Thursday, June 14, 2012

பசுமை மாடி- வீட்டுத்தோட்டம்!


பதிவர் கவுசல்யா "மொட்டை மாடியில் வீட்டு தோட்டம் அமைப்பது எப்படி" என அவசியமான ஒரு பதிவிட்டிருக்கிறார், அதில் மாடியில் தோட்டம் அமைக்க பல பிளாஸ்டிக்/நைலான் வகை சாக்குகளை பரப்பி மண் இட்டு வளர்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.

இது எளிமையான ஒரு வழிமுறை என்றாலும் நீண்டகால அடிப்படையில் மேல் தளத்தினை பாதிக்கும் ,எனவே பாதுகாப்பான முறையினையும் இன்னும் கொஞ்சம் செயல்முறைகளையும் சொல்லலாம் என இப்பதிவு .

இந்த வாரம் பதிவர்களின் பதிவுக்கு துணைப்பதிவு போடும் வா...ரம் போல :-))

ஆமாம் இவரு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் எல்லாத்துக்கும் கரெக்‌ஷன் சொல்லுறார்னு சில பாசமுள்ள பங்காளிகள் நினைக்கலாம், அப்படியல்ல ஒரு நல்ல கருத்தாக்கம் கொண்ட பதிவில் சில தேவையான கருத்துகள் விடுபடும் போது , எனக்கென்ன என கடந்து போக முடிவதில்லை, பெரும்பாலும் பின்னூட்டத்தில் சொல்லிவிடுவேன், பெரிதாக போகும் என நினைக்கையிலே தனிப்பதிவு. விடுபட்ட தகவல்களையும் அளித்து முழுமையாக்குவதால், அவ்வழிமுறைகளை பின்ப்பற்றுவோருக்கு கூடுதல் பலன் தானே கிடைக்கப்போகிறது.

சரி சொல்ல வந்த கதைக்கு போவோம் இல்லை எனில் சொல்ல மறந்த கதையாகிவிடும் :-))

நீர்க்கசிவினால் மேல் தளம் பாதித்தல்:

துண்டு துண்டாக சாக்குகளை பரப்பி மண் இடும் போது என்ன நிகழும் எனில் செடிகளுக்கு தெளிக்கும் நீர் மண்ணில் இறங்கி பின் சாக்குகளின் இடை வெளி வழியே தளத்தினை அடையும் , பின்னர் கொஞ்சம் ,கொஞ்சமாக கசிந்து தளத்தில் இறங்கும், குறைவான நீர் தானே தெளிக்கிறோம் என்றாலும் நாளடைவில் தளத்தில் இறங்கும், மேலும் மழைக்காலங்களில் அதிக நீர் மண்ணில் தேங்கி மேல் தளத்தில் இறங்க வழி வகுக்கும்.

நீர்க்கசிவினால் இரும்பு கம்பி துருப்பிடித்தல்.


இதனால் என்ன ஆகும் எனில் கான்கிரிட்டில் உள்ளே உள்ள இரும்புகம்பிகள் துருப்பிடிக்க துவங்கும், அப்படி துருப்பிடிப்பிடிக்கும் போது கம்பிகளின் தடிமன் அதிகரிக்கும் இது கன்கிரிட்டில் விரிசலை உருவாக்கும் , வீட்டின் உள்புறம் கூறையில் இருக்கும் சிமெண்ட் பூச்சுகள் படலமாக பெயர்ந்து விழவும் வழி செய்யும். இதற்கு spalling என்று பெயர். இவ்வாறு தளம் பெயர்வது உடனே நிகழாது ,சிலகாலம் ஆகும் என்பதால் நாம் உடனே உணர்வதில்லை.இது போன்று கூறையின் பூச்சுகள் பெயர்ந்து விழுவதை பழைய கட்டிடங்களில் நிறைய பார்க்கலாம்.

(படம் வடுவூர் குமார் வலைப்பதிவு,நன்றி!)


தளம் பெயர்ந்து விழுந்த வீட்டினை சரி செய்தவரின் அனுபவத்தினை இங்கு காணலாம்.


இவ்வாறு தளத்தின் வழி நீர் இறங்காமல் இருக்கவே மேல் தளத்தில் தட்டு ஓடு, வாட்டர் புரூஃப் பூச்சு எல்லாம் செய்கிறார்கள். இம்முறையெல்லாம் தண்ணீர் மேலே நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் போது கைக்கொடுக்கும், மண்ணை பரப்பி நீர் பிடிக்க செய்யும் தோட்டம் இருக்கும் போது நாளைடைவில் நீர் உள்புக செய்து விடும்.

அப்படியானால் மொட்டை மாடியில் தோட்டம் அமைக்க கூடாதா? அமைக்கலாம் அதற்கு ஒரே ஷீட்டாக ஹை டென்சிட்டி பாலித்தீன் ஷீட்டினை(HDPE sheet)பயன்ப்படுத்த வேண்டும். இது கடைகளில் கிடைக்கிறது.

தேவையான அளவில் வாங்கிக்கொண்டு ,பின்னர் மேல் மாடியில் நான்கு புறமும் சுவர் போல செங்கற்களை அடுக்கி விட்டு அதன் மீது ,பிளாஸ்டிக் ஷீட்டினை பரப்பி நான்கு புறமும் வெளிப்புறமாக கொஞ்சம் மடக்கி விட்டு விட வேண்டும். இப்போது தண்ணீர் கசியாத சதுர பிளாஸ்டிக் குளம் போல ஒரு அமைப்பு கிடைத்திடும்.

இந்த அமைப்பில் நீர் ஊற்றி சேகரித்தால் கூட கசியாது. இப்போது சுமார் ஒரு அடிக்கும் குறையாத அளவில் மண்ணை இதில் பரப்பி விட்டுக்கொள்ள வேண்டும்.

மண்கலவை:

நேரடியாக செம்மண்ணோ, தோட்ட மண்ணோ மட்டும் பயன்படுத்தினால் தாவரங்களின் வேர் நன்கு பரவாது எனவே,

ஒரு பங்கு மணல்

ஒரு பங்கு தொழு உரம்

தொழு உரம் கிடைக்காதவர்கள் கடைகளில் விற்கும் காயர் பித் கம்போஸ்ட்(coir pith compost) சர்க்கரை ஆலைகள் தயாரித்து விற்கும் பகசி கம்போஸ்ட் (bagasse compost)என ஒரு வாங்கிக்கொள்ளலாம், 10 கி.கி அளவிலான பைகளில் உரக்கடைகள், நர்சரிகளில் கிடைக்க வாய்ப்புண்டு.

ஆரம்பத்தில் வாங்கிக்கொள்ளலாம் ,பின்னர் வீட்டிலேயே சமையல் கழிவில் தொழு உரம் தயாரிக்க வழி சொல்கிறேன்.

அடுத்து 3 பங்கு செம்மண் அல்லது தோட்ட மண்

எடுத்துக்கொண்டு நன்றாக கலந்து கொண்டு நாம் உருவாக்கிய தொட்டிப்போன்ற அமைப்பில் பரப்பிக்கொள்ளவும்.

பின்னர் அதில் ஒரு அடி வரப்பு ஒரு அடி வாய்க்கால் போல ரிட்ஜஸ் அன்ட் பர்ரோவ்ஸ் (ridges and furrows)என உருவாக்கி கொள்ள வேண்டும்.இதுக்கு பேரு தான் தோட்டத்தில பாத்திக்கட்டுறது, சிலப்பேரு சோத்துலவே பாத்திக்கட்டுவாங்க :-))

மேல் மாடியில் உருவாக்கும் சின்ன தோட்டத்திற்கு இது தேவை இல்லை " raised bed "சம பரப்பில் செடிகளை நடலாம் தான் ஆனால் இப்படி பாத்திக்கட்டி அதில் நடுவதன் மூலம் சில நன்மைகள் கிடைக்கும் அவை என்னவெனில்,

பெரும்பாலான தாவரங்களின் வேர்களும் ,தண்டுகளிம் தண்ணீரில் மூழ்கி இருந்தால் அழுகிவிடும். ஏன் எனில் வேர்கள், மற்றும் தண்டுகள் மூலமும் தாவரங்கள் சுவாசிக்கும்.எனவே இது மழைக்காலங்களில் உதவும்.

மேலும் ஒரு வாரம் ,10 நாள் என ஊருக்கு செல்ல நேரிட்டால் யார் தண்ணீர் ஊற்றுவார்கள், நாம் ஆள் வைத்து விட்டு சென்றால் தான் உண்டு, இல்லை எனில் செடிகள் வாடிவிடுமே, அப்படிப்பட்ட சூழலில் இவ்வமைப்பு ஓரளவு கைக்கொடுக்கும், எப்படி எனில்,

வாய்க்கால் போன்ற அமைப்பு நிறைய மண்ணின் நீர்ப்பிடிக்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றிவிட வேண்டும் ,பின்னர் அவற்றின் மீது மட்டும் ஏதேனும் பிளாஸ்டிக் ஷீட், அல்லது சாக்கு கொண்டு மூடிவிட வேண்டும் , இது ஆவியாதல் இழப்பை தடுக்கவே. வழக்கமாக வைக்கோல் கொண்டு இப்படி செய்வார்கள், நகரத்தில் வைக்கோலுக்கு எங்கு போக. இம்முறைக்கு மல்ச்சிங் (mulching)என்று பெயர்.

சாதாரணமாக ஒரு முறை நீர் பாய்ச்சினால் ஒரு வாரத்திற்கு செடிகள் தாக்குப்பிடிக்கும். ஆனால் வழக்கமாக ஓரிரு நாளிலேயே வாடியது போல தெரிகிறதே எனலாம் அது முழு செழிப்பான நிலைக்கு, இது போன்ற தண்ணீர் தட்டுப்பாடு வரும் போது தாவரங்கள் கிடைக்கும் நீரை வைத்து முடிந்த வரை சமாளிக்கவே செய்யும்.நாம் ஊருக்கு போகும் போது செய்வது லைஃப் இரிகேஷன்.

