Saturday, December 24, 2011

விவசாயி படும் பாடு-2


விவசாயி படும் பாடு-1 இன் தொடர்ச்சி....



ஒரு நாட்டில் அனைவரும் வாங்கும் திறனுடன், மானிட வாழ்வியல் குறியீடு அதிகமாக இருக்க வேண்டும் எனில் அங்கே உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் இணக்கமான சந்தை பொருளாதாரம் இருக்க வேண்டும். அப்படி அனைவரும் சுபிட்சமாக இருக்கும் பொருளாதார நிலை உபரி பொருளாதார நிலை எனப்படும்.(surplus economy)

பொருளாதார உபரி என்பது உற்பத்தியாளர் உபரி, நுகர்வோர் உபரியை சார்ந்தது.

உற்பத்தியாளர் உபரி(producer's surplus):

விவசாயி தான் விற்க விரும்பும் விலையை விட சந்தையில் ஒரு கூடுதல் விலைக்கு விற்க இயல்வதால் கிடைக்கும் அதிக தொகையின் மூலம் விளையும் நன்மையே ஆகும்.

உ.ம்: 10 ரூபாய்க்கு விற்றால் போதும் என்ற மன நிலையில் சந்தைக்கு வரும் விவசாயிக்கு 11 ரூபாய்க்கு விலைப்போனாலே ஒரு திருப்தி, லாபம் வரும் அல்லவா.

நுகர்வோர் உபரி(consumer's surplus):

நுகர்வோர் தான் வாங்க விரும்பும் விலையை விட சந்தையில் குறைவான விலைக்கு பொருட்கள் கிடைத்தால் அதே பொருளை இன்னும் அதிகம் வாங்கி நுகர்வது.

உ.ம்: ஒரு குவார்ட்டர் 100 ருபாய் என நினைத்து சரக்கு வாங்க கடைக்கு போய் குவார்ட்டர் 50 ரூபாய் எனக்கிடைத்தால் 100 ரூபாய்க்கும் ஒரு அரைப்புட்டி மது வாங்கி அருந்துவதால் கிடைக்கும் நுகர்வு இன்பமே இது. வழக்கமாக புதுவை செல்லும் குடிமக்கள் இப்படித்தான் மலிவாக கிடைப்பதால் கால்ப்புட்டி குடிப்பவரும் அரைப்புட்டி அடித்து அதிக நுகர்வு உபரி அனுபவிக்கிறார்கள்.

ஹி..ஹி மனசில நச்சுனு நங்கூரம் பாய்ச்சினா போல பதியனும் என்று தான் இந்த உதாரணம் :-))

உற்பத்தி அதிகம் ஆகும் போது பொருளின் நுகர்வு தேவை அதே அளவு இருந்தாலும் ஒரு நிலைக்கு மேல்  நுகர்வு அதிகம் ஆகாத காரணத்தால் தேவை குறைந்து விலை விழும். "உற்பத்தியாளர் உபரி "குறையும். அதாவது அவருக்கு கிடைக்கும் லாபம் குறையும்.

அதே போல உற்பத்தி குறையும் போது நுகர்வு தேவை ஒரு குறைந்த பட்சம் என்ற அளவிலேயே இருக்கும், அதனை விட கீழே போகாது, ஆனால் அதனை பூர்த்தி செய்ய கூட தேவையான உற்பத்தி இல்லாத போது தேவை அதிகரிக்கும், விலை அதிகரிக்கும் , இதனால் நுகர்வோர் கூடுதலாக வாங்கி அனுபவிக்கும் " நுகர்வோர் உபரி"  குறையும்.

அதாவது கை நிறைய பணம் எடுத்து சென்று பை நிறைய பொருள் வாங்க இயலாது, பை நிறைய பணம் எடுத்து சென்றால் மட்டுமே கை நிறைய பொருள் வாங்க இயலும்.

surplus economy:


இந்நிலையில் தான் உணவுப்பொருள் பணவீக்கம்(food price inflation) என்பது அதிகரிக்கும்.

ஒரு நல்ல பொருளாதார சூழல் உள்ள நாட்டில் , உற்பத்தியாளர் உபரிக்கும், நுகர்வோர் உபரிக்கும் ஒரு சம நிலை நிலவும் விலைக்கு சந்தையில் விலை இருக்கும். அதாவது உற்பத்தியாளனுக்கும் விலைக்கட்டுப்படியாகும், நுகர்வோருக்கும் வாங்கும் விலையில் பொருட்கள் கிடைக்கும்.இந்நிலையை "உபரி பொருளாதார சமநிலை" நிலை என்பார்கள்.

நம் நாட்டில் கூடுதல் விலைக்கு ஒரு பொருள் விற்பனை ஆனாலும் அந்த கூடுதல் விலையான பணம் உற்பத்தியாளர் ஆன விவசாயிக்கு இந்தியாவில் போய் சேர்வதில்லை, அது வியாபாரிகள் , இடைத்தரகர்களுக்கே போய் சேர்கிறது.

இந்தியாவில் உற்பத்தியாளர் உபரி என்பது வியாபாரிகள்/ இடைத்தரகர்கள் உபரியாக அவர்களுக்கு போய் சேர்கிறது. விவசாயி வழக்கம் போல வானத்த பார்த்தேன் ,பூமிய பார்த்தேன் லாபத்த இன்னும் பார்க்கலையேனு சோக கீதம் பாடிக்கொண்டு இருக்கிறான்.

இப்போ எப்படி விவசாய விலைப்பொருளை உற்பத்தி செய்பவன் பலன் அடையாமல் அதனை வாங்கி விற்கும் வியாபாரியும், இடைத்தரகர்களும் லாபம் அடைகிறார்கள், நுர்கவோரும் அதிகம் பணம் இழக்கிறார்கள் என்பதனை பார்க்கலாம்.

அரிசி இந்தியாவின் பெரும்பான்மையான மக்களால் உணவாக உண்ணப்படும் நிலையான உணவு. அனைவர் பசியும் தீரும் வண்ணம் அரிசி உற்பத்தி இருக்க வேண்டும் இல்லை எனில் பட்டினி சாவுகள் தான் ஏற்படும்.

