Sunday, December 02, 2012

FDI in Retail market:வரமா,சாபமா?


(ஹி..ஹி லக்ஸ் பாப்பா மலபார்)

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டினைப்பற்றி தொலைக்காட்சியில் பலத்த விவாதங்கள் ஓடுகின்றது, அதோடு அல்லாமல் பதிவுலகிலும், இங்கு பொருளாதார புள்ளி விவரங்கள், அந்நிய சில்லரை சந்தையில் பெரிய வணிக நிறுவனங்கள் செய்த "சில்லுண்டி வேலைகள்" என பல உதாரணங்கள் காட்டப்படுகின்றது.

இப்படிப்பேசுபவர்கள் யாருமே நடுத்தர வர்க்கத்தின் வாழ்வை தற்காலத்தில் வாழ்வதேயில்லை, அவர்களும் ஒரு காலத்தில் நடுத்தர வர்க்கமாக இருந்திருக்கலாம், ஆனால் அன்றைய நிலையை வைத்தே பேசுகிறார்கள். இவர்களில்  சிலர் நடுத்தர வர்க்க வாழ்வை வாழாமல் நேரடியாக மேல் வர்க்க வாழ்வினை சுவைத்தவர்களாக இருப்பார்கள், அவர்களுக்கு mall  இல் சாண்ட்விட்ச் 150 ரூ என்றாலும் உறுத்தாமல் சாப்பிடுவார்கள், சுவையை மட்டுமே நாக்கு உணரும், அந்த சாண்ட்விட்சுக்கு ஏன் 150 ரூ விலை என கனவிலும் நினைக்க மாட்டார்கள், ஆனால் ஏன் மினரல் இலவசமாக கொடுக்கவில்லை, காசு கொடுத்து வாங்க சொல்கிறார்கள் என மூளையின் நியுரான்களுக்கு வேலைக்கொடுத்து சிந்தித்து , இதயத்தின் ரத்த நாளங்களுக்கு அழுத்தம் கொடுப்பார்கள் :-))

அந்நிய முதலீட்டின் சாதக பாதகங்களை பற்றி இப்பதிவில் மீன்டும் ஒரு முறை அலசலாம் என இருக்கிறேன், அதற்கு முன்னர் கடந்த காலங்களில் நாம் விவசாயம், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு குறித்து எழுதிய இப்பதிவுகளை சோம்பல் படாமல் படித்து சில,பல கலோரிகளை எரித்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாமே :-))

குறிப்பு: உடல் எடை 70 கிலோ உள்ள நபர் ,ஒரு மணி நேரம் அமர்ந்து படித்தால் சுமார் 91 கலோரி ஆற்றல் எரிக்கப்படுகிறது.

ஹி...ஹி ஐ.பேட் போல வைத்திருந்தால் நடந்து கொண்டே படித்தால் கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும், உங்கள் உடல் நலன் கூடும் :-))

முந்தைய பதிவுகள் :

வால் மார்ட் குறித்த இடுகைகள்:

http://vovalpaarvai.blogspot.in/2011/11/blog-post_29.html

http://vovalpaarvai.blogspot.in/2011/12/blog-post.html

விவசாயிகள் குறித்த இடுகை:

விவசாயி படும்பாடு-1

http://vovalpaarvai.blogspot.in/2011/12/blog-post_16.html
 விவசாயி படும்பாடு-2
http://vovalpaarvai.blogspot.in/2011/12/2.html

மேலும் சில விவசாயம் சார்ந்த பதிவுகள்:

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பசி!

#பஞ்ச கவ்யம்

#நடவு எந்திரம்

# ஒருங்கிணைந்த விவசாயம்

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: ஆழ் நீர் நெல் சாகுபடி - பொக்காலி

#காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-1

#காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-2


விவசாயிகள் இடம் பெயர்வால் உண்டாகும் இடர்கள்:

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: உள்ளது உள்ளபடி- ஓகை அவர்களின் பார்வைக்கு!

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: உள்ளது உள்ளபடி - 2:விவசாய தொழிலாளர்களின் நகர்ப்புர இடம் பெயர்வும் விளைவுகளும்


ஹி...ஹி சுட்டியெல்லாம் படித்து வயிறு எறிந்தால் தண்ணிய குடிங்க, குடிச்சுட்டு படிங்க!

எனது முந்தையப்பதிவுகளை படித்தால் மேற்கொண்டு பேசுவதை உள்வாங்க கொஞ்சம் எளிதாக இருக்கும், படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அடியேன் ஒன்றும் அறச்சீற்றம் கொள்ளப்போவதில்லை, தொடர்ந்து கீழ படிங்க(ஹி...ஹி..மேல படியுங்க என சொன்னால் மீண்டும் ஆரம்பத்திற்கே போயிடுறாங்க சில கூமாங்க்ஸ்)

வால்மார்ட், டெஸ்கோ என பல அந்நிய பெருவணிக நிறுவனங்கள் இந்திய சில்லரை வணிகத்தில் நுழைவதையே தற்போது சிலர் எதிர்க்கிறார்கள், அவர்கள் கருத்துக்கு ஆதரவாக முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் இவையே,

# அயல்நாட்டில் உள்ள சிறு வணிகர்களை அழித்துவிட்டார்கள்.எனவே இங்குள்ள சிறுவணிகர்களும் அழிந்து விடுவார்கள்.

#ஆரம்பத்தில் விலை குறைவாக கொடுப்பார்கள், போட்டியாளர்கள் இல்லாத சூழலில் ,விலையை ஏற்றுவார்கள்.

# குறைந்த விலைக்கு கொடுப்பதற்காக உற்பத்தியாளர்களை கசக்கி பிழிவார்கள்.

#விவசாயிகள், உற்பத்தியாளர்களுக்கு லாபம் எதுவும் வராது,அவர்கள் சொல்வதெல்லாம் கதை.

#பொருட்கள் தரமாக இருக்காது

#நாம் என்ன உண்கிறோம், பயன்ப்படுத்த வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள்.

#வரி ஏய்ப்பு செய்வார்கள்.

இன்னும் சில பல சித்தாந்த ரீதியிலான எடுகோள்களை முன் வைக்கிறார்கள். இவை எல்லாம் நடக்குமா, அந்நிய முதலீடு சில்லரை வர்த்தகத்தில் வரவில்லை எனில் இங்குள்ள விவசாயிகளும், மக்களும் சுபிட்சமாக வாழ வழி கிடைக்குமா ?

வாருங்கள் விரிவாக காணலாம்.

இப்பிரச்சினையை முழுதாக புரிந்து கொள்ள , மேலை நாடு, மற்றும் இந்திய சந்தை,நுகர்வு கலாச்சாரம், உற்பத்தி திறன், விநியோக கட்டமைப்பு, மக்கள் தொகை குறித்த ஒரு புரிதல் தேவைப்படுகிறது.

மேலை நாடுகள் VS இந்தியா



# பல லட்சம் மக்கள் வசிக்கும் நகரிலும் , தெருவுக்கு தெரு வணிக நிலையங்கள், அங்காடிகள் இருக்காது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே அங்காடிகள் இருக்கும்.

ஒரு லட்சம் பேர் வசிக்கும் ஒரு சமூக இடத்தில் ஒரு சிறு பெட்டிக்கடை கூட அங்கு காண இயலாது.

எனவே பெருவணிகருக்கும், சிறு வணிகருக்கும் போட்டியிடும் களம் ஒரே இடமாக போய்விடுகிறது.

வால் மார்ட் பக்கத்திலேயே, சிறுவணிகரின் கடை இருக்கும், நேரடியான போட்டியை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

# இந்தியாவில் உள்ள நகரங்களில் கடைத்தெரு என ஒரு இடம் இருக்கும், அங்கு அனைத்து வகையான கடைகளும் ,பக்கம்,பக்கமாக இருக்கும். ஆனால் அதோடு அங்காடிகள் முடிந்து விடாது, 500 குடும்பம் வசிக்கும் இடத்தில் கூட ஒன்றிரண்டு மளிகை கடை, பெட்டிக்கடைகள் என இயங்கும்.

கொஞ்சம் அதிக தொகைக்கு பொருட்கள் வாங்க என்றால் கடைத்தெருவுக்கும், தேவை தினசரி ஏதோ ஒரு உ.ம்: அரைலிட்டர் கோல்டு வின்னர் எண்ணை, 10 முட்டை, ரெண்டு தீப்பெட்டி, 5 ரூபாவுக்கு மிளகு தூள் என வாங்கும் மக்கள் அதிகம்.

# வாங்கும் திறன்:

வாங்கும் திறனை மதிப்பிட ஒருவரின் வருமானம் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஐக்கியநாடுகள் சபையின் பொருளாதார வளர்ச்சி அறிக்கையின் படி உலக மக்களின் வருவாய் திறனின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு அதனை வருவாய் பிரமீட் என வகைப்படித்தியுள்ளார்கள். அதன் படம் கீழே.

படம்: வருவாய் பிரமீடு:




அப்படத்தில் பார்த்தால் நான்கு வகையான பிரிவுகள் இருப்பதைக்காணலாம்.

ஆண்டு வருவாய் 20,000 டாலர்கள் உடையவர்கள் உச்சத்தில், அவர்கள் எண்ணிக்கை  சுமார் 7.5-10 கோடி மட்டுமே.

இவர்களுக்கு சந்தை விலை ஏற்றம், பொருட்கள் தட்டுப்பாடு என்பதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல.

எனக்கு பொருள் தடையில்லாமல் கிடைக்க வேண்டும், விலையைப்பற்றி கவலையில்லை என்பார்கள், ஒரு சுவையான காப்பி 100 கி.மீக்கு அப்பால் இருக்கு என்றால் , கார், ஹெலிகாப்டர் என போயாவது குடித்து இன்புறும் உயர் வர்க்கம்.

ஐந்து நட்சத்திர விடுதி மட்டம் ,இங்கே ஏழு நட்சத்திர விடுதி இல்லையா ,இதெல்லாம்,என்ன நாடு,ஊரு , இன்னும் வளரவே இல்லை *&#@ என குமுறும் கோமகன்கள்! "High Income Group"

இவர்களுக்கு வால்மார்ட், டெஸ்கோ எல்லாம் பொட்டிக்கடை போல :-))

#அடுத்து ,ஆண்டு வருவாய் 20,000 டாலர், ஆனால் 1,500 டாலருக்கு மேல்.இவர்களை "Upper Middle Class"  எனலாம்.

#ஆண்டு வருவாய் 1,500 டாலருக்கு மேல் ,ஆனால் 20,000 டாலர் எல்லையை தொட முடியாதவர்கள். "Middle Class" எனலாம்.

பிரிவு 2& 3 இல் இருப்பவர்கள் அவ்வப்போது மேலும் கீழும் வருமானத்தில் சஞ்சரிக்க கூடியவர்கள், ஆனால் ஒரு போதும் உணவு, உடை, உறைவிட தட்டுப்பாட்டுக்குள் சிக்காதவர்கள்.

தேவையான போது ஐந்து நட்சத்தி விடுதியிலும் போஜனம் செய்வார்கள் , இல்லையென்றால் சரவண பவன் போன்றவற்றிலும் கையை நனைப்பார்கள்.

இவர்களின் எண்ணிக்கை சுமார் 150-175 கோடி ஆகும்.

#  கடைசியில் ஆண்டு வருமானம் சுமார் 1,500 டாலருக்கு கீழ் உள்ளவர்கள், இவர்களை "Lower Income Group" எனலாம்.

உலக மக்கள் தொகை 600 கோடியாக இருந்த போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு என்பதால், மொத்தம் உள்ள 600 கோடியில் இவ்வெண்ணிக்கை.

200 கோடி அளவிலான மக்கலே வருவாய் ரீதியாக செழிப்பாக இருப்பதை காணலாம்.

கடைசி நிலையில் , சுமார் 400 கோடி மக்கள் உள்ளார்கள். அவர்களின் ஆண்டு வருவாய் 1,500 டாலருக்குள், ஆனால் இந்தியாவில் சராசரி ஆண்டு வருவாய் 962 டாலர்கள் என்பதால் நாம் எல்லாம் நான்காம் நிலையில் உட்பிரிவாக 5 ஆம் நிலையில் இருக்க வேண்டியவர்கள் :-))

அந்த 5 ஆம் பிரிவு நிலையில் சேர முடியாமல் வறுமைக்கோட்டுக்கீழ் என ஒரு மக்கள் கூட்டம்ம் இந்தியாவில் இருக்கிறது என்பதை தயவு செய்து நினைவு கூறுங்கள்.

உலகளாவிய பெரு வணிகர்கள் தங்கள் முதலீட்டை பெரிய அளவிலான சில்லரை வர்த்தகத்தில் முதலீடு செய்யும் போது ,விரைவாக அதிகம் வியாபாரம் ஆக வேண்டும் என்றே நினைப்பார்கள், அப்பொழுது தான் அவர்கள் முதலீட்டுக்கு ஏற்ற வருவாய் வரும்.

அப்படி நிறைய பொருட்களும், அடிக்கடி வாங்கி நுகர்வோர் யார் என பார்த்தால் வருவாய் பிரமீட்டில் மேல் இரண்டு பிரிவுகளே , ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் மிக குறைவு. ஆனால் இவர்களை தான் "potential Buyers" என்பார்கள்.

அதே சமயத்தில் அதிக அளவு நுகர்வு செய்யாத மக்கள் யார் என பார்த்தால் நான்காம் பிரிவில் உள்ளவர்களே, இந்திய அளவில் பார்த்தால் நான்காம் பிரிவிலும் 5, 6 என இருக்கு, இவர்கள் எல்லாம் மலிவான பொருளாக இருந்தாலும் அடிக்கடி வாங்கி,அதிகம் நுகர மாட்டார்கள், காரணம் துட்டு லேது!

இவர்கள் எல்லாம் மார்ஜினல் பையர்ஸ். ஆனால் இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களில் 99% இந்த வகையிலே.

எனவே வால்மார்ட் போன்றவைக்கு இவர்கள் இலக்கே அல்ல. இவர்களை நம்பி கடையை திறந்தால் கடைக்கு மின்சார பில்  கட்ட கூட வருவாய் வராது :-))


படம்:வசிப்பிடவாரியாக சில்லரைவர்த்தக பரவல்.



விளிம்பு நிலை வருவாய் மக்கள், ஒரு மாதத்திற்கு 5 லிட்டர் சமையல் எண்ணை தேவை என தெரிந்தாலும் மாத ஆரம்பத்தில் மொத்தமாக பொருள் வாங்கினாலும் 5 லிட்டர் எண்ணை வாங்க மாட்டார்கள், ஒரு ரெண்டு லிட்டர் வாங்குவாங்க, அது தீர்ந்ததும் தேவைக்கு அரை லிட்டர் பாக்கெட்டுகளாக வாங்குவார்கள்.

எனவே இது நாள் வரையில் இவர்கள் ஷண்முகம் ஸ்டோரில் மாதம் ஒரு முறை மொத்த கொள்முதல் செய்திருப்பார்கள், பின்னர் தினசரி 50 ரூ-100 ரூ என அருகில் இருக்கும் முருகன் மளிகைக்கடையில் வாங்கிக்கொண்டு இருப்பார்கள்.

இப்போ வால்மார்ட் வந்தாலும் என்ன செய்வார்கள், இவர்களின் வாங்கும் நடவடிக்கையில் மாற்றம் வராது, பெரிய கடையா இருக்கேன்னு மாத மளிகையை ஒரு முறை போய் வாங்கிக்கொண்டு தினசரி முன்னர் போல முருகன் மளிகையே சரணம்னு போவார்கள்.எனவே முழுக்க சில்லரை வர்த்தகர்கள் வழக்கொழிய மாட்டார்கள், இப்போதுள்ள மார்க்கெட் ஷேரில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வால்மார்ட் போன்றவர்களுக்கு போகும்.

வால்மார்ட் இன்ன பிறவுக்கு முன்னர், ரிலையன்ஸ், மோர் என பல சூப்பர் மார்கெட்டுகள் வந்தாச்சு, அப்போதும் இப்படித்தான் அதிகமாக வாங்குவதென்றால் அங்கு போவார்கள், அதுவும் விலை கொஞ்சமாக இருக்கும் பொருளாக பார்த்து வாங்குவார்கள். இன்னொரு பொருள் வெளியில் விலை குறைவென்றால் அங்கு போய் வாங்க தயங்கமாட்டார்கள்.

ஆனால் மேலை நாட்டு மக்கள் ஒரு கடைக்குள் வந்தாச்சு , இன்னொரு பொருளுக்காக இன்னொரு கடைக்கு அலையணுமா என அங்கே வாங்கிவிடுவார்கள்.

இது தான் இந்திய நுகர்வோருக்கும், மேலை நாட்டு நுகர்வோருக்கும் உள்ள வித்தியாசம்.

பெருநகரங்களிள் தான் பெரிய சூப்பர் மார்கெட்டுகளுக்கு நிலைத்திருக்க கூடிய வகையில் வியாபாரம் நடக்கும்.

இதன் மூலம் நுகர்வோருக்கு என்ன பலன் என்றால், விலையை ஒப்பிட்டு வாங்க இன்னொரு கடை என்ற சாய்ஸ் கிடைக்கிறது.

தனிப்பட்ட இந்திய சில்லரை விற்பனைக்கடைகளாக இருப்பினும், அவை எல்லாம் ஒரே மாதிரி விலையை கடைப்பிடிப்பார்கள்.

அவற்றில் மொத்த விலைக்கடை,சில்லறை விலைக்கடை என இரண்டு வகையில் விலை வைப்பார்கள்.

மொத்த விலைக்கடையில் எல்லாம் ஒரு பொருளுக்கு என்ன விலையோ அதுவே ஊரெங்கும் இருக்கும், அதே போல சில்லறை விலைக்கடைகளில் எல்லாம் ஒரே போல இருக்கும். எனவே அந்த கடையில் கம்மியாக இருக்கும் என மாறிப்போவதற்கு இடமே இல்லை, இந்த வியாபார வலைக்கு மாற்றாக ஒன்று வந்தால் ஒழிய நுகர்வோருக்கு விலையில் தேர்வு செய்ய வாய்ப்பே இல்லை.

இந்நிலையில் தான் அந்நிய சில்லரை வர்த்தகர்கள் வருகிறார்கள், அவர்கள் விலையில் தேர்வு செய்ய ஒரு வாய்ப்பினை நுகர்வோருக்கு அளிப்பார்கள், இதனால் மோனோபோலி உடையும், நுகர்வோருக்கு கொடுக்கும் காசுக்கு ஏற்ற பொருள் கிடைக்கும்.

எந்த ஒரு வணிக சூழலிலும் மோனோ போலி இருக்கவே கூடாது. இந்தியாவில் மோனோ போலி டிரேட் பிராக்டிஸ் ஆக்ட் என்ற ஒன்று உண்டு, ஒருவரே முழு சந்தையினை கட்டுப்படுத்தக்கூடாது, முடியாது, ஆனால் தனித்தனி கடைகள், என்றப்பெயரில் இந்தியாவில் இயங்கும் அங்காடிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒரு மோனோ போலி சாம்ராஜ்யத்தினை நடத்துவது நிதர்சனமான உண்மை.

இதற்கு அடிப்படையாக அமைவது சப்ளை செயின் என்ற அமைப்பினை ஒரு சிலரே கட்டுப்படுத்துவது தான்.

உதாரணமாக பூச்சி மசாலா என ஒன்றை பார்ப்போம்.

அவர்கள் , மசாலாவுக்கான மூலப்பொருட்கலை வாங்கி அரைத்து பாக்கெட்கள் தயாரிக்கிறார்கள், ஆனால் நுகர்வோருக்கு நேரடியாக விற்க முடியாது ,கடைகளுக்கு அனுப்ப வேண்டும், ஒவ்வொரு கடையாக போய் கேட்டால் என்ன சொல்வார்கள் என்றால்,

நாங்க , அரிசி ,பருப்பு, எண்ணை, புளி, மிளகாய், சோப்பு, ஷாம்பு என பல பொருட்களை மாவட்ட விநியோகஸ்தரிடம் வாங்குகிறோம், அவரே பேச்சி மசாலா என்றை ஒன்றை அனுப்புறார், அதை விட்டுவிட்டு உங்க கிட்டே மட்டும் ஒரு பொருளை வாங்க முடியாது என்பார்.

சரி கடைக்காரர்கிட்டே விற்பதை விட ,மாவட்ட விநியோகஸ்தரிடம் விற்கலாம் என போனால், அவரோ மேற்கண்ட எல்லாவற்றையும், மாநில விநியோகஸ்தரிடம் வாங்குகிறோம், அவர் அனுப்பும் சரக்கை தான் நாங்க வாங்கி விநியோகம் செய்ய முடியும் என்பார்கள்.

அப்படியே மாநில விநியோகஸ்தரை அணுகினால் அவர் சொல்வார் , பேச்சி மசாலா எங்களுக்கு 50% மார்ஜினில் தருகிறது எனவே நீங்க அதை விட அதிக மார்ஜினில் கொடுக்க வேண்டும் என்பார், அவ்ளோ மார்ஜின் கொடுத்தால் மஞ்சளை அறைத்து மஞ்சத்தூளா கொடுக்க முடியும், மரத்தூளை அறைத்து மஞ்சள் சாயம் கலந்து தான் கொடுக்க முடியும்.

அந்த மார்ஜினுக்கு ஒற்றுக்கொண்டு பொருளை சப்ளை செய்தால் கலப்படம் செய்வதை தவிர வேறு வழியேயில்லை.

இதுக்கு நடுவில் பேச்சி மசாலாவுக்கு போட்டியா பூச்சி மசலா விளம்பரம் வேற கொடுக்க வேண்டும்.எதாவது ஒரு முன்னால் நடிகையை கூப்பிட்டு வந்து , சமைக்கவே தெரியாத அவரை நான் பூச்சி மசாலாவை தான் சமையலுக்கு பயன்ப்படுத்துறேன் ,சுவையோ அபாராம் என கூசாமல் புழுகி விளம்பரம் எடுத்து மக்களையும் ஏமாற்ற வேண்டும்.

