Tuesday, July 03, 2012

என்ன கொடுமை சார் இது!-6


(அடுத்த கைப்புள்ளை நான் தானா?)
.
முதல் குடிமகன்!

முதல் குடிமகன் தேர்தலுக்கு போட்டியிடும் திருவாளர்.பிரணாப் குமார் முகர்ஜீ ,தனது பிரச்சாரத்தினை சென்னையில் கனிமொழி இல்லத்தில் இருந்து துவங்கினார்னு செய்தி வருது. இதை விட இந்திய அரசியலமைப்பை கிண்டல் செய்ய வேறு நிகழ்வு தேவையில்லை. ஏன் எனில் குடியரசு தலைவரே இந்திய அரசியலைப்பின் படி நாட்டின் தலைவர், சட்டத்தின் தலைவர்,ஆனால் சட்டத்தின் முன் குற்றவாளி /குற்றம் சாட்டப்பட்ட கூண்டில் நிற்கும் ஒருவரின் இல்லத்தில் இருந்து தான் தனது பிரச்சாரத்தையே துவங்குகிறார் எனும் போது வருங்காலத்தில் அவர் அரசியலமைப்பு சட்டத்துக்கு எவ்வளவு மரியாதை கொடுப்பார் என தெரிகிறது.

இது நாள் வரையில் இந்தியாவில் நடந்த ஊழல்களிலேயே முதலிடத்தில் இருப்பது 2ஜீ ஊழல் என்பதால் ,முதல் குடிமகன் தேர்தல் பிரச்சாரம் துவங்க ஒரு "முதலிடம் " பிடித்து சாதனைப்புரிந்தவர் இல்லமே சரியான இடம் என முதலிடம் தேடி சென்னைக்கு பிரணாப் முகர்ஜி வந்திருப்பாரோ?

என்ன கொடுமை சார் இது!

------------
சாகச ஓட்டுனர்கள்!

ஸ்பீட் ,டாக்சி, ஃபாஸ்ட்& ஃப்யுரியஸ் போன்ற ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களில் ,கார் , டிரக், பஸ் எல்லாம் மேம்பாலங்களில் காற்றில் பாயும், குட்டிக்கரணம் அடிக்கும், அதை எல்லாம் தேர்ந்த சண்டைப்பயிற்சியாளர்கள் செய்வார்கள்.ஆனால் அதற்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என மாநகரப்பேருந்து ஓட்டுநர் அனாயசமாக சென்னை அண்ணா மேம்பாலத்தில் பாயும் சாகசம் செய்ய நினைத்து ,மயிரிழையில் தவறிப்போய் சுவற்றில் மோதி ,பல்டி அடித்துவிட்டார். அவர் மட்டும் செல் போனில் பேசாமல் கொஞ்சம் மெனக்கெட்டு முயற்சித்து இருந்தால் பாலத்தில் இருந்து வெற்றிகரமாக ஜம்ப் அடித்து சாதித்து இருப்பார், மக்களும் ,மீடியாவும் ஹீரோவாக கொண்டாடி" பாரத் ரத்னாவோ அல்லது ஸ்டியரிங்க் வீல் சக்ராவோ" கொடுக்க சொல்லி போராடி இருக்கும்.

பாவம் ஹீரோ ஆக வேண்டியவர் வில்லனாகிவிட்டார் :-))

அதனைப்புரிந்து கொள்ளாமல் மாநகரப்பேருந்து ஓட்டுனர்கள் செல் போனில் பேசிக்கொண்டே சாகசம் செய்ய முற்பட்டால் புகார் தெரிவிக்க என ஒரு எண்ணை வெளியிட்டுள்ளது.

அவ்வெண்:"93833-37639'

மூன்று தடவைக்கு மேல் புகாருக்கு ஆளானால் ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்படுவாராம்.எச்சரிக்கை விட்ட அடுத்த நாளே , சாகசம் செய்வது எங்கள் பிறப்புரிமை அதனை செய்தே தீருவோம் என செயல்படும் ஒரு சாகச ஓட்டுனரை பாருங்கள் :-))

(பட உதவி:தினமலர்,நன்றி)


என்ன கொடுமை சார் இது!

-----------
சவாரிக்கு அழைக்கிறார்கள்!

(தமிழ் வளர்த்த மலபார் மங்கை)

"ஃபெட்னா உங்களை அமலா பாலுடன் வரவேற்கிறது:

அமலாவுடன் உணவருந்தலாம்.
அமலா பால் உடன் படகு சவாரி செல்லலாம்..
நடிகை அமலா உடன் புகைப்படம் எடுக்கலாம்…"

மேற்படி விளம்பரம் ஒரு இணைய தளத்தில் காணக்கிடைத்தது. அதைப்பார்த்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது, அந்தக்காலத்தில அவ்வையார்(நடிச்சவங்க பாடினது தான்) "பாலும், தேனும் ,பருப்பும்"கலந்துனக்கு தருவேன் "சங்கத்தமிழ்" மூன்றும் எனக்கு தான்னு பாடி "முருகனுடன்"டீல் போட்டு தமிழ் வளர்த்தாங்க, படம் "பக்தி" படம் என்றாலும் பட் அந்த டீல் எனக்கு பிடிச்சு இருந்தது.