இந்தியாவின் மொத்த அரிசி உற்பத்தி 132 மி.மெ .டன்கள், ஆண்டு சராசாரி நுகர்வுத்தேவை 128 மி.மெ.டன்கள் மட்டுமே அதாவது தேவையை விட உற்பத்தி அதிகம் எனவே பெரும்பாலும் அனைவருக்கும் அரிசி கிடைத்து விடும். இப்படி உபரி இருந்தாலும்  3 வேளை முழுதாக உணவு அருந்தும் நிலை அனைவருக்கும் இல்லை. கிட்ட தட்ட 40% மக்கள் வறுமையின் நிறம் சிவப்பு என்கிறார்கள்.காரணம் அனைவராலும் வாங்க முடிவதில்லை.

இந்திய உணவுக்கழக கிடங்குகளில் கிடந்து பல லட்சம் டன் உணவுத்தானியங்கள் புழுத்துப்போகின்றன. பின்னர் அவை கால் நடைத்தீவன தானியமாக குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றது.

உபரி உணவு தானியம் பசியால் வாடும் மக்களுக்கு செல்லாமல் வீணாகவோ அல்லது மலிவான விலைக்கோ அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது என்பதனை CNN-IBN  தளத்தில் உள்ள செய்தி காட்டுகிறது.

சுட்டி:

CNN_IBN

இந்தியாவில் தான் அறுவடைக்கு பின் ஏற்படும் உணவுத்தானிய இழப்பு விகிதம் அதிகம்(சுமார் 40%) என சர்வதேச நெல் ஆய்வு மையம் , பிலிப்பைன்ஸ், சொல்கிறது.

இலவச அரிசி, பொது விநியோக திட்டம் என பல மாநிலங்களில் இருப்பதால் மட்டுமே பெரும்பாலோருக்கு அரிசி கிட்டுகிறது, அதுவும் இல்லை எனில் வறுமைக்கோடு இன்னும் பெரிதாக வளர்ந்து இருக்கும்.

தமிழக அரசின் இலவச அரிசி திட்டம்:




தொழில் நுட்பத்தில் வளர்ச்சி, சந்திரனில் நீர் இருக்கா என எட்டிப்பார்க்கிறாங்க, உள் நாட்டில ஒரு கால்வாய்ல கூட தண்ணி தரமாட்டாங்க, பசுமை புரட்சி, உற்பத்தியில் தன்னிறைவு என ஒருபுறம் ஆனால் மறுபுறம் அதனை அனுபவிக்க இயலாத மக்கள் கூட்டம் என இந்தியா காலம் காலமாக கஷ்ட ஜீவியாகவே இருக்கிறது ஏன்?


பட்டினி சாவுகள் பற்றி தெரிந்துக்கொள்ள் இந்த சுட்டிகளை அழுத்தவும்:

1)ஒரிசா பட்டினிச்சாவு


2)ஒரிசா பட்டினிச்சாவு

பட்டினிச்சாவுகள் ஒரிசாவில் மட்டும் இல்லை இந்தியா முழுவதும் உள்ளது. மேலும் விவசாயத்தில் நட்டம் ஏற்ப்பட்டதால் பலர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்கள்.

BBC news ,


//Some 200,000 farmers have committed suicide in India since 1997.

Drought, a fall in crop prices and an increase in the cost of cultivation are cited as reasons for the farmers' plight.

Media reports say that 680 farmers have taken their lives in western Maharashtra state this year, while another 98 have committed suicide in southern Andhra Pradesh and Kerala states since October.//

சுட்டி:
BBC news

BBC செய்தி வெளியீட்டில் இந்தியாவில் 1997 முதல் இன்றுவரை சுமார் இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக உள்ளது. கடந்த சில மாதங்களில் 680 பேர் மஹாரஷ்ராவிலும், 98 பேர் தென்னிந்தியாவில் கேரளா, ஆந்திராவில் அக்டோபர் மாதத்தில் மட்டும் தற்கொலை செய்துள்ளார்கள்.

வறட்சி,உற்பத்தி செலவு அதிகம், குறைவான சந்தை விலை, கடன் தொல்லை ஆகியவையே காரணங்களாக கூறப்பட்டுள்ளன.

சுமார் 60% சத வீத மக்கள் விவசாயம், மற்றும்  விவசாய தொழிலாளிகளாக இருக்கிறார்கள் அவர்கள் தான் வறுமைக்கோட்டினை வரையும் ஓவியர்கள். காரணம் அவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை, விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லை.

விவசாயி என்ன தான் பாடுப்பட்டு அதிகம் விளைவித்தாலும் உரிய விலை இல்லாமல் விற்றுக்கஷ்டப்படுவதால் ,நிலம் வைத்திருக்கும் விவசாயி , அவர் நிலத்தில் உழைக்கும் விவசாய தொழிலாளிக்கும் உரிய ஊதியம் அளீக்க முடியாத நிலை தான் இதற்கு காரணம்.இதன் விளைவாக விவசாயத்தொழிலாளி அதிக வருமானம் தேடி மாற்று வேலைக்கு போகிறான், இந்நிலை தொடர்ந்து அதிகரித்து வருவது அபாயமானது, பின்னர் நிலம் வைத்து விவசாயம் செய்பவரும் அதனை விட்டு வெளியேற நேரிடும். தற்போது உபரி உற்பத்தி இருக்கும் போதே 40% சதம் வறுமைக்கோடு என்றால் உற்பத்தி குறைந்தால் என்னாகும்?

சரி இப்போது அரிசி உற்பத்தியின் பொருளாதாரம் பார்ப்போம்.

சந்தையில்,

ஒரு மூட்டை சன்ன ரக நெல்= 1180 ரூபாய்,

ஆனால் ஒரு மூட்டை சன்ன ரக அரிசி = 3000-3500 ரூபாய்

இந்த பரிமாண மாற்றம் எப்படி எனப்பார்ப்போம்.இப்படி உற்பத்தி இடத்தில் இருந்து நுகர்வோரை அடையும் போது மதிப்பு கூடுவதை விநியோக மதிப்பு சங்கிலி (supply value chain) என்பார்கள்.