மேலும் மல்ச்சிங்க் செய்த இடத்தில் ஈரப்பதம் நன்கு நிற்கும் ,எனவே அதுவும் கைக்கொடுக்கும் ஆகையால் ஒரு வாரம் 10 நாள் ஆனாலும் உயிர்ப்பிழைத்து விடும்.

அப்படியும் மனசு நிம்மதியடைவில்லை இன்னும் எதேனும் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களா, அதற்கும் வழி இருக்கு.

பழைய அல்லது புதிய பானை எடுத்துக்கொள்ளவும் அடியில் மிக சிறிதாக ஒரு துளையிட்டு கொண்டு அதனை வாய்க்கால் போன்ற பகுதியில் , துளையிட்ட பகுதி அழுந்தி இருக்கும்படி பதித்து வைக்கவும். பின்னர் பானை நிறைய நீர் ஊற்றி மறக்காமல் பானையின் வாயை ஒரு தட்டு போட்டு மூடிவிடவும். ஊர் வாயைத்தான் மூட முடியாது பானை வாயையா மூட முடியாது :-))

ஏற்கனவே மண்ணில் ஈரப்பதம் முழு அளவில் இருப்பதாலும், பானையின் துளை சிறியதாக இருப்பதாலும் அவ்வளவாக நீர் வெளியேறாது.

மண்ணில் உள்ள நீர் ,தாவரங்களுக்கு பரப்பு இழுவிசை மற்றும் நுண் புழை (surface tension and capillary motion)ஏற்றம் மூலமே செல்லும், மண்ணும் அப்படித்தான் நீரை கிரகிக்கும் எனவே மண்ணின் ஈரப்பதம் குறைய குறைய பானை நீர் மெல்ல மண்ணில் கிரகித்து செடிகளுக்கும் போய் சேரும். எனவே எல்லா செடிக்கும் தனி தனி பானை வைக்க தேவை இல்லை. வீட்டு தோட்டத்தின் பரப்பு மற்றும் செடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு பானையே போதும்.

இம்முறைகளை பின்ப்பற்றினால் தாராளமாக 15-20 நாட்களுக்கு நீர்ப்பாய்ச்சாமலே தாவரங்கள் பிழைத்துக்கொள்ளும்.

ஒரு கூடுதல் தகவல் , தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் சொட்டு நீர் (drip irrigation)பாசனம் செய்ய பண வசதி இல்லாத நிலையில் தென்னம் தோப்புகளில் கூட மரத்துக்கு ஒரு பானை என புதைத்து வைத்து நீர் பாய்ச்சுகிறார்கள். ஒரு பானை நீர் தென்னை மரத்துக்கே ஒரு வாரம் தாங்குகிறது.

நம்முடை நீர்ப்பாசனம் மண்ணுக்கு நீர்ப்பாய்ச்சுவதில் கவனம் செலுத்துகிறது ஆனால் வேருக்கு நீர்ப்பாய்ச்சினால் போதும் என்பது தற்கால நீர் மேலாண்மை. ஏன் எனில் நாம் பாய்ச்சும் நீரில் 90% சதம் ஆவியாதல் மூலமே விரயமாகிவிடுகிறதாம்.

இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் நெல்லுக்கே நீர் சிக்கனமாக பயன்ப்படுத்த மடகாஸ்கர் முறையில் "thin film water irrigtion" பயன்ப்படுத்த சொல்லியிருக்கிறார்.நெல் வயலில் நீர் எப்போதும் நிற்க தேவை இல்லை இம்முறையில்.வயல் ஈரப்பதமாக இருந்தாலே போதும்.

வீட்டில் பயன்ப்பாட்டிற்கு பின்னர் வெளியேறும் நீரை சுத்திகரித்து மீண்டும் நம் வீட்டு தோட்டத்திற்கு பாசனம் செய்யப் பயன்ப்படுத்தலாம் அதற்கு எளிய வழி இருக்கிறது.

வீட்டுக்கழிவு நீர் சுத்திகரிப்பு:

ஒரு பிளாஸ்டிக் கேன் அல்லது ஏதேனும் டிரம் போன்ற ஒன்று எடுத்துக்கொண்டு, அதன் அடியில் நீர் வெளியேற ஒட்டை இட்டுக்கொள்ளவும் ,பின் அதில் முறையே சம அளவில் மணல், கருங்கல் ஜல்லி, செங்கல் ஜல்லி என நிரப்பி நிரப்பிக்கொள்ளவும் பின் அதனனுடன் விறகு எரித்த மரக்கரி துண்டுகளையும் சுமார் ஒரு கிலோ அளவுக்கு சேர்த்துக்கொள்ளவும்.

இந்த கலவை அனைத்தும் முக்கால் அல்லது பாதியளவே நிரப்ப வேண்டும்,அப்போது தான் நீரீனை பிடித்து வடிக்கட்ட டிரம்முக்கு நேரம் கிடைக்கும் :-))

இதில் ஏன் மரக்கரி சேர்க்கப்படுகிறது என்றால் அது ஆக்டிவேட்டட் கார்பன் (activated carbon)போன்று இயல்பாகவே செயல்படும். நாம் குடிக்க பயன்ப்படுத்தும் நீர் சுத்திகரிப்பு எந்திரங்களிலும் ஒரு ஆக்டிவேட்டட் கார்பன் பில்டர் இருக்கும்.

இது நீரில் உள்ள வேதிப்பொருள்களை கிரகித்துக்கொள்ளும் தன்மை உடையது.நாம் ஆக்டிவேட்டட் கார்பன் என்றெல்லாம் செலவழிக்காமல் நேரடியாக இயற்கையாக கிடைக்கும் மூலப்பொருளான மரக்கரியைப்பயன்ப்படுத்திக்கொள்கிறோம் அவ்வளவு தான்.

வீட்டு உபயோக கழிவு நீரில் வழக்கமாக இருக்கும் சோப், ஷாம்பு, பாத்திரம் துலக்கும் சோப்பு, எண்ணை ,உணவு துணுக்கு என அனைத்தும் இந்த சுத்திகரிப்பு முறையில் 90% நீக்கப்பட்டு ஓரளவு இயல்பான நீர்க்கிடைக்கும்.

வீட்டில் தொழு உரம் தயாரிக்கும் முறை:

வீட்டை சுற்றி கொஞ்சம் இடம் இருந்தால் அதில் குறைந்தது ஒன்றுக்கு ஒன்று என்ற அளவிலாவது குழி வெட்டி ,தாவர, உணவு கழிவுகளை சேமித்து உரமாக்கலாம்.

மண் தரை தான் தொழு உரம் தயாரிக்க ஏற்றது ஏன் எனில் மண்ணில் உள்ள நுண்ணியிரிகள் மட்க வைக்க உதவும், மேலும் துர்நாற்றம் , உணவுகள் ,தாவரக்கழிவுகள் அழுகுவதால் வரும் நீரினையும் உரிஞ்சிவிடும்.

அப்படி இல்லாத நிலையில் ஏதேனும் பிளாஸ்டிக் டிரம்மில் சேகரித்து தொழு உரமாக்கலாம். முன் சொன்னது போல கழிவுகள் அழுகுவதால் வரும் நீரினால் துர்நாற்றம் வரும் இதனைக்குறைக்க அவ்வப்போது கொஞ்சம் மணல் அல்லது மண் கொண்டு மேலே மூடிக்கொண்டே வரவேண்டும், நீரினையும் கிரகித்துவிடும், துர்நாற்றமும் குறையும்.மேலும் எளிதில் மட்கவும் செய்யும்.முழுதும் மட்கி மண் போல ஆக குறைந்தது ஆறு மாதம் ஆகலாம். பின்னர் எடுத்து தோட்டத்துக்கு உரமாக இடலாம்.

ஏன் இப்படி மட்க செய்யவேண்டும் நேரடியாக தோட்டத்தில் தாவரத்திற்கு போட்டு விடலாமே என நினைக்கலாம். அதனால் பயனேதும் இல்லை.

தாவரங்கள் தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளான நைட்ரஜன், பொட்டாசியம் ,பாஸ்பரஸ் ஆகியவற்றை நீரில் கரைந்துள்ள(water solluble nutrients) நிலையிலேயே கிரகிக்க முடியும்.மட்காத கழிவில் ஊட்டச்சத்துகள் இருந்தாலும் நீரில் கரையாத தன்மை கொண்டவை எனவே தாவரங்களால் பயன்ப்படுத்திக்கொள்ள முடியாது.

மட்கிய நிலையில் நீரில் கரையும் தன்மை வந்துவிடும். மாட்டு சாணத்துக்கும் இது பொருந்தும் ,ஈரமாகாவோ, காய்ந்தோ அப்படியே இட்டால் பலன் இருக்காது.மட்க வைத்தே இட வேண்டும்.மட்கிய நிலையில் கரிமப்பொருட்களில் இருப்பவை அனைத்தும் எளிய மூலகங்களாக உடைப்பட்டு எளிதில் கறையும் தன்மை அடையும்.

தொழு உரம் என்பது மெதுவாக ஊட்டச்சத்தினை வெளியிடும் (slow releasing fertilizr)தன்மை கொண்டது , இந்த பருவத்தில் இட்ட உரத்தின் பலன் அடுத்த பருவத்திலேயே தெரியும்.எனவே தொழு உரம் எல்லாம் இட்டும் வீட்டு தோட்டம் பச்சை பசேல் என செழிப்பாக வளரவில்லை என முதன் முதலில் தோட்டம் போட்டதும் எதிர்ப்பார்க்காதீர்கள். சுமாரான வளர்ச்சி தான் முதல் பருவத்தில் இருக்கும். அடுத்த பருவத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

உரம் போட்டதும் பயிரில் பசுமையை காட்டுவது இரசாயன உரங்களே அதனால் விவசாயிகள் அதனைப்பார்த்து நல்ல பலன் என செயற்கை உரங்களுக்கு போய்விட்டார்கள். நீண்ட கால நோக்கில் பின் விளைவுகள் எதிர்மறையாகப்போகும். எனவே வீட்டு தோட்டத்தில் உடனடி பலன் எதிர்ப்பார்த்து இரசாயன உரம் போட வேண்டாம்.இரசாயன உரங்கள் ,பூச்சிக்கொல்லிகளை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான இயற்கை உணவுகள் நமக்கு குறைந்த செலவிலும், உழைப்பிலும் வீட்டுத்தோட்டங்கள் மூலம் கிடைக்கும்.

