Tuesday, August 14, 2007

நாற்று நடும் எந்திரம் !

paddy seedling transplanter

இந்தியாவில் நெல் வயலில் நாற்று நடுவதற்கு மனித சக்தியே இதுவரைக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில் நடவின் போது பாடுவதற்கு நாட்டுப்புற பாடல்கள் கூட உண்டு!

தற்போது நாற்று நட எந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது, நமக்கு வேண்டுமானால் இது புதிதாக இருக்கலாம் , ஜப்பான், சீனா , கொரியா போன்ற நாடுகளில் 1970 களில் இருந்தே எந்திர நடவு நடை முறையில் உள்ளது!

நாற்று நடுவது உடல் வலிக்கொடுக்கும் ஒரு வேலை, குனிந்தவாறே தொடர்ந்து இருக்க வேண்டும். ஆண்களை விட பெண்களின் உடல் நெகிழ்வு தன்மை கொண்டது என்பதால் இதனை எளிதில் செய்வார்கள் எனவே நடவிற்கு பெண்களே அதிகம் நடவு வேலைக்கு பயன்படுத்தப்படுவார்கள்.

நடவு எந்திரத்தில் இரண்டு வகை உள்ளது,

  1. மனித சக்தியால் இயங்குவது ,
  2. எந்திர சக்தியால் இயங்குவ்து.
இரண்டும் செயல்படும் தத்துவம் ஒன்றே!

எந்திர நடவிற்கு சாதாரணமாக வளர்க்கப்படும் நாற்றை பயன்படுத்த முடியாது , இதற்கென தனியாக நாற்று வளர்க்க வேண்டும். அதனை பாய் நாற்று என்பார்கள்.

அதிக அடர்த்தி கொண்ட பாலிதீன் விரிப்பின் மீது நன்கு உழுத மிருதுவான வயல் மண்,மணல் , தொழு உரம் இவற்றை கலந்து பரப்பி ஒரு மண் படுக்கையை 3 cm உயரத்திற்கு உருவாக்க வேண்டும். அதன் மீது முளைக்கட்டிய விதைகளை தூவி ,விதைகளை மூடுவது போல சிறிது மண் தூவ வேண்டும். பின் வழக்கம் போல நாற்றுகளை வளர்க்க வேண்டும். இதற்கு குறைவான நீரே போதும் , பூவாளி எனப்படும் நீர் தெளிப்பான் மூலம் நீர் தெளித்தாலே போதும்.

நாற்றுகள் வளர்ந்தவுடன் இரண்டு அடி நீளம் , 1 அடி அகலம் வருவது போல பத்தைகளாக நாற்றுடன் வெட்டி எடுத்து வைத்துகொள்ள வேண்டும்.

நாற்று நடும் எந்திரம்:

ஒரே நேரத்தில் எட்டு வரிசைகளில் நடும். சாய்வான நாற்று வழங்கும் வார்ப்புகள் இருக்கும். நாற்றை மனித விரல்கள் போல் எடுக்க 3 முனைகள் கொண்ட பிக்கர் (picker)எனப்படும் கொக்கிகள் இருக்கும். நாற்றுபத்திகளை அடுக்கிகொண்டு எந்திரத்தை ஓட்டி சென்றால் மட்டும் போதும். 3 மணி நேரத்தில் ஒரு ஏக்கரில் நடும். நாற்று வரிசைக்கிடையே உள்ள இடை வெளி(24 cm), ஒரு நாற்று முடிச்சில் எத்தனை நாற்று(3 or 5) இருக்க வேண்டும் என்பது போன்றவற்றை நாம் அமைத்து கொள்ள முடியும்.

ஒரு நாற்று நடும் எந்திரத்தின் விளை 80,000 - 1,50,000 Rs/- வரை எஞ்சின் திறனுக்கு ஏற்ப கிடைக்கிறது.

