இயற்கை விவசாயம் வெகு லாபகரமானதே, அதில் அதிகம் பயன்படும் ஒரு இயற்கை நோய் எதிர்ப்பு, வளர்ச்சி ஊக்கி பஞ்சகவ்யம் .இதனால் உற்பத்தி திறனும் அதிகரிக்கிறது .அதனை தயாரிப்பதை எப்படி என்று பார்ப்போம்!
பஞ்சகவ்யம் என்றால் பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவது.
அவை!
1)சாணம்
2) கோமியம்
3) பால்
4) நெய்
5) தயிர்
இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கபடுவதே பஞ்சகவ்யம் இது ஆயுர் வேத வைத்தியம் , பயிர் வளர்ப்பு இரண்டிலும் பயன்படுகிறது.
மேலும் சில மூலப்பொருட்களை சேர்த்து இதன் திறனை அதிகரித்து இயற்கை விவசாயத்தில் தற்போது பயன்படுத்துகிறார்கள்.
மேம்படுத்தப்பட்ட பஞ்சகவ்யம் செய்யும்முறை:
மூலப்பொருள்:
*4 கிலோ சாண எரிவாயு கலனில் இருந்து பெறப்பட்ட சாணக்கூழ்
*1 கிலோ புதிய சாணம்
*3 லிட்டர் கோமியம்
*2 லிட்டர் பசும்பால்
*2 லிட்டர் பசு தயிர்
*1 லிட்டர் பசு நெய்
*3 லிட்டர் கரும்பு சாறு!
*12 பழுத்த வாழைப்பழம்
*3 லிட்டர் இளநீர்
*2 லிட்டர் தென்னம் கள்
இவை அனைத்தையும் வாய் அகன்ற மண்கலம் , அல்லது சிமெண்ட் தொட்டியில் விட்டு நன்றாக கலக்கவும். கலக்கப்போவது யாரு நாமளாச்சே கலக்கிட மாட்டோம்!
தொட்டியை மூடாமல் இதனை நிழலில் ஒரு வாரம் வைத்து இருக்க வேண்டும், தினசரி காலையும் மாலையும் ஒரு முறை கலக்கி விட வேண்டும்!
ஒரு வாரத்திற்கு பின் 20 லிட்டர் பஞ்சகவ்யம் தயார். இதில் ஒரு லிட்டர் எடுத்து அதனை 100 லிட்டர் தண்ணீரில் கலந்தால் 3 சதவீத அடர்த்தியுள்ள பஞ்ச கவ்யம் கிடைக்கும் அது ஒரு ஏக்கருக்கு தெளிக்க போதும்.
மேலும் விதைகளை நாற்றாங்களில் விதைக்கும் முன் 30 நிமிடம் பஞ்சகவ்ய கரைசலில் ஊரவைத்து விதை நேர்த்தி செய்தால் நாற்றுகள் நன்கு வளரும் நெல்லும் அதிகம் தூர்கட்டும்!
பஞ்ச கவ்யம் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கி, வளர்ச்சி ஊக்கி! இதனை தெளித்தால் மட்டும் போதும் மேற்கொண்டு எந்த பூச்சி மருந்தும் அடிக்க வேண்டாம் வயலுக்கு!
பஞ்ச கவ்யம் தெளித்த பிறகு மேலும் அதிக பலன் கிடைக்க தேங்காய் பால், மோர் கலந்து அதை ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் செர்த்து வயலுக்கு தெளித்தால் கூடுதல் வளர்ச்சி கிடைக்கும்.
17 comments:
வவ்வால்,
நான் இதனை இப்பத்தான் பார்த்தேன். இது போன்று இன்னும் நிறைய இயற்கை உரங்கள் எப்படி தயாரிக்கிறதுன்னு இருந்தா எழுது வாருங்கள்.
இது கண்டிப்பாக பரப்ப பட வேண்டிய விசயம். இன்னொன்னும் கேள்விப் பட்டேனே. இது போன்றே வேப்பம் பழங்களை கொண்டு பூச்சிக் கொல்லி தயாரிப்பதனைப் பொருட்டும். அது எந்தளவிற்கு சாத்தியம்?
