், நம்பணும் சொல்றாங்க.

மேலும் ஒரு கிலோ கோகோ கொட்டைக்கு சுமார் 175-200 ரூபாய் விலைக்கொடுப்போம் என்கிறார்கள். இதனையும் நம்பணும்.

இந்த இடத்தில் தான் எனக்கு இடிச்சது , தள்ளி உட்காருன்னு சொல்லாதிங்க.இணையத்தில் துழாவினேன் , செம போங்கு ஆட்டம் ஆடி இருக்காங்க.

ஒரு கிலோ கொட்டைக்கு 110-120 ரூபாய் தான் சராசரியா கோக்கோ விலைப்போகுதுன்னு போட்டு இருக்காங்க, அந்த விலைக்கு கூட சமயத்தில் வாங்க ஆள் இல்லை.
(கோக்கோ பரவல்)

இதில் இன்னொரு கொடுமை என்னவெனில் இந்த காட்டுப்பொறி நிறுவனம் 2010 இல் கர்நாடகா மற்றும் கேரளாவில் 100-120 விலைக்கு கூட வாங்க மாட்டோம் என கையை விரித்து விட சுமார் 40,000 டன் கோகோ கொட்டைகள் வாங்க ஆள் இல்லாமல் கிடந்துள்ளது , கடைசியில் விவசாயிகளை காப்பாற்ற மாநில அரசின் கேம்ப்கோ என்ற கோகோ, பாக்கு கூட்டுறவு சங்கம் மூலம் வாங்கி விவசாயிகளை காப்பாற்றியுள்ளது, அப்போது விவசாயிகளுக்கு போட்டக்காசு அளவுக்கு தான் கிடைத்துள்ளது.

கேம்ப்கோ அந்த கொட்டையை வச்சுக்கிட்டு என்ன செய்யுமாம் என அதனை விற்க முயன்றுள்ளது ஆனால் வாங்க ஆளே இல்லை. ஏன் என்றால் சர்வதேச கோக்கோ விலை கம்மியா இருக்குன்னு இந்தியாவில் இருக்கும் மற்ற நிறுவனங்கள் இறக்குமதி செய்துக்கொண்டன.

சரி சர்வதேச சந்தையில் விற்றுக்காசாக்கலாம்னு கேம்ப்கோ முயற்சித்தால் ,இந்திய கோகோ கொட்டைகள் தரமாக இருக்காதுன்னு யாரும் வாங்க முன்வரவில்லையாம்.

ஒரு தொ.கா விளம்பரத்தில் தரமான கோக்கோ விதைகளையே வாங்குவதாக காட்டுவதைப்பார்த்திருப்பீர்கள். அதே கதை தான் கேம்ப்கோவிற்கு கண்ணீர் விடாதக்குறை தான் , ஒருவழியாக கிடைச்ச விலைக்கு விற்று வந்திருக்கிறார்கள்.

ஆனால் ஆரம்பத்தில் காட்டுப்பொறி சொல்வது என்னவென்றால் ஒரு பத்து ஏக்கரில் கோக்கோ போட்டால் ஏக்கருக்கு லட்சம் லட்சமாக வருவாய் வரும் சில ஆண்டுகளில் கோடிஸ்வரன் தான் பின்னர் மும்பைக்கு போய் அசின் ஐ ஹீரோயினாப்போட்டு ஷாருக்கானை ஹீரோவகப்போட்டு ஹிந்திப்படம் தயாரிக்கலாம், உங்களுக்கு அதிஷ்டம் இருந்து படம் ஹிட் ஆச்சுன்னா கோடிகளில் அள்ளலாம், அசின் அம்மாவையே மாமியார் ஆக்கலாம்னு செமையா சாம்பிராணி போட்டுவிடுறாங்க அப்பிராணிகளுக்கு :-))

(ஹி..ஹி..மலபார் சாக்கோபார்)
கோக்கோ கொட்டைக்களின் விலை என்பது நிலையானதே அல்ல ஒரு சமயம் கிலோ ரூ 200 போகும், அதுவே குப்புற அடிச்சு 100 ரூ ஆகலாம் ,எல்லாம் சர்வதேச விளைச்சலைப்பொறுத்தே.

மேலும் இந்திய கோக்கோ தரம் இல்லைனு இன்னும் விலைக்குறைச்சு 50 ரூ எனவும் கேட்கலாம், ஏன் எனில் மரம் வச்சு 5 வருஷம் பணம் செலவு செய்து வளர்த்தாச்சு எனவே விளைச்சலை விற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஆகிவிடும்.

ஒரு ஏக்கருக்கு 200 கிலோ கொட்டைகளே விளைச்சல் ஆக வாய்ப்புள்ளது. அதிக பட்ச விலை 200 ரூ என வைத்தாலும் ஏக்கருக்கு 40,000 ரூ தான் வருமானம் இதில் செலவுகள் போக என்ன நிற்கும் என தெரியவில்லை.

சராசரி விலை 100-120 என வைத்துப்பார்த்தால் ஒரு ஏக்கருக்கு 25,000க்கு மேல் வருமானம் வர வாய்ப்பேயில்லை, அதற்கு நெல் போட்டாலும் அதானே வரப்போகுது, இதில் முதல் 5 வருடம் காய்ப்பு இல்லாமல் வெறும் மரத்தினை வளர்க்க வேண்டும்,அதற்கு காட்டுப்பொறி சொல்வது என்ன வென்றால் ஊடுபயிராக காய்கறிப்போட்டு வருமானம் ஈட்டலாம் என்கிறர்கள்.

