அம்மா தினம், அப்பா தினம், காதலர் தினம், சுற்று சூழல் தினம், புவி தினம் என டிசைன் டிசைனா நாட்களை அறிவித்து மெத்த படித்தவர்களின் மூலமாக அதனை நினைவு கூற ,மற்றும் கொண்டாட வைத்து அதெல்லாம் தெரியாமல் இருந்தால் அவனை முட்டாள் என சித்தரிப்பதே இன்றைய நவீனம், என்னைப்பொறுத்தவரையில் அதெல்லாம் கொண்டாடி மகிழ்பவர்களே கடைந்தெடுத்த முட்டாள்கள் என்பேன் .
ஏன் எதற்கு என்ற சிறிதும் கேள்வி இல்லாமல் எவனாவது எதையாவது சொன்னால் அதை செய்வதும், அதை வேறு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என பதிவு போட்டு பொழுது போக்கும் கணினி அறிவுள்ள முட்டாள்களின் உலகமாகவே தமிழ் பதிவுலகம் இருக்கிறது.
நாட்களை அறிவித்து கொள்கைகளை கடைப்பரப்புவதன் பின்னணியில் ஏகாதிபத்தியம் என்கிற முன்னேறிய நாடுகளின் வணிக சுயநலமே ஒழிந்து இருக்கின்றது என்பது பாமரனுக்கு தெரியாமல் அல்லது புரியாமல் இருக்கலாம் , கணினி ,இணையம் என தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்க வாய்ப்புள்ள பதிவுலகில் இருப்பவர்களோ ஈ அடிச்சான் காப்பியாக பொது புத்தியில் உலாவ விடும் செய்திகளையே பதிவாக ஆக்கி பொழுது போக்குவதற்கு இவர்கள் ஏன்?
அதான் திணிக்கப்பட்ட கருத்துக்களை பரப்புரை செய்ய ஏகப்பட்ட தொலைக்காட்சிகள்,அச்சு ஊடகங்கள் இருக்கே. அதையே பிரதி எடுத்து திரும்ப வாந்தி எடுக்கும் பதிவர்கள் எப்படி மாற்று ஊடகம் ஆவார்கள்? சொந்த கருத்து, சுய தேடல் இருக்காதா?
வலைப்பதிவுகள் என்பது புதிய , புரட்சிகர ,மாற்று சிந்தனைகளை கொண்டு வர ஒரு வாய்ப்பு ஆனால் வணிக ஊடகத்தில் சொல்லப்படுவதையே மறுபிரதி எடுக்க இந்த கொம்பன்கள் தேவையே இல்லை.
எவனாவது சிட்டுக்குருவி அழிகிறது சொன்னால் அப்படியே ஆமாம் சிட்டுக்குருவியே காணோம்னு கண்ணை மூடிக்கொண்டு பதிவ போடுவார்கள், புவி தினம் என்று சொன்னால் போதும் டெம்பிளேட்டாக புவி வெப்பமாதல் இன்ன பிற சேர்த்து உலகை காப்போம்னு அறிவுறைக்கூறி ஒரு பதிவு, ஏன் ,எதற்கு எப்படி என்ற கேள்விகள் கிடையாது.
புவி தினம் என ஜல்லி அடிப்பதெல்லாம் வளர்ச்சி அடைந்த நாடுகளின் சுய நல பிரச்சாரங்கள், மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் ஒரு சில அறிவு ஜீவிகளுக்கு டைம் பாஸ் சமாச்சாரங்கள், என பல உள்ளடி சமாச்சாரங்கள் இருப்பதை தெரிந்துக்கொள்ளாமலே இன்று ஒரு பதிவு போட "சப்ஜெக்ட்" கிடைத்து விட்டது என எதையும் யோசிக்காமல் பதிவ போட்டு ஹிட்ஸ் வாங்க அலையும் கூட்டம் தான் வலைப்பதிவுலகில் அதிகம் பெருகிப்ப்போய் கிடக்கு, ஒரு 5 நிமிடம் ஒதுக்கி இதை எல்லாம் ஊருக்கு சொல்லும் உத்தமோத்தம நாடுகளின் லட்சணத்தை இணையத்தில் தேடி அறிய எவரும் முன் வருவதில்லை.
புவி தினம் ,உலகை அழிவில் இருந்து காப்போம் என உலகுக்கே அறிவுறை சொல்லுபவர்களின் உண்மை நிலவரத்தை அடுத்தப்பதிவில் காண்போம்.
தொடரும்.
