Showing posts with label அரசியல்.. Show all posts
Showing posts with label அரசியல்.. Show all posts

Sunday, March 31, 2013

என்ன கொடுமை சார் இது-12



(இந்த கொடுமைய பத்திலாம் மனித உரிமை கவுன்சிலில் புகார் கொடுக்க முடியாதா,அவ்வ்,ஹி...ஹி)

# இது தப்பா சார்?

(ஓர் அரசு அலுவலகத்தில் ஓர் அதிகாரிக்கும் ஊழியருக்குமிடையே நடைப்பெற்ற கற்பனை உரையாடல்)

அதிகாரி சார் ,கொஞ்சம் நில்லுங்க ,எனக்கு ஒரு டவுட்டு ,அதை உங்களால மட்டும் தான் கிளியர் செய்ய முடியும்..

என்ன கோந்த்சாமி ,காலையிலே உனக்கு டவுட்டா, உன் கடமை உணர்ச்சியை நினைச்சா ,கண்ணு கலங்குது, கேளு..கேளு, உன்னப்போல ஒரு சின்சியர் பெர்சனுக்கு உதவலைனா அப்புறம் என்ன அதிகாரி நான்.

நீங்களே சொல்லுங்க சார், ரேஷன் கடை கெவர்மெண்டு கடைத்தானே?

ஆமாய்யா அதுல என்னா சந்தேகம்?

அப்போ கெவர்மெண்டு கடையில நான் பொருள் வாங்கினா தப்பா சார்?

எவன் சொன்னான்,தப்பேயில்லை.

ஆபிசுக்கு வரும் போதே  வழியில ரேஷன் கடையில வீட்டுக்கா நான் வாங்கின சக்கரைய ஆபீஸுக்கு எடுத்து வந்தா தப்பா சார்?

ச்சே ...ச்சே தப்பேயில்ல ஒனக்கு நல்ல குடும்ப பொறுப்பு இருக்குபா, குட் கீப் இட் அப்!

அந்த சக்கரையில டேஸ்ட் பார்க்க கொஞ்சம் எடுத்து வாயில போட்டுக்கிட்டா தப்பா சார்?

இதுல என்ன தப்பிருக்கு ,நீ காசுக்கொடுத்து வாங்கின சர்க்கரை...நீ கொஞ்சம் வாயில எடுத்து போட்டுக்கிட்டா என்ன ,மூக்கில போட்டுக்கிட்டா என்ன, எல்லாம் உன் இஷ்டம்யா.

அப்புடி சொல்லுங்க சார், உங்களை தவிர இங்கே யாருக்குமே அறிவில்ல சார்.

ஹி...ஹி தாங்க்ஸ் ,ரொம்ப நல்லவன்யா ...அதான் என்னப்பத்தி நல்லா புரிஞ்சு வச்சிருக்க. நீ எதோ வேலை செஞ்சிட்டிருந்த போல ,சின்சியர் கய் ,யூ கேரி ஆன்!

நீங்க உங்க ரூமுக்கு போங்க சார், நான் என் வேலையை ஆரம்பிக்கிறேன்.

(குவார்ட்டர் புட்டியை பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுக்கிறார்)

யோவ் என்னய்யா ,வேலையை ஆரம்பிக்கிறேன்னு சொல்லிட்டு ,சரக்க எடுக்கிற? அதுவும் ஆபீஸ் டைம்ல?

சார் சரக்கு கடையை கெவர்மெண்டு தானே நடத்துது?

ஆமாம்...அதுக்குன்னு.

அப்போ சரக்கும் சக்கரைப்போல கெவர்மெண்ட்டு பொருள் தானே...

ம்ம்...ம்ம் அப்படியும் சொல்லலாம்ம்ம்...ஆனா

என்ன நோனா, கெவர்மெண்டு பொருள் தான் சார், நான் வீட்டுக்கு எடுத்து போறதுக்காக வரும் போதே வாங்கிட்டு வந்தேன், காசு கொடுத்து வாங்கின கெவர்மெண்டு பொருளை வச்சிருக்கிறது தப்பா சார்?

