Saturday, January 25, 2014

காக்க காக்க கணினி காக்க -1


("One man Army"-வவ்வால் இருக்க இணையத்தில் பயமேன்...ஹி...ஹி)


இணையப் பாதுகாப்பு:

இணைய இணைப்பில்லா கணினி என்பது நாம் மட்டுமே பயன்ப்படுத்தும் நமது படுக்கை அறை கழிவறைப்போன்றது, நமது "தனிப்பட்ட அந்தரங்கங்கள்" பாதுகாக்கப்படும்,மேலும் நோய் தொற்று போன்றவையும் இருக்காது,ஆனால் இணைய இணைப்புடன் உள்ள கணினி என்பது "நகராட்சி கட்டண பொதுக்கழிவறை"  போன்றது,அதுவும் தாழ்ப்பாள் இல்லாத கதவுடைய கழிவறை எனில் அந்தரங்கத்தை காக்க "கையால் பிடித்துக்கொண்டே" இருக்க வேண்டும் ,கதவைத்தான்!

கொஞ்சம் அசந்தாலும் அவசரக்காரர்கள் உள் நுழைந்து ,அந்தரங்கத்தினை வெட்ட வெளிச்சமாக்கும் சாத்தியமுள்ள அபாயமிகு பிரதேசம்.

ஆனால் இக்காலத்தில் இணைய இணைப்பில்லா கணினி வைத்திருப்பது கல்யாணம் ஆகியும் கட்டை பிரம்மச்சாரியாக வாழ்வது போல "வெட்டியானது" என்பதால் கணினி வாங்கிய கையோடு ,இணைய இணைப்பும் வாங்கி தேநிலவு கொண்டாடுவதே அனைவரின் விருப்பத்தேர்வாக உள்ளதால், இணையப்பயன்பாட்டு பாதுகாப்பிற்கு ஏதேனும் "உறை" போட்டேயாக வேண்டிய நிலை,ஆனால் எத்தனை நோய்தடுப்புசி போட்டு(anti virus),நெருப்பு சுவர் கட்டி(Fire wall)  வச்சாலும், இணையத்தில் திருட்டு கொசுத்தொல்லையை ஒழிக்கவே முடியாது.

பலரும் வரது வரட்டும் எல்லாம் பகவான் பாத்துப்பான் என இணையத்தில் உல்லாச ஊஞ்சல் ஆடிக்கிட்டு தான் இருக்காங்க, பகவானுக்கு சொந்த பிரச்சினைகளையே தீர்க்க நேரமில்லை, காது குளிர தமிழில் தேவாரம் கேட்கலாம்னா கூட கேட்க முடியாது,பத்தாததுக்கு சின்னவூடு,பெரிய வூடு சண்டை, பசங்களூக்குள்ள மாம்பழ பாகப்பிரிவினை பஞ்சாயத்துனு ஆல் டைம் பிசியோ பிசி! இதுல எங்கே இருந்து வந்து நம்ம கணினிய காக்கப்போறார்,எனவே நமக்கு நாமே திட்டமாக "கணினிப்பொட்டிய" காபந்து பண்ணிக்கிட்டாத்தான் இணையத்தில இடைஞ்சல் இல்லாம கும்மாளம் அடிக்க இயலும்.

எனவே அடியேனின் கற்றது,பெற்றது,கடன் வாங்கியது,களவாடியது என கைவரப்பெற்ற கணினி அனுபவங்களை கொண்டு ஒரு கணினி பாதுகாப்பு மற்றும் பயனர் கையேடு ஒன்றினை தொடராக வழங்கலாம் என நினைக்கிறேன்.

ஜில்லாக்குத்து மாஸ்டர் ரேஞ்சில எல்லாம் பெருசா எதுவும் எதிர்ப்பார்க்காதிங்க, ஒரு கணினி கைநாட்டின் சுய அனுபவத்தின் வெளிப்பாடாகவே இருக்கும், இனிமே மெயின் பிக்சருக்குள்ள போகலாம்.

கடவுச்சொல் திருட்டு.

சமீபத்தில் அடியேனுக்கு வாய்க்கப்பெற்ற ஒரு அனுபவத்திலிருந்தே ஆரம்பிக்கிறேன், நாமளே மாசத்துக்கு ரெண்டு மூனு பதிவு தேத்துறதுக்கே தலையால தண்ணிக்குடிக்க வேண்டி இருக்கு,அதுக்கும் ஆப்பு வைக்கிறாப்போல ,கடந்த மாசம் அம்னீசியா பேஷண்ட் போல ,பிலாக்கர்,என்ன யார்னே தெரியாதுனு சொல்லிடுச்சு! அவ்வ்!

நான் தான்யா அவன், அவனே தான் நான்னு தலைகீழாக நின்னு சொல்லிப்பார்த்தும் ,சிறிதும் கருணையின்றி காந்தி ஜெயந்தி அன்னிக்கு கதவை அடைச்ச டாஸ்மாக் போல கதவை மூடிக்கிச்சு, அப்புறம் கறுப்பு சந்தையில கட்டிங் வாங்குறாப்போல, கடவுச்சொல் மீட்டெடுப்பு மூலம் மீண்டும் நம்ம கடையில ஐக்கியமானேன்.

ஏன் இப்படி ஆச்சுனு நம்ம சிற்றறிவை கொஞ்சம் பிறாண்டிப்பார்க்கையில் கடந்த சில நாட்களாக அடிக்கடி

 "you are logged in from different location,

you are logged out from different location"

என்பதான புனித செய்திகள் வந்துக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது, அப்பொழுதெல்லாம் இது ஏதோ வேலையத்த வேலையா கூகுள் செய்யுதுனு நினைச்சு அசமந்தாக போயிட்டேன். இப்ப கொஞ்சம் லேட்டா டியூப்லைட் எரிய ஆரம்பிச்சது,யாராவது நம்ம கணக்கில நமக்கே தெரியாம டீயாத்துறாங்களானு.

ஹி...ஹி அப்படியே எதாவது ஆட்டய போடப்பார்த்தாலும் நாம தான் அனாமத்தா வச்சிருக்கோமே உருவறதுக்கு கோவணத்த தவிர நம்ம கிட்டே ஒன்னியுமே இல்லைனு தெரியாம எவனோ "வேலையக்காட்டுறானே" என சிரிப்பு தான் வந்தது.

ஆனாலும் கோவணமா இருந்தாலும் என்னோடதாக்கும்! அதை எப்படி விடனு, நம்ம சுயம் விழித்தெழ, "தூங்கிட்டு இருந்த மிருகம்" சிலிர்த்துக்கொண்டது. அதன் பிறகு நம்ம கூகிள் அக்கவுண்ட்ல என்னமாதிரியான வரவுகள் ஆகி இருக்குனு கவனிச்சேன், அங்கே தான் "கொசு கூடாரம்" போட்டிருந்தது அவ்வ்!

கூகுள் கணக்கு சரிப்பார்ப்பு:

ஒருவலைப்பதிவு துவக்கி,இயக்க தேவை மற்றும் பயன்ப்படுவது,கூகுள் இணைய கணக்கு ஆகும், கடவுச்சொல் மாற்ற,வலைப்பதிவு செயலிகளை நிறைவேற்ற என கூகுள் கணக்கு மூலமே உள்நுழைந்து செயல்ப்படுத்த வேண்டும் என்பதை அனைவரும் அறிவீர்கள்.

நமது கடவுச்சொல் திருடுப்போய் அல்லது யாரேனும் ஃபிஷிங்(phishing) செய்து நமது கணக்கை அழிக்கும் முன்னர் கூகுள் கணக்கில் உள்நுழைய முடியுமானால் நாம் தப்பித்துக்கொள்ள முடியும், சில சமயம் நமது கடவுசொல்லை தற்செயலாக யாரேனும் தெரிந்துக்கொண்டு ,விளையாட்டாக அல்லது ஏதேனும் உள்நோக்கத்துடன் வலைப்பதிவில் விளையாடக்கூடும்,தவறான பின்னூட்டங்கள் இடலாம்,ஆனால் நமது கணக்கு மட்டுமழிக்கப்படாமல் இருக்கும், அப்படி வித்தியாசமான நடவடிக்கைகள் நமது கூகுள் கணக்கில் நடக்கிறதா,நமது கணக்கில் யாரேனும் அத்துமீறி நுழைகிறார்களா என்பதை அவ்வப்போது கவனித்து வரவேண்டும்.

எனது கூகுள் கணக்கில் அத்துமீறிய நுழைவுகள் சமீபத்தில் ஏற்பட்டது,அதனை எவ்வாறு,நீக்கினேன் என பகிர்கிறேன்,இது பலருக்கும் தெரிந்திருக்க கூடும், எனது சார்பில் ஒரு பகிர்வு.மேலும் அப்படி அத்துமீறி நுழைவுசெய்தவர் யாரென அறிந்துக்கொண்டால்,அப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ளவும் மற்றவர்களுக்கு உதவுமே!

அதற்கு முதலில் நமது கூகிள் கணக்கில் உள்நுழைவு செய்ய வேண்டும், கீழ்கண்ட படத்தில் உள்ளது போன்ற இடைமுகப்பு தெரியும்,

படம்-1


இதில் செக்கியூரிட்டி என்ற பகுதியை கிளிக் செய்தால்,

password

Recent activity

Account permissions

Recovery and alerts

என நான்குப்பகுதிகள் காட்டும்,

அதில் முதலில் "Recent activity" என்றப்பகுதில், வியூ ஆல் ஈவண்ட்ஸ் என்பதை அழுத்தினால், சமீப காலத்தில் எத்தனை முறை,எப்பொழுது,எங்கிருந்து நமது கணக்கில் உட்நுழைவு செய்துள்ளோம் எனக்காட்டும்.

படம்-2



இப்பகுதியில் காட்டப்படும் உள்நுழைவு விவரங்கள்,நமது இடம்,காலம்,கணினி இயங்குதளம் சார்ந்து ஒத்து வரவேண்டும்,அப்படி ஒத்து வரவில்லை எனில் நமது கணக்கு விவரங்கள் "நாமறிந்த ரகசியமல்ல ஊரறிந்த ரகசியம்" ஆகிடுச்சு எனப்பொருள், எனவே வெளியேறும் முன்"கடவுச்சொல்லை" மாற்றிவிட வேண்டும்.

வழக்கமாக கம்பிவட அகலப்பட்டை இணைய இணைப்பு(cable broadband)உடன் static ip இணையம் வைத்திருந்தால் நமது சரியான "புவியியல் இடம்" காட்டும்,எனவே நமது உள்நுழைவு என்பதை சரியாக அறியலாம்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் ,இணைய சேவை வழங்கியின் செர்வர் எந்த ஊரில் இருக்கோ அதனையே "நமது வசிப்பிடமாக" காட்டும்.

நாம் ஒரு சிற்றூரில் இருப்போம் ,செர்வர் அருகாமை நகரத்தில் இருக்குமெனில்,அவ்வூரையே நமது "வசிப்பிடமாக" காட்டும்.

கும்மிடிப்பூண்டியில் வசிப்பவருக்கும் சென்னையென்றே காட்டும்,எனவே யாரோ கடவுச்சொல்லை ஆட்டைய போட்டாங்கனு மிரள வேண்டாம்.

# தற்பொழுதெல்லாம் "கம்பியில்லா இணையச்சேவை "-3ஜீ ,அல்லது அலைப்பேசியின் GPRS /EDGE இணைப்பினையும் கணினியில் பயன்ப்படுத்துகிறார்கள், அலைப்பேசி இணைய செர்வர்கள் முற்றிலும் வேறுப்பட்ட இடத்தில் இருந்து இயக்கப்படுகின்றன,எனவே மாநிலம் விட்டு மாநிலம் எல்லாம் லோகேஷன் காட்டும்.

எனவே எந்தெந்த அலைப்பேசி நிறுவனத்தின் அலைப்பேசி இணைய செர்வர் எங்கே இருக்கென அறிதல் மிக அவசியமாகும்.

தமிழ்நாட்டைப்பொறுத்த வரையில்,

பி.எஸ்.என்.எல் அலைப்பேசி - சென்னை,பெங்களூர்,,அஹமதாபாத்,டெல்லி எனக்காட்டுகிறது. அவர்களுக்கு நிறைய இடங்களில் செர்வர்கள் உள்ளதால், டைனமிக் ஐ.பி ஃப்ரியாக உள்ள சர்வர்களில் இணைத்து விடுகிறார்கள்.

பெரும்பாலும் இணைய சேவை வழங்கிகள் "டைனைமிக் ஐ.பி எண்" தான் வழங்குவார்கள், ஒவ்வொரு முறை இணைப்பை துவங்கும் போதும் ஒரு புதிய ஐ.பி எண்ணே நமக்கு கிடைக்கும்.

டோகோமோ- புனே,மகாராஷ்ட்ரா,

வோடாஃபோன் - மும்பை ,மகாராஷ்ட்ரா

ஏர்டெல்- மும்பை,மகாராஷ்ட்ரா அல்லது ஹைதராபாத்,ஆந்திரா

ஏர்செல்-கோவை/சென்னை எனக்காட்டும்.

மேற்கண்ட விவரங்கள் நானே பயன்ப்படுத்தியதன் மூலம் அறிந்தது.

புவியியலிருப்பிடத்தினை அறிய, நமது இணைய தொடர்பின் ஐ.பி எண் தெரிந்திருக்க வேண்டும், இதற்கு ரொம்ப எல்லாம் மெனக்கெட வேண்டாம்,ஏதேனும் whois, trace route சேவை வழங்கும் இணையத்தளத்தில் நுழைந்தால் போதும் ,இணைய ஐ.பி யை காட்டும்.

எடுத்துக்காட்டாக,
http://whatismyipaddress.com/

இணையத்தளத்தில் நுழைந்தால் நமது  ஐ.பி காட்டும்,அல்லது ஐ.பி  காட்டும் கவுண்டர் விட்கெட் பதிவில் வைத்திருந்தால் அதுவே காட்டும்.

நாம் சொன்னது போன்ற தளங்களில் நுழைந்தால் ,ஐ.பி காட்டும் ,அதற்கு ஜியாலஜிகல் லோகேஷன் காட்ட அதற்கான சுட்டியை அமுக்கினால்  ,செர்வர் உள்ள இடத்தினை கூகுள் மேப்பில் காட்டும், வேலை சுலபமாகிடும்.

pic.1

pic.2

இப்பொழுது நமது இணைய சேவை வழங்கியின் இடம் தெரிந்தாகிவிட்டது, நமது கூகிள் கணக்கில் நடவடிக்கைகள் பகுதியில் பார்த்தால்,நமக்கான  "புவியியல் பிரதேசத்தில்" இருந்து நுழைவு செய்யப்பட்டதாக காட்ட வேண்டும்,காண்க "Recent activity" படம்.




# நமக்கான புவியியல் இடத்தின் உள்நுழைவு இல்லாமல் வேறு சில இடங்களில் இருந்து "உள்நுழைவு" செய்யப்பட்டதாக காட்டினால்,நமது கணக்கில்,யாரோ டீ ஆத்தப்பார்க்கிறாங்க  அல்லது மால்வேர்,ஸ்பைவேர், பிஷ்ஷிங்க் என ஏதோ விரும்பத்தகாத வேலை நடக்குது என ஒரு முடிவுக்கு  வரலாம்.

இப்ப அடுத்து என்ன செய்ய?