வால்மார்ட் வந்தா நாம என்ன சாப்பிடுகிறோம் என்பதை அவர்கள் கட்டுப்படுத்துவார்கள் என சொல்கிறவர்கள் , இப்போதுள்ள நடைமுறையை என்னனு சொல்வார்கள் :-))

மேலும் தற்போதுள்ள சூழலில் கூட மக்கள் என்ன வாங்க வேண்டும் என்பதை எப்படி இந்திய வியாபாரிகள் வலையமைப்பு தீர்மானிக்கிறது, இதனால் எப்படி உற்பத்தியாளர்கள் தங்கள் பொருளை சந்தைப்படுத்த முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு நிஜ வியாபார உதாரணம் மூலம் பார்க்கலாம்.

நிர்மா;




முனைவர்.கர்சான் பாய் படேல் என்ற வேதியலாளர், 1969 இல் குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரத்தில் 100 சதுர அடியுள்ள இடத்தில் தனது வேதியல் அறிவைக்கொண்டு , பாஸ்பேட் இல்லாத டிடெர்ஜெண்ட் பவுடரை உருவாக்கினார், அவர் அப்பொழுது குஜராத் சுரங்க துறையில் பணிப்புரிந்து வந்தார், சைக்கிளில் அலுவலகம் செல்லும் போது 10-15 பாக்கெட்டுகள் எடுத்து சென்று சில கடைகள், தனிநபர்கள் என விற்றுவிட்டு செல்வார்.

ஒரு கிலோ சலவைத்தூள் விலை 3.50 ரூபாய் தான் என்பதால் மக்கள் விரும்பி வாங்கினர், ஏன் எனில், அப்பொழுது பிரபலமான இந்துஸ்தான் லீவர்(இப்போ யுனிலீவர்) நிறுவனத்தின் சர்ப் சலவைத்தூள் கிலோ 15 ரூபாய் ஆகும்.

இதனால் குறுகிய காலத்தில் சுற்றுவட்டாரத்தில் புகழடையவே பல கடைகளும் ஆர்டர் கொடுக்க சில ஆண்டுகளில் தனித்தொழிற்சாலையே அமைத்து பல மாவட்டங்கள், மாநிலங்கள் என வியாபாரத்தினை விரிவாக்கினார்.

ஒரு கட்டத்தில் சர்ப்பின் விற்பனையை தாண்டி சென்றும் விட்டது நிர்மா, வருமான அடிப்படையில் நிர்மா குறைவாக இருந்தாலும் சலவைத்தூள் வால்யும் அடிப்படையில்  800,000 tonnes  விற்று உலகில் அதிகம் விற்பனையாகும் சலவைத்தூள் என 2004 இல் உலக சாதனைப்படைத்தது.

நிர்மாவின் வெற்றிக்கு காரணம், அடிமட்ட வருவாய் பிரிவினரை குறிவைத்து பொருளை தயாரித்தது,மேலும் அதற்கேற்ற விலை நிர்ணயம், அவ்விலைக்கு ஏற்ற தரம்.

சர்ப் 15 ரூ என்றாலும் அதற்கு முன்னர் போட்டியே இல்லை என்பதால் அடிமட்ட வருவாய் பிரிவினரும் வாங்க வேண்டிய சூழல்.எனவே அவர்களின் வருமானம் உயராத நிலையிலும் தேவைக்கு வாங்கி வந்தார்கள். கிலோ 3.50 ரூபாய்க்கு நிர்மா வரவும் மக்களும் ஆதரித்தார்கள்.

இந்துஸ்தான் லீவர் என்பது பெயரில் தான் இந்துஸ்தான், அது ஒரு ஆங்கில-ஹாலந்து கூட்டு பன்னாட்டு நிறுவனம், லண்டனிலும், ரோட்டர்டாமிலும் தலைமையகம் உண்டு.

இவர்கள் ஏற்கனவே விநியோக வலையமைப்பு, எண்ணற்ற பொருட்கள் விநியோகம் என வலுவான நிலையில் உள்ள வியாபார சக்தி, ஆனால் சலவைத்தூள் என்ற ஒரே தயாரிப்பை வைத்துக்கொண்டு வெற்றிகரமாக சந்தைப்படுத்த நிர்மாவால் அன்று சாத்தியமானது ,காரணம் என்ன?

வட இந்தியாவில் தனிப்பட்ட அங்காடிகள் பெரும்பாலும் வலையமைப்பாக விநியோகத்தில் சிக்கிக்கொள்வதில்லை. அதே சமயம் தென்னிந்தியாவில் மாநில அளவில் இருந்து ஒரு சிற்றூரில் உள்ள தனிப்பட்ட கடை வரையில் ஒரு வலை இயங்கிவந்தது. மேல மடக்கிட்டால் போதும் உங்க தயாரிப்பு சென்னையில் இருந்து கன்னியா குமரி வரைக்கும் பாயும்.

நிர்மாவினை சமாளிக்கவே வீல் என்ற ஒரு மலிவு விலை சலவைத்தூளை இந்துஸ்தான் அறிமுகப்படுத்தியது, மேலும் ரின் சலவைத்தூளின் விலையை குறைத்தது. சர்ப் அவர்களின் பிரிமியம் சலவைத்தூள் என்பதால் குறைக்கவில்லை.

ஆனால் அப்படியும் நிர்மாவின் கடைமட்ட வருவாய் பிரிவினரின் சலவைத்தூள் என்ற மார்க்கெட்டினை இந்துஸ்தான் லீவரால் அசைக்கவே முடியவில்லை. வட இந்தியா முழுக்க கொடிக்கட்டி பறந்த நிர்மாவால் தமிழ் நாட்டில் மட்டும் பெரிதாக தாக்கத்தினை உண்டாக்க முடியவில்லை, என்ன காரணம் எனில் நம்ம ஊரு மாநில விநியோகம் இந்துஸ்தான் லீவரின் தயாரிப்பான வீல் மற்றும், ரின்னுக்கு ஆதரவு காட்டியதே. அதற்கு அப்புறம் பிராக்டர் & கேம்பலின் டைட் என்ற மலிவு விலை சலவைத்தூளுக்கே நம்ம ஊரு விநியோக அமைப்பு பச்சைக்கொடி காட்டியது.

அவர்கள் சொல்லும் காரணம் இந்துஸ்தான் யுனிலீவர் பல தரப்பட்ட பொருட்களை தருகிறது, தொடர்ந்து அவர்கள் பொருட்களை வாங்குவதால் இதையும் வாங்குகிறோம் என்பதே.

ஆனால் இதே நிலை வட இந்தியாவில் இல்லையே,அங்கே எல்லாம் இந்துஸ்தான் லீவர்  இதே போல அடம்பிடிக்க முடியவில்லையே ஏன்?



இப்போ நிர்மாவிற்கு பின்னர் காரி(Ghari= குகை எனப்பொருள்!)என்ற சலவைத்தூள் கடைமட்ட வருவாய் பிரிவினரின் அபிமான சலவைத்தூள் ஆக இடம் பிடித்துள்ளது.ரோகித் என்ற கான்பூரை சேர்ந்த நிறுவனத்தின் தயாரிப்பாகும், இந்தாண்டு நிர்மா, வீல் ஆகியவற்றை பின் தள்ளி முன்னுக்கு வந்துவிட்டது. ஆனால் அந்த சலவைத்தூள் தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியவில்லை. காரணம் இங்குள்ள வியாபார வலையமைப்பே.



தமிழ்நாடு தவிர ஆந்திரா ,கர்நாடகா முதல் வட மாநிலங்களில் கொடிக்கட்டி பறக்கிறது காரி சலவைத்தூள், மேலும் அவர்களே எக்ஸ்பெர்ட் என்ற பெயரில் பாத்திரம்ம் துலக்கும் சோப்பும், வீனஸ் என்ற பெயரில் குளியல் சோப்பும் தயாரிக்கிறார்கள்.



வீனஸ் குளியல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடர் வித்யாபாலன். ரோகித் நிறுவனம் தங்கள் பொருட்களை மிக எளிதாக விளம்பரப்படுத்துவதில் கில்லாடிகள், மத்திய அரசின் ரயில்வே போக்குவரத்தின் இரயில்களில் விளம்பரப்படுத்த கட்டணம் குறைவே எனவே வடமாநிலங்களில் ஓடும் இரயில்களில் உள்ளும் புறமும் விளம்பரம் செய்ய உரிமம் வாங்கி குறிப்பிட்ட இரயில்கள் முழுவதும் விளம்பரம் செய்தார்கள். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

Ghari Detergent Express (a summer special) in 2008 that ran between Lucknow and Guwahati

Pushpak Express that runs between Lucknow and Mumbai

 Swarna Jayanti Express (from Trivandrum to Hazrat Nizamuddin in Delhi)

ஆகிய இரயில்களில் விளம்பரம் செய்தார்கள் , பல ஆயிரம் கோடி விளம்பரம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களை ஆண்டுக்கு  வெறும் 30 கோடி விளம்பர செலவு செய்து காலி செய்துள்ளார்கள்.

இதற்கு காரணம் விலைக்குறைவாக வைத்தது கிலோ 52 ரூ.

மேலும் விலை குறைவாக வைத்தாலும் அங்காடிகளுக்கு நல்ல விகிதத்தில் கமிஷனும் கிடைக்க செய்தார்கள், 9% கமிஷன், தங்கள் லாபத்தினை குறைத்துக்கொண்டார்கள்.

பன்னாட்டு நிறுவனங்கள் விலையும் குறைப்பதில்லை, அங்காடிகளுக்கு கமிஷனும் அதிகம் கொடுக்க முன்வருவதில்லை, தங்கள் போட்டியாளர்களை ஒடுக்க வேண்டும் என்றால் மட்டுமே கூடுதல் கமிஷன் கொடுப்பார்கள், இல்லை எனில் இத்தனை பொருட்களை நாங்கள் சப்ளை செய்கிறோம், எனவே போட்டியாளர் பொருளை விற்க கூடாது என மிரட்டுவதே வழக்கம்.

எனவே மக்கள் என்ன வாங்க வேண்டும் என வால்மார்ட் வந்தால் தீர்மானித்து விடும் என புரளி கிளப்புவதெல்லாம் வெற்று புரளியே, இப்போ உள்ள நடைமுறையிலும் நாம் என்ன வாங்குகிறோம் என்பது நம் கையில் இல்லை :-))

நாம் இவற்றை எல்லாம் விரும்பியா வாங்குகிறோம்:

HIndustan Unilever:

தலைமையகம்: மும்பை,

யுனி லீவர் கம்பெனி:

நிறுவனர்கள்:  William Hesketh Lever (1851–1925) and his brother, James Darcy Lever (1854–1910)

லண்டன் மற்றும் ரோட்டர் டாம்,ஹாலந்து.

http://en.wikipedia.org/wiki/Hindustan_Unilever

லீவர் சகோதரர்கள் 1888 இல் மும்பையில் லீவர் பிரதர்ஸ் என்ற பெயரில் துக்கப்பட்டது ,ஆரம்பத்தில் சன்லைட் சோப்புகளை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்து விற்றார்கள்.

பின்னர் கி.பி.1933 இல்  Lever Brothers India Limited என ஆரம்பிக்கப்பட்டது, பின்னர் 1956 இல் இந்திய பங்குதாரர்களையும் சேர்த்துக்கொண்டு இந்துஸ்தான் லீவர் நிறுவனம் ஆனது.ஆங்கிலோ டச் நிறுவனமான யுனிலீவருக்கு 52 % பங்குகள் உள்ளது.

HIndustan Unilever Products:

35 பிராண்டுகள், 70 கோடி வாடிக்கையாளர்களை கவர்ந்த நிறுவனம், மூன்றில் இரண்டு இந்தியர்கள் இந்துஸ்தான் யுனிலீவர் தயாரிப்பினை நுகர்கிறார்கள்.

Food brands:

Annapurna salt and atta
Bru coffee
Brooke Bond (3 Roses, Taj Mahal, Taaza, Red Label) tea
Kissan squashes, ketchups, juices and jams
Lipton tea
Knorr soups & meal makers and soupy noodles
Kwality Wall's frozen dessert
Modern Bread, ready to eat chapattis and other bakery items
Homecare Brands [8]
ActiveWheel detergent
Cif Cream Cleaner
Comfort fabric softeners
Domex disinfectant/toilet cleaner
Rin detergents and bleach
Sunlight detergent and colour care
Surf Excel detergent and gentle wash
Vim dishwash
Magic – Water Saver [9][10]
Personal Care Brands: [11]
Aviance Beauty Solutions
Axe deodorant and aftershaving lotion and soap
LEVER Ayush Therapy ayurvedic health care and personal care products
Breeze beauty soap
Clear anti-dandruff hair products
Clinic Plus shampoo and oil
Close Up toothpaste
Dove skin cleansing & hair care range: bar, lotions, creams and anti-perspirant deodorants
Denim shaving products
Fair & Lovely skin-lightening products
Hamam
Lakmé beauty products and salons
Lifebuoy soaps and handwash range
Liril 2000 soap
Lux soap, body wash and deodorant
Pears soap
Pepsodent toothpaste
Pond's talcs and creams
Rexona soap
Sunsilk shampoo
Sure anti-perspirant
Vaseline petroleum jelly, skin care lotions
TRESemmé [12]
Water Purifier Brand:
Pureit Water Purifier

அனைத்துமே சர்வதேச பிராண்ட்கள் ,பல நாட்டிலும் தயாரிக்கப்பட்டு விற்பனையாகிறது, இந்தியாவிலும் விற்பனையாகிறது .இவை  எல்லாம் நமக்கு ரொம்ப பிடித்தமான வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் :-))

-----------

The Procter & Gamble Company

தலைமையகம்: Cincinnati, Ohio, USA

நிறுவனர்கள்:
William Procter
James Gamble

http://en.wikipedia.org/wiki/Procter_%26_Gamble

William Procter மெழுகு வர்த்தி தயாரிக்கும் தொழிலை செய்து வந்தார்,
James Gamble என்பவர் சோப்பு தயாரித்து வந்தார், இருவருமே அயர்லாந்த்தில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர்கள்,

Alexander Norris,என்பவரின் அழகான பெண்கள் ஆன
Olivia and Elizabeth Norris.ஆகியோரை பிராக்டர் மற்றும் கேம்பில் மணந்து கொண்டனர், மாமனார் நோரிஸ் மாப்பிள்ளைகளை ஏன் தனியாக தொழில் செய்யுறிங்க ஒன்றாக செய்தால் லாபம் நல்லா வருமே என சொல்ல கி.பி 1857 ஆம் ஆண்டு The Procter & Gamble Company உதயமாயிற்று.

தயாரிப்புகள்:

Ace is a brand of laundry detergent/liquid available in numerous forms and scents.
Always/Whisper is a brand of feminine care products.
Ariel is a brand of laundry detergent/liquid available in numerous forms and scents.
Bold is a brand of laundry detergent/liquid.
Bounce is a brand of laundry products sold in the United States and Canada.
Bounty is a brand of paper towel sold in the United States and Canada.
Braun is a small-appliances manufacturer specializing in electric shavers, epilators, hair care appliances and blenders.
Cascade is a brand of dishwashing products.
Charmin is a brand of toilet paper sold in the United States, Canada, and Mexico.
CoverGirl is a brand of women's cosmetics.
Crest/Oral B is a brand of toothpaste and teeth-whitening products.
Dash is a brand of laundry detergent/liquid.
Dawn/Fairy is a brand of dishwashing detergent.[16]
Dolce & Gabbana is an Italian fashion house.
Downy/Lenor is a brand of fabric softener.
Duracell is a brand of batteries and flashlights.
Eukanuba is a brand of pet food.
Febreze/Ambi Pur is a brand of air fresheners.
Fixodent is a brand of air denture adhesives.
Fusion is a brand of men's wet shave razors.
Gain is a brand of laundry detergent, fabric softeners and liquid dish soap.
Gillette is a brand of safety razor and male grooming products.
Head & Shoulders is a brand of anti-dandruff shampoo and conditioners.
Herbal Essences is a brand of shampoo and conditioners.
Hugo Boss is a brand of fine fragrances.
Iams is a brand of pet food.
Luvs is a brand of baby diapers.
Mach3 is a brand of safety razor and male grooming products.
Max Factor is a brand of women's cosmetics.
Mister Clean is a brand of multi-purpose cleaner sold in the United States, Canada and Great Britain.
Olay is a brand of women's skin care products.
Old Spice is a brand of men's grooming products.
Oral-B is a brand of toothbrush, and oral care products.
Pampers is a brand of disposable diaper and other baby care products.
Pantene is a brand of hair care products (conditioners/styling aids).
Prestobarba/Blue is a brand of safety razor and male grooming products.
Prilosec is an over-the-counter drug.
Puffs is a brand of facial tissue.
Rejoice/Pert is a brand of hair care products (conditioners/styling aids).
Safeguard is a brand of soaps.
Secret(brand) is a female anti-perspirant brand.
SK-II is a brand of women's and men's skin care products.
Swiffer is a brand of house-cleaning products.
Tampax is a brand of feminine care products.
Tide is a brand of laundry detergent.
Venus is a brand female hair-removal products.
Vicks is an over the counter medication.
Wella is a brand name of hair care products (shampoo, conditioner, styling, hair color).

இவற்றில் பல இந்தியாவில் இறக்குமதியாகவோ, அல்லது தயாரித்தோ விற்கப்படுகிறது, நமக்கு என்ன தேவையோ அதை தானே வியாபாரிகள் கொடுக்கிறாங்க :-))
-----------------------
Johnson & Johnson

 நிறுவனர்கள்: Robert Wood Johnson,  James Wood Johnson and Edward Mead Johnson

தலைமையகம்:New Brunswick, New Jersey, United States.

http://en.wikipedia.org/wiki/Johnson_%26_Johnson

கி.பி 1886 இல் ஜோசப் லிஸ்டரின் தொற்று நீக்குதல் குறித்த பிரச்சாரத்தினால் கவரப்பட்டு மருத்துவ பொருட்கள், கிருமிநாசினி, என தயாரிக்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தினை ஆரம்பித்தார்கள்.பேன்ட்-எய்ட் எனப்படும் ஒட்டுப்பசையுடன் கூடிய பிளாஸ்டர் இவர்கள் கண்டுபிடிப்பே.

இவர்களுக்கு பல டஜன் நிறுவனங்களும், பிராண்டுகளும் உள்ளன,

டைலினால் என்ற மருத்தினால் சிலர் இறந்து ,பல ஆயிரம் குப்பிகள் திரும்ப பெறப்பட்டது ,அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய திரும்ப பெருதல் அதுவே, இது போல இன்னும் பல சம்பவங்களும் உண்டு.

தயாரிப்புகள்:

Acuvue
Actifed
Aveeno
Bactidol
Band-Aid
Benadryl
Benecol
Bengay
Benylin
Bonamine
Calpol
Calcough
Calprofen
Calgel
Calrub
Carefree
Clean & Clear
Coach
Coach Professional
Coach Sport
Codral
Combantrin
Compeed
Conceptrol
Cortaid
Cortef
Delfen
Desitin
Dolormin
E.P.T.
Efferdent
Euthymol
First-Aid
Gynol
Healthy Woman
Imodium
Johnson's Baby
Johnson & Johnson Red Cross
Jontex
K-Y
Lactaid
Listerine
Listermint
Lubriderm
Meds[39]
Micatin
Monistat
Micralax
Migraleve
Modess[39]
Motrin
Motrin Children
Myadec
Mylanta
Nasalcrom
Neko
Neosporin
Neutrogena
Nicoderm
Nicorette
Nizoral
Nu-Gauze
O.B.
OneTouch
Pediacare
Penaten
Pepcid
Pepcid AC
Polysporin
Ponstan
Priligy
Provin
Quantrel
REACH
Reactine
Regaine
Rembrandt
Remicade
RoC
Rogaine
Rolaids
Simply Sleep
Simponi
Sinutab
Splenda
Stayfree
Steri-Pad
Stim-u-dent
Sudacare
Sudafed
Tucks Pads
Tylenol
Tylenol Baby
Tylenol Children
Ultracet
Vania
Visine
Zyrtec


--------------------
 Nestlé:

தலைமையகம்:Vevey, Switzerland

http://en.wikipedia.org/wiki/Nestl%C3%A9

கி.பி 1905 இல் Henri Nestlé, வின் சாக்கலேட் நிறுவனமும்,Charles Page, George Page ஆகியோரின் ஆன்க்லோ சுவிஸ் பால் நிறுவனமும் இணைந்து உருவானது. உலகம் முழுக்க கிளைகள் உள்ளது.

தயாரிப்புகள்:

Nespresso, Nescafé, KitKat, Smarties, Nesquik, Stouffer's, Vittel, and Maggi.

 L'Oréal, the world's largest cosmetics company இன் முக்கிய பங்குதாரர்கள்.
---------------

சில்லரை வர்த்தகத்தில் அந்நியர்கள் வந்து நமது நுகர்வு அமைப்பை மாற்றிவிடப்போவதில்லை, ஏற்கனவே சில்லரை வர்த்தகத்தில் புழங்கும் அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்து வழங்குவதில் அந்நிய முதலீட்டின் கையே ஓங்கியுள்ளது. அவை எல்லாம் தரமானது என்றும் சொல்லிவிட முடியாது ,பல நாட்டிலும் கண்டனங்களுக்கு ஆளானவையே, ஆனால் அவற்றை இன்றும் வாங்கி விற்பது நம்ம ஊர் சுதேச வியாபாரிகளே, அவற்றின் தரம் குறித்தோ விற்பனைக்கு பிந்தைய சேவை குறைப்பாடு குறித்தோ நாம் கேள்வி எதுவும் கேட்டுவிட முடியாது.

பூச்சி பிடித்த கடலை பருப்பை விற்றாலும் வாங்கித்தான் ஆக வேண்டும் ,போய் கேட்டால் உடனே மாற்றி தரவும் மாட்டார்கள். அனைவராலும் நுகர்வோர் கோர்ட்டுக்கு அலையவும் முடியாது.

மேலும் இப்போது உள்ள சில்லரை வணிக முறையில் ,நுகர்வோருக்கும் நியாய விலை, தரம் என எவ்வித உத்தரவாதமும் இல்லை, உற்பத்தியாளர்கள், மற்றும் விவசாயிகளுக்கும் பொருட்கள் விலையாக உத்திரவாதமோ, அல்லது சீரான கொள்முதலோ சாத்தியமில்லாமலிருக்கிறது.

அடுத்தப்பதிவில் விவசாய கொள்முதல், மற்றும் இந்திய தயாரிப்புகள் எவ்வாறு பின் தள்ளப்படுகிறது, உற்பத்தி செய்தும் விரயம் ஆவதையும்,  தரத்திற்கு உத்திரவாதமில்லாமல் நுகர்வோரின் பணம் தேவையில்லாமல் சுரண்டப்படுவதையும் காணலாம்.