ச்சே சே தப்பேயில்ல, ஆமாம் வீட்டுக்கு எடுத்து போகத்தானே ,வச்சிக்க ,வச்சிக்க ....

ஆனால் கொஞ்சமா டேஸ்ட்  பார்க்க வாயில ஊத்திப்பேன்... நீங்களே சொல்லி இருக்கீங்க, நாம காசுக்கொடுத்து வாங்கின பொருளை டேஸ்ட் பார்க்க நாம சாப்பிட்டா தப்பில்லைனு... இப்போ சொல்லுங்க  , இது தப்பா சார்?

ஙே ...நீ டேஸ்ட் பார்க்க ஆசைப்பட்டது இதானா ... சர்க்கரை மேட்டரை சொல்லி சரக்கு மேட்டரை ஓபன் பண்ணி கவுத்துட்டானே ...அவ்வ்.

டேஞ்சரஸ் ஃபெல்லோ இனிமே இவங்கிட்டே உஷாரா இருக்கணும் ,பீ கேர் ஃபுல்!

என்ன சார் என்னமோ சொன்னிங்களே?

நான் என்னைய சொல்லிக்கிட்டேன், வர்ரட்டா!

(ஹி...ஹி ரொம்ப கொடுமையான எதாவது செய்தி சொல்லணும்னு நினைச்சேன் அப்படி எதுவுமே சிக்கலை, அதான் இப்புடி ஒரு மொக்கையை போட்டேன், நம்ம மொக்கையை விட லோகத்திலே பெரிய கொடுமை உண்டுங்களாண்ணா?)

என்ன கொடுமை சார் இது!

--------------------

# வரிவிலக்கு அரசியல்!




சில ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை அருகேயுள்ள திருக்கழுக்குன்றத்தினை சேர்ந்த பள்ளிமாணவன் "ஹிதேந்திரன்" இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து ,பின்னர் அவரது உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் உடலுறுப்பு தானம் குறித்து ஒரு பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.

இதனை மையமாக வைத்து மலையாளத்தில் டிராபிக் என்ற படம் எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பினை பெற்றது,எப்பவுமே நம்ம ஊரு சரக்குக்கு நம்ம ஊரில் மதிப்பிருக்காது,அதே சரக்கு வெளியூருக்கு போயிட்டு வந்தால் மதிப்பு அதிகமாகிடும்,அதே போல "மலையாள "டிராபிக்" படமும்  தமிழில் "சென்னையில் ஒரு நாள்" என்றப்பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. படமும் சுமாரா இருக்குனு கேள்வி. இதெல்லாம் எல்லாருக்கும் தெரியுமே, இதுல என்ன கொடுமையா இருக்குனு கேட்கிறிங்களா ? இருக்கு .

தமிழில் பெயர் வைத்து,தமிழ் கலாச்சாரத்துடன் உள்ள தமிழ்ப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு தமிழகத்தில் உண்டு. ஆனால் இந்த வரிவிலக்கு சென்னையில் ஒரு நாள் தமிழ்ப்படத்துக்கு கொடுக்கப்படவில்லை.

படத்தின் தலைப்பு தமிழில் தான் இருக்கு ,கதையும் கலாச்சாரச்சீர்கேடாக இல்லை, உடலுறுப்பு தானம்னு நல்ல செய்தி தான், சரி ரீ மேக் என்பதாலா என்றால் ஏற்கனவே பல ரீமேக் படங்களுக்கு வரி விலக்கு கொடுக்கப்பட்டிருக்கு.

