Showing posts with label அரவான். Show all posts
Showing posts with label அரவான். Show all posts

Sunday, March 04, 2012

அரவான் மற்றும் காவல்கோட்டம் உண்மையான வரலாற்றினை பேசுகிறதா?





பண்டைய தமிழகத்தில் குடும்ப வழி,குல வழியாக மக்கள் பல தொழில்களை செய்து வந்தார்கள் பின்னர் தொழிலே ஜாதியாக திரிபுற்று ஜாதி ரீதியாக இனக்குழுக்கள் உருவானது தமிழ் சமூக வரலாறு என்பதை அனைவரும் அறிவோம்.

படைத்தொழில் சார்ந்தும் அப்படி சில ஜாதிய இனக்குழுக்கள் உருவானது. அப்படி உருவான இனக்குழுவை மறவர்கள் என்றார்கள், அதிலும் அவர்களின் சேவைக்கு ஏற்ப பிரிவுகள் உண்டு.

அமரம் சேவகம்:

இப்பிரிவினர் மன்னருக்கு மிகவும் விசுவாசமானவர்கள். இவர்கள் செய்யும் படை சேவைக்கு பணமாக அல்லாமல் அவர்களுக்கு என நிர்வகிக்கவும் வரி வசூலிக்கவும் நிலம் ஒதுக்கிவிடுவார்கள். அதில் கிடைக்கும் விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கினை மன்னருக்கு கொடுத்துவிட்டு 2 பங்கினை வைத்துக்கொள்வார்கள்.

மேலும் ஒரு சிறு படையை உருவாக்கி பயிற்சி,பராமரிப்பு செலவுகள் எல்லாம் இவர்கள் பொறுப்பே நிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் மூலம் செலவுகளை பார்த்துக்கொள்ள வேண்டும்.இவர்களுக்கு தளபதி அல்லது  குறுநில மன்னர் அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கும்.

இப்பிரிவினரே பெரும்பாலும் தளபதிகளாகவும் ,முக்கியமான படைப்பொறுப்பிலும் இருப்பார்கள்.போர்க்காலங்களில் ஆயுதங்கள், படை என திரட்டிக்கொண்டு மன்னருக்கு உதவ செல்ல வேண்டும். இவர்களில் கோட்டை காவலை பெற்ற குடும்பம் அகமுடையார் எனப்படும். அகம் என்பது கோட்டை உள் இருப்பவர்கள் எனப்பொருள்.போர்க்காலத்தில் பெரும்படை களத்துக்கு சென்றாலும் கோட்டையை காவல் காக்க இவர்கள் கோட்டையை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும், அதனையே அகமுடையார்கள் என்று சொல்லப்பட்டு பின்னர் ஜாதிப்பெயராகவும் மாறியது.

கோட்டை முழுவதும்  இவர்கள் பாதுகாப்பில் இருக்கும் , கோட்டைக்குள்,வெளியே இவர்கள் அனுமதி இன்றி யாரும் செல்ல முடியாது. மன்னர்   திக்விஜயமாக தூர தேசங்களுக்கு படையுடன் சென்றிருக்கும் வேளையிலும் கவனமாக கோட்டையை பாதுகாப்பார்கள். மன்னர் இல்லாத நேரத்தில் எதிரிகள் படை எடுத்து வந்தாலும் கோட்டைக்கதவை மூடிவிட்டு உள் இருந்தே ,கோட்டைக்குள் புக முயலும்  முயற்சிகளை முறியடிப்பார்கள்.

