Showing posts with label திரும்பிப்பார். Show all posts
Showing posts with label திரும்பிப்பார். Show all posts

Monday, October 29, 2012

திரும்பிப்பார்-3:ரோசெட்டா கல்வெட்டு(Rosetta Stone)

(hi...hi கிளியோபட்ரா படம் கிடைக்கலை,அதான்  நம்ம ஊரு கிளியோபட்ரா )

 நெப்போலியனின் எகிப்து படை எடுப்பு:

பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போனபாட்(Napoleon Bonaparte,1769-1821 ) , 1797 ஆம் ஆண்டு டிசம்பரில் இத்தாலியை வென்று விட்டு அடுத்து ஆங்கில ஏகாதிபத்தியத்தினை முடக்கும் திட்டம் தீட்டினார், அதன் முதல் படியாக இந்தியாவை கைப்பற்றுவது என்றும் அதற்கு முதலில் எகிப்து வரை உள்ள பகுதியை பிடிக்க வேண்டும், இந்தியாவுக்கான வணிக பாதையை அப்போது தான் முடக்கி ,இங்கிலாந்தை மடக்க முடியும் என திட்டமிட்டார்.



ஏப்ரல் 19,1798 ஆம் ஆண்டு 300 கப்பல்களில் 21 பட்டாலியன் படை வீரர்களோடு ,கடற்படைக்கு அட்மிரல் புரேய்ஸ் மற்றும் நெப்போலியன் தலைமையில் பிரஞ்சு படை தனது எகிப்திய படை எடுப்பை துவங்கியது, வழியில் Toulon, Marseilles, Genoa, Ajaccio, and Civita Vecchia மற்றும் மால்டாவை கைப்பற்றி ,இங்கிலாந்து கடற்படையை வென்று ஜூலை ஒன்றாம் தேதி அலெக்ஸாண்ரியா அருகில் மாரபுட் என்ற இடத்தில் தரை இறங்கியது படை.

எகிப்தை ஆண்ட மாமுலேக் அரசாட்சியின் படை ,முராத் பே தலைமையில் ஜூலை 21 அன்று பிரஞ்சு படையுடன் ,பிரமிட் அருகே சண்டையிட்டு தோல்வி அடையவே ,எகிப்து நெப்போலியன் வசம் ஆனது. ஜூலை 24 இல் கெய்ரோவில் தனது அதிகாரப்பூர்வ ஆளுகைக்கு கொண்டு வந்தார்.


எகிப்தின் மீதான வெறும் படை எடுப்பாக மட்டும் திட்டமிடாமல் ,எகிப்தின் புராதன வரலாற்றின் மீதும் ஆர்வம் கொண்டிருந்த நெப்போலியன்ன் ,படை எடுப்பின் போது தன்னுடன் 167 பேர் கொண்ட அறிஞர் குழுவையும் அழைத்து சென்றார். அக்குழுவில் அறிவியலாளர், பொறியாளர்,அச்சுக்கலை நிபுணர்,புவியியலாளர்,விலங்கியல், தாவரவியல்,ஓவியர், சிற்பி,கணித நிபுணர், பொருளாளர்,பத்திரிக்கையாளர் ஆகியோர் இருந்தனர்.

# எகிப்தைக் கைப்பற்றியதும், மேற்கொண்ட குழுவினரை கொண்டு ,எகிப்து அறிவியல் கழகம் என்ற ஒன்ற நிறுவினார். அவர்கள் எகிப்து குறித்து பல ஆய்வுகள் மேற்கொண்டனர்.

# இரண்டு அச்சு இயந்திரங்களும் கொண்டு சென்று அப்போது கிடைத்த நூல்களை உடனே மொழிப்பெயர்த்து புத்தகமாக வெளியிட்டார், குரானின் மொழிப்பெயர்ப்பு முதலில் ஒரு பகுதியாக அப்போது தான் அச்சானது.

# எகிப்தின் முதல் செய்தித்தாள் "the Courrier de l'Egypte'" 1798 இல் துவங்கப்பட்டது.

# எகிப்தின், வரலாறு,கலை,இலக்கியம் ஆகியவற்றை தொகுத்து "“Description de l’Egypte,” என்ற பெயரில் நூலாக வெளியிடும் பணி துவங்கியது, இப்பணி பின்னர் நெப்போலியன் போரில் தோல்வியுற்ற பின்னரும் தொடர்ந்து 1809 இல் நூல்களாக வெளியிடப்பட்டது.

# நெப்போலியன் தான் எகிப்தின் முழுமையான மேப்பினை வரைய செய்தார், ஆனால் அது பிற்காலத்தில் தான் வெளியிடப்பட்டது.

நெப்போலியன் எகிப்தின் மீது படை எடுத்து ஆக்ரமித்த நேரத்திலும் இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளிலும் கவனம் செலுத்தியது அவர் ஒரு அறிப்பூர்வமான ஆளுமை என்பதற்கு சான்று எனலாம். இத்தனைக்கும் நெப்போலியனின் ஆளுமையின் கீழ் எகிப்து இருந்தது கி.பி 1798-1801 வரையில் வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே. இந்த இடத்தில் நம் நாட்டு ஆட்சியாளர்கள் ,கலை,இலக்கியம்,வரலாற்றில் காட்டும் ஆர்வத்தினை நினைத்தால் ரத்தக்கண்ணீர் தான் வரும்.

மதுரையில் சரித்திர புகழ் பெற்ற சமண குகைகள்,கோயில்கள் இருக்கும் மலையை கல்குவாரி, கிரானைட் என வெட்டி எடுத்து அழிப்பதை ஊக்குவிப்பவர்கள் நம்ம ஆட்சியாளர்கள்!

ரொசெட்டா கல்வெட்டு கண்டுபிடிப்பு:



ரோசெட்டா(Rosetta) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது ,எகிப்தின் நைல் நதியின் மேற்கு கரையில், மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள ஒரு துறைமுகம் ஆகும். அலெக்சாண்ட்ரியாவில் இருந்து 35 மைல் தொலைவில் உள்ளது. இத்துறைமுகத்தின் எகிப்திய பெயர் அல் ரஷீத். ரஷீத் என்பதை ரோசெட்டா என ஆங்கிலத்தில் எழுதிவிட்டார்கள்.

கி.பி 1798 இல் பிரஞ்சு படை அங்கு முகாமிட்டிருந்த போது ஒரு பழையக்கோட்டையை இடித்து பெரிதாக கட்டி ராணுவ முகாம் அமைக்க முயன்றார்கள். இதனை கேப்டன் Pierre François Xavier Bouchard  என்ற ராணுவ பொறியாளர் தலைமையிலான அணி செய்தது.



அப்போது ஒரு சுவற்றினை இடிக்கும் போது ஒரு பெரிய கல் பலகை சுவற்றில் பதியப்பட்டிருப்பதை வீரர்கள் கேப்டனிடம் சொல்லவே ,கல்லைப்பார்வையிட்ட கேப்டன் இது சாதாரணக்கல் போல இல்லை , ஏதோ எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கிறது, எனவே முக்கியமானதாக இருக்கும் என தனியே எடுத்து சுத்தப்படுத்தி பார்த்துள்ளார், புரியாத மொழியில் இருக்கவும், கண்டிப்பாக பழமையான ஒரு கல்வெட்டாக இருக்கலாம், என அவரது மேல் அதிகாரி ஜெனரல்  Jacques-François Menou,விடம் தெரிவித்தார், அவரும் இதனைப்பார்த்துவிட்டு என்னவென்று புரியாவிட்டாலும் ,பழம்பொருள் என புரிந்து கொண்டு ,அதனை அவரது சொந்தப்பொருளாக வைத்துக்கொண்டார்.

இராணுவ பணியின் போது ,அவர்கள் கண்டெடுக்கும் பொருட்கள் அரசுக்கு சொந்தமானவையாக அளிக்கப்பட வேண்டும்,ஆனால் ஜெனரல் யாருக்கும் தெரிவிக்காமல் அவரே வைத்துக்கொள்ள ஆசைப்பட்டார்,ஏன் எனில் பிற்காலத்தில் அரிய கலைப்பொருள் என விற்கலாம் என ஒரு எண்ணமாக இருக்கலாம்.