படத்தை தயாரித்தது ராதிகா ஷரத்குமாரின் "ரேடான் டீவி" , ஷரத்குமார் இரட்டை இலையில மூன்றாவது இலையா ஒட்டிக்கிட்டிருக்கிற அரசியல் தலைவர், அப்படி இருந்தும் ஏன் கேளிக்கை வரிச்சலுகை இல்லைனு பார்த்தால், ஹி...ஹி படத்தை வாங்கி வெளியிட்டு இருப்பது சன் பிக்சர்ஸ் ,அப்படிப்போடு அருவாள, ஏற்கனவே கழக குடும்பத்தார் தயாரித்த திரைப்படங்களான ஏழாம் அறிவு, ஓகே.ஓகேவுக்கும் கூட வரிச்சலுகை பிரச்சினை உண்டானது. இப்போ சென்னையில் ஒரு நாளுக்கு.

சன் பிக்சர்ஸ் அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஏகப்பட்ட தில்லாலங்கடிகள் செய்து அரசியல் துஷ்பிரயோகத்தில் ஈடுப்பட்டிருந்தாலும், அதற்காக இப்பொழுது ,உடலுறுப்பு தானம் எனும் ஒரு நல்ல கருத்தாக்கத்துடன் வந்துள்ள சென்னையில் ஒரு நாள் திரைப்படத்திற்கு கேளிக்கை வரி இல்லாமல் செய்வதெல்லாம் ரொம்பவே ஓவர், இப்படத்திற்கு அரசியல் செய்யாமல் விரைவில் வரிச்சலுகை கொடுக்கப்பட்டால் கொஞ்சம் கூடுதல் நாட்கள் ஓடும் வாய்ப்புள்ளது.

(இனியா-மலையாள படங்களில் இயல்பான "திறமையை" காட்டுபவர் சென்னையில் ஒரு நாளிலும் நடித்துள்ளார்)

அரசியல் வாழ்க்கை ஒரு வட்டம் மேல இருப்பவர் கீழ வருவதும்,கீழ இருப்பவர் மேல போவதும் இயல்பே, ஆனால் மேலிர்ந்தவர் கீழ வந்ததும் மேல சென்றவர் பழி வாங்காமல் நடந்து கொள்வதே அரசியல் நாகரீகம்.

அரசியல் நாகரீகம் என்ற சொல்லே வழக்கொழிந்து விடுமோ எனும் நிலையில் தமிழகம் உள்ளதை நினைத்தால் "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என அரசியல் நீதி சொன்ன தமிழகமா இது என கேள்வி எழும்புகிறது!

என்ன கொடுமை சார் இது!

------------------

#காவல் துறை உங்கள் நண்பன்!

சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் எல்லாம் ஹோலி கொண்டாடி இருக்காங்க, அட இந்தியா முழுக்க கூட கொண்டாடினாங்க அதுக்கின்னா இப்போனு கட்டைய போடாம கொஞ்சம் கவனியும் மக்களே,

ஹி...ஹி  வழக்கமா ஹோலிய சாக்கா வச்சு பயப்புள்ளைங்க ,பொண்ணுங்க மேல சாயம் பூசுறேனுனு தடவுறதுலாம் கூட நடக்கும் ,அதெல்லாம் வாலிப வயசு அப்படித்தான்னு விட்றலாம்.

ஆனால் உத்திரப்பிரதேசத்தில் உள்ள மொராதா பாத் நகரை சேர்ந்த "புத் பஜார் தானா காவல் நிலையத்தில்" பணிப்புரியும் சிலப்போலிசாருக்கும் ஹோலி கொண்டாடினா என்னனு ஆசை வந்திருச்சு ,ஆனாப்பாருங்க அன்னிக்கும் அவங்களுக்கு டியூட்டி ,அதுக்குனு ஹோலி கொண்டாடாம விட்ற முடியுமா,சாமி குத்தமாகிடாது? ஒரு தடவை முடிவு செய்துட்டா எங்க பேச்சை நாங்களே கேக்க மாட்டோம்னு உ.பி காவலர்கள் காவல் நிலையத்திலேயே ஹோலி ஹே ஹோலினு கொண்டாடி இருக்காங்க, அடக்கொண்டாட்டம்னா சரக்கு இல்லாமலா, அதுவும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் ஹோலினா வியாபாரிகள் தாராளமா ஸ்பான்ஸ்ர் அள்ளி விட்டிருப்பாங்க, எனவே எல்லாம் இஷ்டத்துக்கு தீர்த்தத்தை பருகிவிட்டு ஆனந்த பரவசமாகி ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்து "சகலகலா வல்லவனா" குத்தாட்டம் எல்லாம் போட்டுள்ளார்கள், சிலர் சரக்கு புட்டியை தலையில் வைத்து மாங்குயிலே பூங்குயிலேனு இந்தியில் பாடி கெரகாட்டம் எல்லாம் ஆடி அசத்தியுள்ளார்கள்.