நெல் அறவை திறன்* ஒரு நவீன அரிசி ஆலையில் 85% முதல் 90% *வரை இருக்கும் என தகவல் உள்ளது.

அரிசி அறவை எந்திரம்:



அதாவது 100 கிலோ நெல் அறைத்தால் குறைந்தது 85 கிலோ அரிசி கிடைக்கும்.

நாம் இன்னும் கொஞ்சம் சேதாரம் சேர்த்துக்கொள்வோம் 100 கிலோ நெல் அறைத்தால் 75 கிலோ கிடைக்கும் என வைத்துக்கொள்வோம்.

இரண்டு மூட்டை சன்ன ரக நெல் அரிசியாக மாறி அளிக்கும் வருமானம்,

நெல் 2 மூட்டை 200 கி= 1180X2=2360 ரூபாய்கள்.

அரிசி கிடைப்பது 75% திறன் எனில்= 200*75/100=150 கிலோ.

எஞ்சிய 50 கிலோ தவிடு, நொய் ஆகும் மொத்தமாக அனைத்தும் தவிடு என்றே வைத்துக்கொள்வோம்.தவிட்டில் இருந்து அரிசி எண்ணை, கால்நடை தீவனம் தயாரிப்பதால் அதற்கும் தேவை, விலை உண்டு.

அரிசி 100 கிலோ = 3000 எனில் ,

150 கிலோ அரிசி =4500 ரூபாய்,

50 கிலோ தவிடின் விலை= சுமார் 400 ரூபாய்*

மொத்த சந்தை மதிப்பு= 4900 ரூபாய்.

அரவைக்கூலி =200 ரூபாய் எனில் ,

தள்ளுபடி செய்தால் நிகர வருமானம் =4900-200=4700 ரூபாய்.

2 மூட்டை நெல் =2360 ரூ

அதிலிருந்து பெறப்படும் அரிசியின் மதிப்பு=4700 ரூ,

லாபம் = 4700
                 -2360
------------------
                   2340 ரூபாய்
----------------------


*தவிடு விலை:

//Punjab Rice Millers Association president Tarsem Saini, when questioned on this issue, said rice bran, which was earlier selling at around Rs 850 per quintal, was presently going for only Rs 500 to Rs 550 per quintal. He said similarly rice husk, which was till recently selling for Rs 300 to Rs 350 per quintal, was now being sold at Rs 225 to Rs 250 per quintal.//

http://www.tribuneindia.com/2008/20081126/punjab1.htm

*அறவைத்திறனுக்கு:

The most effective and economical means of rice hulling operation giving a hulling efficiency from 85% to 90% depending on Paddy type

http://www.rimac-ricemachinery.com/page3.html


இதன் மூலம் தெரிவது என்னவெனில் , வியாபாரிக்கு அவன் முதலீட்டின் மீது சுமார் 100 சதம் அளவுக்கு லாபம் ஈட்டப்படுகிறது.

இந்த 2340 ரூபாய் என்பது மொத்த வியாபாரி, இடைத்தரகர் ,குறு வியாபாரி, சிறு வியாபாரி, என அனைவராலும் பகிறப்படுகிறது.

ஆனால் மூலப்பொருளான நெல்லை விளைவித்த விவசாயிக்கோ 10 சதம் கூட லாபம் வருவதில்லை என்பதனை முந்தையப்பதிவில் பார்த்தோம்,

நான்கு மாதம் வயலில் பொருள் முதலீடு, உழைப்பு முதலீடு செய்து முதுகொடிய பாடுப்பட்டால் மொத்த குடும்பத்திற்கும் 4400 ரூ தான் வருவா ஆக கிடைக்கிறது(அதுவே சந்தேகம் தான் பல மாநிலங்களில் உற்பத்தி செலவு , வருவாய் விட அதிகம் ஆக இருக்கிறது நிகர நட்டம் என முந்தையப்பதிவில் பார்த்தோம்),.

நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தலைக்கு தலா மாதம் 275 ரூ தான் வருமானம், இது திட்டக்கமிஷனால் நிர்ணயம் செய்யப்பட்ட வறுமைக்கோட்டுக்கு மேல் வசிப்பவரின் மாத சம்பளம் ஆன 960 ரூ என்பதனை விடவும் வெகு வெகு குறைவு!

மக்களுக்கு மலிவாக உணவு கிடைக்க வேண்டும் என அரசாங்கம் நினைப்பதில் தவறில்லை ஆனால் அதனை நெல்லின் அடிப்படை குறைந்த பட்ச ஆதரவு விலையை குறைவாக வைப்பதன் மூலம் செய்ய நினைப்பதால் தான் விவசாயிக்கு இந்நிலை.

தமிழக அரசின் நெல்கொள்முதல் கணக்கு:



அவ்வளவு குறைந்த விலைக்கு நெல்லை வாங்கினாலும் அரிசி என்னமோ கிலோ 30 ரூபாய்க்கு மேல் தானே விற்பனை ஆகிறது, அப்படி எனில் அரசு மலிவாக உணவு கிடைக்க போட்ட திட்டம் மக்களை சென்றடையவில்லை, விவசாயிக்கும் பலன் தறவில்லை தானே.

குவிண்டால் நெல் 1500 என அரசு நிர்ணயித்தாலும் இப்போது விற்கப்படும் அரிசி விலைக்கே விற்கலாம், அதிலும் லாபம் வரும் ஆனால் அதனை வியாபாரிகள் விரும்புவதில்லை, எனவே உடனே விலையை ஏற்றி விடுவார்கள். நெல் விலை ஏறிப்போச்சு அதான் நாங்க விலை ஏத்தினோம் என காரணம் சொல்வார்கள்.

மேலும் செயற்கையாக தட்டுப்பாட்டினையும் உருவாக்கி இயல்பினை ஸ்தம்பிக்க வைப்பார்கள்.

மேலும் எப்பொழுதும் மொத்த கொள்முதல் விலையில் அரிசி விலை என்பது குறைவாகவே இருக்கு ஆனால் சில்லறை விற்பனைக்கு வரும் போது தான் ஏறி விடுகிறது.