ஜெனரல் ரோசெட்டா கல்வெட்டினை அரசுக்கு அளிக்கவில்லை என்பதை யாரோ சிலர் நெப்போலியனுக்கு மொட்டைக்கடிதாசி எழுதி சொல்லிவிடவே, நெப்போலியன்  ஜெனரலை விசாரித்து உடனே கல்லை எகிப்திய அறிவியல் கழகத்துக்கு எடுத்து வர வேண்டும் என சொல்லி , தொல்லியல் அறிஞர்கள் குழுவினரை ஆராய சொன்னார்.

யாருக்கும் அதில் உள்ள மொழியை படிக்க தெரியவில்லை, ஹியரோ கிளைப்சிலும் மேலும் இரண்டு மொழியிலும் எழுதப்பட்டிருக்கிறது என்ற அளவில் தான் அறியமுடிந்தது என சொல்லவே நெப்போலியனே நேராக சென்று ரோசெட்டா கல்வெட்டினைப்பார்வையிட்டு ,அது மிகப்பழமையான மொழியில் எழுதப்பட்டிருப்பதை உணர்ந்து, இதனை மொழிப்பெயர்த்தால் பல வரலாற்று தகவல்கள் கிடைக்கலாம் என  முடிவு செய்தார்.

அக்காலக்கட்டத்தில் எகிப்தின் பிரமிடுகளிலும், பல கல்வெட்டுகளிலும் ஹியரோ கிளைப்ஸ் கண்டுப்பிடிக்கட்டிருந்தாலும் யாருக்கும் அதனை மொழிப்பெயர்க்க தெரியாது, குத்து மதிப்பாக சித்திர எழுத்துக்கள் என சொல்லி ஆளாளுக்கு ஒரு கருத்தினை யூகமாக சொல்லிக்கொண்டு வந்த காலம்.

ரோசெட்டா கல்வெட்டினை பல பிரதிகள் எடுத்து உலகமெங்கும் உள்ள மொழியியல் வல்லுநர்களுக்கு அனுப்பி ,ஆராய சொல்லலாம் என நெப்போலியன் முடிவு செய்து, கல்வெட்டுக்களில் இருந்து பிரதி எடுப்பதில் வல்லவர்களாக சிட்டிசன் மார்செல் ,மற்றும் கேலன்ட் என்ற இருவரை பாரிசில் இருந்து வரவழைத்தார்.

கல்லினை நன்கு சுத்தப்படுத்திவிட்டு அதன் மீது அச்சு மையினை பூசி ,மேலே காகிதத்தினை பரப்பி , ரப்பர் ரோலர்களை உருட்டி கல்வெட்டின் எழுத்துகளை காகிதத்தில் பிரதி எடுத்தார்கள். மேலும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் கல்வெட்டினை ஒத்த மாதிரிகளையும் உருவாக்கினார்கள்.

இது போன்று எடுத்த பிரதிகள் ஐரோப்பா முழுவதும் அனுப்பப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இக்காலக்கட்டத்தில் பிரஞ்சு படை வாட்டர் லூ போரில் தோல்வியுறவே ,மீண்டும் இங்கிலாந்து எகிப்தினை கைப்பற்றியது. போர் விவரங்கள் பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

போரின் முடிவில் நெப்போலியனுக்கும், இங்கிலாந்திற்கும் ஒரு உடன் படிக்கை உருவானது, அதன் படி எகிப்தில் இருந்து எடுக்கப்பட்ட புரதான பொருட்கள் அனைத்தையும் இங்கிலாந்து வசம் ஒப்படைக்க வேண்டும். அனைத்து பொருட்களும் கைப்பற்றப்பட்டு இங்கிலாந்து கப்பற் படையின் ஹெச்.எம்.எஸ்.அட்மிரல், மற்றும் ஹெச்.எம்.எஸ். மெட்ராஸ் ஆகிய கப்பல்களில் ஏற்றப்பட்டு லண்டனுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் ரோசெட்டா கல்வெட்டு மட்டும் லண்டனுக்கு போகவில்லை ,ஏன் எனில் மீண்டும் பிரஞ்சு ஜெனரல் மானோயு ,கல்வெட்டினை அவர் வீட்டுக்கு எடுத்துப்போய் ,அவருக்கே சொந்தம் என சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

நெப்போலியனுடன் போட்ட ஒப்பந்தம் தன்னைக்கட்டுப்படுத்தாது என்பது அவரது வாதம், ஆனாலும் இங்கிலாந்து அரசு விடுவதாயில்லை, மேஜர் ஜெனரல் டர்னர் என்பவரை அனுப்பி மிரட்டி வாங்கிவிட்டது, பின்னர் ரோசெட்டா கல்வெட்டு மட்டும் ஹெச்.எம்.எஸ்.எஜிப்தியனில் ஏற்றி இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு இப்போது ரோசெட்டா கல்வெட்டு லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியுசியத்தில் உள்ளது.
---------

ரோசெட்டா கல்வெட்டு மொழி பெயர்ப்பு:

காலம்: தாலமி -5 என்ற மன்னர் காலம் சுமார் கி.மு 196.

கல்வெட்டின் இயல்பு:

உயரம்: 114.4 செ.மீ.

அகலம்:72.3 .செ.மீ

தடிமன்:27.9 செ.மீ.

எடை: 760 கிலோ கிராம்.

மேற்புறம் சிறிது உடைந்திருந்தது.

இக்கல்வெட்டில் ஒரே செய்தி மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருந்ததே இதன் முக்கியத்துவம் அதிகரிக்க காரணம்.

ஏன் எனில் அது வரையில் எகிப்திய ஹியரோ கிளைப்ஸை யாரும் சரியாக மொழிப்பெயர்த்ததே இல்லை, பல ஆண்டுகளுக்கு முன்னரே வழக்கொழிந்த மொழி என்பதால் அதனை அறிந்தவர்களே இல்லை, எனவே எப்படி படிப்பது என தெரியவில்லை, இக்கல்வெட்டில் ஹியரோகிளைப்ஸ் உடன் மேலும் இரண்டு மொழிகள் பயன்ப்படுத்தப்பட்டிருப்பதால் ஏதேனும் ஒரு மொழியை டி சைபர் செய்தால் அதனை வைத்து ஹியரோ கிளைப்ஸ் மொழியை டி சைபர் செய்ய முடியும்.



கல்வெட்டில் இருந்த மொழிகள்:

மேற்புறம் ஹியரோ கிளைப்சில் (hieroglyphs )எழுதப்பட்டிருந்தது. ஹியரோ கிளைப்ஸ் என்பதற்கு கடவுளின் மொழி எனப்பொருள். எகிப்தில் அக்கால மத துறவிகளின் தொடர்பு மொழி.

அடுத்த பாகம் , டெமோடிக் எனப்படும் வட்டெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. இது எகிப்திய மக்கள் பேசும் மொழியாக அப்போது இருந்தது. பின்னாளில் இதில் இருந்தே எகிப்திய காப்டிக் மொழி உருவானது.

கீழ் பாகத்தில் , பண்டைய கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்தது. கிரேக்க மொழி அக்கால எகிப்தில் அரச மொழியாக இருந்தது. அரசனும்,அதிகாரிகளும் கிரேக்கத்தில் உத்தரவுகள் இடுவது வழக்கம்.

ஒரே கல்வெட்டில் மூன்று மொழிகளில் எழுதபட காரணம் அனைத்து மக்களுக்கும் அச்செய்தி சென்றடைய வேண்டும் என்பதே.

இதற்கு முன்னர் பிரமிடுகளில் காணப்பட்ட ஹியரோ கிளைப்ஸ்(hieroglyphs ) எல்லாம் தனியாக எழுதப்பட்டவை என்பதால் ,யாராலும் சரியாக மொழி பெயர்க்க முடியவில்லை, இக்கல்வெட்டில் டெமொடிக், மற்றும் பண்டைய கிரெக்கமும் பயன்ப்படுத்தப்பட்டிருந்ததால் அதனை மொழிப்பெயர்த்து, அதன் மூலம் ஹியரோ கிளைப்சை மொழிப்பெயர்த்தால், அம்மொழி எப்படி எழுதப்பயன்ப்படுகிறது என்ற ரகசியம் கட்டுடைக்கப்படும் என ஆய்வாளர்கள் முயற்சி செய்தார்கள்.



# பிரஞ்ச் மொழி வல்லுனர்கள் ,Jean-Joseph Marcel and Remi Raige ,ஆகியோர் தான் ஹியரோ கிளைப்ஸுக்கு அடுத்துள்ள மொழி டெமோடிக் எனப்படும் ஹெர்டிக் மொழி, ஹியரோ கிளைப்சின் சுருங்கிய வடிவம் என அறிவித்தார்கள்.