இது  போன்ற பல முற்றுகைகளை முறியடித்த வரலாறு தமிழ் இலக்கியங்களிலும் இருக்கிறது.இப்பொழுது கோச்சடையான் என்ற பெயர் ரஜினி படம் புண்ணியத்தால் மிக பிரபலமாகிவிட்டது. அவர் காலத்தைய முற்றுகை ஒன்றைப்பார்ப்போம், பாண்டிய மன்னன் கோச்சடையான் 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்,வீரத்திற்கு பெயர் பெற்றவர். அப்போது சேர நாடும் கோச்சடையான் ஆளுகை கீழ் இருந்தது ,சேர நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்க படையுடன் கோச்சடையான் சென்றிருந்த வேளையில் சாளுக்கிய மன்னன் விக்கிரமாத்தன் தமிழகத்தின் மீது படை எடுத்து வந்திருந்தார், வரும் வழியில் பல்லவர்களை ஒரு கை  பார்த்து விட்டு, அப்படியே மதுரைக்கும் வந்தார்.

மன்னரும், பெரும் படையும் சேர நாட்டில் எனவே மதுரைக்கோட்டை வாசலை அடைத்து விட்டு உள்ளிருந்து கோட்டையைப்பாதுகாக்க துவங்கினார்கள். அப்பொழுது பாண்டிய அரசி கோட்டையில் இருந்தார் அவரே களம் இறங்கி வீரர்களை ஊக்கப்படுத்தி வழி நடத்தி கோட்டையை காவல் காக்க செய்தார் எனவும் தகவல் உண்டு.

பெரும் படையுடன் வந்திருந்த விக்கிரமாதித்தன் பல நாட்கள் முற்றுகையிட்டு உள் நுழைய போராடியும் கோட்டைக்காவலர்கள் சுற்று சுவரில் அரணாக நின்று உள் நுழையும்  முயற்சிகளை எல்லாம் முறியடித்தார்கள். நாட்கள் செல்லவே விரக்தியடைந்த விக்கிரமாதித்தன் மதுரை வீழ்ந்தது என அவராகவே வெற்றியை அறிவித்துக்கொண்டு மதுரைக்கு அந்த பக்கம் இருக்கும் குறு நில மன்னர்களையும் அடக்கி மொத்த தமிழகத்தையும் கைப்பற்ற மேற்கொண்டு முன்னேறி திருநெல்வேலி வரை முன்னேறி சென்று முகாமிட்டார்.

இதற்கிடையே தகவல் கிடைத்த கோச்சடையான் கடுங்கோவத்துடன் பெரும்படையுடன்  பாண்டிய நாடு திரும்பி,நேராக நெல்லைக்கு சென்று அங்கே வைத்தே விக்கிரமாதித்தனுடன் மோதினார் கடும் போரில் கோச்சடையானுக்கே வெற்றி கிட்டியது. தப்பித்தால் போதும் என பின் வாங்கி ஓடி வந்த விக்கிரமாதித்தனை காவிரி கரை வரைக்கும் கோச்சடையான் விரட்டி வந்தார்.

விக்கிரமாதித்தன் போரில் கிடைக்கும் விழுப்புண்களை பெருமையாக நினைப்பவர் என்பதால் அவருக்கு ரணரசிகா என்று பட்டப்பெயர் உண்டு.எனவே விக்கிரமாதித்தனை வென்றதால் ரணதீரன் கோச்சடையான் என பாண்டிய மன்னன் பெயர்ப்பெற்றான்.

அகமுடையார்கள் கோட்டைக்காவல்ப்பணியில் பெரும் வல்லமைக்கொண்டவர்கள் என்பதை விளக்கவே இந்நிகழ்வை சொன்னேன்.

அமரம் சேவகம் என சொல்வது ஏன் எனில்  இது பரம்பரையாக கொடுக்கப்படும் வேலை.அப்பா கோட்டை தலைவராக /சமஸ்தான தலைவராக இருந்து இறந்தால் அப்பணி அவரது மகனுக்கு செல்லும்.