வீட்டுத்தோட்டத்தில் கவனிக்க வேண்டியவை:

# மொட்டை மாடியில் அமைக்கும் போது நீர் போகும் வழிகளை அடைக்காமல் அமைக்கவும்.

#கைப்பிடி சுவரோடு ஒட்டி அமைத்து விடாமல் நான்கு புறமும் சென்று வர வழியோடு அமைக்கவும்.

#குறைந்த இடத்தில் அமைக்கிறோம் ,நிறைய பயிரிட வேண்டும் என அதிகம் செடிகளை நடாமல் போதுமான இடைவெளி விடவும்.அடர்த்தி அதிகம் ஆனால் செடிகளிடையே ஊட்டச்சத்துக்கு போட்டி ஏற்பட்டு எதுவுமே சரியாக வளராது.

#நீர் தேங்காமலும், பானைகள் நீருடன் திறந்து கிடக்காமலும் பார்த்துக்கொள்ளவும் ,இல்லை எனில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறி டெங்கு முதல் அனைத்தும் வரும்.

#மேலும் சில பூச்சிகள்,வண்டுகள் உங்கள் வீட்டுக்கு அழையா விருந்தாளியாகவும் வரலாம் :-))

கட்டுப்படுத்த வேப்பம் எண்ணையை நீரில் கலந்து(10%) கை தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

#வீட்டு தோட்டத்தில் எறும்புகள் அதிகம் படை எடுக்கும் அதுவும் விதைப்பின் போது ,அதைப்பார்த்துவிட்டு துகளாக கிடைக்கும் எறும்பு மருந்தினை வாங்கி தூவக்கூடாது .ஏன் எனில் lindane 2-4-D என்ற ரசாயனமே எறும்பு மருந்து என விற்கப்படுகிறது. இது தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

எறும்பினை கட்டுப்படுத்த கொஞ்சம் மேசை உப்பினை சுற்றிலும் கோடுபோல தூவிட்டாலே போதும்.லச்சுமணன் ரேகை போல எறும்பு கோடு தாண்டாது :-))

# தோட்டத்தில் பல்லி, சிலந்தி இருந்தால் அப்புற படுத்த வேண்டாம் அவை பயிர்களின் நண்பனே இயற்கையாக பூச்சிகளை கட்டுப்படுத்துபவை.

மேலும் மற்ற விவரங்கள் எல்லாம் கவுசல்யா அவர்களின் பதிவிலே நன்றாக விளக்கியுள்ளார்கள், அங்கு பார்க்கவும்.விடுபட்டவைகளை மட்டுமே நான் கூறியுள்ளேன் , இன்னும் ஏதேனும் விடுபட்டிருந்தாலோ சந்தேகம் என்றாலோ பின்னூட்டத்தில் சொல்லலாம்.

--------------

பின் குறிப்பு:

தகவல், படங்கள் உதவி,

கூகிள் தளம்,நன்றி!

*****

Wednesday, June 13, 2012

ஜம்பிங்க்,பம்பிங்க்,பெட்ரோல் பங்க்!




மீண்டும் ஒரு முறை வீடு திரும்பல் மோகன் தாண்டிய பாதிக்கிணறை நான் தாண்டி முடிக்க வேண்டியதாயிடுச்சு. பெட்ரோல் பங்க் கொள்ளைகள் என்ற அவரது பதிவில் ,பெட்ரோல் நிரப்பும் போது செய்யப்படும் திரிசமன்களை சொல்லியிருந்தார், அதில் ஜம்பிங் ஆகிறது எப்படி என தெரியவில்லை என வருத்தமுற்றிருந்தார், அவரது வருத்தத்தை போக்கவும் வாட்டத்தை நீக்கவும், பெட்ரோல் போடும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில நுகர்வோர் குறிப்புகளையும் இப்பதிவில் காணலாம்.

இப்படி அவர் பாதியில விட்டதை எல்லாம் எடுத்து போட்டு முழுசா முடிக்கும் எனது சேவையைப்பாராட்டி ஏதேனும் சன்மானம் அளிப்பாரா? :-))

பெட்ரோல் பம்ப் வரலாறு:

பெட்ரோல் நிரப்ப மீட்டருடன் கூடிய பம்பினை முதன் முதலில் 1905 இல் வடிவமைத்தவர், Sylvanus Bowser என்ற அமெரிக்கர். இது கையால் இயங்க கூடியது.

பின்னர் 1933 இல் the Wayne Oil Tank & Pump Company, என்ற அமெரிக்க எண்ணை நிறுவனம் மோட்டாரில் இயங்கும் ,லிட்டர்,விலை காட்டும் மீட்டருன் கூடிய மெக்கானிக்கல் பம்பினை வடிவைமைத்து காப்புரிமையும் பெற்றார்கள். அண்மையில் டிஜிட்டல் வரும் வரை ஓடியது இம்மெஷின் தான். இந்தியாவில் இன்றும் பல இடங்களில் ஓடிக்கொண்டு தான் இருக்கு.

பெட்ரோல் பம்பில் ஏற்படும் ஜம்பிங் இரண்டு வகையில் ஏற்படும்,

#இயல்பானது

#தில்லு முல்லு ஜம்பிங்!

இயல்பான ஜம்பிங்:

பெட்ரோல் எளிதில் ஆவியாகக்கூடியது, எனவே சாதாரண அறை வெப்ப நிலையிலேயே ஆவியாகும், மேலும் வெப்பம் அதிகமான நிலையில் இன்னும் ஆவியாகும். பெட்ரோல் பங்கில் நிலத்தடி டேங்கில் பெட்ரோல் இருக்கும், வெப்பத்தினால் அதில் பெட்ரோல் ஆவியாகி இருக்கும்.

டேங்கில் வாயு நிலை பெட்ரோலை பிடித்து வைக்க ரிடெய்னர் மெக்கானிசம் உண்டு. டேங்கில் ஆவி மேலும் ,திரவம் கீழும் இருக்கும், ஆனால் அதிக ஆவியாதல் நடக்கும் போது திரவத்தில் கரைந்தும் இருக்கும். கார்பனேட்டட் சோடா போல.மேலும் டேங்கில் இருந்து டெலிவரி ஆகும் பம்ப் வரையில் இருக்கும் குழாயிலும் பெட்ரோலிய ஆவி இருக்கும்.


மீட்டர் பம்ப் மெசினில் இருக்கும் , பெட்ரோல் போட நாசில் உள்ள பம்ப் கன் இல் லீவரை அழுத்தியதும் மீட்டர் வழியாக முதலில் வருவது சிறிது பெட்ரோலிய ஆவியே.சோடா பாட்டிலை திறந்ததும் புஸ்ஸென வேகமாக வாயு வெளியேறுவது போலவே பம்பிலும் வேகமாக வரும், இதனால் மீட்டரில் ரீடிங் படக்கென ஓடும் , இதுவே ஜம்பிங்.இப்படிவரும் வாயு காற்றில் போனாலும் நாம அதுக்கும் சேர்த்து தான் காசு கொடுக்கணும்.

இயல்பான ஜம்பிங் எனில் மீட்டர் ஓடத்துவங்கும் ஆரம்பத்தில் மட்டும் வரும், தில்லு முல்லு ஜம்பிங் எனில் ஒவ்வொரு லிட்டருக்கும் ஒரு முறை ஜம்ப் ஆகும்.

இது வாயு தொல்லையால் வரும் ஜம்பிங் , இன்னொரு ஜம்பிங்கும் இயல்பா வரக்வாய்ப்புண்டு,காரணம் பம்ப் மெஷினில் மீட்டர் இருக்கும் அங்கு தான் அளக்கப்படுகிறது,ஆனால் மெஷின் டு நாசில் வரையில் இருக்கும் குழாயிலும் எப்போதும் பெட்ரோல் இருக்கும், ஒரு லிட்டர் பெட்ரோல் மீட்டர் வழியாக வரும் போது குழாயில் இருக்கும் ஒரு லிட்டர் பெட்ரோலையே முதலில் நமது வாகனத்துக்கு அனுப்பும்.இப்படியே தொடர்ந்து பெட்ரோல் வரும்.

இப்போது டெலிவரி குழாயை பார்த்தீர்களானால் பல சுருள்களாக வளைந்து ,நெலிந்து கிடக்கும், இதனால் அதில் முழுவதும் பெட்ரோல் நிரம்பி இருக்காது உள்ளே கொஞ்சம் வெற்றிடம் இருக்கும். இது குழாயை நகர்த்தும் போது "flexing of tube" மூலம் வெற்றிடம் உருவாகும்.எனவே மீட்டர் வழியாக வரும் பெட்ரோல் அதையும் நிரப்ப வேண்டும்,அதனாலும் மீட்டரில் ஓட்டம் இருக்கும் ஆனால் அப்போது நமக்கு பெட்ரோல் வராது.இப்படி வாயுவும், வெற்றிடமும் சேர்ந்து மீட்டர் ஓடத்துவங்கும் போது ஜம்பிங் ஆக்கும், ஆனால் இது முன் சொன்னது போல தொடர்ந்து பெட்ரோல் போடும் போதும் நிகழாது. பெட்ரோல் பம்ப் ஸ்டார்ட் ஆகும் போது மட்டும் நிகழணும். இது இயல்பானது வெளிநாட்டில் உள்ள பெட்ரோல் பங்கிலும் நிகழும்,என்ன தான் நவீன மெஷின் போட்டாலும் கட்டுப்படுத்த முடியாது.

இதில் வெகு குறைவாகவே பெட்ரோல் விரயம் ஆகும் நமக்கு. பெட்ரோல் நிறுவனங்களே இதை எல்லாம் கணக்கில் கொண்டு "+ or- "1% (-.5 எனவும் சொல்கிறார்கள்)அளவில் தான் பெட்ரோல் அளவு இருக்கும் என அதிகாரப்பூர்வமாவே சொல்லியுள்ளார்கள்.