# பின்னர் 1802 இல் பிரஞ்சு மொழியியல் வல்லுனர் A.I. Sylvestre de Sacy  டெமோடிக் மொழிப்பகுதியை ஆய்வு செய்து சில சொற்களை மட்டும் இனங்கண்டு மொழிப்பெயர்த்தார்.

# அதன் பின்னர்  சுவீடனை சேர்ந்த வல்லுனர் J.D. Åkerblad  ஆய்வு செய்து சில சொற்களை வகைப்படுத்தி என்ன வகையில் எழுத்துகள், ஒலிக்குறிப்புகள் பயன்ப்படுத்தப்பட்டுள்ளது எனப்பட்டியலிட்டார்.

ஆனால் யாரும் முழுதாக மொழிப்பெயர்க்க இயலவில்லை. ஆனால் அகெர்ப்லாட் தயாரித்த சிறு அகராதி போன்ற அட்டவணை பின்னால் ஆய்வு செய்தவர்களுக்கு எப்படி அணுக வேண்டும் என உதவியது.

 Thomas  Young (1773-1829):



இங்கிலாந்தை சேர்ந்த தாமஸ்  யங்க் என்பவர் இளம் வயதிலேயே மொழி ஆய்வில் சிறந்து விளங்கினார், எகிப்திய மொழியினை மொழிப்பெயர்ப்பதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு , மற்றவர்களால் முடியாமல் விட்ட வேலையை முடிக்க முயன்றார். அக்கர்ப்லாட் தயாரித்த அகராதியை அடிப்படையாக வைத்து மேற்கொண்டு ஆய்வு செய்தார்.

பலரும்  தவறாக மொழிப்பெயர்க்க காரணம், ஹியரோ கிளைப்ஸ் என்பது ஐடியோகிராம் எனப்படும் சித்திர எழுத்துக்கள், ஒவ்வொன்றும் ஒரு குறியீடு ,அதன் மூலம் ஒரு பொருள் ,அல்லது சொல்லே முழுதாக உருவாக்கப்படும் என நம்பினார்கள். ஹியரோகிளைப்சின் அடுத்த வடிவம் டெமோடிக் என்பதால் அதுவும் அப்படியான குறியீடு மொழி என்றே ஆய்வு செய்தார்கள்.

அவை எல்லாம் எழுத்தின் வடிவம் , ஒலிக்குறிப்புகள் என அணுகவில்லை. தாமசுக்கு இதில் சந்தேகம் என்றாலும் யூகத்தின் அடிப்படையில் ஓரளவுக்கு வெற்றிகரமாக மொழிப்பெயர்த்தது அவர் தான். முதன் முதலில் இக்கல்வெட்டில் டாலமி, கிளியோபட்ரா, பெர்னிஸ் ஆகியப்பெயர்கள் இருக்கிறதென அறிவித்தார் , அவருக்கு இதில் உள்ள எழுத்துக்கள் வெறும் குறியீட்டின் அலகுகள் அல்ல அனைத்தும் ஒலியுடன் கூடிய எழுத்து என சந்தேகம், ஆனால் அக்கால புகழ்ப்பெற்ற ஆய்வாளர்கள் எகிப்திய மொழி ஒலிக்குறியீடு இல்லாத ,எழுத்து இல்லாத சித்திர வகை எழுத்து, என உறுதியாக சொல்லி வந்தார்கள்.

****************

கிளியோபட்ரா என்பதன் ஹியரோ கிளைப்ஸ் வடிவம்.

கிளியோ- அன்பு, பட்ரா- தந்தை, தந்தை மீது அன்புள்ளவள் என்ற காரணப்பெயரே சூட்டபட்டிருந்தது.

எகிப்திய வராலற்றில் பல கிளியோபட்ராக்கள் உண்டு, ஷேக்ஸ்பியர் எல்லாம் எழுதி வர்ணித்த கிளியோபட்ரா-7 ஆவார், அவரது தாயாரின் பெயரும் கிளியோபட்ரா தான் ,அவர் மூன்றாவது கிளியோபட்ரா எனப்பட்டார். மற்றவர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை.
******************

எனவே பெரும்பான்மை கருத்துக்கு எதிராக சொல்ல விரும்பாமல் , பாதியிலேயே ஆய்வினை நிறுத்திக்கொண்டார்.மேலும் அவர் பெரும்பாலும் யூகத்தின் அடிப்படையில் டாலமி என்றால் இது கிளியோபட்ராவாக இருக்கும் என்பது போல  மொழிப்பெயர்த்தார், அவரால் கடைசி வரையில் சித்திரம்,எழுத்து ஆகியவற்றுக்கிடையே ஒரு தர்க்க ரீதியான தொடர்பினை கொடுக்கவோ, ஒரு முறையான அமைப்பினை உருவாக்கவோ முடியவில்லை.



தாலமி என்பதன் ஹியரோகிளைப்ஸ் வடிவம்.

இதன் பின்னால் ஒரு அரசியலும் உள்ளதாக சொல்வார்கள். ஹியரொ கிளைப்ஸ் என்ற மொழி வடிவம் , மொழிகளிலேயே மிகவும் பழமையானது சுமார் 4000-3000 ஆண்டுகள் ,கிருத்துக்கு முன்னால். எனவே அப்பொழுதே ஃபொனடிக்குடன் ஒரு மொழி உருவாகி இருந்தது என்றால் அது வரையில் மிகப்பழையான பண்பட்ட மொழி இலத்தின் என சொல்லப்பட்டு வந்தது அடிபடும், ஆங்கிலம் ,ஆங்கிலோ-சாக்சான் எனப்படும் இலத்தின் வழி உருவானது.

எகிப்திய மொழி ஒலி,எழுத்து உடைய பண்பட்ட மொழி என நிறுவப்பட்டால், எகிப்திய கலாச்சாரமும் பேசப்படும், அது வரையில் எகிப்திய மக்களை நாகரீகம் இல்லாதவர்கள், அடிமை வியாபாரம், நரபலி கொடுப்பவர்கள், கற்கால மக்கள் என ஆங்கில அறிஞர்கள் எழுதி வந்தார்கள்.

பிரமிடு ,இன்ன பிற பிரமாண்ட கட்டுமானங்கள் எல்லாம் பார்த்த பின்னும் எகிப்திய மக்கள் நாகரீகம் இல்லாதவர்கள் என 18 ஆம் நூற்றாண்டிலும் வெள்ளைக்காரர்கள் சொல்லி வந்தார்கள் என்றால் என்ன சொல்வது.

இத்தகைய எண்ணங்களே ரோசெட்டா கல்வெட்டினை முழுமையாக மொழிப்பெயர்க்க தடையாக உருவாகி வந்தது எனலாம்.

Jean François Champollion:



அதே கால கட்டத்தில் , ஆங்கிலேயர்கள் மொழிப்பெயர்த்தாலும் முழுமையான உண்மையை வெளியிடாமல் மறைத்து விடுவார்கள் என பிரஞ்சு மொழி ஆய்வாளர் கேம்போலியன் என்பவரும் தனியே ஆய்வு செய்து வந்தார்.

ஹியரொ ஹிளைப்பிசில் உள்ள வட்டுக்களில்( cartouche)உள்ளே சில சித்திரக்குறியீடுகள் தனித்து காட்டப்பட்டிருப்பதை ஏன் என ஆய்வு செய்தார், அப்பொழுது தான் அவற்றில் முக்கியமான பெயர்களை குறிப்பாக வெளிப்படுத்த நீள்வட்டு வடிவத்துனுள் பொறிப்பதை உணர்ந்தார், அவற்றையும் , டெமோடிக் மொழியில் இருப்பதை ஒப்பிட்டு சிறிது சிறிதாக  புரிந்து கொள்ள ஆரம்பித்தார்.

ஹியரொ கிளைப்சில் ஒரு நீண்ட சொல்லினை இரண்டு ,முன்று சித்திரங்களின் மூலமும் சொல்கிறார்கள் அதே சமயம் ஒரு சித்திரம் ஒரு எழுத்தாகவும் பயன் படுத்தப்படுவதை புரிந்து கொண்டார்.


ஒப்பிட்டு மொழிப்பெயர்த்தல்.

