Wednesday, July 25, 2007

மரத்தின் வயதினை அறிவது எப்படி!

(a car travel thru a giant redwood)

மனிதர்களின் வயதினை அவர்களது பிறப்பு சான்றிதழ் வைத்து அறியலாம், அது இல்லாதவர்களிடம் ஆண்டு, நாள் எல்லாம் அவர்கள் நினைவில் இருந்து சொல்வதை வைத்து தான் அறியவேண்டும், பலர் கப்சா விடக்கூடும் குறிப்பாக பெண்கள் வயதை குறைத்தே சொல்வார்கள்!

இப்படி எந்த சான்றும் இல்லாத , வாய் திறந்தும் பேசாத மரத்தின் வயதினை எப்படி கண்டுபிடிப்பது.உலகில் பல நூற்றாண்டுகண்ட மரங்கள் இன்றும் உயிரோடு உள்ளன.

சில மாண்புமிகு மனிதர்கள் நட்ட மரம் என்றால் பக்கத்தில் ஒரு பலகையும் நட்டுவைப்பார்கள். காட்டு மரங்களுக்கு அப்படி எதுவும் இருக்காதே!

மரங்களின் வயதைப்பற்றி ஆராயும் துறைக்கு டென்ரோகுரோனோலாஜி(Dendrochronology)

முதல் வழி நம்பகமானதும் செலவு பிடிக்க கூடியதுமான கார்பன் டேட்டிங். C-14(isotope) என்ற கார்பன் அணு சோதனை மூலம் வயதினை ஆண்டு,வினாடி சுத்தமாக சொல்ல முடியும்.

மற்ற முறை எளிய செலவு இல்லாத ஒன்று மரங்களில் காணப்படும் வருடாந்திர வளையங்கள்.எல்லா மரங்களிலும் குறுக்கு வாட்டில் அறுத்து பார்த்தால் பல வளையங்கள் இருக்கும் ஒரு வளையம் உருவாக ஒரு மரத்திற்கு ஒரு ஆண்டு ஆகும். இப்படி எத்தனை வளையங்கள் இருக்கிறதோ அத்தனை ஆண்டு வயதான மரம் என சொல்லலாம்!

வயதைக்கண்டுப்பிடிக்க எல்லா மரங்களையும் வெட்ட முடியாது எனவே மரத்தின் மையப்பகுதி வரை துளையிட்டு ஒரு சிறிய துண்டாக ஒரு மாதிரி எடுப்பார்கள், இதற்கு இன்கிரிமென்டல் போரர்(incremental borer) என்ற ஒரு குழல் போன்ற கருவி பயன்படுகிறது.

குழல் பகுதியை நன்கு முடுக்கி மரத்தின் உள்செலுத்துவார்கள் இதன் மூலம் மரத்தின் மையம் வரைஉள்ளப்பகுதி குழலின் உள் சேகரமாகிவிடும். அதனை எடுத்து வளையங்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பார்கள்.

இப்படி மரத்தின் வருடாந்திர வளையங்கள் மூலம் வயதை நிர்ணயிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை.



1)துளையிடுவது மரத்திற்கு எந்தவகையிலும் சேதம் உண்டாக்கதவாறு இருக்க வேண்டும்.

2)விதையிலிருந்து மரம் உருவாகும் முதல் வருடத்தில் சிறு செடியாக இருக்கும் எனவே அப்போது எந்த வளையமும் உருவாகாது எனவே n+1 என வயது வரும்.

3)சில மரங்கள் ஏற்கனவே இருக்கும் மரத்தின் கிளைகளை நட்டு உருவான மரமாக இருக்கும் எனவே அதிலும் சில வலையங்கள் முன்னரே உருவாகி இருக்கலாம். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சில தோராயமாக வயதை அறியும் முறைகளும் இருக்கிறது.

மரத்தின் சுற்றளவை நமது மார்பளவு உயரத்தில் அளந்து கொண்டு அதில் இருந்து மரத்தின் விட்டம் ,ஆரம் கண்டு பிடிக்க வேண்டும்.

