Thursday, July 05, 2012

ஒலிம்பிக் கனவுகள்!-1

(abebe bikila on bare foot at rome olympics)

ஆப்பிரிக்காவை இருண்ட கண்டம் என்றே வரலாற்றுப்பாடப்புத்தகங்களில் பல காலமாய் படித்து வந்திருக்கிறோம், இன்று வரையில் பல ஆப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டுக்கலவரம்,ராணுவ ஆட்சி, வறுமை என்ற சூழலே நிலவுகிறது ,ஆனால் அவர்களின் ஒலிம்பிக் சாதனைகளைப்பார்த்தால் ,"ஒளிரும்" இந்தியா போன்ற நாடுகள் முக்காடுப்போட்டுக்கொள்ள வேண்டும் :-))

எத்தியோப்பியா கிழக்கு ஆப்பிரிக்க பகுதியில் இருக்கும் , வளம் இருந்தும் வறுமையில் வாடும் நாடு ,ஆனால் அப்படிப்பட்ட நாட்டில் ராணுவ ஆட்சிக்காலத்திலேயே பிறந்த ஒருவர் 24 வயது வரையில் தடகள பயிற்சி எடுத்திராமல் , திடீர் என தடகள வீரர் ஆக ஆசைப்பட்டு முயற்சி செய்து , தொடர்ந்து இரண்டு முறை ஒலிம்பிக் மராத்தான் தங்கப்பதக்கம் வென்று சாதனைப்படைத்து இருக்கிறார் என்றால் ,இந்தியா போன்ற நாட்டில் பிறந்தவர்கள் ஏன் இன்னும் சாதிக்க முடியவில்லை என்ற கேள்வி எழாமல் இருக்க முடியாது. எல்லாவற்றிருக்கும் காரணம் , தன்னம்பிக்கை,கடின உழைப்பு தானே ஒழிய ,பணமோ,நவீன வசதிகளோ அல்ல என்பது புரியும்.

எவ்வித வசதியும், இல்லாத சூழலில் பிறந்து சாதித்த ஒரு ஆப்ரிக்க தடகள சிங்கத்தினை இப்பதிவில் காணலாம்.

அபிபி பிக்கிலா(abebe Bikila) 1932 ஆம் ஆண்டு எத்தியோப்பியாவில் ,தலை நகர் அடிஸ் அபாபா நகருக்கு அருகே ஜாதோ என்ற சிற்றூரில் Widnesh Menberu and Ato Bikila Demssie தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். அவரது தந்தை ஆடு மேய்க்கும் தொழில் செய்ததால் , இளவயதிலேயே ஆடு மேய்த்துள்ளார், 12 வயது வரையில் எதியோப்பிய பாரம்பரிய கல்வியை மட்டும் படித்துள்ளார்.

இராணுவ ஆட்சி என்பதால் அவரது 12 ஆம் வயதிலேயே ராணுவத்தில் அரசருக்கு பாதுகாவலராக வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளார்.குடும்ப பாரத்தை குறைக்கவே 12 வயதில் வேலைக்கு மறுப்பேதும் சொல்லாமல் செல்ல நேரிட்டது.அங்கு தான் வழக்கமான உடற் பயிற்சிகள் ,விளையாட்டு பயிற்சி எல்லாம் கிடைத்துள்ளது, எத்தியோப்பிய பாரம்பரிய விளையாட்டான கெனாவிலும் தேர்ச்சிப்பெற்றுள்ளார். கெனா என்பது ஹாக்கி மட்டை போன்ற வளைந்த குச்சிகளை வைத்துக்கொண்டு ,மரப்பந்தை அடித்து விளையாடும் ஹாக்கிப்போன்ற விளையாட்டு ஆகும்.

1956 இல் ,அவரது 24 வது வயதில் சிலர் பல வண்ண விளையாட்டு ஆடைகளை அணிந்து வரிசையாக செல்வதைப்பார்த்து , யார் அவர்கள் ,எங்கே செல்கிறார்கள் என விசாரித்துள்ளார், அவர்கள் எல்லாம் ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ள செல்லும் தடகள வீரர்கள் என்பதையே அப்போது தான் அறிந்துள்ளார், ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் குறித்தே 24 ஆவது வயதில் தான் அறிந்துள்ளார், அவருக்கும் அதில் கலந்துக்கொள்ள ஆசை வந்ததுக்கு காரணம், அப்போது தான் வண்ணமயமான டிராக் சூட், மரியாதை எல்லாம் கிடைக்கும் என்பதாலே.

அதன் பிறகே பயிற்சிகளை ஆரம்பித்து , ராணுவ வீரர்களுக்கான வருடாந்திர தடகளப்போட்டியில் முதன் முறையாக கலந்துக்கொள்ள முடிவு செய்து அதில் எடுத்ததும் மராத்தான் போட்டியில் கலந்துக்கொண்டார், அப்போட்டியில் அப்போதைய தேசிய நீண்ட தூர ஓட்ட சாம்பியன் வாமி பிராட்டு(Wami bratu)வும் கலந்துக்கொண்டதால் ,அனைவரும் வாமி பிராட்டு வெற்றிப்பெறுவார் என எதிர்ப்பார்த்திருக்க, இறுதியில் வாமி பிராட்டுவை பின் தள்ளி அவரது சாதனையையும் உடைத்து பிகிலா வெற்றிப்பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தவே, தேசிய தடகள அணியின் பயிற்சியாளர் ஒரு எதிர்கால சேம்பியன் கிடைத்துவிட்டார் என தேசிய அணியில் இடம் வாங்கி கொடுத்து பயிற்சியும் கொடுத்தார்.

1960 ரோம் ஒலிம்பிக்கிற்கு அணி அறிவிக்கப்பட்ட போது இவர் தேர்வாகவில்லை, சீனியர் என்பதால் வாமி பிராட்டுவே தேர்வாகி இருந்தார், ஆனால் கடைசியில் பிகிலாவிற்கே அதிஷ்டம் கைக்கொடுத்தது, ரோம் ஒலிம்பிக்ஸ் கிளம்புவதற்கு முன்னர் ஒரு கால்பந்து போட்டியில் ஆடுவோம் என பிராட்டு ஆடியதில் கால் முறிந்துப்போனது. அவருக்கு பதிலாக யாரை அனுப்புவது என பலத்த யோசனை , விமானம் கிளம்பும் நேரம் வரைக்கும் நடந்து கடைசியில் பிக்கிலா வை தேர்வு செய்து அனுப்பி இருக்கிறார்கள்.

ரோமுக்கு போனப்பிறகும் சோதனை தொடர்ந்துள்ளது, இவர்கள் அணிக்கு ஷீ ஸ்பான்சர் செய்ய ஒத்துக்கொண்ட அடிடாஸ் நிறுவனம் ,ஏழை நாடு தானே என்ற எண்ணத்திலோ என்னமோ பிகிலா கால்களுக்கு பொருந்தாத ஷீ வைக்கொடுத்து இது தான் இருக்கு , அட்ஜெஸ்ட் செய்து போட்டுக்கொண்டு ஓடுங்க என சொல்லியுள்ளது.பொறுந்தாத ஷீ வைப்போட்டுக்கொண்டு ஓடுவதற்கு நான் வெறும் காலுடன் ஓடுவேன் என ஷீ இல்லாமலே களத்தில் குதித்துவிட்டார், சகல வசதிகள் கொண்ட மற்ற நாட்டு வீரர்கள் அனைவரையும் பின் தள்ளிவிட்டு வெற்றுக்கால்களுடன் முழு மராத்தானும் ஓடி வெற்றிப்பெற்றார், அது அவருக்கான தனிப்பட்ட வெற்றி மற்றுமல்ல அதுவரையில் ஒலிம்பிக்கில் எத்தியோப்பியா வீரர் யாரும் தங்கம் வென்றதே இல்லை ஏன் எந்த ஆப்பிரிக்க கறுப்பின வீரரும் வென்றதே இல்லை. வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் 2 மணி ,16நிமிடம்.20 விநாடிகளில் ஓடிமுடித்து புதிய உலக சாதனையும் படைத்துள்ளார்.

ஏன் வெற்றுக்கால்களுடன் ஓடினீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "உலகத்திற்கு எத்தியோப்பியர்களின் உறுதியையும், வீரத்தினையும் காட்ட" என தைரியமாக சொன்னார்.

அடுத்த ஒலிம்பிக்ஸ் 1964 இல் டோக்கியாவில் நடந்தது அதிலும் கலந்துக்கொள்ள தேர்வானார்,ஆனால் போட்டிக்கு 6 வாரங்களுக்கு முன்னால் குடல்வால் நோயால் பாதிக்கப்பட்டு ஆபரேஷன் செய்ய வேண்டி இருந்தது, எனவே அவரால் போட்டியில் கலந்துக்கொண்டு ஓட முடியாது என அனைவரும் முடிக்கட்டிய நிலையில், அவரோ ஆபரேஷன் செய்த நிலையிலும் , மருத்துவமனையில் அவரது அறையிலே ஜாக்கிங் செய்ய ஆரம்பித்து விட்டாரம்.மாற்று வீரர் அனுப்பலாம் என நினைத்த பயிற்சியாளரையும் வற்புறுத்தி அவரே டோக்கியோ சென்றார், விமானத்தில் இருந்து இறங்கவே சிரமப்படுவதை பார்த்து , அவரால் ஓட முடியாது என அனைவரும் நினைத்த நிலையில், தன்னம்பிக்கையுடன் ஓடி மராத்தானில் தங்கம் வென்றதோடு மீண்டும் ஒரு புதிய உலக சாதனையாக 2 மணி 12.11 இல் ஓடி முடித்தார். அதோடு மட்டும்மில்லாமல் முதன் முறையாக மரத்தானில் அடுத்தடுத்து தங்கம் வென்ற வீரர் என்ற சாதனையும் படைத்தார். இன்று வரை அச்சாதனை இருக்கிறது.