இதற்கு அடுத்த படை  சேவகம்,

கட்டுப்பிடி சேவகம்:

அதாவது கட்டுப்படியாக கூடிய ஒரு ஊதியத்துக்கு படை சேவகம் செய்வது, இப்பணி மறவர் பிரிவில் பெரும்பாலும் தேவர்கள் எனப்படும் இனக்குழுக்களுக்கு கொடுக்கப்படும். செலவினை சமாளிக்க நிலத்தில் கிடைக்கும் வருவாய் பயன்ப்படும், ஆனால் இந்த பணி பரம்பரையாக சேராது. ஒரு சிறு படைப்பிரிவுக்கு தலைவராக இருந்து ஒருவர் இறந்தால் அவரது வாரிசு தலைவராக முடியாது. அடுத்த திறமையானவருக்கு பொறுப்பினை மன்னரே பார்த்து வழங்குவார். வாரிசும் திறமையான வீரர் எனில் வாய்ப்பு கிடைக்கலாம் ஆனால் கட்டாயமில்லை. இவர்களுக்கும் உபதளபதி அல்லது சமஸ்தான தலைவர் அந்தஸ்தும் கொடுக்கப்படும். போர்க்காலங்களில் ஆயுதம் ,படை என திரட்டிக்கொண்டு சென்று மன்னருக்கு உதவ வேண்டும்.

மூன்றாவது படைச்சேவகம் ,

கூலிப்படை சேவகம்:

போர் நடக்கும் காலத்தில் உடல் வலிமையான, போர்திறன் உள்ளவர்களை தினக்கூலி அடிப்படையில் படையில் சேர்த்துக்கொள்வார்கள். இப்படை சேவகம் செய்பவர்கள் பெரும்பாளும் கள்ளர் இனக்குழு மக்களே. இவர்களின் நிரந்தர தொழில் களவாடுதல். ஒவ்வொரு சமஸ்தான படைத்தலைவர் அவர் ஆளுகைக்குட்பட்ட பகதிகளை  சேர்ந்த கள்ளர் இனக்குழு மக்களை திரட்டிக்கொண்டு வருவார்.போர்க்காலத்தில் சேவை செய்ய முன் வரும் மக்கள் என்பதால்  சமஸ்தான தலைவர் இவர்களுக்கு ஒரு சலுகை அளிப்பார், சொந்த சமஸ்தானத்தில் திருடக்கூடாது, அப்போதைய பொது வழிகள் என அறியப்பட்ட சாலைகளில் மட்டும் களவாடலாம் என்பதாகும்.

எனவே ஒரு குறு நில மன்னர்/சமஸ்தானத்தை சேர்ந்த கள்ளர்கள் அங்கே களவாட மாட்டார்கள், பக்கத்து சமஸ்தானங்களிலும், பொது வழிகளிலும் யாத்ரிகர்கள், வியாபாரிகளை தாக்கி கொள்ளையடிப்பார்கள்.போர்க்காலத்தில் உதவி செய்ததற்கு அவர்களுக்கு அளிக்கப்படும் உரிமை இது.

இம்மூன்று இனக்குழுக்களையும் பெரும்பிரிவாக கொண்டு முக்குலத்தோர் என பொதுவாக அழைக்கப்படுகிறது.

இப்படித்தான் பழம் தமிழகத்தில் படைச்சேவகம் செய்த இனக்குழுக்களைப்பற்றி வரலாற்று ரீதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சில இனக்குழுக்களும் படை சேவகம் செய்துள்ளார்கள் ஆனால் அவர்களும் இம்முறையின் கீழ் ஏதேனும் ஒரு பிரிவில் உப பிரிவாக செயல்ப்பட்டவர்களே.

வரலாற்றூ ரீதியாக ஆய்வுகள் செய்து காவல் கோட்டம் எழுதப்பட்டது என்று சொல்கிறார்கள் ஆனால் அதில் மேற்கண்டவாறு சொல்லப்பட்டிருப்பதாக இது வரைப்படித்த நூல் விமர்சனங்களில் யாரும் சொல்லவில்லை , கள்ளர்கள் தான் கோட்டை,ஊர்க்காவலும் செய்தார்கள், களவில் இருந்து காவல் என்று சொல்வதாகவே சொல்கிறார்கள் விமர்சகர்கள்.நான் இன்னும் காவல் கோட்டம் படிக்கவில்லை ,பக்கங்களின் எண்ணிக்கையையும், விலையையும் பார்க்கும் போது படிப்பேன் எனவும் நம்பிக்கை இல்லை.