உ.பி காவலர்கள் ரொம்ப நல்லவய்ங்களா இருப்பாங்க போல நாம மட்டும் தீர்த்தம் சாப்பிட்டு இன்பம் துய்த்தால் போதுமா நாளைய சமுதாயமாம் இளைஞர்களும் இன்பம் துய்க்க வேண்டாமா என கரிசனத்துடன், அவ்வழியே சென்ற பள்ளி மாணவர்களை கூப்பிட்டு சரக்கு கொடுத்து குடிக்க சொல்லி இருக்காங்க, உ.பி மாணவர்கள் உருப்படாதவர்கள் போல சரக்கெல்லாம் குடிக்க மாட்டோம் ,ஆத்தா அடிக்கும்னு அடம்பிடிச்சிருக்காங்க, ச்சே இளைய சமூகத்துக்கே பெருத்த அவமானம்! இதே நம்ம பயப்புள்ளைகளா இருந்தா "மச்சி இன்னொரு குவார்ட்டர் சொல்லேன்னு ஒன்னுமண்ணா கொண்டாட்டத்தில் அய்க்கியமாகி இருப்பாங்க :-))

ஆனாலும் உல்லாச கடமை தவறாத உ.பி. காவலர்கள் அடிச்சு குடிக்க வச்சிருக்காங்க, ச்சே என்ன ஒரு நல்ல மனசு ,நம்ம ஊருலவும் தான் இருக்காங்களே காவலர்கள் ,நான் காசுக்கொடுத்து தீர்த்தம் சாப்பிட்டு வந்தாலும், வழியில நிப்பாட்டி, ஊது ,வாய தொறனு சொல்லி வாயில கூட டார்ச் அடிச்சு டார்ச்சர் செய்றாங்கய்யா அவ்வ்!

காவல் துறை உங்கள் நண்பன்! என தமிழ்நாட்டில் சொல்லி வாயாலே வடை சுடும் நிலையில், நடைமுறையில் செய்துக்காட்டிய உ.பிக்காவலர்களின் நல்ல எண்ணம் புரியாத "பாப்பரசி" மீடியாக்கள் ,காவலர்களின் குத்தாட்டத்தை எல்லாம் காணொளியாக எடுத்து தொலைக்காட்சியில் போட்டுவிட்டதால் , நல்லிதயம் படைத்த கருணை மிகு காவலர்கள் விசாரணைக்கு உள்ளாகியுள்ளனர்.

நல்லதுக்கே காலமில்லையா, தான் பெற்ற இன்பம் பெறுக இவ்விளைய சமுதாயம் என சரக்கு ஈந்தோரின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சும் கொடுஞ்சமூகத்தினை தட்டிக்கேட்க யாருமே இல்லையா?

அய்யகோ என்ன கொடுமை சார் இது!