மூன்றாவது முறையாக 1968 இல் மெக்சிகோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள பயிற்சியில் ஈடுப்பட்டிருக்கும் போது அவரது கால் விரல் எலும்பு முறிந்துவிட்டது.ஆனாலும் விடாமல் எலும்பு முறிவோடு போட்டியில் கலந்துகொண்டு 15 கி.மீ வரையில் முன்னணியில் இருந்து பின்னர் , வலி அதிகரிக்கவே , முழுவதும் முடிக்காமல் ஒதுங்கிவிட்டார், அப்போட்டியில் சக எத்தியோப்பிய வீரர் ஆன மாமோ வோல்டெ(Mamo wolde) தங்கம் வென்றார். அபிபி பிகிலா ஓடி இருந்தால் என்னால் தங்கம் வென்று இருக்க முடியாது என மாமோவே சொன்னது , அவரது திறமைக்கு சான்றாகும். ஏனெனில் இந்த ஒரு போட்டி தவிர பிகிலா அதுவரையில் கலந்துக்கொண்ட எந்த போட்டியிலும் தோற்றதே இல்லை.

பின்னர் நான்காவது ஒலிம்பிக்கிலும் கலந்துக்கொள்ள ஆர்வமாக இருந்துள்ளார், ஆனால் இம்முறை விதி விளையாடிவிட்டது, இவர் இராணுவத்தில் இருந்ததால் , சர்வாதிகார அரசருக்கு எதிராக போராடியவர்கள் இவர் சென்ற காரை தாக்கியதில் ,கட்டுப்பாடு இழந்து கார் விபத்துக்குள்ளானாதால் ,பிகிலாவின் இடுப்புக்கு கீழே செயலிழந்து விட்டது, வீல் சேரில் இருக்கும் போதும் , வீல் சேரோடு மராத்தானில் கலந்துக்கொண்டு ஓடுவேன் என நகைச்சுவையாகவே சொல்லியிருக்கிறார், ஆனால் கடைசி வரை குணமாகாமல் ,மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு தனது 41 ஆம் வயதில் தூங்கும் போதே உயிர்ப்பிரிந்தார்.

அபிபி பிகிலாவின் எழுச்சிக்கு பிறகே எத்தியோப்பிய வீரர்களுக்கு மராத்தானிலும்,நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களிலும் உலக அளவில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை வந்தது. எத்தியோப்பியாவை பின்ப்பற்றி மற்ற ஆப்பிரிக்க நாடுகளும் நீண்ட தூர ஓட்டப்போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வீரர்களை தயார்ப்படுத்த ஆரம்பித்து சாதிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்றளவும் நீண்ட தூர ஓட்டப்போட்டிகளில் எத்தியோப்பியா ,கென்யா,மொராக்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகளே முன்னிலை வகிக்கின்றன, அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளே அவர்கள் முன் காணாமல் போய்விடுகின்றார்கள்.

இத்தனைக்கும் அவர்கள் நாட்டிலோ அடிப்படை வசதி கூட எதுவுமில்லை. தேசிய அளவில் சாதித்தால் ராணுவத்தில் ஒரு வேலைக்கொடுப்பார்கள், அங்கிருந்து பயிற்சி செய்து தான் அனைவரும் சாதிக்கிறார்கள், பெரும்பாலோர் சாலையில் ஓடியே பயிற்சி எடுக்கிறார்கள்.நவீன ஜிம்கள் பார்க்க வேண்டும் என்றால் தலை நகர் அடிஸ் அபாபாக்கு தான் வர வேண்டும், அதே போன்று தான் விளையாட்டு அரங்குகளும். தலை நகருக்கு வெளியே எவ்வசதியும் இருக்காது.

3 வேளை சாப்பிட உணவுக்கிடைப்பதே கடினம், அங்குள்ள முக்கியமான வேலை வாய்ப்பே ராணுவப்பணி தான், அடுத்து வேலை என்றால் ஓட்டப்பந்தய வீரர் ஆவது மட்டுமே, மற்றபடி நல்ல வருமானம் கிடைக்க வழியே இல்லாத நாடு. எத்தியோப்பிய வீரர்களிடம் ஏன் தடகள போட்டியில் ஓடுகிறீர்கள் எனக்கேட்டால் சொல்வது என்னவெனில் " முதலில் நாட்டுக்காக ஓடுகிறேன், பின்னர் எனது வாழ்க்கைக்காக" என்பார்கள்.

எத்தியோப்பிய நிலையை ஒப்பிட்டால் இந்தியா சொர்க்க புரி என்பது புரியும், இந்த வசதிகளை கொண்டு நாம் எத்தனை தங்கம் வாங்கியிருக்க வேண்டும், ஆனால் நாம் ஒரே ஒரு தனி நபர் தங்கம் வாங்கவே 2008 வரையில் அபினவ் பிந்த்ரா வரவுக்காக காத்திருந்தோம். ஆனால் எத்தியோப்பியா 1960 முதல் ஒலிம்பிக்கில் தனி நபர் தங்கம் வென்று வருகிறது.இதில் வேடிக்கை என்னவெனில் இன்றும் நாம் பாடப்புத்தகத்தில் ஆப்பிரிக்க ஒரு இருண்ட கண்டம் என படித்துக்கொண்டிருக்கிறோம் :-))

ங்கொய்யாலே இப்படி குருட்டு தனமாக பாடப்புத்தகம் எழுதறவங்களை பிடிச்சு சிங்கத்துக்கு இரையாக்கணும் :-))

அடுத்த பதிவில் முதல் ஒலிம்பிக் தங்கம் வென்ற ஆப்பிரிக்க பெண் சிங்கத்தை பார்க்கலாம்.

தொடரும்...
-------------

பின்குறிப்பு;

நம்ம நாட்டினை குற்றம் சொல்ல அல்ல இப்பதிவு, எப்போது பார்த்தாலும் அமெரிக்காவை பார், ஆஸ்திரேலியாவை பார், என முன்னேறிய நாட்டை சொல்லி அப்படி நாம் எப்போ வல்லரசு ஆவது, ஒலிம்பிக்கில் சாதிப்பது என்றே மீடியாவும், மக்களும் பேசுகின்றார்கள், ஆனால் வறுமையிலும், உள்நாட்டுக்கலவரத்திலும் சிக்கித்தவிக்கும் நாட்டு மக்கள் தங்கள் விடா முயாற்சியாலே சாதிக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவே இப்பதிவு.

வசதி ,வாய்ப்புள்ளவன் சாதிப்பதை பார்த்து பெருமூச்சு விடுவதை விட ஆப்பிரிக்க நாடுகள் சாதிப்பதை பார்த்து நாம் கற்றுக்கொள்ள ஒரு பாடம் இருக்கிறது.
----

தகவல், மற்றும் படங்கள் உதவி,

விக்கி,எத்தியோப்பியன்ஸ்.காம் ,இணைய தளங்கள்,நன்றி!

*****

Tuesday, July 03, 2012

என்ன கொடுமை சார் இது!-6


(அடுத்த கைப்புள்ளை நான் தானா?)
.
முதல் குடிமகன்!

முதல் குடிமகன் தேர்தலுக்கு போட்டியிடும் திருவாளர்.பிரணாப் குமார் முகர்ஜீ ,தனது பிரச்சாரத்தினை சென்னையில் கனிமொழி இல்லத்தில் இருந்து துவங்கினார்னு செய்தி வருது. இதை விட இந்திய அரசியலமைப்பை கிண்டல் செய்ய வேறு நிகழ்வு தேவையில்லை. ஏன் எனில் குடியரசு தலைவரே இந்திய அரசியலைப்பின் படி நாட்டின் தலைவர், சட்டத்தின் தலைவர்,ஆனால் சட்டத்தின் முன் குற்றவாளி /குற்றம் சாட்டப்பட்ட கூண்டில் நிற்கும் ஒருவரின் இல்லத்தில் இருந்து தான் தனது பிரச்சாரத்தையே துவங்குகிறார் எனும் போது வருங்காலத்தில் அவர் அரசியலமைப்பு சட்டத்துக்கு எவ்வளவு மரியாதை கொடுப்பார் என தெரிகிறது.

இது நாள் வரையில் இந்தியாவில் நடந்த ஊழல்களிலேயே முதலிடத்தில் இருப்பது 2ஜீ ஊழல் என்பதால் ,முதல் குடிமகன் தேர்தல் பிரச்சாரம் துவங்க ஒரு "முதலிடம் " பிடித்து சாதனைப்புரிந்தவர் இல்லமே சரியான இடம் என முதலிடம் தேடி சென்னைக்கு பிரணாப் முகர்ஜி வந்திருப்பாரோ?

என்ன கொடுமை சார் இது!

------------
சாகச ஓட்டுனர்கள்!

ஸ்பீட் ,டாக்சி, ஃபாஸ்ட்& ஃப்யுரியஸ் போன்ற ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களில் ,கார் , டிரக், பஸ் எல்லாம் மேம்பாலங்களில் காற்றில் பாயும், குட்டிக்கரணம் அடிக்கும், அதை எல்லாம் தேர்ந்த சண்டைப்பயிற்சியாளர்கள் செய்வார்கள்.ஆனால் அதற்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என மாநகரப்பேருந்து ஓட்டுநர் அனாயசமாக சென்னை அண்ணா மேம்பாலத்தில் பாயும் சாகசம் செய்ய நினைத்து ,மயிரிழையில் தவறிப்போய் சுவற்றில் மோதி ,பல்டி அடித்துவிட்டார். அவர் மட்டும் செல் போனில் பேசாமல் கொஞ்சம் மெனக்கெட்டு முயற்சித்து இருந்தால் பாலத்தில் இருந்து வெற்றிகரமாக ஜம்ப் அடித்து சாதித்து இருப்பார், மக்களும் ,மீடியாவும் ஹீரோவாக கொண்டாடி" பாரத் ரத்னாவோ அல்லது ஸ்டியரிங்க் வீல் சக்ராவோ" கொடுக்க சொல்லி போராடி இருக்கும்.