அரிசி மண்டி:










மொத்த விலையில் அரிசி ஒரு குவிண்டால் சுமார் 1500 முதல் 1800 வரை மட்டுமே, ஆனால் சில்லறை வர்த்தகர்கள் மக்களுக்கு விற்பது 3000 ரூபாய்.

சில்லறை வர்த்தகர்கள் எப்படி விலையை தீர்மானிக்கிறார்கள் எனில் அவர்கள் வாங்கும் பொருளின் அளவு, விற்கும் அளவு, அவர்கள் போட்ட முதல், கட்ட வேண்டிய கடன், தினசரி தண்டலில் கடன் வாங்கி இருப்பார்கள். இதுக்கு ஏற்றார்ப்போல விலையை கூட்டி அல்லது குறைப்பார்கள், உண்மையான அரிசி என்ற பொருளின் உற்பத்தி அளவு,சந்தை வரவு மற்றும் நுகர்வு தேவையின் அடிப்படையில் அல்ல விலை நிர்ணயம்.

இதற்கு உதாரணம் இந்து பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தியே,

"According to M. Jayapalan, vice-resident, Red Hills Paddy and Rice Wholesale Merchants Association, there has been no increase in wholesale prices of rice recently.

“The wholesale rate of raw rice is Rs.28. Seasoned raw rice is only a few rupees more. It may be the best variety of rice that a retailer is selling, but Rs.42 is certainly overpricing it,” he says.

Speaking of wholesale rates of boiled rice, he said it ranged from Rs.27 to Rs.34 a kg. "

“More than a three rupee-margin is unfair. Even we are into retail sales, but we do not price it so high,” Mr.Jayapalan adds. "

சுட்டி:

the hindu news paper

இந்த செய்தி மொத்தக்கொள்முதலில் கிலோ 27 முதல் 34 என இருந்த போது சில்லறை விலையில் 42 க்கு விற்கப்பட்டதை சுட்டிக்காட்டுகிறது.
தற்ப்போது மொத்தக்கொள்முதலில் கிலோ அரிசி 15 ரூ முதல் 18 ரூ என்ற அளவில் உள்ளது சில்லறை விலையில் கிலோ அரிசி 30 ரூ முதல் 35 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விவசாய சந்தை நிலவரம் இங்கே:
சுட்டி:

agri market

அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலை எதிர்ப்பார்த்தது போல நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசியினை கொடுக்கவில்லை, விவசாயிக்கு லாபத்தையும் கொடுக்க வில்லை, இடையில் இடைத்தரகர்கள், வியாபாரிகள் மட்டுமே தங்கள் இஷ்டம் போல லாபம் வைத்து அனுபவிக்கிறார்கள். இது தான் இந்தியா!

உற்பத்தியாளர் ஆன விவசாயி என்ன விலைக்கு விற்கிறான், கடையில் நாம் என்ன விலைக்கு வாங்குகிறோம், இரண்டுக்கும் என்ன தொடர்பு, விலை உயர்வு ஏன் என்பது போன்றவற்றில் போதுமான விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை என்றே நினைக்கிறேன்.

செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் பெட்ரோல் விலை உயர்வு, அரிசி விலை உயர்வு, பருப்பு விலை ஏற்றம் என செய்தி வந்தால் அச்சச்சோ விலை வாசி போறப்போக்கப்பார்த்தா நாட்டுல மனுஷன் வாழ முடியாது போல இருக்கே என உச்க்கொட்டிவிட்டு, தொலைக்காட்சில அடுத்து என்ன நிகழ்ச்சினு போய்விடுவோம்.

சரவண பவன் போன்ற உணவங்களில் காத்தாடிப்போட்டா பறக்கிறாப்போல வைக்கிற நாலு இட்லிக்கு 25 ரூ சொன்னாலும் சப்புக்கொட்டி சாப்பிடுவோம்! கூடவே வித விதமா டீ ஸ்பூன் அளவு சட்டினி பல வண்ணத்தில் கொடுப்பதையும் சூப்பர்ல என சிலாகிப்போம்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வந்தால் விவசாயம் அழியும்னு யாராவது சொன்னாலும் சுதேச உணர்வுப்பீறிட ஆமாம் போடுவோம்! ஏற்கனவே நம்ம அண்ணாச்சிகளே அழித்துக்கொண்டிருப்பதை சுலபமாக மறந்துவிடுவோம்.

நம் நாடு  பாரதம் என்ற ஒரு  நோஞ்சானாகவும் இந்தியா என்ற ஒரு வளமான நாடாகவும் வழக்கம் போல இரு மாறுப்பட்ட கூறுகளாக வளர்ந்துக்கொண்டிருக்கும் .வேற்றுமையில் ஒற்றுமையாம் ,2020 இல் நாம தான் வல்லரசு! வாங்க கனவு காணலாம்!


பின்குறிப்பு:


புகைப்படங்கள் , பிபிசி,இந்து நாளிதழ்,ரைஸ்மெக்,விக்கிபீடியா ,IRRI,outlookஆகிய  தளங்களில்  இருந்து பயன்ப்படுத்தப்பட்டுள்ளது, நன்றி!

22 comments:

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! புள்ளி விவரங்களோடு புரியும்படியான தகவல்கள்.

//சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வந்தால் விவசாயம் அழியும்னு யாராவது சொன்னாலும் சுதேச உணர்வுப்பீறிட ஆமாம் போடுவோம்!//

சில்லறை வர்த்தகத்தில் நடைபெறும், பொது மக்களை ஏமாற்றும் தில்லு முல்லுகளைப் பற்றி ஒரு பதிவு போடவும்.

suraavali said...

விவசாயிகள் நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்-4 http://suraavali.blogspot.com/2011/11/4.html

SURYAJEEVA said...

கலக்கல் பதிவு.. பிற பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பை முதலாளி வர்க்கம் சுரண்டி கொழுக்கும்.. ஆனால் விவசாயியின் உழைப்பை மட்டும் இடைத் தரகர் முதலாளிகள் சுரண்டி கொழுக்கிறது... அரசு ஆதரவு விலையை, உழைப்பின் ஊதியத்தையும் சேர்த்து நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்காமல் விவசாயிகள் பாடு கடினம் தான்...