நம்ம கணக்கை இயக்கும் அதிகாரம் நம்மை தவிர யாருக்கிட்டே இருக்குனு பார்க்கனும்.

இதற்கு Account permissions இல் view all என்பதை அழுத்த வேண்டும், கீழ்கண்டவாறு ஒரு பெட்டி திறக்கும்,

படம்.


படத்தில் பார்த்தால் நமது கூகுள் கணக்கில் யாருக்கெல்லாம் இயக்க அனுமதிக் கொடுத்துள்ளோம் எனக்காட்டும்.

நம்ம பேரு  அல்லது நாம் விரும்பி அனுமதி கொடுத்தவர்கள் பெயர் மட்டும் தான் காட்டணும்.

ஆனால்  படத்தில் பார்த்தால் "உடான்ஸ்" என்ற தளத்துக்கும் அனுமதி கொடுத்திருப்பதாக காட்டுவதைக்காணலாம்.

இன்டி பிலாக்கர்,இன்டிலி,தமிழ்வெளி, தமிழ்மணம் என பல திரட்டிகளிலும் இணைத்துள்ளேன்,அவர்கள் எல்லாம் இப்படி கணக்கில் நுழைய அதிகாரம் பெற்றில்லை,உடான்ஸ் மட்டுமே கணக்கில் நுழைய ,அடிப்படை விவரங்கள் திரட்ட அனுமதிப்பெற்றதாக காட்டுவது சந்தேகத்திற்கிடமான செயல் ஆகும்.


எனக்கு நினைவு தெரிந்து அப்படி அனுமதி கொடுக்கவில்லை,அப்படி எனில் எப்படி சாத்தியமாச்சு?

அதனை அடுத்து  காணலாம், முதலில் உடான்ஸ் கொசுவை  விரட்டுவோம்.

உடான்ஸுக்கு என்ன வகையான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என வலப்புறம் காட்டுகிறது,அதற்கு மேலே "Revoke access" என உள்ளதை கவனிக்கவும்,நமது கணக்கை விட்டு வெளியேறும் முன் "ரிவோக் அக்செஸ்" என செய்துவிட வேண்டும் .இல்லை எனில் அடுத்த முறை நமக்கு உள் நுழைய அனுமதி கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.

இப்பொழுது ரிவோக் செய்தாகிவிட்டது, அப்படியே ஒரு முறை நமது கடவுச்சொல்லையும் புதிதாக மாற்றிவிட்டு ,மாற்றங்களை சேவ் செய்துவிட்டால்,நம்ம கணக்கு இனிமே நமக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும்.

கவனத்தில் கொள்க,

# கடவுச்சொல்லினை எண் மற்றும் எழுத்து எனக்கலந்து கொஞ்சம் நீளமாக வைப்பது பாதுகாப்பானது.

# ரெகவரி மெயில் ஐடி/அலைப்பேசி எண் எனக்கொடுத்து வைக்கலாம்.

# ஒவ்வொரு முறை இணையப் பயன்ப்பாட்டிற்கு  பின்னரும், ஹிஸ்டரி,குக்கீஸ் ஆகியவற்றை அழித்து விடுவது போல நமது உலாவியில் தேர்வு செய்து வைத்துக்கொள்ளலாம்.

# பொதுக்கணினிகளை பயன்ப்படுத்தும் பொழுது,பயனர்ப்பெயர்,கடவுச்சொல்லினை நினைவில் வைக்கும் தேர்வினை உள்நுழைவின் போது பயன்ப்படுத்தக்கூடாது.


# குக்கீஸ் &ஜாவா ஸ்கிரிப்ட்டை  பொதுவாக முடக்கி வைத்துவிட்டு,தேவைக்கு இயக்கிக்கொள்ள வேண்டும்.

சரி இப்ப "உடான்ஸ்" எப்படி நம்ம கணக்கில் ஒட்டிக்கிச்சு என்பதை ஆராயலாம்.

உடான்ஸ் என்பது ஒரு இலவச தமிழ்வலைத்திரட்டி, நமது வலைப்பதிவுகளை திரட்ட நாமாக முன்சென்று அதில் தகவல்களை அளித்து பதிவு செய்து இணைந்து கொள்கிறோம்.அப்பொழுது ஒரு "EULA"(enduser license agreement policy or privacy policy) இல் நமது ஒப்புதலை வாங்கிடுவார்கள், அதில் சுருக்கமாக "நம்ம தகவல்களை பெறுவோம்,பயன்ப்படுத்துவோம்" என சொல்வார்கள்,அனைத்து இணைய சேவைகளும் இவ்வேலையை செய்தாலும் சில ஆக்கங்கெட்ட கூமுட்டைகள்  மட்டும், நம்ம ரகசியத்தை உளவறியப் பயன்ப்படுத்திக்கொள்வார்கள்.

உடான்ஸ் திரட்டியில் இணைந்த பொழுதோ அல்லது பதிவுகளை திரட்ட அளித்த பொழுதோ நமது உலாவியில் "ஒட்டுக்கேட்கும்" ஸ்கிரிப்ட் கொண்ட குக்கீஸ்களை நிறுவிவிடுவார்கள், அவை நமதுஇணைய நடவடிக்கை மற்றும் லாக் இன் செஷன் குக்கீஸ்களை படிக்க வல்லது.


எடுத்துக்காட்டாக, நாம் பிலாக்கரில் உள்நுழைந்து இருக்கிறோம்,எனில் நமது கணக்கு விவரங்கள் பிலாக்கர் லாக் இன் செஷன் குக்கீசில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்,அப்பொழுது தான் நமது லாக் இன் ஆதண்டிக்கேட் ஆகும்.

சில சமயங்களில் நமது "லாக் இன் செஷன்ஸ்" ஐ.டி குக்கீசை அப்படியே ஹைஜாக் செய்து,வேறு இடத்தில் இருந்து நுழைவு செய்யவும் செய்யலாம்

கூகுள் போன்ற இணைய சேவை  ஜாம்பவான்களும் இப்படித்தகவல்களை பெறுகின்றார்கள்,ஆனால் பெரும்பாலும் சில்லறைத்தனமாக அனைவரின் கணக்கிலும் விளையாட மாட்டார்கள், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு சிலரின்  கணக்கில் கைவைக்கக்கூடும். அமெரிக்காவின் NSA கதை அனைவரும் அறிந்ததே.

பிஷிங்க் என்பது ஒரு புகழ்ப்பெற்ற தளம் போல நடித்து கணக்கு விவரங்களை திருடுவது, மேற்சொன்னது போல ஒட்டுக்கேட்கும் குக்கீஸ் மூலம் தகவல்களைப்பெற்று தவறாகப்பயன்ப்படுத்துவதும் "பிஷிங்கில்" ஒரு வகையே.

இலவசமாக வழங்கப்படும் சேவை எல்லாமே தூண்டில் புழுக்களே, சிலர் நம்மை "மீன்ப்பிடித்து"விடுவார்கள்,சிலர் சந்தர்ப்பத்துக்காக விட்டுப்பிடிக்க காத்திருப்பார்கள் அவ்வ்!

உடான்ஸ் தளம் ,குக்கீஸ் மூலம் தகவல்களைப்பெற்றதோடு அல்லாமல் கூகிள் கணக்கிலும் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டு அத்துமீறி உள்நுழைவு செய்துள்ளது "இணைய அறத்துக்கு" புறம்பான செயல் ஆகும்.  நாம் சரியான நேரத்தில் கவனித்து  நீக்கிவிட்டோம். இது போல உடான்சில் இணைத்த அனைவருக்கும் நடக்க வாய்ப்புள்ளதால் அனைவருமே தத்தமது கூகிள் கணக்கை ஒரு முறை சரிப்பார்த்துக் கொள்வது நல்லது.

தற்சமயம் உடான்ஸ் திரட்டி செயல் படாமல் முடங்கியுள்ளது,ஆனாலும் அதன் உரிமையாளர்கள் முன்னர் பெற்ற தகவல்களை தவறாகப்பயன்ப்படுத்தும் வாய்ப்புள்ளதால்,அனைவரும் கவனமாக இருப்பதே நல்லது.

அடுத்தப்பகுதியில் மேலும் சில  பாதுகாப்பு நடவடிக்களை காண்போம்!

தொடரும்.
------------------------------------

பின்குறிப்பு:

# இக்கட்டுரை பொது மக்கள்,மற்றும் இணையப்பயனாளர்கள் நலன் கருதி ,ஒரு விழிப்புணர்வு நோக்கில் மட்டுமே வெளியிடப்படுகிறது,மற்றபடி ஒரு சிறுக்கொசுவிற்கும் தீங்கு விளைவிக்கும் நோக்கில் அல்ல!

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

விக்கி,கூகிள்,மைக்ரோசாப்ட் இணைய தளங்கள்,நன்றி!
------------------------------------

Friday, January 17, 2014

விருது வாங்கலையோ விருது!-OSCAR-the Academy Awards- 2014 nominations.

(நம்மளையும் ஆஸ்கார் விருது வாங்க சொல்லிடுவானோ? அவ்வ்)


ஆஸ்கார் விருதுகள்-2014 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது,இவற்றில் இருந்தே 86வது ஆஸ்கார் விழா விருதுகள் முடிவு செய்யப்படப்படும். இவ்வாண்டுக்கான ஆஸ்கார் இறுதிப்பட்டியலில் இந்திய தயாரிப்புகள் எதுவும் போட்டியில் இல்லை.




ஆஸ்கார் -2014 இறுதி தேர்வுப்பட்டியல்(நாமினேஷன்):

# Best picture

படம்.
(அமெரிக்கன் ஹஸ்டில்- ஹாலிவுட் பில்லா)

12 Years a Slave

American Hustle

Captain Phillips

Dallas Buyers Club

Her

Gravity

Nebraska

Philomena

The Wolf of Wall Street

# Best director


(Martin Scorsese,)

David O Russell, - American Hustle

Alfonso Cuarón, - Gravity

Alexander Payne, - Nebraska

Steve McQueen, - 12 Years a Slave

Martin Scorsese, - The Wolf of Wall Street

# Best actor

படம்.

(Chiwetel Ejiofor, 12 Years a Slave)

Christian Bale, - American Hustle

Bruce Dern,- Nebraska

Leonardo DiCaprio, -The Wolf of Wall Street

Chiwetel Ejiofor, - 12 Years a Slave

Matthew McConaughey, - Dallas Buyers Club

# Best actress
(அமெரிக்கன் ஹஸ்டில் நாயகி- சிறப்பாக திறமைகளை "வெளிப்படுத்தக்கூடியவர்") 

Amy Adams, -American Hustle

Cate Blanchett, -Blue Jasmine

Sandra Bullock,- Gravity

Judi Dench,- Philomena

Meryl Streep, - August: Osage County

# Best supporting actor


(Barkhad Abdi,-somalia)

Barkhad Abdi, - Captain Phillips(first somali actor to be nominated for oscar)

Bradley Cooper, - American Hustle

Michael Fassbender, - 12 Years a Slave

Jonah Hill, - The Wolf of Wall Street

Jared Leto,-  Dallas Buyers Club

# Best supporting actress


(Jennifer Lawrence, American Hustle- சப்போர்ட்டே தேவைப்படாதவர்)

Sally Hawkins, - Blue Jasmine

Jennifer Lawrence, - American Hustle

Lupita Nyong'o, - 12 Years a Slave

Julia Roberts, - August: Osage County

June Squibb, - Nebraska

# Best original screenplay

(nominated for best screenplay(original)

American Hustle

Blue Jasmine

Dallas Buyers Club

Her

Nebraska

# Best adapted screenplay

(nominated for best screenplay-adapted)

Before Midnight

Captain Phillips

Philomena

12 Years a Slave

The Wolf of Wall Street

# Best foreign film

படம்.
(ஓமர் படத்தில் ஒரு காட்சி)

Broken Circle Breakdown (Belgium)

The Great Beauty (Italy)

The Hunt (Denmark)

The Missing Picture (Cambodia)

Omar (Palestine)

# Best documentary

படம்.


The Act of Killing

Cutie and the Boxer

Dirty Wars

The Square

20 Feet from Stardom

# BEST DOCUMENTARY(SHORT)

CaveDigger

Facing Fear

Karama Has No Walls

The Lady in Number 6: Music Saved My Life

Prison Terminal: The Last Days of Private Jack Hall

# BEST SHORT FILMS:

Aquel No Era Yo (That Wasn't Me)

Avant Que De Tout Perdre (Just before Losing Everything)

Helium

Pitääkö Mun Kaikki Hoitaa? (Do I Have to Take Care of Everything?)

The Voorman Problem

மேலதிக விவரங்களுக்கு செல்க,

 # http://oscar.go.com/nominees


# மைய நீரோட்ட திரைப்படங்கள் (mainstream films)குறித்து நம்ம வெகு சன ஊடகங்கள்  விலாவாரியாக நிறைய கதைக்கும்,என்பதால் அதிகம் கவனிக்கப்படாத சில திரைப்படங்கள், குறும்படங்கள்,ஆவணப்படங்கள், அனிமேஷன் வகையறாப்படங்கள் குறித்து கொஞ்சம் பார்க்கலாம்.

மேற்சொன்ன இணையூடக(parallel cinema) வகை கலை படைப்புகளில்,"மத்திய கிழக்கு மற்றும் இஸ்லாமிய" பிரதேச படைப்பாளிகள் ஒரு புதிய அலையாக  உருவெடுத்து ஆஸ்கார் இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது "கலைப்படைப்புகள்" மீதான இறுக்கமான இஸ்லாமிய பார்வைகள் நெகிழ்வான போக்கில் மாறிவருவதை காட்டுகிறது.

மேலும் இம்மாற்றம்  இந்திய கலைப்படைப்பாளிகளுக்கு  மவுனமொழியில் உரக்க தெரிவிக்கும் ஒரு பாடமாகவும் கருதலாம்.

இந்தியாவில் அனைத்து வகை ஊடக சுதந்திரம் மற்றும் படைப்புலக வசதிகள் ,தொழில்நுட்ப பின் புலங்கள் என வைத்துக்கொண்டு, டிடிஎஸில் செவிப்பறை கிழிய "பஞ்சு டயலாக்குகள்"பேசுவதிலும், நாபிக்கமல குளோஸ் அப்புகளிலும்  மட்டுமே மூழ்கி முத்தெடுக்கும் கலையுலக பிரம்மாக்களும்,95 கோடியைக்கொட்டி விசேஷரூபமாக காப்பியடிக்கும் லோகநாயகர்களும் ,தொலைக்காட்சி பேட்டிகளில் மட்டும் "ஹாலிவுட்" தரம் என பீற்றிக்கொள்வதை குறைத்துக்கொண்டு ,உருப்படியாக உலக தரத்தில் கலைப்படைப்புகளை கொடுங்கடா நொண்ணைங்களா என ஒவ்வொரு சராசரி திரை ஆர்வலனும் உரக்க குரல்கொடுக்க நேரிடும் காலம் வெகு தொலைவில் இல்லை என நினைக்கிறேன்.

ஓமர்(பாஸ்தீனம்)


பாலஸ்தீனத்தயாரிப்பான ஓமர் சிறந்த அயல் நாட்டு திரைப்படப்பிரிவில் இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது. பாலஸ்தீனத்திலிருந்து ஆஸ்கார் நாமினேஷன் இறுதிப்பட்டியலுக்கு தேர்வான இரண்டாவது திரைப்படம், யுத்தம்,ரத்தம் என அன்றாட வாழ்வில் பலப்பிரச்சினைகள் கொண்ட ஒரு தேசத்தில் கலைப்படைப்புகளை இயல்பாக ரசிக்கவோ தயாரிக்கவோ மனநிலை ஒத்துழைக்க வாய்ப்பில்லாத சூழலில் ,இது ஒரு பெரும் சாதனை எனலாம்.