பாவம் ஹீரோ ஆக வேண்டியவர் வில்லனாகிவிட்டார் :-))

அதனைப்புரிந்து கொள்ளாமல் மாநகரப்பேருந்து ஓட்டுனர்கள் செல் போனில் பேசிக்கொண்டே சாகசம் செய்ய முற்பட்டால் புகார் தெரிவிக்க என ஒரு எண்ணை வெளியிட்டுள்ளது.

அவ்வெண்:"93833-37639'

மூன்று தடவைக்கு மேல் புகாருக்கு ஆளானால் ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்படுவாராம்.எச்சரிக்கை விட்ட அடுத்த நாளே , சாகசம் செய்வது எங்கள் பிறப்புரிமை அதனை செய்தே தீருவோம் என செயல்படும் ஒரு சாகச ஓட்டுனரை பாருங்கள் :-))

(பட உதவி:தினமலர்,நன்றி)


என்ன கொடுமை சார் இது!

-----------
சவாரிக்கு அழைக்கிறார்கள்!

(தமிழ் வளர்த்த மலபார் மங்கை)

"ஃபெட்னா உங்களை அமலா பாலுடன் வரவேற்கிறது:

அமலாவுடன் உணவருந்தலாம்.
அமலா பால் உடன் படகு சவாரி செல்லலாம்..
நடிகை அமலா உடன் புகைப்படம் எடுக்கலாம்…"

மேற்படி விளம்பரம் ஒரு இணைய தளத்தில் காணக்கிடைத்தது. அதைப்பார்த்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது, அந்தக்காலத்தில அவ்வையார்(நடிச்சவங்க பாடினது தான்) "பாலும், தேனும் ,பருப்பும்"கலந்துனக்கு தருவேன் "சங்கத்தமிழ்" மூன்றும் எனக்கு தான்னு பாடி "முருகனுடன்"டீல் போட்டு தமிழ் வளர்த்தாங்க, படம் "பக்தி" படம் என்றாலும் பட் அந்த டீல் எனக்கு பிடிச்சு இருந்தது.

இப்போ எட்ணாவோ ,பெட்னாவோ என்னமா ஒரு டீல் போட்டு தமிழ வளர்க்கிறாங்கய்யா... சாப்பிடலாம்னு சொல்லுறாங்க(சாப்பாட்டை தான்யா), சவாரிக்கு வான்னு சொல்லுறாங்க, படகுலதான்யா!,இன்னும் வேறு ஏதேனும் சிறப்பு சவாரிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளார்களா என தெரியவில்லை...நோ ..நோ அப்படிலாம் பார்க்கப்படாது சிறப்பு சவாரின்னா "குதிரை சவாரி" போன்றவற்றை சொன்னேன், அட்லீஸ்ட் பச்சைக்குதிரையாவாது தாண்டலாமா? உள்விவரம் அறிந்தவர்கள் கேட்டு சொன்னால் தமிழ்கூறும் நல்லுலகம் தழைக்கும் :-))

மேநாட்டு தமிழர்கள் இதெல்லாம் செஞ்சுட்டு தமிழ் நாட்டு மக்கள் சினிமா மோகத்திலும், இலவச மோகத்திலும் மூழ்கி இருக்கும் வரை தமிழ்நாடு முன்னேறாதுனு பதிவிட்டு பொங்குவார்கள் :-))

என்ன கொடுமை சார் இது!

------------
last but not the least!

(ரியல் தல!)

தமிழ் பதிவுகளில் அதிரடி மற்றும் அட்டகாசத்துக்கு பேர் போன (வாங்கிய)ஒரு பதிவர், தொடர்ந்து பெட்ரோலிய பொருட்கள் குறித்து ,"பெட்ரோல் விலை ரகசியம், ரூபாய் மதிப்பு சரிந்தாலும் பெட்ரோல் விலை ஏறாது, விலைக்குறைப்பு நாடகம், மாற்று எரி பொருள், பயோ டீசல், எத்தனால்" என பெட்ரோலியத்துறை அமைச்சகத்தினை போட்டு தாக்கிப்பதிவிட்டுக் கொண்டே இருந்தார்.
இதனை மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.அப்பதிவுகளுக்கு அமோகமான ஆதரவினையும் நல்கினார்கள்.

இதை எல்லாம் பார்த்து அதிர்ச்சியடைந்த பெட்ரோலிய அமைச்சகமும், அதிகாரிகளும் கூடிப்பேசி ,இப்படியே விட்டால் மக்கள் விழிப்புணர்வு அடைந்து பெட்ரோலே வேண்டாம் ,நாங்களே மாற்று எரிபொருள் வீட்டில் தயாரித்துக்கொள்வோம் என களத்தில் இறங்கிவிட்டால் வியாபாரம் படுத்துவிடும் என பயந்து மீண்டும் ஒரு முறை பெட்ரோல் விலையை ரூபாய் 2.60 குறைத்துள்ளார்கள்.

தற்போது எல்லாம் பதிவுலகில் எழுதினால் அனைவரும் கவனிக்கிறார்கள் ,குறிப்பாக அதிகார மட்டத்தில் என்பதற்கு இதுவே சான்று, எனவே பொறுப்புடன் எழுதினால் மாற்றத்தினைக்கொண்டு வரலாம் என்பதை மற்றப்பதிவர்களும் உணர வேண்டும். ஆனாலும் அந்த அதிரடி,அட்டகாசப்பதிவரோ ரூ 10 ஆவது குறைத்திருக்க வேண்டும், இது செல்லாது ,செல்லாது என முனகிக்கொண்டு அடுத்தப்பதிவில் , வீட்டிலேயே "மாட்டு சாணியில்"இருந்து மீத்தேன் தயாரித்து அதில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து வாகன எரிப்பொருளாக பயன்ப்படுத்துவது எப்படி? என பதிவிடலாமா என தலைக்கீழாக தவம் இருக்கிறாராம் :-))

ஹி...ஹி அவர் யார்னு கண்டுப்பிடிக்க "துப்பு" எதுவும் வேண்டுமா?

ஆஹ்ஹா ...ஒன்னு கூடிட்டாங்கய்யா ...எல்லாம் ஒன்னுக்கூடிட்டாங்க ...

இப்ப நீங்களே சொல்லுவீங்க...

"என்ன கொடுமை வவ்வாலு இது!"

*****

Sunday, July 01, 2012

மருதநாயகம் பிள்ளை aka khan sahib "yusuf khan"-1

(ஹி..ஹி ராஜா,ராணி படம் ஒன்னும் கிடைக்கலை...)


முன்னோட்டம்:

மருதநாயகம் என்கிற கான்சாகிப் முகம்மது யூசப் கான் , இந்திய வரலாற்றில் ஹைதர் அலிக்கு அடுத்து கிழக்கிந்திய கம்பெனிக்கு பெரும் சிரமம் கொடுத்த வீரன் , முன்னால் நண்பன் என ஆங்கில அதிகாரிகளாலும், வரலாற்று ஆசிரியர்களாலும் பாராட்டப்பட்டுள்ள ஒரு வீரன். அப்படிப்பட்டவனது அக்கால ஒரு ஓவியம் கூட கிடையாது என சொல்கிறார்கள், இப்போதுள்ள ஓவியங்கள் எல்லாம் பிற்காலத்தில் வறையப்பட்டவையே.ஆங்கிலேயருக்கு நண்பனாக இருந்து எதிரியாக மாறி பின்னர் அவரது 39 ஆம் வயதிலேயே துரோகப்பட்டம் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டு, நான்கு துண்டுகளாக வெட்டி எறியப்பட்ட சோக வரலாறு உடையவன்.

இளமைக்காலம்:

இனிமேல் யூசப் கான் என்றே அழைப்போம், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் அருகேயுள்ள பனையூரில் சைவ வேளாள குடும்பத்தில் கி.பி 1725 இல் பிறந்ததாக சொல்லப்படுகிறது. சரியான ஆண்டு தெரியாது, பெற்றோர் பெயரும் தெரியாது, அவரது இளமைக்காலம் பற்றிய விவரம் எதுவுமில்லை என வ்ரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.இளம் வயதில் படிக்காமல் சண்டியர் தனம் செய்துக்கொண்டு முரட்டுத்தனமாக ஊர் சுற்றியதால் ஊரார் பொது தண்டனைக்கொடுத்து அதனால் ஊரை விட்டு ஓடியதாகவும், அவரே கோபித்துக்கொண்டு புதுவைக்கு ஓடியதாகவும் சொல்லப்படுகிறது. அங்கு தான் இஸ்லாம் மதத்தினை தழுவி " முகமது யூசப் கான்" எனப்பெயர் மாற்றிக்கொண்டார்.அப்போது மாஷா (அ) மெர்சியா என்ற போர்த்துக்கீசிய-இந்திய பெண்ணை மணந்துக்கொண்டார்.

புதுவையில் ,படகு ஓட்டுதல், தையல் தொழில், சித்த மருத்துவர் என எண்ணம் போல வேலை செய்து காலம் ஓட்டியிருக்கிறார், பின்னர் புதுவையின் அப்போதைய கவர்னர் மான்சியே ஜாக்கஸ் லா என்பவர் வீட்டில் பணியாளராக சேர்ந்து சில காலம்(3 ஆண்டுகள்) பணிப்புரிந்துள்ளார்.