வழக்கமாக நடவு வேளைக்கு கூலியாக சுமார் 1500 ரூபாய் ஆகும். இதன் மூலம் 600 ரூபாயில் முடித்து விடலாம். இந்தியாவில் நிறைய மனித ஆற்றல் இருந்த போதிலும் தற்போது பெரும்பாலோர் நகரங்களுக்கு இடம் பெயர்வதால் விவசாயத்திற்கு வேலையாட்கள் கிடைப்பது தட்டுப்பாடாக உள்ளது , இத்தகைய சூழலில் நடவு எந்திரம் உதவும்!

டா பே, எஸ்கார்ட்ஸ், போன்ற டிராக்டர் தயாரிப்பாளர்கள் இந்த எந்திரங்களை தயாரிக்கிறார்கள்.
*****

22 comments:

மாசிலா said...

தகவலுக்கு நன்றி வவ்வால்.

SurveySan said...

நல்லதா கெட்டதா?

சட்டு புட்டுனு மேட்டர முடிக்கலாம். efficiency ஜாஸ்தியாகலாம்.
அமெரிக்கால இந்த வேலையெல்லாம் இயந்திரங்கள் தான் செய்யுது.
ஆனா, அதுக்கேத்தமாதிரி பெரிய்ய்ய்ய்ய்ய இடங்கள் இங்க இருக்கு.

நம்ம ஊர்ல தான் ஆளுங்க பஞ்சமில்லாம இருக்காங்களே இத செய்ய. அவங்க என்ன பண்ணுவாங்க?

Anonymous said...

சரி, வவ்வால் சார், இது இந்தியாவுக்கு வர ஏன் 35 வருடங்களானது?. tafe, escorts எல்லாரும் சரச்சிக்கிட்டு இருந்தாங்களா? எல்லாத்தையும் 25-30 வருசம் பிறகு கொண்டு வந்தா நாடு எப்படி உருப்படடும்.
லேட்டானதுக்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறிங்க!
யாராவது பதில் சொல்லுங்க பிளிஸ்.

மாசிலா said...

//சரி, வவ்வால் சார், இது இந்தியாவுக்கு வர ஏன் 35 வருடங்களானது?. tafe, escorts எல்லாரும் சரச்சிக்கிட்டு இருந்தாங்களா?//

டேய், அனானி! நீ மட்டும் என்ன செய்துகிட்டு இருந்த? மொதல்ல நீ இதுக்கு பதில் சொல்லிட்டு அப்றமா மத்தவங்கள கொற சொல்ல ஆரம்பி.

வந்துட்டான் பெருசா, தூக்கிகினு!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நமது நாடுகளில் போதுமான மனித வளம் இருக்கும் போது, அவர்களுக்கு வேலையும் தேவை எனும் போது இவ்வளவு விலை கொடுத்து இந்த இயந்திரம் தேவையா?
கூலியை சற்றுக் கூட்டிக் கொடுத்தாலே நம்மவர் ஆர்வமாகச் செய்வார்களே!!!

வடுவூர் குமார் said...

சில மாதங்களுக்கு முன்பு இங்குள்ள தொழிலாளியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவரும் இந்த இயந்திரத்தைப் பற்றி சொல்லி அதைத் தான் இப்போது பலரும் உபயோகப்படுத்துகிறார்கள் என்றார்.அதை பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் போட்டுவிட்டீர்கள்,மிக்க நன்றி.
போட்ட படத்தில் 6 (சரிவு) இருக்கிறது,இது வெவ்வேறு அளவில் வருகிறதா?அதிகபட்சம் 8 தானா?

வவ்வால் said...

வாங்க மாசிலா,வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி!

வவ்வால் said...

சர்வேசன்,

திறன் அதிகமாவதோடு, செலவும் குறையும். இந்தியாவில் பெரிய இடங்கள் இல்லை என்று சொல்ல. ஆளுங்க நிறைய இருக்காங்க ஆன கடினமான விவசாய வெலைகளை செய்ய புதிய தலைமுறையில் யாரும் முன்வருவதில்லை ,எல்லாரும் பட்டின மோகத்தில் கிடைச்ச பேருந்தோ , வாழைகாய் லாரியோ புடிச்சு சென்னை போன்ற நகரங்களுக்கு ஓடி போய் டெபிள் துடைக்கவும் சித்தமாக இருக்கிறார்கள்.