தொடரும்...

_________________

பின்குறிப்பு:


தகவல் மற்றும் படங்கள்,

எகனாமிக்ஸ் டைம்ஸ், இந்து,விக்கி ,கூகிள் மற்றும்,

http://strategicmoves.wordpress.com/2011/01/04/ghari-detergent-did-the-nirma-act/

இணைய தளங்கள்,நன்றி!
--------------------------

Saturday, November 24, 2012

2G Spectrum Scam: real or Fabricated



(வழக்கம் போல் மிஸ்டு கால் தான்...ஹி...ஹி எனக்கா இருக்குமோ)


2ஜீ அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ஊழல் நடைப்பெற்று இருப்பதாக மத்திய தணிக்கை குழு அறிக்கை சொன்னதும், அதன் தொடர்ச்சியாக ஆ.ராசா, கனி மொழி,நீரா ராடியா ஆகியோர் கைதானதும் , மொத்தம் 122 உரிமங்களை பெற்ற ஒன்பது அலைப்பேசி நிறுவனங்களின் உரிமங்கள் இரத்தான முன் வரலாறு அனைவரும் அறிந்ததே.

இரத்து செய்யப்பட்ட உரிமங்களை ஏல முறையில் விற்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதன் பேரில் கடந்த 13 ஆம் தேதியன்று ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டது ,ஆனால் எதிர்ப்பார்க்கப்பட்ட விலைக்கும் கீழாக 9,401 கோடி அளவுக்கு சில பகுதிகள் மட்டுமே விற்பனையானது.

இதன் அடிப்படையில் முன்னர் ஆ.ராசா தொலைதொடர்பு அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் முதலில் வருபவருக்கே முன்னுரிமை அடைப்படையில் அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் முறைகேடு ஏற்பட்டதாக சொல்லப்படும் 1.76 லட்சம் கோடி என்ற தொகை மிகைப்படுத்தப்பட்டது ,தற்போதிய ஏலத்தில் பெரும் தொகை ஈட்டப்படவில்லை எனவே பொய்யான குற்றச்சாட்டு என்பது நிருபணம் ஆகிவிட்டது , என ஊழலோட சம்பந்தப்பட்டவர்கள் மிகப்பெருமிதமாக நெஞ்சு நிமிர்த்தி முழக்கமிடுகிறார்கள்.

கூடவே மத்திய தணிக்கை குழுவின் தொலைத்தொடர்ப்பு பிரிவின் தலைவராக பதவி வகித்த அதிகாரி திடீர் என முன்னர் அவ்வாறு அறிக்கை அளிக்க கட்டாயப்படுத்தப்பட்டேன் என பேட்டிக்கொடுத்துள்ளார், இதுவும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்களுக்கு தேனாமிர்தமாக இனிக்க, கூடுதல் சக்தியுடன் உரக்க முழக்கமிட ஆரம்பித்துள்ளார்கள்.

அலைக்கற்றை வழக்கினை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வந்திருப்போருக்கு தெரியும் தணிக்கை குழு சொல்லும் தொகை  ஒரு கணிப்பின் அடைப்படையில் உத்தேசமாக  கணக்கிடப்பட்ட தொகை என்பது ,குற்றம் சாட்டப்பட்டவர்களும் இந்நாள் வரையில் அவ்வளவு ஊழல் நடக்கவில்லை என்று மறுத்தார்களே ஒழிய ,ஊழலே நடக்கவில்லை என ஒரு போதும் மறுத்ததில்லை. தற்போது தான் திடீர் உத்வேகத்துடன் பேச ஆரம்பித்துள்ளார்கள்.

நம் நாட்டில் இயற்கை வளங்களை ஏலம் அல்லது உரிமம் வழங்கும் நடைமுறையில் கையூட்டு இல்லாமல் ஒரு காகிதம் கூட கை எழுத்தாகாது என்பது அனைவருக்குமே தெரிந்த ரகசியம். அப்படி இருக்கையில் ஊழல் நடக்கவில்லை என சொல்வதே மிகப்பெரும் பொய், இப்பொழுது ஏலத்தொகை குறைவாக கேட்கப்பட்டதை வைத்து மட்டுமே மறுக்கிறார்களே ஒழிய மற்றபடி ஊழல் நடக்கவில்லை என்பதை மறுக்க வேறு ஆதாரம் காட்டவில்லை.

எதிர்ப்பார்க்கப்பட்டதை விட ஏலத்தொகை ஏன் குறைவாக கேட்கப்பட்டது என்பதை ஆராய்ந்தால் ,அலைக்கற்றை ஒதுக்கிட்டில் ஊழல் நடந்ததா இல்லையா என்பதை நாமே கண்டறிய முடியும், அதனை இப்பதிவில் காணலாம்.

அலைக்கற்றை ஒதுக்கீடு , ஏலம் போன்ற வியாபார நடைமுறைகளை காணும் முன்னர் அலைப்பேசி வலையமைப்பு (Telecom network)செயல்படும் முறையினை சுருக்கமாக காணலாம், அப்பொழுது தான் எளிதாக நடைமுறை சிக்கலையும், சில வியாபார நோக்கங்களையும் புரிந்து கொள்ள முடியும்.

அலைப்பேசி வலை அமைப்பு(Cell Phone structure)

உலகம் முழுவதும் GSM ,CDMA (global service mobile and Code division Multiple Access) என இரு வகை தொழில்நுட்பத்தில் அலைப்பேசி அமைப்புகள் இயங்குகின்றன. தற்போதுள்ள ஜிஎஸ்.எம் அமைப்பு 2ஜீ தொழில்நுட்பம் ஆகும். 3ஜீ என்பது அடுத்த தலைமுறை CDMA (WCDMA) தொழில் நுட்பமே, தற்போது  இது போதும் ,பொதுவாக அலைப்பேசி அமைப்பினை அணுகலாம்.

அனைத்து அலைப்பேசி நிறுவனங்களும் இவ்விரண்டு முறையில் ஏதோ ஒன்றிலோ அல்லது இரண்டும் கலந்தோ அலைப்பேசி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

பொதுவாக ஒரு அலைப்பேசி வலையமைப்பில் உள்ள அம்சங்களை காணலாம்.

# அலைப்பேசி(Mobile phone)

# அலைப்பேசி கோபுரம்(mobile tower or Base Transciver Station-BTS)

# தரைக்கட்டுப்பாட்டு மையம்(Base station controller-BSC)

# மையக்கட்டுப்பாட்டு மையம்.(Mobile switching Service centre or Main Station Ccontroller-MSC)

# பொது தொலைப்பேசி வலையமைப்பு இணைப்பு.(Pulic Switched Telephone Network-PSTN)

ஆகிய அலகுகள் அனைத்து அலைப்பேசி வலையமைப்பிலும் இருக்கும்.

இவற்றை தொலைதொடர்பு நிறுவனங்கள் அமைத்துக்கொண்டு, பின்னர் அலைக்கற்றை உரிமம் பெற்று ,தொலைத்தொடர்பு சேவையை உருவாக்குவார்கள்.

அலைக்கற்றை அகலம்(Spectrum Bandwidth):

வானொலி, தொலைக்காட்சி, ரேடார் , ராணுவம் என பலவற்றுக்கும் பல அலைவரிசையில் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டிருக்கும், அதே போல அலைப்பேசிகளுக்கு என சில குறிப்பிட்ட அலைவரிசை ஒதுக்கப்பட்டு இருக்கிறது, உலகம் முழுக்க அக்குறிப்பிட்ட அலைவரிசைக்குள் தான் அலைப்பேசிகள் இயங்க வேண்டும், எனவே தான் குறைந்த அளவில் கிடைக்கும் அலைக்கற்றைக்கு மதிப்பு அதிகம் ஆகிறது.

பொதுவாக அலைப்பேசிக்கு ஒதுக்கப்படும் அலைக்கற்றை அகல எல்லைகள்,

872-960 MHz, 1710-1875 MHz and 1920 - 2170 MHz. ஆகும்,

இதில் 800,900,1700,1800,1900,2100 (சில இடங்களில் 2,200,2,300 உண்டு,அமெரிக்காவில் 300 முதல் 3,000 மெ.ஹெர்ட்ஸ்)என அடிப்படையாக ஒரு அதிர்வெண்ணை  வைத்துக்கொண்டு ,முன்னால் ,பின்னால் உள்ள அதிர்வெண்களில் அலைப்பேசிகள் இயங்குமாறு வடிவமைப்பார்கள், இதனை Band  என்பார்கள்,ஒரு  நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் "Band overlap " ஆகாதவாறு அலைக்கற்றை பேண்ட்கள் தேர்வு செய்யப்படும்.

 ஆரம்பக்கட்ட அலைப்பேசிகள் ஒரே ஒரு அதிவெண் வீச்சில் செயல்பட்டது , அதனை Mono band என்றார்கள், பின்னர் Dual Band, Try Band கைப்பேசிகள் உருவாயிற்று , இப்போழுது அனைத்து கைப்பேசிகளும் Quatra band  வசதியுடன் உருவாக்கப்படுகிறது.

ஏன் எனில் உலகில் உள்ள பல நாடுகள் அனைத்து பேண்ட்களிலும் அலைப்பேசி சேவையை இயக்குவதில்லை, இரண்டு அல்லது மூன்று பேண்டுகளில் இயங்குவார்கள், எனவே கைப்பேசிகளை நான்கு பேண்ட்களில் தயாரித்தால் ஏதேனும் ஒரு நாட்டில் இயங்கும் பேண்டுடன் ஒத்து இயங்கிவிடும், எனவே ஒவ்வொரு நாட்டுக்கும் தனியாக கைப்பேசிகள் தயாரிக்க வேண்டியதில்லை.

முன்னர் எல்லாம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கைப்பேசிகள், ஐரோப்பாவில் இயங்காத நிலை எல்லாம் இருந்தது. காரணம் இது போன்ற மாறு பட்ட பேண்ட்களில் இயங்கியதே.

பொதுவாக 2ஜீ  800, 900 பேண்ட்களிலும் , 1800,1900 பேண்ட்களில்  3 ஜீக்கும் பயன்ப்படுத்தப்படுகிறது, 2100,2200 ஆகிய பேண்ட்கள் இணைய பயன்ப்பாட்டிற்கு பயன்ப்படுகிறது. இணையம்,3ஜீ ஆகியவற்றுக்கு பயன்ப்படும் பேண்ட்கள் நாட்டைப்பொறுத்து மாறி அமையும்.

இப்போதுள்ள கைப்பேசியில் குறிப்பிட்ட பேண்ட்களை எல்லாம் நாம் தேர்வு செய்யவேண்டியதில்லை தானே தேர்வு செய்துகொள்ளும், மேலும் குறிப்பிட்ட அலைப்பேசி சேவையின் அதிர்வெண்ணை தேர்ந்தெடுக்க ,SIM Card (Subscribers Information Module)ல் உள்ள குறியீடு(code) பயன்ப்படுகிறது, இதன் மூலம் நமது கைப்பேசியின் அதிர்வெண் டியூன் செய்யப்படும்.

இதனை  வழக்கமாக ஒரு வானொலியில் குறைந்த அலைவரிசை,மத்திய அலைவரிசை,பண்பலை, என தேடி நாம் வைப்பது போல ,ஆனால் கைப்பேசியில் அனைத்தும் தானாக செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

872-960 MHz, 1710-1875 MHz

மேற்கண்ட இரண்டு அலைக்கற்றை அகலத்தில் , 900,1800 வரிசையில் 2ஜீ க்கும், 2100 வரிசையில் 3 ஜீக்கும் இந்தியாவில் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டு செயல்படுகிறது.

உலக அளவில் பயன்ப்படுத்தப்படும் அலைக்கற்றை அகல வரிசைகள் பட்டியலை கீழ்கண்ட சுட்டியில் காணலாம்.

http://www.worldtimezone.com/gsm.html

கி.பி 1994 இல் இந்தியாவில் முதன் முறையாக அலைப்பேசி உரிமங்கள் வழங்கப்பட்ட போது ,ஒவ்வொரு அலைப்பேசி நிறுவனத்திற்கும் GSM வகைக்கு 10 மெ.ஹெர்ட்ஸ் , CDMA  வகைக்கு 5 மெ.ஹெர்ட்ஸ் என அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது .

பொதுவாக  ஒவ்வொரு அலைப்பேசி நிறுவனமும் செயல்பட GSM இல் 4.5 மெ.ஹெர்ட்ஸ் உம், CDMA  வில் 2.5 மெ.ஹெர்ட்ஸ் அலைக்கற்றையே போதுமானது ,அப்போது அதிக போட்டியில்லாத நிலை எனவே கணக்கு பார்க்காமல் தேவையை விட இருமடங்கு அலைக்கற்றையை மலிவாக கொடுத்தார்கள்.எனவே அனைத்து நிறுவனங்களிடமும் உபரி அலைக்கற்றை இருந்தது, அதனையும் அவர்கள் வேறு வகையில் பயன்ப்படுத்தி வந்தனர், , இத்தனை நாளும் அவ்வாறே இருந்தது, இந்தாண்டு அக்டோபர் மாதம் புதிய 2ஜீ ஏலத்திற்கு முன்பாக இம்முறையில் ஒரு மாற்றத்தினை தொலைத்தொடர்பு துறை அறிவித்தது, இம்மாற்றமும் ஏலம் சரியாக போகாதற்கு ஒரு காரணம் ஆக்கும், என்ன மாற்றம், அதன் விளைவுகள் என்ன? அனைத்தும் பின்வரும் பகுதியில் அலசலாம்.

THE CELL:




இப்பொழுது அலைக்கற்றை உரிமம் இருக்கிறது , நிறுவனம் துவங்கியாகிவிட்டது, வாடிக்கையாளர் ஒரு அலைப்பேசியை வாங்கி ஒரு சிம் கார்டினையும் போட்டுவிட்டார், இப்போது எப்படி அலைப்பேசி சேவையை பயன்ப்படுத்தி அழைப்புகளை ஏற்படுத்துவார்?

அலைப்பேசி என்பது ஒரு கம்பியில்லா  Full duplex தொலைதொடர்பு கருவி ஆகும். அலைப்பேசி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டால் மட்டுமே இன்னொரு அலைப்பேசியை அழைக்க முடியும், ஆனால் அனைத்து இடத்திலும் ஒரு அலைப்பேசி நிறுவனம் செயல்பட முடியாது எனவே அலைப்பேசி நிறுவனம் -அலைப்பேசியுடன் தொடர்பை உண்டாக்க ஒரு இடை நிலை அமைப்பு தேவை ,அதுவே அலைப்பேசி கோபுரம்(Base transciver -BTS).

நாடு முழுக்க அலைப்பேசி பயனாளர்கள் இருப்பார்கள் ,அங்கு எல்லாம் ஒரு அலைப்பேசி கோபுரம் அமைத்தால் ஏகப்பட்ட செலவு ஆகும், எனவே எங்கு அதிக பயனாளர்கள் இருக்கிறார்களோ அங்கு மட்டும் அமைத்தால் போதும், அதற்கும் எத்தனைக்கோபுரம் அமைப்பது என கேள்வி எழும், இங்கு தான் ஜி.எஸ்.எம் அலைப்பேசியின் வீச்சு தூரம் பயன்ப்படுகிறது.

திறந்த தடங்கல் அற்ற வெளியில் 2ஜீ அலைவரிசை 35 கி.மீ வரையில் பரவும், ஆனால் 10 கி.மீக்கு அப்பால் மெல்ல வலுவிழந்து , தொடர்பு நிலையாக இருக்காது, எனவே 10 கி.மீ சுற்றளவுக்கு ஒரு கோபுரம் என அமைப்பார்கள், மேலும் கட்டிடங்கள்,மரங்கள் ஆகியவை அலைவரிசையை கிரகித்து வலுவிழக்க செய்யும் என்பதால் நகரப்பகுதியில் 5 கி.மீ சுற்றளவுக்கு ஒரு கோபுரம் அமைக்கலாம்.

ஒவ்வொரு கோபுரத்திலும் 120 டிகிரி கோணத்தில் மூன்று அலைபரப்பி வட்டுகள்(Antenna) வைக்கப்படும், இதனால் கோபுரத்தில் இருந்து சுற்றிலும் பரவும் அலைவரிசை அறுங்கோண வடிவில் பரவும் எனக்கண்டுப்பிடித்துள்ளார்கள், இப்படி ஒரு அலைப்பேசிக்கோபுரத்தினை சுற்றி உருவாகும் அறுங்கோண அலைபரப்பு பகுதியை செல் எனப்பெயரிட்டார்கள்.ஒரு செல் அமைப்பு இன்னொரு செல் அமைப்புடன் ஒன்றின் மீது ஒன்றாக படியாமல் திட்டமிட்டு அலைப்பேசி வலையமைப்பை அமைப்பார்கள்.

ஒரு செல் பகுதியில் இருக்கும் அனைத்து அலைப்பேசி பயனார்களும் அச்செல்லின் மையத்தில் உள்ள  குறிப்பிட்ட கோபுரத்துடன் இணைப்பில் இருந்து  மற்ர அலைப்பேசிகளுடன் தொடர்பினை உருவாக்கிக்கொள்ள முடியும்,இது போல அறுங்கோன செல்கள் , கோபுரங்கள் என தேவைக்கு ஏற்ப ஒரு அலைப்பேசி வலையமைப்பில் உருவாக்கப்படும். எனவே தான் அலைப்பேசியை செல் போன் என அழைக்கிறார்கள்.

அழைப்பு செயல்படும் விதம்:

பல செல்கள் ,அவற்றில் பல கோபுரங்கள் என அமைத்து ,அக்கோபுரங்களை சேட்டலைட், அகலப்பட்டை வடம் / கண்ணாடி இழை வடம் என இரு முறையிலும், அலைப்பேசி நிறுவனத்ததின் மையக்கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட வேண்டும்.

பரந்த நிலப்பரப்பில் எண்ணற்ற அலைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொன்றையும் நேரடியாக மையக்கட்டுப்பாட்டு (Main Station Controller-MSC)அறையுடன் இணைப்பது கடினம், செலவு பிடிக்கும் எனவே அதற்கு மாற்றாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள கோபுரங்களை ஒன்றிணைத்து ஒரு கட்டுப்பாட்டு மையம் உருவாக்குவார்கள், இதனை  தரைகட்டுப்பாட்டு மையம்(Base station controller-BSC) என்பார்கள்,இது போன்று பல சிறு மையங்கள் உருவாக்கப்பட்டு  , பின்னர் மத்திய மையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.



இம்முழு வலையமைப்பும் ஒரு அலைப்பேசி நிறுவனத்தின் வலைக்குள் தகவல் பரிமாறிக்கொள்ள உதவும். இன்னொரு அலைப்பேசி வலையில் உள்ள கைப்பேசியை அழைக்க ,அதன் மையக்கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்வார்கள் ,இதற்கு பொது தொலைபேசி கட்டுப்பாட்டு அறை (PSTN) இடை இணைப்பாக உதவுகின்றது. இச்சேவையை  BSNL,MTNL  போன்றவை செய்கின்றன.

ஒரு அலைப்பேசி பயனாளர் அழைப்பு ஒன்றை ஏற்படுத்துகிறார், அவரது கைப்பேசியானது ஒரு அழைப்பு கோரிக்கையை(Request) அப்பகுதியில் உள்ள அலைப்பேசி கோபுரத்திற்கு அனுப்பும், அங்கிருந்து தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பப்படும்,

தரைக்கட்டுப்பாட்டு மையம் மற்றும் மையக்கட்டுப்பாட்டு மையம்:
( Base station and Main switching Centre)

ஒரு அலைப்பேசி நிறுவனத்தின் சிம் கார்டை வாங்கி செயலாக்கியவுடன், அவ்வெண் ஆனது மத்தியக்கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள கணினியில் பதியப்படும் , இதனை இல்ல பயனர்ப்பதிவு (Home  location Register)என்பார்கள். இதனை வைத்தே ஒருவரது கணக்கில் உள்ள பணத்திற்கு ஏற்ப பேசும் நேர அளவு, எவ்வளவு நேரம் பேசினார், இன்ன பிற பயனர் தகவல்கள்,கணக்குகள் பராமரிக்கப்படும்.

இந்த எண் தமது அலைப்பேசி எண் தான் என மற்ற தரைக்கட்டுப்பாட்டு மையங்களுக்கும் பகிரப்பட வேண்டும், அப்போது தான் அலைப்பேசி கோபுரங்கள் ஒரு கைப்பேசியின் அலைவீச்சினை பெற்று தொடர்பு உண்டாக்கும், எனவே பயனர் விவரம் தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள கணினியிலும் பதியப்ப்படும், இவ்விவரங்களை,விருந்தினர் பயனர்ப்பதிவு (Visitor Location Register)என்பார்கள். ஏன் எனில் ஒரு பயனாளர் தொடர்ந்து ஒரே அலைப்பேசிக்கோபுர எல்லையில் இருக்கமாட்டார்கள், அடிக்கடி இடம் மாறுவார்கள் அல்லவா .

பெயர் தான் மாறுகிறதே ஒழிய விவரங்கள் ஒன்றே, மேலும் இப்படி மாறுப்பட்ட பெயர் வைப்பது ரோமிங் பயன்ப்பாட்டின் போது உதவும், வேறு அலைப்பேசி நிறுவனத்தின் எண் எனில் விருந்தினர் பயனர் பதிவில் மட்டும் பதியப்படும், மத்தியக்கட்டுப்பாட்டு மைய கணினியில் இல்லப்பயனர் என பதியமாட்டார்கள்,இதன் மூலம் மாறுப்பட்ட அலைப்பேசி சேவைகளை அடையாளங்காண முடியும். அதற்கேற்ப கட்டணம் வசூலிக்க முடியும், அவ்வாறு அடையாளப்படுத்தாமல் இணைப்பினை உருவாக்கினால் யாருடைய கணக்கில் இருந்து பணம் எடுப்பது என்ற குழப்பம் வரும், அனைத்து கைப்பேசி சேவையும்,அனைத்து வலையமைப்பிலும்  இயங்கிவிடாதா?