சித்திர எழுத்து அதே சமயம் தேவைப்பட்டால் அது ஒலிக்குறியீடாகவும் ,எழுத்தாகவும் பயன்படும் மொழி என்ற சிக்கலை உடைத்தார்.

செப்டெம்பர் 22,1827 ஆம் ஆண்டு ,முதலில் ராம்சே-1 என்ற பெயரை நீள்வட்டில் இருந்து சரியாக மொழிப்பெயர்த்துவிட்டு ,சகோதரரை தேடி  ஓடிச்சென்று பார்த்து சந்தோஷத்தில் " கிடைச்சாச்சு" (“Je tiens l’affaire!” (“I’ve got it!”) எனக்கூவிக்கொண்டு மயங்கிவிழுந்து விட்டாராம், அதன் பின்னர் 5 நாட்கள் நினைவில்லாமல் படுக்கையில் கிடந்துள்ளார். காரணம் சரியாக சாப்பிடாமல்,தூங்காமல் ஆய்வு செய்த அழுத்தம், மற்றும் பலவீனமே ஆகும்.

இதன் மூலம் ஹியரோ கிளைப்சிற்கு என ஒரு இலக்கணம், அகராதி, நிலையான மொழி பெயர்ப்பு முறை என மீண்டும் கட்டமைத்தார் இதனால் , ஹியரோ கிளைப்ஸ் மொழியின் தந்தை எனவும் புகழப்பட்டார்.

ஒவ்வொரு சித்திர எழுத்தும் ஆங்கில எழுத்துக்கு இணையான ஒலிக்குறியீடு கொண்ட எழுத்து என நிருபித்து அதனைப்பட்டியலிட்டுள்ளார்.

எப்படி வட மொழியில் ச,ஷ , க,ஹ என வேறுபட்ட ஒலியுடன் எழுத்துகள் உள்ளதோ அப்படியே எகிப்திய மொழியிலும் ஒன்றுக்கு மேற்பட்ட, ஸ்,கே, என எழுத்துக்கள் உள்ளது.

கேம்போலியன் சிறப்பாக மொழிப்பெயர்த்து அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைத்தாலும் ,ஆங்கிலேயர்கள் ரொம்ப காலம் புறணிப்பேசிக்கொண்டு தவறு என்று தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள், அதிலும் தாமஸ் யங்க், நான் அப்போவே எல்லாம் செய்துவிட்டேன், ஆனால் அதை முழுசா வெளியிடவில்லை, கேம்போலின் காப்பி அடிச்சுட்டார்னு பொலம்பிக்கிட்டே தான் இருந்தார்.

ஹியரோ கிளைப்ஸ்-ஆங்கில ஒப்பீடு:

ஆங்கிலம் இலத்தின் மூலம் என்பதால் இலத்தின் அடிப்படையிலே அணுக வேண்டிய மொழி, கிரேக்கர்களும், ரோமானியர்களும், எழுத்து மற்றும் ஓவியம் என்பதை இரு வேறு கலைகளாக பிரித்து அணுகினார்கள்.

ஆனால் எகிப்திய மக்கள் எழுத்து, ஓவியம் ,சிற்பம் அனைத்தும் ஒரே கலை வடிவம் என அணுகினார்கள். ஒருங்கிணைந்த கலை. வரைவது போல எழுதுவார்கள், எழுதுவது போல சிற்பம் செதுக்குவார்கள் எனலாம்.

இப்படிலாம் இருக்குமா என நினைக்கலாம், இருக்கும் சீன மொழி, ஜப்பானிய மொழி சித்திர எழுத்துக்களே, எழுதுவது சீனத்திலும், ஜப்பானிலும் சித்திரக்கலையே.

மொழியின் எழுத்து வடிவம் ஓவியத்தில் இருந்தே உருவானது, ஓவியம் எழுத்து எனப்பிரிவது இலத்தின், பிரியாமல் இருப்பது எகிப்திய ஹியரொ கிளைப்ஸ்,ஜப்பானிய,சீன மொழிகள் எனலாம்.

ஹியரோ கிளைப்ஸ்-ஆங்கில எழுத்துகள்:



இந்த சுட்டியில் ஆங்கில, எகிப்திய ஹியரோ கிளைப்ஸ் மொழிமாற்ற வசதியுள்ளது ,நீங்களும் ஆங்கிலத்தினை எகிப்திய கியரோ கிளைப்சுக்கு மொழி பெயர்க்கலாம், எகிப்துக்கும் மொழி மாற்றலாம்.

ஆங்கில சொற்களுக்கான எகிப்திய அகராதியும் உள்ளது.

சுட்டி: http://hieroglyphs.net/0301/cgi/lookup.pl?ty=en&ch=a&cs=0

ரோசெட்டா கல்வெட்டில் உள்ள செய்தி:

எகிப்திய மன்னன் தாலமி-5(Ptolemy V Epiphanes (205-180 BC)  என்பவர் , இளம்சிறார் என்பதால் அவருக்கு பதிலாக அவர் தாயார் ஆட்சி செய்து வந்தார், எனவே 13 ஆம் வயதில் மன்னராக மூடிச்சூட்டிக்கொள்வதையே அக்கல்வெட்டில் அறிவித்து இருக்கிறார்.

தாலமியின் சகோதரி தான் கிளியோபட்ரா-7 .தாலமி -5 முடிசூட்டிக்கொள்வதுடன் தன்னை புனிதராகவும்(priest) அறிவிக்கும் நாள் அது. எகிப்திய மன்னராக முடிசூட்டிக்கொள்பவர்கள் முறைப்படி  புனிதராக ,மத குருக்கள் மூலம் அறிவிக்க பட வேண்டும். அதன் பின்னர் மன்னரும் ஒரு கடவுள் ஆகிவிடுவார்.

மன்னருக்கு கோவிலில் சிலை வைக்கப்படும், மேலும் தனிக்கோவிலும் கட்டப்படும், அப்படி வைக்கப்படும் சிலைக்கருகில் ,அவர் புனிதர் ஆனதை அறிவிக்க வைக்கும் கல்வெட்டே ரோசெட்டா கல்வெட்டு.

அதனால் தான் அப்பொழுது எகிப்தில் பயன்பாட்டில் இருந்த மும்மொழிகளிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

தாலமி-5 மன்னராக முடி சூடியதும் ,எகிப்திய பாரம்பரியப்படி சகோதரி கிளியோபட்ராவை மணந்து கொண்டார்.

கிளியோபட்ரா தாலமியை விட வயதில் மூத்தவர் என்பதால் , அவரை டம்மியாக்கி விட்டு தானே ஆட்சி பொறுப்பினை எடுத்துக்கொண்டார்,, இதனால் சகோதரன்/கணவன் தாலமிக்கும் ,கிளியோபட்ராவுக்கும் சண்டை வந்து ,அதில் ரோமானிய சக்ரவர்த்தி ஜூலியஸ் சீசர் மத்தியஸ்தம் செய்து , பின்னர் கிளியோபாட்ராவை காதலித்தது,சீசருக்கு பின்னர் ஆண்டனி ,கிளியோபட்ரா காதல் என ஷேக்ஸ்பியர் இலக்கியம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரோசெட்டா கல்வெட்டு மொழிபெயர்க்கப்படவில்லை எனில் கிளியோபாட்ரா என்ற எகிப்திய இளவரசி  ஷேக்ஸ்பியர் போன்ற இலக்கியவாதிகளால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் என்றே சொல்லப்பட்டிருக்கும்.ரோசெட்டா கல்வெட்டின் மூலம் தான் மற்ற ஹியரோ கிளைப்ஸ் கல்வெட்டுகள் மொழிப்பெயர்க்கப்பட்டு , தாலமி,கிளியோபட்ரா, நெப்ரட்டி, சீசர், ஆண்டணி இன்ன பிற வரலாற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன, இல்லை என்றால் மேற்கண்ட சம்பவங்களும் ,பெயர்களும் எல்லாம் கற்பனையே உயிருடனோ அல்லது இறந்தவர்களையே குறிக்கவில்லை என்ற டிஸ்கி ஆகி இருக்கும் :-))

திரும்பிப்பார்த்தல் தொடரும்....

-------------
பின் குறிப்பு:

# சில பிழைகள் இருக்கலாம், கிடைத்த மூலங்களில் இருந்து முடிந்த வரை சரிப்பார்த்து வெளியிட்டுள்ளேன்.

# பிழை திருத்தம் செய்யவில்லை, அங்கே சந்திப்பிழை, இங்கே எழுத்துப்பிழை என சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம், பின்னர் பிழை திருத்தம் செய்யப்படும்.