எப்போதாவ்து கிராமங்களுக்கு போனால் பாருங்கள் வயசானவர்களே விவசாய வேலை செய்வதை காணலாம். பல வருடங்களுகு முன்னரே இந்த எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலௌம் தற்போது தான் இங்கே நுழைய ஆரம்பித்துள்ளது காரணம் விவசாய பருவத்தில் ஆட்பற்றாக்குறை ஏற்படுவதால் தான்!

வவ்வால் said...

அனானி,

எதுக்கு ராசா இந்த வீர விளையாட்டுலாம். வேணாம் கண்ணா விட்று! சரி என் பதிவ படிச்ச பாவத்துக்காக உனக்கும் பதில் சொல்றேன், ஆன தேவையான விளக்கம் சர்வேசனுக்கு சொன்னதிலே இருக்கு அதுவே உனது கேள்விக்கும் பொருந்தும்!

தாமதமாக கொண்டு வரக்காரணம் தேவை வரும் போது தான் கொண்டு வர முடியும் ,அப்போது தொழில் வளர்ச்சி இல்லாத காலக்கட்டம் விவசாய வேலைக்கு ஆட்கள் அதிகம் கிடைத்தார்கள், தற்போது கிடைக்கவில்லை. இது ஒரு வகையில் பார்த்தால் வளர்ச்சி தான்!

வவ்வால் said...

நன்றி , மாசிலா, போனா போவுது விடுங்க , ஒரு வேளை இந்தியாவின் மீது அதி தீவிர அபிமானம் கொண்டவரோ என்னவோ நாடு உருப்படாம போச்சேனு வருத்தமா இருக்கும் :-))

வவ்வால் said...

யோகன் , நன்றி!

இங்கே நிறைய மனித வளம் இருக்கிறது ஆனலும் தற்போது தொழில் வளர்ச்சிக்காரணமாக முன்னர் விவசாய வேலைப்பார்த்தோர் எல்லம் அத்தகைய வேலைக்கு மாறி விட்டார்கள்.மேலும் இளைய தலைமுறைக்கு சேற்றில் இறங்கி வேலை செய்ய விருப்பம் இல்லை. கொழாய், சட்டை போட்டு உணவு விடுதியில் டேபிள் சுத்தம் செய்யவும் தயாராய் இருக்கிறார்கள் ஆனல் வயல் வேலைக்கு வர தயாராய் இல்லை.

இந்தியாவில் ஒரு சமச்சீரற்ற நிலையே நிலவுகிறது, சில இடங்களில் விவசாய நிலம் அதிகம் இருக்கும் வேலைக்கு தேவையான ஆட்கள் இருக்க மாட்டார்கள். சில இடங்களில் ஆட்கள் இருப்பார்கள் அங்கே விவசாயம் நடக்கும் அளவு குறைவாக இருக்கும். பல சமயங்களில் இப்படி வெளி ஊரில் இருந்து ஆட்களை கொண்டு வந்து வேலை செய்வதும் நடக்கிறது.

எனவே தான் தற்போது எந்திரமயமக்கும் விவசாயத்திற்கு அரசும் உதவுகிறது இந்த கருவி வாங்க வங்கிகளில் கடன் , 50 சதம் வரை மானியம் எல்லாம் தருகிறது!

விவசாயம் நடக்கும் பரப்பு குறையாமல் அதே சமயம் அதில் ஈடுபடும் மனித ஆற்றலை வேறு தொழில்களுக்கு மாற்றுவது வளர்ச்சியின் அறிகுறி!

சீனா நம்மை விட அதிக மக்கள் தொகை கொண்ண்ட நாடு அவர்கள் ஆரம்ப்பத்திலேயே எந்திர மயம் ஆகி விட்டார்கள்.அதனால் தன தொழில் துறையில் நம்மை விட மேலே சென்று விட்டார்கள்.