இப்பொழுது அலைப்பேசியில் இருந்து அழைப்பு கோரிக்கை(Request)  கோபுரம் மூலம் தரைக்கட்டுப்பாட்டு கணினிக்கு வந்துவிட்டது, அழைப்பு விடுத்த எண் VLR பட்டியலில் இருக்கிறதா என கணினி சரிப்பார்க்கும், இருந்தால் அழைப்பை செயல்படுத்தும், இப்பொழுது அழைக்கப்பட்ட எண் அதே சேவையின் எண்ணா  என பார்க்கும், அதே சேவை எனில் மேற்கொண்டு அவ்வெண் தனது கட்டுப்பாட்டில் உள்ள கோபுரங்களின் எல்லையில் இருக்கிறதா என பார்க்கும், அப்படி இருந்தால் தரைக்கட்டுப்பாட்டு மையமே இரண்டு அலைப்பேசிகளுக்கும் இணைப்பை ஏற்படுத்தி பேச வழி செய்யும்.

வேறு நிறுவன எண் அல்லது தனது எல்லைக்கு அப்பால் உள்ள எண் என அறிந்தவுடன், அழைப்பை மையக்கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும், அங்கும் எண் யாரை சேர்ந்தது என சோதிக்கும் ,பின்னர்,அதே சேவை எண் எனில் அழைக்கப்பட்ட எண் எந்த தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் உள்ள எந்த கோபுரத்தின் எல்லையில் இருக்கிறது என தேடி அங்கு அழைப்பை அனுப்பும்.

வேற்று நிறுவன எண் எனில் அந்நிறுவன மையக்கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும், அங்கிருந்து தரைக்கட்டுப்பாட்டு மையம் ,கோபுரம் என அழைப்பு செல்லும், டிங்க்டாங்க் என அழைப்பு மணி அடித்ததும் பச்சை பித்தானை அழுத்தி உரையாடலை துவக்கலாம்.

தரைக்கட்டுப்பாட்டு மையம் தேடும், மையக்கட்டுப்பாட்டு மையம் தேடும் என்று எளிதாக புரிய சொல்லி இருக்கிறேன், ஆனால் அப்படி எண்ணை தேடிக்கொண்டிருக்காது, தரைக்கட்டுப்பாடு மையம் தனக்கு வந்த அழைப்பு கோரிக்கையை அதன் கீழ் உள்ள அத்தனை கோபுரங்களுக்கும் Broadcast  செய்யும், அங்கு அழைக்கப்பட்டவர் இருந்தால் அழைப்பு ஏற்கப்படும், இல்லாத நிலையில் ,இல்லை என திரும்பி வரும் ,உடனே அடுத்தக்கட்டமாக மையக்கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும், அங்கும் அனைத்து தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கும் ஒரே நேரத்தில் அழைப்பு கோரிக்கை Broadcast  செய்யப்படும்,எங்கு அழைக்கப்பட்டவர் இருக்கிறாரோ அங்கு அழைப்பு ஏற்கப்படும் ,மற்றவை திரும்பிவிடும், இது ஒரு Request token Pass  அமைப்பு ஆகும், அனைத்து அழைப்புகளும் என்கிரைப்ட் செய்யப்பட்ட சிறிய பொதிகளாகவே (encrypted packs)அனுப்பப்படும், அதற்கு முன்னர் இந்த ரெக்வஸ்ட் டோக்கன் பொதி அனுப்பட்டு இசைவு தெரிவிக்கப்பட்ட பின்னரே அழைக்கப்பட்டவரின் அலைப்பேசியில் மணி அடிக்கும் . இதெல்லாம் நடக்க அதிக நேரம் ஆகாது, சில மைக்ரோ வினாடிகளில் முடிந்துவிடும்.

அலைப்பேசியில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும் முன்னர் சில நொடிகள் அமைதியாக இருக்கிறதே அந்நேரமே இணைப்பினை உருவாக்க ஆகும் நேரம், உள்ளூர் அழைப்பு , ஒரே நிறுவனம் எனில் உடனே இணைக்கப்படும், நீண்ட தூரம் எனில் சிறிது தாமதம் ஆவதும் உண்டு.

ஒவ்வொரு அலைப்பேசி நிறுவனத்தின் குறுகிய அலைக்கற்றை பட்டையிலே (4.5 M.HZ spectrum)பல பயனாளர்கள் பேச முடியும், அனைத்து தகவல் பொதிகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அடுத்தடுத்து அனுப்பப்படுவதால் , அலைவரிசை மீண்டும் பயன்ப்படுத்த முடியும்.

4.5 மெ.ஹெர்ட்ஸ் என்பது வலையமைப்பு முழுக்க இருக்கும் அலைவரிசை அகலம், இதற்குள் சுமார் 5 லட்சம் பயனாளர்கள் தகவல் பரிமாற முடியும்,ஆனால் அனைத்து பயனாளர்களும் ஒரே இடத்தில் இருப்பதில்லை என்பதால் , ஒரு குறிப்பிட்ட கோபுர எல்லையில் எப்போதும் அதிக பட்ச எல்லைக்குள் பயனாளர்கள் இருந்தாலே போதும்.அதனை தாண்டும் போது தான் இணைப்பில் சிக்கல் உண்டாகும், மேலும் கூடுதல் எண்ணிக்கையில் பயனாளர்கள் இருந்தாலும் அனைவரும் ஒரே நேரத்தில் அலைப்பேசியை பயன்ப்படுத்துவதில்லை, எனவே Network congestion பிரச்சினை அதிகம் உருவாகாது.


ஒரே நிறுவனத்தின் எண்ணை அழைக்க மலிவாக கட்டணம் நிர்ணயிக்க காரணம், அழைப்பினை அவர்கள் மையக்கட்டுப்பாட்டு அறைமூலமே வழங்குவதே, மாற்று நிறுவனம் எனில் அந்நிறுவன மையக்கட்டுப்பாட்டு அறையை அணுக , ஒரு இடை நிலை ஊடகம் தேவை , பெரும்பாலும் கம்பிவட /கண்ணாடி இழை இணைப்பினைப்பயன்ப்படுத்துவார்கள், இது பி.எஸ்.என்.எல் போன்றவற்றின் கம்பிவட இணைப்பாகும் , இதற்கு ஆண்டுக்கட்டணம் செலுத்த வேண்டும், இதனை network migration charges/network interconnecting charges  என்பார்கள்.

கம்பிவடத்தின் இரு முனையில் உள்ள நிறுவனங்களும் கட்டணம் செலுத்துவதால், உள் அழைப்பினை பெற்ற மாற்று நிறுவனத்தின் எண்ணை அழைக்கும் போது அவ்வழைப்பினை செயல்படுத்த மாற்று நிறுவனம் கட்டணம் கேட்கும், இதை எல்லாம் சேர்த்து மொத்தமாக பேசியவரின் கணக்கில் கழிக்கப்ப்டும்.  ரோமிங் அழைப்பின் போது ,ஒரு நிறுவன அலைப்பேசி முழுக்க இன்னொரு நிறுவன அலைப்பேசி தொடர்பு எல்லையில் இருப்பதால் , அழைப்புக்கட்டணம் அதிகம் ஆகும், அதனை அழைத்தவரிடம் வசுலீக்காமல் அழைக்கப்பட்டவரிடம்  ரோமிங் அழைப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது செலவை இருமுனையிலும் பரவலாக்குகிறார்கள்.

அப்படி செய்யவில்லை எனில் ஏதேனும் ஒரு நிறுவனம் அனைத்து அழைப்பும் ஒரு நொடிக்கு ஒரு பைசா என சொன்னால், அந்நிறுவனத்தின் மூலம் அதிக அழைப்புகள் இன்னொரு நிறுவனத்திற்கு போகும், ஆனால் அந்நிறுவனத்தின் பயனாளர்கள் அழைப்பு விடுக்காமல் சும்மா இருக்க ஆரம்பித்துவிட்டால் , only incoming ,No out going calls  என்ற நிலையில் வருமானம் பாதிக்கப்பட்டுவிடும்.

இவ்வாறான ஒரு பக்கம் இருந்தே அதிக பயன்ப்பாட்டினை அதிகரித்ததால்  சமீபத்தில் மாறுபட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைக்கு உதாரணமாக இச்சம்பவத்தினை சொல்லலாம்.

ஏர்செல் குறுஞ்செய்தி சேவை மூலம் ஏர்டெல்,வோடாபோனுக்கு அதிகம் செய்திகள் அனுப்பப்படுகிறது ஆனால் அதே அளவுக்கு ஏர்டெல்,வோடா போனில் இருந்து ஏர்செல்லுக்கு குறுஞ்செய்திகள் போவதில்லை இதனால் அவர்களுக்கு  வருமான  இழப்பு  என்பதால் ஏர்செல் ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் 10 பைசா தரவேண்டும் ,இல்லை எனில் செய்தியை அனுப்பமாட்டோம் என தடை செய்துவிட்டார்கள்.

அலைப்பேசிக்கோபுரங்கள்(Cell Phone Towers)



ஆரம்பத்தில் அனைத்து அலைப்பேசி நிறுவனங்களும் தங்களுக்கான கோபுரம், தரைக்கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றை நாடு முழுவதும் சொந்த செலவில் அமைத்து இயங்கினார்கள்.

2008 இல் ஒரு அலைப்பேசி கோபுரம்,அதன் மின்னணு உபகரணங்கள் என அமைக்க 2 கோடி செலவானது, இருந்த போதும் பல கோபுரங்கள் அமைத்தே செயல்பட்டார்கள், 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒரு கோபுரம் என அமைக்க வேண்டும், இதே போல எத்தனை அமைக்க முடியும்? இவ்வளவு செலவு செய்வதற்கு ஏற்ப அங்கு வாடிக்கையாளர்கள் இருக்க வேண்டும், எனவே அதிக வாடிக்கையாளர் இருக்கும் பகுதிகளில் தான் கோபுரங்கள் அமைக்கப்பட்டது, எனவே கிராம புரங்களில் சிக்னல் கிடைக்காமல் கூப்பாடு தான் போட வேண்டிய நிலை.

மேலும் அதிக வாடிக்கையாளர்கள் இருக்கும் பகுதிகளில் ஒவ்வொரு நிறுவனமும் போட்டிப்போட்டுக்கொண்டு கோபுரங்களை அமைத்தன , 5 கி.மீ சுற்றளவுக்கு ஒரே கோபுரத்தின் மூலம் கவரேஜ் வழங்க முடியும், ஆனால் ஆளுக்கு ஒரு கோபுரம் அமைத்துக்கொண்டாலும் ஒரு கோபுரத்தின் கையாளும் திறனுக்கு தேவையான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் பெரும்பாலான  இடங்களில் இருப்பதே இல்லை.

சொற்ப வாடிக்கையாளர்களுக்கு என கோபுரம் அமைத்து இயக்குவதால் அதிக செலவு ஆவது நிறுவனத்தின் லாப விகிதத்தினை குறைக்கும். எனவே ஒரே கோபுரத்தில் பல நிறுவனங்கள் தங்கள் கருவிகளை நிறுவிக்கொள்ளலாம் என கலந்து பேசி முடிவுக்கு வந்தார்கள்.

ஒரு கோபுரத்தில் ஆறு அலைப்பேசி நிறுவனக்கருவிகளை பொருத்த முடியும். இந்நிலையில் தான் அலைப்பேசி கோபுர கட்டமைப்பு வசதி வழங்கும் நிறுவனம்(Telecom Tower Business) என்ற ஒரு புதிய வியாபாரம் பிறந்தது. இவ்வியாபாரம் ஏற்கனவே மேலை நாடுகளில் உண்டு, ஒரு நிறுவனம் அலைப்பேசி கோபுரங்களை சொந்த செலவில் நிறுவும் ,தேவையானவர்கள்  வாடகைக்கொடுத்துவிட்டு பயன்ப்படுத்திக்கொள்ளலாம்.

இப்படிப்பட்ட நிறுவனங்கள் புதிதாக கோபுரங்களை உருவாக்கியதோடு ,ஏற்கனவே கோபுரங்களை வைத்திருந்த அலைப்பேசி நிறுவனங்களின் கோபுரங்களையும் நல்ல விலைக்கு வாங்கிக்கொண்டன.

கையில் இருக்கும் கோபுரங்களை ஏன் விற்க வேண்டும்?

காரணம் ஒவ்வொரு கோபுரங்களுக்கும் இடத்திற்கு வாடகை, தடையில்லா மின்சாரம் வழங்க ஜெனெரேட்டர், பராமரிக்க இருவர் , உபகரண செலவு, கட்டுமான செலவு என அதிகம் முதலீடு தேவை, ஆனால் ஒரே ஒரு நிறுவனம், வாடிக்கையாளர்களும் குறைவு எனும் போது வருவாயை விட செலவு அதிகம் ஆகிவிடும். இதனாலேயே  ஒரு கட்டத்திற்கு மேல் புதிதாக கோபுரங்களை அமைக்க முடியாமல் அலைப்பேசி நிறுவனங்கள் தடுமாறின.

மேலும் 2008 இல் ஒரு கோபுரம் அமைக்க 2 கோடி செலவானது, இப்போது 50 லட்சமே போதும், எனவே நல்ல விலை கிடைத்ததும் விற்றுவிட்டார்கள், மேலும் பலரும் ஒரே கோபுரத்தினை பயன்ப்படுத்துவதால் வாடகையும் குறைவாக இருக்கிறது,எனவே 50 லட்சம் கூட செலவழிக்காமல் தங்கள் அலைப்பேசி வலையமைப்பை விரிவாக்க முடிகிறது.

தரையில் அமைக்கப்பட்ட அலைப்பேசி கோபுரத்திற்கு வாடகை மாதம் 30,000 ரூ, கூரை மீது அமைக்கப்பட்ட கோபுரத்திற்கு 21,000 ஆகும்.

ஐடியா, ஏர்டெல், வோடா போன் ஆகியவை ஒன்றாக சேர்ந்து அலைப்பேசி கோபுரங்கள் அமைத்து பகிர்ந்து கொள்ளவும் செய்கின்றன. இப்பொழுது நாட்டில் BSNL  தவிர அனைவரும் வாடகை கோபுரங்களையே பயன்ப்படுத்துகிறார்கள்.அவர்களும் விரைவில் வாடகை முறைக்கு மாறிவிட இருக்கிறார்கள்.

இவ்வாறு கோபுரங்களின் கட்டமைப்பினை மட்டும் பயன்ப்படுத்திக்கொள்வதை Passive sharing  என்பார்கள், அலைக்கற்றை , தரைக்கட்டுப்பாட்டு கணினி ஆகியவற்றையும் பகிர்ந்தால் Active sharing  என்பார்கள்.

அமெரிக்க போன்ற நாடுகளில் இடத்திற்கு ஏற்ப முழு பகிர்தல் உண்டு,AT&T  பெரு நகரங்களில் மட்டும் நேரடியாக கவனம் செலுத்திவிட்டு , சிறு நகரங்களுக்கு அலைக்கற்றை, தரைக்கட்டுப்பாட்டு கருவி எல்லாம் வாடகைக்கு விட்டு விடும், ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட நிலையான கட்டணம் வசூலிப்பார்கள்.

வாடகைக்கு எடுத்தவர்கள் ஏபிசி செல் என பெயர் கூட வைத்துக்கொள்ளலாம், அந்த பகுதிக்கு அவர்கள் ஒரு அலைப்பேசி நிறுவனம்.

கிட்டத்தட்ட இந்நிலை இப்பொழுது இந்திய தொலைத்தொடர்பு சந்தையிலும் வர இருக்கிறது, எப்படி என்பதனை முழுவதும் படிக்கும் போது அறியலாம்.

இந்தியாவில் உள்ள அலைப்பேசி கோபுர நிறுவனங்கள்.

Indus Towers a joint venture of Vodafone, Bharti Airtel and IDEA is formed.

Indus Towers = Ortus Infratel Holding (Vodafone – 42%) + Bhart Airtel (42%) + IDEA (16%)

American Tower Corp has acquired Xcel Telecom towers for 700 crores.

Quippo Telecom has acquired Spice Telecom’s tower business and Tata Teleservices WITIL is merged into it.


மேற்கண்ட விளக்கங்களுக்கும்  2ஜீ ஏலம் குறைவாக போனதற்கும் என்ன தொடர்பு என நினைக்கலாம், மைய கருத்தினை சரியாக புரிந்து கொண்டவர்கள் எளிதாக ஊகிக்க முடியும்,அல்லது தொடர்ந்து படியுங்கள்.

2ஜீ ஏலம் குறைவான மதிப்புக்கு விலைப்போனது ஏன்?

அலைப்பேசி நிறுவனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை ஓரளவுக்கு புரிந்து கொண்டு இருப்பீர்கள், மேற்கண்ட விளக்கங்கள் இம்முறை ஏன் ஏலம் குறைவாக போனது என்பதை புரிந்துக்கொள்ள உதவும்.

# ஒரு அலைப்பேசி நிறுவனம் இயங்க 4.5 மெ.ஹெர்ட்ஸ் போதும் எனப்பார்த்தோம்,உபரியாக இருக்கும் அலைக்கற்றை குறித்து சமீபத்தில் அரசு ஒரு மாற்றம் செய்தது அல்லவா, அது என்னவெனில் உபரி அலைக்கற்றைக்கு இனிமேல் ஒரு முறை உரிமக்கட்டணம் (one time license fee)என ஒன்றை செலுத்த வேண்டும் என்பதே.

அதாவது ஆரம்பத்தில் 10 மெ.ஹெர்ட்ஸுக்கு செலுத்திய பணம் 4.5 M.HZ மட்டுமே, எனவே மீதி இருக்கும் 5.5 M.HZ ஆரம்பத்தில் செலுத்திய கட்டண அடிப்படையில் செலுத்த வேண்டும்.

ஆயிரம் கோடி செலுத்தி இருந்தால் இப்போது அதே அளவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும், இப்படி அறிவித்ததன் மூலம் அரசுக்கு கூடுதலாக 270 பில்லியன் ரூபாய்கள் வருவாய் கிடைத்துள்ளது.

இந்த உத்தரவு அலைப்பேசி நிறுவனங்களுக்கு பெரும் அடியாகும், இதனை சமாளிக்கவே தற்போதைய 2ஜீ உரிமத்தினை யாரும் வாங்கவில்லை அப்படி வாங்கவில்லை என்றால் எப்படி அலைப்பேசி நிறுவனங்களை செயல்படுத்துவார்கள் என கேட்கலாம்?

இங்கு தான் அலைப்பேசி கோபுர வாடகை முறை ,கோபுர பகிர்வு எனும் Active and passive infrastructure sharing  முறை உதவப்போகிறது.

முன்னர் தனித்தனி கோபுரம் ,தனித்தனி தரைக்கட்டுப்பாட்டு மையம் என்பதால் , இரண்டு அலைப்பேசி நிறுவனங்களுக்கிடையே பயனாளர் கணக்கினை பகிர்ந்து கொள்வதில் சிரமமும், பேசியதற்கான கட்டணத்தினை பிரிப்பதிலும் குழப்பம் வரும் எனவே தனி தனியே கணக்கினை பராமறித்தார்கள்.

இப்பொழுது கோபுரத்தில் உள்ள ஆண்டெனா மட்டுமே தனி, மற்ற உபகரணங்கள் அனைத்தும் அலைப்பேசி கோபுர நிறுவனத்திற்கு சொந்தமானது, இப்பொழுதும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் என தனி கணினி,டிரான்ஸ்மீட்டர் என உண்டு.ஆனால் உரிமை மற்றும் நிர்வாகம் கோபுர நிறுவனம், எனவே அனைத்து அலைப்பேசி நிறுவனங்களும் , கணினி முதல் அலைக்கற்றை வரை பகிர்ந்து கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டார்கள்.

இதன் மூலம் முதலீடு மற்றும் செலவு வெகுவாக  குறையும், புதிதாக அலைக்கற்றை உரிமமும் பெறத்தேவையில்லை.

அதாவது தமிழ்நாட்டினை மையமாக வைத்து செயல்படும் நிறுவனம் ,மும்பையினை மையமாக வைத்து செயல்படும் நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் அதன் அலைக்கற்றையில் கொஞ்சம் இடம் கொடுக்கும், பதிலுக்கு மும்பையில் தமிழ்நாட்டு நிறுவனத்திற்கு அலைக்கற்றையில் இடம் கிடைக்கும்.

மும்பை நிறுவனம் தமிழ்நாட்டில் உரிமம் பெற தேவையில்லை , ஆனால் அலைக்கற்றையை உள்வாடகையாக அல்லது பகிர்வு முறையில் பெற்றுக்கொள்ளும், அதே போல தமிழ்நாடு நிறுவனமும் மும்பையில் உரிமம் இல்லாமல் இயங்கிக்கொள்ளும். இது கிட்டத்தட்ட  National Roming on infrastructure sharing அடிப்படையில் எனலாம்.

இதனால் கிடைக்கும் அனுகூலம்  என்னவெனில்  ,புதிய 2ஜீ அலைக்கற்றை ஏலத்தின் விலை உச்சநீதிமன்ற வழிக்காட்டுதல் படி அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதாவது அடிப்படை விலையே 14,000 கோடி ரூபாய் எனவே ஏலம் கேட்டால் அதனை விட அதிகம் கேட்க வேண்டும்.இதனை தவிர்த்தாலும் தொடர்ந்து அலைப்பேசி சேவையை வழங்க முடியும் என்பதே

 உபரியாக இதுநாள் வரை இலவசமாக வைத்திருந்த 5.5 M.HZ பழைய விலையின் அடிப்படையில் அக்டோபர் 13 இல் இருந்து உரிமக்கட்டணம் செலுத்த சொல்லிவிட்டார்கள்.கட்டவில்லை எனில் திரும்ப ஒப்படைக்க வேண்டும், அதனை மீண்டும் அரசு ஏலம் விடும்.

ஆனால் எந்த நிறுவனமும் திரும்ப ஒப்படைக்கவில்லை, கூடுதல் கட்டணத்தினை செலுத்த தயாராகிவிட்டார்கள் ஏன் எனில் பழைய விலை ரொம்ப குறைவு ,ஆனால் அதனை வைத்தே இன்னொரு அலைப்பேசி நிறுவனமே இயக்க முடியும் எனும் பொழுது ஏன் அதிக விலையில் அலைக்கற்றையை புதிதாக வாங்க வேண்டும், எனவே தான் இப்போதைய அலைப்பேசி ஏலத்தினை புறக்கணித்துவிட்டார்கள்.