செய்தி மூலம்: http://www.dinamalar.com/news_detail.asp?id=678169

நன்றி!
------------------------

# அள்ளு அள்ளு ,தள்ளு தள்ளு!




படத்தில் காண்பது ,சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை NH-45C ஆகும். இந்த இடம் பண்ருட்டி அருகே தென்ப்பெண்ணையாற்றின் அருகே இருக்கும் கண்டரக்கோட்டை(கண்டராதித்த சோழன் கோட்டை என்பதன் திரிபு) என்ற ஊருக்கு அருகில் உள்ளது .இன்னும் நான்கு வழியாக்கப்படவில்லை, அதற்கான டென்டர் விட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாச்சு. இப்போது இருப்பது இரட்டைவழிப்பாதை தான் , ஆனால் படத்தில் பார்த்தால் மாட்டுவண்டி போகும் மண்ப்பாதை போல இருக்கேனு நினைக்கலாம் ...ஹி ..ஹி உண்மையில மண்ப்பாதையே தான்.

 இங்கு தென்ப்பெண்ணையாற்றில் அரசு மணல் அள்ளும் மையம் செயல்படுகிறது , ஆற்றில் இருந்து மணல் அள்ளி அருகே கரையோரம் கொட்டி வைத்து பின்னர் லாரிகளில் ஏற்றி அனுப்புவார்கள். இவ்வாறு தினசரி பல நூறு லாரிகள் இரவும் பகலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக மணல் லோடுடன் இப்பகுதியில் சாலையில் ஏறி இறங்குவதால் இப்பகுதியில் சில நூறு மீட்டர்களுக்கு சாலையே காணாமல் போயிடுச்சு, அவ்வப்போது மண்ணள்ளி போட்டு நிரவி விட்டுவிடுகிறார்கள். அப்படியான மண்சாலையைத்தான் படத்தில் பார்த்தீர்கள்.

மழைக்காலத்தில் நிலமை இன்னும் மோசமாகிவிடும், வாகனங்கள் சேற்றில் சிக்கிவிடும், சிறிய ரக கார்கள் சிக்கி நின்றுவிடும்.  இதுக்குறித்தெல்லாம் யாரும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை, எப்பொழுதுமே இவ்விடம் புழுதிப்பறக்கும் மண்சாலையாகவோ அல்லது சேற்றுவயலாகவோ தான் இருக்கிறது.

(மணல் குவாரியில் கர்ம சிரத்தையுடன் மண்ணள்ளுகிறார்கள்)

இங்கு கனரக வாகனங்கள்  இயங்குவது அரசுக்கு நன்கு தெரியும் அப்படி இருக்கும் போது சாலையை அதிக எடை தாங்கும் வகையில் தரமாக போடலாம், அல்லது அளவுக்கு அதிகமாக மணல் லோடு ஏற்றுவதை தடுக்கலாம், ஆனால் எதுவும் செய்வதாக தெரியவில்லை, பெரிய விபத்து எதுவும் ஏற்படும் வரையில் அரசு எந்திரம் கண்டுக்கொள்ளாது என்றே நினைக்கிறேன்.

வாழ்க வளமுடன் ,2020 இல் இந்தியா தான் வல்லரசு!

என்ன கொடுமை சார் இது!
----------------

பின்க்குறிப்பு:

தகவல்,மற்றும் படங்கள் உதவி,

விக்கி,கூகிள்,தினமலர் இணைய தளங்கள்,நன்றி!
**********************

Thursday, January 24, 2013

உரமானிய ஊழல்.


(த்தோடா வவ்வாலு சொன்னது கூட நடந்துடுச்சு!!!)

கடந்த 31-12-2012 அன்று வெளியிட்ட "FDI IN RETAIL MARKET-2:வர்த்தகமும் நுகர்வோர் நலனும்" எனும் இடுகையில் இந்தியாவில் வழங்கப்படும் உர மானியத்தின் பயன் விவசாயிகளுக்கு பலனளிப்பதில்லை,மாறாக உர நிறுவனங்களுக்கு அதிகப்படியான லாபம் அளிக்கவே என்பதை ,சர்வதேச விலை ,இந்திய சில்லரை விலை மற்றும் லாப விகிதங்களை ஆதாரத்துடன் விளக்கியிருந்தேன்,

சுட்டி:

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: FDI IN RETAIL MARKET-2:வர்த்தகமும் நுகர்வோர் நலனும்.

