மொக்கை "tag" என்று ஒன்றை ஆரம்பித்து அதுக்கு என்னையும் தெரியாத்தனமாக கூப்பிட்டு இருக்காங்க பாசமலர்(என்னா ஒரு பாசம்!)... மொக்கைக்கும் எனக்கும் ரொம்ப தூரம்னு தெரியாம போய்டுச்சு அவங்களுக்கு(ஆனா நீ போடுறது எல்லாம் மொக்கை தானேனு யாரோ சொல்றது கேக்குது) எவ்வ்வளவோ செய்தாச்சு இதை செய்ய மாட்டோமா!
சரி என்னால முடிந்த மொக்கைய தீட்டுகிறேன்.மீண்டும் ஒரு முறை சிரிப்பு தோரணம்!
-----------------------------------------------------------------------------------------------
வாடிக்கையாளர்: என்னப்பா சர்வர் காபில ஈ மிதந்து பார்த்து இருக்கேன், இங்கே என்னடானா சிகரெட் பில்டர் மிதக்குதே?
சர்வர்: அதான் சார் பில்டர் காபி!
-----------------------------------------------
நபர்1: எதுக்கு அந்த பாடகர் 3 மைக் வச்சு அது பின்னாடி குத்துக்கால் போட்டு பாடுறார்?
நபர்2:அவர் கிரிக்கெட் விக்கெட் கீப்பராம் ஸ்டம்ப் மாதிரி 3 மைக் வச்சு இருந்தா தான் பாட வருமாம்!
------------------------------------------------------------------
சபாநிர்வாகி பாடகியிடம்: நீங்க வீட்டில தொட்டிலில் குழந்தையைப்போட்டு ஆட்டி தூங்க வைக்க பாடிக்கத்துக்கிட்டதுக்காக மேடைல பாடும் போதும் ஒரு தூளி கட்டி வைக்க முடியாதும்மா!
----------------------------------------------------------------
காவலன்1:நம் மன்னர் சர்வேச பாண்டியர் வலைப்பதிவு ஆரம்பித்ததில் இருந்து ரொம்ப மாறிவிட்டார்..
காவலன் 2: ஏன்?
காவலன்1:இளவரசிக்கு சுயம்வரத்தில் போட்டி வைப்பதற்கு பதில் அவரது வலைப்பதிவில் "இச்சுனு ஒரு கதை" எழுதும் போட்டி வைத்து சிறந்த கதை எழுதும் மன்னனுக்கே இளவரசி என்று அறிவித்து விட்டாரே!
-----------------------------------------------------------------------------
காவலன்1: மன்னருக்கு வலைப்பதிவு மோகம் அதிகரித்து விட்டது, அவர் வலைப்பதிவில் பின்னூட்டங்கள் அதிகம் வரவில்லை என , நாட்டு மக்கள் அனைவரும் தினசரி ஒரு பின்னூட்டம் ஆவது போட வேண்டும் இல்லை என்றால் சவுக்கடி என்று அறிவித்து விட்டாரே!
--------------------------------------------------------
சர்வேச பாண்டிய மன்னன்: மந்திரியாரே இன்று என் வலைப்பதிவில் புதிதாக எதுவும் பின்னூட்டம் வந்திருக்கிறதா பார்த்து சொல்லும்!
மந்திரி: மன்னர் மன்னா நீங்கள் ரகசியமாக பக்கத்து நாட்டு அரசனின் வலைப்பதிவில் அனானி கமெண்டாக போட்டு ஆபாசமாக திட்டியதை ஐ.பி வைத்து கண்டு பிடித்து விட்டானாம் , போர் தொடுத்து வருவதாக உங்கள் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டுள்ளான்!
-----------------------------------------------------------------
மன்னர் சர்வேச பாண்டியர்: மந்திரியாரே, நான் இந்த நாட்டின் மன்னன் ஆனால் என்பதிவை விட உங்கள் பதிவுக்கு அதிகம் ஹிட்ஸ் வருகிறதே எப்படி?
மந்திரி: மன்னா,நான் வீக் எண்ட் பதிவு என்று போட்டு அதில் நம் அரண்மனை நர்த்தகிகளின் நடன வீடியோவைப்போடுகிறேன்! அதான் ஹிட்ஸ் அதிகம் வருகிறது!
---------------------------------------------------------------------------------
மந்திரி: மன்னா நீங்கள் ஒலையில் செய்தி கொண்டு வரும் புறாவை பிடித்து வறுத்து சாப்பிடும் ரகசியம் பக்கத்து நாட்டு அரசனுக்கு தெரிந்து விட்டது போலும்!
மன்னர்: எப்படி சொல்கிறீர்கள் மந்திரியாரே!
மந்திரி: இந்த முறை புறாவுக்கு பதில் காக்காவின் மீது வெள்ளைப்பெயிண்ட் அடித்து செய்தி அனுப்பியுள்ளானே!
----------------------------------------------------------------------------
மன்னர்: என்ன மந்திரியாரே இம்முறை செய்தி எடுத்து வந்த புறாவுக்கு ஒரு கால் தான் இருக்கிறது?
மந்திரி: பக்கத்து நாட்டு அரசர் "மிஸ்டு கால் "அனுப்பியுள்ளாராம், சிம்பாலிக்காக சொல்கிறார், நீங்கள் தான் செய்தி என்ன என்று கேட்டு இன்னொரு புறா அனுப்ப வேண்டுமாம்!
------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
இதற்கு மேலும் நான்கு மொக்கையர்களை தொடர அழைக்க வேண்டுமாம், யாரை அழைப்பது என்று தெரியவில்லை. எனவே இப்பதிவைப்படிக்கும் யாரேனும் நான்கு பேர் பொறுப்பேற்று மொக்கை சேவை புரிய "திறந்த வெளி அழைப்பு" வைக்கிறேன்!