நன்றி நண்பா!!
வாங்க தெ.கா.
நன்றி!
//இது போன்றே வேப்பம் பழங்களை கொண்டு பூச்சிக் கொல்லி தயாரிப்பதனைப் பொருட்டும். அது எந்தளவிற்கு சாத்தியம்?//
வேப்பம் கொட்டை கொண்டு செய்வது அது நீம் எக்ஸ்ட்ராக்ட் என்பார்கள் , மேலும் வேப்பம் எண்ணை ,வேப்பம் புண்ணாக்கு அனைத்துமே இயற்கை பூச்சிக்கொல்லியாகப்பயன்படுகிறது. வேப்ப மரத்தில் உள்ள ஆசார்டிக்டின் என்ற அல்கலாய்டுக்கு பூச்சி , நோய் கொல்லும் தன்மை உண்டு!
நல்ல இடுகை வவ்வால். பசுமை விகடனில் அமிர்தகலசம் என்ற பெயரில் தயாராகும் இயற்கை உரத்தை பற்றி படித்திருக்கிறேன்.இதுபோன்ற முயற்சிகள் வெற்றி அடைய அரசு உதவவேண்டும்.
வேப்பெண்ணை பூச்சிக் கொல்லி, அமெரிக்க தோட்டக் கடைகளில் கிடைக்கிறது!
வாங்க செல்வன் ,
நன்றி! இது போன்ற செயல்பாடுகளில் அரசின் பங்களிப்பு வெகு குறைவே , எப்போதாவது அரசின் விவசாயக்கூட்டங்களில் தேவையானால் இதனை தொட்டுக்கொள்ள எடுதுக்கொண்டு பேசுவார்கள்!
வேளாண் பல்கலைகளில் கூட பாட அளவில் வைத்துக்கொண்டு பேசிக்கொள்வார்கள். பெரிய அளவில் ஆய்வுகள் அவ்வளவாக நடப்பதில்லை.ஏதோ சோகையாக ஆங்காங்கே சிலர் ஆய்வில் ஈடுபடுகிறார்கள்
தென்னையில் ஈரியோ பைட் என்ற சிலந்தி தாக்குதல் நடத்தியது அதனை கட்டுப்படுத்த வேப்பம் எண்ணை தான் சிறந்த மருந்து என இயற்கை ஆய்வாளர்கள் பலரும் சொன்னர்கள், அதை ரொம்ப நாள் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை, பின்னர் ஒரு வழியாக அரசு ஒத்துக்கொண்டு அதனை விவசாயிகளுக்கு மானிய விலையில் விற்றது ஆனல் அதற்குள் சேதம் நடந்து முடிந்து விட்டது!
அனானி,
வேப்பம் எண்ணை பூச்சிகொல்லி அமெரிக்காவில் கிடைக்காமல் இருக்குமா , சும்மாவா வேப்பம் மரத்தின் அசார்க்ட்டின் என்ற அல்கலாய்டுக்கு காப்புரிமை வாங்கி ஏமாத்தியவர்கள் ஆயிற்றே அமெரிக்கர்கள். இந்திய அரசின் சார்பாக சர்வதேச காப்புரிமை மற்றும் அறிவுசார் உரிமைகள் கழகத்தில் வழக்கு போட்டு நாம் அந்த உரிமையை திரும்ப பெற்றோம். வேப்பம் மரத்தின் அறிவியல் பெயரே அசார்க்டின் இன்டிகா சொல்லும் அது இந்தியாவை சார்ந்தது என. இப்படியே மஞ்சல், பாசுமதி எல்லாவற்றின் உரிமையும் நாம் போராடியே பெற்றோம் இன்னும் பலவற்றுக்கு வழக்கு இருக்கிறது
வவ்வால்
அரசு இம்மாதிரி முயற்சிகளுக்கு நிதி 'ஒதுக்குகிறது'.ஆனால் அந்த நிதி வேறெங்கோ போய் சேர்ந்துவிடுகிறது என்பது தான் பரிதாபம்.இந்தியா போன்ற விவசாய நாட்டில் எத்தனை வேளாண் பல்கலைகழகங்கள் உள்ளன என்று பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. வேளாண்துறை மார்க்கெடிங் போன்ற பாடப்பிரிவுகள் எம்.பி.ஏவில் துவக்கப்பட்டால் நிறைய பயன் இருக்கும்.
