Thursday, July 12, 2012

சினிமா ரகசியம்-VFX-1
ஹாலிவுட் படங்களுக்கு இணையாக தமிழில் ,இந்தியாவில் படம் எடுக்கிறோம்னு சொல்வதெல்லாம் ஒரு எதிர்ப்பார்ப்பை உருவாக்கி மக்களை கவர செய்யும் விளம்பர யுக்தியாகும் , ஹாலிவுட் தொழில் நுட்பத்துக்கு சுமார் 20 ஆண்டுகள் பின் தங்கியே நமது தொழில்நுட்பம் செயல்படுகிறது, ஆனாலும் நமது பொருளாதார நிலையை கணக்கிலெடுக்கும் போது நாம் அவ்வளவு தான் செலவு செய்ய முடியும், எனவே அதில் தவறில்லை,ஆனாலும் "ஹாலிவுட்டுக்கு" இணையானு முழக்கம் மட்டும் குறைவதில்லை.அவங்க 20 வருடம் முன்னர் பயன்ப்படுத்திய ஒரு தொழில்நுட்பத்தினை இப்போ பயன்ப்படுத்திட்டு ஹாலிவுட் தொழில்நுட்பம்னு சொல்லிக்கொள்ளும் போக்கினை எப்போ கை விட போறாங்க?

டெர்மினேட்டர் -2 படம் 1991இல் வந்த படம் அதுக்கு பயன்ப்படுத்திய தொழில்நுட்பத்தினை , இப்போ வந்த எந்திரனில் பயன்ப்படுத்திட்டு ,ஹாலிவுட் அளவுக்கு கிராபிக்ஸ் பயன்ப்படுத்தி இருக்கோம்னு சொல்வதெல்லாம் விளம்பர யுக்தியே.டெர்மினேட்டரில் பயன்ப்படுத்திய மெகட்ரானிக்ஸ், இன்ன பிற பழைய தொழில்நுட்பங்களை எந்திரனில் பயன்ப்படுத்தி "சூப்பர் ஸ்டாரை கஷ்டப்படுத்தி எடுத்தார்கள், தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் எளிதாக எடுத்திருக்கலாம் ஆனால் அதனை பயன்ப்படுத்திக்கொள்ள இந்தியாவில் முடியாமல் போனதற்கு காரணம் பட்ஜெட், ஹீரோவுக்கு 20 கோடி கொடுப்பாங்க, ஆனால் தொழில்நுட்பத்திற்கு அவ்ளோ செலவு செய்ய மாட்டாங்க, நம்ம தயாரிப்பாளர்கள் சொல்லும் 100 கோடிக்கு மேலான செலவு கணக்கெல்லாம் சும்மா உட்டாலக்கடியென நினைக்கிறேன் :-))

டெர்மினேட்ட்ர்-2 படத்திற்கு 1991ல் 94 மில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது, அப்போதைய ஹாலிவுட் படங்களில் அதுவே அதிகப்பட்சம், அதில் 51 மிலியன் டாலர்கள் "visual effects&production" க்கு செலவிடப்பட்டுள்ளது என்றால் படத்தின் தரத்திற்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது புரியும்.

ஹாலிவுட்டில் இதெல்லாம் சாத்தியம் ஆக காரணம் , மிக வேகமான கணினிகளும் ,வேகமான கிராபிக்ஸ் சிப்புகளுமே, மேலும் நினைவகம், கேமரா திறன், மென்பொருள் என அனைத்தும் முன்னேறிவிட்டது.நம்ம நாட்டில இன்னும் சரியான "கம்பியூட்டர் ஹார்ட் வேர் "உள்ள கிராபிக்ஸ் ஸ்டுடியோவே இல்லை எனலாம், சிலிக்கான் கிராபிக்ஸ் ஒர்க் ஸ்டேஷன்களை தாண்டி சிறப்பான "ஹார்ட் வேர்" என எதுவும் இந்தியாவில் பயன்ப்படுத்துவதில்லை, அப்புறம் எங்கே இருந்து ஹாலிவுட்டுக்கு இணையாக கிராபிக்ஸ் செய்ய :-))

நம் ஊரில் புதிய மென் பொருள் வந்தால் உடனே வாங்கிவிடுவார்கள் ஆனால் அதற்கு தேவையான "ஹார்டு வேர்" வாங்காமல் மினிமம் செட் அப்பில் மென்பொருளை இயக்குவதால் காட்சிகளிலும் அதிக துல்லியம் இருக்காது.இப்போது அதிவேக கணினி, GPU, ரேம் மெமரி எல்லாம் உள்ளதால், உடனடியாக திரையில் ரிசட் பார்க்க முடியும், இதனையே "live action" என்கிறார்கள். நம்ம ஊருக்கு இதெல்லாம் வர சில காலம் பிடிக்கலாம்,அது வரையில் எல்லாம் போஸ்ட் புரொடக்‌ஷனில் தான் வேலை நடக்கும்.

கீழ் கண்ட காணொளியில் எப்படி மோஷன் கேப்சரிங்/பெர்மான்ஸ் கேப்சரிங் செய்யப்படுகிறது, 3டி உருவத்தினை எளிதாக உருவாக்க 3டி கேமிரா எல்லாம் பயன்ப்படுத்துவதனை காணலாம். இதில் சிறப்பு என்னவெனில் live action, 3டி, விர்ச்சுவல் கேமரா ,மோஷன் கேப்சரிங் எல்லாம் ரியல் டைமில் நடக்கும், இப்படியான தொழில்நுட்பத்தில் தான் அவதார், டின் டின் எல்லாம் உருவானது.

video:


விடியோ-2


------------

சூப்பர் ஸ்டார் நடிக்கும் "கோச்சடையான் படம் "பெர்பார்மென்ஸ் கேப்சரிங்க்" தொழில்நுட்பத்தில் எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது, அப்படி எடுக்கப்பட்டால் இந்தியாவின் முதல் படமாக அமையும், பட்ஜெட் அந்த அளவுக்கு தாங்குமா ,எப்படி பயன்ப்படுத்தி எடுக்க இருக்கிறார்கள் என தெரியவில்லை, சூப்பர் ஸ்டார் வரும் காட்சிகளை மட்டும் அப்படி எடுத்து செலவினை குறைப்பார்கள் என நினைக்கிறேன், மற்ற கதாபாத்திரங்கள் இயல்பானவர்களாக இருக்கலாம்.

சுட்டி:


*****

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி, கூகிள்,filmmakeriq.com இணைய தளங்கள்,நன்றி!
------------