குறிப்பிட்ட பகுதியை மீண்டும் இங்கு தந்துள்ளேன் ,முழுவதும் படிக்க சுட்டியை அழுத்தவும்.

கீழே காண்க.

//பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட்டின்  சர்வதேச விலை விவரங்கள் மற்றும் மானியம் ,சந்தை விலை நிலவரங்களை காண்போம்,


பொட்டாஷ் உரம்:

ஒரு டன் பொட்டாஷ் - 425 டாலர்/டன்.

இந்திய ரூபாயில் -425*50=21,250 ரூ மட்டுமே,

இந்திய விற்பனை விலையை விட சர்வதேச சந்தையில் விலை குறைவாகவே உள்ளது ,ஆனால் அதற்கு டன்னுக்கு மானியம் 14,777 ரூபாய்!

21,250 ரூபாய் மதிப்புள்ள பொட்டாஷ் உரத்தினை இறக்குமதி செய்து ரூ 24,000 என விலை வைத்து விற்க அம்மானியத்தொகையை அரசு அளிக்கிறது.

இதன்  மூல உர நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிகர வருவாய்=

14,777+24,000-21,250=17,527 ரூ.

சதவீத அடிப்படையில் வருவாய்=17,527/21,250*100=82.48%

போக்குவரத்து செலவு, கையாளும் செலவுகள் இருக்கும் தான் ஆனால் இப்படி 82.48 சதவீதம் அளவுக்கா இருக்கும்.


பாஸ்பேட் உரம்:

பாஸ்பேட்-524.08 டாலர்/டன்.

இந்திய ரூபாயில்,

524.08*50=27,252.16 ரூபாய்கள்.

இந்திய விற்பனை விலை ரூ =24,000

மாநியம்=18,474ரூ

நிகர வருவாய்=24,000+18,474-27,252.16=15,221.84 ரூ.

சதவீத அடிப்படையில்,=15,221.84/27,252*100=55.85%

இந்தியா 100 சதவீதம் பொட்டாஷ் உரங்களையும், 90 சதவீதம் பாஸ்பேட் உரங்களையும் இறக்குமதி செய்கிறது.

இவ்விரண்டு உரங்களையும் பெருமளவில் இறக்குமதி செய்து அதிக மானியம் கொடுக்கப்பட்டும் குறைவான விலையில் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்கவில்லை என்பதை மேற்கண்ட கணக்குகள் மூலம் எளிதாக புரிந்துக்கொண்டிருக்கலாம்.

அரசு அளிக்கும் மாநியம் அனைத்தும் உர நிறுவனங்களின் லாப விகிதத்தினை அதிகரிக்கவே பயன்ப்படுகிறது.//

தற்போது உரமானியத்தில் ஊழல் என புகார் வெளிப்படையாக கிளம்பியுள்ளது ,அது குறித்து அம்மையார் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளது என்னவெனில்,