ஒரு லிட்டர் வாங்கி அளந்துப்பார்த்தால் 990 மி.லி மட்டும் இருந்தால் வழக்கு கூட போட முடியாது.1% என்பது அங்கீகரிக்கப்பட்ட முகத்தல் அளவை நிர்ணய பிழை ஆகும்.

தில்லு முல்லு ஜம்பிங்:

பெட்ரோல் பம்பில் இரண்டு வகையான மீட்டர் ஓடும், முதலில் எத்தனை லிட்டர் எனக்காட்டும் அடுத்து அதற்கு தொடர்பாக விலையைக்காட்டும்.

பழைய பம்பில் எல்லாமே மெக்கானிக்கல் முறை , டெலிவரிக்கு போகும் குழாயில் மீட்ட்ர் கருவி இருக்கும், அதனுடன் தொடர்புடையாதாக ஒரு கியர் அமைப்பு இருக்கும் அது ஒரு லிட்டருக்கு இத்தனை எண்ணிக்கை என சிறிய யூனிட்களாக பிரிக்கப்பட்டிருக்கும், பொதுவாக அளவுக்காட்டும் கியர் 10 யூனிட்களாக இருக்கும் , அது 0-9 ஆகும், கியரில் ஒரு பற்சக்கரம்ம் நகர்ந்தால் அளவுக்காட்டும் மீட்டரில் ஒரு யூனிட் நகர்ந்து காட்டும். அதற்கு ஏற்ப விலைக்காட்டும் பற்சக்கரம் காலிபரேஷன் செய்யப்பட்டு இருக்கும்.

ஒரு லிட்டர் பெட்ரோல் 74 ரூ எனில் ஒரு லிட்டரில் உள்ள 10 யூனிட்களுக்கு ஏற்ப சமமாக பிரிக்கப்பட்டிருக்கும் 74 ரூபாய்.

அதாவது ஒரு யூனிட் பெட்ரோல் ஓடினால் ரூ 7.4 என விலையில் காட்டும் வகையில் காலிபரேஷன் செய்வார்கள்.

இப்போது பெட்ரோல் விலை ஏறுகிறது எனில் மீட்டரில் பழைய விலையேவா காட்டும், அளத்தல் மீட்டரில் ஒரு லிட்டர் 10 யூனிட் என்பது அதே தான் ஆனால் விலையை மாற்ற வேண்டும் அல்லவா, எனவே விலையை மாற்றி ரீ-காலிபரேஷன் செய்யும் வசதியுண்டு.விலையேறியதற்கு ஏற்ப ரூபாயைக்காட்டும் கியரில் மாற்றம் செய்வார்கள்.
இப்படி மீட்டர் ரீடிங்கில் மாற்றம் செய்ய இருக்கும் வசதியைக்கொண்டு தான் தில்லுமுல்லு செய்து ஜம்பிங் செய்ய வைப்பார்கள். பொதுவாக இந்த மீட்டர் அமைப்பு சீல் செய்து இருக்கும், பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் தான் கை வைக்க முடியும்.ஆனால் திருடனும்னு முடிவு செய்துட்டா பயப்படுவாங்களா என்ன?

ஆட்டோ மீட்டர்ல சூடு வைப்பது என்று சொல்வார்களே அதுவும் இப்படித்தான் கிலோமீட்டர் ஓடாமலே தொகை ஓடிக்காட்டும் :-))

சூடுவைப்பது என்று சொல்லக்காரணம் ,சால்டரிங் அயர்னால் மீட்டரில் உள்ள ஒரு சில கியர் பற்களை உருக்கி அழித்துவிடுவார்கள்,எனவே அந்த பல்லுக்கான யூனிட் வேகமாக ஓடி தொகைக்காட்டும்.

பெட்ரோல் பம்பில் உள்ளே திருத்தி அமைக்க வசதியும் இருப்பதால் சீலை உடைத்து மாற்றியமைத்துவிட்டு மீண்டும் சீல் செய்துவிடுவார்கள்.அதிரடியாக ரெய்டு செய்து பல சமயங்களில் பெட்ரோலிய அதிகாரிகள் கண்டுப்பிடித்தும் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் எச்சரிக்கை,அபராதம் என முடிந்துவிடும், எப்போதாவது லைசென்ஸ் கேன்சல் என போவதுண்டு.

பெட்ரோல் பம்ப் மெக்கானிசம்

இது மெக்கானிக்கல் பம்ப்பில் ,டிஜிட்டல் பம்ப்பிலுமா செய்வார்கள் எனக்கேட்கலாம், ஆனால் எந்தப்பம்பும் முழு டிஜிட்டல் கிடையாது, எலெக்ட்ரோ மெக்கானிக்கல் மீட்டர் ரீடிங்க் தான்.

கியர் அமைப்பில் பங்க் காரார்கள் கை வைக்கவில்லை என்றாலும் நாட்போக்கில் தேய்மானம் ஏற்பட்டு ஜம்பிங்க் ஆக வாய்ப்புண்டு,எனவே அதற்கு மாற்றாக உருவானது தான் எலக்ட்ரோ மெக்கானிக்கல் மீட்டர். இதில் கியர் இல்லாமல் ஒரு சக்கரத்தினை மட்டும் வைத்து அதில் சில வண்ணக்குறியீடு,அல்லது ஸ்கேனர் படிக்கும் வகையில் குறியீடு செய்து இருப்பார்கள்.

ஒரு சக்கரம் முழு சுழற்சி 360 டிகிரி எனவே ஒரு சுழற்சியை 10 யூனிட் என சம டிகிரி அளவில் பிரித்து அதில் எலக்ட்ரானிக் ஸ்கேனார் படிக்கும் வகையில் குறியீடு செய்துவிடுவார்கள்.

ஒரு லிட்டர் ,10 யூனிட்=360 டிகிரி எனில்

ஒரு யூனிட் =360/10=36 டிகிரி

அதாவது மீட்டரில் உள்ள சக்கரம் 36 டிகிரி சுழன்றால் ஒரு யூனிட் எனக்கணக்கெடுக்கும். பின்னர் அதற்கேற்ப லிட்டர், விலை எனக்காட்டும் வகையில் டிஜிட்டல் டிஸ்ப்ளே மட்டுமே. இந்த இடத்தில் பயன்ப்படுவது "re programmable " கால்குலேட்டர் வகை சிப் தான் இருக்கும்.

பெட்ரோல் விலை ஏறும் போதெல்லாம் ,அதற்கு ஏற்ப எளிதாக ரி.கேலிபரேஷன் செய்ய முடியும். எனவே டிஜிட்டல் எனப்படும் எலக்ட்ரோ மெக்கானிக்கல் பம்ப் மீட்டரில் எளிதாக திருத்தி அமைத்து விட முடியும், ரெய்டு வருகிறார்கள் என தெரிந்தால் மீண்டும் எளிதாக மாற்றியமைத்து விட்டு நல்லப்பிள்ளையாக உட்கார்ந்துக்கொள்ளலாம் :-))

இதற்கு எல்லாம் தீர்வே இல்லையா எனலாம் ,இருக்கு அது என்னவெனில் இணையவழி நெட் ஒர்க்கிங் செய்வது தான் எப்படி எனப்பார்க்கலாம்.

நம் ஊரில் பெட்ரோல்,பம்ப்,பெட்ரோல் பங்க் என எல்லாமே ஸ்டேண்ட் அலோன் வகை ,மேலும் பெட்ரோல் நிறுவனங்களுக்கும் இணைப்பில்லை.பெட்ரோல் விலை ஏறுகிறது என்று சொன்னால் முதல் நாள் இரவு ஒவ்வொரு பெட்ரோல் பம்ப் ஆக விலையை ஆட்களே மாற்றியமைக்கணும், அதான் இங்குள்ள நடைமுறை.

ஆனால் உலக அளவில் தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளில் எப்படி எனில்,பெட்ரோல் பம்ப் , கம்பியில்லா இணையவழி மூலம் அதன் பெட்ரோல் பங்கில் உள்ள கணினியுடனஇணைக்கப்பட்டிருக்கும்.அந்தக்கணினி அவர்களுக்கு பெட்ரோல் சப்ளை செய்யும் எண்ணை நிறுவன சர்வருடன் இணைந்து இருக்கும்.

எனவே ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டாலும் பங்க் கணினி, எண்ணை நிறுவன சர்வர் என அனைத்திலும் பதிவாகிவிடும்.விலை ஏற்றம் செய்யும் போது விலையை சர்வரில் திருத்தி அமைத்தால் நெட்வொர்க்கில் இருக்கும் அனைத்து பெட்ரோல் பம்பிலும் உடனே அப்டேட் ஆகிவிடும்.

இப்படி நெட் ஒர்க் பெட்ரோல் பம்ப் ஆக இருப்பதால் இடையில் யாரும் திரிசமன் செய்ய முடியாது.செய்ய வேண்டும் எனில் பெரிய கம்பியூட்டர் ஹேக்கராக இருந்தால் உண்டு.

இப்படி இணைய வழி தொடர்பில் இருப்பதால் இன்னும் பல நன்மைகள் உண்டு. வெளிநாடுகளில் எல்லாம் பெரும்பாலும் பெட்ரோல் போடுவது சுய சேவை தான் , அப்படி எனில் பெட்ரோல் போட்டுவிட்டு காசுக்கொடுக்காமல் போய்விட்டால் என்னாவது என நினைக்கலாம் அங்கே தான் கணினி கண்ணை தொறக்குது.

டெபிட் கார்ட், கிரடிட் கார்டு என எதையாவது உள்ளே செருகினால் தான் மெஷின் ஆன் ஆகும், பின்னர் பெட்ரோல் போட்டுவிட்டு பெட்ரோல் கன்னை அதற்கான இடத்தில் வைத்தால் காசு எடுத்துக்கொண்டு ,கார்டை துப்பிவிடும் பெட்ரோல் பம்ப் :-))

கார்டு மட்டும் இல்லாமல் காசு போட்டும் இயக்கும் வகையிலும் இருக்கும்.எவ்ளோ காசு போடுறிங்களோ அவ்ளோ பெட்ரோல் கொடுக்கும் வெண்டிங் மெஷின் வகை.