அரவாண் திரைப்படம் காவல் கோட்டத்தின் பின்ப்புலத்தோடு எடுக்கப்பட்ட ஒன்று அதுவும் தமிழர் வரலாற்றை பேசுகிறது என சொல்கிறது.ஆனால் மூலத்திலேயே வரலாறு  சரியாக சொல்லப்பட்டிருக்கிறதா எனத்தெரியவில்லை.

மேலும் நாயக்கர்  ஆட்சிக்காலத்திலும் காவல் பொறுப்பு தேவர்கள் பிரிவிடம் இருந்ததாகவே வரலாறு சொல்கிறது. மதுரை நாயக்க மன்னர் முத்துக்கிருஷ்ண நாயக்கர் ,முதன் முதலில் சடைக்க தேவரை கள்ளர்களை அடக்க நியமித்தார் என்றும் அவருக்கு ராமேஷ்வரம் செல்லும் பாதையை காக்கும் பணிக்கொடுக்கப்பட்டு பின்னர் ராமநாதபுரத்தை தலைமையகமாக கொண்டு செயல்ப்பட்டு ஒரு சமஸ்தான மன்னராக இருந்தார் என சொல்கிறது ராமநாதபுரம் சேதுபதிகள் வரலாறு.

மேலும் ராமநாதபுரம் சமஸ்தான மன்னராக இருந்த ரகுநாத சேது பதி, திருமலை நாயக்கருக்கு மைசூர் மூக்கறுப்பு போர் உட்பட பலப்போரில்  நிறைய உதவிகள் செய்து வெற்றியடைய வைத்ததால் வரி விலக்கு கொடுக்கப்பட்டு திருமலை சேதுபதி எனப்பட்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் கிழவன் சேதுபதி காலத்தில் ராணி மங்கம்மாளூடன் போரிட்டு வென்று சுயாட்சி பெற்ற சமஸ்தானமாக ராமநாதபுரம் சமஸ்தானம் மாறியது என்பதும் வரலாறு.

பாண்டியர்கள்  காலத்தில் இருந்து கள்ளர்கள் என்பவர்கள் களவுத்தொழிலையே பிரதானமாக கொண்டிருந்தார்கள் , நாயக்கர்கள் காலத்திலும் அப்படியே தொடர்ந்திருக்கிறது.  கள்ளர்களை அடக்க மறவர்களின் மற்றப்பிரிவினரான அகமுடையார், தேவர்கள் பயன்ப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், காவல்ப்பணியை அவர்களே செய்துள்ளார்கள் என தெரிகிறது. ஆனால் காவல் கோட்டமோ வேறு ஒன்றை சொல்கிறது. எது  உண்மை ? பொதுவாக அறியப்படும் வரலாறா இல்லை காவல் கோட்டம் சொல்லும் வரலாறா? ஒரு வேளை காவல் கோட்டம் மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொண்டு வந்துள்ளதா?

பின்குறிப்பு:

#நான் நாவலைப்படிக்காததால் எதுவும் தீர்மானமாக சொல்லவியலவில்லை, விமர்சனங்களில் பேசப்பட்ட கருத்தினை வைத்து பொதுவான வரலாற்றுடன் ஒப்பிட்டு எனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளேன்.

# விமர்சனம் செய்த பெரும் அறிவுப்புலம் கொண்டவர்கள் யாரும் இதனைக்குறிப்பிடவில்லை, களவைக்கொண்டாட ஒரு நாவலா என்றே பெரும்பாலும் சொல்கிறார்கள். சமஸ்தான மன்னர்களாக விளங்கிய மறவர்கள் எல்லாம் கள்ளர்களில் இருந்து உருவான இனக்குழுக்களா? காவல் உரிமைக்கொண்டவர்கள் யார்?  உண்மையில் சரியான வரலாறு எது?இதெல்லாம் நாவலிலும் விரிவாக அலசப்பட்டுள்ளதா?