சார்வாகன் said...

அருமையான பதிவு நண்பா!!!!!!!!!
குறைந்த பட்ச விலையை உயர்த்தினால் இதனை சரி செய்ய முடியும் என்றாலும் சேய்ய மறுக்கும் அரசை என்ன செய்வது?.சந்தைப் பொருளாதாரத்தில் விவசாயி மட்டும் தன் பொருளை சந்தைப் படுத்த முடியாதாம்.நல்ல நியாயம். தொடருங்கள் உங்கள் அலசலை.
நன்றி

வவ்வால் said...

தி.த்அ.இளங்கோவன்,

வாங்க சார், நன்றி, வணக்கம்,

//சில்லறை வர்த்தகத்தில் நடைபெறும், பொது மக்களை ஏமாற்றும் தில்லு முல்லுகளைப் பற்றி ஒரு பதிவு போடவும்.//

உங்கள் தொடர் ஊக்கங்கள் இருக்கும் போது கண்டிப்பாக பதிவு போடாமல் இருப்பேனா?ஹி..ஹி என்ன நான் கொஞ்சம் சோம்பேறி , இந்த ரெண்டுப்பதிவையியும் ஒரு மாதமாக கொஞ்சம் கொஞ்சமாக தேத்தினேன், கூடிய சீக்கிறம் தகவல்கள் கிடைத்ததும் போடுகிறேன்!

-----------------------

சூறாவளி தோழர்கள்,

வாங்க, வணக்கம், நன்றி,
//விவசாயிகள் நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்-4 http://suraavali.blogspot.com/2011/11/4.html//
உங்கப்பதிவையும் எனக்கு சூர்யா அறிமுகப்படுத்தி இருந்தார் , படித்தேன், பின்னூட்டம் போட்ட்டால் சண்டைக்கு வருவிங்களோனு போடாமல் வந்துட்டேன் :-))

நன்றாக எழுதி உள்ளீர்கள் ஆனால் கொஞ்சம் மிகைப்படுத்துதல் , அப்புறம் சரியான விவரங்கள் இல்லாமல் குத்துமதிப்பாக இருந்தது, சித்தார்ந்த ரீதியாக இருவர் எண்ணமும் ஒன்று தானே என எதுவும் சொல்லவில்லை.நன்றி!
---------------------------
சூர்யா,

வாங்க ,வணக்கம்,நன்றி!

//ஆனால் விவசாயியின் உழைப்பை மட்டும் இடைத் தரகர் முதலாளிகள் சுரண்டி கொழுக்கிறது... அரசு ஆதரவு விலையை, உழைப்பின் ஊதியத்தையும் சேர்த்து நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்காமல் விவசாயிகள் பாடு கடினம் தான்.//

விவசாயிகள் கோரிக்கை வைக்காமல் இல்லை வைத்துள்ளார்கள், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டிப்பற்றி முந்தையப்பதிவில் சுட்டிக்காட்டியிருந்தேன், அது நாடாளுமன்ற விவாதத்திற்காக காத்திருக்கிறது நீண்ட நாட்களாக, நம்ம மக்கள் பிரதிநிதிகளுக்கு வேறுபல அலுவல்கள் இருப்பதால் கண்டுக்கொள்ளவில்லை போலும், இந்த செவப்பு சட்டைக்காரங்களும் அதுப்பத்தி வாய திறக்க மாட்டேன்கிறார்கள் நாடாளுமன்றத்தில். :-))

-------------------------
சார்வாகன்,

வாங்க நண்பா ,வணக்கம், நன்றி!
//குறைந்த பட்ச விலையை உயர்த்தினால் இதனை சரி செய்ய முடியும் என்றாலும் சேய்ய மறுக்கும் அரசை என்ன செய்வது?.//

இதுக்கு தான் அறிவியல் பார்வை வேண்டும் என்பது சரியா பதிவின் சாரம்சத்தை கபால்னு புடிச்சிங்க!

வியாபாரிகள் தானாக முன் வந்து விலை உயர்த்தி தர மாட்டாங்க, அரசாங்கம் தான் செய்யனும், ஆனால் செய்யாமல் விலை வாசியக்கட்டுப்படுத்துறேன்னு விவசாயிகளை ஏறிமிதிக்கிறது!

சதுக்க பூதம் said...

நல்ல பதிவு.
//நெல் அறவை திறன்* ஒரு நவீன அரிசி ஆலையில் 85% முதல் 90% *வரை இருக்கும் என தகவல் உள்ளது.
//
அறவை திறன் 60 - 65 % தான் இருக்கும் என கல்லூரியில் படித்ததாக நினைவு. அதுவும் நெல்லின் ரகங்களுக்கு ஏற்ப மாறுபடும். நம்மூர்களில் இருக்கும் அரிசி ஆலையில் அது 65 சதத்தை விட குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.
அது பற்றிய சர்வ தேசிய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியல் பதிவு

http://www.knowledgebank.irri.org/rkb/index.php/rice-milling

Most rice varieties are composed of roughly 20% rice hull or husk, 11% bran layers, and 69-% starchy endosperm, also referred to as the total milled rice. In an ideal milling process this will result in the following fractions: 20% husk, 8-12% bran depending on the milling degree and 68-72% milled rice or white rice depending on the variety
அதாவது 30%க்கும் மேல் இயற்கையாகவே அரிசியில் உமி தவிடு போன்றவை உள்ளது. அறவை இயந்திரத்தில் அதற்கு மேல் 10% இழப்பாவது இருக்கும். அது மட்டுமன்றி அறுவடையின் போது அரிசியில் சிறிது ஈரபதம் இருக்கும். நெல்லிலிருந்து அரிசியாகும் போது ஈரபதத்தினால் ஏற்படும் எடை இழப்பையும் கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும்.மற்றொரு விஷயம் அரிசியின் விலை நிர்ணயத்தில் மத்திய மாநில அரசுகள் நிர்ணயிக்கும் குறைந்த பட்ச ஆதார விலையும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் பாதிப்பு மற்ற ரகங்களுக்கும் இருக்கும். நீங்கள் சொல்ல வரும் கருத்து உண்மையானது. இன்னும் துல்லியமான புள்ளி விவரம் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.நீங்கள் கொடுத்த சுட்டியில் உள்ளது போல் இயந்திரம் 95% அரிசியை நெல்லிலிருந்து கொடுக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.