யூசுப் கான் புதுவையில் வேலை செய்துக்கொண்டிருக்கட்டும், அதற்கிடையே தமிழகம் மற்றும் தென்னிந்தியாவில் அப்போது நிலவிய அரசியல் ,பகைமைகள், போட்டிகள், இவற்றினை வைத்து வெள்ளையைர்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடித்ததை எல்லாம் சுருக்கமாக பார்க்கலாம். அப்போது தான் கான் சாகிப் எப்படி அரசியல் மற்றும் ஆட்சியில் முன்னேறி ஒரு வீரனாக பரிணாமம் அடைந்து , வீரனாகவே சதியால் வீழ்ந்தான் என்பது புலப்படும்.

தென்னிந்திய ஆட்சி சூழல்.
(எஞ்சியுள்ள கோட்டையின் பகுதி)

மதுரை நாயக்கர்களில் கடைசியாக ஆண்ட விஜயரங்க சொக்கநாத நாயக்கர் மறைவுக்கு ,பின் அவரது இளம் விதவை மனைவி "ராணி மீனாக்‌ஷி" வாரிசு இல்லாமையால் தத்து எடுத்த புத்திரன் சார்பாக ஆள்வதற்கு முன் வந்தார்.அவருக்கு போட்டியாக தத்து புத்திரனின் தந்தை "வங்காரு(பங்காரு) திருமலை நாயக்கர் அரசாட்சி உரிமைக்கோரி சண்டையிட்டுக்கொண்டிருந்தார்.

மதுரை நாயக்கர்களுக்கு கீழ் 32 பாளையங்கள் இருந்தன அவர்களிடையே மறவர் பாளையம், தெலுகு நாயக்கர் பாளையம் என பிரிவினையும் ,சண்டையும் காலம் காலமாக ஓடிக்கொண்டிருந்தது.

மேலும் திருவிதாங்கூர் சமஸ்தானம் திருநெல்வேலிக்குட்பட்ட களக்காட்டிற்கு உரிமை கோரி ஒரு சண்டையிட்டு வந்தது.

எனவே தென் தமிழகத்தில் அரசியல் நிலையற்ற தன்மையும் சண்டையும் வழக்கமான ஒன்றாக இருந்த காலம் அது.

அப்போதைய காலக்கட்டத்தில் மதுரை நாயக்கர்கள் ,ஆர்காட் நாவாப்பிற்கும், நவாப் ஹைதராபாத் நிஜாமுக்கும், நிஜாம் தில்லி சுல்தானுக்கும் வரி செலுத்தக்கட்டுப்பட்டவர்கள்.

அப்போதைய ஆட்சியாளர்கள்,மற்றும் உறவின் முறைகள்:

ஆர்காட் நாவப்: முகம்மது அன்வருதீன் அலிகான், ,அவர் மகன்கள் முகமது அலிகான் வாலாஜா, மாபூஸ் கான்,அப்துல் ரஹீம் ஆகியோர்.


கர்நாடிக் நவாப் ஆக தோஸ்த் அலிகான்,அவரது மகன் சப்தர் அலிகான்,மருமகன் சந்தா சாகிப் ,ஆர்காட் நவாப்பிற்கு கீழ் ஆட்சியில் இருந்தார்.

சந்தா சாஹிப் ,அவரது மகன் ரசா அலிகான்,

(மேற்கண்ட பெயர்கள் பெயர்கள் அடிக்கடி புழங்கும் என்பதால் பட்டியலிட்டுள்ளேன்)

டெல்லி சுல்தான் வலுவிழந்ததால் ஹைதராபாத் நிஜாம் "நிஜாம் உல் முல்க்" தன்னாட்சிப்பெற்றவராக செயல்ப்பட ஆரம்பித்தார் ,அதே போல ஆர்காட் நவாப்பும் தன்னாட்சிப்பெற்றவர்களாக செயல்பட்டார். ஆர்காட் நவாப் போலவே கர்நாடிக் நவாப் என மைசூர் மையமாக கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார்கள்.

இந்த உறவினர்களான இரண்டு நவாப்புகளுக்கிடையேயும் பகை உண்டு ஆனால் நேரடியாக மோதாமல் ,காலத்திற்கு காத்திருந்தார்கள், இவர்கள் இருவரையும் அடக்க நிஜாம் காலம் பார்த்துக்கொண்டிருந்தார். இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க கிழக்கிந்திய கம்பெனி இறங்கியிருந்த காலம் அது.

இப்படியான குழப்பமான தென்னிந்திய அரசியல் சூழலில் , கிழக்கிந்திய கம்பெனிக்கு ஒரு அஸ்திவாரத்தினை உருவாக்கி வரலாற்றில் இடம்பிடித்தவர் இராபர்ட் கிளைவ், அவரின் அப்போதைய வெற்றியில் பெரும் பங்கு வகித்தது வேறு யாரும் அல்ல கான் சாகிப் யூசப் கானே ஆகும்.ஆனால் வரலாற்றில் இராபட் கிளைவிற்கு கிடைத்த புகழும் பெருமையும் கான்சாகிப்பிற்கு கிடைத்ததா என்றால் இல்லை எனலாம். வெகு சில நூல்களும் ஆவணங்களுமே கான் சாகிப்பினைப்பற்றி அறிய கிடைக்கிறது.

கான் சாகிப்பின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் பின்னர் காணலாம்.

தொடரும்.

------
பின் குறிப்பு:

கீழ்கண்ட நூல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. இந்நூல்களை தரவிறக்கம் செய்ய கிடைக்கவில்லை, ஆனால் கூகிள் புக் போன்றவற்றில் படிக்கலாம். History of Tinnevelly by R.Caldwell நூலினை பதிவில் பிடிஎப் ஆக இணைத்துள்ளேன் ,பொறுமை உள்ளவர்கள் படித்துப்பார்க்கலாம் :-))

#History of Tinnevelly by R.Caldwell (Bishop Robert Caldwell)

#Yusuf Khan: the rebel commandant By Samuel Charles Hill

#கான் சாகிப் சண்டை- நா.வானமாமலை, வெளியீடு மதுரைக்காமராஜர் பல்கலை.

#தகவல் மற்றும் படங்கள், கூகிள்,மற்றும் கூகிள் புக்,நன்றி!
------------------------
History of Tinnevelly by R.Caldwell :


-------

-----------
பிற்சேர்க்கை:-

எனது சில சரித்திர (தரித்திரம்?)பதிவுகளின் சுட்டிகளின் தொகுப்பினை ,இணைத்துள்ளேன், ஆர்வமுள்ளவர்கள் படித்து பாருங்கள், ஆனால் அங்கே போய் பின்னூட்டம் போட்டு என்னையை அலையவிடாதிங்க ராசா...எதா இருந்தாலும் இங்கணக்குள்ள பேசித்தீர்த்துப்போம் :-))

# செஞ்சிக்கோட்டை வாலிபன் ராஜா தேசிங்கு!









*****

Tuesday, June 26, 2012

vishwaroopam in barco auro- 11.1 3d audio.



லோகநாயகர் கமலஹாசர் விசுவரூபம் என்ற திரைக்காவியத்தை செதுக்கி எடுத்து வருகிறார், தமிழ் சினிமாவை உலக சினிமாவாக ஆக்க அவர் ரொம்ப முயற்சிக்கிறார் என லோக நாயகரின் விசுவாசிகள் வழக்கம் போல முரசொலிக்கிறார்கள்.

ஏற்கனவே சிங்கப்பூரில் நடந்த "IIFA film festival" இல் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக சினிமாவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அப்படத்தின் ஒலி அமையமைப்பினை 11.1 டிராக்கில் அமைக்க அமெரிக்கா செல்கிறார் என செய்திகள் வெளியாகின. அப்படியானால் சிங்கப்பூரில் ஒலியில்லாமல் படம் திரையிடப்பட்டதா? இல்லை மீண்டும் புதிதாக ஒலிச்சேர்க்கை செய்வாரா என ஒரு சந்தேகம்.

11.1 டிராக் ஒலியமைப்பு என்கிறார்களே அது என்ன என இணையத்தில் துழாவியதில் கிடைத்தவைகளை இங்கே பகிர்கிறேன்.


Barco audio என்ற அமெரிக்க ஒலிப்பொறியியல் வடிவமைப்பு நிறுவனம் தற்சமயம் barco Auro11.1 3d sound என்ற திரையரங்க ஒலி அமைப்புக்கு வடிவமைத்துள்ளது. இம்முறையில் ஒலியமைக்கப்பட்ட முதல் ஹாலிவுட் படம் ஜார்ஜ் லுகாஸ் தயாரிப்பில் வெளிவந்த "ரெட் டெயில்ஸ்" என்ற இரண்டாம் உலகப்போர் அடிப்படையிலான படமாகும் ,இப்படம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது.



வழக்கமான திரையரங்க ஒலியமைப்பில் டிடிஎஸ் -5.1 , டால்பி டிஜிட்டல் புரோலாஜிக் -7.1 என இரண்டு அமைப்புகளே பெரிதும் பயன்ப்படுத்தப்படுகின்றன.


இரண்டும் தனித்தனி போட்டி நிறுவனம் ஆனால் ஒரே படத்தில் இரண்டு அமைப்பிலும் ஒலிச்சேர்க்கை செய்து இருப்பார்கள், இதன் மூலம், திரையரங்கில் இருக்கும் ஒலியமைப்புக்கேற்ப ஒலிக்கப்படும்.

(திரைப்பட சுருளில் உள்ள ஒலிக்குறிப்புகள், இதில் குறைவான அளவில் பயன்ப்படும் சோனி SDDS ஒலியும் உள்ளது)

மேலும் இவ்வொலியமைப்பின் ஒலிக்குறிப்புகள் மட்டும் இல்லாமல் வழக்கமான ஸ்டீரியோ மற்றும் மோனோ ஒலியும் திரைப்பட சுருளில் இருக்கும், ஏன் எனில் சமயங்களில் டால்பி,டிடிஎஸ் ஒலியமைப்புகள் செயல்படாமல் போனால் இவை அவசரத்துக்கு உதவும். பழைய திரையரங்குகளில் திரையிடவும் உதவும்.