//இந்தச் சூழ்நிலையில், ஜூன்  2012-ல் உர உற்பத்தி நிறுவனங்கள்  DAP உரத்தினை சில்லரை விலையில் மெட்ரிக் டன் ஒன்றுக்கு  25,000 ரூபாய் என சந்தையில் விற்பனை செய்தன என்றும், அரசு மெட்ரிக் டன் ஒன்றுக்கு 14,300 ரூபாய் மானியம் வழங்கியுள்ளது என்றும்; ஆனால், அதே காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட டி.ஏ.பி. உரத்தின்  விலை மெட்ரிக் டன் ஒன்றுக்கு  31,900 ரூபாய் தான் என்றும்;  போக்குவரத்து மற்றும் விநியோகச் செலவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், ஒரு டன்னிற்கு  5,000 ரூபாய் வரை உரக் கம்பெனிகள் எதிர்பாராத வகையில் கொள்ளை லாபம் ஈட்டியுள்ளன என்றும்;  MOP  உரத்தைப் பொறுத்தவரையில், 2011-2012 ஆம் ஆண்டில், மெட்ரிக் டன் ஒன்றுக்கு  16,054 ரூபாயை அரசிடமிருந்து மானியமாக பெற்றுக் கொண்டு உபரியாக 5,500 ரூபாயை உரக் கம்பெனிகள் எடுத்துக் கொண்டுவிட்டன என்றும்; மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா  மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் அழகிரியின் கவனத்திற்கு இவற்றை கொண்டு வந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும்,  3.8.2012 அன்று, உரத் தயாரிப்பு நிறுவனங்கள்,  DAP  உரத்தில் டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையிலும், காம்ப்ளெக்ஸ் உரத்தில் டன்  ஒன்றுக்கு சுமார் 6,000 ரூபாயையும் கபளீகரம் செய்துவிட்டன என்று  தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்; உர உற்பத்தி நிறுவனங்கள் பயன்பாட்டுச் சான்றிதழை சமர்ப்பித்து,  உரம் தயாரிப்பதற்கான விலையின் விவரங்களை மத்திய உரத் துறைக்கு தெரிவிக்க வேண்டுமென்று மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை இணை அமைச்சர்ஸ்ரீகாந்த் ஜெனா மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர்  மு.க. அழகிரிக்கு குறிப்பு வைத்ததாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.//

//ஆனால், வேளாண் தொழிலை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ள இந்திய நாட்டில், ஊழலுக்கு ஊக்கமளிக்கும் வகையில், தனியார் உர உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடையும் வண்ணம் உரக் கொள்கை  வகுக்கப்பட்டு, இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகள் சுரண்டப்பட்டு வருகின்றனர்.//

தகவல் உதவி: இன்னேரம் இணைய தளம்,நன்றி!

http://www.inneram.com/news/tamilnadu-news/tamilnadu-cm-jayalalitha-asked-pm-to-sack-alakiri-from-cabinet-8416.html

மேற்கண்ட செய்தியின் மூலம் எனது பதிவில் புள்ளிவிவரங்களுடன் ஆதாரப்பூர்வமாக முன்னரே சொன்ன தகவல்களை உறுதிப்படுத்தும் வண்ணம் ,அதே விவரங்களுடன் உரமானிய ஊழல் குறித்து புகார் எழுந்துள்ளது தெளிவாக தெரிகிறது.

இதே போல சமையல் எண்னை இறக்குமதிக்கு அளிக்கப்படும் மானியம் விரயமாகிறது என்பதையும் அப்பதிவில் விளக்கியிருக்கிறேன், அதிலும் ஊழல் என எப்பொழுது வெடிக்குமோ தெரியவில்லை :-))

நாம் தொடர்ந்து,விவசாயம் ,மாற்று எரிப்பொருள் ,சுற்று சூழல்,அறிவியல் என அலசி ஆய்வு செய்து எழுதினாலும் ,மக்கள் இதெல்லாம் இணையத்தில் இருப்பது தானே என்ன புதுசா எழுதிட்டான் என நினைத்துக்கொள்வது வழக்கம், இணையத்தில் இருந்தாலும் சரியான தகவலை தேடி எடுத்து, அதனைப்புரிந்துக்கொண்டு எழுதுவது எவ்வளவு கடினம் என சினிமா, அரசியல் என மொக்கை போடுபவர்களுக்கு எளிதில் புரியாது.

தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்,காலம் பதில் சொல்லும் என நம்ம கடமையை செய்வோம்!!!

ஹி...ஹி நாமளும் பஞ்ச் டயாலாக்கு பேசுவதற்கு ஒரு காலம் வரும்னு காட்டத்தான் இந்த பதிவு :-))

வரலாறு முக்கியம் மக்களே!!
------------------------------------------