வவ்வால் said...

குமார் , நன்றி!

நல்லா கவனமா பார்த்து இருக்கீங்க! ஆமாம் 6 சரிவு , 8 சரிவு என்று வகைகளில் கிடைக்கிற்து. ஜப்பான் , சீனாவில் எல்லாம் 6 வரிசை தான் இருக்கும் இந்தியாவில் 8 வரிசை இருக்கும். நாம் அங்கு இருந்து இறக்குமதி செய்து அதை 8 வரிசையாக மாற்றிக்கொள்வோம். படத்தில் உள்ளது சீன தயாரிப்பு எந்திரம்.

அதிகபட்சம் 8 வரிசை தான் ஒரு பட்டம் எனப்படும் பாத்தியில் நட முடியும் அதுவே அதிகம். தற்போது எல்லம் ஒரு குற்றுக்கும்(hill) அடுத்த குற்றுக்கும் அதிக இடைவெளி விட வேண்டும் என்பதே நவீன விவசாயம்.

நடவு எந்திரம் மட்டும் இல்லை அறுவடை, மற்றும் தூற்றுவதை சேர்த்து செயும் ஒருங்கிணைந்த அறுவடை எந்திரம்(combined harvester) கூடப்பயன்ப்டுத்துகிறார்கள்.

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

நான் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் நம் மக்கள் முன்னமே கேட்டு விட்டார்கள், எனவே எனக்கு எந்த கேள்வியுமில்லை இந்த எந்திர முறையைக் கொண்டு நாற்று நடும் திட்டத்திற்கு.


உங்களின் பதில்களும், சமூக கவனிப்பு முறையும் அபாரம். அதிலும், ஏன் அந்தக் காலக் கட்டத்தில் என்று ஆரம்பித்திருந்த 'ஒரு அனானியின் பின்னூட்டத்திற்கு நீங்கள் கொடுத்திருந்த காரணம்தான் பிரதானம்.

உதாரணமாக மேலும் ஒன்று இங்கு வளர்ந்த நாடுகளில் ஒரு நோஞ்சான் கூட ஒரு 50 வருடம் வாழ்ந்த ஒர் மீட்டர் சுற்றளவு உள்ள மரத்தை தனி ஆளாக ஒரு மணி நேரத்தில் வெட்டி வீழ்த்தி, அந்த மரம் இருந்த இடமே இல்லாமல் தடயத்தையே அழித்துக் காட்டும் அளவிற்கு டூல்ஸ்கள் உண்டு. அதுவும் அந்தக் கருவிகள் குறைந்தப் பட்சம் ஒரு 30 ஆண்டுகளாவது பொழக்கத்தில் இருக்க வேண்டும். ஏன் அவை இன்னும் நம்மூர் பக்கம் பெரிய அளவில் அறிமுகப் படுத்தப் படவில்லை. இன்னமும் சரக், சரக் கென்று ரம்பம் கொண்டு இருவர் ஒரு நாள் முழுக்க அறுக்கிறார்கள். சற்றே எண்ணிப் பாருங்கள். புத்தி போதலித்து பேசுவது சுலபம், சிந்திப்பது கடினம்.

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

நான் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் நம் மக்கள் முன்னமே கேட்டு விட்டார்கள், எனவே எனக்கு எந்த கேள்வியுமில்லை இந்த எந்திர முறையைக் கொண்டு நாற்று நடும் திட்டத்திற்கு.


உங்களின் பதில்களும், சமூக கவனிப்பு முறையும் அபாரம். அதிலும், ஏன் அந்தக் காலக் கட்டத்தில் என்று ஆரம்பித்திருந்த 'ஒரு அனானியின் பின்னூட்டத்திற்கு நீங்கள் கொடுத்திருந்த காரணம்தான் பிரதானம்.