5.1 அல்லது 7.1 என குறிப்பது 5 (அ) 7 சேனல்கள் ஒலிக்கும் ஒரு சேனல் சப்-ஊஃபருக்கும். எனவே 5.1 என்றால் 6 சேனலில் ஒலியும் 7.1 என்றால் 8 சேனலில் ஒலியும் வரும். இவற்றில் 5.1 இல் ஒலிப்பெருக்கிகள் முன்பக்கம் ,வலப்பக்கம், இடப்பக்கம், பின்பக்கம் என்ற அமைப்பில் அனைத்து ஒலிப்பெருக்கியும் கிடைமட்ட தளத்தில் இருக்கும்.

எனவே திரையில் தோன்றும் காட்சியில் ஒலியின் உயர வித்தியாசம் அறிய முடியாது என டால்பி 7.1 இல் இரண்டு ஒலிப்பெருக்கிகளை கூறை உயரத்தில் பொருத்தி செங்குத்து அச்சிலும் ஒலியை உருவாக்கி முப்பரிமான ஒலி என்றார்கள்.

இதன் அடுத்தக்கட்டமாக உயரத்தில் அமைக்கப்படும் ஒலிப்பெருக்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வேறுப்பட்ட உயரத்தில் ஒலிப்பெருக்கிகளை அமைத்து ,மேலும் ஒலி செல்லும் சேனல்களின் எண்ணிக்கையை 11.1 என 12 சேனல்களில் கொடுப்பது தான் barco Auro11.1 3d sound அமைப்பாகும்.


இவ்வமைப்பில் கூறையில் உள்ள ஒலிப்பெருக்கிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் விமானம் பறப்பது போன்ற காட்சிகளில் ,"தத்ரூபமான ஒலி சூழல்" திரையரங்கில் உருவாகும், எனவே தான் "ரெட் டெயில்ஸ்" என்ற படத்தில் பயன்ப்படுத்தினார்கள், அப்படம் இரண்டாம் உலகப்போரில் ஈடுப்பட்ட விமானப்படைப்பிரிவின் சாகசத்தினை விவரிக்கும் படம். ரெட் டெயில் என்பது அமெரிக்க விமானப்படையில் ஒரு பிரிவின் சங்கேதப்பெயர் ஆகும்.

அப்படம் வெளியான காலத்தில் மொத்தமே நான்கு திரையரங்கில் தான் 11.1 ஒலியமைப்பு அமெரிக்காவில் இருந்தது.எனவே அவ்வொலியமைப்பின் சிறப்பினை பலரும் உணர வாய்ப்பேயில்லை. தற்போது வரைக்கும் உலகம் முழுவதும் 125 திரையரங்கில் தான் 11.1 ஒலியமைப்பு வசதியுள்ளது.

ஆரோ11.1 ஒலியமைப்பின் விளக்கப்படம்

சுட்டி:



இந்தியாவில் இது வரையில் ஒரு திரையரங்கிலும் அவ்வசதியில்லை. பின் எதற்கு லோகநாயகர் 11.1 இல் ஒலியமைப்பு செய்யபோவதாக சொல்கிறார் எனப்பார்க்கிறீர்களா எல்லாம் ஒரு "மார்க்கெட்டிங்" உத்திதான்.மேலும் இதில் சின்னதாக ஒரு சூட்சமமும் இருக்கு,அது என்னவெனில் 11.1 இல் ஒலியமைப்பு செய்யாமல் ஏற்கனவே இருக்கும் ஒலியமைப்பினை 11.1 ஆக கன்வெர்ஷன் செய்யும் வசதியை பயன்ப்படுத்திக்கொள்வது தான்.

திரைப்பட ஒலியமைப்பில் சில முதல்கள்:

ஹாலிவுட்டில்,

முதல் டால்பி டிஜிட்டல் திரைப்படம்-பேட்மன் ரிடர்ன்ஸ்.

முதல் டிடிஎஸ் திரைப்படம்- ஜுராசிக் பார்க்-1

தமிழில்.

முதல் டால்பி- குருதிப்புனல்.

முதல் டிடிஎஸ்- கருப்பு ரோஜா.


ஆரோ 11.1 ஒலியமைப்பு கருவி என்பது ஒரு கணினி போன்றது தான், இதில் ஒலியை ஒலிக்க செய்ய ஒரு கோடெக், ஒரு பிராசசர், அப்மிக்ஸ் பிராசசர் என மூன்று பகுதிகள் இருக்கிறது.

இந்த டிடிஎஸ்5.1,டால்பி 7.1,ஆரோ11.1 என்பதெல்லாம் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒலியை கம்பிரஷன் செய்யும் முறையே அதாவது எம்பி-3,வேவ்,மிடி போன்ற கம்பிரஷன் ஃபார்மெட்கள்.

இசையமைப்பாளர்கள் ஒலியமைப்பு,இசையமைப்பு செய்து பதிவு செய்யும் போது 16 டிராக், 32 டிராக் எல்லாம் பயன்ப்படுத்துவதுண்டு, எனவே ஒலிகோப்பின் அளவு பல ஜிகா பைட்டுகள் இருக்கும்,அதனை திரையரங்கில் அப்படியே ஒலிக்க செய்ய இயலாது என்பதால் ஒலிக்கோப்பின் அளவை அழுத்தி சுருக்கவே டிடிஎஸ்,டால்பி,ஆரோ என விதவிதமான கம்பிரஷன் முறைகளை பயன்ப்படுத்துகிறார்கள்.

எம்முறையில் அதிக சேதம் இன்றி துல்லியமாக செய்ய முடியுமோ அதனை தேர்வு செய்வார்கள், சேனல்களின் எண்ணிக்கை கூடும் போது இன்னும் கொஞ்சம் துல்லியமாக இருக்கும்.

டிடிஎஸ் மிக்சிங்க் என்பது 32/16 டிராக்கில் இருக்கும் ஒலிப்பதி செய்யப்பட்ட ஒலியை 6 டிராக்கில் தேவைக்கு ஏற்ப மாற்றி சுருக்குவது,அது போலவே டால்பி 7.1 மற்றும் ,ஆரோ 11.1 ஆகும்.

எந்த முறையில் ஒலிக்கலவை செய்த ஒலியையும் ஆரோ 11.1 அமைப்பில் தியேட்டரிலே11.1 ஆக ஒலிக்க செய்யும், ஆனால் 11.1 இல் ஒலிக்கலவை செய்த துல்லியம் இருக்காது.ஏற்கனவே சிங்கப்பூரில் திரையிடப்பட்ட நிலையில் டிடிஎஸ்,டால்பி என ஒலிக்கலவை செய்து இருப்பார் லோகநாயகர், இப்போது அதனை அப்படியே ஆரோ11.1 ஃபார்மெட் ஆக மாற்ற மட்டுமே செய்வார் என நினைக்கிறேன், இது செலவில்லாத எளிய வழி ,ஆனால் முழுக்க ஆரோ 11.1 இல் ஒலிக்கலவை செய்தது போன்ற தோற்றத்தினை உருவாக்கிவிடுவார், எல்லாம் ஒரு வியாபார தந்திரம் தான்.மேலும் 11.1 டிராக்கில் செய்த வித்தியாசத்தினையும் யாரும் உணர முடியாது, ஏன் எனில் அப்படியான ஒலியமைப்பு வசதிக்கொண்ட திரையரங்குகள் இந்தியாவில் , குறிப்பாக தமிழகத்தில் இல்லை.

மேலும் இந்த barco Auro11.1 3d sound ஒலியமைப்பே பழமையான ஒன்றாகிவிட்டது ,இனிமேல் உலக அளவில் , இம்முறையை பெருமளவு பயன்ப்படுத்த மாட்டார்கள் என நினைக்கிறேன் காரணம் ஒலியமைப்பு பொறியியலில் ஜாம்பவான் ஆன டால்பி நிறுவனம் ஒரே தாவலாக 128 சேனல் கொண்ட டால்பி அட்மோஸ் 3டி சர்ரவுண்ட் என்ற ஒலியமைப்பினை உருவாக்கி போட்டியாளர்கள் அனைவரையும் பின் தள்ளிவிட்டது. டால்பி அட்மோஸ் ஒலியமைப்பில் பிக்சார் தயாரிப்பில், டிஸ்னி விநியோகத்தில் பிரேவ் என்றப்படம் இம்மாதம் வெளியாகியுள்ளது.




டால்பி அட்மோஸ் ஒலியமைப்பு அமெரிக்காவில் 14 திரையரங்கிலும் , ஸ்பெயினில் பார்சிலோனவில் ஒன்றும், லண்டனில் ஒன்றும் என இது வரை மொத்தம் 16 அரங்குகளில் மட்டுமே அவ்வசதியுள்ளது.

டால்பி அட்மோஸ் ஒலியமைப்புள்ள அரங்கம்.

டால்பி நிறுவனம் உலகெங்கும் பரவலாக நிறுவ முனைப்பு காட்டிவருகிறது ஏற்கனவே பல திரையரங்குகளில் டால்பி 7.1 உள்ளதால் ,அவர்கள் அனைவரும் அதிக திறனுள்ள டால்பி அட்மோஸ் நிறுவவே முயல்வார்கள்.இவ்வமைப்பில் 128 சேனல்/டிராக்கில் ஒரு காட்சியில் உள்ள 128 வகையான ஒலிக்கூறுகளை தனித்தனி டிராக்கில் தேவைக்கு ஏற்ப ஒலிப்பெருக்கிகளுக்கு வழங்க முடியும்.இதனால் காட்சியின் வீச்சு இன்னும் அதிகம் ஆகும்.இதில் மொத்தம் 64 ஒலிப்பெருக்கிகள் கிடைமட்டத்திலும், கூறையிலும், பல உயர அளவில் அமைக்கப்பட்டு முழுமையான முப்பரிமாண ஒலியை தரும். எனவே இனி டிடிஎஸ், barco Auro11.1 3d sound போன்றவர்கள் அவர்கள் ஒலியமைப்பினை மேம்ப்படுத்தினால் மட்டுமே சந்தையில் நிற்க முடியும்.