இன்னும் சில எண்ணை நிறுவனங்கள் பிரத்யோகமான ரேடியோ சிக்னல் ஐ.டி தருவார்கள்,அது வாங்கி கார் கீ செயினில் அல்லது கார் டேஷ் போர்டில் வைத்துக்கொண்டால்,அவர்களால் இயக்கப்படும் பெட்ரோல் பங்கில் காசோ/கார்டோ இல்லாமல் பெட்ரோல் போட்டுக்கொள்ள முடியும், உங்கள் வங்கிக்கணக்கில் காசு எடுத்துக்கொள்ளப்படும்.இதனை நிறைய ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்பீர்கள் ஆளே இல்லாத பெட்ரோல் பங்கில் வந்து பெட்ரோல் போட்டுக்கொண்டு அப்படியே கிளம்பிவிடுவார்கள், என்னக்காசு கொடுக்காமல் போறாங்களே என நினைத்திருக்கலாம்,ஆனால் இவ்வகையான முழுவதும் ஆட்டொமேடிக் பங்குகள் அவை.

காரை சரியான இடத்தில் நிறுத்தினால் தானாக டேங்க் மூடி திறந்து பெட்ரோல் நிரப்பும் ரோபாட்டிக் பெட்ரோல் பங்குகள் கூட இருக்காம்.

ஒரு வாகனம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட சென்றால் அது என்ன வாகனம், எத்தனைக்கிலோமீட்டர் ஓடியது, எத்தனை லிட்டர் பெட்ரோல் போட்டது என சகலமும் பதிவாகிவிடுமளவுக்கு பல நாடுகளில் இணைய தொழில்நுட்பத்தினைப் பயன்ப்படுத்துகிறார்கள்.

நம்ம ஊரில் கணினியில் அச்சடித்து டிக்கெட் தரும் அளவுக்கு திரையரங்குகள் எல்லாம் முன்னேறிய பிறகும் ,அனைத்து திரையரங்குகளையும் இணைத்து சென்ரலைஸ்டு பாக்ஸ் ஆபிஸ் உருவாக்கவில்லை. அப்படி இருக்கும் போது எங்கே பெட்ரோல் பங்குகளை ஒன்றிணைக்க போறாங்க :-))

பெட்ரோல் போடும் போது மேலும் கவனிக்க வேண்டியவை.

# காலை அல்லது இரவில் பெட்ரோல் போடுவது நல்லது ஏன் எனில்,

ஏற்கனவே சொன்னது போன்ற வாயு தொல்லை அப்போது குறைவாக இருக்கும்.

இரண்டாவது வெப்ப விளைவு,

வெப்பத்தினால் பெட்ரோல் விரிவடையும், அப்போது அதன் அடர்த்தி குறையும். அடர்த்தி குறைவான பெட்ரோல் குறைவாக மைலேஜ் தரும் ,மேலும் அளவு வால்யும் அடிப்படையில் ஒரு லிட்டர் இருந்தாலும் குளிரும் போது வால்யும் குறைந்து விடும்.

அறை வெப்ப நிலையில் ஒரு லிட்டர் =1000 மி.லி இருக்கும் பெட்ரோல் 40 டிகிரியில் சுமார் 1045 மி.லி ஆகிவிடும். எனவே மத்தியான உச்சி வெயிலில் பெட்ரோல் போட்டால் ஒரு லிட்டருக்கு பதில் 955 மிலி பெட்ரோல் விரிவடைந்து ஒரு லிட்டராக கிடைக்கவே வாய்ப்புள்ளது.

வெப்பத்தினால் நீரினைப்போல 4.5 மடங்கு பெட்ரோல் விரிவடையும்,இதனை"co efficient of thermal expansion" என்பார்கள்.


வாகனத்திற்கு போடும் போதே இழப்பு வெப்பமாதல்,ஆவியாதல் மூலம் ஏற்படுகிறதே ,அதே போல பெட்ரோல் பங்கிற்கும் ஆகாதா எனலாம்,ஆகும் எனவே தான் எண்ணை நிறுவனங்கள் "evaporation and coefficient of thermal loss compensation" என 2% கூடுதல் எண்ணை கொடுத்துவிடுவார்கள்.ஏன் எனில் டேங்கரில் இருந்து பெட்ரோல் இறக்கும் போது வாயு நிலை பெட்ரோலியம் டேங்கரில் தங்கிவிடும் மேலும் பெட்ரோல் பங்கில் உள்ள நிலத்தடி டேங்க்கில் இருந்தும் பெட்ரோலிய ஆவி டேங்கர் லாரிக்கு வரும், அவற்றை எல்லாம் எண்ணை நிறுவனங்கள் மீண்டும் "கண்டென்சேஷன்"செய்து பெட்ரோல் ஆக்கிக்கொள்வார்கள்.

#பெட்ரோல் போடும் போது கடைசியில் அளவை நெருங்கும் போது விட்டு விட்டு லீவரை அழுத்தி பாயிண்டுக்கு கொண்டு வருவார்கள் அப்போது பெரும்பாலும் பெட்ரோல் நமது டேங்கிற்கே வராது ,மீட்டரில் மட்டுமே நகரும், இதனை பாயிண்ட் அடிக்கிறது என்பார்கள்.காரணம் குழாயில் உள்ள வளைவுகள், மற்றும் பெட்ரோல் கன் மேல இருக்கும், ட்யூப் கீழக்கிடக்கும் எனவே மெதுவாக விட்டு விட்டு பம்ப் மோட்டார் இயக்கும் போது பெட்ரோல் டேங்கிற்கு போக விசை கிடைக்காமல் குழாயில் இருக்கும் வெற்றிடத்திலயே அடங்கிவிடும். அதிகப்பட்சம் சில துளிகள் தான் அப்போது நம் வண்டிக்கு வரும்.எனவே ஒரே சீராக லீவரை பிடித்து பெட்ரோல் போட வேண்டும். அப்படி செய்ய மாட்டார்கள்.

பிற்சேர்க்கை:

கடைசியில் பாயிண்ட் பிடித்து போடுவதில் இழப்பு வருவதை தடுக்கவே பிரி செட் டெலிவரி அமைப்பு உள்ள பெட்ரோல் பம்புகள் கொண்டுவரப்பட்டது. 10 லிட்டர் என உள்ளீடு செய்து விட்டு பெட்ரோல் கன்னை அழுத்திக்கொண்டு இருந்தால் போதும் 10 லிட்டர் வந்ததும் தானாக பம்ப் இயக்கம் நின்றுவிடும்.இத்தகைய பெட்ரோல் பம்ப்களை சென்னையில் பல இடங்களில் காணலாம்.

ஆனால் நம்ம ஊரு பங்கர்கள் ஒவ்வொரு முறையும் அழுத்தி உள்ளீடு செய்ய சோம்பல் பட்டுக்கொண்டு அந்த பம்பிலும் வழக்கமான முறையில் பாயிண்ட் பிடித்து போடுகிறார்கள்.

# பெட்ரோல் பங்கில் அப்போது தான் டேங்கரில் இருந்து பெட்ரோல் இறக்கி நிரப்பியிருந்தார்கள் என்றாலும் பெட்ரோல் போடுவதை தவிர்க்க வேண்டும், ஏன் எனில் நிலத்தடியில் பலகாலமாக பெட்ரோல் சேமிக்கப்படுவதால் நிறைய தூசு,வண்டல் என இருக்கும் அவை அனைத்தும் பெட்ரோல் நிரப்பும் போது கலங்கிவிடும்,எனவே அதனை வண்டியில் நிரப்பி ஓட்டினால் அதிக புகை வரும்,பில்டர் அடைத்துக்கொள்ளும், ஸ்பார்க் பிளக்கில் கரி அதிகம் படியும்.

சில பெட்ரோல் பங்குகள் சரியான பராமரிப்பு இல்லாமல் எப்போதுமே தூசுடன் பெட்ரோல் விற்கிறார்கள்,அது போன்ற இடங்களை தவிர்க்கவும்.


# முழு டேங்க் பில் செய்வதாக இருப்பின் பெட்ரோல் கன் முனையை பெட்ரோல் தொடும் முன் நிறுத்திவிட வேண்டும். ஏன் எனில் பெட்ரோல் கன்னில் ஓவர் புளோ தடுக்க ஒரு அமைப்பு உள்ளது, முனை பெட்ரோலில் மூழ்கினால் ஓவர் புளோவ் எனக்கருதி மீண்டும் பெட்ரோலை திரும்ப உறிஞ்சிவிடும் ஆனால் மீட்டரில் ஓடிய அளவு குறையாது. அப்படி எடுத்த பெட்ரோல் வேறு குழாய் வழியாக நிலத்தடி டேங்கிற்கு சென்று விடும்.
இந்த மெக்கானிசம் நம் நாட்டில் உள்ளதா என்பது சந்தேகமே.

#கார் போன்ற பெரிய வாகனங்களுக்கு முழு டேங்க் பில் செய்வதாயின் மெதுவாக பெட்ரோல் பிடிக்க சொல்ல வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு பெட்ரோல் பம்புக்கும் வேக அளவு உண்டு.அதாவது ஒரு நிமிடத்திற்கு இத்தனை லிட்டர் என. அதற்கான ஆக்சிலரேட்டர் இருப்பது பெட்ரோல் கன்னில் உள்ள லீவரில், முழுக்க அழுத்தினால் முழுத்திறனில் வேகமாக மோட்டார் இயங்கி பெட்ரோல் நிரப்பும். அப்படி செய்யும் போது மீட்டர் வேகமாக ஓடும், ஜம்பிங் திருத்தம் செய்து இருந்தால் கண்டுப்பிடிக்க முடியாது.

பெட்ரோல் பம்ப் வேகமாக ஓடுவதால் நுரைத்துக்கொண்டு வரும் காரணம் நிறைய ஆவியுடன் வருவதால் எனவே வழக்கத்தினை விட அளவு குறையும், மேலும் நிறைய காற்றும் கலந்துவிடுவதால் சமயங்களில் ஏர் லாக் ஆகும் வாகனம்.