இத்தனை நாளாக நிறைய அலைக்கற்றை உபரியாக வைத்திருந்ததை ,வைத்து தாரளமாக இயங்கிவந்தார்கள்,எங்கு அதிக வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களோ அங்கு மட்டும்  network congestion  குறைக்க கூடுதல் அலைக்கற்றைக்கும் ஒரு மையக்கட்டுப்பாட்டு அறை உருவாக்கி கொண்டார்கள்.

நாம் பயன் படுத்தும் அலைப்பேசி எண்ணின் முதல் இரண்டு இலக்கம் ஒரு நிறுவனத்தின் மையக்கட்டுப்பாட்டு அறையை (Mobile Services Switching Centre-MSC)குறிப்பது, ஒரே நிறுவனத்திற்கே இரண்டு தனிப்பட்ட முதல் இலக்கம் இருப்பதை பார்த்திருப்பீர்கள் ,அது அதே நிறுவனத்தின் இரண்டு வேறுபட்ட அலைக்கற்றைகளுக்கான மையக்கட்டுப்பாட்டு எண் ஆகும்.எத்தனை உரிமங்கள் இருக்கிறதோ அத்தனை எண் வரிசை ,மையக்கட்டுப்பாட்டு அறைக்கு என வழங்கப்படும்.

ஒவ்வொரு தொலை தொடர்பு வட்டத்திலும் ஒரு தொலைத்தொடர்பு உரிமத்திற்கும் ஒரு மையக்கட்டுப்பாட்டு அறை, அதில் இருக்கும் உபரி அலைக்கற்றையை தேவைப்படும் இடத்தில் இரண்டாக பிரித்து இரண்டு மையக்கட்டுப்பாட்டு அறை(Mobile Services Switching Centre-MSC) அமைத்து பயன்ப்படுத்திக்கொள்ள முடியும்.

இலவசமாக இருந்த நிலையில் தேவைப்பட்டால் பயன்ப்படுத்தினார்கள், விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இனிமேல் கட்டாயம் பயன்ப்படுத்த வேண்டும் என்பதால் ,உபரி அலைக்கற்றையை இன்னொரு நிறுவனத்துடன் பகிர்ந்து வருமானம் பெறலாம் என முடிவு செய்துள்ளார்கள்.

ஒவ்வொருவரும் போட்டியாளர்களுக்கு இடம் கொடுக்காமல் இந்த பகுதிக்கு நாம் மட்டுமே முழுக்கட்டுப்பாட்டினை வைத்திருக்க வேண்டும் என்று முன்னர் போட்டிப்போட்டவர்கள், அரசின் விலையேற்றத்தினை சமாளிக்க ஒன்று கூடி ஒரு குழுமம் ஆக செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள்.இதன் மூலம் புதிய 2ஜீ ஏலத்தில் அரசு எதிர்ப்பார்த்த அளவுக்கு வருமானம் வருவதையும் தடுத்துவிட்டார்கள் எனலாம்.

ஏற்கனவே இவர்கள் The Cellular Operators Association of India(.coai ) என்ற பெயரில் குழுமம் ஆக தான் செயல்ப்பட்டு வருகிறார்கள் ,ஆனாலும் போட்டி இருந்தது , இப்போது போட்டியை குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்கள், இக்குழுமம் மூலம் தான் Passive infrastructure sharing  திட்டம் இயங்கிவந்தது,இனிமேல் Active Sharing  நடக்கும், ஏற்கனவே அதனை தான் இக்குழும உறுப்பினர்களும் வலியுறுத்தி வந்தார்கள், இதற்கென "PROJECT MOST" (Mobile Operators Shared Towers))என்ற பெயரில் ஒரு திட்டமும் செயல்படுகிறது.

http://www.coai.in/projectDetails.php?id=2

3G FACTOR:


2008 இல் 3ஜீ என்பதே இல்லை , எனவே அனைவரும் 2ஜீக்கு போட்டியிட்டார்கள், மேலும் அக்கால கட்டமே 2ஜீ தொழில்நுட்ப பயன்ப்பாட்டின் உச்ச கட்டம் எனலாம்.

2ஜீ வந்த போது மக்களுக்கு அலைப்பேசி பயன்ப்பாட்டினை பற்றிய அறிமுகமே இல்லை ,எனவே பயன்ப்படுத்த ஆட்களே இல்லை, அப்பொழுது அதிக விலைக்கு அலைக்கற்றையை விற்றால் ஒருவரும் வாங்க மாட்டார்கள்.

உதாரணமாக ஒரு கதாநாயகன் அறிமுகம் ஆகிறார் அப்பொழுது அவருக்கு என்ன சம்பளம் கொடுத்திருப்பார்கள், அனேகமாக சோத்தை போட்டு வேலை வாங்கியிருப்பார்கள், ஆனால் இரண்டு படம் ஹிட் கொடுத்தப்பிறகும் அதே போல சோத்துக்கு மட்டும் நடிப்பாரா?

நல்ல சம்பளம் கேட்பார், கொஞ்ச நாளுக்கு உயர்ந்த சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பார், வயசாகி அல்லது நான்கைந்து தோல்வி கொடுத்த பின் மீண்டும் உயர்ந்த சம்பளம் கேட்க முடியுமா? சம்பளத்தை குறைத்து கொள்வார் அல்லவா?

அதே போல தான் 2ஜீ நிலையும் , ஆரம்பத்தில் குறைவான விலை ,ஆனால் நல்ல பயன்ப்பாட்டு விகிதம் அதிகரித்து அனைவரும் வாங்க தயாராக இருக்கும் போது அதற்கேற்ற விலை 2008 இல் நிர்ணயிக்கவில்லை.

இப்பொழுது 3ஜீ அலைக்கற்றை உரிமம் விற்பனையாகி பயன்ப்பாட்டில் இருக்கிறது, அதில் அதிக முதலீடும் செய்துள்ளார்கள்,அதில் இருந்து லாபம் ஈட்ட அதிக வாடிக்கையாளர்களை இழுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.எனவே 3ஜீ யை தான் முன்னெடுத்து செல்ல முயல்வார்கள் ,ஆனால் இப்பொழுது மீண்டும் 2ஜீயை அதிக முதலிட்டில் வாங்கினால் அதில் இருந்து லாபம் ஈட்ட அதிக வாடிக்கையாளர்களை கவர அதனையும் முன்னெடுத்தால் மக்கள் என்ன செய்வார்கள் விலை குறைவாக இருக்கு என 2ஜீ ஐயே தொடர்ந்து பயன்ப்படுத்துவார்கள்.3ஜீ க்கு என புதிதாக வாடிக்கையாளர்கள் பிறந்து வரப்போவதில்லை எனவே தொடர்ந்து 3ஜீ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயராது.

அதிக விலைக்கொடுத்து 2ஜீ என்ற பழைய நுட்பத்தினை வாங்கி அதனை முன்னெடுத்து செல்வதை விட , ஏற்கனவே முதலீடு செய்த 3ஜீ யை முன்னெடுத்து செல்லலாம், கட்டணத்தினை சிறிது குறைத்தால் போதும் மக்கள் 2ஜீ யில் இருந்து 3ஜீக்கு மாறிவிடுவார்கள்.

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர உயர கட்டணம் குறையும் என்பது வியாபார நியதி, எனவே அடுத்த ஆண்டுக்குள் 3ஜீ கட்டணம் தற்போதுள்ள 2ஜீ கட்டணம் அளவுக்கு குறைந்துவிடும், எனவே அப்போது 2ஜீ சேவை பயன்ப்படுத்த ஆட்கள் இருப்பார்களா என்பதே சந்தேகம்.

எனவே இன்னும் குறுகிய காலமே நிலைக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் தொழில்நுட்பத்தில் பெரிய முதலீடு செய்ய வேண்டாம் , Break even அடைய ஆகும் காலம் அதிகம் ஆகும் ,என தற்போதைய 2ஜீ ஏலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

2ஜீ முற்றிலும் வழக்கொழிந்து விடுமா என்றால் ,நுகர்வோர் பார்வையில் ஒரு காலத்தில் 2ஜீ சேவை பயன்ப்பாட்டில் இல்லாமல் போகலாம், ஆனால் அலைப்பேசி நிறுவனங்கள் தொடர்ந்து 2ஜீ அலைக்கற்றையை Back-Up Airwave ஆக பயன்ப்படுத்துவார்கள் ஏன் எனில்,

3ஜீ யின் அலைவரிசையின் அதிகப்பட்ச வீச்சு(coverage) 5 கி.மீ , நகரப்பகுதியில் 1.5 கி.மீ தான் , எனவே 1.5 கி.மீக்கு ஒரு கோபுரம் என அமைத்தால் தான் 3 ஜீ சேவை தங்கு தடையின்றி தொடர முடியும், பயனர் அடர்த்தியுள்ள இடம் எனில் அவ்வாறு நிறைய கோபுரங்கள் வைக்கலாம், ஆனால் கிராமப்புறங்களில் ,மக்கள் குறைவாக வசிக்கும் இடங்களில் எல்லாம் அதிக 3ஜீ கோபுரங்கள் அமைப்பது லாபகரமான ஒன்றல்ல. எனவே அங்கெல்லாம் 2ஜீ கோபுரங்களே செயல்படும், இதன் மூலம் அதிக தொலைவினை கவரேஜ் செய்யலாம்.

இனி வருங்காலங்களில் 2ஜீ அலைக்கற்றை ஒரு உதவி அலைக்கற்றையாக மட்டுமே செயல்படும், ஏற்கனவே பல நாடுகளில் 3ஜீ, 4ஜீ, 5ஜீ என அடுத்தக்கட்ட தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதால் 2ஜீ கைப்பேசிகள் விற்பனை செய்வதையே நிறுத்திவிட்டார்கள்.

வண்ண தொலைக்காட்சி வந்த பின் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சியை ஆரம்பத்தில் கொஞ்ச நாள் வாங்கினார்கள் ,இன்று வாங்கவும் ஆள் இல்லை தயாரிக்கவும் ஆள் இல்லை, அதே நிலை தான் 2ஜீக்கும், மக்களுக்கு இனிமேல் 2ஜீ தேவைப்படாது, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மட்டும் Back-up  அலைக்கற்றையாக சிறிதளவே பயன்படும்.


இப்பொழுது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்  2008 இல் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடக்க வாய்ப்பிருந்ததா இல்லையா ?

----------------
பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,
http://www.indiabandwidth.com/db/article/757

http://www.ofcom.org.uk/static/archive/ra/topics/mpsafety/school-audit/mobilework.htm

http://www.coai.in/technology.php

இந்து, விக்கி, கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!

# பிழை திருத்தம் , இன்னும் சில மாற்றங்கள் செய்யவில்லை ,பின்னர் சரி செய்யப்படும்.
----------------------------

Tuesday, November 13, 2012

துப்பாக்கி (THE PISTOL OR GUN): ஒரு மாற்றுப்பார்வை.



 (ஹி...ஹி மறந்து போய் டிரிக்கரை அமுக்கிடாதிங்க ,சிதறிடும் தலை)

 துப்பாக்கி என்ற சொல்லின் மூலம் பாரசீகம் ஆகும்,முகலாயர்கள் காலத்தில் இந்தியாவில் புழக்கத்திற்கு வந்தது. பல ஹாலிவுட் படங்களிலும் துப்பாக்கிக்கு முக்கிய இடம் உண்டு , குறிப்பாக வெஸ்டர்ன் படங்கள் என சொல்லப்படும் மாட்டு பையன்கள்(Cow boy) படங்களில் துப்பாக்கிக்கு முக்கிய இடம்  உண்டு, எவ்வளவு வேகமாக துப்பாக்கியால் சுடுகிறார்களோ அதற்கேற்ப பெரிய வீரன் என பெயர் பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

மிக பழங்காலத்தில் ஒரு முறை சுடும் சிங்கிள் ரவுண்ட் துப்பாக்கிகள் தான் புழக்கத்தில் இருந்தது, ஒரு இரும்பு குண்டு ,வெடி மருந்து எல்லாம் போட்டு கிடித்து சுட வேண்டும் பின்னரே தோட்டா எனப்படும் வெடிமருந்தும், குண்டும் இணைந்த அமைப்பு உருவாக்கப்பட்டது ,இதனை கேட்ரிஜ் என்பார்கள். முனையில் இருக்கும் உலோக துண்டே புல்லட் எனப்படும்.

கேட்ரிஜ்= புல்லட் + ஷெல்(கேஸ்) ஆகும்.

தோட்டாவின் பாகங்கள்:


The case is the brass cylinder that all the other parts fit into.

The primer is the component that the hammer of the gun hits and ignites.

Powder is the chemical compound ignited by the primer that propels the bullet.

The bullet is a projectile, usually made of lead and other metals, that the powder fires out the barrel of the gun.

சிங்கிள் ரவுண்ட் துப்பாக்கியால் வேகமாக சுட முடியவில்லை, என ஒன்றுக்கு மேற்பட்ட தோட்டாக்களை நிரப்பும் வசதியுள்ள துப்பாக்கியை உருவாக்கினார்கள். இம்முறையில் 5-6 தோட்டாக்களை சிலிண்டரில் நிரப்பி , சுடும் பேரலுக்கு வருமாறு சுழல வைத்திருப்பார்கள், இதனை ரிவால்வர் என பெயரிட்டார்கள்.  தமிழில் கூட நிறைய வெஸ்டர்ன் டைப் படங்கள் தழுவி எடுக்கப்பட்டன , தமிழின் ஆஸ்தான கவ்பாய் ஹீரோ மறைந்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்  தான். அவரோட கையில ரிவால்வர் சும்மா விளையாடும் :-))



ஜெய்சங்கரின் கவ்பாய் படங்களில் குறிப்பிட தக்கவை கங்கா, எங்க பாட்டன் சொத்து, ஜக்கம்மா, கருந்தேள் கண்ணாயிரம் போன்றவை ஆகும். அக்கால ஒளி ஓவியர் கர்ணனின் கேமிராவும்,இயக்கமும் போட்டிப்போட்டுக்கொண்டு துப்பாக்கி சண்டை ,வாளைக்குமரிகளின் வெண்ணிர ஆடை  ஜில் ஜிலீர் ஜலக்கிரிடை என திரை ரசிகர்களின் கண்ணுக்கு  விருந்து படைத்தன என சொன்னால் மிகையல்ல.

எத்தனை நாட்களுக்கு தான் வறட்சியாக ஆண் கவ்பாய்களை பார்ப்பது என தெலுகு மணவாடுகள் வித்தியாசமாக பெண் கவ்பாய் படங்களை எடுத்தார்கள், ஜோதி லக்‌ஷ்மி, விஜயலலிதா ,விஜய கோகிலா ஆகிய இளமை துள்ளும் காந்தக்கண் காரிகைகளின் மலர்க்கரத்தில் மரண ஆயுதமாம் ரிவால்வர் ஏந்தி ரிவார்வர் ரீட்டா, கன் ஃபைட் காஞ்சனா ,புல்லட் ராணி என அவதாரம் எடுத்து தீய சக்திகளை சுட்டு தள்ளினார்கள், படம் பார்த்த வாலிப வயோதிக அன்பர்களும் தூக்கத்தினை தொலைத்த 70's கால கட்டம் அது. பின்னர் அப்படங்கள் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு தமிழக ரசிகர்களையும் சித்திரவதைக்குள்ளாக்கியது வரலாறு :-))

ஆரம்ப காலத்தில் ரிவால்வர்களின் சிலிண்டர் தானாக சுழலாது , அதனை கையால் சுழற்ற வேண்டும், இப்படி கையால் சுழற்றிக்கொண்டே சுடுவதே ஒரு தனி கலை, பழைய ஹாலிவுட் வெஸ்டர்ன் படங்களில் இப்படி சிலிண்டரை சுழற்றவே இன்னொரு கையை துப்பாக்கியின் மீது வைத்திருப்பது போல காட்டுவார்கள்.

சில கில்லாடியான கவ்பாய்கள் மின்னல் வேகத்தில் சுட தோட்டாக்கள் நிரப்பிய சிலிண்டரை வேகமாக ஒரு சுற்று சுற்றிவிட்டு சுழற்சி நிற்கும் முன் அனைத்து ரவுண்டுகளும் சுடுவதாக எல்லாம் ஹாலிவுட் கவ்பாய் படங்களில் காட்டியுள்ளார்கள். cow boy comics hero lucky luke நிழலை விட வேகமாக சுடுவார் என பட்டப்பெயர் கொண்டவர்.

பின்னர் சிலிண்டர் தானாக சுழன்று தோட்டா சுடுவதற்கு பேரலில் வருவது போல செய்யும் ரிவால்வரை சாமுவேல் கோல்ட் என்ற அமெரிக்கர் வடிவமைத்தார். பின்னாளில் அதுவே ரிவால்வர்களின் நிரந்தர வடிவம் ஆயிற்று. இன்றும் கோல்ட் நிறுவனம் துப்பாக்கி தயாரிப்பில் முன்னனியில் உள்ளது.

ஹாலிவுட் படங்களில் கதாபாத்திரங்கள் பயன்ப்படுத்தும் துப்பாக்கிகள் உண்மையானவை ஆகும், அவற்றில் டம்மி புல்லட் பயன்ப்படுத்தியோ அல்லது கிராபிக்ஸ் மூலமாகவோ சுடுவது போல காட்டுவார்கள்.




அதுவும் ஜேம்ஸ்பாண்ட் போன்ற கதாபாத்திரங்களுக்கு என ஒரு முத்திரைப்பதித்த புகழ்வாய்ந்த துப்பாக்கி மாடலையே கொடுப்பார்கள்.

இயான் ஃபிளெமிங் , தனது நாவலில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தினை வடிவமைத்தபோது என்ன வகையான ஆயுதம் கொடுக்கலாம் என யோசித்து ,பின்னர் அவர் கடற்படை உளவுத்துறையில் பணிப்புரிந்த போது கொடுத்த Beretta 418, .25 காலிபர் பிஸ்டலையே  ஜேம்ஸ்பாண்டும் பயன்ப்படுத்துவதாக முதல் ஜேம்ஸ் பாண்ட் நாவல் ஆன  கேசினோ ராயலில் எழுதிவிட்டார்.

நாவலைப்படித்த ஒரு ஆயுத ஆய்வாளர் பெரட்டா 418 என்பது பெரும்பாலும் பெண்கள் கைப்பையில் வைத்துக்கொள்ளும் சிறிய வகை தற்காப்பு ஆயுதம், ஷார்ட் ரேஞ்ச் கொண்டது ,மேலும் அதன்  stopping power என்பது குறைவு என எழுதினார். ஜேம்ஸ்பாண்ட் போன்ற அதிசூர ரகசிய உளவாளி ,பல எதிரிகளை வேட்டையாட வேண்டியவருக்கு நல்ல சக்தி வாய்ந்த துப்பாக்கி கொடுக்கவும் என ஆலோசனை வழங்கினார்.

 stopping power: 

ஒரு முறை சுட்டவுடன் எதிராளி சுருண்டு விழ செய்வது, குண்டடி வாங்கிய பின்னும் திடகாத்திரமாக இருந்தால் துப்பாக்கியின்  stopping power குறைவாக உள்ளது என பொருள். அதிக காலிபர் உள்ள துப்பாக்கிகளுக்கு அதிக  stopping power இருக்கும்.

காலிபர்: 



காலிபர் என்பது சுடும் குழல்- பேரலின் விட்டம்  ஆகும் அதற்கு ஏற்ப தோட்டாவின் விட்டம் இருக்கும்.பெரிய தோட்டா ,அதிக வெடி மருந்து, அதிக வேகம், எனவே ஆழமாக ஊடுருவும், பெரிய காயம், நிறைய இரத்த இழப்பு , எனவே எதிராளி சுருண்டு விழுவான் .

(பல காலிபர் தோட்டாகள் ஒரு ஒப்பீடு)

அதற்கு ஏற்ப பாண்ட் சக்தி வாய்ந்த துப்பாக்கியான  Colt M1911 .45 cal auto pistolஐ மூன் ரேக்கர் படத்தில் பயன்ப்படுத்தினார்.

ஆனாலும் ஒரு ராணுவ/ உளவு அதிகாரிக்கு என டிரேட்மார்க் ஆக ஒரு துப்பாக்கி இருக்க வேண்டும் என ஆய்வு செய்து   Walther PPK 7.65 mm என்ற துப்பாக்கியை பாண்டிற்கு கொடுத்தனர்.

Walther PPK :

இதில் ஒரு முரண்நகை என்னவெனில்  Walther PPK 7.65 mm  துப்பாக்கி ஜெர்மானிய தயாரிப்பு , அவர்களின் காவல் துறை மற்றும் உளவு துறையின் அதிகாரப்பூர்வ ஆயுதம் ஆகும். அதனை பிரிட்டீஷ் உளவாளியான ஜேம்ஸ் பாண்டின் அதிகாரப்பூர்வமான ஆயுதமாக மாற்றிவிட்டார்கள். தற்போது வந்த ஸ்கைஃபால் வரையில் ஜேம்ஸ்பாண்டின் அதிகாரப்பூர்வ கைத்துப்பாக்கி  Walther PPK 7.65 mm  மற்றும்  Walther PP99 மாடல்கள் ஆகும்.பாண்ட் அவ்வப்போது கையில் கிடைக்கும் ஆயுதங்கள் , Kalashnikov AKS-74U.Kalashnikov AK-74 போன்ற எந்திர துப்பாக்கிகள், பெரட்டா 92 FS என பல வகையான கைத்துப்பாக்கிகளும் பயன்ப்படுத்துவதுண்டு.

Walther PPK 7.65 mm  :



Carl Walther  என்ற ஜெர்மானியர் உருவாக்கிய மாடல் ஆகும், PPK = கிரைம் போலீஸ் பிஸ்டல் என்பதன் ஜெர்மானிய சுருக்கம் ஆகும்.

துப்பாக்கியின் விவரம்;

நீளம்= 155 மி.மீ

அகலம்:25 மி.மீ

பேரல் நீளம்:83 மி.மீ,

எடை:590 கிராம்.

மேகசீன்:



தோட்டாக்கள் அடங்கிய உறையின் பெயர் , 7,8,9 குண்டுகளுடன் ,சற்றே மாறுபட்ட காலிபர் வகைகளுக்கு கிடைக்கிறது. ஜேம்ஸ்பாண்ட் பயன்ப்படுத்தும் .32 ஏசிபி வகைக்கு 8 தோட்டா மேகசின் பயன்ப்படுத்தப்படுகிறது.