ஒரு லட்சம் வேற கொடுத்துவிட்டு இவ்வளவு கஷ்டப்பட்டு கோக்கோ பயிரிட்டு கொடுக்கணுமா, இதை பணம் கொடுக்காமலே செய்ய தெரியாதா என்ன? லட்சங்களில் வருமானம்னு நம்பித்தானே எல்லாம் இரங்குறாங்க.

கேரளா .கர்நாடகாவில் பெரும்பாலும் கோக்கோவே ஊடுபயிர் தான் இங்கே கோக்கோவில் ஊடுப்பயிர் செய்ய சொல்றாங்க, இங்கும் தென்னையில் சிலர் ஊடுப்பயிர் செய்கிறார்கள்,அவர்களுக்கு ஓரளவு சமாளிக்க முடியும்,ஆனால் தனிப்பயிராக போட்டால் என்னாகும் என்று சொல்ல முடியாதே, அனேகமாக கடன் மட்டுமே நிகர பலனாக இருக்கும் :-))

இப்போ தமிழ் நாட்டில் மிக குறைந்த அளவே காட்டுப்பொறியினை நம்பி கோக்கோ போட்டு இருக்கிறார்கள், இன்னும் 4-5 ஆண்டுகளில் தான் இது இன்னொரு ஈமுவா என்பது தெரியும்.ஏற்கனவே கர்நாடகா மற்றும் கேரளாவில் 2010 இல் அல்வா கொடுத்துள்ளதை வைத்துப்பார்த்தால் வருங்காலத்தில் தமிழ்நாட்டில் பல விவசாயிகளின் கோவணங்கள் உருவப்படும் என்றே நம்பலாம்.

கோக்கோ உற்பத்தியில் உலகின் முன்னணியில் இருக்கும் நாடுகளைப்பார்த்தாலே தெரியும் கோக்கோ பயிரிட்டு கோடிஸ்வரன் எல்லாம் ஆக முடியாது என்பது.நாடுகளின் பட்டியல்

1) ஐவரி கோஸ்ட்,

2) கானா,

3)இந்தோனேசியா

4)நைஜீரியா

5)பிரேசில்

6)கேமரூன்

7) ஈக்கவடார்

8)கொலம்பியா

எல்லா நாடுகளுமே சுமாரான பொருளாதார நாடுகளே, மேலும் கானா, கேமருன், ஐவரி கோஸ்ட் எல்லாம் வறுமையான நாடுகளே.

காட்டுப்பொறி சொல்வது போல ஏன் அவர்கள் கோடிஸ்வரர்கள் ஆகவில்லை என்று தெரியவில்லை.பற்றாக்குறைக்கு ஆசியாவில் முன்னணியில் இருந்த மலேசியா பல கோக்கோ தோட்டங்களை அழித்துவிட்டு எண்ணைப்பனை நட ஆரம்பித்து விட்டது என்றும் செய்திகள் வருகின்றன.

ஏற்கனவே தேக்கு வளர்ப்பு ,செம்மறியாடு வளர்ப்பு , ஈமு வளர்ப்பு என் பல டிசைன்களில் தமிழக விவசாயிகளை மொட்டை அடிச்சாச்சு இப்போ கோவணம் மட்டும் தான் மிச்சம் ,அது கொஞ்சம் பளிச்சின்னு கண்ணை உறுத்துது போல அதையும் உருவ காட்டுப்பொறி திட்டம் போடுதுன்னு நினைக்கிறேன், அதுக்கு பீப்பிள் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன , கூடிய விரைவில் சினிமா ஸ்டார்கள் வந்து கோக்கோ போட வாங்கோன்னு கூப்பிடுங்க ,மக்களும் அலை அலையாய் போய் சிக்கத்தான் போகுதுங்க ,நம்ம சொன்னால் எவன் கேட்க போறான் :-))

பின்குறிப்பு:

# இணையம் மற்றும் செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது உண்மையில் நல்ல திட்டம், கெட்ட திட்டம் என உறுதியாக சொல்ல இயலாது ,ஆனால் 2010 இல் கர்நாடகா மற்றும் கேரளாவில் குறைந்த விலைக்கு தான் வாங்குவேன் என சொல்லி புறக்கணித்த செய்தி கேம்ப்கோ இணைய தளத்தில் உள்ளது நீங்களே படித்து ஒரு முடிவுக்கு வரவும்.

CAMPCO= The Central Arecanut and Cocoa Marketing and Processing Co-operative Limited or CAMPCO was found on 11 July 1973 at Mangalore.

இது கேரள மற்றும் கர்நாடக தோட்டக்கலை துறைகளின் கூட்டு முயற்சியில் உருவான கூட்டுறவு அமைப்பாகும்.

சுட்டி:# வேண்டுகோள்: சரியாக எதிர்காலம் தெரியாத இது போன்ற குபேர திட்டங்களில் ஈடுபடும் முன் ஒரு முறைக்கு பல முறை சிந்திக்க வேண்டும்,தேனூறும் வாக்குறுதிகளுக்கு நம்பக்கூடாது, எதுவும் நடந்த பின் புலம்புவதை விட முன்னரே யோசித்தால் தடுக்க முடியும்,எனவே பதிவர்கள்,தெரிந்த விவசாயிகள் இப்படியான திட்டங்களில் ஈடுப்படுவது தெரிந்தால் கவனத்துடன் இருக்குமாறு எச்சரிக்கலாமே.

விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார்...

சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்து விட்டு
அதிஷ்டம் இல்லை என்பார்!!!

-----------
பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள்.

விக்கி,கூகிள்,கேம்கோ இணைய தளங்கல்,நன்றி!
****************