#அப்புறம் வழக்கமான ஸீரோ செய்து போடுவது,கலப்படம் எல்லாம் பார்த்து கவனமாக நடந்துக்கொள்ள வேண்டியது தான்.

#நல்ல பெட்ரோல் பங்கினை கண்டறிய எளிய வழி, டிராவல்ஸ் நடத்துபவர்கள்,ஆட்டோ,டாக்சி என பெட்ரோல் போடும் பங்குகளாக பார்த்து தேர்வு செய்வது தான். அவர்கள் எப்போதும் மைலேஜில் கண்ணாக இருப்பார்கள்.இத்தனை லிட்டருக்கு இத்தனை கிலோ மீட்டர் இந்த கார் போகும் என கணக்கு போட்டு தான் கட்டணம் வசூல் செய்கிறார்கள்.அவங்க போட்ட லிட்டருக்கு ஏற்ப மைலேஜ் வரலைனா உடனே கண்டுப்பிடிச்சு, பெட்ரோல் தான் காரணம் எனில் இடத்தை மாற்றிவிடுவார்கள்.

-------

பின்குறிப்பு:

தகவல்,படங்கள் உதவி,

விக்கி,கூகுள்,தளங்கள்,நன்றி!

******

Sunday, June 10, 2012

chennai metro rail- Tunnel boring machine



நண்பர் ராஜ நடை நேத்தில இருந்து "உனக்கு பொறுப்புணர்வு இருக்கா ,துவைப்பானுக்கு பதிவு போடுற ,சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை தோண்ட சீனாக்காரன் பெருசா மெஷின் எடுத்து வந்திருக்கான் அதைப்பற்றி பதிவு போட தெரியாதானு துவைச்சு எடுக்கிறார்" .பதிவு போடலாம்னு பார்த்தால் ஏனோ ஒரு " உற்சாகமே" வரவில்லை.

காரணம் என்னவெனில் சென்னைக்கு முன்னரே பெங்களூரு தோண்டல், டெல்லி தோண்டல் எல்லாம் எட்டிப்பார்த்து விட்டதால் சென்னையில தோண்டுவது பெரிதாக என்னை ஈர்க்கவில்லை, இன்னும் சொல்லப்போனால் எல்லா ஊரிலும் நாம இருக்கும் போது தான் தோண்டி உயிர எடுக்கிறாங்கன்னு ஒரு சலிப்பே வந்துடுச்சு. டிராபிக் ஜாம்ல மாட்டினவங்களை கேட்டா சொல்லுவாங்க ,இப்போ யாரு கேட்டா மெட்ரோனு, ஆனால் நான் அப்படி சொல்ல மாட்டேன் ,மெட்ரோ தேவையான ஒன்று தான் ,ஆனால் நம்ம ஊரில இந்திய முறையில் வேலை செய்யுறாங்க அதான் பிரச்சினை என்பேன்.

லண்டன் வாசி ஒருத்தர் சொன்னார் என்ன இப்படி வேலை செய்யுறாங்க, லண்டனில் ஒரு வழியா இருக்கும் மெட்ரோ வழிகளை இருவழியாக ஆக்க சுரங்கம் தோண்டிக்கிட்டு இருக்காங்கா , வேலை நடக்கிறதே தெரியாது, வெட்டிய மண்ணை எடுத்து போவது கூட யாருக்கும் தெரியாத அளவுக்கு மிகவும் கச்சிதமாக வேலை நடக்கிறதாம்.

chennai metro plan

அந்த அளவுக்கு எல்லாம் எதிர்ப்பார்த்தால் நம்ம ஊரில் ஒரு சாக்கடை கால்வாய் கூட கட்ட மாட்டாங்க, எனவே 2014-15 வரைக்கும் டிராபிக்ல நீச்சல் அடிச்சு வாழ கற்றுக்கொண்டால் நாமும் மெட்ரோ ரயிலில் சொகுசா போகலாம்னு பொறுமை காப்போம் மக்களே.

நம்ம ஊரு மெட்ரோ திட்டத்தில் பாதி தரைக்கடியிலும்(under ground tunnel), பாதி உயர்த்தப்பட்ட (elevated)தடத்திலும் என திட்டம் போட்டுள்ளார்கள். போக்குவரத்து நெரிசலுக்கு இதுவும் காரணம். முழுவதும் நிலத்தடியில் செயல்ப்படுத்தினால் நன்றாக இருந்திருக்கும்.

சென்னை நிலத்தடி மண் ஒத்துவரவில்லை என்பது போல இதற்கு காரணம் சொல்லியிருந்தார்கள். ஜப்பான் போன்ற நிலநடுக்க பூமியில்,கடலுக்கு அடியில் எல்லாம் சுரங்கம் அமைக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.எனவே சென்னை மண் ஒரு காரணம் அல்ல பொருளாதார காரணங்களே இப்படி கலந்து செய்ய காரணம்.

ஏன் எனில் ஒரு கிலோமீட்டர் நிலத்தடி சுரங்கப்பாதை அமைக்க 300 கோடி செலவாகும், அதே சமயம் உயர்த்தப்பட்டப்பாதை அமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு 100 கோடி போதும்.

மேலும் நிலத்தடி ரயில் நிலையம் ஒன்று அமைக்கவும் 300 கோடி ஆகும், உயர்த்தப்பட்ட ரயில் நிலையம் அமைக்க 100 கோடி என்றளவில் செலவாகும் என திட்டமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே செலவை குறைக்க தான் உயர்த்தப்பட்ட பாதை .

இந்தியாவில் மெட்ரோ ரயில் திட்டம் முதன் முதலில் செயல்படுத்திய நகரம் என்ற பெருமை கொல்கட்டாவிற்கே ஆகும். 1984 முதல் அங்கு செயல்ப்பாட்டில் உள்ளது. இப்போது இரண்டாவது கட்டப்பணிகள் நடைப்பெறுகிற்து.

அடுத்து டெல்லி, பெங்களூருவிலும் செயல்ப்பாட்டுக்கு வந்துவிட்டது.மும்பையில் வேலை நடந்துக்கொண்டுள்ளது ,கடைசியாகவே சென்னைக்கு எட்டிப்பார்த்துள்ளது மெட்ரோ ரயில்.அதுவும் பல அரசியல் சித்து விளையாட்டுகளை தாண்டியே.இப்போதைக்கு அரசியலை ஓரம் கட்டிவிட்டு தொழில்நுட்ப விவரங்களுக்கு போவோம்.

நிலத்தடி சுரங்க துளைப்பான்:
(Tunnel boring machine)

schematic picture

மண் புழுவினை அனைவரும் பார்த்திருப்போம் அது எப்படி மண்ணிற்குள் துளைத்து உள் செல்கிறதோ அப்படித்தான் சுரங்க துளைப்பானும் செயல்படுகிறது.

மண் புழு மண்ணில் உள்ள தாவர எச்சங்களை உண்டு விட்டு எச்சமாக மண்ணினை பின் புறமாக வெளியேற்றிவிட்டு தொடர்ந்து மண்ணை துளைத்து முன் செல்கிறது, அதே தத்துவத்தின் அடிப்படையிலே சுரங்க துளைப்பான் மண்ணை முன் புறமாக வெட்டி எடுத்து பின்னால் அனுப்பிக்கொண்டு முன்னோக்கி செல்லும்.

எந்திரத்தினை விட இயற்கை மிக திறமையானது எப்படி எனில் மண் புழு பின்னால் திரும்ப வர வேண்டும் எனில் அப்படியே பின் புறமாகவும் மண்ணை உண்டு அடுத்தப்பக்கம் தள்ளிவிட்டுக்கொண்டு வர முடியும்.இரண்டு பக்கமும் செயல்படக்கூடியது மண் புழு, மேலும் மண்ணிற்கு வளம் சேர்க்க கூடியது,உரம் என்பதையெல்லாம் இங்கே பேசினால் யாரேனும் அடிக்க வரலாம் :-))

அக்கால சுரங்க துளைப்பான்.

முதலில் சிறிய அளவிலான சில சுரங்க துளைப்பான்கள் பயன்ப்படுத்தப்பட்டு சுரங்கங்கள் வெட்டப்பட்டுள்ளது. இப்போதைய வடிவில் ஒரு பெரிய சுரங்க துளைப்பான் வடிவமைத்து ,1853 இல் காப்புரிமை பெற்றவர் சார்லஸ் வில்சன் என்ற அமெரிக்கர் ஆவார். அந்த எந்திரத்திற்கு வில்சன் ஸ்டோன் கட்டிங் மெஷின் என்றே பெயர்.

குறுக்களவில் மிக பெரியது செயின்ட்.பீட்டர்ஸ் பர்க்கில் தோண்டப்படும் ஓர்லோவ்ஸ்கி சுரங்கப்பாதை ஆகும்.19.25 மீ விட்டம் உடைய சுரங்கம் .
சீனர்களின் சுரங்க துளைப்பான் முகப்பு.

அடுத்து சீனாவில் ஷாங்காய்-யாங்ட்சி ஆறுகளின் அடியில் செல்லுமாறு தோண்டப்படும் சுரங்கப்பாதையாகும் விட்டம் 15.43 மீட்டர்.

மிக அதிக ஆழத்தில் சுமார் 2000 மீட்டரில் ஆல்ப்ஸ் மலையில் தோண்டப்படும் கோத்தார்ட் சுரங்கம் (gotthard base tunnel)ஆகும்.ஜெர்மனிக்கும்,இத்தாலிக்கும் இடையே அமையும் இச்சுரங்க வழியே உலகின் மிக நீளமான ஒன்றாகும் .ஆல்ப்ஸ் மலையில் 57 கி.மீ யும் மொத்தமாக 151.84 கி.மீ நீளம் கொண்ட சுரங்கவழி ரயில்ப்பாதை.

நிலத்தடி சுரங்க துளைப்பான்:(Tunnel boring machine-TBM)


பாகங்கள்:

#சுழல் வெட்டு சக்கரம்(rotary cutting wheel)

சக்கரத்தின் வெட்டுப்பற்கள் அல்லாது ,நூற்றுக்கணக்கணக்கான தனித்த டங்க்ஸ்டன் கார்பைடு (tungsten carbide)வெட்டுப்பற்களும் தனித்து இயங்கும் வகையில் ஒரே அசெம்பிளியாக இருக்கும்.அதிர்வுகளை தாங்கும் வகையில் காற்று தாங்கிகள் கொண்டவை.