இஸ்ரேலிய பாதுகாப்பு படைவீரனைக்கொன்றுவிட்ட பாலஸ்தீன இளைஞனுக்கும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்குமான இடையிலோடும் பிரச்சினைகளையும்,அவற்றுக்கிடையில் காதலையும் மையமாகக்கொண்டு இத்திரைப்படம் இயங்குகிறது.புரட்சிக்கரமான முத்தக்காட்சியும் படத்திலுள்ளது!



இஸ்ரேலிய குடியுரிமைப்பெற்ற பாலஸ்தீன இயக்குனர் " Hany Abu-Assad" எழுதி,இயக்கி,இணைத்தயாரிப்பும் செய்துள்ளார். இஸ்ரேலிய குடியுரிமை உள்ளவர் இயக்கியப்படம் என்பதால்,இஸ்ரேலியப்படம் என தற்போது இஸ்ரேல் அரசும் சொந்தம் கொண்டாடுகிறது,ஆனால்இயக்குனர், தானொரு பாலஸ்தினியரே என சொல்லி ,நாமினேஷனை பாலஸ்தீன் சார்பாகவே செய்துள்ளார்.

இப்படத்தின் கதையினை நான்கு மணி நேரத்தில் எழுதி,நான்கே நாளில் திரைக்கதை,வசனம் எல்லாம் முடித்துள்ளார்.இவரின் "Paradise Now" என்ற திரைப்படமே இதற்கு முன்னர் 2005 இல் ஆஸ்கார் நாமினேஷனுக்கு தேர்வான முதல் பாலஸ்தீன திரைப்படமென்பது குறிப்பிடத்தக்கது,அம்முறை விருது வாங்க தவறிவிட்டது,இம்முறை ஓரளவு வாய்ப்பிருக்கிறது,ஏன் எனில் மேலை உலக விமர்சகர்கள் போர்ச்சூழல் படங்களை விரும்பக்கூடியவர்கள்,தயாரிப்பு நேர்த்தியாக இருக்குமானால் ஆதரிப்பார்கள், மேலும் வழக்கம் போல சில பல அரசியல் காரணங்களையும் கணக்கில் கொள்ளலாம்.
------------------------

# The Square(எகிப்து)




Jehane Noujaim என்ற எகிப்திய பெண் இயக்கியுள்ளார், எகிப்து அதிபர் ஹோசினி முபாராக்கின் 30 ஆண்டுகால ராணுவ ஆட்சிக்கு எதிராக தாஹிரிர் சதுக்கத்தில் மக்கள் திரண்டு போராடியதையும்,அவர்கள் மீதான ராணுவ தாக்குதலையும், அதன் பின்னான விளைவுகளையும் மையமாக கொண்டு உருவான ஆவணப்படமாகும்.

(Jehane Noujaim )

உண்மையான ராணுவ துப்பாக்கி சூடு,டாங்கி தாக்குதல் என அனைத்தும் நேரடிப்பதிவுகளாக பலரால் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை கொண்டுள்ளது.

# Karama Has No Walls


(Sara Ishaq & team)

Sara Ishaq என்கிற யேமனை சேர்ந்த (இளம்)பெண் தயாரித்து இயக்கியுள்ள குறும்படம்.

எகிப்தில் ஏற்பட்ட "அரேபிய வசந்தப்புரட்சியினால்" ஹோசினி முபாரக்" ஆட்சி கவிழ்ந்து ஏற்பட்ட மாற்றத்தின் பின் விளைவாக ஏமனில் ஏற்பட்ட புரட்சியினை மையக்களமாக விவரிக்கும் ஆவணக்குறும்படம் ஆகும்.

2011இல் யேமனின் சானா நகர பல்கழக மாணவர்கள் அரசுக்கு எதிராக தங்கள் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் ,பல்கலை கழக வாயில் அருகே கூடாரங்களை அமைத்து போராடத்துவன்ங்கினார்கள், நாளாவட்டத்தில் பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து அருகிலேயே கூடாரங்கள் அமைத்து போராட்டத்தில் கலந்துக்கொள்ள ஆரம்பிக்க,போராட்டக்குழுவின் பலம்பெருகியது,இவ்விடத்தினை"மாற்றத்திற்கான மைதானம்" என பெயரிட்டு ஆயுதம்  தாங்கிய போராளிக்குழுக்களும் ,அமைதிப்போராட்டத்தில் கலந்துக்கொண்டார்கள்,இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு,மார்ச்,18ஆம் நாள்,வெள்ளியன்று அரசப்படைகள் திடீர் என துப்பாக்கி சூடு நடத்தியதில் 53 பேர் உயிரிழந்தார்கள், ஆயிரக்கணக்கில் காயமுற்றனர், இந்நிகழுவுகளையே மையமாக சித்தரித்து , உண்மை சம்ப காட்சிகளுடன் இக்குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.



இக்குறும்பட தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ள இயக்குனர் முதல் ,அனைவரும் இளைஞர்களே ,பலரும் பெரிய அளவில் முன்னனுபவமில்லாதவர்களே, நம்ம ஊரு குறும்பட இளைஞர்கள் இன்னும் "காமெடி" மட்டுமே செய்துக்கொண்டுள்ளார்கள் ,அவர்களும் வித்தியாசமான வாழ்வியல் சம்பவங்கள்,போராட்டங்களை மையமாக கொண்டு படைப்புகளை உருவாக்கினால் சர்வதேச அளவில் கவனத்தினை ஈர்க்க இயலும்.

# "Dirty Wars: The World Is A Battlefield.(அமெரிக்கா)



Jeremy Scahill என்பவர் இதே தலைப்பில் எழுதிய நூலின் அடிப்படையில், Rick Rowley இயக்கியுள்ள ஆவணப்படம்.

சீரொ டார்க் தர்ட்டி போன்ற திரைப்படங்கள் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை விமர்சிப்பது போல இருந்தாலும், பெரும்பாலும் ராணுவ வீரர்களை,இராணுவ செயல்களை புனிதப்படுத்தும் நோக்கில்,சரியான ஆவணப்படுத்தல் செய்யவில்லை என சொல்லப்படுகிறது, ஆனால் இந்த ஆவணப்படத்தில் ஆப்கான்,சோமாலியா,யேமன் எனப்பல நாடுகளில் அமெரிக்க ராணுவம் "Joint Special Operations Command (JSOC)" என்றப்பெயரில் யாரையும் விசாரணையின்றி கொல்லக்கூடிய  சர்வதிகாரத்துடன் செயல்ப்படுத்திய ராணுவ நடவடிக்கள்,அதனால் பலர் கொல்லப்பட்ட சம்பவங்கள் ஆகியவற்றை துப்பறிந்து ஆவணப்படுத்தி "அமெரிக்க ராணுவத்தின்" உண்மை செயல்பாடுகளை வெளிக்கொணர்ந்துள்ளது.

நூலாசிரியர் "Jeremy Scahill "அவர்களே இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட்டாக இப்படத்தில் நடித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிரான விமர்சனப்பார்வையிருப்பதால் விருது வெல்வது கடினம்,ஆனால் யார் கண்டார் இப்படத்தின் நுண்ணரசியல் எவ்வகை என பொதுவாக சரியாக புரிந்துக்கொள்ள முடியாமல் கூட இருக்கலாம்,எனவே  விருதினை வென்றாலும் ஆச்சர்யமில்லை அவ்வ்!

# the voorman problem(பிரிட்டன்)



இயக்கம்-Mark Gill

தயாரிப்பு- Baldwin Li & Lee Thomas

சிறையில் இருக்கும்  "voorman" என்ற கைதி தன்னைத்தானே கடவுள் என சொல்லிக்கொள்ள ஆரம்பிக்கிறார், இதனை நம்பும் மற்ற சிறைக்கைதிகளால் ,சிறைச்சாலையில் பிரச்சினைகள் வரலாம் எனக்கருதும் ,சிறைக்கண்காணிப்பாளர், ஒரு மருத்துவரை அழைத்து "voorman"க்கு பரிசோதனை செய்து மன நிலைப்பாதிக்கப்பட்டவர் என சான்று வாங்கிவிட்டால் ,மனநல காப்பகத்துக்கு அனுப்பிவிடலாம் பின்னர் ,சிறையில் பிரச்சினைகள் இருக்காது என நினைத்து,ஒரு மருத்துவரை அழைத்து ,"voorman பரிசோதிக்க சொல்கிறார், அப்பொழுது  மருத்துவருக்கும் "voorman"க்கும் இடையே நடக்கும் "அன்பேசிவ நான் கடவுள்" உரையாடல்களே படத்தின் மையக்கருவாகும்.

இக்குறும்படத்தில் "ஹாப்பிட்" புகழ் martin freeman ,doctor williams என்ற கதாபாத்திரத்திலும்,mr voorman ஆக tom hollander உம் நடித்துள்ளார்கள்.

ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ்ப்பெற்றிருந்தாலும், சிறப்பான கதையம்சம் கொண்டப்படம் என்றால் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்க தயங்கமாட்டார்கள் என்பதற்கு இப்படமேஒரு சாட்சியாகும்.

இக்குறும்படத்தில் நடிக்க முதலில் ஹாலிவுட் நடிகர் "கெவின் ஸ்பாசியை" அனுகியுள்ளார்கள்,அவருக்கு கால்ஷீட் பிசியாக இருந்தமையால் ,மார்டீன் ஃப்ரீமானை பரிந்துரைத்துள்ளார், படத்தின் கதையினை அவருக்கு மின்னஞ்சல் தான் செய்துள்ளார்கள், நடிக்க நல்ல ஸ்கோப் உள்ளக்கதை என அவரும் ஒத்துக்கொண்டுள்ளார், மொத்தம் 3 நாட்களில் முழுப்படமும் எடுத்துவிட்டார்கள். இது போன்ற குறும்படங்களில் நடித்தால் தனிப்பட்ட விருதுகள் கிடைக்காது , ஒட்டு மொத்தமாக "சிறந்த குறும்படம்" என்ற விருது மட்டுமே அளிப்பார்கள்,அது தெரிந்தும் ஒரு நல்ல கதையம்சமுள்ள படைப்பில் பங்குப்பெற வேண்டுமென புகழ்ப்பெற்ற ஹாலிவுட் நடிகர்களும் முன்வருகிறார்கள், ஆனால் நம்ம ஊரிலோ ...அட்டு நடிகர்கள் கூட நான் ரொம்ப பிசினு ஃபில்ம் காட்டிக்கிட்டு அலையிறாங்க அவ்வ்!

----------------------------

பின்குறிப்பு:


# பிழைதிருத்தம் மற்றும் இன்னும் சில மேம்பாடுகள்,சேர்க்கைகள் விரைவில் செய்யப்படவுள்ளது,பொறுத்தருள்க!

# தகவல் மற்றும் படங்களுதவி,

# http://oscar.go.com/nominees

# http://www.imdb.com

# http://www.theguardian.com/film/filmblog/2014/jan/16/oscars-nominations-2014-liveblog-academy-awards

# http://dirtywars.org/

# http://www.thevoormanproblem.com/

# http://karamahasnowalls.com/about-2

மற்றும் விக்கி & கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
----------------------------------------


Sunday, January 12, 2014

ஆட்டையப் போடுறது!


( பலப்பேரு புக்கையே ஆட்டைய போட்டுறாங்க...அவ்வ்வ்!)


தற்போதெல்லாம் திரைப்படங்கள் வெளியான அன்றே அப்படத்தின் மூலம் எது என "மூலாதாரத்தில்" இருந்து தோண்டியெடுத்து வெட்ட வெளிச்சம் ஆக்கிவிடுகிறார்கள் வலைமகன்கள், இதெல்லாம் இணையமெனப்படும் வஸ்து பாமரனுக்கும் சல்லீசாக கிடைக்க ஆரம்பித்ததன் விளைவாகும். இதனால் பல போலி அறிவுசீவிகளுக்கு தான் பெருமிழப்பு எனலாம்.

இது போன்ற ஆட்டைய போடும் சமாச்சாரங்கள் எல்லாம் தற்கால கண்டுப்பிடிப்பல்ல, தமிழ்ச்சூழலுக்கு திரைப்படமென  ஒரு சமாச்சாரம் அறிமுகம் ஆனக்காலந்தொட்டே "ஆட்டைய போடும் கலாச்சாரம்" துவங்கிவிட்டது என்பது தான் குறிப்பிடத்தக்கது,பல அயல்நாட்டுபடங்களை அப்படியே தமிழாக்கம் செய்து புத்தம் புதியபடமாக எடுப்பது,ஆங்கில நாவல்களை சுட்டு எடுப்பது என்று ஆரம்பித்தார்கள் அப்படியே கொஞ்சம் முன்னேறி தமிழில் வெளியான படைப்புகளையும் பதம் பார்த்துள்ளார்கள், சில சமயமங்களில் எழுத்தாளரை அழைத்து "ஸ்டோரி டிஸ்கஷன்" செய்து கதைய உருவிட்டு அனுப்பவும் செய்துள்ளார்கள், ஹி...ஹி பெரியவா  செய்தால் பெருமாள் செய்தாப்போலனு இக்கால டயரடக்கர்களும் அதே வழியை இன்னும் பின்ப்பற்றுகிறார்கள் என்பது தான் வேதனையான வேடிக்கை!!!

தமிழ்திரையுலகில் இப்படி உருவியெடுக்கும்(நோ டபுள்மீனிங்க்) வேலையை முதன் முதலில் கி.பி 1936 இல் தான் ஆரம்பித்தார்கள் என சொல்கிறார்கள், அப்போதைய புகழ்மிகு தமிழியக்குனரான அமெரிக்க ரிடர்ன் இயக்குனர் எல்லிஸ்.ஆர்.டங்கன் ஒரு திரைப்படம்மெடுப்பதற்காக கதை வேண்டுமெனகேட்டதால் , தயாரிப்புதரப்பு ,சிட்டி.சுந்தரராஜன் என்ற எழுத்தாளரை அழைத்து பேசியது,எழுத்தாளரும் அதுவரை வெளியாகாத புதிய கதை ஒன்றினை "பத்மா சாகசம்" எனப்பெயரிட்டு எழுதியளித்துள்ளார்.

கதைக்கு என சன்மானம் எதுவும் அளிக்கவில்லை,படம் தயாரிக்கும்போது கொடுப்பார்களாயிருக்கும் ,இப்போ தானே "டிஸ்கஷனே" நடக்குது அதுக்குள்ள "பணம் பற்றி"வாயத்தொறந்தால் வாய்ப்பளிக்காமல் போயிட்டால் என்ன செய்வது என எழுத்தாளரும் அப்போதைக்கு எதுவும் பேசாமல் வந்துவிட்டார்.

