Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts

Sunday, July 08, 2012

நெய்வேலியில் நூல்வெளி-புத்தக சந்தை-2012




வழக்கமாக சென்னை புத்தக சந்தைக்கு போய் வேடிக்கை பார்ப்பதுண்டு, பின்ன வேடிக்கை பார்க்கும் விலையில் தானே நவீன எழுத்துலக பிரம்மாக்களின் படைப்புகள் இருக்கு, இந்த வாரம் ஊரு பக்கமா போய் இருந்த போது தினமலரை தற்செயலா விரிச்சா ,நெய்வேலியில் புத்தக சந்தைனு விளம்பரம் கண்ணில் பட்டது, வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் வைப்பாங்க ,இம்முறை முன்கூட்டியே வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

பதிவர் சுரேகா பதிவில் சொல்லியிருந்தார் ஆனால் இந்த மாதம் தான் என்பதை கவனத்தில் வைக்கவில்லை.இவ்வளவு தூரம் வந்தாச்சு ,அதையும் போய் பார்த்துவிடுவோம் என 2 மினிட்ஸ் பிளான் ஒன்று போட்டாச்சு. சரி வாங்க சுரங்க நகரத்தின் உள்ளே போவோம்.

சுரங்க நகரத்தின் முகப்பு நுழைவாயில் ..ஆர்ச் கேட் பஸ் ஸ்டாப் என்று பெயர், கும்பகோணம் சென்னை பேருந்துகள் உள்ளே செல்லாது இங்கே இறங்கி லோக்கல் பேருந்தில் செல்ல வேண்டும். புத்தக்காட்சியரங்கு 11 ஆம் வட்டத்தில் ,பாரதி விளையாட்டு அரங்கு அருகே உள்ளது.


நெய்வேலி நகரம் அன்புடன் அழைக்கிறதாம், வழி நெடுக யூகலிப்டஸ் மரங்கள் தான் நிக்குது சாலையோரம் ,என்னை வரவேற்று பூமழை தூவ பூவையார் யாரும் காணோம் :-))

புத்தக அரங்கு முகப்பு,கோட்டை போல படம் வரைந்து வெட்டி டி.ஆர் போல செட்டிங் போட்டு இருக்காங்க!


நுழைவு சீட்டு வழங்கும் இடம், கட்டணம் 3 ரூபாய் மட்டுமே, கார் பார்க்கிங் 5 ரூ, 2 சக்கர வாகனம் நிறுத்த 3 ரூ என எல்லாம் சகாய விலையில் , காரணம் புத்தக சந்தைக்கு உபயதாரர் பழுப்பு நிலக்கரி நிறுவனம், என்பதால் லாப நோக்கு இல்லை.

சென்னை போல எழுத்து சிற்பிகளும், பதிப்பங்களும் சொந்தக்காசில் வினைல் போர்ட் வச்சு நாசம் செய்யவில்லை என்பது கூடுதல் அழகு. மேலும் அரங்கும் சின்னது எளிதில் ரவுண்டு அடித்துவிடக்கூடியதே ஆனாலும் மத்தியான வேளையில் சென்றதால் செம வெயில் , தொப்பர நனையும் அளவுக்கு வியர்த்துக்கொட்டிவிட்டது.
ஒரு சில அரங்குகளை மட்டுமே கைப்பேசியில் படம் எடுத்தேன் அதற்குள் எங்கிருந்தோ ஓடி வந்த செக்கியூரிட்டி படம் எடுக்க கூடாது என எச்சரிக்கை விட்டார், என்ன கொடுமை சார் இது, நான் பெங்களூர்,சென்னையில எல்லாம் டிஜிட்டல் கேமிராவிலே படம் எடுத்து இருக்கேன், இங்கே புதுசா சொல்றாங்களேனு கேட்டேன் அது அப்படித்தான் சொல்லிட்டு போயிட்டார்... சண்டை வந்திருக்கும் , ஆனால் நெய்வேலிக்கு என சில விதிகள் இருக்கு,அங்கு பொதுவாகவே படம் பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. என்பதால் அமைதியா ஆகிட்டேன் ...ஹி ..ஹி ஆனாலும் படம் எடுக்கிறதையும் விடவில்லை...என்ன கொஞ்சம் அமுக்கமா செஞ்சேன் ..நீங்க பார்க்கிறது எல்லாம் திருட்டு படங்கள் (திருட்டு டிவிடி போல)

500 ரூ க்கு மேல வாங்க கூடாதுன்னு முடிவு செய்து போனேன் ,அந்த தொகைக்கு புத்தகத்தோட அட்டைய மட்டும் தான் வாங்க முடியும் போல :-))

வழக்கம் போல அதே ...அதே பதிப்பாளர்களின் அதே ..அதே எழுத்தாளர்களின் ..அதே ..அதே புத்தகங்களே குவிந்திருந்திருந்தன , என்ன ஒன்று சென்னையை விட இங்கே கம்மியா லோடு இறக்கி இருந்தாங்க.