# தகவல் மற்றும் படங்கள் உதவி:

BBC,sacred-texts.com,WIRED.COM,HISTORY-BIBLE,napoleon-series.org,WIKI,இணைய தளங்கள்,நன்றி!

********************

Thursday, October 04, 2012

திரும்பிப்பார்-2





(பிளாட்டோ)

அரேபியா பெயர்க்காரணம்:

அரேபியா என்பதான பெயரில் இப்பகுதி முதன் முதலில் வரலாற்றில் பதிவானது ,அசிரியன் அரசன் சால்மானேசர் கி.மு 853 இல் இப்பகுதி மீது படை எடுத்து வென்றதனைக்குறிப்பிடும் கல்வெட்டில் ஆகும்,அப்போது அரிபி என இப்பகுதியை அராமைக்கில் குறிப்பிட்டுள்ளார், அரிபி என்றால் சூரிய உதயம் ஆகும் பகுதி, என்பதை குறிக்கும் வகையில் கிழக்கு என சொல்வது.

ஏன் எனில் அசிரிய தேசம் என்பது தற்போதைய இராக்,இரான் அடங்கியப்பகுதியில் உள்ள நாடு ஆகும், அரேபிய தீபகற்பம் அவர்களுக்கு கிழக்கில் உள்ள நிலப்பரப்பு.


அதன் பின்னர் திக்லாத்-பைலேசர்-3 (கி.மு.745-727) என்ற அரசனின் ஆட்சியின் போதும் அரிபியா என குறிப்பிடப்பட்டுள்ளது, கிமு ஏழாம் நூற்றாண்டின் இறுதி வரை அசிரியர்கள் ஆட்சியின் கீழ் அரேபியா இருந்தது.



கி.மு.ஏழாம் நூற்றாண்டின் முடிவில் பாபிலோனிய மன்னன் நபடோனியஸ் அரேபிய பகுதியை கைப்பற்றி ஆட்சி செய்யலானான், இன்றைய மெதினா வரைக்கும் நபடோனியஸ் ஆட்சியின் கீழ் இருந்தது.இந்த அரசாட்சியின் தலைநகரம் பெட்ரா ஆகும், இதன் காரணமாக மத்திய தரைக்கடல் பகுதிக்கு நபதியான் என்ற பெயரும் உண்டு. இவர்கள் ஆட்சிக்குட்பட்ட அரேபியாவை பெட்ரா அரேபியா என்றும் சொல்வதுண்டு.
--------------------------------------



அரேபிய தீபகற்பத்தில் நாடுகளை உள்ளடக்கியப்பகுதிகளை மூன்று பிரிவாக பிரித்துள்ளார்கள்,

தெற்கு கடற்கரைப்பகுதி -இந்திய கடற்பகுதியை நோக்கி இருக்கும் நாடுகள், இதில் தற்போதைய யேமன், ஓமன் ஆகிய நாடுகள் வரும்.

மத்திய அரேபியா- நாடோடிகள் பகுதி எனப்படும் ,இது இன்றைய சவுதி அரேபியா போன்ற பகுதிகள் அடங்கியது.

வடமேற்கு பகுதி- ஜோர்டான்,சிரியா போன்ற நாடுகள் கொண்ட பகுதி, இதுவே ஆசியா மைனர், பகுதிக்கு அரேபியாவின் நுழைவு பகுதி ஆகும்.

இப்பகுதிகளை ஹீரோடட்டஸ்,ஸ்டார்போ போன்ற இலத்தின் வரலாற்று அறிஞர்கள் கீழ்கண்டவாறு பெயரிட்டு அழைத்தனர்.

அரேபியா ஃபெலிக்ஸ்- அப்படி என்றால் மகிழ்ச்சியான அரேபியா. ஏன் எனில் அக்காலத்தில் இந்தியாவுடன் அதிகம் கடல் வாணிபம் புரிந்து வசதியாக வாழ்ந்த பகுதி, எனவே வளமான நாடுகள், மகிழ்ச்சியான நாடுகள் என பெயரிட்டார்கள்.

அரேபியர்கள் இந்தியாவோடு கடல் வாணிபம் புரிந்தார்கள் என சொல்வதெல்லாம் கடற்கரையோர அரேபிய நாடுகளான ஏமன்,ஓமன் போன்ற தேசத்தவர்களே.

அரேபியா டெசெர்ட்டா: பாலைவன அரேபியா எனப்படும் மத்திய அரேபியா,இன்றைய சவுதி அரேபியா ஆகும், வளம் குன்றிய நாடோடிகளை கொண்ட நிலப்பரப்பு.

அரேபியா பெட்ரா:

பாறை நில அரேபியா எனப்பொருள், ஆனால் இதற்கான காரணம் அப்போது பெட்ரா என்ற ஒரு தேசமாக இப்பகுதி இருந்ததும் ஒரு காரணம். இப்பகுதியே ரோமானிய,கிரேக்கர்களுடன் அதிகம்  தொடர்பில் இருந்த பகுதி, பின்னாளில் ரோமானிய ஆட்சிக்கு வந்தது.இதில் ஜோர்டான்,சிரியா,பாலஸ்தீனம், போன்ற பகுதிகள் அடக்கம்.


#மத்திய கிழக்கு:

அப்போதைய இலத்தின் நாடுகளுக்கு கிழக்கில் உள்ளப்பகுதியை ஆங்கில வழக்கில் மத்திய  கிழக்கு நாடுகள் என பொதுவாக அழைக்கப்படுவதும் உண்டு,இப்பகுதி மத்திய தரைக்கடலின் மோராக்கோ, அரேபிய தீபகற்பம் மற்றும் இரான் அதன் பகுதிகள் அனைத்திற்கும் பொதுவான பெயர்.

முதன் முதலில் மத்திய கிழக்கு நாடுகள் எனப்பெயரிட்டு அழைக்க ஆரம்பித்தது இங்கிலாந்து ஆகும், இரண்டாம் உலகப்போரின் போது ,ராணுவ தகவல் தொடர்பின் போது இப்பகுதி நாடுகளை மிடில் ஈஸ்ட் என குறிப்பிட ஆரம்பித்து பின்னாளில் அதுவே மேற்கத்திய நாடுகளின் வழக்கமாக போய்விட்டது.

இங்கிலாந்து மிடில் ஈஸ்ட் என பட்டியல் இட்ட நாடுகள்,

 territories of Turkey, Cyprus, Syria, Lebanon, Iraq, Iran, Palestine (now Israel), Jordan, Egypt, The Sudan, Libya, and the various states of Arabia proper (Saudi Arabia, Kuwait, Yemen, Oman, Bahrain, Qatar, and the Trucial States, or Trucial Oman [now United Arab Emirates]. & The three North African countries of Tunisia, Algeria, and Morocco .

பொதுவாக அனைத்து நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகள் என சொன்னாலும் ,அவற்றினை மூன்று பிரிவாக பிரித்தார்கள்,

அண்மை கிழக்கு:

பாரசீக வளைகுடா பகுதியில் இருந்து தென்கிழக்கு ஆசியா பகுதி,அதாவது இந்தியாவை நோக்கியுள்ள பகுதிகள்.

தூர கிழக்கு:

இரானுக்கு அந்த பக்கம் பசிபிக் பெருங்கடலை நோக்கியுள்ள நிலப்பரப்பு.

--------------------

அரேபிய மொழி மூலம்:

அக்காடியன் மொழி ஆப்ரோ-செமிட்டிக் மொழிக்கலவையை மூலமாக கொண்டது.


(அக்காடியன் கியுனீஃபார்ம்  எழுத்துக்கள்)

Semitic (western Asia) மொழியில் இருந்து  Akkadian, Aramaic, South Arabic, Arabic, Hebrew, Eblaite, Amorite, Maltese, Ugaritic, Amharic, Canaanite, Phoenician ஆகிய மொழிகள் பிரிந்து உருவாகின.