ஆனால் சிலநாட்களுக்கு பிறகு எழுத்தாளருக்கு தெரிவிக்கப்படாமலும் ,சன்மானம் அளிக்காமலும் படத்தயாரிப்பினை துவக்கிவிட்டார்கள்,இதனை தினமணியில் ஆசிரியர்/எழுதிக்கொண்டிருந்த டி.எஸ்.சொக்கலிங்கம் என்ற நண்பர் மூலம் அறிந்த, சிட்டி.சுந்தரராஜன் தனது படைப்பினை ஆட்டைய போட்டார்கள் என நிருபிக்க வழியில்லை என்பதால் மாற்று வழியாக அவரது கதையை தினமணியில் "பத்மா சாகசம்" என்ற தொடர்கதையாக வெளியிட செய்துவிட்டார்,திரைப்படம் வெளியாகும் முன்னரே கதை அச்சு ஊடகத்தில் வெளியானதால் "கதைக்கான" காப்புரிமை தானாகவே எழுத்தாளருக்கு வந்துவிடும்,எனவே சன்மானம் அளிக்காமல் ஏமாற்ற முடியாது.  ஆனால் பத்திரிக்கையில் வெளியான கதைக்கு எதிர்ப்பார்த்த வரவேற்பில்லாமல் போயிற்று,அதே வேளையில் வேறு சில காரணங்களால் படமும் பாதியிலேயே நின்றுப்போனது,இவ்வாறாக 1936 இல் முதல் ஆட்டையப்போடும் வேலை பாதியிலேயே தோல்வியடைந்துள்ளது அவ்வ்!

ஆனால் இக்கால திரைப்படைப்பாளிகள் "தொழில்முறை நேர்த்தியுடன்" ஆட்டையப்போடுவதில் விற்பன்னர்கள், எனவே வெற்றிகரமாக தொழில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள், இதில் வேறு "என்னைப்போல யாருக்கு படமெடுக்க தெரியும்" என்றவெட்டி பந்தாவுக்கும் குறைச்சலில்லை, இவனுங்களுக்கு மட்டும் வாயில்லைனா நாய் கவ்விட்டு போயிடும் :-))

தற்போதெல்லாம் ஒருவர் எழுதிய கதையை வெளியிடாமலே காப்புரிமை பெறலாம், அப்படி செய்ய மெனக்கெட முடியாது எனில் ஏதேனும் ஒரு ஊடகத்தில் வெளியானாலே காப்புரிமையின் கீழ் வந்துவிடும் ,ஏதேனும் ஒரு ஊடகம் என்பதில் "வலைப்பதிவுகளும்" அடக்கம்,எனவே வலைப்பதிவில் எழுதியதையும் அனுமதியில்லாமல் எடுத்தாள முடியாது- கூடாது,ஆனால் வலைப்பதிவர்கள் பலரே ஆட்டை மன்னர்கள் என்பது தான் மாபெரும் சோகம் அவ்வ்!

இந்த காப்புரிமை சட்டத்தில் உள்ள ஒரு சின்ன ஓட்டை என்னவெனில் "உள்ளடக்கத்திற்கு" மட்டுமே கற்பனை உழைப்பின் அளவுகோளின் படி காப்புரிமை உண்டாம், படைப்பின் தலைப்புக்கு காப்புரிமை இல்லை!!!

 ஒரு புகழ்ப்பெற்ற எழுத்தாளர் எழுதிய கதையினை  ஆட்டையப்போட்டால் தான் காப்புரிமையின் கீழ் வழக்கு போடலாம்,அக்கதையின் தலைப்பினை சுட்டு திரைப்படமாக எடுத்தால் காப்புரிமை கோரமுடியாது.

pkp.pic.
Image and video hosting by TinyPic

உதாரணமாக பட்டுக்கோட்டை பிரபாகர் என்ற ஒரு எழுத்தாளர் "தொட்டால் தொடரும்" என்றப்பெயரில் ஒரு கதை எழுதியிருக்காருனு வச்சுப்போம், "தொட்டால் தொடரும்" நாவல் வெளியாகி பல ஆண்டுகள் ஆகிடுச்சு என்பதால் அதற்கு காப்புரிமை இயல்பாகவே இருக்கு எனவே அக்கதைய ஆட்டைய போட்டால் வழக்கு தொடரலாம்,அப்படியே வழக்கு தொடர்ந்தாலும் பெருசா இழப்பீடுலாம் கிடைச்சிடாது என்பது தான் நம்ம நாட்டின் நிலை, இதற்கும் எடுத்துக்காட்டாக ஒரு உண்மை வழக்கும் இருக்கு, என்.ஆர். தாசன் என்ற எழுத்தாளர் எழுதி தீபம் இதழில் வெளியான "வெறும் மண்" என்ற நாடகத்தின் மறுபிரதியாகவே அக்காலத்தில்வெற்றிகரமாக ஓடிய கே.பாலச்சந்தரின் "அபூர்வ ராகங்கள்" திரைப்படம் இருந்தது,எனவே திரைப்படத்தின் மூலக்கதை  உரிமையாளரான என்.ஆர்.தாசன் ,இயக்குனர் பாலச்சந்தர் மீது கதை உரிமைக்காக வழக்கு தொடர்ந்ததில் ,10 ஆண்டுகள் இழத்தடிப்புக்கு பின் ,கதை திருட்டு நடைப்பெற்றதை  நீதி மன்றம் உறுதி செய்து வெறும் 1,000 ரூ தான் கே.பாலச்சந்தருக்கு அபராதம் விதித்ததாம் அவ்வ்!

கதைய ஆட்டைய போட்டதற்கு வழக்கு தொடர்ந்தால் பெயரளவிலாவது இழப்பீடு கிடைக்கும்,ஆனால் தலைப்பினை ஆட்டைய போட்டால் ஒன்னியும் பண்ணமுடியாது என்பதால் சர்வசாதாரணமாக பலரும் தலைப்புகளை சுட்டு கொண்டுதானிருக்கிறார்கள், அதாவது "தொட்டால் தொடரும்" என நாவலின் தலைப்பினை மட்டும் ஆட்டைய போட்டால் காப்புரிமை சட்டத்தின் படி வழக்கெல்லாம் போடமுடியாது! காப்புரிமை சட்டம் இம்புட்டு சோப்ளாங்கியாக இருந்தால் நம்ம படைப்பின் தலைப்பு நமக்கு சொந்தமில்லையா? அப்ப என்னதான் செய்ய என சிண்டை பிச்சுக்கிறிங்களா? ஹி...ஹி யாமிருக்க பயமேன்! அதற்கும் ஒரு வழி சொல்கிறேன்,

காப்புரிமை சட்டத்தின் படி "ஒரு புத்தகத்தின் தலைப்புக்கு" தான் காப்புரிமை கோரமுடியாது ஆனால் இரண்டுப்புத்தகத்தின் தலைப்புக்கு காப்புரிமை கோரமுடியும், அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட பாகங்களாக ஒரே தலைப்பில் வெளியாகும் புத்தகத்தொடர்களின் தலைப்புகளுக்கு "காப்புரிமை" செல்லும்!

ஹாரிப்பாட்டர் என்றப்பெயரில் தொடராக புத்தகங்கள் வெளியானதால் அப்பெயரை வேறு யாரும் பயன்ப்படுத்த முடியாது,மேலும் டிரேட்மார்க் ஆகவும் பதிவு செய்துள்ளார்கள். இந்தியில் ஹரிபுத்தர் என ஒரு திரைப்படத்தினை எடுக்க இருந்தார்கள், ஒரிஜினல் ஹாரிப்பாட்டர் தயாரிப்பாளர்கள் ,எங்க படம் டைட்டில் போலவே இருக்குனு நோட்டீஸ் அனுப்பியதாக செய்திகள் வந்தன,அப்புறம் படமே உருவாகாமல் ஏனோ நின்னுப்போச்சு.

எனவே இழப்பீடு கிடைக்குதோ இல்லையோ ,ஒருவரின் படைப்பின் தலைப்புக்கும் காப்புரிமை கிடைக்க வேண்டும் எனில் "பாகங்களாக" புத்தகங்களை வெளியிட்டாலே போதுமானது,ஏற்கனவே வெளியான தொட்டால் தொடரும் நாவல் போன்றவற்றிற்கு கூட இரண்டாம் பாகம் வெளியிட்டால் தலைப்பின் மீது காப்புரிமை கிடைத்துவிடும் ,எனவே பழைய படைப்பின் தலைப்பு போயிடுமோ என்றெல்லாம் யாரும் அச்சப்படத்தேவையில்லை.

இதே போல இன்னொரு வகையிலும் தலைப்புக்கு காப்புரிமை பெறலாம், தலைப்பினை வணிக முத்திரையாக/சின்னமாக (டிரேட் மார்க்) பதிவு செய்துக்கொள்வது.இதனை மேல் நாட்டில் சகஜமாக செய்கிறார்கள், ஸ்பைடர்மேன், பேட் மேன்,சூப்பர்மேன் ஆகிய பெயர்கள்,உடை,லோகோ எல்லாமே "டிரேட்மார்க்" ஆக  மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டவை. படத்தின் டைட்டில் ஓடும் போது இதற்கான அறிவிப்பினை போடுவதை பலர் கண்டிருக்க கூடும்.

# ஆட்டைக்கு மரியாதை!

இது போன்ற ஆட்டையப்போடும் வேலைகளை சின்னவர்,பெரியவர் வித்தியாசமில்லாமல் கலையுலகில் பலரும் செய்துக்கொண்டு தானுள்ளார்கள்,ஆனால் பல சம்பவங்கள் அதிகம் அறியப்படாமலே போய்விடுகிறது, அப்படியான இரு சம்பவங்கள் அதுவும் ஒரே படைப்பாளிக்கு நேர்ந்திருக்கிறது என்றால் நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என அனிச்சையாக சந்தேகப்ப்படவே தோன்றுகிறது!

திருப்பூரை சேர்ந்த சுப்ரபாரதி மணியன்(ஆர்.பி.சுப்பிரமணியன்) என்ற எழுத்தாளர் சாகித்ய அகதமி விருது உட்பட பலவிருதுகளை வென்றவர் ஆவார்.சுமார் 25ஆண்டுகளுக்கு முன்னர் தீபம் இதழில் வெளியான அவரின் "கவுண்டர் கிளப்" என்ற குறுநாவலின் அடிப்படையிலே பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான "முதல்மரியாதை" திரைப்படம் இருப்பதாக கருதிய எழுத்தாளர் ,வழக்கறிஞர் நோட்டீசை இயக்குனர் பாரதிராஜாவுக்கு அனுப்பினாராம், இரு முறை நோட்டீஸ் திரும்ப வந்துவிட்டதாம்,மூன்றாவது முறை சுப்ரபாரதிமணியன் என்பவருக்காக ஏன் ஆர்.பி.சுப்ரமணியன் ஆகிய நீங்கள் வழக்கு போடவேண்டும், உங்களுக்கும் அக்கதைக்கும் என்ன சம்பந்தம் என பதில் நோட்டீசு வந்துச்சாம் அவ்வ்!

அப்பொழுது தான் "அபூர்வ ராகங்கள்" படவிவகாரத்தில் அனுபவப்பட்ட எழுத்தாளர் "என்.ஆர்.தாசனை" சந்தித்துள்ளார் சுப்ரபாரதி மணியன், வழக்கு தொடர்ந்தால் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் வாய்தாவிலே ஓடும் அப்படியும் விடாமல் வழக்கு நடத்தினால் ஆயிரம் ரூவாத்தான் இழப்பீடு என சொன்னதும், வழக்கவே வேண்டாம்டா சாமினு கை கழுவிட்டாராம்!

# காஞ்சீவரப்"பட்டு".

ஒரு முறை அறியாமல் சிக்கிய எழுத்தாளர் அதோடு சும்மா இல்லை பின்னர் இன்னொரு முறை தெரிந்தே ஒரு சினிமாக்காரருக்கு கதை எழுதிக்கொடுத்துட்டு ஏமாந்திருக்கார், அதோடு இல்லாமல் மூன்றாவதாகவும் ஒரு கதைய இன்னொரு இயக்குனரிடம் கொடுத்திருக்காராம் அவ்வ்.

ஒரு முறை அவரை சந்திக்க வந்த ஒரு புகழ்ப்பெற்ற "ஒளிஓவிய" ஒளிப்பதிவாளர் ,எழுத்தாளரின் "சாயத்திரை" என்ற  நாவல் நன்றாக உள்ளதாகவும் அதனை அவரே திரைப்படமாக்க விரும்புவதாகவும் சொல்லவே , ஒளி ஓவியருடன் சென்னைக்கு சென்று "சாயத்திரைக்கு" திரைக்கதை அமைக்க முயன்றுள்ளார், இறுதியில் சாயத்திரைக்கதை சினிமாவுக்கு ஏற்ப எளிதாக இல்லை,வேற கதை சொல்லுங்க எனகேட்கவும் இன்னொரு புதிய கதையினை "பட்டு" என்ற பெயரில் முழுமையாக திரைக்கதையாக்கி அளித்துள்ளார், கதை பிரமாதம் படமாக்கிடலாம் என ஆரம்பத்தில் ஆர்வம் காட்டியவர் ,பின்னர் அப்படியே விட்டுவிட்டு வேறுசில படங்களில் பிசியாகிவிட்டாராம், சில ஆண்டுகளுக்கு பின்னர் எழுத்தாளர் "காஞ்சிவரம்" என்ற தேசிய விருது வென்ற படத்தினை பார்த்திருக்கிறார், அப்படத்தின் கதை கிட்டத்தட்ட முன்னர் ஒளிஓவியரிடம் அளித்த "பட்டு" கதையாம், விசாரித்த போது ஓளி ஓவியர் பலரிடமும் "பட்டு" திரைக்கதையினை அளித்து படமாக்க உதவ கேட்டிருந்தாராம், அவர்களில் யாரோ "களவாடி" இருக்கலாம் என சொல்லிவிட்டார்களாம்!

மேற்படி இரு சம்பவங்கள் குறித்தும் சுப்ரபாரதி மணியன்,தனது வலைப்பதிவில் எழுதியுள்ளார்.

சுட்டி:

http://rpsubrabharathimanian.blogspot.in/2009/09/blog-post_14.html

http://rpsubrabharathimanian.blogspot.in/2009/09/blog-post_1247.html


இப்படிலாம் ஆட்டைய போட்டால்  படைப்பாளிக்கு என்ன தான் மரியாதை அவனுக்கு படைப்பூக்கம் எப்படி வரும்னு "ரொம்ப நல்லவங்க" எல்லாம் வருத்தப்படக்கூடும், அவர்களுக்கு ஏதோ என்னால் ஆன ஒரு சின்ன ஆலோசனை என்னவெனில்,

# அச்சு ஊடகமோ அல்லது மின் ஊடகமோ ஏதோ ஒன்றில் வெளியாக செய்துவிட வேண்டும்,குறைந்த பட்சம் நமது படைப்பு என அடையாளங்காட்ட உதவும்.