கொசுறு:



விஷ்வரூபம் கதை சுருக்கம் என இணையத்தில் போட்டிருக்கிறார்கள், அதில் லோகநாயகர் ,அமெரிக்காவில் கதக் நடனப்பள்ளி நடத்திவருபவர்,அவரை அணு விஞ்ஞானத்தில் ஆய்வு செய்யும் "மாணவியான "ஆன்ட்ரியா காதலித்து மணமுடிக்கிறார். பின்னர் அவரது ஆய்வு படிப்பு முடிந்ததும் விவாகரத்து செய்ய விரும்பும் ஆன்ட்ரியா, ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியுடன் போலியான குற்றச்சாட்டு மற்றும் ஆதாரங்களை லோகநாயகரின் மீது சுமத்துகிறார், அதன் பின்னர் லோகநாயகர் உண்மையில் யார் என காட்ட விஷ்வரூபம் எடுக்கிறாராம்.


மேலும் பல புகைப்படங்களில் கையில் வித விதமான துப்பாக்கிகளுடன் "போஸ்" கொடுக்கிறார். எனக்கென்னமோ "mr&mrs smith"ஐ உல்டா அடிச்சிருப்பாங்களோனு தோன்றுது. படம் வந்தா "போஸ் மார்ட்டம்' செய்ய ஒரு கூட்டமே இருக்கு ,உண்மை தெரியாமலா போயிடப்போகுது :-))


இந்தப்படத்தில நடிக்கிற எந்த நடிகையரையும் பார்க்க சகிக்கலை, அடிமாட்டு சம்பளத்துக்கு புடிச்சு போட்டு இருப்பாங்க போல, தீபீகா இப்படத்தில் நடிக்க மறுத்ததாக உலாவும் செய்திக்கும் , இங்கே படம் போட்டதுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, சும்மா ஒரு அழகியல் நோக்கிலேயே தீபு படம் போட்டு இருக்கேன் :-))
---------

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி, டால்பி,டிடிஎஸ், பார்கோ,பிபிசி, விக்கி,கூகிள்,IMDB இணைய தளங்கள்,நன்றி!

*****

Saturday, June 23, 2012

குப்பைக்கு குட்பை- மாற்று எரிபொருள் பயோமாஸ் எத்தனால்( cellulose ethanol)

(ஹி..ஹி படிக்க போர் அடிச்சா படத்தைப் பாருங்க!)


புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும்னு அரசு மிரட்டுவது வழக்கம், ஒரு சுண்டு விரல் அளவு சிகரெட்டுக்கு அம்மாம் அளப்பரை செய்யும் அரசு 16 ஏக்கர் பரப்பளவில் பெரிய புகைப்பானை உருவாக்கி நகர மக்கள் அனைவரையும் புகைக்க வைத்தால் என்ன நோய் வரும்னு மாண்புமிகு நகரத்தந்தையைதான் கேட்கணும் :-))

பள்ளிக்கரணை திடக்கழிவு மேலாண்மை திறந்த வெளிக்கிடங்கின் பரப்பளவு தான் 16 ஏக்கர் அங்கு நாள் ஒன்றுக்கு 120 டன் நகர திடக்கழிவுகள் கொட்டப்படுகிறது. பேரு வச்சாப்போல மேலாண்மை செய்றாங்களா எனக்கேட்டால் வரும் பதில் தான் தீவிபத்து அல்லது திட்டமிட்டு பற்றவைத்து திடக்கழிவு என்ற குப்பையின் அளவுக்குறைக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

அப்படி சில நாட்களுக்கு முன் பள்ளிக்கரணை திடக்கழிவு கிடங்கு பற்றிக்கொண்டது (அ)பற்ற வைத்ததன் மூலம் பள்ளிக்கரணையை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் புகை மூட்டம் பரவி அனைவரையும் புகைப்பிடிக்க வைத்தது.

சாதாரண சிகரெட்டிலாவது புகையிலை புகை மட்டுமே அதுவும் சிறிய அளவில் ,பள்ளிக்கரணை புகை அரசு செலவில் உருவான சிறப்பு புகைப்பான் இல்லையா எனவே ஸ்பெஷலாக டையாக்சின், கரியமிலவாயு, மீத்தேன், கார்பன் மோனாக்ஸைட், நைட்ரஜன் மோனாக்சைடு, டையாக்சைடு, கந்தக வாயுக்கள் இன்னமும் பல, பல அறிய நச்சு வாயுக்கள் என புஃபே முறையில் கதம்பமாக அவ்வழியே பயணித்தோரின் நுரையீரலை நிறைத்தது, மேலும் அப்பகுதி மக்களுக்கும் விண்டோவ் டெலிவரியாக இலவசமாக புகை வழங்கப்பட்டது.


இனிமேல் அம்மக்களுக்கு சிகரெட் பிடித்தாலும் புற்று நோய் வராது ஏன் எனில் அதை விட நச்சுத்தன்மையுள்ள, அதிகமான புகையை அவர்கள் சுவாசித்துவிட்டார்களே அப்புறம் எப்படி புற்று நோய் வரும் அதை விட பெரிய நோய் வேண்டுமானால் வரலாம் :-))

இக்குப்பை கிடங்குகளின் வழியே சென்றால் எப்பொழுதும் காணலாம், மணிரத்தினம் படத்தில் காட்டப்படும் ஊட்டி லோகேஷன் போல புகைமண்டலமாகவே காணப்படும், பெரும்பாலும் சொல்லப்படும் காரணம் குப்பையில் இருந்து பிளாஸ்டிக்,இரும்பு என பொறுக்குபவர்கள் நெருப்பு வைத்து விடுகிறார்கள் என்று, ஆனால் மாநகராட்சி ஊழியர்களே குப்பையின் அளவை குறைக்க ஆங்காங்கே நெருப்பு வைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதை மறுத்து மாநகர தந்தை சொன்ன விளக்கம் இன்னொரு குபீர் ரக காமெடி ஆகும், குப்பையில் தானாக உருவாகும் மீத்தேன் வாயு பற்றிக்கொள்வதே தீப்பிடிக்க காரணம் என்பதே. தீப்பிடிப்பதற்கு மீத்தேன் தான் காரணம் எனில் , அது தெரிந்தும் இத்தனை நாளாக திறந்த வெளியில் குப்பைக்கொட்டி வைத்து பெருமளவில் மீத்தேன் உருவாக்கியுள்ளதை அவரே ஒப்புக்கொள்கிறார்.மாநகராட்சி சுற்று சூழலை பாதிக்க செயல்ப்படுகிறது என சொல்லும் ஒப்புதல் வாக்குமூலமாக இருக்கிறது.

மீத்தேன் என்பது மிகப்பெரிய பசுமை இல்ல வாயு , வளிமண்டல ஓசோனில் ஓட்டை போடுகிறது.அப்படி இருக்க மீத்தேனால் தீ விபத்து ஏற்படுகிறது என்பதை மிக சாதாரணமாக சொல்கிறார். எனவே தீவிபத்து ஏற்படவில்லை என்றாலும் மாநகர குப்பைக்கிடங்குகள் சுற்று சூழலுக்கு மிகப்பெரும் தீங்கு விளைவிக்கிறது, ஆனால் அது குறித்து விழிப்புணர்வே இல்லாமல் திறந்த வெளிக்குப்பைகிடங்குகளை செயல் படுத்தி வரும் அரசு நிர்வாகம் , மக்களுக்கு மட்டும் சுற்று சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது மிகப்பெரிய வேடிக்கை. முதலில் சுற்று சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது நமது அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தான் என நினைக்கிறேன்.

நமது நாட்டில் திடக்கழிவு மேலாண்மை (municipal solid waste management)என்பது பெயரளவிலே கடைப்பிடிக்கப்படுகிறது , அவர்கள் செய்வதெல்லாம் குப்பையை சேகரித்து ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டிவிட்டு மற்றதை இயற்கை பார்த்துக்கொள்ளும் என விட்டு விடுவதே. முறையான தொழில்நுட்பங்களைப் பயன்ப்படுத்துவதே இல்லை.சுமார் 6.5 மில்லியன் மக்கள் தொகைக்கொண்ட சென்னையில் இது வரையில் ஒரு "லேண்ட் ஃபில்" அல்லது மட்க வைக்க என கட்டமைப்பு வசதிகள் எதுவும் ஏற்ப்படுத்தப்படவே இல்லை.

சென்னை குப்பை உற்பத்தி மற்றும் கையாளும் வசதிகள்:

மொத்த மக்கள் தொகை:6.5 மில்லியன்.

தனிநபர் குப்பை உற்பத்தி: 500 கிராம்/நாள்.

மொத்த குப்பை அளவு: 3200 மெ.டன், மேலும் 500 டன் கட்டிட இடிப்பாடுகள்.

இவற்றை சேகரித்து வைக்க சென்னையில் கொடுங்கையூர் , பெருங்குடி ஆகிய இரண்டு இடங்களில் மாநகராட்சியின் மிகப்பெரிய குப்பை கிடங்குகள் உள்ளன.

கொடுங்கையூர்:


பரப்பளவு:350 ஏக்கர்,

செயல்பட்டு வரும் காலம்- 25 ஆண்டுகள்.