செல்வன்,
நீங்க வேற மேலாண்மையில் வேளாண்மை மற்றும் சந்தைபடுத்துதல் , நிர்வாகம் என படிப்பு எல்லாம் இருக்கிறது, அரசே நடத்தும் வேளான்மை எம்.பி.ஏ கல்லூரியின் பெயர் மேனேஜ்(manage), ஹைதராபாத்தில் உள்ளது. மேலும் ரூரல் மேனேஜ்மெண்ட் என்ற பெயரில் நிர்மா (nirma) மேலாண்மை கல்லூரி உள்ளது, மற்ற கல்லூரிகளின் மேலான்மைபிரிவிலும் விருப்பபாடமாக வேளாண்மை எடுத்து படிக்கலாம்.
செல்வன்,
நிதி ஒதுக்கீடு என்று எதனை சொல்கிறீர்கள்."in general fund will be allotted for agricultural research there is no separete fund for organic farming"
எனக்கு தெரிந்து அப்படி இயற்கை வேளாண்மைக்கு என ஒதுக்கீடுகள் இல்லை.
ஆனால் ஒரு பல்கலையின் இணைவேந்தர் வரும் நிதியை அங்குள்ள ஆய்வு மாணவர்களின் தனிசிறப்பு கருதி இப்படி நிதி ஒதுக்கி தரலாம். ஆனால் அரசின் தனிப்பட்ட நேரடி நிதி ஒதுக்கீடு இதுவரை இல்லை. ஆனால் அரசின் சார்பில் நடத்தும் வேளண்மை கண்காட்சிகளில் இடம் ஒதுக்கி விளம்பரம் தேடுவார்கள்.
சக்தி சுகர்ஸ் ,ஸ்பிக் போன்ற தனியார்களும், சில பேராசிரியர்களும் , சில அரசு வேளாண்துறை அலுவலகர்கள்,இயற்கை விவசாய தன்னார்வலர்கள் எல்லாம் ஆங்காங்கே தனியாகவே இணைந்தோ சில முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள். இந்த இயற்கை விவசாயங்களில் முன்னோடியாக உள்ளது கோவை மாவட்டம் தான்! சந்தோஷமா இருக்குமே செல்வன்!
எனக்கு தெரிந்தவர்கள் ் நிலம் வைத்து விவசாயம் பண்ணும் போது கூட இதை உபயோகித்ததாக தெரியவில்லை.
இதை தேவைப்படும் போது தான் தயாரிக்க வேண்டுமா? சேமித்து வைக்க வழியில்லை?
வாங்க குமார்,
இது இயற்கை விவசாயிகள் பயன்படுத்துவது நவீன விவசாயம் செய்வோர் இதெல்லாம் பயன்படுத்துவதில்லை. உடனே தயாரித்தும் பயன்படுத்தலாம், சேமித்து வைத்தும் பயன்படுத்தலாம்.புட்டிகளில் அடைத்து இதனை சில இடங்களில் விற்கிறார்கள்.
வவ்வால்!
நல்ல தகவல்; இவற்றை அரசாங்கம் ஊக்கப்படுத்தினால்; நிலம் ;நீர்நிலைகள் அசுத்தமாவதைத் தடுக்கலாம்;நவீன பூச்சி கொல்லிகள்; பூச்சியைக் கொல்லுதோ இல்லையோ; நிலத்தையும்;நீரையும் கொல்லுகிறது. வேதனையே!!
அத்துடன் இதன் உதவி கொண்டு விளையும் விளை பொருட்களில் சிறிதளவு நச்சுத் தன்மை எஞ்சியிருந்து; நாளாந்தம் நம் உடலில் சேர்ந்து பின் புற்று நோய் போன்ற விளைவுகள் ஏற்படுவதாகக் கூறி; இங்கேயும் இயற்கை விவசாயம் செய்கிறார்கள்; ஆனைவிலை குதிரைவிலை.. சாதாரண மக்கள் வாங்கிச்சாப்பிட முடியாது.