#அதான் படைப்புகள் வெளியானால் தான் ஆட்டைய போடுறாங்களே எனவே வெளியிடாமலே காப்புரிமை பெற என்ன செய்ய வேண்டும் என்றால் அதற்குமொரு வழி இருக்கு,

ரெஜிஸ்ட்ரார் ஆப் காப்பிரைட்ஸ் என ஒருவர் இருக்கிறார்,அவர் தான் இந்திய அளவில் அனைத்து கற்பனை படைப்புகளுக்கும் காப்புரிமை வழங்கும் வேலையை செய்கிறார்,

அவருக்கு ஒரு விண்ணப்பத்துடன் கற்பனை படைப்பாக்கங்களின் வகைக்கு ஏற்ப குறிப்பிடப்பட்ட கட்டணத்தினை வரைவோலையாலையாக இணைத்து அதனுடன் நமது  படைப்பின் இரு பிரதிகளை அனுப்பி வைக்க வேண்டும், நமது/தங்களது படைப்பு "சுத்தமான அக்மார்க் " சுய உருவாக்கமா என ஆய்வு செய்துவிட்டு ,மேற்கண்ட படைப்புக்கு காப்புரிமை அளிக்கப்பட இருக்கிறது என ஒரு அறிவிப்பும் வெளியிடுவார்கள்,30 நாட்களுக்குள் எதிர்ப்பு அல்லது மறுப்பு வரவில்லை எனில் விண்ணப்பித்தவருக்கு காப்புரிமை அளிக்கப்படும், ஒரு பிரதியினை மூடி முத்திரையிட்டு பாதுகாப்பகத்தில் வைத்துவிட்டு ,இன்னொரு பிரதியில் "காபி ரைட் புரெக்டெட்" என முத்திரையிட்டு நமக்கு அனுப்பிவிடுவார்கள்,அதுவே நமக்கான ஆவணம் மேலும் முத்திரையிடப்பட்ட பிரதியை காட்டி "வணிக பேரங்கள்" பேசுவதும் எளிதானது மற்றும் பாதுகாப்பானதும் ஆகும்.

fee pic.

cp1


For fee detailes visit to,

http://copyright.gov.in/frmFeeDetailsShow.aspx


# என்ன வகையான "கற்பனை படைப்புகளுக்கு" காப்புரிமை கோரலாம்?

ஒலிப்பதிவு, ஒளி&ஒலி பதிவு, விரிவுரை காணொளிப்பதிவு, திரைப்படம்,ஓவியம்,சிற்பம்,எழுத்திலக்கியமென அனைத்திற்கும் காப்புரிமை கோரலாம்.

ஆனால் ஒரு வாக்கியம், சொற்றொடர், ஒரு எண்ணம்(ஐடியா), கண்டுப்பிடிப்பு போன்றவற்றிற்கு காப்புரிமை அலுவலத்தில் கோரமுடியாது, அவற்றினை பேடட்ண்ட் அலுவகலத்தில் அல்லது டிரேட் மார்க் அலுவலகத்தில் பதிவு செய்ய முயல வேண்டும்.

#ஒரு முறை காப்புரிமை செய்யப்பட்டால் 25 ஆண்டுகளுக்கு காப்புரிமை இருக்கும்,அதன் பின்னர் புதுப்பிக்க வேண்டும்.

#அதிக பட்சம் 75 ஆண்டுகள் வரையே காப்புரிமையினை ஒருவர் தக்க வைத்துக்கொள்ள முடியும்,அதன் பின்னர் காப்புரிமை தானாகவே நீங்கிவிடும்.

# உலக காப்புரிமை மாநாட்டு தீர்மானத்தின் படி , கி.பி 1923க்கு முன்னால் உருவான அனைத்து படைப்புகளுக்குமான காப்புரிமை நீக்கப்பட்டாயிற்று,எனவே அக்கால படைப்புகள் எல்லாம் "திற மூல படைப்புகள்" ஆகிவிட்டன.

எனவே தான் இன்டெர்நெட் ஆர்கைவ்ஸ், கூகிள் போன்றவை பல பழைய நூல்களை பிடிஎஃப் வடிவில் மென்னூல்களாக மாற்றி இலவசமாக அளிக்கின்றன.

#  படைப்பாளிஒருவர் நேரடியாகவோ அல்லது ஒரு பிரதிநிதி வழியாகவோ காப்புரிமையினை பெற விண்ணப்பிக்கலாம், தற்சமயம் இணைய தளம்மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்,

மேலும் விவரங்களுக்கு,

http://copyright.gov.in

மேற்கண்ட தளத்தில் ,அடிக்கடி கேட்கப்படும் சந்தேகங்கள், விளக்கமானகையேடு, மற்றும் காப்பி ரைட் சட்டம் மற்றும் திருத்தம் ஆகியன இலவசமாக தரவிறக்கிக்கொள்ளவும் செய்யலாம்.

கேட்பது உரிமை,கொடுப்பது கடமை!

ஹி...ஹி எதாவது பஞ்சு டயலாக் சொல்லி முடிச்சாத்தான் ஒரு ஃபினிஷிங்க்  டச் கிடைக்கும்னு ...அது...!
-----------------------------

பின்குறிப்பு:

# பொது மக்கள்,படைப்பாளிகள் மற்றும் சமூகத்தினர் நலங்கருதி விழிப்புணர்விற்காகவே இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

# பிழை திருத்தம் செய்யப்படவில்லை,விரைவில் பிழை திருத்தம் செய்யப்படும் அதுகாறும் பிழைகளுக்கு பொருத்தருள்க!

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

# http://copyright.gov.in/frmFAQ.aspx

# http://rpsubrabharathimanian.blogspot.in/2009/09/blog-post_14.html

http://rpsubrabharathimanian.blogspot.in/2009/09/blog-post_1247.html

# http://madrasmusings.com/Vol%2021%20No%206/early-modern-tamil-novels.html

மற்றும் விக்கி & கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
-------------------------------------

Saturday, December 28, 2013

அஃதே இஃதே-8

(நல்ல மேய்ப்பர்...ஹி...ஹி..!)


GOOD SHEPHERD.

மேரியம்மா புள்ள ஏசய்யாவுக்கு பொறந்த நாளுனு ஊருக்குள்ள எல்லாம் பேசிக்கிட்டாங்க, நமக்கு யாருவூட்டு பொறந்த நாளு, கண்ணாலம்னாலும் ஒன்னுதேன் , ஊருல கண்ணாலம் மாருல சந்தனம்னு கெளம்பிடுறது , பொழுது சாயச்சொல்ல போய் கேக்கு சாப்புட்டு வரனும் ,பின்ன ஊருல நல்லது கெட்டதுனா என்னனு போய்க்கண்டுகிட வேணாமா?  அப்புறம் என்னத்துக்கு மனுசப்பயலா பொறந்தோங்கிறன்?

ராவுத்தர் "ரம்சான்" நோம்பு வச்சு பிரியாணி கொடுத்தாலும் திங்கிறது தான் ,நமக்கு அல்லா ச்சாமியும் ஒன்னுந்தேன்,அய்யனார் சாமியும் ஒன்னுந்தேன்! எந்த ச்சாமியாச்சும் நம்மள துள்ள துடிக்க  வெட்டணும்,கொல்லணும், அழிக்கணும்னு சொல்லுதா? அப்படி தூசானமாச்சொல்லுறதுலாம் யாரு? எல்லாம் அவனுங்கந்தேன் அதான் அவனுங்க ... கொடியப்பிடிச்சிக்கிட்டு வோட்டுக்கேட்டு வருவாய்ங்களே அவனுங்களேந்தேன்...முன்னலாம் கட்சி சின்னத்த காட்டி வோட்டுக்கேட்டாய்ங்க ... அப்புறம் ஊருக்குள்ள ஏகப்பட்ட பயப்புள்ளைக "தனி தனியா சின்னம்" போட்டுக்கிட்டு வோட்டுக்கேட்கவும் சாமிப்பேர சொல்லி ஓட்டுக்கேட்க "சண்டைய கெளப்பிவிட்டு" நம்ம ச்சாமிய கும்புடுற பயக எல்லாம் நமக்குதேன் வோட்டு போடனும் ,இல்லாங்காட்டி ஊருல எல்லாம் "அவனுங்க ச்சாமியாப்பூடும்னு" சொல்லி பயங்காட்டி வோட்டுக்கேட்க ஆரம்பிச்சுட்டானுங்க, இதெல்லாம் செய்யச்சொல்லி எந்த சாமிய்யா சொல்லிச்சு? சாமிக்கு அரசியல் தந்திரமும் தெரியாது ஆரியருங்க மந்திரமும் தெரியாது!

வெள்ளைக்கார தொரைங்க மொத மொதல்ல கப்பல்ல வந்து மேரியம்மாவுக்கு செலை வச்சு கோயில் கட்டணும்னு சொன்னப்போ ,மேரியம்மனும் நம்ம மாரியம்மனும் ஒன்னுதேன்னு நெனச்சவங்கலாம் யாரு? எல்லாம் நம்ம பயகதேன்... அதோட மட்டுமா விட்டாங்க மொத ஆளா முன்ன நின்னு செங்கல்,மணல் எல்லாம் கொடுத்து ,ஆளா பேரா நின்னு கோவில் கட்டவும் உதவுனாங்க கூடவே ஈசானிய மூலையில மொதக்கல்லு வச்சு ..கல்ப்பூரம் கொளுத்தி,தேங்காப்பழம் வச்சு படைச்சு ஒரு கோழிய அறுத்து காவுக்கொடுத்தா "தொட்டக்காரியம்" தொலங்கும்னு நல்ல வழியும் ச்சொன்னவய்ங்க தான் நம்ம மக்கள்,அம்ப்புட்டு வெள்ள மனசப்பூ!

மேரியாத்தான்னா, வெள்ள சீலைக்கட்டி ,பொத்தவம் படிச்சு ,படையலுக்கு கேக்கு வச்சு கும்புடுறச்சாமி, மாரியத்தான்னா, மஞ்ச சீலைக்கட்டி , கரகம் எடுத்து கூழ் ஊத்திக்கும்புடுறச்சாமினு தான் நம்ம மக்க பார்த்தாங்க அதத்தாண்டி வேற எந்த வேத்துமையும் பார்க்க  நம்ம பாட்டன் பூட்டன்களுக்கு தெரியாதப்பூ!

படிக்காத சனங்களா இருந்தாலும் கும்புடுறதுல என்னப்பு சண்டைனு சமரசமா வாழ்ந்தவய்ங்க, ஆனா இப்ப எல்லாம் கொழாப்போட்டு படிச்சுப்புட்டு என்னமோ இன்டெரெட்டாம் அதுல போயி உஞ்சாமி பெருசா ,எஞ்சாமி பெருசா ,கறி சோறு துண்ணலாமா கூடாதான்னுலாம் சண்டைப்போட்டுக்கிறாய்ங்க!என்னத்த படிச்சாங்களோ தெரியலப்பு...படிப்பு இருக்கு ஆனா பண்பு இல்லையே... நான் என்ன செய்வேன்ன்ன்!!!

காலங்காலமா ஊருக்கு ஒரு சாமி,ஆளுக்கு ஒரு சாமினு கும்புட்ட மக்கந்தேன் ஆனா காஷ்மீர்  எல்லையில வெளிநாட்டான் சண்டைக்கு வரான்னா "வெற்றி வேல் வீரவேல்னு" சொல்லிக்கிட்டு துண்ட உதறி தலையில உருமாக்கட்டிக்கிட்டு வேட்டிய தார்ப்பாச்சா இழுத்து முடிஞ்சுக்கட்டிக்கிட்டு ,கன்னியாக்கொமரியில இருந்து ரயிலேறி மொத ஆளா ஓடிப்போய் யுத்தத்துல கலந்துக்கிட்டாய்ங்கப்பூ ,அதமாரியா இன்னிக்கு பெருசா படிச்ச பயப்புள்ளைக இருக்காங்க ...படிச்சதும் மொதல்ல எந்த வெளிநாட்டுக்கு ஓடிப்போலாம்னு ஊருல இருக்க எல்லா வெளிநாட்டுக்கம்பெனி வாசலுலவும் கெடையா கெடக்காய்ங்க.



சாமிலாம் யாரு? யாருங்கிறேன்... எல்லாம் ஒருக்காலத்தில நம்ம பாட்டன் பூட்டன் தாத்தனா இருந்தவய்ங்கதேன் ,அவிங்க காலத்துக்கு பொறவு சாமியா நெனச்சு கும்புடுறோம், வடக்க, மலைக்கு அந்த பக்கம் ஆடு மேச்சுட்டு சனங்களுக்கு  நல்லகதி கிடைக்கனும்னு புத்திமதி சொன்னவருதேன் மேரியம்மா புள்ள ஏசய்யா, அதமாரி மலைக்கு இந்த பக்கமா மாடு மேய்ச்சுட்டு சனங்களுக்கு நல்ல புத்தி சொன்னவரு தான் கிச்சிணய்யா ... அவரு ஆட்டுக்கார வேலன்னா இவரு மாட்டுக்கார வேலன்... இதுல என்ன பெருசா ஒசத்தி தாழ்த்தினு மல்லுக்கட்டிக்கிட்டு நிக்க இருக்கு?

நமக்கு தெரிஞ்சதெல்லாம் சாமினா கும்பிட்டுக்கணும் சட்டம்னா மதிச்சு நடந்துக்கனும் அம்புட்டுதேன். அத்துவானக்காட்டுல புழுதி ஒழவு ஓட்டி சோளம் வெதைச்சுட்டு வாரோம் ,யாரு தண்ணி ஊத்துனா?அதுக்கெல்லாம் காவ ஆரு ? எல்லாம் முனிசுபரனும் அய்யனாருந்தேன் காவல், உடையவன் இல்லாம வேற ஆராச்சும் போய் கைய வச்சிட உடுவாய்ங்களா? மீறி கைய வச்சா "ரெத்தங்கக்கி சாவனும்" அம்புட்டு உக்கிரமான காவதெய்வங்க, அதமாரியே ஆடு ,மாடு மேச்சலுக்கு வுடுறோம் நாய்,நரினு ஒன்னும் சீண்டாம ,களவு போகமா அத்தனையும் வூடு வந்துறும் எல்லாம் சுடலை மாடன் காவல்,இம்புட்டு காவந்து செய்யுற ச்சாமிய நாமளும் சும்மா உடுவமா ... அறுப்பு முடிஞ்சதும் மொத நெல்லு,சோளம்,கம்பு ,கேவுருனு எதா இருந்தாலும் காவக்காத்த சாமிக்குந்தேன், பொங்க வச்சு ,கெடா வெட்டி படையல் போடாம வெள்ளாமையில இருந்து ஒரு குறுணிக்கூட விக்க மாட்டோம்ல.

அய்யனாரு, முனிஸ்பரன், சுடலமாடன்,கிச்சிணய்யானு எல்லா சாமியும் கும்பிட்ட மக்கய்தேன் ,அல்லாச்சாமி நம்ம நாட்டுக்கு வந்தப்போ அவரையும் கும்புட்டுக்கிட்டாய்ங்க, ஏசய்யா வந்தப்பவும் கும்புட்டுக்கிட்டாய்ங்க ,சாமிங்க பேருதேன் வேற ,ஆனா கும்புடுற மக்க யாரு எல்லாம் நம்ம மக்கந்தேன், பொறவு என்னத்துக்கு சண்டைங்கிறேன்?

சனத்தொகை போல சாமிங்களும் அதிகமாகி அடிதடியா ஆனப்போ, எலே காட்டுப்பயலுகளா எதுக்கு சண்டைனு திட்டி, பெரியார் "ராமசாமிய்யா" கூட்டம் போட்டு சொன்னப்போ அதுக்கும் மொத ஆளா ஓடிப்போயி "அய்யா வாழ்க"னு தொண்ட நரம்பு பொடைக்க கோசம் போட்டதும் நம்ம மக்கதேன்.

வடக்கத்திக்காரய்ங்க "இந்தி" தான் படிக்கணும்னு சொன்னப்போ ,காட்டுமிராண்டி பாஷைனு சொன்னாலும் அதான் எங்க பாஷை, தமிழ விட முடியாது ...தமிழை காப்பாத்த ரயிலை மறிடானு பெரியாரய்யா சொன்னதும் முன்ன ஓடிப்போயி தண்டவாளத்துல தலைய கொடுத்ததும் நம்ம மக்கதேன்.