உதாரணமாக மேலும் ஒன்று இங்கு வளர்ந்த நாடுகளில் ஒரு நோஞ்சான் கூட ஒரு 50 வருடம் வாழ்ந்த ஒர் மீட்டர் சுற்றளவு உள்ள மரத்தை தனி ஆளாக ஒரு மணி நேரத்தில் வெட்டி வீழ்த்தி, அந்த மரம் இருந்த இடமே இல்லாமல் தடயத்தையே அழித்துக் காட்டும் அளவிற்கு டூல்ஸ்கள் உண்டு. அதுவும் அந்தக் கருவிகள் குறைந்தப் பட்சம் ஒரு 30 ஆண்டுகளாவது பொழக்கத்தில் இருக்க வேண்டும். ஏன் அவை இன்னும் நம்மூர் பக்கம் பெரிய அளவில் அறிமுகப் படுத்தப் படவில்லை. இன்னமும் சரக், சரக் கென்று ரம்பம் கொண்டு இருவர் ஒரு நாள் முழுக்க அறுக்கிறார்கள். சற்றே எண்ணிப் பாருங்கள். புத்தி போதலித்து பேசுவது சுலபம், சிந்திப்பது கடினம்.

சிவபாலன் said...

வவ்வால்.

நல்ல பதிவு!


பகிர்வுக்கு மிக்க நன்றி!

வவ்வால் said...

வாங்க தெ.கா,

நன்றி!

உண்மை தான் பல எந்திரங்களும் , நவீன கருவிகளும் வரவில்லை இங்கே அங்கே ஆணி அடிக்க கூட ஒரு கருவி உள்ளது எனக்கேள்விபட்டுள்ளேன் , இங்கே எல்லாமே மனித ஆர்ரல் தான் இதனால் கால விரயம், குறித்த நேரத்திற்கும் முடிக இயலாமை என இருக்கிறது. நமது பொருளாதாரமும் இன்னொரு காரணம் ஆணி அடிக்க 10 ரூபாய்க்கு சுத்தி வாங்கி அடிக்காம 1000 கொடுத்து கருவி வாங்கனுமா என பார்ப்பார்கள்.

நமது மனித ஆற்றலை வேறு பல புதிய உற்பத்திகளுகு சரியான வழியில் மாற்றி விட வேண்டும் அப்போது தான் வல்லரசாக மாற முடியும்!

வவ்வால் said...

வாங்க சிவபாலன்,

கருத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி!

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன். நான் சொல்ல வந்தது அது போன்று கருவிகளை நம் தயாரிப்பதிலேயோ அல்லது தருவித்துக் கொள்வதிலேயோ ஒன்றும் சலைத்தவர்கள் அல்ல. இருந்தாலும் நீங்கள் முன்பு கூறிய போதுமான அளவிற்கு மனித ஆற்றல் இருக்கும் பொழுது, அவர்களும் அந்த வேலையை செய்வதின் மூலமாக வருமானம் ஈட்டுகிறார்கள் என்பதின் பொருட்டு அப்படியே விட்டுவிடுவதில் ஒன்றும் தவறில்லை (அது போன்ற நவீன கருவிகள்-அழிவை துரிதப் படுத்தும்).

நான் சொல்லவந்தது அது போன்ற மரம் வெட்டும் கருவிகளை ஏன் இந்தியா இன்னும் அறிமுகப் படுத்தவில்லையென்றால், என் புரிதல் ஒரு அருவாவைக் கொண்டு ஒரு சிறு கிளையை ஒருவர் வெட்டலாம், அதுவே மின்சார சங்கிலி ரம்பமாக இருந்தால் ஒரு கிளையை வெட்டுவதற்கு பதில் ஹாபியாக ஒரு மரத்தையே கபளீகரம் பண்ண முடியும் அதே அருவாவைக் கொண்டு வெட்டிய நேரத்தை விட இன்னும் துரிதமாக.