இதில் அக்காடியன் மொழி சார்கோன் எனப்படும் அக்காடியன் அரசாட்சியின் போது(கி.மு 2234-2279) உருவானது, இது அசிரியன் -பாபிலோனிய அரசாட்சியின் வழி உருவான மொழி. பின்னர் சுமேரிய அரசாட்சியின் போது சுமேரிய மொழியாக உருவானது. சுமேரிய அரசாட்சி நடைபெற்ற இடம் மெசபடோமியா , இருந்த போதிலும் அக்காடியன் அதன் பூர்வ மொழி வழியான அசிரியன் மற்றும் பாபிலோனிய மொழிய மெசபடோமியாவின் வடக்கு, தெற்கு பகுதியில் பயன்ப்பட்டு வந்தது.

பின்னர் கி.மு 6-7 ஆம் நூற்றாண்டுகளில் அராமைக் மொழியாக உருவெடுத்து நின்றது.

அரபிய தீபக்கற்ப நாட்டில் உள்ள பலநாடுகளின் மூல மொழியாக அக்காடியனும், அதன் பின்னர் அராமை மொழியின் தாக்கமுமே இருந்தது. ஏசு கிருத்து பேசிய மொழி கூட அராமைக் தான்.

மெசபடோமியா ,மெசோ- இடையில் ,படோமியா இரண்டு ஆறு,இரண்டு ஆறுகளான ,யூப்ரடீஸ் மற்றும் டைகரீஸ்  நதிகளுக்கு இடைப்பட்ட நிலம்,இதுவே  தற்கால இராக் ஆகும் ,இதனை அசிரியன், சுமேரியன் அரசாட்சி செய்தாலும் , அசிரியன் சுமேரியன் அரசாட்சி பாராசிகத்திலும் பரவி  இருந்தது. பாரசீகம் என்பது தற்கால இரான்.

பொதுவாக இரான்,இராக்கின் பகுதிகளிலும், வலுவாக இருக்கும் போது அருகில் உள்ளப்பகுதிகளிலும் அசிரியன்,சுமேரியன் ஆட்சி நடைப்பெற்றது.

எனவே பாராசிக மொழியின் மூலமாகவும் அக்காடியன் விளங்கியது. அந்தந்த நாட்டின் அரசாட்சிக்கு ஏற்ப மொழியின் கூறுகள் கொஞ்சம் மாறி ஒரு புதிய டயலெக்ட் ஆக உருவெடுத்து பின்னர் ஒரு மொழியாக நிலைப்பது வழக்கம்.
சிரியா,ஜோர்டான்,ஓமன்,அம்மான் , மத்திய அரேபியா என அரேபிய தீபக்கற்பம் முழுவதும் புழங்கிய  மொழிகளுக்கு மூலமாக பாராசிகம், அராமைக், அக்காடியன் ஆகியன விளங்கின.ஒவ்வொன்றும் கொஞ்சம் வேறுபட்ட டயலெக்ட் ஆகும்.

சமஸ்கிருதம், பிராம்மியின் வழியாக இந்தி ,பிஹாரி, குஜராத்தி, பஞ்சாபி,மராத்தி(புரொட்டொ இன்டோ -திராவிடன்) சவுராஷ்ரா ,போஜ்புரி என பல இந்திய மொழிகள் இப்படித்தான் உருவாகின. இந்தி என்பது இந்தியா முழுவதுக்குமான மொழியல்ல, ஒவ்வொரு மக்களுக்கும் தனி மொழி உள்ளது. ஆனால் அனைவரும் இந்தி மொழி பேசும் மக்கள் போல ஒரு தோற்றம் உண்டு.இதற்கு காரணம் இந்தி, இந்தியா என நாட்டின் பெயரோடு இணைந்து காணப்படுவதே.

அனைத்து அரேபிய மொழிகளும் பாரசீகம், அராமக் இன் வழி வந்த டயலெக்ட்டுகளாக இருந்த போதும் இன்றும் சிரியா ,இரான்,இராக், ஜோர்டான் ,ஏமன் போன்ற பகுதிகளில் ஒற்றுமையின்மை நிலவக்காரணம், அரேபிய மொழியை முதன்மையான மொழியாக கருதி மற்றவர்கள் பூர்வீமாக அரபிய மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் இல்லை  என இன்றைய சவுதி அரேபியர்கள் நினைப்பதும் ஒரு காரணம் ஆகும்.

மற்ற நாட்டு மக்கள் வீட்டில் யேமனி, சிரியன், பெர்சியன் என பேசினாலும், அவர்கள் பொதுவில் அரேபியும், முதன்மையான மொழியாக அரபியை புழங்க வேண்டும் என நிர்பந்திக்கப்படுதாகவும் சொல்கிறார்கள்.
---------------------

அட்லாண்டிஸ்:




இன்றைய நாளில் இருந்து சுமார்  கி.மு 10,500-12,000 ஆண்டுகளுக்கு முன்னால் அட்லாண்டிக் கடலில் மிகப்பெரும் சாம்ராஜ்யம் இருந்தது என்றும் நிலநடுக்கம்,சுனாமி, போன்ற ஏதோ ஒன்றால் ஒரு இரவு மற்றும் பகல் பொழுது காலத்திற்குள் கடலில் மூழ்கி அழிந்து விட்டது என ஒரு எடுகோள் அல்லது கிரேக்க புராணம் சொல்கிறது.

முதன் முதலில் அட்லாண்டிஸ் பற்றி தனது நூலில் விரிவாக எழுதியவர் கிரேக்க தத்துவஞானி மற்றும் அறிஞர் பிளாட்டோ (கி.மு.427-347) ஆவார். அவரது நூலான Timaeus, & Critias ஆகியவற்றில் அப்பெயர்களை கொண்ட கதாப்பாத்திரங்களின் உரையாடலின் வழியாக அட்லாண்டிஸ் பற்றி பேச வைக்கிறார், பிளாட்டோவின் நூல்களில் அவரது குருவான சாக்ரட்டிசும் உரையாடுவதாகவும், கேள்விகளை துவக்கி ,பதில் கொடுப்பது போல வருவதுண்டு,எனவே இவை எல்லாம் பிளாட்டோ தனது கற்றல் மற்றும் சாக்ரட்டீஸுடன் உரையாடிய போது கிடைத்த ஞானத்தின் வெளிப்பாடாக இப்படியாக ஒரு கற்பனையான மிக உயர்ந்த ஞானம் , கலாச்சாரம் கொண்ட மக்களைப்பற்றி எழுதி இருக்கலாம்,அல்லது அப்போதைய கிரேக்க அரசின் அதிகார துஷ்பிரயோகம் கண்டு வெறுப்படைந்து அதன் விளைவாக மிகப்பெரும் சாம்ராஜ்யம் ஒன்று உருவாகி காலத்தால் அழிந்தது என்று கிரேக்க சாம்ராஜ்யத்தினை மறைமுகமாக அறிவுறுத்தி இருக்கலாம் என பல வரலாற்று ஆசிரியர்களும் கருதுகிறார்கள்.

ஏன் இப்படி எழுத வேண்டும் என கேள்வி எழும், காரணம் இருக்கிறது,சாக்ரட்டிசின் (கி.மு.469-399)தத்துவப்பள்ளியில் தான் பிளாட்டோ மாணவராக பயின்றார், கிரேக்க மன்னர்கள் தங்களின் கடவுளின் நேரடி வாரிசாக கருதிக்கொண்டு தங்களையே கடவுளாக கருதி செயல்பட்டு வந்தார்கள், ஆனால் சாக்ரட்டீஸ் ,உன்னையே அறிந்து கொள், ஏன் எதற்கு என கேள்வி கேள் என அப்போதைய கடவுள் நம்பிக்கைக்கு எதிராக பேசினார். இதனால் அவர் கடவுள் இல்லை என பேசுவதாகவும், அரச நம்பிக்கையான கடவுளை விட புனித தன்மையை அடைய முடியும் அல்லது இருக்கிறது என இளைஞர்களை தவறான வழிக்கு திருப்புவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். சாக்ரட்டீசே வரலாறு அறிந்த ஆதாரப்பூர்வமான பகுத்தறிவாளர் எனலாம். இந்த நவீன காலத்திலேயே பகுத்தறிவுப்பேசினால் அவாளுக்கும் பிடிக்கமாட்டேங்குது ,இவாளுக்கும்,  பிடிக்கமாட்டேங்க்குது :-))