சாமி இருக்குனு சொன்னாலும் இல்லைனு சொன்னாலும் தமிழன், தமிழ் நாடுனு சொன்னால் எல்லாருமே ஒன்னுக்கூடி தான் இந்த மண்ணுல நின்னாங்க,இனிமேலும் நிப்பாய்ங்க அதுல ஒரு மாத்தமும் வாராது.

மேரியம்மா புள்ள ஏசய்யாவுக்கு பொறந்த நாளுனு சொல்லி மாதாக்கோயில்ல மணியடிச்சு கூப்பிட்டுருக்காய்ங்க , மதிச்சு கூப்புடுறது மனுசத்தன்மை , அதை மதிச்சு போறது பெரிய மனுசத்தன்மை ... எனக்கு பெரிய மனுசத்தன்மை இருக்கு நா போய் கேக் சாப்புட்டு வாரேன்...வாரிகளா போவோம் ?

அந்த மாதாக்கோயில் மணி அடிக்குதய்யா ...

மார்கழி மாசக்குளிர் அடிக்குதய்யா ...!!!

ஓ ஏசய்யா தோ வாரோமய்யா ,வாரோம்!

 நீரும் பெரிய மனுசனா இருந்தா வாருமய்யா போலாம்..வரச்சொல்லோ "இரானி பாய்" டீக்கடையில தேத்தண்ணி குடிச்சிப்புட்டு வரலாம் ..இந்த குளிருக்கு சூடாத்தேத்தண்ணீ குடிச்சா தேவாமிருதமா இருக்குமய்யா... அடச்சும்மா வாரும் தேத்தண்ணிக்கு பைசா கூடா நானே கொடுக்கேன்...ஹி...ஹி இன்னிக்கு நாந்தேத்தண்ணி வாங்கி கொடுத்தா நாளப்பின்ன காப்பித்தண்ணி வாங்கி கொடுக்காமலா போயிரப்போறீர்? நீரும் பெரிய மனுசந்தேன்!!!

பின்குறிப்பு:

கடவுள் இருக்குனு நம்புறவன விட கடவுள் இல்லைனு நம்புறவன் "மனிதனாக "வாழ்கிறான்!

---------------------------

அவார்டுக்கு ஆப்பு!

ஆந்திராவின் புகழ் மிகு நடிகர்களான  "பெத்தராயுடு" மோகன்பாபு, மற்றும் நகைச்சுவை புயல் "பிரம்மானந்தம் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்ட பத்மாசிரி விருதுகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்க சொல்லி "ஆந்திர உயர் நீதி மன்றம்" உத்தரவிட்டுள்ளது.



காரணமென்னவெனில் ,சமீபத்தில் மோகன் பாபு குடும்பத்தார் தயாரித்த "Denikaina Ready" என்ற தெலுங்கு படத்தின் விளம்பரம் மற்றும் டைட்டிலில் இருவரும் தாங்கள் பெற்ற பத்மசிரி விருதுகளை அடைமொழியாக பயன்ப்படுத்தி இருக்கிறார்களாம், அதற்கென்ன எல்லாரும் தமிழ் நாட்டில அதைத்தானே செய்கிறார்கள் என நினைக்கலாம், ஆனால் மத்திய அரசின் விருதுக்கான விதிமுறைகள் படி விருதுப்பெற்றவர் அவற்றினை பெயருக்கு முன்னால்,பின்னால் அல்லது விளம்பரம் , லெட்டர் பேட் ,விசிட்டிங் கார்ட் என எதிலும் பயன்ப்படுத்தக்கூடாதாம். மீறிப்பயன்ப்படுத்தினால் விருது ரத்து செய்யப்படுமாம்.

இது வரையில் மத்திய அரசாக அப்படி ரத்து செய்ததேயில்லை, ஆனால் இச்சட்டத்தினை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட பா.ஜக கட்சியினை சேர்ந்த ஒருவர் ,ஆந்திர உயர் நீதி மன்றத்தில் "பொது நல வழக்கு" தொடர்ந்துவிட்டார் ,அதனடிப்படியிலேயே ஆந்திர உயர் நீதி மன்றம் "விருதுகளை " இரு நடிகர்களும் தாங்களாகவே திரும்ப ஒப்படைத்து விடுமாறு உத்திரவிட்டுள்ளது.

செய்தி:

The AP High Court on Monday faulted the actors for prefixing the name of the award to their names in the credits of the Telugu movie Denikaina Ready that was released in 2012.

Chief Justice Kalyan Jyoti Sengupta pointed out that it would be better for the actors to surrender their awards to the Centre in view of the allegation as gentlemen, and to uphold morals.

The Chief Justice, along with Justice P.V. Sanjay Kumar, was dealing with a PIL filed by senior BJP leader N. Indrasena Reddy, who had challenged the alleged inaction of the Centre in not recommending to the President to annul the awards.

http://www.deccanchronicle.com/131224/news-current-affairs/article/mohan-babu-brahmanandam-get-hc-stick

செய்தி- டெக்கான் கிரானிக்கல், நன்றி!

இவ்வழக்கின் அடிப்படையில் தமிழ் நாட்டில் பலரும் விருதினை திரும்ப ஒப்படைக்கும் சூழல் உருவாகலாம் , லோகநாயகர் முதற்கொண்டு பலரும் சிக்கும் வாய்ப்புள்ளது.


லோகநாயகரின் பட விளம்பரங்களில் தவறாமல் "பத்மசிரி" எனப்போடப்பட்டிருக்கும், இணையத்தில் அப்படிப்பட்ட படத்தினை தேடிய போது அவரது ரசிகமணி "சந்தியர்கரண்" என்பவரின் தளத்தில் கிடைத்த படம் இது.படத்திற்கு நன்றி!




இசைப்புயல் ஏ.ஆர்.ரெஹ்மானும் பெயருக்கு முன்னால் "பத்மசிரி" எனப்போட்டுக்கொள்வதை அனுமதித்துள்ளார்.

தெனாலி பட டைட்டிலில் "பத்மசிரி" ஏ.ஆர்.ரெஹ்மான் என வந்துள்ளது.

இன்னும் வைரமுத்து,விவேக் போன்றோரும் விருதினை பெருமையாக திரைப்பட டைட்டிலில் பயன்ப்படுத்தியுள்ளதை பார்த்திருக்கிறேன். படங்கள் கிடைத்தால் அவற்றையும் இணைக்கிறேன்.

சூப்பர் ஸ்டார் அவர்களும் "பத்மவிபூஷன்" விருது பெற்றுள்ளார் ,ஆனால் அவரது விளம்பரங்கள் விருதுடன் காணக்கிடைக்கவில்லை, தலைவரு வழி எப்பவும் தனி வழி தான் , சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை விட வேற பட்டம் தேவையில்லைனு நினைச்சு ஆரம்பத்திலேயே தவிர்த்துவிட்டார் போல!

# மன்னாதி மன்னர்!


புரட்சித்தலைவர் என அன்புடன் அழைக்கப்படும் "எம்சிஆர்" அவர்களின் திரை கலையுலக பயணம் அமெரிக்க இயக்குனர் எல்லீஸ். ஆர்.டங்கனின் "சதிலீலாவதி"(1936) படத்தில் ஒரு சிறிய வேடத்தில் காவலராக நடித்ததில் இருந்து தான் துவங்கியது. இதே படத்தில் தான் எம்.ஆர்.ராதா,டி.எஸ்.பாலையா ,என்.எஸ்.கிருட்டிணன் ஆகியோரின் திரையுலக பயணமும் துவங்கியது. ஹி...ஹி ...இப்படத்தில் தான் தமிழ் சினிமாவின் "ஐடெம் சாங்க்" கலாச்சாரத்தின் முதல் புள்ளியாக ஒரு "காபரே" டான்ஸ் பாட்டும் இடம்பிடித்தது. அதன் பின் வெளியான படங்களில் "கிளப் டான்ஸ்" இல்லைனா படம் ஓடாதுனு கலையுலக சிற்பிகளே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் அவ்வ்!


சில பல சிறிய வேடங்களை தாண்டி பின்னர் "ராஜகுமாரி"(1947) படத்தில் இருந்து கதையின் நாயகனாக நடிக்க துவங்கினார், இப்படி வெற்றிகரமாக திரையுலகில் பவனி வந்த காலத்தில் கி.பி 1953 இல்  "ஜெனோவா" என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் மலையாள திரையுலகிலும்  கதாநாயகனாக அறிமுகமானர். இப்படமே எம்சிஆரின் ஒரே மலையாளப்படம் ஆகும்.


ஜெனோவா திரைப்படம் கிருத்துவ புராணத்தின் அடிப்படையில் உருவான திரைப்படமாகும், இப்படத்தில் ராணி ஜெனோவாக "பி.எஸ்.சரோஜாவும்" யூதமன்னர் சிப்ரஸாக "எம்சிஆரும்" நடித்தனர். இயக்கம் எஃப்.நாகூர், இசை.எம்.எஸ்.விசுவநாதன்(முதல் மலையாள இசையமைப்பு).

கி.பி 1953 ஆம் ஆண்டின் ஈஸ்டர் தினத்தன்று திரையிட திட்டமிடப்பட்டு , தயாரிப்பு சிக்கல்களால் 13 நாட்கள் தாமதமாக வெளியானாலும் ,அவ்வாண்டின் மிகப்பெரிய மலையாள வெற்றிப்படமாக "ஜெனோவா" அமைந்தது.பின்னர் இரு மாதங்களுக்கு பிறகு தமிழிலும் அதே பெயரிலேயே மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாயிற்று.

கதைப்படி மன்னர் சிப்ரசின் மனைவி ஜெனோவா, திருமணம் ஆகி சில நாட்களில் போருக்காக மன்னர் பரதேசம் சென்றுவிடுகிறார்,ஆனால் அப்பொழுதே ராணி "ஜெனோவா" கருவுற்றுவிடுகிறார். அது மன்னருக்கு தெரியாது.

சிப்ரஸ் போர்க்களத்தில் இருக்கையில் மந்திரி "கோலோ"(மலையாளத்தில் ஆலப்பி வின்சென்ட்,தமிழில் பி.எஸ்வீரப்பா)வுக்கு ராணி ஜெனோவா மீது மையல் உருவாகி அடைய முயற்சிக்கிறார்,அவ்வேளையில் நம்பிக்கையான வேலையாள் "கார்த்தோஸ்" குறுக்கிட்டு ராணியை காப்பாற்றுகிறார், வெளிப்படையாக தனது சதியை காட்டிக்கொள்ள இயலாத நயவஞ்சக "மந்திரி" ராணிக்கும் வேலைக்காரன் "கார்த்தோசுக்கும்" கள்ளத்தொடர்பு எனக்கதைக்கட்டி ,இருவரையும் சிறையில் அடைக்கிறார்.


யுத்தம் முடிந்து வரும் மன்னர் "சிப்ரசோவும்" மந்திரியின் பேச்சினை நம்பி ,ராணி ஜெனோவாவினை நாடுக்கடத்திவிட்டு, வேலையாள் "கார்த்தோசுக்கு" மரணதண்டனை விதிக்கிறார். கர்ப்பிணியாக காட்டில் திரியும் ராணி ஜெனோவாவினை காக்கும் பொருட்டு "மேரியம்மா" பிரசன்னம் ஆகி சுகப்பிரசவம் ஆக செய்து , தாயையும் சேயையும் காக்கிறார். அவர்கள் காட்டிலேயே வாழ்கிறார்கள்.

இதற்கிடையில் நயவஞ்சக மந்திரி "மன்னர் சிப்ரசோவை" சிறையில் அடைத்து ஆட்சியைப்பிடிக்கிறார்,ஆனால் படைத்தளபதிக்கும்(எம்.ஜி.சக்கரபாணி) மன்னராக ஆசை எனவே அவரும் கிளர்ச்சி செய்கிறார், இடையில் மன்னரின் விசுவாசிகள் ,மன்னரை மீட்கிறார்கள் , மூன்று தரப்பாக சண்டை நடக்கிறது, படைத்தளபதி மட்டும் இறக்கிறார், மந்திரி கோலோ தப்பிவிடுகிறார்.

பின்னர் ராணி ஜெனோவா நிரபராதி என அறிந்து தேடிச்செல்லும் மன்னர் சிப்ரசை ,மந்திரி கோலோ காட்டில் வழிமறித்து தாக்குகிறார்,சண்டையின் முடிவில் மந்திரி கொல்லப்படுகிறார்,ஆனால் காயமுற்ற மன்னர் சிப்ரசோ மயக்கமாகிவிடவே ,அப்பொழுது அங்கு வரும் அவரின் கானக புதல்வன் கண்டெடுத்து மீட்டு அன்னையுடன் சேர்க்கிறார், பின்னர் மனமாச்சரியங்கள் ஒழிந்து ,நாடு திரும்பி அனைவரும் மகிழ்வாக வாழ்வதாக "பாசிட்டிவ்" ஆக படத்தினை முடித்து மங்கலம் பாடுகிறார்கள்.

இப்படத்திற்கு மலையாளத்தில் எம்சிஆருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தது செபாஸ்தியன் குஞ்சு மற்றும் குஞ்சு பாகவதர் ஆகும். ஒரு மலையாளப்படத்தில் நாயகருக்கு முதன் முதலில் டப்பிங் கொடுக்கப்பட்டது இப்படத்தில் தானாம். பாடல்களை ஏ.எம்.ராஜா மற்றும் பி.லீலா பாடியுள்ளனர்.



பின்னாளில் தமிழ் திரையுலகின் மாபெரும் வசூல் சக்ரவர்த்தியாக மாறியப்பின்னரும் "ஜெனோவா" படத்தின் போது ஏற்பட்ட தாக்கத்தினால் கிருத்துவ புராணப்படமொன்றில் ஏசுநாதராக நடிக்க வேண்டும் என்ற ஆசை எம்சிஆருக்கு ஏற்பட்டது. ஆனால் சரியான நேரமே வாய்க்கவில்லை போலும், பின்னர் 1971 இல் மலையாள சினிமா தயாரிப்பாளர் ஜோசப் என்பவர் "ஏசுநாதர்" என்றப்பெயரிலேயே அவரின் வாழ்க்கை வரலாற்றை தயாரிக்க இருப்பதாக கூறி எம்சிஆரை அனுகவும் ,மகிழ்வுடன் சம்மதித்துள்ளார், மேக் அப் எல்லாம் போட்டு "ஏசுநாதர்" கெட் அப்பில் எம்சிஆரின் புகைப்படத்துடன் பத்திரிக்கை விளம்பரங்களும் கொடுக்கப்பட்டன. ஆனால் ஏனோ  வெளியில் சொல்லப்படாத சில பல காரணங்களால் பின்னர் அப்படம் கைவிடப்பட்டது.