#மத்திய அச்சு.(central axis)
இது காற்று அழுத்தத்தின் (pneumatic pressure)உதவியுடன் செயல்படுகிறது.

# சேகரிக்கும் அறை:(excavation chamber)

வெட்டி எடுத்த பாறை,மண் இங்கு சேகரித்து ,பின்னால் அனுப்பப்படும்.

#திருகு கடத்தி:(screw conveyor)

சேகரித்த மண்,பாறைகளை பின்னால் அனுப்ப உதவும்.

#உந்து குழல்கள்:(Thrust cylinders)
தொடர்ந்து முன்னால் வெட்டு சக்கரத்தினை அழுத்தி வெட்ட வைக்க அழுத்தம் தரும்.

#இயங்கு பாதை அமைப்பான்:(segment erector)

நிலத்தடி துளைப்பான் தொடர்ந்து முன் செல்ல வசதியாக கான்கிரிட் துண்டுகளை அடியில் பாவும்.

#கூறை ஓடு பாவும் அமைப்பு:(lining erector)

முன் கூட்டியே தயாரித்த கான்கிரீட் வார்ப்பு ஓடுகளை (reinforced precast lining segments )கூறையில் பொருத்தி செல்லும்(bolted and cemented).அப்போது தான் மண் சரியாமல் பாதுகாப்பாக இருக்கும்.
கான்கிரிட் ஓடு வேய்ந்த சுரங்கத்தின் படம்.

நிலத்தடி சுரங்க துளைப்பான் ஒரே எந்திரமாக கீழ்கண்ட பணிகளை எளிதாக செய்யும் ஒரு கூட்டு எந்திரம் ஆகும், இதனால் , சுரங்கம் அமைப்பதில் உள்ள சிக்கல்களை குறைக்கிறது எனலாம்,

மண் வெட்டுதல்

அள்ளுதல்,

வெளியேற்றுதல்,

முன் செலுத்துதல்

,தேவையான திசைக்கு ஏற்ப துளைத்தல்

பிடிமானம் உருவாக்குதல்,

துளைப்பான் கவசம் அளித்து பாதுகாப்பது.

தரையில் நிலை செய்தல், மற்றும் கட்டுப்பாடு

மேற்கூறையில் பாதுகாப்பு ஓடு அமைத்தல்

காற்றோட்டம் அளித்தல்,

மின்சாரம் அளித்தல்

ஆகிய அனைத்தினையும் ஒருங்கிணைத்து பணி செய்ய கூடிய வல்லமை உடையது நிலத்தடி சுரங்க துளைப்பான்.

video:


மண்ணின் தன்மை மற்றும் பாறை உள்ள பகுதி என தேவைக்கு ஏற்ப நிலத்தடி துளைப்பான் வடிவமைக்கப்படும்.

இரண்டு வகையில் சுரங்க துளைப்பான் உள்ளது

# ஒற்றை கவச சுரங்க துளைப்பான்(single shield TBM)
இதில் முன்னால் சுழல் வெட்டு சக்கரப்பகுதிக்கு மட்டும் மண்சரியாமல் தாங்கும் கவசம் இருக்கும்.

#இரட்டை கவச சுரங்க துளைப்பான்.(double shield TBM)

இதில் முன்னால் உள்ள கவசத்தோடு ,பின்பகுதியிலும் ஒரு கூடுதல் கவசம்,மண் சரிவை தடுக்க இருக்கும்.


இதில் மேலும் பொதுவாக மூன்று வகையில் உள்ளது.

மலையை துளைக்க தயாராகும் துளைப்பானின் படம்.

கடின பாறை சுரங்க துளைப்பான்,(hard rock TBM)

கடினப்பாறை பகுதிக்கு திறந்த பிடிப்பு துளைப்பான்(Open Gripper Type) என்ற வகையினைப்பயன்ப்படுத்துவார்கள்.
பாறைகள் உள்ள மலைப்பாங்கான பகுதியில் பயன்ப்படுத்தப்படுவது.

மற்ற இரண்டிலும் பிடிப்பானுக்கும் கவசம் இருக்கும் (Closed Segment-Shield Type)

நில அழுத்த சமநிலை துளைப்பான்(Earth pressure balanced TBM)

மிதமான கடினத்தன்மை, மற்றும் சிறிதளவு பாறைகளும் உள்ள பகுதியில்.
இம்முறையில் எவ்வளவு மண் முன்பகுதியில் வெட்டப்படுகிறதோ அவ்வளவு மண் பின்னால் சென்ற பிறகே அடுத்து வெட்டும்.அப்பொழுது தான் எந்திரம் ஒரே சமமான அழுத்தத்தினை தரையில் உருவாக்கும்.

கூழ்ம முகப்பு துளைப்பான்.(slurry face TBM)

நெகிழ்வான மண் ,மற்றும் நிலத்தடி நீரோட்டம் உள்ள இடங்களில் பயன்படுவது.

இந்த எந்திரங்கள் அனைத்துமே தனி தனிப்பாகங்களாக கொண்டு சென்று வேலை நடக்கும் இடத்தில் பொருத்தி ஒன்றாக்குவார்கள், எனவே தேவைக்கு ஏற்ப எந்த வகையான கருவியையும் பொருத்திக்கொள்ள முடியும்.

நீர் கசியும் இடங்களில் வேலை நடைபெறும் விதம்.

slurry face tunnel boring machine இவ்விடங்களில் பயன்ப்படுத்தப்படும்.

நிலத்தடி நீர் கசியும் மற்றும் ,நெகிழ்வான மண் உள்ள இடங்களில் அழுத்தப்பட்ட காற்றினை தரையில் உருவாக்கி நிலையாக எந்திரம் நிறுத்தப்படும் , பின்னர் சோடியம் பென்டோநைட்(sodium bentonite) வேதிப்பொருளை நீரில் கரைத்து அதனை செலுத்துவார்கள் இது தரையில் உள்ள நுண்துகள்களை அடைத்து நீர் கசிந்து ஊறுவதை தடுக்கும்.


எண்ணை கிணறுகள் வெட்டும் போதும் நிலத்தடி நீர் உள்ளே கசிந்து புகாமல் இருக்கவும் சோடியம் பென்டோநைட் கரைசல் பயன்ப்படுகிறதாம்.

மேலும் வெட்டு முகப்பிலும் பென்டோநைட் கரைசைலை செலுத்தியவாறே மண்னை வெட்டி கரைசலாக குழாய் மூலம் வெளிக்கொண்டு செல்வார்கள். இதன் மூலம் தொடர்ந்து நீர்கசிவினை தடுத்தவாறே முன்னோக்கி வெட்டி செல்ல முடியும்.

வெளியில் மண்கரைசலைகொண்டு சென்ற பின் சோடியம் பென்டோநைட் மட்டும் பிரித்து எடுக்கப்பட்டு மீண்டும் சுரங்கம் வெட்டப்பயன்ப்படுத்தப்படும். இப்படியாக சுழற்சியாக வேலை நடைப்பெறும்.

மிதமான கடின மண்ணில் வேலை நடைப்பெறும் முறை:

single shield or double shield earth pressure balance TBM இவ்விடங்களில் பயன்ப்டுத்தப்படும்.

சுழலும் வெட்டு சக்கரம் ,மற்றும் தனித்து இயங்கும் வெட்டுப்பற்கள் வெட்டி எடுக்கப்படும் மண் , திருகு கடத்தி மூலம் பின்னால் உள்ள பகுதிக்கு கொண்டு செல்லப்படும் ,பின்னர் அது தொடர் கடத்தி பட்டை(conveyor belt) மூலம் சுரங்கத்திற்கு வெளியிலோ அல்லது டிராலிகளுக்கோ கொண்டுசென்று பின்னர் சுரங்கத்திலிருந்து வெளியேற்றும்.

சுரங்க துளைப்பான் நவீன மின்னணு மற்றும் கணினி கட்டுப்பாட்டு கருவிகளை கொண்டது.முன்கூட்டியே ஆணைகளை கொடுத்துவிட்டால் தானே இயங்க வல்லது தேவைப்படும் போது மட்டும் மனிதர்களும் இயக்கலாம்.

கட்டுப்பாட்டு அறையின் படம்.

சென்னையில் இவ்வகையிலான சுரங்க துளைப்பானே பயன்ப்படுத்தப்படும் என நினைக்கிறேன்.ஏன் எனில் சென்னை நிலத்தடியில் பகுதி பாறை ,மற்றும் இலகுவான மண் உள்ளதாக சென்னை மெட்ரோ நில ஆய்வில் கண்டறிந்துள்ளார்கள்.

இவ்விரண்டு முறையிலும் தொடர்ந்து முன் கூட்டியே தயாரிக்கப்பட்ட கன்கிரீட் வார்ப்பு ஓடுகளை கூறையில் அமைக்கும் பணியையும் சுரங்க துளைப்பான் செய்து விடும்.

வார்ப்பு ஒடுகளை பொறுத்த தேவை இல்லாத /முடியாத சூழலில் ,அதிக அழுத்தத்தில் சிமெண்டினை சுவற்றில் பீய்ச்சி அடித்து உறுதி செய்வார்கள். இதனை ஷார்ட் கிரிட் (shortcrete)என்பார்கள்.

இதில் உலர் ஷார்ட் கிரிட்(dry shortcrete),ஈர ஷார்ட் கிரிட் (wet shortcrete)என இரண்டு வகையுண்டு.

உலர்ந்த சிமெண்டினை நீரில் கலக்காமல் தனியே பீய்ச்சி அடித்து ,அப்போது மட்டும் தேவைக்கு நீரினை கூடவே செலுத்துவார்கள். இது உலர் வகை ஷார்ட் கிரிட்.

முன்னரே சிமெண்ட், நீர் கலந்த கலவையை பீய்ச்சி அடித்து பலப்படுத்து ஈர வகை ஷார்ட் கிரிட்.