இப்போ எட்ணாவோ ,பெட்னாவோ என்னமா ஒரு டீல் போட்டு தமிழ வளர்க்கிறாங்கய்யா... சாப்பிடலாம்னு சொல்லுறாங்க(சாப்பாட்டை தான்யா), சவாரிக்கு வான்னு சொல்லுறாங்க, படகுலதான்யா!,இன்னும் வேறு ஏதேனும் சிறப்பு சவாரிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளார்களா என தெரியவில்லை...நோ ..நோ அப்படிலாம் பார்க்கப்படாது சிறப்பு சவாரின்னா "குதிரை சவாரி" போன்றவற்றை சொன்னேன், அட்லீஸ்ட் பச்சைக்குதிரையாவாது தாண்டலாமா? உள்விவரம் அறிந்தவர்கள் கேட்டு சொன்னால் தமிழ்கூறும் நல்லுலகம் தழைக்கும் :-))

மேநாட்டு தமிழர்கள் இதெல்லாம் செஞ்சுட்டு தமிழ் நாட்டு மக்கள் சினிமா மோகத்திலும், இலவச மோகத்திலும் மூழ்கி இருக்கும் வரை தமிழ்நாடு முன்னேறாதுனு பதிவிட்டு பொங்குவார்கள் :-))

என்ன கொடுமை சார் இது!

------------
last but not the least!

(ரியல் தல!)

தமிழ் பதிவுகளில் அதிரடி மற்றும் அட்டகாசத்துக்கு பேர் போன (வாங்கிய)ஒரு பதிவர், தொடர்ந்து பெட்ரோலிய பொருட்கள் குறித்து ,"பெட்ரோல் விலை ரகசியம், ரூபாய் மதிப்பு சரிந்தாலும் பெட்ரோல் விலை ஏறாது, விலைக்குறைப்பு நாடகம், மாற்று எரி பொருள், பயோ டீசல், எத்தனால்" என பெட்ரோலியத்துறை அமைச்சகத்தினை போட்டு தாக்கிப்பதிவிட்டுக் கொண்டே இருந்தார்.
இதனை மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.அப்பதிவுகளுக்கு அமோகமான ஆதரவினையும் நல்கினார்கள்.

இதை எல்லாம் பார்த்து அதிர்ச்சியடைந்த பெட்ரோலிய அமைச்சகமும், அதிகாரிகளும் கூடிப்பேசி ,இப்படியே விட்டால் மக்கள் விழிப்புணர்வு அடைந்து பெட்ரோலே வேண்டாம் ,நாங்களே மாற்று எரிபொருள் வீட்டில் தயாரித்துக்கொள்வோம் என களத்தில் இறங்கிவிட்டால் வியாபாரம் படுத்துவிடும் என பயந்து மீண்டும் ஒரு முறை பெட்ரோல் விலையை ரூபாய் 2.60 குறைத்துள்ளார்கள்.

தற்போது எல்லாம் பதிவுலகில் எழுதினால் அனைவரும் கவனிக்கிறார்கள் ,குறிப்பாக அதிகார மட்டத்தில் என்பதற்கு இதுவே சான்று, எனவே பொறுப்புடன் எழுதினால் மாற்றத்தினைக்கொண்டு வரலாம் என்பதை மற்றப்பதிவர்களும் உணர வேண்டும். ஆனாலும் அந்த அதிரடி,அட்டகாசப்பதிவரோ ரூ 10 ஆவது குறைத்திருக்க வேண்டும், இது செல்லாது ,செல்லாது என முனகிக்கொண்டு அடுத்தப்பதிவில் , வீட்டிலேயே "மாட்டு சாணியில்"இருந்து மீத்தேன் தயாரித்து அதில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து வாகன எரிப்பொருளாக பயன்ப்படுத்துவது எப்படி? என பதிவிடலாமா என தலைக்கீழாக தவம் இருக்கிறாராம் :-))

ஹி...ஹி அவர் யார்னு கண்டுப்பிடிக்க "துப்பு" எதுவும் வேண்டுமா?

ஆஹ்ஹா ...ஒன்னு கூடிட்டாங்கய்யா ...எல்லாம் ஒன்னுக்கூடிட்டாங்க ...

இப்ப நீங்களே சொல்லுவீங்க...

"என்ன கொடுமை வவ்வாலு இது!"

*****