இத்திரைமுயற்சி எம்சிஆரின் திரைப்பட வாழ்க்கையில் நிறைவேறாத ஆசைகளில் ஒன்றென சொல்கிறார்கள். படம் உருவாகாமல் போனதற்கு காரணம் "வழக்கம்" போல எம்சிஆரின் இழுத்தடிப்பு எனவும் ,இல்லை படத்தயாரிப்பாளரின் வேறு படங்கள் தோல்வி அடையவே பண முடையால் தடைப்பட்டது என்கிறார்கள் ஒரு சிலர். இன்னும் சிலரோ , படத்தயாரிப்புக்காக வெளியிட்ட விளம்பரத்தில் வந்த "ஏசுநாதர்" உருவ  எம்சிஆரின் படத்தினையே ஏசுநாதராக கருதி மக்கள் வழிப்பட ஆரம்பித்துவிட்டார்களாம்  ,எனவே படம் வெளியானால் மக்களை தவறாக வழிநடத்தியதாக ஆகிவிடும் எனக்கருதி எம்சிஆரே படத்தினை நிறுத்திவிட்டு தயாரிப்பாளருக்கு செலவிட்ட தொகையினை அளித்துவிட்டார் என்கிறார்கள். உண்மை என்னவென எம்சிஆருக்கும் ,தயாரிப்பாளருக்கும் மட்டுமே தெரியும்!!!

எம்சிஆரின்  நினைவு நாள் december-24.
----------------------------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

# http://www.hindu.com/mp/2010/04/05/stories/2010040550910400.htm

# http://www.hindu.com/mp/2011/04/25/stories/2011042550900500.htm

விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
---------------------------------------

Tuesday, December 17, 2013

கட்டம் கட்டி கலக்குவோம்-3

(மலபார் "ராணி"...ஹி...ஹி..!)


எட்டு எட்டா மனித வாழ்க்கையை பிரிச்சுக்கோ...எந்த எட்டில் நீ இருக்கே தெரிஞ்சுக்கோ என பாடிய "பாட்ஷா" சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் ,நம்ம ஆட்டத்தை ஆரம்பிப்போம்!

சதுரங்கமும் எட்டு எட்டாக கட்டங்கள் கொண்டது தானே , எனவே எல்லாமே எட்டுக்குள் அடக்கம் :-))

சரி மக்கா , நாம கட்டம் கட்டி கலக்க ஆரம்பிப்போம்,

சதுரங்கத்தின் வரலாறு,விளையாடத்தேவைப்படும் தளவாடங்கள், ஆட்டக்காய்கள் மற்றும் அவற்றின் நகர்வு முறைகள், நகர்வுகளை குறிப்பெழுதுவது ஆகியனவற்றை கடந்த இருப்பதிவுகளில் கண்டோம், இனி மேற்கொண்டு சதுரங்க ஆட்டத்திறனை மேம்படுத்திக்கொள்வதனைப்படிப்படியாக காணலாம்.

# சதுரங்க ஆட்டம் என்பது "மூளைக்கு வேலை கொடுக்கும் அக உணர்வு விளையாட்டு" ஆகும். சதுரங்கப்பலகையில் ஆடும் ஆட்டத்தினை விட "நம் மூளையில்" மனத்திரையில் அதிக ஆட்ட வகைகளை ஆடி பார்க்க நேரிடும், பின்னர் அதனை ஆட்டப்பலகையில் வெளியீடாக காட்ட வேண்டும்.

"MIND PLAYS THE GAME"

அவ்வாறு விளையாட எவ்வாறு நம்மை தயார்படுத்திக்கொள்வது?

ஒரு நல்ல சதுரங்க விளையாட்டு வீரராக தயார்ப்படுத்திக்கொள்ள ஒரு அடிப்படையான திட்டமிட்ட அனுகு முறை தேவையாகும், அதில் மிக முக்கியமான அம்சங்கள் கீழ்க்கண்டவையாகும்.

# துவக்க ஆட்டம்(Chess Openings)


# திட்டமிடுதல் (Chess strategy )


# ஆட்ட நுட்பங்கள்(Chess tactics )


# இறுதி ஆட்டம் (Chess Endings )


# அனுபவம்( Chess experience )


இவ்வடிப்படையான ஐந்து பயிற்சியலகுகளையும் ஒரு வட்ட வடிவ படமாக காட்டியுள்ளேன்.




பொதுவாக துவக்க ஆட்டத்தினை கற்றுக்கொள்வதில் இருந்து ஆரம்பித்து ஐந்து அலகுகளிலும் பயிற்சியினை பெறலாம், ஆனால் அப்படி செய்வது சில சமயங்களில் குழப்பத்தினையும் அளிக்கலாம் என்பதால்  ஏதேனும் ஒரு நிலையினை எடுத்துக்கொண்டு பயிற்சியினை ஆரம்பித்து வட்டவடிவில் சுற்றினை பூர்த்தி செய்து பயிற்சியினை நிறைவடையவும் செய்யலாம்.


இப்படி வட்டவடிவில் காட்டியிருப்பதே துவக்க நிலை,இறுதி நிலையென வரையறையாக ஒரு நிலைப்பாடே இல்லாமல் வட்டத்தின் எந்நிலையிலும் நமது புரிதலுக்கு ஏற்ப கற்றலை துவக்கலாம் எனச்சொல்லவே.


அதெப்படி ஆரம்பத்துலவே அனுபவ துவக்கம் கிடைக்கும்னு கேட்கலாம், ஏற்கனவே விளையாண்டவர்களின் அனுபவத்தினை கேட்டு , அவர் என்ன செய்தார் , எப்படி விளையாண்டார்னு தெரிந்துக்கொண்டு அதனையே செய்து பார்ப்பது தான்!


ஒருவரோட அனுபவத்தினை கேட்டு ,அதனையே பழகிப்பார்த்தால் அதுவே நமது அனுபவமாகவும் ஆகிவிடும்!


துவக்க நிலை ஆட்டம் என்பது ஆட்டத்தின் துவக்கத்தில் ,சதுரங்கப்பலகையில் அனைத்து ஆட்டக்காய்களும் இருக்கும் நிலையில் , முதலில் ஆடப்படும் 10 -12 நகர்வுகளை குறிக்கும்.


சதுரங்கப்பலகையின் அடிப்படையையே இப்பொழுது தான் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளவர்களுக்கு , ஒவ்வொரு ஆட்டக்காயின் நகர்வு போக்கும் புரியாத நிலையில் பின்ப்பற்ற கடினமாக இருக்கும்.


மேலும் துவக்க ஆட்டங்களில் பல வகை இருக்கு, அவற்றில் பல கிளை வகைகளும் இருக்கு, இவற்றை எல்லாம் ஒவ்வொரு ஆட்டக்காயின் பலம்,பலவீனம், நகர்வின் தன்மை என சரியாக உள்வாங்கிக்கொள்ளாத ஆரம்ப நிலையிலே சொன்னால் மனதில் பதிய கடினமாக இருக்கலாம் ,எனவே ஆட்டக்காய்கள் குறைவாக உள்ள , இறுதி ஆட்ட நிலையில் எப்படி ஆடி வெற்றிப்பெறுவது என இறுதி ஆட்ட வகையினை கற்றுக்கொள்வதில் இருந்து பயிற்சியினை ஆரம்பிப்பது எளிதாக இருக்கும்.

இதன் மூலம் ஒவ்வொரு ஆட்டக்காயின் நகர்வு, அதன் பலம், பலவீனம் என எளிதில் உள்வாங்கிக்கொள்ள முடியும். பல கிராண்ட் மாஸ்டர்கள் "இறுதி ஆட்டத்தினை " கற்றுக்கொண்டு ஆடத்துவங்குவதை சரியான அனுகுமுறை என பரிந்துரையும் செய்துள்ளார்கள்.


இறுதி ஆட்டத்தினை கற்றுக்கொள்வதையே துவக்க நிலைப்பயிற்சியாக கொண்டு ,"JOSE’ R. CAPABLANCA" என்ற முன்னாள் உலக சேம்பியன்  "Chess Fundamentals"  என்ற சதுரங்கப்பயிற்சி நூலினை எழுதியுள்ளார்.அதனை அடிப்படையாக கொண்டு மேலும் பல புதிய தகவல்களையும் இணைத்து இத்தொடரினை கொண்டு செல்ல உள்ளேன்.


இப்பொழுது , வெள்ளை ஆட்டக்காரர் ஒரு ராஜா, ஒரு யானையை வைத்துக்கொண்டு  எப்படி ஒற்றை கறுப்பு ராஜாவை  செக் மேட் செய்து வெற்றி யடைகிறார் என்பதனை காண்போம். ஆட்டப்பலகையில் வீரர்களோ வேறு எந்த ஆட்டக்காய்களோ இல்லாத சூழல்.


ராஜா+ யானை VS ராஜா: இறுதி ஆட்ட நிலை:


இவ்விறுதியாட்ட நிலை பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் , இதில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில் , எவ்வளவு குறைவான நகர்த்தல்களில் செக் - மேட் செய்து ஆட்டத்தினை முடிக்கிறோம் என்பதில் தான் உள்ளது.

ஏன் எனில் சதுரங்கத்தில் " 50 நகர்வுகள் விதி"(50 moves Rule) என ஒன்றுள்ளது. அவ்விதிப்படி,

# 50 நகர்த்தல்களுக்குள் ஏதேனும் ஒரு  "வீரன்" நகர்த்தப்படவில்லை எனில் ஆட்டம் டிரா என அறிவிக்கப்படும்.

இந்த இறுதி ஆட்ட சூழலில் பலகையில் "வீரனே" இல்லாததால் , வீரனை நகர்த்தி ஆடவே இயலாது எனவே 50 நகர்த்தல்களுக்குள்  செக் - மேட் செய்யவில்லை எனில் ஆட்டம் டிரா என தானாக அறிவிக்கப்பட்டுவிடும்.

# 50 நகர்த்தல் விதியின் இன்னொருப்பிரிவின் படி , 50 நகர்த்தல்களுக்கு எவ்வித ஆட்டக்காய்களும் வெட்டப்படவில்லை எனில் ஆட்டம் டிரா ஆகும்.

This rule applicable at all stages of the game.

# கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு அம்சம் , நேரம் ஆகும். ராஜா + யானை வைத்து ஆடுபவருக்கு நேரம் குறைவாக இருந்து , வெறும் ராஜாவுடன் ஆடுபவருக்கு நேரம் அதிகமிருக்குமெனில் , தேவையற்ற நகர்வுகள் செய்வதில் கால விரயம் ஆகி ,நேரம் தீர்ந்து போனால் , நேரத்தின் அடிப்படையில் தோற்க நேரிடும்.

மேலும் ஒற்றையானையை வைத்துக்கொண்டு வெற்றியடைய முடியாது என நினைத்து டிரா என நினைத்து ஏற்றுக்கொண்டால் ,நமக்கு தான் இழப்பு ஆகும்.

எனவே ஒற்றையானைவை வைத்து குறைவான நகர்த்தல்களில் செக் மேட் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.


# தனி ராஜா ஏதேனும் ஒரு மூலையிலும், யானை மற்றும் ராஜா எதிர் பக்கத்தின்  மூலைகளிலும் இருக்குமானால் குறைந்த பட்சம் 10 நகர்த்தல்களில் செக் மேட் செய்து விட முடியும்.

# தனி ராஜா ஆட்டப்பலகையின் மையத்தில் இருக்குமானால் 11-12 நகர்த்தல்களில் செக் -மேட் செய்து விட முடியும்.


நிலை-1: தனி ராஜா ஒரு மூலையில் உள்ளது.

பத்து நகர்த்தல்களில்  செக்- மேட் செய்வதனை காணலாம்.


படம்-1


 white to move.


1) Ra7 -Kg8

வெள்ளை தனது முதல் நகர்வாக , ராஜாவை நகர்த்தாமல் யானையினை a7 கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது, இதன் மூலம் கறுப்பு ராஜா கடைசி ரேங்கினை விட்டு வெளியில் நகரமுடியாமல் கட்டுப்படுத்திவிட்டது ,இதனால் அதிக அலைச்சல் இன்றி குறைவான நகர்வில் செக் மேட் செய்ய இயலும்.

கறுப்பு ராஜாவிற்கு வேறு நகர்விற்கு வழியில்லை எனவே g8 கட்டத்திற்கு செல்கிறது.

2)Kg2 - Kf8




வெள்ளை ராஜா . மூளைவிட்டமாக g2 கட்டத்திற்கு செல்கிறது.

ஏன் இவ்வாறு நகர்த்த வேண்டும்?

h1 கட்டத்தில் இருக்கும் ராஜா அடுத்து  நேர் வரிசையில்  h2, h3... h6 என முன்னேறி சென்றால் என்ன ?

# பொதுவாக சதுரங்கப்பலகையில் நிறைய கட்டங்களை கடக்க வேண்டும் எனில் மூளைவிட்டமாக பயணித்தால் ,அதிக கட்டங்களை குறைவான நகர்த்தல்களில் கடக்கலாம்.

# அடுத்து , இறுதி ஆட்ட நிலையில் எதிர் ராஜாவினை துரத்தி செல்வதெனில் ,அல்லது அதனை எளிதில் பின் தொடர வேண்டும் எனில் அதற்கு நேருக்கு நேரான கட்டத்தில் நமது ராஜா இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும், அப்பொழுது தான் நமது "ரீச்சில்" இருக்கும்.

# இப்படி தனித்த ராஜாவினை செக் மேட் செய்ய வேண்டும் எனில் அதனை ஒரு குறுகிய எல்லைக்குள் அடைத்துவிட வேண்டும் அதாவது கடைசி ரேங்க் அல்லது வரிசையின் ஓரமாக தள்ளிக்கொண்டு சென்று விட வேண்டும், பின்னர்  நமது ராஜாவினை எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக எதிர் ராஜாவுக்கு ஒரு வரிசை அல்லது ரேங்க் விட்டு நேரதிராக கொண்டு சென்று நிறுத்த வேண்டும்.

அதன் பின்னரே இன்னொரு சக்தி வாய்ந்த ஆட்டக்காய் கொண்டு . பலகையின் ஏதேனும் ஒரு மூலைக்கோ அல்லது நமது ராஜாவுக்கு நேர் வரிசையில் ஒரு கட்டம் தள்ளியுள்ள எதிர் கட்டத்தில் ,கடைசி வரிசையில் எதிர் ராஜா இருக்குமாறு செய்து கொண்டு செக் மேட் செய்ய வேண்டும்.

ஒரு ராஜா ,யானை மட்டும் உள்ள சூழலில் ,யானைக்கொண்டு ,எதிர் ராஜாவை முன்னரே கட்டுப்படுத்தியாகிவிட்டது, ராஜாவுக்கு நேருக்கு நேராக முன்னேற வேண்டும் , அதே சமயம் விரைவாக 6 வது ரேங்கினை அடைய வேண்டும் என்பதால் ராஜாவை மூலைவிட்டமாக g2 கட்டத்தில் வைத்துள்ளோம்.

3)Kf3 - Ke8

4)Ke4 -Kd8

5)Kd5 -Kc8

கறுப்பு ராஜா c8 கட்டத்திற்கு சென்றுள்ளது எனவே அதற்கு நேராக c6 கட்டத்திற்கு வெள்ளை சென்றால் ,ஆட்டத்தினை இழுக்க ,கறுப்பு அடுத்த நகர்வில் மீண்டும் d-8 என  பின்னால் நகரக்கூடும் ,வெள்ளை ஆட்டக்காரரின் முதல் நோக்கம் ,கறுப்பு ராஜாவினை ஒரு மூலைக்கு தள்ளி செல்ல வேண்டும் என்பதே ,எனவே இப்பொழுது  வெள்ளை ராஜா c-6  கட்டம் செல்லாமல் ,

6)Kd6 -Kb8



# கறுப்பு ராஜா தொடர்ந்து கடைசி ரேங்கின் எட்டாவது கட்டங்களின் வழியாக யானையை நோக்கி நகர்கிறது, அதற்கு வேறு வழியில்லை.

# வெள்ளை ராஜா ,தொடர்ந்து மூலை விட்டமாக பயணித்து ,கறுப்பு ராஜாவுக்கு நேராக ,அதே வரிசையில் இருக்குமாறு  பார்த்துக்கொண்டு முன்னேறி ஆறாவது ரேங்கினை அடைந்துவிட்டது.