இத்துப்பாக்கியால் சுடும் போது தோட்டா செல்லும் வேகம் 220 மீ/வினாடி, எனவே வினாடிக்கு 221 மீட்டர் வேகத்தில் ஓடினால் தோட்டாவால் உங்களை தொலைக்க முடியாது :-))

கைத்துப்பாக்கியின் பேரல் நீளம் குறைவானது என்பதால் குறைவான தூரத்திற்கே கொல்லும் சக்தியுடன் தோட்டா பாயும், 30 மீட்டருக்குள் நல்ல தாக்குதல் இருக்கும், அதற்கு பிறகு அவ்வளவாக இம்பாக்ட் இருக்காது. எலும்புகளை துளைக்காது, அல்லது பெரிதாக காயம் ஏற்படுத்தாது.

தற்போது ஜேம்ஸ் பாண்டிற்கு வழங்கப்பட்டிருக்கும் வால்த்தர் கைத்துப்பாக்கியில் கைரேகை பாதுகாப்பு வசதியுள்ளது, பாண்டை தவிர வேறு யாராலும் அத்துப்பாக்கியால் சுட முடியாது.

Walther P99



இத்துப்பாக்கி அளவிலும், எடையிலும் பெரிய வகை, இத்துப்பாக்கியை பாண்ட் பெரிய அளவிலான சண்டையின் போது பயன்ப்படுத்துவார், பெரும்பாலும் இதனை காரில் வைத்திருப்பார், Walther PPK 7.65 mm  காம்பேக்ட் ஆக இருக்கும் என்பதால் கோட்டின் உள் புறமாக விலாபக்கத்தில் ஸ்ட்ராப் போட்டு ஒரு பவுச்சில் வைத்துக்கொள்வார்.

Walther P99 இன் பேரல் விட்டம் 9 மி.மீ ,நீளம் 102 மி.மீ என்பதால் அதிக சக்தியுள்ளது.

துப்பாக்கியின் விவரம்:

நீளம்:180 -184 மி.மீ

அகலம்:29-32 மி.மீ

உயரம்:135 மி.மீ.

எடை; 630-655 கிராம்.

பேரல் நீளம்: 102 மி.மீ.

தோட்டா வேகம்:344 மீ/வினாடி, மற்றும் 408 மீ/வினாடி
விசையுடன் சுடும் தூரம்:60 மீட்டர்.

மேகசீன்:

12 மற்றும் 16 தோட்டாக்கள் கொண்டவை. சிலர் புத்திசாலித்தனமாக எப்படி 6 குண்டுகளுக்கு மேல் சுட முடியும் என விமர்சனம் எழுதும் போது கேட்பதுண்டு , அதெல்லாம் இப்படித்தான் , பல வகையான மேகசின் கெப்பாசிட்டிகள் , துப்பாக்கியின் மாடலுக்கு ஏற்ப இருக்கிறது. ஒரு சில மாடல்களில் 22 ரவுண்டுகள் வரை சுட முடியும்.


(33 ரவுண்டு மாகசீன் +Glock17 pistol)

அதற்கும் மேல் ஒரே தடவையில் தொடர்ச்சியாக சுட எக்ஸ்டெண்டட் மேகசின் எனப்படும் நீளமான மேகசின்கள் உள்ளது ,30-40 ரவுண்டுகள் சுட முடியும்,துப்பாக்கி தயாரிப்பு நிறுவனம் மாடல் பொறுத்து எத்தனை ரவுண்டுகள் சுடும் என்பது மாறுபடும். ஆனால் அதிக ரவுண்டுகள் சுடும் மேகசீன்கள் துப்பாக்கியின் கைப்பிடிக்கு வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும், கையடக்கமாக வைத்துக்கொள்ள முடியாது. எனவே ஏதேனும் பெரிய தாக்குதலின் போது மட்டும் பயன்ப்படுத்துவார்கள்.

Heckler&Koch USP pistols 



ஹாலிவுட் படங்களில் துப்பாக்கிக்கு ஒரு கவர்ச்சியை கொடுத்தவர் ஏஞ்சலினா ஜூலி , அவர் நடித்த Tomb Raider, MR&mrs Smith, Salt, wanted, ஆகிய படங்களில் கன் ஃபைட் காஞ்சனா, ரிவால்வர் ரீட்டாவாக கலக்கியவர்.

டாம் ரைடரில் ,அவரது உடை,பிரத்யோகமாக இடையில் துப்பாக்கி வைக்கும் பெல்ட், அவரது பாவனைகள் எல்லாம் அந்த பாத்திரத்தின் வீச்சினை பல மடங்கு உயர்த்தியது, கணினி ஆக்‌ஷன் கேம்களில் டாம் ரைடருக்கு தனி மார்க்கெட்டும் பிடித்து கொடுத்தது.



அப்படத்தில் ஏஞ்சலினா ஜூலி கதாபாத்திரத்தின் பெயர் "லாரா கிராப்ட்" ஆகும் ,அவர் பயன்ப்படுத்திய துப்பாக்கி  Heckler & Koch USP Match என்ற 9 மி.மீ பேரல் வகை .இத்துப்பாக்கியும் ஒரு ஜெர்மானிய தயாரிப்பாகும், பொதுவாகவே ஜெர்மானிய துப்பாக்கிகள் தரமானவை என உலக அளவில் பெயர் பெற்றவை.

USP என்பது  Universal self-loading pistol என்பதன் சுருக்கமாகும்.


துப்பாக்கியின் பண்புகள் :

Type: Double Action or Double Action Only
Calibers: 9x19mm Luger, .40 S&W, .45 Auto, .357SIG (USP Compact only)
Dimensions (9 x 19 version)
Length: 194 mm
Height: 136 mm
Width: 32 mm
Weight: 720 g
Capacity: USP, USP Match - 15 rds (9mm), 13 rds (.40), 12 rds (.45); USP Compact - 13 rds (9mm), 12 rds (.357 and .40), 8 rds (.45)

இத்துப்பாகியிலும் 8 முதல் 15 ரவுண்டுகள் சுடக்கூடிய மேகசீன்களுடன் கிடைக்கிறது.

எல்லா மாடல் பிஸ்டல்களிலும் இடக்கை மற்றும் வலக்கை பயன்ப்பாட்டாளர்களுக்கு என தனி தனி வகை தயாரிப்பு உண்டு.

துப்பாக்கி தவறுதலாக வெடித்து விடாமல் இருக்க பாதுகாப்பு அம்சம் உள்ளது, சுடுவதற்கு முன்னர் பேரலை பின் பக்கமாக தள்ளிவிடுவதை திரைப்படங்களில் பார்த்திருப்போம், அப்படியும் சேப்டி லாக் விடுவிக்கலாம் அல்லது கட்டை விரல் அருகே ஒரு லீவர் இருக்கும் அதனை தள்ளியும் சுடுவதற்கு தயாராகலாம்.



அந்த லீவர் வலக்கை பழக்கம் உள்ளவர்களுக்கு துப்பாக்கியின் இடப்பக்கமும், இடக்கை பழக்கம் உள்ளவர்கள் பயன் படுத்தும் துப்பாக்கியில் வலப்பக்கமும் இருக்கும். அதன் அருகே ஒரு சிவப்பு வண்ண LED  இருக்கும், தோட்டா தீர்ந்து விட்டதை அறிவிக்க பயன்ப்படும், LED  எரியவில்லை எனில் துப்பாக்கி பயன்படுத்த தயாராகவில்லை அல்லது தோட்டா தீர்ந்துவிட்டது என அறியலாம்.

ஒவ்வொரு முறை சுடும் போதும் தோட்டா  வெடித்து முன்னோக்கி செல்லும் போது வெடி மருந்தில் இருந்து உருவாகும் வாயு பின்னோக்கி சென்று ஒரு விசை உருவாகும் இதனை கொண்டே அடுத்த தோட்டாவை சுடும் அறைக்குள் லோட் செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது இதனை  "Blow back action pistol" என்பார்கள் பெரும்பாலானா Automatic pistol கள் இவ்வகையே.

டொக்டரின் துப்பாக்கி:

ஹி...ஹி இவ்வளவு தூரம் துப்பாக்கிய பற்றி பேசிவிட்டு டொக்டர் விசய் நடித்த அமர காவியம் "துப்பாக்கி"ஐ பற்றி ஒன்றும் சொல்லாமல் போனால் நல்லாவா இருக்கும், டொக்டர் ரசிகர்கள் வேற கோச்சுப்பாங்க ,



டொக்டர் விசயின் இந்த துப்பாக்கி படத்தை எத்தனை முறை உற்று பார்த்தும் அது என்ன மாடல்னே சரியா  கண்டுப்பிடிக்க முடியலை, டொக்டரின் வெப்பன் சப்ளையர் பெரிய கில்லாடியாக இருக்கணும். ஒரு வேளை தீவாளி துப்பாக்கியா இருக்குமோ?

பெராட்டா 92 FS எனப்படும் மாடல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடியோட இருக்கு, கிட்டத்தட்ட அதை போலவே இருக்கு , ஆனால் படத்தில் லெஃப்ட் ஹேண்ட் மாடல் (சேப்டி லாக் வலப்புறம் இருக்கு) பிஸ்டலை ரைட் ஹேண்டில் பிடிச்சுக்கிட்டு போஸ் கொடுக்கிறார் :-))


ஹி...ஹி என்னா ஒரு கண்டுப்பிடிப்புன்னு தீபாவளியும் அன்னிக்கு நீங்க எல்லாம் என் மேல கொலை வெறியில   பாயாதீங்க, அனைவருக்கும்  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
(இன்று அனைவருமே தீவாளி வாழ்த்துன்னு சொல்லி இருப்பாங்க அதான் வித்தியாமாக இருக்கட்டுமேன்னு ...ஹி...ஹி :-)) )

வர்ரட்டா!!!!
-------------------
தீவாளி போனஸ்:

பதிவு முழுக்க சூடா சுடுவதையே பேசிவிட்டதால் ஜில்லுனு ஒரு ஜில்பான்ஸ் படம் ,பார்த்து மகிழுங்கள்!



ஹி...ஹி சுட்டும் விழியால்  சுடும் காரிகை!
------------------------------------------------------------------

பின் குறிப்பு: 

படங்கள் மற்றும் தகவல் உதவி,

http://world.guns.ru/handguns/hg/de/hk-usp-e.html

http://www.leelofland.com/wordpress/lori-l-lake-part-2-guns-guns-guns-outfitting-your-sleuths/

http://guns4u.info/?cat=12

http://www.imfdb.org/wiki/Lara_Croft:_Tomb_Raider

மற்றும் விக்கி, கூகிள் இணைய தளங்கள், நன்றி!
-----------------

Friday, November 09, 2012

சினிமா ரகசியம்-3:DIGITAL PROJECTION



(ஹி...ஹி டிஜிட்டல் சிற்பம் )

 முதன் முதலாக திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு , திரையிடப்பட்ட காலம் தொட்டு 16 மி.மீ படச்சுருளையும் , அதன் பின்னர்  35 மி.மீ படச்சுருளையும் புரஜக்டர்கள் மூலம் இயக்கியே படங்களை திரையிட்டு வந்தார்கள், இதில் படச்சுருளின் வழியே ஒளியை செலுத்தி ஒரு புரொஜெக்‌ஷன் லென்ஸ் மூலம் திரையில் வீழ்த்தி காட்சி உருவாக்கப்பட்டது. இது Analog projection எனப்பட்டது.

தற்போது தொழில் நுட்பம் வளர்ந்த கால கட்டத்தில் படச்சுருளுக்கு பதிலாக டிஜிட்டல் மீடியாவில் உள்ளதை திரையில் காட்சிகளாக வீழ்த்தி படமாக காட்டுகிறார்கள், இது Digital projection எனப்படும் ,அது எவ்வாறு செயல்படுகிறது எனவும் , படக்காட்சிகள் சலனப்படமாக உருவாகவும், அதனை காணவும் அடிப்படையாக விளங்கும் தொழில்நுட்பங்களையும் இப்பதிவில் காணலாம்.
---------

பார்வை கோணம்:

ஒருவர் ஓய்வான நிலையில், மனித கண்கள் பார்வை வீச்சில் தெரியும் காட்சியின் கோண அளவு கிடைமட்டத்தில் கிட்டத்தட்ட 180 டிகிரி எனலாம், ஆனால் தெளிவாக காட்சியில் பதியக்கூடிய கோண அளவு 120-130 டிகிரி ஆகும்,

அதே போல செங்குத்து அச்சில் காட்சியின் கோண அளவு 90டிகிரி வரையில் அமையும்.

ஆனால் ஒரு அரங்கில் அமர்ந்து காணும் பொழுது திரையின் உயரம் அகலம், இவற்றோடு ஒப்பிட்டு ,அரங்கின் அளவிற்கு நாம் காணும் கோண அளவு

கிடைமட்ட அச்சில் 45 டிகியும்,

செங்குத்த்து அச்சில் 30-37 டிகிரி

என்ற அளவில் இருக்க வேண்டும் என வரையறுத்துள்ளார்கள்.

இதன் அடிப்படையிலேயே திரையரங்குகளின் திரை மற்றும் அமரும் இருக்கைகள் அமைக்கபடுகின்றன.





human eye vs camera angles 


பார்வை உணர்திறன்(Visual_acuity)

திரையின் அளவிற்கும், திரையில் வீழ்த்தப்பட்ட காட்சியினை நம் காட்சி கோணத்தில் ஒரு பிம்பம் தெளிவாக தெரிய தேவைப்படும் குறைந்த பட்ச பிக்சல் அளவினை "திரெஷ் ஹோல்ட் லெவல்" என வரையறுத்துள்ளார்கள்.

இந்த திரெஷ் ஹோல்ட் அளவு முதல் இருக்கை திரைக்கு எவ்வளவு அருகில் இருக்கலாம் என்பதை தீர்மானிக்க உதவுகிறது.

ஒரு காட்சியின் பிக்சல் அளவு மற்றும் திரையரங்க அளவு, புரொஜெக்‌ஷன் ரெசொல்யுஷனை தீர்மானிக்க திரையின் அகலத்தினை விட உயரம் முக்கிய காரணியாகும்.காரணம் செங்குத்து அச்சில் பார்வை கோணம் குறைவாக இருப்பதாகும்.

கண் மருத்துவர் சோதனையின் போது பல அளவிலான எழுத்துகள், எண்களை காட்டி சோதனை செய்வதும் பார்வை உணர் திறனை அறியவே. நல்ல பார்வை திறன் உள்ளவருக்கு 20/20 பார்வை திறன் உள்ளது என்பார்கள். இதன் விளக்கம் பின்னால் வருகிறது.

இதனை ஒரு உதாரணத்தின் மூலம் காணலாம்,

...............................................................

மேலே தொடர்ச்சியாக வைப்பட்ட புள்ளிகளை ,தொடர் புள்ளிகளாக நீங்கள் காண்கிறீர்கள், இது வழக்கமாக கணினி திரையை நீங்கள் காணும் தூரத்தில் இவ்வாறு தெரியும் ,

இப்பொழுது கொஞ்சம் தூரம் தள்ளி நின்று பாருங்கள், இப்பொழுதும் புள்ளிகளாக தெரியலாம், இப்படியே சிறிது சிறிதாக தள்ளி நின்று பார்க்கையில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் புள்ளிகளாக தெரியாமல் ஒரு தொடர் கோடாக தெரிய ஆரம்பிக்கும், அப்படியே தூரம் அதிகரித்துக்கொண்டே போனால் ஒரு நிலையில் கோடும் தெரியாது , கணினி திரை மட்டும் தெரியும் , அப்படியே ஒரு 10 கிலோமீட்டர் தூரம் போனீர்கள் ஆனால் கணினி திரை மறைந்து , அதிஷ்டம் இருந்தால் வீடு மட்டும்  தெரியலாம் :-))

ஒரு தனி  புள்ளி என்பதை வேறுபடுத்திக்காட்டும் தூரமே உங்கள் பார்வை உணர் திறனின் எல்லை , புள்ளிகள் மறைந்து கோடாக தெரியும் தூரம் கண்களின் உணர் திறனின் திரெஷ் ஹோல்ட் அளவு எனலாம்.

இப்பொழுது கோட்டினை பாருங்கள்,

______________________________

உண்மையில் இக்கோடும் பல புள்ளிகளால் ஆனாது ஆனால் தனி தனி புள்ளிகளை உணரும் அளவுக்கு மனித கண்களுக்கு உணரும் தன்மையில்லை,ஆனால் இக்கோட்டினை பெரிதாக்கிக்கொண்டே சென்றால் அதில் பல புள்ளிகள் இருப்பதை காணலாம்.

20/20 பார்வை திறன்:

ஒரு ஆர்க் மினிட் இடைவெளியுள்ள எழுத்துக்களை 20 அடி தொலைவில் இருந்து படிக்க முடிவதே 20/20 பார்வை திறன் ஆகும். இதனை ஸ்னெல்லன்  (Herman Snellen)1862.)என்ற டச் கண் மருத்துவர் கி.பி  1862 இல் கண்டுப்பிடித்து வடிவமைத்தார்.



ஒரு ஆர்க் மினிட் கோணத்தின் அளவு 1.75 மில்லி மீட்டர் ஆகும். E என்ற எழுத்தில் இரண்டு நீட்சிகளுக்கு இடையே 1.75 மி.மீ இடைவெளி இருக்கும் ,எழுத்தின் உயரம் 5 ஆர்க் மினிட் ,8.87 மி.மீ இருக்கும் போது அதனை 20 அடி தூரத்தில் இருந்து அடையாளங்காண முடிந்தால் ஒருவரின் பார்வைத்திறன் நன்றாக உள்ளது என்பார்கள்.

ஸ்னெல்லன் சார்ட்டில் கடைசியில் இருக்கும் எழுத்துக்களின் அளவு 20/20 பார்வை திறன் உள்ளவர்களால் படிக்க கூடியது, மிக மேல் இருக்கும் எழுத்துக்கள் மிக குறைவான பார்வை திறன் உள்ளவர்களால் படிக்க கூடியது ,அதனை 20/200 என்பார்கள், எழுத்தின் உயரம் 88.7 மி.மி இருக்கும், இதனை நன்றாக பார்வை திறன் உள்ளவர்கள் 200 அடி தூரத்தில் இருந்து படிக்க முடியும். பார்வை திறன் 20/200 என இருப்பவர்கள் மருத்துவ ரீதியாக பார்வையற்றவர் என்றே கூறப்படும்.
----------------

டிஜிட்டல் புரொஜெக்‌ஷனில் என்ன செய்கிறார்கள் என்றால் பல புள்ளிகள்(பிக்செல்) அருகருகே அமைத்து உருவான காட்சியில் புள்ளிகளை உணராத தொலைவில் பார்ப்பவர்களை உட்கார வைத்துவிடுவார்கள்.



அதே சமயத்தில் ஃபில்ம் அடிப்படையிலான புரொஜெக்‌ஷனில் நேரடியாக கோட்டினை வரைவது போல காட்சி இருக்கும், வெகு அருகே பார்த்தாலும் புள்ளி தெரியாது, புள்ளிகள் தெரிய வழக்கமான அளவை விட உருப்பெருக்கி காண வேண்டும்.

ஃபில்ம் புரொஜெக்‌ஷனிலும் முன்னால் அமர்ந்து பார்க்கும் தொலைவினை தீர்மானிக்க பார்வை கோண வீச்சுப்படி ஒரு அளவுண்டு.

ஏன் எனில் செங்குத்தில் 37 டிகிரி, கிடைமட்டத்தில் 45 டிகிரி கோணத்தில் தெரியும் காட்சியினை மட்டுமே மனிதர்கள் அதிக சிரமம் இல்லாமல் காண முடியும் என வரையறுத்துள்ளார்கள்.

செங்குத்து அச்சில் 37 டிகிரிக்குள் தெரிவதை மட்டுமே அண்ணாந்து ,அல்லது குனிந்து பார்க்காமல் இயல்பாக காண முடியும்.

அதே போல தலையை அல்லது கண்களை இடமும் வலமும் அசைக்காமல் கிடைமட்டத்தில் காண காட்சி 45 டிகிரி பார்வைக்கோணத்திற்குள் இருக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் பரந்த கோணத்தில் இருக்கும் காட்சியை தொடர்நது பார்த்துக்கொண்டிருந்தால் ,கண்களுக்கு அயர்ச்சி உண்டாகும். இதனால்  தான் திரையரங்கில் முன் வரிசையில் அமர்ந்து பார்த்தால் தலைவலி வருகிறது.

அமெரிக்காவில் MPAA இதற்கான வரையறைகளை எல்லாம் வகுத்துள்ளது, எனவே முன்வரிசையும் பார்வையாளர்கள் இயல்பான பார்வை கோணத்தில் இருக்குமாறு இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

இந்தியாவில் பெரிய ஸ்கிரீன் போட்டுவிட்டு ,முன் வரிசையையும் மிக நெருக்கத்தில் அமைத்திருப்பார்கள், பார்க்கிறவனுக்கு தலை வலிச்சால் என்ன வலிக்காட்டி என்ன :-))

MPAA விதிப்படி முன் வரிசை இருக்கைகள் திரையின் உயரத்தினை போல 2.6 மடங்கு தூரத்தில் இருக்க வேண்டும் என வகுத்துள்ளார்கள்.அந்த தொலைவில் அமர்ந்து காணும் பொழுது திரையின் மொத்த நீள,அகலப்பரப்பும் பார்வையாளரின் இயல்பான பார்வை கோண வீச்சில் இருக்கும், கண்களையையோ, தலையையோ அசைக்காமல் இயல்பாக காணலாம் என கணக்கிட்டுள்ளார்கள்.

எந்த தொலைவில் அமர்ந்து பார்ப்பது என்பதே காட்சியின் ரெசொல்யுஷனையும் தீர்மானிக்க பயன்படுகிறது என்பதை புள்ளி மற்றும் கோடு உதாரணத்தின் மூலம் புரிந்திருக்கும்.