எதிர்காலம்- 2015 வரையில் செயல்படும்

தினசரி சேகரிக்கும் குப்பை அளவு:1400-1500 மெட்ரிக் டன்கள்.

பெருங்குடி:

பரப்பளவு: 200 ஏக்கர்.

செயல்பாட்டு காலம் : 20 ஆண்டுகள்.

எதிர்காலம்: 2015 வரையில் செயல்படும்.

தினசரி சேகரமாக்கும் குப்பை அளவு: 1500- 1800 மெட்ரிக் டன்கள்.

இவை இரண்டு அல்லாமல் பள்ளிக்கரணையில் 16 ஏக்கர் பரப்பளவில் தினசரி 120 டன்கள் குப்பை சேகரமாகிறது.

எனவே சென்னை மாநகர எல்லையில் மட்டும் சுமார் 4000 மெ.டன்கள் குப்பைகள் ஒரு நாளுக்கு உற்பத்தி ஆகிறது. இது அல்லாமல் அம்பத்தூர் , பூந்தமல்லி, தாம்பரம் போன்ற புறநகர் குப்பைகள் வேறு இருக்கிற்து. அவை இக்கணக்கில் இல்லை.

மாநகர குப்பைகளின் இயல்பு:

Food waste 8.00 %
Green waste 32.25 %
Timber(wood) 6.99 %
Consumable plastic 5.86 %
Industrial Plastic 1.18 %
Steel & Material 0.03 %
Rags & Textiles 3.14 %
Paper 6.45 %
Rubber & Leather 1.45 %
Inerts 34.65 %

இவ்வளவு குப்பைகளையும் சேகரித்து அறிவியல் முறைப்படி சுத்திகரிக்கவோ, மட்கவோ செய்யாமல் திறந்த வெளியில் கொட்டி சுற்று சூழலை மாசுப்படுத்துவதையே அதிகாரப்பூர்வமாக மாநகராட்சி செய்து வருகிறது.

இவ்வாறு திறந்த வெளியில் கொட்டுவதால் எரியும் போது முன் சொன்ன பல நச்சுவாயுக்களும், மேலும் காற்றில்மிதக்கும் தூசுக்கள், கார்பன் துகள்களும் காற்றில் அதிகம் உருவாகிறது.பள்ளிக்கரணையில் கார்பன் துகள் ஒரு கனமீட்டர் காற்றில் 144g /m³ ,பெருங்குடியில் 216 g /m³ ,உள்ளது.வழக்கமான பாதுகாப்பான அளவு 100கி/மீ3 ஆகும். மேலும் Carbon dioxide (CO2) அளவும் காற்றில் 515- 399 ppm (parts per million) ஆக உள்ளது.எல்லாமே பாதுகாப்பான அளவு என வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளது.

இது நேரடியாக அப்பகுதி மக்களுக்கு சுவாசக்கோளாறு நோய்களை உருவாக்கும். மேலும் மழை நீர் குப்பைகளில் இறங்கி நிலத்தில் ஊடுருவும் போது குப்பைகளின் நச்சும் கலந்து நிலத்தடி நீரை மாசுப்படுத்துகிறது.

ஆனால் மாநகராட்சியோ பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை ,குப்பை அள்ளுவதே பெரிய சேவை இதில் பாதுகாப்பாக மட்க செய்யணுமா என நினைக்கிறார்கள் போல.பெயருக்கு நாங்களும் கொஞ்சம் தொழு உரம் தயாரிக்கிறோம் என கணக்கு காட்டுகிறார்கள். உண்மையில் அப்படி செய்திருந்தால் ஒரு நாளைக்கு நான்காயிரம் டன் என ஒரு மாதத்திற்கு 12 லட்சம் டன் குப்பையினை அப்படி தொழு உரம் ஆக்கினால் தமிழ்நாடு முழுக்க இரசாயன உரம் இல்லாமல் இயற்கை விவசாயம் செய்யலாம்.

மாநகர திடக்கழிவுகளை கையாள என்ன தீர்வு உள்ளது?

இப்போது தான் மாநகராட்சி எப்படி கையாளுவது என்று அறியவும், அதற்கான அமைப்பினை உருவாக்கவும் டெண்டர் விட்டுள்ளதாம். அவர்கள் சொல்லும் தீர்வும் அதிகப்பட்சம் லேண்ட் ஃபில்கள் அமைப்பதாகவே இருக்கும். ஆனால் அதனை விட ஒரு நல்ல தீர்வு உள்ளது. அது தான் குப்பைகளில் இருந்து எத்தனால் தயாரித்து மாற்று எரிப்பொருளாக பயன்ப்படுத்துவது.

குப்பையில் இருந்து எத்தனால் தயாரிக்க முடியுமா ? முடியும் எல்லா கழிவிலும் மட்க கூடிய கரிமப்பொருள்கள் உள்ளது அவற்றின் அடிப்படை மூலகம் செல்லூலோஸ் ஆகும். இவ்வாறு செல்லுலோஸ் இல் இருந்து எத்தனால் தயாரிப்பதற்கு "செல்லுலோஸ் எத்தனால் அல்லது மர எத்தனால்" எனப்பெயர்.

வழக்கமாக எத்தனால் ஆனது கோதுமை, மக்கா சோளம், சோளம் ,சர்க்கரை கிழங்கு ஆகியவற்றில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து உருவாக்கப்படும் சர்க்கரையின் மூலமும், கரும்பின் மொலாஸஸில் உள்ள சர்க்கரை மூலமும் தயாரிக்கப்படுகிறது.

சர்க்கரை எனப்ப்டும் சுக்ரோஸ் ஒரு இரட்டை சர்க்கரை ஆகும் இதனை நீராற்பகுப்பு மூலம் குளுக்கோஸ், ஃபிரக்டோஸ் ஆகிய ஒற்றை சர்க்கரையாக மாற்றி பின்னர், சாக்ரோமைசெஸ் செர்விசே (Saccharomyces cerevisiae) எனப்படும் என்சைம் நுண்ணுயிர் மூலம் நொதிக்க செய்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது.

இப்படி தயாரிக்கப்படும் எத்தனால் மலிவானது ஒரு லிட்டர் தயாரிக்க சுமார் 25 ரூ செலவு ஆகும், ஆனால் மூலப்பொருட்களான தானியங்கள்,கரும்பு போன்றவை பயிரிட வேண்டும்,அவற்றுக்கு செலவாகும் ஆற்றல், மனித உழைப்பினையும் கணக்கில் கொள்ள வேண்டும் அப்படிப்பார்த்தால் பெட்ரோலிய தயாரிப்புக்கு பக்கத்தில் வருகிறது.

உணவுப்பொருட்களாக பயன்படும் தானியங்களும் , சர்க்கரையும் எத்தனால் தயாரிப்புக்கு அதிகம் பயன்ப்படுத்தினால் ,மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்படும் பக்க விளைவும் உண்டு.

இதற்கு மாற்று தான் மூலப்பொருள் உற்பத்தி தேவையில்லாத "தாவர,நகரக்கழிவில்" (farm waste and municipal solid waste)இருந்து தயாரிக்கப்படும் பயோ மாஸ் எத்தனால் தயாரிப்பு முறை ஆகும்.

இதில் இரண்டு வகையான பயோ மாஸ் உள்ளது.

#நகர திடக்கழிவுகளில் இருந்து பிரிக்கப்படும் பயோ மாஸ்.

# தாவர கழிவுகள் மற்றும் பயிரிடப்பட்ட தாவரங்கள் மூலம் கிடைக்கும் பயோ மாஸ்.

கிடைக்கும் வழிகள்:


# கோதுமை , நெல், சோளம், மக்கா சோள அறுவடைக்கு பின் கிடைக்கும், வைகோல், தண்டுகள், தக்கைகள்.

# கரும்பு அறுவடைக்கு பின் கிடைக்கும் தோகைகள், கரும்பு ஆலையில் மிஞ்சும் சக்கை,பகசி(bagasse) போன்றவை.

#மரம் அறுக்கும் இடங்களில் சேகரமாகும் மரத்தூள், கழிவு மரத்துண்டுகள்.

#வனங்களில் இருந்து பெறப்படும் இலை, கிளைகள்.

# கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்களில் ,சுத்திகரிக்க வளர்க்கபடும் விட்ச் கிராஸ்(witch grass)

#அரிசி ஆலை இன்ன பிற தானிய அரவை நிலையங்களில் உப பொருளாக கிடைக்கும் தவிடு, எண்ணை வித்துக்களில் உடைத்து நீக்கப்பட்ட மேல் தோல்.

#தரிசு நிலங்களில் எளிதில் வளரும் மரங்களை வளர்த்தும் அறுவடை செய்து பயன்ப்படுத்தலாம்.

எ.கா: வேலிக்காத்தான் எனப்படும் புரோசோபிஸ் ஜுலிபுளோரா(prosopis juliflora) மரம்.

#மேலும் தமிழ் நாட்டில் வாய்க்கால் போன்ற நீர் நிலைகளில் தானாக ஆக்ரமித்து வளரும் நெய்வேலி காட்டாமணி, ஆகாயத்தாமரைகளை அகற்றி பயோ மாஸ் ஆகவும் பயன்ப்படுத்திக்கொள்ளலாம். இதனால் நீர் நிலைகளும் சுத்தமாகும்.

#மேலும் அனைத்து வகையான விவசாய,தாவரக்கழிவுகளும் பயன்ப்படுத்தலாம்.

#அனைத்து வகை தொழில் துறை மூலம் கிடைக்கும் மட்கும் கரிம கழிவுகள்.

நகரக்கழிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கரிம பொருட்கள், மற்றும் விவசாய தாவரக்கழிவு என இரண்டு வகையான பயோமாசிலும் எத்தனால் தயாரிக்க பொதுவான ஒரே செல்லுலோஸ் எத்தனால் தயாரிப்பு முறையே பயன்படுகிறது.

