"தமிழறிஞர்" இலவசகொத்தனாரின் பதிவில் இருந்து ஒரு பகுதி:
இந்த மாத இதழில் கல்வியாளர் முனைவர் வா செ குழந்தைசாமி அவர்களுடனான நேர்காணல் இடம் பெற்று இருந்தது, மிகச் சுவையாக பல விஷயங்களைப் பற்றிப் பேசி இருந்தார். அதில் பதிவு போட விஷயம் கிடைத்ததுதான் விசேஷமே!!
அந்த நேர்காணலில் இருந்து இரு கேள்வி பதில்கள்!
கேள்வி: தற்போது தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே ஒருவர் பட்டப்படிப்பு முடித்துவிடலாம் என்ற நிலை நிலவுகிறது. இது சரியானதுதானா?
பதில்: நான் மிகுந்த தமிழ்ப் பற்று உள்ளவன் என்பதை ஒப்புக் கொள்வீர்கள். இருந்த போதிலும் தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடிக்க முடியும் என்பதை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை.
பள்ளியில் தமிழைப் படிக்காமல் பிற மொழிகளைப் படித்துத் தேர்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர்? ஏறத்தாழ இரண்டு சதவிகிதம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் 12,059. எந்த ஆண்டும் சதவிகித அடிப்படையில் இது இரண்டைத் தாண்டாது. இந்த சிலர் தமிழ்ப் படிக்காததால் மொழிக்கு என்ன பெரிய தீங்கு நேரிட்டுவிடும்? இதுவே சற்று அதிகம் என்றால் நாம் அதைக் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்தான். பெரும்பாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இதர மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மிகச் சில குழந்தைகள் பள்ளிகளில் தமது தாய்மொழியைப் பயில்கிறார்கள். உருது கற்கும் இஸ்லாமியர் தவிர எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த சிலரே தத்தம் தாய்மொழிகளைப் பயில்கிறார்கள். படித்துவிட்டுப் போகட்டும். உண்மையான ஆபத்து வேறுபல இடங்களில், வேறு பல வடிவங்களில் வந்து கொண்டு இருக்கிறது. அதைக் குறித்து ஏனோ யாரும் சிந்திப்பதில்லை.
மூலம் இலவசக்கொத்தனார்: நன்றி!
இப்போது எனது கேள்விகள்,
//1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் 12,059.//
தமிழறிஞர் ஏன் 1995 இல் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர்களின் எண்ணிக்கையை மட்டும் சொல்லி இருக்கிறார், 95 க்கு பிறகு யாரும் பத்தாம் வகுப்பு படிக்கவில்லையா? :-)) 1995 க்கு அப்புறம் 12 வருஷம் ஆச்சு இந்த டைம் கேப்புல 100 தடவை பெட்ரோல் விலை ஏறி இருக்கு, மக்கள் தொகை பெருகி இருக்கு, டாலர் விலை மாறி இருக்கு, இரண்டு ஆட்சியே மாறி இருக்கு இப்படி எத்தனையோ மாற்றம் நடந்து இருக்கே! இந்த கால நிலை மாற்றம் பற்றி கேள்விலாம் பெருமையாக பதிவுப்போட்டவருக்கு ஏன் எழவில்லை, அது எப்படி அவர் தான் தமிழர் ஆர்வலர் ஆச்சே :-)), இதுவே இப்படி பழைய புள்ளிவிவரத்தை வேற யாராவது சொல்லி இருந்தா புலிப்பாய்ச்சால் பாய்வாங்களே!
இதில் அவர் குறிப்பிட்டது அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை மட்டுமா இல்லை தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்களும் அடக்கமா? அப்படி இரண்டும் சேர்த்த எண்ணிக்கையாக இருக்க வாய்ப்பே இல்லை.
தமிழக அரசின் உயர்நிலைப்பள்ளிக்குறித்தான புள்ளிவிவரங்கள்,2005-2006 ஆண்டுக்கானது.(அதுவரைக்கும் தான் விவரம் இருக்கு)
High Schools | Government | 2016 | 8.33 |
| Municipal/Corporation | 110 | 0.50 |
| Aided | 613 | 3.12 |
| Unaided | 179 | 0.43 |
| Anglo Indian(High School) | 12 | 0.10 |
| Matriculation(High School) | 2053 | 6.17 |
| Central Board(High School) | 63 | 0.51 |
| Total for all High Schools | 5046 | 19.16 |
http://www.tn.gov.in/schooleducation/statistics/tablep3.htm
இந்த அட்டவணையில் இருந்து ,
அரசு உயர்நிலைப்பள்ளிகள் மட்டும் 2016 உள்ளன அதில் படிப்போர் 8.3 லட்சம் மாணவர்கள்.
மேலும் நகராட்சி , மாநகாரட்சி , உதவி பெரும், உதவிப்பெறாப்பள்ளிகளில் படிப்போர் எண்ணிக்கை சுமார் 4 லட்சம் .
மொழி சிறுப்பாண்மை என சொல்லி வேற்றும்மொழி படிப்போர் என இருப்பவர்கள் படிப்பது இந்தப்பள்ளிக்களில் என எடுத்துக்கொள்ளலாம்.
முனைவர் சொன்னது போல இரண்டு சதம் மாற்றுமொழி படிப்போர் அவர்களாகவே இருக்கட்டும்.