ஒரு மாத விசாரணைக்கு பின் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது, அவருக்கு கருணையுடன் அவரே ஹெம்லாக் என்ற நச்சு செடியின் விஷத்தினை அருந்தி மென்மையாக மரணத்தினை தழுவ அனுமதி அளிக்கப்பட்டது. விஷம் அருந்தி மரணம் நேரிடப்போகும் நேரத்திலும் வெகு சில நெருக்கமான மாணவர்களுடன் சாக்ரட்டீஸ் மரணத்திற்கு பின் மனித ஆத்மாவிற்கு என்னவாகும், ஆத்மா அழிவில்லாதது என்பவற்றை மரணம் நேரிடும் போது தனக்கு உண்டான அனுபவத்தின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார், அவ்வுரையை கேட்ட வெகு சிலரில் பிளாட்டோவும் ஒருவர்.பிளாட்டோ அப்போது அங்கில்லை என்றும் ,மஞ்சத்துண்டு திமுக ஆரம்பித்தபோது ராயபுரம் ராபின்சன் பூங்காவிற்கு போனாரா என்பது போல ஒரு கேள்வியும் உண்டு :-))

மரணத்திற்கு பின் சிலரின் ஆன்மா பாதல லோகத்திற்கு செல்லும், சிலரின் ஆன்மா மேல் உலகம் செல்லும், மேல் உலகத்தில் பசுமையான மரங்கள்,உண்மையான ஒளி,நிலம், மாசுபடாத தாதுக்கள், என அனைத்தும் தூய்மையான நிலையில் இருக்கும், நாம் வாழும் உலகில் மிக பரிசுத்தமானது என நாம் நினைக்கும் ஒன்றே அசுத்தமானது என்றெல்லாம் சாக்ரட்டீஸ்  மரண தருவாயில் ஏற்பட்ட காட்சியினை பகிர்ந்துள்ளார்.

உண்மையான உலகம் என்பதே மேல் உலகம் தான் என்றும் ,பூலோகம் ஆனது மேல் உலகின் மோசமான பிரதி ,நம் ஆன்மா மேல் உலகில் இருந்து கீழ் இறக்கம் அடைவதே மனித பிறப்பு ,மரணத்திற்கு பின் அடையும் மறு பிறப்பு என்பது மேல் உலகிலோ அல்லது பாதாள உலகிலோ நடக்கும் என்பதே சாக்ரட்டீசின் சித்தாந்தம்.

இதன் பாதிப்பு மற்றும் , சாக்ரட்டீஸுடன் மேற்கொண்ட உரையாடல்கள் இவற்றின் அடிப்படையிலேயே "republic" என்ற நூலை எழுதி இருக்க வேண்டும் என்கிறார்கள்.

மனிதன் பிறப்பது மேல் உலகத்தில் மாசு அடையும் ஆன்மாவினால் அவன் ஆன்மா கீழ் உலகான பூமியில் பிறக்கிறது ,மரணத்திற்கு பின் மீண்டும் மறுபிறப்பாக மேல் உலகம் செல்கிறது .அதற்கு அவர்கள் கீழ் உலகில் பரிசுத்தமான வாழ்வினை வாழ்தல் வேண்டும் என சாக்ரட்டீசின் அடிப்படையிலேயே ,பிளாட்டோவும் வலியுறுத்தினார் என்கிறார்கள்.

கிரேக்க மன்னர்கள்,சண்டை, அதிகார வெறி என மாசடைந்து விட்டதால் அழிவை அடைவார்கள் என்பதனை மறைமுகமாக உணர்த்தவே அட்லாண்டிஸ் என்ற பரிசுத்தமான ,சகல வல்லமை படைத்த தேசத்தினை தனது நூலில் உருவாக்கி அழிவினை சந்திப்பதாக காட்டியுள்ளார் அப்படியான நகரம் உண்மையில் இல்லை என்பது பல வரலாற்று ஆசிரியர்கள் கருத்து.

அட்லாண்டிஸ் புராணம்;

கடல் தெய்வம் போசிடானுக்கும் மனித பெண் கிளிட்டோவுக்கும்(Poseidon and the mortal woman Cleito) 5 இரட்டைக்குழந்தைகள் பிறந்தார்கள் ,அவர்களில் மூத்தவர் அட்லாஸ், அவரது மற்ற சகோதரர்கள் புரோமெதியாஸ்,எபிமெத்தியாஸ்,மெனோஷியஸ்(Menoetius) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.


அவர்களுக்காக அட்லாண்டிக் கடலில் மூன்று வளையங்களாக நீர் சூழந்த உள்வட்டங்களை கொண்ட ஒரு நாட்டினையும் ,அதன் மத்தியில் ஒரு மலையும் கொண்ட தீவினை கிரேக்க கடவுள் ஸீயஸ் உருவாக்கி தந்தார் , அதனை பத்து சகோதரர்களும் சமமாக 10 பாகங்களாக பிரித்து ஆண்டு வந்தார்கள்.


காலம் செல்ல செல்ல சாதாரண மனிதர்கள் போல போட்டி பொறாமை கொண்டு சச்சரவுகளில் ஈடுப்பட்டு, சண்டையிட்டுக்கொண்டார்கள், பின்னர் அவர்கள் ஏதன்சின் மீது போர் தொடுத்து சண்டையிட்டார்கள் என்றும் , இம்மக்களின் பொறுப்பற்ற தன்மை கண்டு கிரேக்க கடவுள்களின் தலைவரான ஸீயஸ் இடி ,மின்னலை ஏவி விட்டு அழித்ததோடு அல்லாமல் பெரும் நில நடுக்கம் ஏற்பட வைத்து அட்லாண்டிஸ் தீவினை ஒரு இரவு மற்றும் பகலில் கடலில் மூழ்க வைத்தார் என்றும் கூறுகிறார்கள்.

இது பிளாட்டோ கூறும் சம்பவம், இதனை சலோன் என்ற கிரேக்க துறவி, எகிப்துக்கு சென்றிருந்த போது அங்கிருந்த துறவி சொன்னதாகவும் அதனை கேட்டு கிரியோஸ் ,டைமெனோஸிடம் சொல்வதாகவும் கூறியுள்ளார்.

இது முழுக்க கற்பனையாகவும் இருக்கலாம் ,அல்லது உண்மையில் நில நடுக்கம்,சுனாமியால் அழிந்த ஒரு தீவின் வரலாற்றினை பொதுவாக சொல்லி அதற்கு அட்லாண்டிஸ் என பிளாட்டோ பெயரிட்டு அழைத்தும் இருக்கலாம்.

பிளாட்டோ காலத்திற்கு முன்னரே அட்லாஸ், புரோமெத்தியாஸ் போன்ற கிரேக்க டைட்டான் கதைகள் உண்டு, அவை எல்லாம் கொஞ்சம் மாறுபட்டவை.

அட்லாஸ்-கிரேக்க புராணம்:

கிரேக்க புராணப்படி அட்லாஸ் , கேயா என்ற பூமிக்கும், குரோனாஸ் என்ற வானத்திற்கும் பிறந்த ஒரு டைட்டான் அவரது சகோதரர்கள் தான் புரோமெத்தியாஸ்,மெனிஷியஸ் போன்றோர்.

மெனிசியஸுக்கும் ,ஸீயஸ் தலைமையிலான கிரேக்க கடவுள்களுக்கும் சண்டை வரவே ,அப்போது அட்லாஸ் மெனிஷியஸ் சார்பாக சண்டையிட்டு , கடவுள்கள் வாழும் புனித மலையான ஒலிம்பஸில் ஏறி சண்டையிடவே பொறுமை இழந்த ஸீயஸ் தனது சக்தி வாய்ந்த ஆயுதமான இடியை ஏவி  அனைவரை அழித்து , சகோதர டைட்டான்களுக்கு கடும் தண்டனை விதித்தார்.

மெனிஷியஸை டார்டாரஸ் எனப்படும் பாதாள உலகில் அடைத்தார், புரோமெத்தியாசை காக்கஸ் மலையில் சங்கிலியால் கட்டிப்போட்டு ,ஒரு கழுகை விட்டு கொத்தவைத்து துன்புறுத்தி பின்னர் டார்டாரஸில் அடைத்தார்.



அட்லாசை வானத்தினை தோளில், அல்லது தலையில் தாங்கிப்பிடித்து ,மீண்டும் பூமியோடு சேராதபடி எப்போதும் சுமந்திருக்க வேண்டும் என சபித்தார். இதன் தாத்பரியம் என்ன வென்றால், வானமும், பூமியும் சேர்ந்து டைட்டான்களை உருவாக்கியதால் தான் இப்பிரச்சினை எனவே இனி எக்காலத்திலும் அவர்கள் ஒன்றாக சேர்ந்து டைடான்களை குழந்தைகளாக பெற்றுக்கொள்ளக்கூடாது, எனவே அவர்களின் மகன் அட்லாசை வைத்தே பிரித்துவிட்டார்.