நான் கொடுத்த சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலைய சுட்டியில் உள்ள கீழ் காணும் தகவல் உண்மை என்றே நினைக்கிறேன்
total milled rice obtained out of paddy; expressed as weight percentage of milled rice (including brokens) obtained from a sample of paddy. The maximum milling recovery is 69-70% depending on rice variety, but because of grain imperfections and the presence of unfilled grains, commercial millers are happy when they achieve 65% milling recovery. Some village type rice mills have 55% or lower milling recovery.

வவ்வால் said...

வாங்க பூதம் ,

நன்றி,வணக்கம்,

நீங்க சொன்னத நானும் நினைத்தேன் ,அதனால தான் நான் மேலும் குறைத்து 75% என போட்டுள்ளேன்.

IRRI,தளமும் நான் பார்த்தேன், அந்த ரப்பர் ரோலர் படம் அங்கிருந்து எடுத்தது தான், அதே பக்கத்தில் 95% எனவும் போட்டு இருக்கு, பார்க்கவும்.

//In a properly adjusted rubber roll husker, husking efficiencies can be as high as 95%, however efficiencies are often lower. Besides machine adjustments, uniformity of grain thickness will affect the husking efficiency. If a mixture of varieties is fed into the husker, or paddy grain that did not mature uniformly in the field, husking efficiencies will be lower.//

http://www.knowledgebank.irri.org/rkb/index.php/rice-milling/commercial-rice-milling-systems/husking/rubber-roll-husker

அதனால தான் வணிக ரீதியாக மெஷின் விக்கிறவங்க அறவைத்திறனை உதாரணம் காட்டி இருக்கேன். மேலும் நான் 75% என்றே கணக்கில் வைத்துக்கொண்டேன்.

கிராமத்தில அரைத்தா கடைக்கு விற்பனைக்கு வருது. அதெல்லாம் சுய தேவைக்கு அறைப்பவை.

இன்னும் துல்லியமாக சொல்ல முயற்சிக்கிறேன். ஒரு முறை 2 மூட்டை நெல்லை நவீன எந்திரத்தில் அறைத்து பார்க்கணூம் அதுக்கு :-))

ராஜ நடராஜன் said...

தலை கீழா கவே படிக்க வைக்கிறீங்க.மறுபடியும் கடைசியில் இருந்தே கீழே!

மானிட வாழ்வியல் குறியீடுக்கும் உபரி பொருளாதார நிலை (surplus economy) மாதிரி கோனார் நோட்ஸ் போட்டிருக்கலாமே!அது என்ன Per capita income பற்றிய விளக்கவுரையா?

ராஜ நடராஜன் said...

//ஹி..ஹி மனசில நச்சுனு நங்கூரம் பாய்ச்சினா போல பதியனும் என்று தான் இந்த உதாரணம் :-))//

12 பாட்டில் ரெட் லேபிளை (ஒரு பொட்டி) நண்பனுக்கு வாங்கி கொடுத்ததெல்லாம் கன்ஸ்யூமர் சர்ப்ளஸ்ன்னு அப்ப தெரியாமப் போச்சே:)

ராஜ நடராஜன் said...

உபரி பொருளாதார சமநிலையும் நீங்க சொன்ன Equillibirum quantity படம் போட்டு விளக்கு பாடமும் முன்னமே புரிஞ்சிருந்தா அமிர்த்யா சென் கூட போட்டிக்குப் போயிருக்கலாம்:)

நீங்க சொன்ன உற்பத்தி 132 மில்லியன் மெகா டன்னும் தேவையோ 128 மி.மெ விற்கும் பின் இந்திய வாழ்நிலை சூழல் சார்ந்த ஒரு பின்ணணி இருக்குது.நம்ம மன்மோகன் பொம்மையா இல்லாமல் உண்மையாகவே பொருளாதாரவாதியாக இருந்த காலத்திலும்,வாஜ்பாய் அரசின் காலத்திலும் நீங்க ஜோதிஜி கிளைவ் பதிவுக்குப் போட்ட சுவாமி நாதன் பசுமைப் புரட்சி(?) காலமே.பெருச்சாளி தின்பதை மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கலாம் என்ற வாஜ்பாய் அரசின் திட்டம் வெற்றி பெறவில்லை.காரணங்களில் சில இந்திய சாலைகளும் மத்திய மாநில புரிந்துணர்வு குறைவும்.

ராஜ நடராஜன் said...

//உபரி உணவு தானியம் பசியால் வாடும் மக்களுக்கு செல்லாமல் வீணாகவோ அல்லது மலிவான விலைக்கோ அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது என்பதனை CNN-IBN தளத்தில் உள்ள செய்தி காட்டுகிறது.//

அடைப்பான் சுத்த பீலா!ஏற்றுமதிப் பொருட்கள் முக்கியமாக அரிசி,தேயிலை தரமானவைகளே.ஆனால் அரிசி ஏற்றுமதியில் ஈரான் சார்ந்த ஒரு சிண்டிகேட் (நெட்வொர்க்) செயல்படுகிறது என நினைக்கிறேன்.இதனை இந்துஜா சகோதரர்களைக் கேட்டால் உறுதிப்படுத்துவார்கள்.

ராஜ நடராஜன் said...

தமிழாக்க சொற்கள் தமிழில் கொஞ்சி விளையாடுகின்றன.மீதியை அப்புறமா படிக்கிறேன்.சொல்கிறேன்.

அரசூரான் said...