இந்நிலையில் ஒன்றினை கவனிக்க வேண்டும் , கறுப்பு ராஜா தானாக b8 கட்டத்திற்கு சென்று ஒரு மூலையை நோக்கி சென்றுவிட்டது.  அவ்வாறு மூலை நோக்கி  b 8 செல்லாமல் , கறுப்பு ராஜா c8 இல் இருந்து   d-8க்கு கறுப்பு ராஜா மீண்டும் வந்தால், d6 இல் இருக்கும் வெள்ளை ராஜாவுக்கு நேரான வரிசையில் d-8 இல் கறுப்பு ராஜா வந்துவிடும் ,எனவே  யானையை  a8 கட்டத்திற்கு நகர்த்தி  செக் மேட் செய்து விடலாம். இதற்காக தான் வெள்ளை ராஜா c-6  கட்டம் செல்லாமல் ,d6 க்கு வருகிறார்.இதன் மூலம் மறைமுகமாக கறுப்பு ராஜா மூலைக்கு செல்ல அழுத்தம் அளிக்கப்படுகிறது.


எப்பொழுதுமே இன்னொரு மாற்று நகர்வினையும் கணக்கில் வைத்து இரண்டுக்கும் ஏற்ற ஒரு நகர்வினை செய்ய வேண்டும்.


இப்பொழுது தொடர்ந்து மூலை கட்டங்களான a8 or b8 இல் வைத்து செக் மேட் செய்ய முடியும்.

7)Rc7 -Ka8




b8 இல் இருக்கும் கறுப்பு ராஜா மீண்டும் Kc8 என முன் ,பின்னாக இழுக்காமல் இருக்க யானையை c7 கட்டத்தில் வைத்து அடைக்கிறோம்.


இப்பொழுது கறுப்பு ராஜாவிற்கு வேறு கட்டங்களுக்கு செல்ல வழியில்லை என்பதால் K-a8 என மூலைக்கு சென்றுவிடுகிறது.


8)Kc6 -Kb8

இப்பொழுது , வெள்ளை ராஜா , கறுப்பு ராஜாவின் வரிசைக்கு நேராக கொண்டு செல்ல வேண்டும், எனவே c6 கட்டத்திற்கு நகர்த்தப்படுகிறது. இனிமேல் கறுப்பு ராஜாவிற்கு a8,b8 ஆகிய இருக்கட்டங்களில் மட்டுமே நகர்வு சாத்தியமாகும் எனவே வேறு வழியில்லாமல் Kb8
 கட்டத்திற்கு வருகிறது.


9)Kb6-Ka8

ராஜாவிற்கு நேர் வரிசையில் ராஜா என்ற கொள்கையின் படி வெள்ளை ராஜா Kb6 கட்டத்திற்கு நகர்கிறது. இதன் மூலம் ஏ-8 இல் அல்லது பி-8 இல் வைத்து கறுப்பு ராஜாவினை செக் மேட் செய்வது சாத்தியமாகிறது.

கறுப்பு ராஜாவிற்கு வேறு வழியே இல்லை என்பதால் மீண்டும் a8 கட்டத்திற்கு இறுதியாத்திரையாக செல்கிறது ,அவ்வ்!

இனி வெள்ளை ஆட்டக்காரரின் ஒரே நகர்த்தலில் "பாபா மர்க்கயா" தான்!




10) R c8 +#

வெள்ளை யானை "c8 " கட்டத்திற்கு சென்று செக் வைக்கிறது, கறுப்பு ராஜாவினால் வேறு எந்த கட்டத்திற்கும் செல்ல இயலாது ,அதன் முன்னால் உள்ள a7,b7 ,c7 ஆகிய கட்டங்கள் வெள்ளை ராஜாவின் கட்டுப்பாட்டில் உள்ளது, ஒரு ராஜாவின் அடுத்தக்கட்டத்திற்கு இன்னொரு ராஜா செல்ல இயலாது, என்னவே யானையின் செக்கினை தவிர்க்க இயலாத "கறுப்பு ராஜா" செக் & மேட் ஆகிவிட்டது.

இந்த இறுதி ஆட்டத்தின் மொத்த நகர்வுகளின் எண்ணிக்கை "10" மட்டுமே.

மிகச்சரியாக ஆடினால் யார் வேண்டுமானாலும் இப்படி "10" நகர்வுகளில் செக் மேட் செய்யலாம். அதிகப்பட்சம் 15 நகர்வுகளுக்குள் ஆட்டத்தினை முடிக்குமாறு பழகி கொள்ள வேண்டும்.

இந்தாட்டத்தில் "கறுப்பு ராஜா" தொடர்ந்து ஒரே பக்கமாக நகர்ந்தது ,அப்படி செய்யாமல் முன் , பின்னாக நகர்த்தினால் என்ன செய்வது என்றால் , நமது ராஜாவின் எதிர் வரிசையில் கடைசி ரேங்கில் இருக்குமாறு செய்ய வேண்டும் அல்லது , யானைக்கொண்டு ஒரு சில செக் வைத்து ஒரு மூலைக்கு விரட்ட வேண்டும்.

இந்த இறுதி ஆட்டத்தின் மொத்த நகர்வுகளையும் "GIF" அனிமேஷன் ஆக மாற்றி இணைத்துள்ளேன் ,பார்த்து பழகிக்கொள்ளவும்.

அனிமேஷன்:


# ஒற்றை ராஜா +யானை எதிர்த்து ஒற்றை ராஜா என்ற இறுதி ஆட்டத்தில் ஏதேனும் ஒரு மூலை என நான்கு மூலைகளில் வைத்து செக் மேட் செய்யலாம்.

அல்லது நான்கு பக்கங்களில் கடைசி ரேங்க் அல்லது வரிசையில் நமது ராஜாவுக்கு நேருக்கு நேராக ஒரு கட்டம் தள்ளி முன்னால் உள்ள நிலையில் யானை மூலம் செக் மேட் செய்யலாம்.

எல்லாவற்றின் அடிப்படையும் ஒன்று தான் ஆனால் எட்டு இடங்களில் செக் மேட் செய்ய இயலும் , மற்றபடி வேறு எந்த நிலையிலும், அல்லது சதுரங்கப்பலகையின் மையத்தில் வைத்தோ செக் மேட் செய்ய இயலாது.

புரிந்து கொள்ள வசதியாக எட்டு நிலைகளில் செக் மேட் செய்யப்படும் படங்கள்.

நான்கு மூலைகளில் செக்-மேட்:


நான்குப்பக்கங்களிலும் கடைசி வரிசையில் செக்-மேட்:



# இறுதி ஆட்டத்தில் எவ்வகையான ஆட்டக்காய்கள் உள்ள நிலையில் என்ன முடிவு கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்,

# ஒரு ராஜா +யானை VS தனி ராஜா

# ஒரு ராஜா + ராணி VS தனி  ராஜா,

# ஒரு ராஜா + இரண்டு பிஷப் VS தனி ராஜா

# ஒரு ராஜா + ஒரு பிஷப்& குதிரை VS  தனி ராஜா

மேற்கண்ட இவ்வகையான நிலைகளில் கூடுதல் ஆட்டக்காய்கள் உள்ளவருக்கு வெற்றி கிடைக்கும்.
***********
கட்டாயம் டிரா ஆகும் நிலைகள்,

# ஒரு ராஜா + ஒரு பிஷப் VS தனி ராஜா

# ஒரு ராஜா + ஒரு குதிரை அல்லது இரண்டு குதிரைகள் VS தனி ராஜா

என நிலை இருந்தால் செக்  மேட் செய்யவே முடியாது, எனவே விதிப்படி டிரா ஆகும்.

இரண்டு குதிரைகள் இருந்தாலும் செக் மேட் செய்யவே முடியாது. பலகையில் வேறு ஏதேனும் ஆட்டக்காய்கள் இருக்க வேண்டும்,அது எதிரணியின் சிப்பாயாகவாது இருக்க வேண்டும். ஏன் எனில் குதிரையை பொறுத்த வரையில் அதன் அருகில் உள்ள கட்டத்திற்கு சென்றால் எதுவும் செய்ய இயலாது, மற்ற ஆட்டக்காய்களிற்கு அவ்வாறு செல்ல இயலாத கட்டம் என ஏதேனும் ஒன்றாவது இருக்கும்.


தனி ராஜா என்ற நிலையில்லாமல் ,

ஒரு யானை எதிர் ஒரு பிஷப் அல்லது குதிரை

இரண்டு பிஷப் எதிர்த்து ஒரு பிஷப் அல்லது குதிரை


ஒரு பிஷப் + குதிரை எதிர்த்து எதிர் நிற பிஷப் என இறுதி ஆட்ட நிலை இருந்தாலும் டிரா ஆகிவிடும்.


கவனக்குறைவாக ஆடினால் மட்டுமே தோற்கடிக்க முடியும் எனும் இறுதி ஆட்ட நிலைகள் இவை.


"50" நகர்வு விதி(50 moves rule) என இருப்பது போல Draw  ஆக என இன்னும் சில டிரா செய்ய வைக்கும் விதிகளும் உள்ளன.

# தொடர்ந்து மூன்று முறை ஒரே நிலையை(repeated position) ஆடினால் ஆட்டம் டிரா ஆகும்.

இதனை மிர்ரர் இமேஜ் பொசிஷன் டிரா என்பார்கள்.


# செக் மேட் செய்யாமல் வெறுமனே செக் மட்டுமே தொடர்ந்து கொடுத்தாலும் விதிப்படி டிரா ஆகிவிடும். இதனை  Perpectual check"(PP)டிரா என்பார்கள். அதிகப்பட்சம் தொடர்ந்து 15 செக் கொடுக்கலாம் ,ஆனால் மூன்றாவது செக் வைத்து தப்பிவிட்டாலே விதியை சொல்லி "டிரா" கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

மேலும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில சிறுவிதிகள் உள்ளன,

# நமது நகர்வு செய்ய வேண்டிய சூழலில் தேவையில்லாமல் நமது ஆட்டக்காயினையோ எதிராளியின் ஆட்டக்காயினையோ " தொடக்கூடாது".

அப்படித்தொட்டுவிட்டால் , விதிக்குட்பட்ட நகர்வு செய்ய முடியும் எனில் அதனை நகர்த்தியாக வேண்டும். எதிராளியின் ஆட்டக்காய் எனில் அதனை வெட்ட முடியும் எனில் வெட்ட வேண்டும்.

இதனை "Touch piece"  விதி என்பார்கள்.

#  கோட்டைக்கட்டுதல்(castling) செய்யும் போது கூட முதலில் ராஜாவினை தான் தொட வேண்டும், அதன் பின்னரே யானையை தொட வேண்டும், மாறி யானையை தொட்டுவிட்டால் அதனை " டச் பீசாக" கருதி நகர்த்த வேண்டும்.

# நாம் அவசரப்பட்டு ஒரு ஆட்டக்காயினை தொட்டுவிட்டோம் ஆனால் அதனை  விதிப்படியான நகர்த்தல் செய்ய வாய்ப்பே இல்லை எனில் , அடுத்து எப்பொழுது விதிப்படி நகர்த்தும் சூழல் வருகிறதோ அப்பொழுது "கட்டாயம் நகர்த்த "வேண்டும் ,ஹி...ஹி தொட்டால் தொடரும் , இதனை "enforced move" என்பார்கள்.

இவ்வாறு தவறுதலாக தொட்டு ஆட வேண்டிய கட்டாயத்தால் ஆடி ,ஆட்ட நிலை பாதகமாக மாறிவிடும் சூழல் உருவாகலாம், எனவே கவனமாக ஆட வேண்டும். சர்வதேச போட்டிகளில் கூட இப்படி ஆகியுள்ளது.

# ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஆட்டக்காய்களை தொட வேண்டும்,லேசாக கட்டத்தில் இருந்து விலகியுள்ள ஆட்டக்காயினை சரி செய்ய வேண்டுமெனில் , தொடும் முன்"  "I ADJUST'" என அறிவிக்க வேண்டும், சிம்பிளாக "ADJUST" என்று சொல்வது வழக்கம்..


இன்னும் பல விதிகள் உள்ளன ,அவற்றை எல்லாம் தேவையான இடங்களில் ஆங்காங்கே சொல்கிறேன், ஒரே நேரத்தில் வரிசையாக சொன்னால் மனதில் பதியாது.


# COPYCAT TRAP.

பதிவுலகில் ஒருவர் எழுதின பதிவ அப்படியே காபி & பேஸ்ட் அடிக்கும் சிலர் இருக்கிறார்கள், சிலர் பிரபல பத்திரிக்கைகளில் வருவதை எல்லாம் காபி & பேஸ்ட் அடிச்சு தினம் ரெண்டு பதிவுனு போட்டு கொலையா கொல்லுறதும் உண்டு.

அதே போல சதுரங்கத்திலும் நாம என்ன நகர்த்துறமோ அதையே காபி அடிச்சு திரும்ப ஆடுறவங்களும் உண்டு, நம்ம நகர்வுக்கு நேருக்கு நேர் அப்படியே பிரதி எடுத்து ஆடுவாங்க , இதனை "காப்பியடிக்கும்(திருட்டு) பூனை" என்பார்கள்.

காப்பி  அடிச்சாலே சரக்கு இல்லைனு தானே அர்த்தம் எனவே காப்பி அடிச்சவங்க எளிதாக மாட்டிக்கிட்டு தோற்றுவிடுவாங்க :-))

அப்படியே காப்பி அடிச்சும் ஆடும் ஆட்டம்,



1)e4- e5

2) Nf3 -Nf6

3)N X e5 - N X e4

வெள்ளை ஆடியதை அப்படியே திருப்பி செய்தது கறுப்பு.

4) Qe2 - Nf6??

5) Nc6 + 

இப்படி செய்வதனை discoverd chcek என்பார்கள், ராஜாவுக்கு செக் அதே நேரம் ராணியும் தாக்கப்படுகிறது,எனவே வெள்ளைக்கு கறுப்பு ராணி "பலியாவது" நிச்சயம்.


இப்படி விளையாடி  மாட்டிக்கிறதை COPYCAT TRAP என்பார்கள், இப்படி துவக்க ஆட்டத்தில் ,நாம ஏன் யோசிச்சு ஆடனும் , வெள்ளையாட்டக்காரர் செய்வதை அப்படியே செய்வோம்னு ஆடி ஒருத்தர் மாட்டிக்கிறதை "GIF" அனிமேஷனில் பாருங்கள்!

COPYCAT TRAP அனிமேஷன்.



இந்த COPYCAT TRAPக்கு ஆன்டி கிளைமாக்ஸ் ஒன்னு இருக்கு அதை அடுத்தப்பதிவில் காணலாம்.  முடிந்தால் நீங்களும் கண்டுப்பிடிச்சு சொல்லுங்கள்.


கட்டங்கள் தொடரும்...

----------------------------------------------

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

# chess fundamentals - jos Capablanca

# The final theory of chess - Gary M. Danelishen

# FIDE ,wiki and google

இணைய தளங்கள் ,நன்றி!
--------------------------------------------