பின்னர் அதே வகை வேறொரு மரத்தின் ஆண்டு வளைத்தின் மாதிரியில் இருந்து ஒரு வளையத்தின் தடிமனை அளந்து கொள்ளவேண்டும்.ஒரே வகை சேர்ந்த மரங்கள் பெரும்பாலும் ஒத்த தடிமன் உள்ள வலையங்களையே உருவாக்கும். இப்போது நாம் கண்டுப்பிடிக்க வேண்டிய மரத்தின் ஆரத்தை வளையத்தின் தடிமனால் வகுத்தால் வருவது மரத்தின் வயது ஆகும்.

உதாரணம்:

மரத்தின் சுற்றளவு c = 2x22/7xR,
இதிலிருந்து R=50 இன்ச் என வைத்துக்கொள்வோம்
வளையத்தின் தடிமன் =0.5 இன்ச்
ஃ வயது= R/0.5= 50/0.5= 100 ஆண்டுகள்.

13 comments:

ரவி said...

நல்லதொரு உருப்புடியான பதிவு...!!!!

இது போன்ற பதிவுகள் நிறைய வரவேண்டும்...!!!!!!

வடுவூர் குமார் said...

இது வரை கேள்விப்படாத தகவல்.
ஒரு சந்தேகம்... எதற்கு வயதை கணக்கிடவேண்டும்?

வவ்வால் said...

வாங்க ரவி!

//நல்லதொரு உருப்புடியான பதிவு...!!!!

இது போன்ற பதிவுகள் நிறைய வரவேண்டும்...!!!!!!//

ஏதேது அப்ப்போ நான் இதுவரைக்கும் போட்ட பதிவெல்லாம் அடாசு பதிவுனு சொல்றாப்போல இருக்கே.முடிந்த வரைக்கும் நல்லப்பதிவாவே போடுறேன் ஆனாலும் உங்க அளவுக்கு "நல்லப்பதிவெல்லாம் போட வராது"

பாராட்டுக்கு நன்றி!

வவ்வால் said...

வாங்க வ.குமார்,

நன்றி!

மனிதன் எத்தனை ஆண்டு வாழ்ந்தன் என்று மட்டும் ஏன் தெரிந்து கொள்ளவேண்டும் , சிலரை உலகிலேயே அதிக வயதானவர் என்றெல்லம் பாராட்ட வேண்டுமா? எல்லாம் ஒரு அறிவுக்காகதான்.கடல் ஆமை எத்தனை ஆண்டு வாழும் என்றெல்லாம் வேலை மெனக்கெட்டு கண்டுபிடிக்கிறார்கள்.

மேலும் ரொம்பவும் வயதான மரங்களை வெட்டி பயன்படுத்தவும் முடியாது.

Anonymous said...

வளையங்களை வைத்து கடந்த ஆண்டுகளில் பருவ நிலை எப்படி இருந்தது என்று சொல்ல
முடியுமாம், சுறாவளி வந்த வருடங்களையும் சொல்ல முடியுமாம். முந்தைய செய்தியை நேற்று
தொலைக்காட்சியில் பார்த்தேன். பின்னால் சொன்ன சேதி, கூகிளாண்டவர் உபயம்

jeevagv said...

நல்ல பதிவு!

ஒரு சில இடங்களில் மரங்கள் வருடம் முழுதும் தொடர்ந்து வளர்வதால், விட்டு விட்டு வளையங்கள் வராததால், இந்த முறையில் கணக்கிட இயலாதாமே?

சில இடங்களில் மரங்களின் வயது ஆயிரக் கணக்கில் இருக்குமாமே?

உலகத்திலேயே அதிக வயதான மரம் எதுவோ? இந்தியாவில்?

வவ்வால் said...

அனானி,

ஆமாம் இந்த வளையங்களை வைத்து கடந்த ஆண்டில் வரட்சி நிலவியதா, குளிர் நிலவியதா என்பது போன்ற தகவல்களைப்பெற முடியும். அத்தகைய காலங்களில் வளையம் இருக்காது ,சராசரி வளைத்தின் தடிமன் தெரியும் எனவே , மிஸ் ஆன வளையம் எளிதில் தெரியும்.அதே போல அது தனியாக வளர்ந்த மரமா கூட்டமாக ,காட்டில் வளர்ந்த மரமா எனக்கண்டுபிடிக்கலாம்.தனிமரம் எனில் வளையம் தடிமனாக இருக்கும்.