பதிவுலக நண்பர் சுரேகாவோட புத்தம் புதுத்தகம் தலைவா,வா! வெளியிடப்பட்டு இருக்குன்னு சொன்னாரே என தேட ஆரம்பித்தால் கண்ணுல அகப்படுவனானு தண்ணிக்காட்டுச்சு, என்ன பதிப்பகம்னு மறந்து விட்டதால் வந்த வினை, ஒரு வழியா ரெண்டாவது ரவுண்டில் "மதி புத்தக நிறுவனத்தில் " கண்டேன் தலைவனை.

புத்தகம் நல்லா வடிவமைக்கப்பட்டிருக்கு, தரமும் நல்லா இருக்கு, விலையும் குறைவு தான் 80 ரூ, (10% கழிவு போக 72ரூ) பக்கங்கள், 114,(ஒரு பக்கத்தின் விலை எனப்பார்த்தால் கூடுதலோ என நினைக்கிறேன், ஒரு பக்கம் 1 ரூ 58 பைசா வருது)

அட்டைக்கு எல்லாம் காசு சேர்த்து கணக்கு செய்தா கொடுத்த காசு செரிச்சிடும்னு நினைக்கிறேன் :-))
(இந்த கணக்கை எல்லாம் குவார்ட்டர் வாங்கும் போது போட தோன்றுவதில்லை!)

திரும்பி வரதுக்குள்ள ரேண்டமாக அங்கே ,இங்கே என சில பக்கங்கள் படித்துவிட்டேன், இதுல காப்பி ரைட் ஸ்டேட்மென்ட் தான் சூப்பர் ... யாருக்கும் இரவலாகவோ அல்லது வாடகைக்கோ புத்தகத்தை விட கூடாதாம், லெண்டிங் லைப்ரரிகாரங்க வாங்கினா, விற்பனை குறைஞ்சிடும்னு முன்னெச்சரிக்கை போல :-))

தோராயமா திறந்த பக்கத்தில் துருவ ஐஸ் கட்டியில் 20% மேல தெரிவது திறமை, தெரியாம உள்ள மூழ்கி இருப்பது குணாம்சம்னு தத்துவம் சொல்லியிருக்கார் தலைவர், அப்படியே ,காந்தி பார்த்த் வேலை,காமராஜரின் குணம்னு எல்லாத்தையும் தொட்டு போறாபோல இருக்கு.

சந்திர மவுலி, விக்னேஷ் பாத்திரப்படைப்பின் அடிப்படையில் பார்த்தால் " ராபின் ஷர்மா" எழுதின "தி மாங்க் ஹூ சோல்ட் ஹிஸ் ஃபெராரி" போலவோனு தோனுது.காப் மேயர், ,எம்.எஸ்.உதயமூர்த்தி போல கட்டுரை வடிவில் இல்லாமல் "paulo coelho" ராபின் ஷர்மா வகையில் கதையாக கொண்டு போயிருக்கிறார்.

இன்னும் முழுசா படிக்கலை ,படிச்சிட்டு விமர்சனம் எழுதலாம்னு ஒரு எண்ணம், அது சொந்த செலவில் சூனியம் ஆகிடுமோன்னு ஒரு கெவுளி கூவுது , சுரேகா தான் இன்னும் என்னை திட்டாம இருக்கார், அவர் கிட்டேவும் திட்டு வாங்கலாம்னு முடிவு செய்துட்டா ...விமர்சனம் எழுதிட மாட்டோம், ஏன்னா நான் ஒரு தடவை முடிவு செய்திட்டா அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன் :-))

பக்கத்தில கேபிள்ஜியின் சினிமா வியாபாரமும் இருந்துச்சு(சோடிப்போட்டு வைக்குறாங்கப்பா) எடுத்து புரட்டிப்பார்த்தேன், அட்டை ரொம்ப டல்லா பழுப்பு ,கருப்பு கலரில் கவருவது போல இல்லை,கேபிள்ஜி சினிமா புத்தகம்னா சும்மா ஜிலு ..ஜிலுனு அட்டை போட வேண்டாம்?

