பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தாரை வார்க்கும் பணி மீண்டும் அரங்கேறுகிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்(NLC தமிழகம்) தேசிய அலுமினியம் கம்பெனி(NALCO),ஒரிசா ஆகியவற்றில் உள்ள அரசின் பங்குகளில் 10 சதவீதம் பொது விற்பனைக்கு விற்க இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது.இதன் மூலம் 2500 கோடி(NALCO-1400 CR, NLC-1100 cr) மூலதனம் திரட்டப்படும்.இதில் 75% சமுதாயப்பணிகளுக்கும் 25% நலிவடைந்த பொது துறை நிறுவனங்களின் மேம்பாட்டிற்கும் செலவழிக்கப்படும் என சொல்கிறார்கள்.
இதில் தமிழகத்தை சார்ந்த NLC யின் பங்குகளை விற்க ஒப்புதல் அளிக்க தி.மு.க,பா.ம.க போன்ற தமிழக கட்சிகள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை என்பது வருத்தம் அளிக்க கூடியது மட்டுமல்ல ,அவர்களின் மெத்தனப்போக்கு கண்டிக்க தக்கதும் கூட.
தமிழக கட்சிகள் ஒரு காலத்தில் NLC யை தனியார் மயம் ஆக்க அனுமதிக்க மாட்டோம் என போராட்டம் நடத்தின ,இப்போழுது அந்த போராட்டக்குணம் எங்கே போயிற்று.
பங்கு சந்தை சரிவைக்கண்டிருக்கும் இந்த நேரத்தில் இது போன்ற லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் பங்கு சந்தை சரிவை தடுக்கலாம் என்பது நிதியமைச்சரின் குறுகிய கால கணக்காக இருக்கலாம். NLC யின் மிகப்பெரிய தொழிற் சங்கமான தொ.மு.ச. தி.மு.க சார்புடையதே அவர்களின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் எனப்பார்க்க வேண்டும்.ஏனெனில் அவர்கள் தேர்தல் காலங்களில் தனியார் மயம் ஆதலை தடுக்க எங்களுக்கே வாக்கு போடுங்கள் என கோரியவர்கள்.சமீபத்தில் தேர்தல் எதுவும் வராது எனவே சத்தம் போடாமல் அடக்கி வாசிப்பார்களோ!
லாபத்தில் நடப்பதை விற்று காசு வாங்குவதற்கு பதில் நஷ்டத்தில் இயங்குவதை விற்று நிதி திரட்டலாம்,மேலும் அரசின் செலவீனங்களும் குறையுமே! நலிவடைந்த நிறுவனம் விலைப்போகாது என்று சொல்லலாம் அதையும் வாங்க ஆள் இல்லாமலா போவார்கள்.