வவ்வால் said...

வாங்க ஜீவா,

ஆமாம் அப்படி வளையங்கள்(due to drought and severe cold) மிஸ் ஆகும் அதற்கு அதே போல ஒத்த வயதான மரம் என நினைப்பதை மாதிரியாக வைத்து கணக்கிடுவார்கள்.மேலும் பதிவில் குறிப்பிட்ட தோராயமான சுற்றளவு முறையிலும் கணக்கிட்டுக்கொள்வார்கள். கட்டாயம் துல்லியமாக வேண்டும் எனில் கார்பன் டேட்டிங் செய்துகொள்வார்கள்.

உலகிலேயே வயதான மரத்தை வெட்டிவிட்டார்கள் அப்புறம் தான் தெரிந்தது அது தான் வயதான மரம் என்று! அமெரிக்காவில் ஒரு பைன் மரம் 4600 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதாக சொல்கிறார்கள்.இந்தியாவில் இதை எல்லம் சரியாக கணக்கெடுபதில்லை. எங்கே இருக்குனு தெரிஞ்சா யாராவது சொல்லுங்க!

ILA (a) இளா said...

ஹ்ம்ம், ஆச்சர்ய்மா இருக்கு, நல்ல பதிவு batman. :)

Anonymous said...

அடையாறு ஆலமரத்திற்கு 250 வயதாம். இலங்கை மகா போதி மரம் நடப்பட்டது 288 பி சி யிலாம். கலிபோர்னியா
மாநிலத்தில், ரெட் வுட் மரங்களை வெட்டக் கூடாது என்று, ஜூலியா பட்டர்பிளை hill என்பவர் புது மாதிரி போராட்டம்
நடத்தினார். ஒரு மரத்தின் உச்சியிலே இரண்டு வருடம், கீழே வராமல் குடியிருந்தார். மனிதர்கள் சிலர் வித்தியாசமானவர்கள். இவருடைய முயற்சியால் இந்த இடத்தில் ரெட் வுட் மரங்கள்
காப்பற்றப்பட்டன. இதை இந்திய வம்சாவளி பெண் இயக்குனர் ஒருவர் படமெடுக்கப்போகிறார். The picture of the red wood tree triggered these thoughts.

வவ்வால் said...

இளா,

நன்றி! இயற்கை இதை விட மிகப்பெரும் ஆச்சர்யம் அல்லவா, அதனை அறியத்தானே மனிதன் மண்டையை உடைத்துக்கொள்கிறான்.

வவ்வால் said...

அனானி ,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

இலங்கையில் உள்ள ஆல மரம் ,புத்த கயாவில் இருந்து எடுத்து சென்ற கிளையில் இருந்து வளர்ந்தது. அதை விட வயதானது புத்த கயாவில் உள்ளமரம்.சமீபத்தில் இம்மரத்தின் கிளைகளை வெட்டி விற்றதாக பிரச்சினை கிளம்பி, விசாரனைக்கமிஷன் கூட வைத்துள்ளார் பீகார் முதல்வர். ஆனால் ஆல மரங்களின் வயது ஒரே மரத்தின் வயதாக எடுத்துக்கொள்ளப்படாது என நினைக்கிறேன், அதன் விழுதுகள் மூலம் வேறு மரம் உருவாகிவிடும் , முதல் மரம் இறக்கும் போது!

குளிர்ந்த பிரதேசங்களில் வளரும் பைன் வகை மரங்களே அதிக காலம் வாழ வல்லவை. இமயமலை தொடரில் மனிதர்கள் அறியாத வயது முதிர்ந்த மரங்கள் இருக்க கூடும்.

மரங்களை வெட்டுவதை தடுக்க போராடிய அந்த பெண் கிரீன் பீஸ் அமைப்பை சேர்ந்தவர் , அதனை தொலைக்காட்சியில் கூட காட்டினார்கள், பார்த்துள்ளேன்!

jansi kannan said...

நல்ல தகவலுக்கு நன்றி வெளவால்.