சரியாக கவனிக்காமல் போய் இருப்பேன் , புத்தகம் பேரு கடைசி வினாடியில் பிளாஷ் ஆகி நினைவுப்படுத்தியது, எடுத்து பார்த்ததோடு சரி வாங்கவில்லை,
ஏற்கனவே பட்ஜெட் தாண்டியாச்சு அதனால் அப்புறம் பார்க்கலாம்னு வந்துவிட்டேன்.


ஏற்கனவே ஒரு ரவுண்ட் போய்விட்டதால் வந்த வினை, முதல் ரவுண்டில் பாரதி புத்தகாலயம்,விடியல்,அலைகள், நியுசெஞ்சுரி போன்ற பதிப்பக அரங்குகளில் மலிவு விலையில் நல்ல நூல்களாக கொஞ்சம் பொறுக்கிவிட்டேன்.இது போன்ற பதிப்பங்களில் தான் சர்வதேச அளவில் புகழ்ப்பெற்றவர்களின் மொழியாக்க நூல்கள் சல்லீசாக கிடைக்கிறது.

கிழக்கில் எல்லாம் டவுசரை உருவ என்றே ரஜினி,கலைஞர், விஜயகாந்துக்கு எல்லாம் வாழ்க்கை வரலாறு நூல்களை போட்டு காசு புடுங்கிற வேலையை கன கச்சிதமாக செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

எஸ்.ரா.எழுதிய 5 நூல்கள் 150 ரு என ஒரு அறிவிப்பு, ரொம்ப ஆசைப்பட வேண்டாம் பேசும் புலி, அது இதுனு சின்ன குழந்தைகளுக்கு எப்போவோ எழுதி இருப்பார் போல ,அது போன்றவையாம்.

மேற்கொண்டு எதுவும் வாங்காமல் ,வேடிக்கைப்பார்க்கலானேன், சின்னப்பசங்க நிறையபேர் அவரவர் அப்பா,அம்மாவை இழுத்துக்கொண்டு கடை கடையா அலைய விட்டார்கள், நெய்வேலியில் எல்லாருமே உத்தியோகஸ்தர்கள், என்பதாலும் , பசங்களும் படிப்பில் ஆர்வம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள், பசங்க வேகத்துக்கு பெற்றோர் வளரவில்லை எனலாம்,,இது போன வருஷம் வாங்கின புத்தகம், வேண்டாம் என்றே சொல்லி பசங்களை இழுத்துப்போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பையன் அவசரப்பட்டு பாலித்தின் கவரை பிய்த்து புத்தகத்தை அவங்க அப்பாக்கிட்டே காட்ட எடுத்து போக பார்த்தான், கடையில் இருந்தவர் திட்டிக்கொண்டு இருந்தார். இரு வேறு உலகால் ஆனது வாழ்க்கை.

பாலித்தீன் ஒழிப்போம் என யாரும் கேரி பேக் தரவில்லை, ஒரு பேப்பர் கவரில் போட்டு கொடுத்தார்கள் ,கை வேர்வையிலே ஊறி பிய்ந்துக்கொண்டது, அப்புறம் எதுக்குய்யா புத்தகத்தை மட்டும் பாலித்தீன் கவரில் போட்டு மூடி வைக்குறிங்க :-))

குறைவான புத்தகங்களையே வாங்கினேன் , அதற்கே 1000 வந்துவிட்டது, எப்படியும் 10 நாளில் படித்துவிடுவேன். வாங்கிய புத்தகங்கள் எல்லாம் சராசரியான ஒரு "முட்டாளின்" தேர்வாகவே இருக்கும் என்பதால், வெளியில் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை :-))

மேலும் சில படங்கள்...