மேலும் அதிக வலுப்படுத்துதல் தேவை எனில் ரப்பர் வலை, கம்பி வலை (rubber or wire mesh)பொறுத்தி அதன் மீது ஷார்ட் கிரிட் செய்வார்கள்.

இது வேலை நடக்கும் போது மண் உள்வாங்காமல் இருக்கவே பின்னர் முழுவதும் கான்கிரிட் ஓடுகளை பொறுத்தி நிரந்தரமாக வலுவாக்குவார்கள்.

இலகுவான மண் உள்ள இடத்தில் எளிதாகவும் வேகமாகவும் சுரங்கம் அமைக்கலாம் என நினைக்கலாம்,ஆனால் அவ்வகை மண்ணில் தான் மெதுவாக தோண்டுவார்கள் ஏன் எனில் மண் சரிவு,நீர்கசிவு என அனைத்தினையும் நிறுத்த வேலை செய்ய வேண்டும். மலை அல்லது பாறையில் வேகமாக சுரங்கம் தோண்ட முடியும். ஏன் எனில் அவை வலுவானவை என்பதால் சரிவு ஏற்படும் அபாயம் குறைவு.நீர் கசிவும் இருக்காது.

திசை மாறாமல் துளைத்து செல்ல லேசர் வழிக்காட்டி.


மலையில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 40 மீட்டர் கூட வெட்ட இயலும், இலகுவான மண்ணில் ஒரு நாளைக்கு ஒரு மீட்டர் என்ற அளவிலேயே வேலை நடக்கும்.

இவ்வகை நிலத்தடி சுரங்கம் அமைப்பதிலும், எந்திரங்கள் அமைப்பதிலும் ஜெர்மனி, அமெரிக்கா ஆகியவை முன்னோடியாக இருந்தாலும், ஜப்பானும் ,சீனாவும் குறைவான செலவில் ,பல புதிய முயற்சிகளை செய்துள்ளன.

ஜப்பானின் இரட்டை சுரங்க வழி துளைப்பான் படம்.

வழக்கமாக ஒரே நேரத்தில் ஒற்றை சுரங்க வழி (single tube)தான் தோண்டுவார்கள், அதற்கேற்பவே எந்திரம் இருக்கும் ,ஆனால் இப்போது ஜப்பானியர்கள் ஒரே நேரத்தில் இரட்டை வழி சுரங்கம்(double tube TBM) தோண்டும் வகையில் எந்திரம் வடிவமைத்துள்ளார்கள்.

சீனார்களோ சுரங்கம் தோண்டும் போது அதிக அதிர்வு ஏற்படாத வகையில் செயல்படும் வகையில் எந்திரங்களை மாற்றியமைத்துள்ளார்கள்.மேலும் ரயில் சுரங்கத்தில் செல்லும் போது நிலத்தில் அதிர்வு உண்டாகாதவாறும் கட்டும் நுட்பம் கண்டுப்பிடித்துள்ளார்கள்.

எனவே உலக அளவில் மலிவாக சுரங்கப்பாதை அமைக்க இவர்களை விட்டால் ஆள் இல்லை.

இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னேறுதுன்னு சொல்லிக்கொள்வதெல்லாம் வெற்றுப்பேச்சாகவே படுகிறது. ஒரு ஏவுகணையை செலுத்திவிட்டு அதை நினைத்தே பெருமைப்பட்டுக்கொள்கிறோம் ,அதுவே போதும் என நினைக்கிறோம்.

சிறப்பு கட்டுமானம், கனரக கப்பல் கட்டுதல் , கனரக எந்திரவியல் போன்ற கனரக தொழிலில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளதாகவே படுகிறது.

மெட்ரோ திட்ட பொருளாதார பார்வை:
(economics of metro project)

மேலும் சுரங்கம் தோண்டியதுடன் வேலை முடிந்து விடாது, பல கட்டுமான வேலைகள் உள்ளது. காற்றோட்ட வசதி, அவசரகால வெளியேறும் வசதி, மின்சாரம்,பாதுகாப்பு வசதி, சிக்னல் அமைப்பு , தண்டவாளங்கள் அமைப்பது ,நிலையங்கள் அமைப்பது.என பல செலவு பிடிக்கும் வேலைகள் உள்ளது.

மெட்ரோ திட்ட முதலீடும் ,பின்னர் தொடர்ந்து இயக்க மற்றும் பராமரிப்பு,பாதுகாப்பு செலவுகளும் மிக அதிகம் ஆகும். பொதுவாக உலகெங்கும் உள்ள பெரும்பாலான மெட்ரோ திட்டங்கள் செய்த முதலீட்டுக்கு ஏற்ப வருமானம் அளிக்காமல் நஷ்டத்திலயே உள்ளது.முதலீட்டினை திரும்ப பெற ஆகும் காலமும் மிக அதிகமாகும்.

போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், இடவசதி இல்லாமையுமே மெட்ரோ வகை திட்டங்களை நாடக் காரணம்.முதலீடு செய்த பணத்தினை எடுப்பது அடுத்த வேலை,பெரும்பாலான திட்டங்க்களில் இயக்க செலவினை கூட கட்டணத்தின் மூலம் ஈடு செய்ய முடியவில்லை.ஆண்டு தோறும் அரசே மாநியமாக ஒரு தொகை கொடுத்தே இவ்வகை திட்டங்கள் உலகெங்கும் நடக்கிறது. எனவே பெரும்பாலும் தனியார் இத்திட்டத்தினை எடுத்து நடத்துவதில்லை.

ஏர்போர்ட் எக்ஸ்பிரசின் உள்தோற்றம்.


டெல்லி மெட்ரோ திட்டத்தில் ஏர் போர்ட் எக்பிரஸ் என்ற ஒரு பகுதி டெல்லி ரயில் நிலையம் - துவரகா செக்டர்-21 இடையே டெல்லி ஏர்ப்போர்ட் வழியாக இயங்குவதை மட்டும் ரிலையன்ஸ் அமைத்து, இயக்க 2885 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் எடுத்து இப்போது செயல்ப்படுத்தி வருகிறது.

#உலக அளவில் மொத்தம் 183 மெட்ரோ ரயில் திட்டங்கள் பயன்ப்பாட்டில் உள்ளன. இதில் டெல்லி மெட்ரோ ரயில் திட்டம் மட்டுமே உலகிலேயே கரியமில வாயு(co2) வெளிப்படுத்துதலை குறைக்கும் திட்டம் என UNO சான்றளிக்கப்பட்டு, கார்பன் கிரடிட் ரேட்டிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 630,000 tons கரியமில வாயுவை கட்டுப்படுத்துகிறதாம்.இதன் மூலமும் சிறிது வருமானம் வர வாய்ப்புள்ளது.

#update:-

சென்னை மெட்ரோ ரயில் சுரங்கத்தின் கூறை சுவர்களில் பாவ முன் செய்த வார்ப்பு சிமெண்ட் ஓடுகள் சென்னை அருகே உள்ள வானகரம், வயநல்லூர் மற்றும் முட்டுக்காட்டில் வட்டவடிவ கான்கிரீட் வார்ப்புகள் 5.8 மீட்டர் உள் விட்டம் மற்றும் 6.2 மீட்டர் வெளிவிட்டம் அளவுகளில் கடந்த மூன்று மாதங்களாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இரண்டு கி.மீ., தூரம் சுரங்கப்பாதை அமைக்கும் அளவிற்கு வானகரம் மற்றும் வயநல்லூரில் வட்டவடிவ கான்கிரீட் வாப்புர்கள் தயாரிக்கப்பட்டு தரப் பரிசோதனையும் முடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்ட வடிவ வார்ப்பும் 6 பகுதிகளாக, 1.2 மீட்டர், 1.4 மீட்டர் மற்றும் தேவையான இடங்களுக்கு மட்டும் 1.6 மீட்டர் அகலத்தில் கான்கிரீட் வார்ப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

தகவல் இன்றைய தினமலர்:நன்றி!

தயாராக உள்ள சிமெண்ட் வார்ப்பு ஓடுகள்:


துளைப்பான் துண்டுகள்:

#சுரங்கம் போன்ற மூடிய இடங்களுக்கு செல்ல சிலர் பயப்படுவார்கள் அதற்கு பெயர் கிளஸ்ட்ரோ போஃபியா(Claustrophobia) .

# எல்லாத்தையும் படமாக்கும் ஹாலிவுட் ,இப்படியான சுரங்க வழியில் விபத்தானால் என்ன ஆகும்னு எடுத்த படம் தான் "டே லைட்" (DAYLIGHT)நியூயார்க்கில் ஹட்சன் நதியின் அடியில் செல்லும் சுரங்கப்பாதையில் விபத்து ஏற்பட்டு உள்ளே மாட்டிக்கொண்டால் என்ன ஆகும் இதான் கதை. நாயகன் கட்டு மஸ்து "சில்வர்ஸ்டார் ஸ்டாலோன்" "தான். வழக்கமான டச்சிங்காக சுரங்கத்தில் சிக்கிய ஒரு நாயையும் விடாமல் ஹீரோ காப்பாத்திடுவார்.

# The taking of pelham 123 என்ற படமும் ஒரு மெட்ரோ டிரெயின் படம் தான். நியுயார்க் மெட்ரோ டிரயினை சுரங்கத்தில் கடத்தி வச்சுக்கிட்டு பணம் கேட்டு மிரட்டும் வில்லனாக ஜான் டிரவோல்டாவும், அவரோட பேரம் பேசும் ரயில்வே அதிகாரியா டென்சல் வாஷிங்டனும் நடித்திருப்பார்கள், பரபரனு சண்டை இல்லைனாலும் பார்க்கிறாப்போல இருக்கும். தமிழில் டப்பிங் வெர்ஷன் பார்த்தேன் ,ஜான் டிரவோல்டா மச்சி,மாமுனு பேசுவார் :-))

--------

பின் குறிப்பு:

தகவல், படங்கள் உதவி,

கூகிள், விக்கி,யுடுயுப், சென்னை மெட்ரோ, டெல்லி மெட்ரோ ,U.S.Federal highways administration இணைய தளங்கள் நன்றி!

*****