அழைக்கும் போது உதித்து விட்டால் அதற்கு பெயர் நிலவும் அல்ல , அழைக்கும் போது வீசிவிட்டால் அதற்கு பெயர் தென்றலும் அல்ல, அழைக்கும் போது மழை வந்து விட்டால் அதற்கும் பெயர் மழையும் அல்ல, அப்போ அது என்ன ,எப்படி, அது தான் காற்றில் இருந்து நீர் தயாரிக்கும் எந்திரம்.
அமெரிக்க ராணுவம் ஈராக் போன்ற பாலைவனங்களில் இருக்கும் போது குடி நீர் விமானம் மூலம் எடுத்து செல்லப்படுகிறது அதற்கு ஒரு காலனுக்கு 30 டாலர்கள் செலவாகிறதாம் அதனை குறைக்க , நாசா மூலம் ஆய்வு செய்து காற்றில் உள்ள ஈரப்பதத்தை செயற்கையாக குளிர வைத்து , சுருங்க வைத்து நீராக மாற்றும் எந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.ஆனால் நாசாவிற்கு முன்னரே அக்யூவா சயின்ஸ் என்ற இன்னொரு நிறுவனம் அதை விட சிறப்பான எந்திரத்தை உருவாக்கியுள்ளது , இப்பொழுது அதனை தான் அமெரிக்க ராணுவத்தினர் பாலைவனங்களில் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஒரு சதுர கிலோ மீட்டர் அளவுள்ள காற்றின் ஈரப்பதத்தில் சாதாரணமாக 1,000,000,000,000,000 லிட்டர் தண்ணீர் உள்ளதாம்.காற்றில் 14 சதவீத ஈரப்பதம் இருந்தால் கூட போதும் ஒரு நாளைக்கு 600 காலன் நீர் தயாரிக்கலாம். பெரிய அளவு எந்திரங்களைக்கொண்டு 500,000 லிட்டர் கூட தயாரிக்க இயலுமாம்.
இந்த எந்திரம் செயல் படும் முறை, கிட்டதட்ட நம் வீட்டில் உள்ள குளிர் சாதனப்பெட்டி போன்ற முறை தான்.
காற்றினை உறிஞ்சி இழுத்து முதலில் ஒரு வடிக்கட்டி வழியாக செலுத்தப்படுகிறது, இதன் மூலம் தூசுக்கள் அகற்றப்படுகிறது.
பின்னர் காற்று குளிரூட்டும் வாயு கொண்ட குழாய்களுக்கு இடையே செலுத்தும் போது குறைந்த வெப்பத்தில் நீராவி சுருங்கி நீராக மாறும்.
அதனை ஒரு தொட்டியில் சேகரித்து , பின்னர் வழக்கமான , புற ஊதாக்கதிர் , ஒசோன் , சவ்வூடு பரவுதல் முறை மூலம் சுத்திகரித்து சுத்தமான நீராக மாற்றப்பட்டு பயன் பாட்டுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த கருவியை வடிவமைக்கும் முறையினைப்பொறுத்து திறனின் அளவு மாறுபடுவதால், எந்த நிறுவனமும் அதன் எந்திரங்களின் செயல் முறையை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளன. மேலே சொல்லப்பட்டுள்ளது அடிப்படை தத்துவம் மட்டுமே.
மேலும் சில நிறுவனங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தினை கிரகிக்கும் ரசாயனங்களைப்பயன் படுத்தியும் எந்திரங்களை வடிவமைத்துள்ளன.
மற்றொரு நிறுவனம் , காற்றலை வடிவில் மின்சக்தி இல்லாமல் , இயங்கும் வண்ணம் , ஒரு எந்திரம் வடிவமைத்துள்ளது, அதன் உற்பத்தி திறன் சிறிது குறைவாக இருக்கும். இம்முறையில் எவ்வித குளிரூட்டும் பொருளும் பயன் படுத்தாமல் காற்றினை ஒரு சுழல் பாதையில் செல்ல விட்டு குளிர வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.