Tuesday, May 01, 2012

INTERACTIVE LEARNING or DISCUSSION





ஒரு கருத்து பரிமாற்றத்தில் ஒருவர்  கருத்து வழங்குபவராகவும் மற்றவர்களும் பெறுபவர்களாக அதாவது கேட்பவர்களாகவும் இருப்பது மரபுவழி கருத்துரையாடல் அதே சமத்தில் கருத்துரைஞர் தானே பேசிக்கொண்டிராமல் பார்வையாளர்களிடம் கேள்விகள் கேட்டுப் பதில் பெற்று அதன் மீது விரிவான விளக்கம் அளிப்பது மேலும்  பார்வையாளர்களை கேள்விக்கேட்க தூண்டி அதனடிப்படையில் விளக்கங்களை அளிப்பதும் பங்கேற்பு கற்றல் மற்றும் கலந்துரையாடல்  (INTERACTIVE LEARNING or DISCUSSION)எனப்படும் இது தான் தற்போதைய புதிய தலைமுறைக்கற்றல் ஆகும்.

பாரம்பரியமாக நமது கல்விக்கூடங்களில் ஆசிரியர் அவர்ப்பாட்டுக்கு பாடம் சொல்லிப்போவார் மாணவர்கள் கேட்பது ஒன்றே கடமையாக அமர்ந்திருப்பார்கள் ,கேள்விகளோ ,விளக்கங்களோ கேட்டால் அதிக பிரசங்கி ,போன மாதத்தேர்வில் என்ன மார்க் வாங்கின, என்ன ரேங்க் வாங்கின , பேச்சுக்கு மட்டும் குறையில்லை உட்காரு என்று மண்டையில் குட்டுவார்கள். அப்படித்தான் பதிவுகளும் இருக்கு யாரேனும் எழுதுவார் படிப்பவர்கள் நல்லப்பகிர்வு என்று தலையாட்டுவார்கள் ,அதற்கு கருத்துரையாடல் செய்ய முற்பட்டால் உனக்கு எல்லாம் தெரியுமா என ஏவுகணை விடுவார்கள்.

இது போன்ற ஒரு தலைப்பட்சமான கருத்து பரிமாற்றங்களை மாற்ற உத்தேசித்து புரட்சிகரமான ஒரு பதிவினை "INTERACTIVE LEARNING or DISCUSSION" ஆக ஒரு பதிவிட்டேன் அதற்கு பின்னூட்ட பதிவு எனவும் நாமகரணம் சூட்டினேன். ஆனால் மக்களுக்கு INTERACTIVE LEARNING or DISCUSSION என்பதில் இன்னும் சற்று குழப்பம் இருக்கிறது என நினைக்கிறேன் எனவே தெளிவாக விளக்க முனைவர் கவுண்டமணி .டாக்டர் ஆப் சிரிப்பாலஜி அவர்களை கவுரவ விரிவுரையாளராக அழைத்துள்ளேன் அவரது காணொளி மூலம் பங்கேற்பு கற்றல் மற்றும் கலந்துரையாடலின்  முழு பரிமாணத்தினையும் விளக்குவார் அதனைக் கண்டு களியுங்கள்!

பங்கேற்பு கற்றல்(அ) கலந்துரையாடல் விளக்கப்படம்:



தமிழ் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட எப்படி எல்லாம் பாடுபடுகிறான் இந்த வவ்வால் என இன்று யாரும் நினைத்துப்பார்க்காமல்  இருக்கலாம் ஆனால் நாளைய சரித்திரம் சொல்லும் "அன்றே வவ்வால் என்றொரு வல்லவன், நல்லவன்" சொன்னான் என"

ஹி...ஹி இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை நீ எல்லாம் வல்லவன்,நல்லவானா இதெல்லாம் "கொளுத்துற வெயிலில்  கொரங்கு குல்லா போட்டுக்கிட்டு எவனாவது சூடான டீயா ஊதி ...ஊதிக்குடிச்சுக்கிட்டு இருப்பான்" அவன்க்கிட்டே போய் சொல்லு நம்புவான் ,இங்கே வேணாம் தம்பின்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது ...ச்சும்மா தமாசு :-))

பின்குறிப்பு: 

#நாம என்ன தான்  விஞ்ஞான ,தத்துவ கருத்து சொன்னாலும் எல்லாத்தையும் கேட்டுவிட்டு கடைசியில் வாழைப்பழ காமெடி ஆக்கிடுவாங்க மக்கள் :-))

#படங்கள்,காணொளி கூகிள்,யுடுயுப் ,நன்றி!

*************

Tuesday, April 24, 2012

புவி தினம் ஏப்ரல்-22 எனும் ஏகாதிபத்தியங்களின் ஏய்ப்பு!