ஆனாலும் இதை மெள்ள மெள்ள கொண்டுவருகிறார்கள்.
வாங்க யோகன் ,
நன்றி!
இப்போது மேல் நாட்டினர் செய்வதை தான் நம் முன்னோர்கள் காலம் காலமாக செய்து வந்தார்கள் அதனை பழைய முறை தவறு என சொல்லி மாற்றி விட்ட மேல் நாட்டினர் தற்போது இயற்கை விவசாயம் என நம்முடைய பழைய மரபை பின்பற்றுகிறார்கள்.
நீங்கள் சொன்னது போல பூச்சிக்கொல்லிகளால் நிலம் நீர் , காற்று எல்லாம் மாசு அடைகிறது ,மனிதன் நோய் எதிர்ப்பு தன்மையும் குறைகிறது.
நிறைய பேர் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டால் விலை குறைந்து விடும். அதற்கு தான் பலரும் பாடுபடுகிறார்கள். இந்தியாவில் ஒன்றை செய்ய யோசிப்பார்கள் செய்ய ஆரம்பித்து விட்டால் அதனை நிறுத்தவும் யோசிப்பார்கள் தயங்குவார்கள்!
//இப்போது மேல் நாட்டினர் செய்வதை தான் நம் முன்னோர்கள் காலம் காலமாக செய்து வந்தார்கள் அதனை பழைய முறை தவறு என சொல்லி மாற்றி விட்ட மேல் நாட்டினர் தற்போது இயற்கை விவசாயம் என நம்முடைய பழைய மரபை பின்பற்றுகிறார்கள்.//
வவ்ஸ், நூற்றுக்கு நூறு உண்மை! வெளினட்டுக்காரன், நவீன விவசாயத்தின் கொடுமையான விளைவுகள அனுபவிச்சுட்டான். அதனாலேதான், நம்ம முறைக்கு வறான். நாமதான் அந்தப் பக்கம் போயிகிட்டு இருக்கோம். ஆனா, அது மாறிகிட்டு வருது. பசுமை விகடன் ரொம்ப நல்லா பன்றாங்க. அதுல வற 0 பட்ஜெட் விவசாயம் ரொம்ப அருமை.
தஞ்சாவூரார்,
நன்றி,
நவீன வேளண்மை செய்தவனே மாறிட்டான் அவனைப்பார்த்து காப்பி அடித்த நாம இன்னும் மாற மாட்டோம் என்கிறோம்.புதுவை ஆரோவில் பக்கம் போனால் பாருங்கள், இருக்கிரது எல்லாம் வெள்ளைக்காரன் செய்வது எல்லாம் இயற்கை விவசாயம்,கோழி வளர்ப்பு கூட இயற்கை முறையில் தான் அங்கே, அதை எல்லாம் பார்த்தும் நம்மாட்கள் மாற மாட்டோம்னு அடம் பிடிக்கிறாங்களே!
பசுமை விகடன் படிப்பதில்லை ,நல்ல விஷயங்களை சொன்னால் சரி தான்.
ஜி !! அருமையான தகவல்கள் ..இதை மீண்டும் மீள்பதிவாக பகிருங்களேன் ..
இப்போதைய சூழ் நிலைக்கு இயற்கை உரங்கள் மிக அவசியம் ..அதனை பற்றிய விழிப்புணர்வும் மிக மிக அவசியம் .
Angelin .
//eriophyd mite //
சீத்தாபழ இலைகள் ,பீநாரி சங்கு ,மஞ்சள் வேர்கிழங்கு ,கற்றாழை ,நொச்சி இலை ,வேப்பம் விதைகள் ,நீல எருக்கு //
இதை சேர்த்து ஒரு இயற்கை உரத்தை கே.செல்லமுத்து..ஈரோடை சேர்ந்தவர் தயாரிசிருக்காருங்க ..(அவர் செமி பாரலிசிஸ் இனால் 3 வருஷம் பாதிகபட்டவராம்
பூச்சி கொல்லி விளைவுகளால் )
Angelin.
Post a Comment