(
திரையின் உயரத்தின் அடிப்படையில் இருக்கை)



ஒரு டிகிரி பார்வை கோணத்தினை 60 பாகமாக பிரிப்பார்கள் ஒரு பாகத்தினை ஒரு ஆர்க் மினிட் என்பார்கள். இதுவே கோணத்தின் சிறிய அளவு, எனவே ஒரு மினிட் கோணத்திற்கு எத்தனை பிக்சல்கள் இருந்தால்MPAA வ்ரையறுக்கப்பட்ட தொலைவில்  தோற்றம் தெளிவாக இருக்கும் என்பதை கணக்கிட்டு உள்ளார்கள்,


நம் பார்வை திறனை விளக்க காரணம் டிஜிட்டல் படமாக்கல், திரையிடலுக்கு எந்தளவு ரெசொலுஷன் இருந்தால் ஓரளவு தெளிவாக பார்க்க முடியும் எனக்கணக்க்கிடவே, ஏன் என்னில் நமது மனித கண்கள் 576 மெக பிக்சல் அளவுக்கு துல்லியமாக ஒளி உணரக்கூடியது என கண்டறிந்துள்ளார்கள். ஆனால் அந்த அளவுக்கு டிஜிட்டலில் கொண்டு வர முடியாது எனவே பார்வை திறனின் குறைந்த பட்ச எல்லையில் தெளிவாக காணக்கூடிய காட்சியினை டிஜிட்டல் மூலம் உருவாக்கி நமக்கு வழங்குகிறார்கள்.

அதாவது 1.75 மி.மீ தொலைவுக்குள்ளாக  இரண்டு பிக்சல்கள் இருக்குமானால் நாம் இரு புள்ளிகளுக்கிடையே இடைவெளியை உணர முடியாது என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஆகும்.

நம் பார்வை திறனுக்கு மிக குறைந்த பட்ச பிக்சல் திறனாக ஒரு பார்வைக்கோணத்திற்கு 60 பிக்சல்கள் காட்சியில் இருக்க வேண்டும் என கணக்கிட்டுள்ளார்கள் ,இதனை வழக்கமான ஃபில்ம் புரொஜெக்ஜனில் மிக எளிதாக கொடுக்க முடியும் ஏன் எனில் ஃபில்ம் எமல்ஷன் அடிப்படையிலானது என்பதால் பிக்சல் எனப்படும் புள்ளிகளே இல்லை, எனவே எந்த தூரத்தில் இருந்து பார்த்தாலும் புள்ளிகளை உணர முடியாது.

டிஜிட்டல் புரொஜெக்‌ஷனில் இதற்கு முன்னர் 2கே விற்கும் குறைவாகவே இருந்தது , தற்போது தான் 4கே புரொஜெக்‌ஷன் பயன்ப்பாட்டிற்கு வர துவங்கியுள்ளது.

2கே புரொஜெக்‌ஷன் என்பது நமது பார்வை திறனுக்கு தேவையான ஒரு டிகிரிக்கு 60 பிக்சலை தருவதில்லை. எப்படி எனப்பார்ப்போம்.

ஒரு 2கே காட்சி என்பது

செங்குத்தில் -1080 பிக்செல்கள்.

கிடைமட்டத்தில்- 1998 பிக்செல்கள் கொண்டிருக்கும்.

செங்குத்து அச்சில் உள்ள பிக்சல்களே திரையரங்க இருக்கை அமைவிடத்தை தீர்மாணிக்கும் என்பதாலும், காட்சி துல்லியத்திற்கு அதுவே முக்கியம் ஆகும்.

ஒரு டிகிரிக்கு கிடைக்கும் பிக்சல்கள்=1080/37 டிகிரி=29.18 பிக்சல்கள்

இது வழக்கமான பில்ம் புரொஜெக்‌ஷனில் கிடைக்கும் குறைந்த பட்ச பிக்சலான 60 ஐ விட வெகு குறைவு.

4k  டிஜிட்டல் புரொஜெக்டர்.

செங்குத்து அச்சில் =2060
கிடை மட்டத்தில் -4096

ஒரு டிகிரிக்கு= 2060/37=55 பிக்செல்கள்

4கேயில் கிட்டத்தட்ட ஒரு டிகிரிக்கு 60 பிக்சல்கள் என்ற குறைந்த பட்ச அளவுக்கு அருகில் வருகிறது.

மேலும் 2கே புரொஜெக்டரில் ஒரு சதுர அங்குலத்திற்கு கிடைக்கும் பிக்சல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் , இதனை பிக்சல் டென்சிடி என்பார்கள்.

2கே= 1080*1998 =2.157840 மெகாபிக்சல்களே மொத்த படத்தின் பிக்சல் அளவு.

4கே=2060*4096=8.437760 மெகா பிக்சல்கள் மொத்த படத்தில் அளவு ஆகும்.








2k and 4k pixel density comparison

இதனால் 4கே புரொஜெக்டரில் பிக்சல் டென்சிட்டி அதிகம் இருக்கும். தற்போது 8 கே அளவிற்கான புரொஜெக்டர்கள் தயாரிக்க முன்னணி நிறுவனங்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அம்முறை வந்துவிட்டால் துல்லியமான திரைப்படங்களை காண முடியும்.


திரையின் உயரம் மற்றும் புரொஜெக்டர் மாடலை பொறுத்து ஒரு டிகிரி பார்வைக்கோணத்திற்கு கிடைக்கும் பிக்சல்களின் குறைந்த பட்ச அளவு மாறு படலாம். பொதுவான வரையறுக்கப்பட்ட குறைந்த பட்ச பார்வை கோணத்திற்கு கணக்கிட்டுள்ளேன்.

நமது வெற்று கண்கள் மிக நுட்பமானவை என முன்னரே கூறியுள்ளேன் , .35 ஆர்க் மினிட் கோணத்திற்கு ஒரு பிக்சல் என்ற விகிதத்தில் நம் கண்கள் உணரக்கூடியது இதனால் தான் 120 டிகிரி பார்வை கோணத்தில் 576 மெகா பிக்சல்களை உணருகின்றது.

அவ்வாறு உண்மையில் நம் கண்கள் காணும் காட்சியானது மிக பெரிதாக கொஞ்சம் டிஸ்டார்டட் ஆக இருக்கும் அதனை நமது மூளையே சரியாக நமக்கு உணர வைக்கிறது. நம் கண்கள் பல காட்சி ,வண்ணம் ,ஒளி என ஒரே வினாடியில் பல முறை ஒரு காட்சியை ஸ்கேன் செய்து மூளைக்கு அனுப்பும் ,அவற்றை ஒன்றாக இணைத்து சரியான காட்சியை உணர செய்வது மூளையின் வேலை ஆகும்.

120 டிகிரி அகன்ற கோணத்தில் மனிதன் காண்பதை படம் பிடித்தால் இப்படித்தான் இருக்கும் .

படம்:



ஃபிரேம் ரேட்:

காட்சியை துல்லியமாக காண தேவைப்படும் பிக்செல்களின் அளவினைப்பார்த்தோம். அதே ஒரு காட்சி அசைவாக தெரிய தேவைப்படும் குறைந்த பட்ச பிரேம்களை பற்றி காணலாம்.

ஒரு காட்சியை சலனமாக காண குறிப்பிட்ட காட்சியின் படங்களை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நகர்த்தினால் முடியும் என தாமஸ் ஆல்வா எடிசன் கண்டறிந்தார், அப்படிக்காட்ட குறைந்த பட்சம் வினாடிக்கு 46 ஃபிரெம்கள்  தேவ்வை என அறிந்தார் ஆனால் அப்போது அது சாத்தியமில்லை என்பதால் ஒலியில்லாத நிலையில் குறைந்த பட்சம் 16 காட்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக நகர்த்தினால் சலனப்படமாக ஒரு காட்சியை காட்ட முடியும் என கண்டுபிடித்தார் ,இதன் அடிப்படையிலேயே அப்போது சலன படங்கள் உருவாக்கப்பட்டு திரையிடப்பட்டன.

இவ்வாறு தனி தனி காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக நகர்வதை ஒரு தொடர் இயக்கமாக நாம் பார்ப்பதற்கு காரணம் கண்ணின் பார்வை நிலைப்பு திறன் ஆகும், ஒரு காட்சி மறைந்த பின்னும் விழித்திறையில் 1/15வினாடி நேரம் அக்காட்சி நிலைத்திருக்கும், எனவே அதன் தொடர்ச்சியாக ஒரு காட்சி வரும் போது நமது மூளை ஒன்றினைத்து ஒரு இயக்கமாக பார்க்கிறது( illusion of continuity )

இதன் அடிப்படையில் ஒலியில்லாத காலத்தில் இப்படி தொடர் காட்சிகள் உருவாக 16 ஃபிரேம்களை கொண்டே சமாளித்து சலனப்படத்தினை உருவாக்கினார்கள். ஆனால் ஒலியுடன் படம் பிடிக்கும் போது 16  ஃபிரேம்களில் இயக்கத்தினை காட்டினால் ஒலி அதனுடன் ஒத்து போகவில்லை, ஒலி எந்த வேகத்தில் பயணிக்கிறதோ அதே வேகத்தில் பதியப்பட்டு அதே வேகத்தில் பிளே செய்யப்பட்டால் தான் தெளிவான ஒலி கிடைக்கும் , மாறு பட்ட வேகத்தில் இயக்கினால் கீச் என்ற சத்தம் தான் வரும், எனவே ஒலியின் அதிர்வெண்ணுக்கு ஏற்றார் போல ,காட்சியை பதிவு செய்து இயக்கலாம் என கண்டறிந்தார்கள் , அதற்கு முதலில் 22  ஃபிரேம்களில் இயக்கி ஓரளவு சரியாக வருவதை பார்த்தார்கள், பின்னர் 24 பிரேம்கள் என இயக்கி சரியான வேகம் என முடிவுக்கு வந்தார்கள்.

24 பிரேம்களில் பதிவு செய்து ,24 ஃபிரேம் வேகத்தில் புரொஜெக்டர் இயங்கினாலும் நமக்கு சரியான அசைவினை தடையில்லாமல் காட்ட அதிக பிரேம்கள் வருவது போல செய்ய ,புரொஜெக்டருக்கு முன்னால் 3 துளைகள் உள்ள ஷட்டரை வினாடிக்கு 72 சுற்றுகள் என சுழவிடுவதன் மூலம் ஒவ்வொரு ஃபிரேமும் 3 முறை மறைந்து தனி பிரேம் போல வேகமாக திரையில் விழும் , இதனால் ஒரே வினாடியில் 72 பிரேம்களை திரையில் வீழ்த்த முடிந்தது, மேலும் இப்படி செய்யாவிட்டால் ஒவ்வொரு பிரேமுக்கும் நடுவில் இருக்கும் கோடு நம் கண்களுக்கு தெரியும். இதனை ரெபரஷ் ரேட் என சொல்வார்கள்.

தற்கால கணினி , எல்.சிடி மானிட்டர்களில் உள்ள ரெபரெஷ் ரேட் இதனை தான் செய்கின்றது. ஹெச்.டி மானிட்டர்கள், தொலைகாட்சிகள் வினாடிக்கு 120 ரெபரஷ் ரேட் உள்ளவை, அதாவது வினாடிக்கு 120 முறை ஒரு காட்சியினை திரையில் காட்டுகின்றன எனலாம். இப்படி எல்லாம் செய்தால் தான் நமது மூளையை ஏமாற்றி ஒரு காட்சி அசைவாக தெரிகிறது என நம்ப வைக்க முடியும்.

உலகில் இயல்பாக நடக்கும் அசைவுகளை கண்டு உணரவே நமது கண்கள் உருவாக்கப்படுள்ளது எனவே அதனை போல மீண்டும் படம் பிடித்து அசைவை உருவாக்குவது கடினம் என்பதால் ஓரளவுக்கு இயல்பான அசைவுகள் என நம்பதகுந்த வகையிலேயே திரைப்படக்காட்சிகளை நமக்கு காட்டப்படுகின்றன என்பதை புரிந்து கொண்டால் போதுமானது.

இது வரை ஒரு சலன படத்தினை இயல்பான அசைவுகளுடன் காண தேவைப்படும் குறைந்த பட்ச அம்சங்கள் என்னவென பார்த்தோம் , அடுத்து டிஜிட்டல் புரொஜெக்டர்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என காணலாம்.
----------------------------------

டிஜிட்டல் புரொஜெக்‌ஷன்:




பழங்காலத்தில் இருந்து திரையிடப்பயன்ப்படுத்தப்பட்டு வந்த 35 மி.மீ ஃபில்ம் புரொஜெக்டரை அனலாக் புரொஜெக்டர் என்பார்கள். அதில் காட்சி வீழ்த்த 35 மி.மீ ஃபில்ம் பயன்ப்படுத்தப்பட்டு வந்தது, அதற்கு பதிலாக மின்னனு சிப்களை கொண்டு காட்சியினை வீழ்த்துவது டிஜிட்டல் புரொஜெக்டர் ஆகும்.

ஆரம்பத்தில் பிம்பத்தினை உருவாக்க சிறிய சிஆர்டி மானிட்டரை ஃபிலிமிற்கு பதிலாக பயன்படுத்தினார்கள், பின்னர் எல்.சி.டி மானிட்டர் பயன்படுத்தினார்கள், இவை எல்லாம் சிறிய அரங்கில் புரொஜெக்‌ஷன் செய்ய மட்டுமே பயன்படும்.தற்போது சி.ஆர்.டி புரொஜெக்டர்கள் வழக்கொழிந்துவிட்டன, எல்.சிடி புரொஜெக்டர்களும் மெதுவாக வழக்கொழிய துவங்கியுள்ளது.


LCD projector schematic pic

இப்பொழுது பெருமளவு புழக்கத்தில் உள்ள டிஜிட்டல் புரொஜெக்டர்கள்  DLP வகை ஆகும். இதற்கு அடுத்து சோனி நிறுவனம் தனியாக உருவாக்கிய  liquid crystal on silicon, என்ற தொழில்நுட்பம் ஆகும் இதனை சோனி SXRD (Silicon X-tal Reflective Display) என டிரேட் மார்க் செய்துள்ளது.

DLP(Digital light processing) technlogy :

தற்போது மிகப்பெரிய திரையில் டிஜிட்டலில் புரொஜெக்‌ஷன் செய்ய DLP(Digital light processing) technlogy அடிப்படையிலான புரொஜெக்டர்கள் பயன்படுகின்றன.இதனை டெக்சாஸ் இண்ஸ்ட்ருமென்ட்ஸ் எனப்படும் அமெரிக்க நிறுவனத்தினை சேர்ந்த  Dr. Larry Hornbeck  என்பவர் 1977 ஆம் ஆண்டு ஒளியின் பிரதிபளிப்ப்பை பற்றி ஆய்வு செய்யும் போது கண்டுபிடித்தார்,பின்னர் கி.பி. 1987 இல் முதல்  DLP புரொஜெக்டரின் மாதிரி வடிவம் உருவாக்கப்பட்டது.


 DLP புரொஜெக்டரில் digital micromirror device (DMD) எனப்படும் பல நுண்ணிய கண்ணாடிகளால் ஆன ஒரு சிப் இருக்கும், இதில் ஒரு சதுர அங்குலத்தில் 10 மைக்ரான் அளவுள்ள பல மில்லியன் கண்ணாடிகள் சுழலும் வகையில் உள்ளது.


Digital micro mirrors on DLP chip

ஒரு படத்தின் மின்னணு உள்ளீடூக்கு ஏற்ப நுண்ணிய கண்ணாடிகள் அச்சில் சுழன்று ஒளியை பிரதிபளிக்கவோ அல்லது பிரதிபளிக்காமல் விடவோ செய்யும்.இது ஒளிக்கு ஏற்ப ஆன்/ஆஃப் ஆவது போன்றதாகும்.

 DLP க்கு படத்தினை மின்னணு அலையாக மாற்றி அனுப்ப என ஒரு பிராசசர் இருக்கும், அது அனுப்பும் படத்தின் தன்மைக்கு ஏற்ப கருப்பு வெள்ளையில் ஒரு கிரே ஸ்கேல் இமேஜ் மட்டுமே  DLP சிப் மூலம் உருவாக்கப்படும் ,பின்னரே அதற்கு வண்ணம் அளிக்க வேண்டும்.

பொதுவாக அனைத்து படங்களும் சிவப்பு, பச்சை, நீலம் எனப்படும் அடிப்படை நிறங்களின் கலவையால் உருவானது எனவே இம்மூன்று வண்ணங்களில் ஒரு படத்திற்கு தேவையான அளவு அளித்து ஒரு வண்ணப்படத்தினை உருவாக்கிடலாம்.

டிஜிட்டல் முறையில் சிவப்பு, பச்சை ,நீலம் என மூன்று வண்ணங்களிலும் ஒரே கட்சியின் பிம்பம் மீது அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டு அதனை நம் கண்கள் தனித்து உணராதவாறு செய்யப்படுகிறது.

old LCD projector with separate Red,Green,Blue projection.

இவ்வாறு செய்ய ஒரு வெள்ளை நிற ஒளி மூலத்தினை , சிவப்பு,பச்சை, நீலம் என வண்ணங்கள் கொண்ட சுழலும் சக்கரம் மூலம் செலுத்தினால் அடிப்படை நிறங்கள் மூன்றும் மாறி மாறி கிடைக்கும், இதனை  DLP சிப் இல் தோன்றும் கிரே ஸ்கேல் இமேஜ் மீது செலுத்தி கிடைக்கும் மூன்று வண்ண காட்சியை ஒன்றாக குவித்து ஒரு புரொஜெக்‌ஷன் லென்ஸ் வழியாக திரையில் வீழ்த்தினால் ஒரு வண்ணப்படம் திரையில் தோன்றும்.

ஆரம்பகாலத்தில் சுழலும் மூன்று வண்ணச்சக்கரம் ஒரு வினாடிக்கு 60 சுற்றுகள் சுழலுமாறு வடிவமைக்கப்பட்டது ,இதனால் ஒவ்வொரு கலரிலும் 20 ஃபிரேம்கள் ஒரு வினாடிக்கு உருவாகும் , இவை அனைத்தும் ஒன்றாக குவித்து திரையில் வண்னப்படம் உருவாக்கப்பட்டது , இம்முறையில் 16.7 மில்லியன் வண்ணங்களின் கலவை உருவாக்க முடியும். ஆனாலும் மனித கண்கள் மிக நுட்பமானவை என்பதால் ஒரு வினாடியில் மூன்று வண்ணங்களும் மாறி மாறி திரையில் உருவாவதை சில நேரங்களில் கவனிக்க வல்லவை அப்படி தொடர்ச்சியாக மாறும் வண்ணங்களை கவனிப்பதால் ஒரு வானவில் போன்ற வண்ண நிறமாலையை உணர்வார்கள்.

வழக்கமாக இதனை எல்.சிடி மானிட்டர்களில் ஓரமாக பார்த்தால் பல வண்ணம் ஒன்றன் மேல் ஒன்றாக ஒரு நிறமாலையாக தெரிவதை காணலாம். எல்.சிடி, மானிட்டர்களும் இப்படி அடிப்படை நிறத்தினை தொடர்ச்சியாக பிம்பத்திற்கு கொடுத்தே வண்ணங்களை உருவாக்குகிறது.

டிஜிட்டல் புரொஜக்‌ஷன் தியேட்டர்களிலும் பார்வை கோணத்தினை மாற்றி ,விளிம்புகளில் பார்த்தால் பல வண்ணங்களை தனியாக காணலாம், அல்லது கண்களை வேகமாக இமைத்து விட்டு திடீர் என பார்த்தால் திரையில் வண்ணம் மாறுவதை பார்க்க முடியும்.

பழைய எல்.சிடி புரொஜெக்டர்களில் மூன்று வண்ணங்களுக்கு என மூன்று லென்ஸ்கள் மூலம் காட்சி வீழ்த்தப்படுவதை நீங்கள் பார்த்திருக்க கூடும், தற்போது மூன்று வண்ணங்களும் புரொஜெக்டருக்குள்ளாக  ஒரு DLP சிப்பின் மீது வீழ்த்தப்பட்டு அதில் பிரதிபலிப்பதை குவித்து ஒரே புரொஜெக்‌ஷன் லென்ஸ் மூலம் திரையில் வீழ்த்தப்படுகிறது. இதனை சிங்கில்  DLP சிப் புரொஜெக்டர்கள் என்பார்கள். ஆரம்பத்தில் .75 மெகா பிக்சல் அளவிலும் ,பின்னர் 2கே பிக்சல் அளவிலும் உருவாக்கப்பட்டுள்ளன.தற்போது 4கே வரையில் கிடைக்கின்றன.


 single chip DLP projector

single chip DLP புரொஜெக்டர்களில் அவ்வப்போது உணரப்படும் வானவில் விளைவை நீக்க வண்ணங்களை அளிக்கும் சக்கரத்தின் வேகத்தினை இரு மடங்காக 120 சுழற்சிகள் என மாற்றிவிட்டார்கள், இது வண்ணங்களை ரெப்ரெஷ் செய்யும் வேகம் ஆகும்.

ஃப்ரேம் ரேட் வேறு ,ரெப்ரெஷ் ரேட் என்பது வேறு என்பதை நினைவில் கொள்ளவும், ஃபிரேம் ரேட்டில் ஒவ்வொரு பிரேமும் ஒரு காட்சி என 24 ஃபிரேமும் ஒரு தனித்துவமான காட்சி, ஆனால் ரெப்ரெஷ் ரேட்டில் ஒவ்வொரு தனித்துவமான காட்சியும் மூன்று முறை ,மூன்று கலரில் தோன்ற செய்து ஒரே வினாடியில் 120 முறை தோன்ற செய்வது.


3 DLP chip projector


மேலும் மிக அதிக துல்லியமான வண்ணக்கலவையை உருவாக்க ஒவ்வொரு வண்ணத்திற்கும் என தனி  DLP சிப் பயன்படுத்தி 3  DLP சிப் புரொஜெக்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் 35 டிரில்லியன் வண்ணங்களின் கலவையை உருவாக்க முடியும் என்பதால் இயல்பான படக்காட்சிகள் கிடைக்கிறது. தற்போது சந்தையில் கிடைக்கும் 4கே புரொஜெக்டர்கள் இத்தகைய மாடல்களே.

--------------
DLP technology மிக நுண்ணியது என்பதால் இதன் மூலம் மிக சிறிய புரொஜெக்டர்களும் தயாரிக்க முடியும்,  பாக்கெட் புரொஜெக்டர் எனப்படும் பிகோ புரொஜெக்டர்கள் டிஎல்பி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவையே. இப்பொழுது பல மொபைல் போன்களிலும் டிஎல்பி புரொஜெக்டர்கள் உள்ள மாடல்கள் கிடைக்கிறது.

ஸ்பைஸ், மைக்ரோ மேக்ஸில் 5000-6000 ரூபாய்க்கெல்லாம் புரொஜெக்டர் மொபைல் போன்கள் கிடைக்கிறது.