அம்மா தினம், அப்பா தினம், காதலர் தினம், சுற்று சூழல் தினம், புவி  தினம் என டிசைன் டிசைனா நாட்களை அறிவித்து மெத்த படித்தவர்களின் மூலமாக அதனை நினைவு கூற ,மற்றும் கொண்டாட வைத்து அதெல்லாம் தெரியாமல் இருந்தால் அவனை  முட்டாள் என சித்தரிப்பதே  இன்றைய நவீனம், என்னைப்பொறுத்தவரையில் அதெல்லாம் கொண்டாடி மகிழ்பவர்களே கடைந்தெடுத்த முட்டாள்கள் என்பேன் .

ஏன் எதற்கு என்ற சிறிதும் கேள்வி இல்லாமல் எவனாவது எதையாவது சொன்னால் அதை செய்வதும், அதை  வேறு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என பதிவு போட்டு பொழுது போக்கும் கணினி அறிவுள்ள முட்டாள்களின் உலகமாகவே தமிழ் பதிவுலகம் இருக்கிறது.

நாட்களை அறிவித்து கொள்கைகளை கடைப்பரப்புவதன் பின்னணியில் ஏகாதிபத்தியம் என்கிற முன்னேறிய நாடுகளின் வணிக சுயநலமே ஒழிந்து இருக்கின்றது என்பது பாமரனுக்கு தெரியாமல் அல்லது புரியாமல் இருக்கலாம் , கணினி ,இணையம் என தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்க வாய்ப்புள்ள பதிவுலகில் இருப்பவர்களோ ஈ அடிச்சான் காப்பியாக பொது புத்தியில் உலாவ விடும் செய்திகளையே பதிவாக ஆக்கி பொழுது போக்குவதற்கு இவர்கள் ஏன்?

அதான் திணிக்கப்பட்ட கருத்துக்களை பரப்புரை செய்ய ஏகப்பட்ட தொலைக்காட்சிகள்,அச்சு ஊடகங்கள் இருக்கே. அதையே பிரதி எடுத்து திரும்ப வாந்தி எடுக்கும் பதிவர்கள் எப்படி மாற்று ஊடகம் ஆவார்கள்? சொந்த கருத்து, சுய தேடல் இருக்காதா?

வலைப்பதிவுகள் என்பது புதிய , புரட்சிகர ,மாற்று சிந்தனைகளை கொண்டு வர ஒரு வாய்ப்பு ஆனால் வணிக ஊடகத்தில் சொல்லப்படுவதையே மறுபிரதி எடுக்க இந்த கொம்பன்கள் தேவையே இல்லை.

எவனாவது சிட்டுக்குருவி அழிகிறது சொன்னால் அப்படியே ஆமாம் சிட்டுக்குருவியே காணோம்னு கண்ணை மூடிக்கொண்டு பதிவ போடுவார்கள், புவி தினம் என்று சொன்னால் போதும் டெம்பிளேட்டாக புவி வெப்பமாதல் இன்ன பிற சேர்த்து உலகை காப்போம்னு அறிவுறைக்கூறி ஒரு  பதிவு, ஏன் ,எதற்கு எப்படி என்ற கேள்விகள் கிடையாது.

புவி தினம் என ஜல்லி அடிப்பதெல்லாம் வளர்ச்சி அடைந்த  நாடுகளின் சுய நல பிரச்சாரங்கள், மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் ஒரு சில அறிவு ஜீவிகளுக்கு டைம் பாஸ் சமாச்சாரங்கள், என பல உள்ளடி சமாச்சாரங்கள் இருப்பதை தெரிந்துக்கொள்ளாமலே இன்று ஒரு பதிவு போட "சப்ஜெக்ட்" கிடைத்து விட்டது என எதையும் யோசிக்காமல் பதிவ போட்டு ஹிட்ஸ் வாங்க அலையும் கூட்டம் தான் வலைப்பதிவுலகில் அதிகம் பெருகிப்ப்போய் கிடக்கு, ஒரு 5 நிமிடம் ஒதுக்கி இதை எல்லாம் ஊருக்கு சொல்லும் உத்தமோத்தம நாடுகளின் லட்சணத்தை இணையத்தில் தேடி அறிய எவரும் முன் வருவதில்லை.

புவி தினம் ,உலகை அழிவில் இருந்து காப்போம் என உலகுக்கே அறிவுறை சொல்லுபவர்களின் உண்மை நிலவரத்தை அடுத்தப்பதிவில் காண்போம்.

தொடரும்.