இது மட்டும் அல்லாமல் இன்னும் பல கிளைக்கதைகள், மாறுபட்ட வடிவங்கள் என அட்லாசின் கதைகள் கிரேக்கத்தில் புழக்கத்தில் உண்டு.



வழக்கமாக படங்களில் சித்தரிக்கப்படுவது போல அட்லாஸ் பூமியை தோளில் தூக்கிக்கொண்டு நிற்க தண்டிக்கப்படவில்லை, பின்னாளில் ஒரு பிரஞ்ச் /இத்தாலி  உலக வரைப்பட தயாரிப்பாளர் Antonio Lafreri தனது சின்னமாக அட்லாசை வைத்திருந்தார், அதனை வரைப்படத்திலும் பெயராக போட்டு வெளியிட்டார் "Gerardus Mercator" என்ற வரைப்பட தயாரிப்பாளர், ஆனால் அவர்  வானியலில் புகழ்ப்பெற்ற மரிஷியானா அரசர் அட்லாஸ் என்பவரையே பெருமை படுத்த அப்படி செய்தார்.மேலும் ஃபார்னெஸ் என்ற நிறுவனம் உலக உருண்டையை தயாரித்து அட்லாஸ் என்றப்பெயரிலும் விற்க ஆரம்பித்தால், அனைவரும் அட்லாஸ் உலகத்தினை தோளில் தூக்கிக்கொண்டு நிற்பது போல வரைய ஆரம்பித்துவிட்டார்கள்.

அட்லாண்டிஸ் குறித்த பிளாட்டோவின் குறிப்புகள்.

# ஏதன்சில் இருந்து அட்லாண்டிஸ் 2,500 மைல்கள் தொலைவில் உள்ளது.

# ஜிப்ரால்டர் வளைகுடாவில் பில்லர்ஸ் ஆப் ஹெர்குலசில் இருந்து மேற்கில் உள்ளது.

#அதன் பரப்பளவு ஆசியா மைனர் மற்றும் லிபியா சேர்ந்த அளவுக்கு இருக்கும்.

# மூன்று உள்வட்டங்களில் ஏரி சூழ அமைந்த நாடு, கடற்கரையோரம் உள்ளது. தீவின் மத்தியில் ஒரு மலை உள்ளது அதில் கடல் அரசன் போசிடான் கோயிலும் ,ஆறு குதிரைகளை இழுக்கும் தேருடன் கூடிய போசிடான் சிலையும் உள்ளது.

# அட்லாண்டிஸ் நிலம் மிக வளமானது, நல்ல விளைச்சலும்,உயர்ந்த பசுமையான மரங்களும், கொண்ட வளமான நாடு.

#அட்லாண்டிஸ் மக்கள் , வீரமும், அறிவும் நிரம்பியவர்கள், தொழில்நுட்பத்தில் மிக முன்னேறியவர்கள்.

# கடல் பயணத்திலும், கப்பல் கட்டுவதிலும் வல்லவர்கள், மூன்று அடுக்குகளை கொண்ட மிகப்பெரிய கப்பல்களை பயன்ப்படுத்தி வந்தார்கள்.

#கட்டிடக்கலையில் வல்லவர்கள், பிரமிட் போன்ற கட்டுமானங்களும், உயர்ந்த கட்டிடங்களும் கட்டினார்கள்.

அனைத்து வகையிலும் பரிபூரணமானவர்களும், மிக நல்ல நாடாகவும் ஏதன்ஸுக்கு 9000 ஆண்டுகளுக்கு முன்னரே விளங்கியது எனக்குறிப்பிட்டுள்ளார்.

முன்னரே சொன்னது போல கிரேக்க ஆட்சியாளர்களுக்கு  அழிவு வரும் என  குறிப்பால் உணர்த்த எழுதப்பட்டதாக இருக்கலாம் ,ஆனால் பின்னர் ஏன் வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் மிக தீவிர ஆய்வுகளும் , தேடல்களும் செய்கிறார்கள், அதுவும் இது வரைக்கும் மனித வரலாறு நன்கறிந்த  பழமையான மனித நாகரீக வரலாற்றின் காலம் கிமு 4500 தாண்டிப்போகவில்லை, அவர்களைப்பற்றி கிடைக்கும் சான்றுகளும் மிகவும் பின் தங்கிய நாகரீகமாகவே காட்டுகிறது.

அப்படி இருக்கும் போது இன்றைக்கு சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் மிக மேம்பட்ட நாகரீகம் என எழுதப்பட்டதை வைத்து தேடுவானேன்?

காரணமுள்ளது, பிளாட்டோ குறிப்பிட்ட காலமான 12,000 ஆண்டு என்பது தான், ஏன் எனில் சுமார் அதே காலக்கட்டத்தில் தான் கடைசி பனிக்காலம் முடிவுற்று பெரு வெள்ளம் ஏற்பட்டு, உலகின் கடல் மட்டம் சராசரியாக்க 100 மீட்டர் உயர்ந்தது, மேலும் பெரும்பனி உருகியதால் பூகம்பம்,சுனாமி என பல இயற்கை சீற்றங்களும் ஏற்பட்டது.

மேலும்  பெரு வெள்ளம் , உலக அழிவு என உலகின் அனைத்து புராணங்களிலும் தவறாமல் ஒரு கதை உள்ளது,


யூத,கிருத்துவ புராணங்களில் நோவாவின் ஆர்க் கப்பல் கதை, இந்து புராணங்களில் மனுவின் பெருங்கப்பல், விஷ்ணு மீனாக வந்து  வழி காட்டினார் என்பது போல இன்னும் பல மத, நாடோடிக்கதைகளில் பெரு வெள்ளம் ,பேரழிவு என குறிப்பிடப்பட்டுள்ளது ,மேலும் உலகம் எங்கும் கடலில் மூழ்கி அழிந்த நிலப்பரப்பு குறித்த இலக்கிய குறிப்புகள் உள்ளது.

இந்தியாவில் பார்த்தால் லெமுரியா கண்டம் ,பஹ்ருளி ஆறு என தெற்கேவும், கிழக்கு கடற்கரை பகுதியில் கடல் கொண்ட பூம்புகார் எனவும், மேற்கு கடற்கரைப்பகுதியில் கட்ச்,காம்பே வளைகுடாவில் மதுரா நகரம் கடல் கொண்டது பற்றி எல்லாம் நிறைய இலக்கிய ,புராண குறிப்புகள் உள்ளது.

கியுபா, அருகே கடல் அடியில் சில கட்டுமானங்கள் கண்டுள்ளனர், ஜப்பானில் யோங்குமுனி என்ற இடத்தில் கடல் அடியில் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

கிரேக்கம், ரோம் அருகேயே சில கடல்கோள் நிகழ்வுகள் நடந்துள்ளது, எனவே 12,000 ஆண்டுகளுக்கு  முன்னர் கடல் மட்டம் பொதுவாக உயர்ந்து பல இடங்களை அழித்து இருக்கலாம், அது போல அட்லாண்டிசும் அழிந்து இருக்கலாம், இதெல்லாம் செவிவழிக்கதைகளாக பரவி பிளாட்டோ நூலாக எழுதி இருக்கலாம், மேலும் அவர் காலத்தில்  நான்காம் பனிக்காலம் ,அதன் முடிவு 12,000 ஆண்டுகளுக்கு முன் என்பதெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும் போது தோராயமாக சொன்னாலும் ஆண்டு கணக்கும், இன்ன பிற நிகழுகளும் சரியாக ஒத்திருப்பதாக சில வரலாற்று ஆய்வாளர்கள் நினைக்கிறார்கள்,எனவே தான் இன்றளவும் அட்லாண்டிஸ் ரகசியம் மிகவும் ஆர்வத்தினை தூண்டுவதாக உள்ளது.
-----------------

திரும்பிப்பார்த்தல் தொடரும்...

------------

பின்குறிப்பு:

படங்கள்,செய்திகள் உதவி,

கூகிள்,விக்கி,என்சைக்கிளோ பீடியா,பிபிசி,sron.nl,atlantisquest,national geography இணைய தளங்கள் ,நன்றி!
*********