வவ்வால், நிறைய தகவல்கள் புள்ளி விவரத்துடன், இதற்க்கு எவ்வளவு உழைத்திருப்பீர்கள் என நான் அறிவேன், நீங்கள் சோம்பல் என சொல்லியிருப்பது உங்கள் தன்னடக்கத்தை காட்டுகிறது. விவசாயம் சம்பதப்பட்ட தகவல்களை தேடிப்பெறுவது சற்று கடினம். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

ஜோதிஜி said...

நிச்சயம் உள்ளே வந்து கும்மி தட்ட முடியாது. நல்லாவே புரியுது. தலை சுத்துதுங்க. அவசரமாய் உள்ளே வந்தால் இப்படித்தான். இருங்க தொடக்கம் முதல் வருகின்றேன்.

ராஜ நடராஜன் said...

சார்வாகன் வீட்டுக்குப் போனா அவர் Archaeopteryx பறக்குமா அல்லது டைனசோரான்னு பட்டிமன்றம் நடத்திகிட்டிருந்தார்.வழக்கமா போற இடம்தானே அப்புறம் சொல்லிக்கலாமுன்னு உங்க பேரைப் பார்த்ததும் விட்டதை தொட வந்துட்டேன்.இனி விட்ட குறை தொட்ட குறைக்கு...

ராஜ நடராஜன் said...

பாரதம்,இந்தியம் வரை படிச்சு முடிச்சிட்டேன்.ஆனால் அதன் உள்குத்து எனக்குப் புரியலையே!

நீங்க சொல்ற உப்ன்னு ஊதுனா பறக்கும் சரவண பவன் இட்லி மாதிரி 2020 நாலஞ்சு வருசத்துலேயே பருவமாயிடும்.அதனால் இப்ப தோராயமாக 2030கவும் 2050ல ஐந்து வல்லரசுல ஒண்ணாக பாரதம் இல்ல...இல்ல இந்தியா வந்துடுமாம்.

அப்புறம் பதிவின் சாரத்துக்கு சம்பந்தமில்லாமல் கொசுறாக சின்ன பின்னூட்டம்.

கபில்தேவ்க்கு (ப்ளோவுல வந்துடுச்சு:) கபில் சிபலுக்கு உங்க மாதிரி இணைய ஆட்களும் வேண்டாம்.பதிவுகளில் ஒருத்தருக்கு ஒருத்தர் கரிச்சுக் கொட்டிக்கிட்டாலும் பரவாயில்லை ஆனா அடிமடியா சோனியா,ராகுல் தலையில் மசாலா அறைக்கும் ஆட்களும் வேணவே வேணாமாம்.

அடுத்த பந்தியில என்ன பரிமாறுறீங்கன்னு பார்க்கிறேன்.

வவ்வால் said...

ராஜ்,

அம்மாவாசை சோறு அன்றாடம் கிடைக்காது அது போல உங்க பின்னூட்டம் அன்றாடம் வரலைனாலும் வந்தா பெரும் விருந்தா வருது :-))

உங்களுக்கு பதில் என்று தனிப்பதிவு போட்றலாம் போல இருக்கு, அப்படியாவது பதிவுகளின் எண்ணிக்கையா பெருக்க முடியாத என்ற அல்ப ஆசை தன் :-))

மானிட வாழ்வியல் குறியீடுனு நான் சொன்னது "human development index" ஐ தான் டெவெலப்மெண்ட் என்பதை விட வாழ்க்கை தரம் என சொல்லலாம் ஆனால் அப்படியும் ஒன்று தனியாக இருக்கு "standard of life" அது கொஞ்சம் பழைய குறீடாக போய்டுச்சு, இப்போ எல்லாம் "human development index" ஐ தான் சொல்வது வழக்கம் ",quality of life " ஐ காட்டும் இதனை வரையரை செய்தது உங்களை நூலிழையில் மிஞ்சிய அமர்த்யா சென் தான்.

வாங்கும் சக்தி, பொருளாதாரம், வாழ்நாள் நீடிப்பு, சுற்று சூழல்,கல்வி, சுகாதாரம், உள்க்கட்டமைப்பு என பலவற்றின் அடிப்படையில் எந்த நாடு வாழ தகுதியான நாடுனு பட்டியல் போடுறாங்க.இதெல்லாம் செய்யனும்னா அந்த நாடும், மக்களும் வசதியானவங்க தானே, உபரி பொருளாதாரம் இருக்கும் இல்லையா?

நம்ம நாடு ஏழை நாடு , ஆனால் மக்கள் எல்லாம் ஏழைனு சொல்லிட முடியாது, ஒரு பக்கம் அம்பானி இன்னொரு பக்கம் கிழிஞ்சது லம்பாடி லுங்கினு ஒட்டு துணி மக்கள் கூட்டம்!

-----------
சிவப்பு பட்டி 12 புட்டியா கொடுத்து வச்சவர் உங்க நண்பர் ,எனக்கு ஒரு புட்டி முழுசா கிடைச்சாலே உபரி நுகர்வு இன்பம் தான் :-))
-------------

//புரிஞ்சிருந்தா அமிர்த்யா சென் கூட போட்டிக்குப் //புரிஞ்சிருந்தா அமிர்த்யா சென் கூட போட்டிக்குப் //புரிஞ்சிருந்தா அமிர்த்யா சென் கூட போட்டிக்குப் //புரிஞ்சிருந்தா அமிர்த்யா சென் கூட போட்டிக்குப் போயிருக்கலாம்:)//

அமர்த்யா சென் சமர்த்ய்யா சென் போல :-))

// நீங்க ஜோதிஜி கிளைவ் பதிவுக்குப் போட்ட சுவாமி நாதன் பசுமைப் புரட்சி(?) காலமே//

கண்டிப்பாக பசுமை புரட்சியின் விளைவு தான் ஆனால் அவசரப்பட்டு செய்து விட்டோம், சரியான தொலை நோக்கு இல்லாமல்.