ஆனால் தனியார் நடத்தும் மெட்ரிக்குலேஷன் மாணவர்கள் யார், அவர்கள் எல்லாம் மொழி சிறுப்பாண்மையினரா என்று ஒரு கேள்வி வருகிறதே, அவர்கள் எண்ணிக்கை ஒன்றும் சிறியது அல்லவே ,
மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் எண்ணிக்கை 2053, மாணவர்கள் எண்ணிக்கை 6.17 லட்சம்..
அரசுப்பள்ளிகளில் மொழி சிறுப்பாண்மையினருக்கு அவர்கள் மொழி சொல்லித்தர மட்டுமே ஆசிரியர்கள் உண்டு அதுவும் சில பள்ளிகளில் மட்டுமே மற்றப்படி அங்கே பிரெஞ்ச், ஜெர்மன், ஹிந்தி, இன்ன பிற மொழி சொல்லித்தர ஆசிரியர்கள் இல்லை, ஆனால் மெட்ரிக் பள்ளிகளில் பல மொழி சொல்லித்தர ஆசிரீயர்கள் உண்டு, எனவே மாணவர்கள் தமிழ் படிக்காமலே வேற்று மொழியினைப்படித்து தேர்வு எழுதும் நிலை, அதுவும் 6.17 லட்சம் மாணவர்கள் என்றால் அது ஒன்றும் புறக்கணிக்கக்கூடிய எண்ணிக்கையா? அல்லவே.
மேலும் மொத்தமாக தொழிற்கல்வி , மருத்துவம் என உயர்ப்படிப்புக்கு தேர்வாகும் மாணவர்களில் பெரும்பான்மை இத்தகைய தனியார் பள்ளி மாணவர்களே , அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவே. எனவே தமிழில் எழுத,படிக்க தெரியாத மருத்துவர்களும் , பொறியாளர்களும் அதிகம் உருவாகும் அபாயம் வேறு உள்ளது.
இப்போது தமிழக அரசு போட்ட அரசாணை யாருக்கு , மொழி சிறுப்பாண்மையினரை பாதிக்கவா இல்லையே, இப்படி மெட்ரிக் பள்ளிகளில் தமிழே படிக்காமல் டிமிக்கு கொடுப்போரை தடுக்க தானே, ஆனால் ஏனோ அதை மறைத்து விட்டு ஏதோ அரசு ம்ஒழி சிறுப்பாண்மையினரை தண்டிப்பது போலவும், அவர்கள் கண்டிப்பாக படிக்காவிட்டால் என்ன நஷ்டம் என்றும் அந்த பேட்டியில் தமிழறிஞர் என சொல்லிக்கொள்பவர் சொல்லி இருப்பது ஏன்?
மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கூட பிற மொழி படிக்க காரணம் , அவர்கள் படிக்க வேண்டிய பாட அளவு அதில் குறைவு என்பதால் தான். துவக்கப்பள்ளியில் தமிழ் எந்த அளவுக்க்கு படிப்போமோ அதே அளவுக்கு பிரென்ச்/ ஜெர்மனில் அ,ஆ , என்ற ரீதியில் 10 ஆம் வகுப்பில்(+2 விலும் கூட) படித்தாலே போதும், ஆனால் தமிழை படித்தால் அதில் மனப்பாட செய்யுள் ,கட்டுரை , இலக்கியம் என்று அதிகம் படிக்க வேண்டி இருக்கும்.
ஏன் எல்லா மாணவர்களும் அப்படி பிற மொழி படிக்கலாமே எனலாம் அரசுப்பள்ளிகளில் அத்தகைய வசதிகள் இல்லை, ஆனால் காசு வாங்கிக்கொண்டு படிப்பு சொல்லித்தரும் பள்ளிகளில் உண்டு, எனவே இலகுவாக மதிப்பெண், கூடுதலாக தமிழ் புறக்கணிப்பு என்று மெட்ரிக் பள்ளிகள் இயங்குவதால் தான் தான் அரசு அனைவரும் தமிழ் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்கிறது.
இதெல்லாம் தெரிந்தும் தெரியாது போல அரசு ஏதோ மொழி சிறுப்பாண்மையினருக்கு துரோகம் செய்வதாக சந்தில் சிந்து பாடும் தமிழறிஞர்கள் வலைப்பதிவில் பெருத்துப்போய்விட்டார்கள்!
பின்குறிப்பு:
இந்தப்பதிவை முனைவர் " தமிழறிஞர்" குழந்தைசாமி படிக்கமாட்டார் எனவே அவரை விளக்கம் கேட்கவும் முடியாது, வலைப்பதிவில் கூகிளாண்டவருக்கே கற்றுக்கொடுப்பவர்களையும் குறிவைத்து பதிவிடவில்லை எனவே அய்யோ என்னை மட்டும் குறிவைத்து பதிவிடுகிறேன் என்று என்னை கேட்கும் வாய்ப்பும் இப்பதிவு மூலம் வராது. எனவே உண்மையான தமிழார்வலர்கள் /வலைப்பதிவர்கள் என யார் வேண்டுமானாலும் பதிவு குறித்து கருத்துக்களை கூறலாம்!ஏன் இப்படி என்று விளக்கம் தரலாம்!