ஸ்பைஸ் பாப்கார்ன்-9000 புரொஜெக்டர் மொபைல்.
----------------------------------------

டிஜிட்டல் டிஸ்ட்ரிபியுஷன்:

வழக்கமான 35 மி.மீ படச்சுருளில் படம் எடுக்கப்பட்டு பின்னர் அதனை 35 மி.மீ படச்சுருளில் பிரிண்ட் போட்டு ,திரையரங்குகளுக்கு அனுப்பி அனலாக் புரொஜெக்டர் மூலம் காட்சி செய்வார்கள்.

ஒரு திரைப்படத்தினை  படச்சுருளில் பிரிண்ட் போட டிஜிட்டல் பிரிண்டினை விட அதிக செலவாகும், ஒரு பிரிண்ட் போட 1500 டாலர்கள் (75,000 ரூ) ஆகும், ஹாலிவுட்டில் பெரும்பாலும் ஒரே படத்திற்கு 4000-5000 பிரிண்ட்கள் எல்லாம் போடுவதுண்டு , எனவே பிரிண்ட் போடவே பல மில்லியன்கள் செலவாகும், ஹாலிவுட்டில் பிரிண்ட்  போட சராசரியாக பயன்ப்படுத்தப்பட்ட படச்சுருளின் நீளம் ஆண்டுக்கு 13 billion feet of film  (3,962,400 km) இது தோராயமாக நிலவுக்கும் பூமிக்கும் இருக்கும் தூரம் போல ஐந்து மடங்கு ஆகும். இவ்வளவு  படச்சுருளுக்கு ஆகும் செலவு எவ்வளவு பெரிய தொகையாக இருக்கும் என்பதை  புரிந்து கொள்ளலாம், இதனாலேயே ஹாலிவுட் பட நிறுவனங்கள் டிஜிட்டல் பிரிண்டினை  விரும்பி பயன்ப்படுத்துகின்றன.

மேலும் படச்சுருள் மூலம் திரையிடப்படும் போது முதல் காட்சியில் பார்த்தது போல 50 ஆவது நாளில் தெளிவாக இருக்காது எனவே அதிக நாட்கள் ஓடும் படத்திற்கு மீண்டும் ஒரு பிரிண்ட் போட வேண்டும்.

ஒரு 12 ரீல் படத்தின் எடை சுமார் 35 கிலோ இருக்கும், அவற்றை கையாள்வது, கொண்டு செல்வது, திரையரங்கில் தடையின்றி திரையிடுவது அனைத்திற்கும் அதிக உழைப்பு தேவை. மேலும் செலவும் அதிகம் ஆகும், இதனை எல்லாம் குறைக்கவே டிஜிட்டல் புரொஜெக்‌ஷனை ஹாலிவுட் பட நிறுவனங்கள்  விரும்பி பயன்ப்படுத்துகின்றன.

2013-14 க்கு பிறகு ஹாலிவுட்டில் எந்த படத்தையும் படச்சுருளில் வெளியிடுவதில்லை என  படத்தயாரிப்பு நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. இதற்காக Digital cinema Initiative(DCI)    என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளனர். அவர்களே டிஜிட்டல் சினிமா மற்றும் புரொஜெக்‌ஷனுக்கான தர நிர்ணய அமைப்பாக தற்போது விளங்குகிறார்கள். இவர்களின் முயற்சியால் அமெரிக்காவில் 80% சதவீத திரையரங்குகள் டிஜிட்டலாக மாறிவிட்டன, மீதம் உள்ளவையும் டிஜிட்டலாக மாறவில்லை எனில் அவ்வரங்குகளுக்கு பட விநியோகம் செய்ய மாட்டார்கள் என அறிவித்துள்ளார்கள்.

டிஜிட்டல் பிரிண்ட்:

35 மி.மீ படச்சுளில் படம் எடுக்கப்பட்டிருந்தால் அதனை டெவெலப் செய்து எடிட் செய்த பின் அதனை டெலிசினி அல்லது ஸ்கேனர் முறையில் டிஜிட்டல் வடிவமாக மாற்றுவார்கள் , இதனை டிஜிட்டல் இண்டர் மீடியேட் என்பார்கள்,எடிட் செய்த தில்  ஒளி,ஒலி அனைத்தும் ஒன்றாக இணைந்த டிஜிட்டல் பிரிண்டை  டிஜிட்டல் மாஸ்டர் காபி என்பார்கள்,வழக்கமான 35 மி.மீ படச்சுருள் எனில் டபுள் பாசிட்டிவ் என்பார்கள் அல்லது ஆங்கிலத்தில் "married film" என்பார்கள். இதனை 2கே அல்லது 4கே அளவுக்கு  செய்து விநியோகிக்க தக்கதாக ஹார்ட் டிஸ்கில் பதிவு செய்யப்பட்டதை Digital Cinema Package(DCP) என்பார்கள்.

இந்தியாவில் படச்சுருளில் எடுக்கப்பட்ட படமானாலும்  Red one,EPIC,Sony F65 போன்ற  4K  டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் இறுதியில் திரையிட 2கே அளவிலேயே டிஜிட்டலாக மாற்றுவது வழக்கம்,இது வரை இந்திய மொழி படம் எதுவும் 4கே  டிஜிட்டலில் வரவில்லை,எனவே 4கே புரொஜெக்டரில் பார்த்தாலும் பெரிய வித்தியாசம் இருக்காது, ஹாலிவுட் படங்களின் 4K DCP PRINT பார்க்கும் போது வேண்டுமானால் வித்தியாசம் உணரலாம்.

 இதில்  MXF (Material eXchange Format) files and playlist/index XML files வடிவில் படம் பதியப்பட்டிருக்கும். டிசிஐ தரத்தின் படி 2K resolution up to 60 fps, 4K resolution up to 30 fps, and 2K 3D at 48 fps. என ஜெபெக்2 வடிவில் வீடியோ காட்சிகள் பதியப்பட்டிருக்கும்.

ஒலியானது MXF files வடிவில் standard WAV ஃபார்மேட்டில்  24-bit sampling rate இல் 48 or 96KHz. இல் பதியப்படும். தற்போதுள்ள வடிவில்  12 separate audio channel களை டிசிபி யில் பதியலாம். மொத்த  டிஜிட்டல் பிரிண்ட்டின் அளவு  படத்ததின் நீளத்தை பொறுத்து 200-300 ஜிபி இருக்கும். இதனை ஹார்ட் டிஸ்க் வடிவில் திரையரங்களுக்கு அனுப்புவார்கள், அல்லது சேட்டலைட் இணையம் மூலமும் அனுப்புவார்கள் ,ஆனால் பெரும்பாலும் அப்படி செய்வதில்லை, சேட்டலைட் மூலம் அனுப்பும் பிரதி சரியாக வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது என பேக் அப்பிற்கு ஒரு ஹார்ட் டிஸ்க் அல்லது புளு ரே டிவிடியும் அனுப்ப வேண்டும் என்பது விதி ,எனவே இரட்டிப்பு செலவு என நேரடியாக ஹார்ட் டிஸ்க்கினை அனுப்புவது வழக்கம்.

QUBE,UFO,PXD என்றால் என்ன?

QUBE,UFO,PXD  என பல திரையரங்குகளிலும் போட்டிருப்பார்கள் , இவை எல்லாம் டிஜிட்டல் சினிமா டிஸ்ட்ரிபுஷன் நிறுவனத்தின் பெயர்கள், மற்றும் அவர்கள் பயன்படுத்தும் டிஜிட்டல் சினிமா செர்வர்களின் பெயர் ஆகும்.

டிஜிட்டல் புரொஜெக்டர் என்பது ஒரு "Digital Optical Instrument" அது படத்தினை மட்டுமே உருவாக்கும் ஒரு DCP மீடியா ஃபைலை இயக்காது , அதனை இயக்க ஒரு Integrated media Block(IMB) எனப்படும் மீடியா பிளேயர் தேவை, இவற்றை நெட் ஒர்க்கில் இணைத்து டிஜிட்டல் சினிமா செர்வராகவும் பயன்ப்படுத்தலாம், ஒரே IMB இல் 5 டிஜிட்டல் புரொஜெக்டர் வரைக்கும் இணைத்து இயக்கலாம்.மேலும் IMB யை சேட்டலைட் மூலம் இணைத்து வெளியில் உள்ள மீடியாவை டவுன் லோட் செய்தும் டிஜிட்டல் புரொஜெக்டர் மூலம் திரையிடலாம், எனவே தான் டிஜிட்டல் சினிமா செர்வர் அல்லது IMB எனப்படுகிறது. ஒரு IMB என்பது கணினி , டிஜிட்டல் புரொஜெக்டர் என்பது டிஸ்பிளே யூனிட்(மானிட்டர்) எனலாம்.

QUBE,UFO,PXD   என்பது IMB களின் பெயர் , இவற்றோடு புரொஜெக்டரை இணைத்து இயக்க வேண்டும். மேலும் இவர்களே புரொஜெக்டர், இன்னபிற டிஜிட்டல் திரையரங்க கருவிகளையும் வழங்குவதுண்டு.

QUBE,UFO,PXD   ஆகிய நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்க டிஜிட்டல் கருவிகளை தங்கள் செலவில் திரையரங்குகளுக்கு அமைத்து கொடுக்கிறார்கள், பின்னர் போட்ட முதலீட்டினை எடுக்க திரையரங்கில் ஒளிபரபப்படும் விளம்பர உரிமை மற்றும் Virtual Print Fee or pay per show என்ற அடிப்படையில் கட்டணம் வசூலித்துக்கொள்வார்கள்.

Virtual Print Fee  என்பது ஒரு முறை மட்டும் ஒரு தொகையை வசூலிப்பது , ஒரு டிஜிட்டல் பிரிண்டுக்கு ரூ 7000-10000 ஆகும்,

 pay per show  முறையில் ஒரு காட்சிக்கு திரையரங்கை பொறுத்து 300 ரூ முதல் வசூலிக்கிறார்கள், இம்முறையில் ஒரு படம் 100 நாள் ஓடினால் ஒரு லட்சத்திற்கு மேல் கட்டணம் கொடுக்க வேண்டியதாகிவிடும்,இது படச்சுருளை விட அதிக கட்டணம் ஆகும், ஆனால் இம்முறையில் படம் வெளியிடும் போது பணம் கொடுக்க தேவையில்லை என்பதால் சிறிய படத்தயாரிப்பாளர்கள் பயன்ப்படுத்திக்கொள்வார்கள்.

 மேலும் QUBE,UFO,PXD  ஆகியவை ஆளுக்கு ஒரு தனி கம்பிரஷன் ஃபார்மேட், என்கிரைப்ஷன் என பயன்ப்படுத்துகிறார்கள், எனவே QUBE டிஜிட்டல் பிரிண்ட் ,UFO, வில் இயங்காது  UFO, பிரிண்ட் PXD இல் இயங்காது .இப்படி இவர்கள் செய்ய காரணம் ஒவ்வொருவரும் பணம் முதலீடு செய்து தியேட்டர்களை டிஜிட்டல் செய்துள்ளார்கள், அவர்களிடமே டிஜிட்டல் பிரிண்ட் போட வர வேண்டும் என்றே இப்படி செய்கிறார்கள். ஆனால் உலக அளவில் டிசிஐ வகுத்தது டிசிபி ஃபார்மேட் மட்டுமே.

QUBE,UFO,PXD  ஆகியவை டிசிஐ தரத்தில் இல்லை என்பதாலே தனி ஃபார்மேட்கள் ,என்கிரைப்ஷன் என பயன்ப்படுத்துகிறார்கள். இவர்கள் பயன்ன்படுத்தும் தரத்தினை பொதுவாக E-Cinema , என்பார்கள்.  உலக அளவில் DCI  தரத்தில் DCP முறையில் வெளியிடும் சினிமாவை D Cinema என்பார்கள் ,அவ்வாறு வெளியிடும் திரையரங்குகள்  I- certified  அரங்குகள் எனப்படும்.

UFO  (UFO movies india ltd ,mumbai ).75 மெகா பிக்சலில் கம்பரஸ் செய்து ஈ.சினிமாவாக வெளியிடுகிறது.

QUBE,-(Real image India ,chennai,mumbai ) 1-1.2 5 மெகா பிக்சலில் கம்பிரஸ் செய்து ஈ.சினிமாவாக வெளியிடுகிறது.

UFO  வை இயக்குவது UFO movies india ltd ,mumbai ,QUBE, ஐ இயக்குவது -Real image India ,chennai,mumbai  ஆகிய நிறுவனங்கள் ஆகும், இந்த இரண்டு நிறுவனங்களின் பெருமளவு பங்குகளை ரிலையன்ஸ் ஆட்லேப்ஸ் வாங்கி விட்டது .

PXD (Prasad Xtreme Digital) என்பது சென்னையில் உள்ள பிரசாத் லேப்ஸின் நிறுவனம் ஆகும். - 1-1.25 மெகா பிக்சலில் கம்பிரஸ் செய்து  ஈ.சினிமாவாக வெளியிடுகிறது.

ஈ-சினிமா ஃபார்மேட்டில் படத்தின் பிரதியானது MPEG-4  வடிவில் இருக்கும் அதிக பட்ச பிக்சல் தரம் 1.25 கே மட்டுமே இருக்கும்., இது வழக்கமான DTH TV  ஒளிபரப்பும் பட தரத்திலானது , இதற்கு அதிக பட்சமாக  Band width 1.2 Mbps மட்டுமே போதும்  எனவே எளிதில் சேட்டலைட் இணையம் மூலம் அனுப்பலாம்.



தமிழகத்தில் உள்ள டிஜிட்டல் அரங்களின் எண்ணிக்கை சுமார் 700 இருக்கலாம் என்கிறார்கள், இதில் UFO 226 அரங்குகளும், QUBE சுமார் 300 அரங்குகளும் ,புதிதாக சந்தைக்கு வந்த பிரசாத் லேப்சின் PXD 100 அரங்குகளுக்குள்ளாக கைவசம் வைத்துள்ளன. படச்சுருள் பிரிண்ட் வியாபாரத்தின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை என்பதால் டிஜிட்டல் பிரிண்ட் தொழிலில் அனைவரும் போட்டியிடுகின்றனர்.

இந்நிறுவனங்கள் தாங்களே முன் வந்து பல தியேட்டர்களை சொந்த செலவில் டிஜிட்டல் செய்வதன் நோக்கம்  டிஜிட்டல் பிரிண்ட் போடும் வாய்ப்பு  மற்றும் பட விநியோக உரிமை யார் பெற்றிருந்தாலும் டிஜிட்டல் டிஸ்ட்ரிபியுஷன் வாய்ப்பு அதிக தியேட்டர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்கு வரும் என கணக்கிட்டே இவ்வாறு செய்கிறார்கள்.

எனவே திரையரங்குகளில் 2கே அல்லது 4கே புரோஜெக்டரை அவர்களே வாங்கி வைத்திருந்தாலும் மேற்கண்ட டிஜிட்டல் டிஸ்ட்ரிபுஷன் மூலம் வெளியிட்டால் 2கேவுக்கு குறைவான ரெசொலுஷனில் தான் படம் தெரியும்.

2கே அல்லது 4கே யில் தரமாக திரைப்படம் திரையிட வேண்டும் என விரும்பினால் 2கே ஹார்ட் டிஸ்க் பிரிண்டினை கேட்டு பெற்று திரையரங்குகள் வெளியிட வேண்டும், சில திரையரங்குகள் மட்டுமே அப்படி செய்வதாக தகவல்.

  MPEG-4 Format E-Cinema வடிவில் கம்பிரஸ் செய்யப்பட்ட பிரிண்ட்களை தான் தற்போதுள்ள  இணைய வேகத்திற்கு  அனுப்புவது எளிது , கம்பிரஸ் செய்யாமல் முழு 2கே டிசிபி ஃபைலையும் இணையத்தில் அனுப்ப வேண்டும் எனில் minimum 250 ,Mbps Internet speed தேவை தற்சமயம் அது சாத்தியமில்லை.

 இப்படி இணையம் மூலம் அனுப்பினாலும் ஒவ்வொரு காட்சிக்கும் ஸ்ட்ரீம் செய்வதில்லை ,ஒரு முறை டவுன் லோட் செய்து ஹார்ட் டிஸ்கில் பதிவு செய்து கொண்டு , பின்னர் அதை வைத்து தொடர்ந்து இயக்க வேண்டும், மீடியா பிளாக்கில் உள் நினைவகமாக சுமார் ஒரு டெரா பைட் அளவுக்கு ஹார்ட் டிஸ்க் உள்ளது, அதில் சேமித்து கொள்வார்கள் அல்லது ஒரு எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்கில் சேமிப்பார்கள். இப்படி சேமிக்கப்பட்ட டிஜிட்டல் பிரிண்டை இயக்க டிகிரப்ஷன் கீ தேவை  இதனை  ஒவ்வொரு காட்சிக்கும் முன்னர் என்கிரைப்ஷன் கீ மட்டும் சம்பந்தப்பட்ட டிஜிட்டல் டிஸ்ட்ரிபுஷன் செர்வரில் இருந்து டவுன் லோட் செய்ய வேண்டும், இதன் மூலம் எத்தனைக்காட்சிகள் இயக்கப்பட்டன என்பதையும், திருட்டு டிவிடி தயாரிப்பதும் தடுக்கப்படும்.

மீடியா பிளாக், டிஜிட்டல் புரொஜெக்டர், என்கிரப்ஷன் கீ என அனைத்து வேலைகளையும் ஒரு லேப் டாப், அல்லது கணினி கொண்டு எளிதில் Theatre Management System(TMS) மூலம் கட்டுப்படுத்தலாம், மேலும் மொபைல் போன் மூலம் கூட மீடியா பிளாக்கினை கட்டுப்படுத்தி திரைப்படம் காட்ட முடியும்.

மீடியா பிளாக் கண்ட்ரோல் பேனல்:


சர்வதேச டிசிஐ தரமான குறைந்த பட்ச டிஜிட்டல் ரெசல்யுஷன் 2கே வை விட குறைவாக இந்தியாவில் படங்கள் திரையிடப்படுவதை தடை செய்ய கோரி ஆந்திராவில் பொது நல வழக்கு போடப்பட்டு நிலுவையில் உள்ளது.

டெக்கான் குரோனிக்கல் செய்தி:

Cheated!

July 13, 2012 By B.V.S. Prakash DC
The International Standard Organisation says only resolutions of 2,000 megapixels are appropriate for the big screen and anything lesser is simply bad to the human eye. But in Andhra, with one of the largest film industries, there are only three digital projectors available — UF0, Qube and PXD, and their resolutions are… wait for it… 720 MP, 1080 MP and again, just 1080 MP!

DC has found that the quality of films being screened at theaters across the state is just DVD quality — the very same you get in your living rooms! And at a time when Tollywood’s film-makers are fighting piracy, moviegoers are being cheated with bad quality screenings.


http://www.deccanchronicle.com/tabloid/hyderabad/cheated-031
---------------------------------

Barco 4k projector


Sony ,BARCO ,Christie,NEC ஆகியவை 4கே புரொஜெக்டர்களை தயாரித்து வழங்குவதில்  முன்னணியில் உள்ளன. தமிழ் நாட்டில் சென்னை சத்யம் தியேட்டர்ஸ்,மதுரை குரு தியேட்டரில்  Sony CINIALTA-SRXD  4கே புரொஜெக்டர்களை நிறுவியுள்ளன. மேலும் மதுரை தங்க ரீகல் தியேட்டரில் பார்கோ 4கே புரொஜெக்டருடன் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 7.1 டால்பி ஒலி அமைப்பும் நிறுவியதாக செய்திகள் சொல்கின்றன.தமிழ் நாட்டில் வெகு சில 4 கே புரொஜெக்டர்கள் புழக்கத்தில் இருந்தாலும் டிஜிட்டல் டிஸ்ட்ரிபியுட்டர்கள் 2கே விற்கு குறைவாகவே படங்களை வெளியிடுவதால் பெரும்பாலும் குறைவான ரெசொல்யுஷனில் தான் நாம் படம் பார்க்க வேண்டியதாக இருக்கும். தியேட்டர் அதிபர்கள் தங்கள் புரொஜெக்டருக்கு ஏற்றவாறு 4கே அளவுக்கு பிரிண்ட் கேட்டாலும் கிடைக்காது அதிக பட்சம் 2 கே வில் தான் பிரிண்ட் போடும் வசதி இந்தியாவில் உள்ளது.

இந்தியாவில் மொத்தம் சுமார் 12,600 திரையரங்குகள் உள்ளதாகவும் அவற்றில் 7000 திரையரங்குகள் டிஜிட்டல் ஆக மாற்றப்பட்டுள்ளது என்றும் அவற்றில் சுமார் 400 அரங்குகளே 2கே அல்லது அதற்கு மேல் திரையிடும் வசதியுள்ளவை என டிசிஐ சான்றளிக்கப்பட்டுள்ளது.Scrabble என்ற நிறுவனமே 2கே அல்லது அதற்கு மேம்பட்ட டிஜிட்டல் பிரிண்ட் அளிக்கும் வசதியினை பெற்றுள்ளது என்கிறார்கள், இதனையும் ரிலையன்ஸ் ஆட் லேப்ஸ் வாங்கியுள்ளது.

ஹாலிவுட்டில் கூட நூற்று சொச்சம் படங்கள் அளவிலேயே 4கே பிரிண்ட் போடப்பட்டுள்ளது. தற்போது வந்த ஜேம்ஸ் பாண்ட் படம் skyfall 4k வில் பிரிண்ட் போடப்பட்ட படம் ஆகும்.

ஹாலிவுட்டில்  இதுவரை 4கேவில் வெளியான படங்களின் பட்டியலை சோனியின் இணைய தளத்தில் காணலாம்.

http://pro.sony.com/bbsc/ssr/mkt-digitalcinema/resource.latest.bbsccms-assets-mkt-digicinema-latest-Sony4KDigitalCinemaTitles.shtml#2012

------------------------------

பின் குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி:

http://www.dlp.com/cinema/

http://pro.sony.com/bbsc/ssr/mkt-digitalcinema/mkt-digitalcinemaprojectionsystems/#

http://www.barco.com/en/products-solutions/projectors/digital-cinema-projectors?gclid=CM_BmKGVsLMCFY4a6wodqSUANw

http://pxdnet.com/

http://www.extremetech.com/extreme/128963-how-digital-technology-is-reinventing-cinema

http://en.wikipedia.org/wiki/Visual_acuity

மேலும் விக்கி, கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
-----------------------