நம் ஊரிலில் இருக்கும் மரங்களின் அடர்வுத் தன்மைதான் உங்களுக்குத் தெரியும். இது போன்ற அது சக்தி வாய்ந்த வெட்டுக் கருவிகளை அடி மாட்டு விளைக்கு விற்றால் எஞ்சுவது என்னவாக இருக்குமென்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அதுவேதான், மண் அள்ளும், அல்லது குழி பறிக்கும் எந்திரங்களும் துரிதமான வேலை ஆனால் அதன் சக்திக்கு முன்னால் எங்கே இருக்கிறது பூமியில் இயற்கை வளங்கள் புரட்டிப் போடுவதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதற்கு உற்பத்திக்க.

அதனால், தாமதமாக சில வேலைகள் ஆவதிலும் நன்மைகள் உண்டு ;-). ஏனெனில் இருப்தென்னவோ ஒரே பூமிதான்.

நன்றி வவ்ஸ்!!

வவ்வால் said...

தெ.கா,
நன்றி, கொஞ்சம் கொழம்பித்தான் போய்ட்டேன். நமக்கு அத்தகைய வசதிகள் இல்லையே என நான் நினைப்ப்துண்டு , நீங்களும் அப்படி தான் சொல்கிறீர்கள் என நினைத்துவிட்டேன். ஆனால் அழிவை துரிதப்படுத்தும் என சொன்னாலும். நாம் சாதாரண வேலைகளுக்கு கூட அதிக நேரமும் ,உழைப்பும் செலவிடுகிறோம்.அதனை வேறு வகையில் திசை திருப்பு உற்பத்தியை பெருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.

உதாரணமாக மோசமான சாலையால் ஒரு மணி நேரத்தில் போக வேண்டிய இடத்திற்கு இரண்டு மணி நேரம் செலவிடுகிறோம். அந்த ஒரு மணி நேர இழப்பு திரும்ப பெர முடியுமா?

நம்மிடம் அதிக மனித ஆற்றல் உள்ளது அதற்காக அதனை சும்மவே அதிக பலன் மேற்கொண்டு வராது என தெரிந்தும் அதில் செலவிடுவதை விட , புத்திசாலித்தனமாக வேறு வகையில் செலவிட வேண்டும். அதே சமயத்தில் இயற்கை சமச்சீரும் குலையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!

குமரன் (Kumaran) said...

நாற்று நடும் எந்திரம் நல்லா இருக்கு. இந்த ஊருல (புதரகத்துல) வயல்வெளிக்குப் போய் எப்படி பயிர் எல்லாம் செய்யுறாங்கன்னு பாக்கணும்.

வவ்வால் said...

வாங்க குமரன் ,
நன்றி,

புதரகம்ல எல்லாம் எந்திர மயமாக்கப்பட்ட விவசாயம் தான் எனப்படித்தேன் நீங்கள் நேராப்பார்த்து வித்தியாசங்களை எழுதுங்க.

மரக்கன்று நட, விதைக்க, , ஒருங்கினைந்த அறுவடை எந்திரம், பழன்களை பறிக்கவும் எந்திரம்,பழங்களை எந்த அளவுக்கு பழுத்துள்ளது என வகைப்பிரிக்க கூட கிரேடிங் அன்ட் சார்ட்டிங் எந்திரம் உள்ளது, மருந்து தெளிக்க விமானம் கூட வைத்துள்ளார்கலாம்.

விவசாயி said...

நன்றி, விவசாய இயந்திரம் பற்றிய தகவல்களை அளித்தற்க்கு என்னை போன்ற விவசாயிகள் சார்பில் நன்றி.
நடவு மிஷினில் நடவு செய்வதற்கு போதிய தொழில் நுட்பங்கள் விவசாயிகளுக்கு தெரிவதில்லை. உதாரணமாக நிலம் சமமாகவும், பதமாகவும் இருக்கவேண்டும். களை அதிகமாக வரும். நாற்று சில இடத்தில் அழுகிபோகும், அதனை களைத்து நடவேண்டும் போன்ற சிரமங்கள் உள்ளது. அதனால் இதன் பயன்பாடு எளியது அல்ல.