Saturday, June 10, 2006
காதல் வளர்சிதை மாற்றம்!
இருண்ட கிணற்றின் சுவர்களில்
எவரும் அறியாமல் கசியும்
நீர்த்தாரைகளைப் போல
என் இதயத்தின் நாளங்களில்
உன் நினைவுகள் கசிகின்றன!
இலையுதிர் காலத்து மரத்தில்
இளைப்பார நிழல் தேடும்
ஊர்க்குருவியைப் போல
என் மனம்
திக்கு தெரியாத மனிதக்கூட்டத்தில்
புறக்கண் மூடி
அகக் கண் திறந்து
தேடி அலைகிறது
என் இதயம் மட்டுமே
அறிந்த முகத்தை!
முகம் தேவை இல்லை உணர
மூச்சுக் காற்றே போதும்
உன் வரவை எனக்கு சொல்ல!
தற்செயலான விழி தீண்டலில்
என் இதயக்கூட்டில்
உறங்கும் உணர்வுகள் சிலிர்த்து
எந்தன் காதல் முகிழ்த்து வளர்ந்ததில்
எந்தன் இதயம் சிதைந்து
சிறைப்பட்ட உணர்வுகள் பொங்கி
பிரவாகம் எடுத்தது கவிதையாக!
நானும் கவிஞன் ஆனேன்!
இது தான் காதல் வளர்சிதை மாற்றமோ!
------------------------------------------------------------------------------------------------
ஒரு பிற்சேர்க்கை!
காதல் வளர்சிதை மாற்றம்! - வவ்வால் 9.2% (11)
இந்த கவிதை தேன்கூட்டின் மாதாந்திர போட்டியில்(ஜூன்) கலந்துகொண்ட ஒன்று,அதிகம் அறிமுகம் இல்லாத எனது வலைப்பதிவையும் படித்து கவிதையை நேசிக்கும் 11 ஆத்மாக்கள் வாக்களித்துள்ளன,அவர்களுக்கு தெண்டனிட்டு எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்!
எனது வலைப்பதிவு மறுமொழியிடப்பட்டவை என தமிழ்மணத்தின் முகப்பில் அடிக்கடி தோன்றி மின்னாது,ஏனெனில் நான் மட்டுறுத்தல் பயன்படுத்தவில்லை,அது வாசகர்களின் மனதை உறுத்தும், பின்னூட்டம் இட்டோமே அது எப்போது வரும் என காத்திருக்க வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.பின்னூட்டம் இட்டதும் அது உடனே தோன்றுவதை பார்த்து சிறிது மனம் ஆனந்திக்கும் வாசகர்களுக்கு அதனை ஏன் கெடுக்க வேண்டும். ஒரு சிறிய மன நிறைவு கிட்டும் அவர்களுக்கு. அது தான் என்னால் முடிந்த பதில் மரியாதை.
அப்படி இருந்தபோதிலும் 11 வாக்குகள் கிடைத்திருப்பதை எண்ணி ... எண்ணி(11 முறை எண்ணி) மனம் இரும்பூது எய்துகிறது.பேரில்லா உவப்பு அடைகிறது! வெற்றி தோல்விகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை. மேலும் ஆக்கப்பூர்வமாக பின்னுட்டம் இட்ட அன்பர்களுக்கும் நன்றி! வெற்றிப்பெற்றோர்க்கு வாழ்த்துகள்!
Subscribe to:
Posts (Atom)