, எம்.எஸ்.சுவாமி நாதன் உட்பட நம்ம ஆட்கள் அப்போ அயல்நாட்டு வேளாண் விஞ்ஞானிகள் சொன்னதை அப்படியே நம்பினார்கள்(இப்போவும் அப்படி தானே) நம்ம இந்திய தேசி நெல் வகைகள் அதிக உற்பத்தி செய்யாது என சொல்லி ஊத்தி மூடினார்கள், பிலிப்பைன்ஸ்ல இருந்து "high yielding, fertilize responsive" கலப்பின நெல் வகைகள் டன் கணக்கில் இற்க்குமதி செய்து போர்க்கால அடிப்படையில் விவசாயிகளை வற்புருத்தி விவசாயம் செய்ய வைத்து விட்டார்கள்.

இப்போது அது செய்திருக்க தேவை இல்லை, கொஞ்சம் பொறுமையாக முயன்றிருந்தால் நம் நாட்டு ரகங்களை கொண்டே உற்பத்தி பெருக்கி இருக்கலாம் என சொல்கிறார்.

சுவாமிநாதன் ஃபௌண்டேஷன் மூலமாக இப்போ இயற்கை விவசாய பிரச்சாரம் நடக்குது, அதில் அவர் பேசியதை கேட்டேன்.

தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் சி.பிஆர் பௌண்டேஷன்ன் என ஒன்று இருக்கு, அதனுடன் இணைந்து ,இவர்கள் இருவரும் இப்போது இயற்கை விவசாயம் சுற்று சூழல் பாதுகாப்பு என மாத்தி ஜல்லி அடிக்கிறார்கள்.

-------------------------

//பெருச்சாளி தின்பதை மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கலாம் என்ற வாஜ்பாய் அரசின் திட்டம் வெற்றி பெறவில்லை.காரணங்களில் சில இந்திய சாலைகளும் மத்திய மாநில புரிந்துணர்வு குறைவும்.//

மாங்கொட்டைய ஊற வைத்து வேக வைத்து ஒரிசாவில் அப்போது தின்றார்கள் ,சிலர் ஒத்துக்கொள்ளாமல் விஷம் ஆகி இறந்தார்கள்.

இபோதும் ஒரிசாவில் பட்டிச்சாவுகள் தொடர்கிறது, சுட்டி போட்டுள்ளேன் பாருங்க.

இப்போதும் உச்ச நீதி மன்றம் கடுமையாக கேள்விக்கேட்டுள்ளது ஆனால் சரத்பவார் சால்ஜாப்பு தான் சொல்கிறார்.

போக்குவரத்து, விநியோக செலவைக்காரணம் சொல்கிறார்கள். மத்திய அரசா, மாநில அரசா யார் செலவு செய்வது என்பதே விவாதம், அதற்கும் பசியால் பரலோகம் போய்விடுவார்கள் மக்கள்.

மற்றவை தொடரும்.....

arasan said...

அன்பின் நண்பருக்கு வணக்கம் ...
முழுதும் படித்தேன் ... மூச்சு முட்டுது ...
விடியல் வரும் வரும் என்று ஏமாறும் விவசாயியின் கவலையை எவரும் அறிந்த பாடில்லை ..
அரசுக்கும் அக்கறை இல்லை ...

வரும் வளமான எதிர்காலம் ..
என்ன ஒரு கொடுமையான வாசகம் ...

பதிவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள ...

சார்வாகன் said...

நண்பர் வவ்வால் &அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!!!!!!!!!!!!

SURYAJEEVA said...

தேர்தலில் தேர்ந்தெடுக்கப் பட்ட சிவப்பு சட்டைக்காரர்கள் "..............." கூட புடுங்க மாட்டார்கள்..
விடியல் வரும் என்று எதிர்பார்க்காமல்,
யாராவது விடியலை கொண்டு வருவார்கள் என்று காத்திருக்காமல்
அனைவரும் இணைந்து விடியலை கொண்டு வருவோம்

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

வவ்வால் said...

அரசூரான்,

வாங்க ,வணக்கம், நன்றி!

கஷ்டம்னு பார்த்தா சுவாசிப்பதே கஷ்டம் தான், பரம்பைரையா ஏர் உழுதவங்க ,நாம, இதைக்கூட எழுதலைனா எப்படி. முடிந்த வரைக்கும் சரியான தகவல்களை அளிக்க முயன்றுள்ளேன்.விவசாயம் செய்தவர்களுக்கு தான் நான் சொன்னதில் உள்ள உண்மை பட்டென புரியும். உங்களுக்கும் விவசாய அனுபவங்கள் நன்றாக இருக்கும் என தெரிகிறது.
-----------


அரசன்,

வாங்க ,வணக்கம், நன்றி!

உண்மையில் மூச்சு முட்டும் உச்சம் தான் இன்றைய விவசாய பொருளாதாரத்தின் நிலை, சரியான சமயத்தில் முதலுதவி செய்யாவிட்டால் காலத்துக்கும் வருந்தும் சூழல் வரும்.

வெற்று முழக்கங்கள், காகித அறிக்கைகளில் இந்தியா வளமாகவே இருக்கு :-))
----------------------

சூர்யா,

வாங்க ,வணக்கம்,நன்றி!

என்ன செய்வது சனநாயகக்த்தில் நம்பிக்கை தானே வாழ்க்கை, சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு ஆனப்பிறகும் சில சுதந்திரப்போராட்ட தியாகிகள் இன்னும் பென்ஷன் வரவில்லைனு ஆட்சியரிடம் மனுக்கொடுத்துக்கொண்டு இருப்பதாக செய்திகள் வருதே? இது போன்ற நாட்டில் எல்லாம் ஒன்று கூடிப்பொங்குவதாக இருந்தால் பொங்கி இருக்க வேண்டும், இன்னும் ஆகவில்லை எனில் இனியும் ஆகுமா>

-------------------------

சார்வாகன் ,

வாங்க ,வணகம் நன்றி,

உங்களுக்கும் பொங்கல்ம்புத்தாண்டு வாழ்த்துகள்!

சூர்யா, ராஜ், அரசுரான், அரசன், சதுக்க பூதம், தி.த ,இளங்கோ, சூறாவளி, மற்றும் அனைவருக்கும் பொங்கல்,புத்தாண்டு வாழ்த்துகள்!

ராஜ் உங்களுக்கு இன்னொரு ரவுண்டு இருக்கு வரேன்! சில பதில்களுடன்!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.