செல்லுலோஸ் எத்தனால் தயரிப்பு முறைகள்:

# நீராற்பகுப்பு & நொதித்தல் முறை,(hydrolysis&Fermentation)

#ஆவியாக்கி திரவமாக்கல் முறை(Gasification).

# வெப்ப முறை எனப்படும் பைராலிசிஸ்.(pyrolysis. )

ஆகிய முறைகள் பெருமளவு பயன்ப்படுகிறது.இங்கு உதாரணமாக நகர திடக்கழிவில் இருந்து நொதித்தல் முறையில் செல்லுலோஸ் எத்தனால் தயாரிப்பதைக்காணலாம்.

இதே முறையில் தாவர கழிவு பயோ மாசில் இருந்தும் எத்தனால் தயாரிக்கலாம்.இந்தியா மிகப்பெரிய விவசாய நாடு என்பதால் நிறைய பண்ணை தாவர கழிவுகள் உள்ளதால் ,அதிக அளவில் எத்தனால் மூலப்பொருள் செலவின்றி உற்பத்தி செய்ய முடியும்.

திடக்கழிவு செல்லுலோஸ் எத்தனால்:

எல்லா வகையான நகர திடக்கழிவிலும் சுமார் 60 சதவீதம் மட்கும் கரிமப்பொருட்களே உள்ளன.இவற்றை பிரித்து எடுத்தாலே தொடர்ந்து மூலப்பொருள் உற்பத்தி செலவு மற்றும் தட்டுப்பாடு இல்லாமல் எத்தனால் தயாரிக்க கிடைக்கும்.

நீராற்பகுப்பு மற்றும் நொதித்தல் முறை:

தாவர மற்றும் திடக்கழிவில் உள்ள கரிம மூலங்கள் செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ்,ஸ்டார்ச், மற்றும் சர்க்கரை ஆகும். இவை எளிதில் நொதித்தல் வினைக்கு உட்படாது எனவே,

முதலில் திடக்கழிவுகளை நன்கு சிறு துண்டுகளாக பல்வரைசர் மூலம் அரைத்துக்கொள்வார்கள்.இதனுடன் நீர் சேர்த்து செல்லுலோஸ் கூழ் உருவாக்கப்படும்.

இப்படி கிடைக்கும் தாவரக்கூழினை நீராற்பகுப்பு(hydrolysis) செய்து எளிய சர்க்கரையான குளுக்கோஸ் ,பிரக்டோஸ் ஆக மாற்ற வேண்டும். நீராற்பகுப்பு செய்ய நீர்த்த கந்தக அமிலம், மற்றும் வினையூக்கிகள் பயன்ப்படுத்தப்படும்.

நீராற்பகுப்பினால் எளிய சர்க்கரைக்கலவையாக சுக்ரோஸ், ஸைலோஸ்,ஆர்பினோஸ் ஆகியவை கிடைக்கும் ,உப பொருளாக "லிக்னைன்"எனப்படும் புரதமும் கிடைக்கும். சோடியம் ஹைட்ராக்சைடு ,கால்சியம் ஹைட்ராக்ஸைடு போன்றவற்றைப்பயன்ப்படுத்தி லிக்னைன் திட நிலையில் படிய வைத்து தனியே பிரிக்கப்பட்டு விடும்.

பின்னர் சர்க்கரை கரைசலில் உள்ள கந்தக அமிலமும் பிரித்தெடுக்கப்பட்டு மறு சுழற்சிக்கு பயன்ப்படுத்தப்படும்.

இந்த நீராற்பகுப்பு முழுவதும் டைஜெஸ்டர்(digestion chamber) எனப்படும் கலத்தினுள் நிகழும்.

பின்னர் எஞ்சிய சர்க்கரை கரைசல் நொதிக்கும் தொட்டிக்கு(fermentation chamber) மாற்றப்படும், அங்கு சாக்ரோமைசஸ் செர்விசியே(Saccharomyces cerevisiae) என்சைம் கலவையுடன் சேர்க்கப்பட்டு நொதிக்கவைக்கப்படும். இதன் மூலம் எத்தனாலும், கரியமிலவாயும் கிடைக்கும்.பின்னர் எத்தனால் வாலைவடித்தல்(Distillation) மூலம் பிரிக்கப்பட்டு 100 சதவீதம் தூய எத்தனால்(unhydrous ethanol) ஆக மாற்றப்படும்.

உபபொருளாக கிடைக்கும் லிக்னைன்(lignin) ஐ மீண்டும் பைரோலிஸ் செய்து எத்தனால் ஆக்கவும் முடியும் அல்லது boiler fuel ஆகவும் பயன்ப்படுத்தலாம் or சுத்திகரித்து தொழு உரமாகவோ அல்லது கால்நடை தீவனமாகவோ பயன்ப்படுத்தலாம்.

ஒரு டன் நகர திடக்கழிவில் இருந்து சுமார் 185 லிட்டர் (50 கேலன்) நீரற்ற 100 சதவீத எத்தனால் தயாரிக்க முடியும்.அதே சமயம் தாவரக்கழிவு பயோமாஸ் முறையில் ஒரு டன்னுக்கு 250-270 லிட்டர் எத்தனால் தயாரிக்க முடியும். கரிம மூலப்பொருட்களின் அடர்த்தி விகிதத்தை பொறுத்து எத்தனால் உற்பத்தி கிடைக்கும்.

பயோ மாஸ் எத்தனால் பயன்கள்:

#மிக அதிக அளவு திடக்கழிவு உற்பத்தியாகும் இடங்களில் அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது பெரும் சவாலான பணி , இப்படி எத்தனால் ஆக மாற்றுவதன் மூலம் கழிவும் அகற்றப்படும் , மேலும் வாகன எரிபொருளாகவும் எத்தனாலைப் பயன்ப்படுத்திக்கொள்ளலாம். பெட்ரோலிய எரிபொருள் இறக்குமதிக்கு செலவிடப்படும் அன்னிய செலவாணி மிச்சமாகும்.

# எத்தனால் சுற்று சூழலை மாசுப்படுத்தாத எரிபொருள்,எத்தனாலை வாகன எரிப்பொருளாக பயன்ப்படுத்துவதால் 85% காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவு குறைகிறது. மேலும் பெட்ரோலிய எரிபொருள் வெளியிடும் கார்பனை விட எத்தனால் வெளியிடும் கார்பனே தாவரங்களால் எளிதில் கிரகிக்கப்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை இயற்கையாக கரியமில வாயு சிறைப்பிடித்தல்( Carbon sequestration ) என்கிறார்கள்.

#எத்தனாலின் ஆக்டேன் எண் பெட்ரோலை விட அதிகம் என்பதால் ,வாகன எஞ்சின் அதிக ஆற்றலுடன் இயங்கும். பந்தயக்கார்களில் 100% எத்தனால்/மெத்தனால் பயன்ப்படுத்தப்படுகிறது. பெட்ரோலுடன் கலந்து பயன்ப்படுத்தும் போது பெட்ரோலின் ஆக்டேன் மதிப்பும் உயரும்.


#லிக்னைன் என்ற இயற்கை உரமும் கிடைக்கும்.

சுருக்கமாக சொன்னால்,

நகரதிடக்கழிவு->பயோமாஸ் எத்தனால் தயாரிப்பு->எரி பொருள் எத்தனால்-> லிக்னைன்-> தொழு உரம்-->கால்நடை தீவனம்-> சுற்று சூழல் பாதுகாப்பு->உள்நாட்டு வேலைவாய்ப்பு அதிகரிப்பு->அன்னிய செல்வாணி சேமிப்பு.

என ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கலாம்.

#இப்படி நகர திடக்கழிவில் இருந்து எத்தனால் தயாரிக்கும் முறை அமெரிக்காவில் பல மாகாணங்களில் செயல்பாட்டில் உள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உலகின் மிகப்பெரிய பயோமாஸ் எத்தனால் ஆலை உள்ளது.அமெரிக்கா முழுவதும் மொத்தமாக 12 மில்லியன் லிட்டர் செல்லுலோஸ் எத்தனால் தயாரிக்கப்படுகிறது.மேலும் 8 மில்லியன் லிட்டர் தயாரிக்க முயற்சிகள் நடைப்பெறுகிறது.

#எகிப்தின் கெய்ரோ நகர் கழிவுகளை எத்தனால் ஆக்க திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 60 மில்லியன் டாலர் முதலீட்டில் நாளொன்றுக்கு சுமார் 500 டன் திடக்கழிவினை எத்தனால் ஆக மாற்றும் ஆலை அமைக்க உள்ளார்கள்.

இந்தியாவிலும் சென்னை ,மும்பை, தில்லி, கொல்கட்டா, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் நாள் தோறும் பல ஆயிரம் டன்கள் திடக்கழிவு உற்பத்தியாகிறது, அவற்றை எல்லாம் எத்தனால் ஆக மாற்ற சிறிது முதலீடு செய்தாலே போதும், நம் நாட்டின் எரிபொருள் தேவையின் இறக்குமதி பெருமளவு குறையும், சுற்று சூழலும் பாதுகாக்கப்படும். அரசு எந்திரம் விழித்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.விழிக்கும் என நம்புவோம்!

------------------------------------------
பின் குறிப்பு:

மேற்கோள் தளங்கள்:

1)http://weekly.ahram.org.eg/2009/969/sc71.htm

2)http://www.jgc.co.jp/en/04tech/07bio/bme.html

3) http://www.chennaicorporation.gov.in/departments/solid-waste-management/index.htm

தகவல் மற்றும் படங்கள் உதவி ,விக்கி, கூகிள், தி இந்து இணைய தளங்கள் நன்றி!

*****