(ஆட்டம் ஆரம்பம் ...ஹி....ஹி...!)
சமீபத்தில் "இளமை குன்றாப்பதிவர் " தருமி அவர்கள், நாங்களும் செஸ் விளையாடினோம் ...! ,என செஸ் பழகியதாக ஒருப்பதிவுப்போட்டிருந்தார்(பழகினோம் என்பது எப்பொருளில் பயன்ப்படுத்தப்பட்டது என எனக்கு அப்போ புரியலை அவ்வ்). சரி ஆட்டம் பழகியவரே பேசுறார் , நாமளும் ஒரு காலத்தில் பழகிப்பார்த்துட்டு புளிக்குதுனு கரையேறின ஆளுதானேனு போய் ஜமாவில கலந்துக்கிட்டு, வழக்கம் போல "ஜல்லியடிச்சும்" வச்சேன், அப்போதான் ஒரு விடயம் புலப்பட்டது.
சதுரங்கம் என்ற உள் விளையாட்டு "பலகை போட்டியின்"(indoor board games) தாயகமே இந்தியா தான் , மேலும் தமிழரான ஆனந்த் தான் இத்தினி நாளா "உலக நாயகனா" இருந்து வந்தார், அப்படி இருந்தும் தமிழ் இணைய வெளியில் சதுரங்கம் குறித்து பெரிய விழிப்புணர்வே "அடிப்படை அளவில் கூட" இல்லாமல் இருப்பதான ஒரு உணர்வு ஏற்பட்டது, ஏனிந்த நிலைனு ஒரு கேள்வி ,என் நடு மண்டையில நங்கூரம் பாய்ச்சி குடையவும் ஆரம்பிச்சது அவ்வ்!
தமிழ் இணைய உலகில் பெருமளவு கருத்து ஆக்ரமிப்பு செய்திருப்பது ,சினிமா, அரசியல், கிரிக்கெட் ,அதுக்கு அப்புறமா ஏதோ போனாப்போவுதுனு ஒரு விளிம்பில் தான் மற்ற சமாச்சாரங்களுக்கு இடமும், கவனிப்பும் கொடுக்கப்படுகிறது.
நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்ற வழமையான கேள்வியே வாலைத்தூக்கிட்டு மறுபடியும் கிளம்புது, சரி மத்தவங்க தான் கவனிச்சு ஆதரவு கொடுக்கலை ,அதுக்குனு நாமளும் சும்மா போயிட்டா எப்பூடினு , எளிமையாக சதுரங்க ஆட்டத்தின் வரலாறு, அதனை முறைப்படி எப்படி ஆடுவது, மேலும் அதில் உள்ள பல்வேறு துவக்க ஆட்ட முறைகள் மற்றும் ,நுணுக்கங்களையும் ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டிய அளவில் விளக்கி ஒரு தொடராக இடலாம் என நினைக்கிறேன்.
சதுரங்க விளையாட்டு என்பது துவக்க நிலையில் மலிவான , எளிமையான ஒரு விளையாட்டு, எளிமையான ஒரு சதுரங்க பலகை & ஆட்டக்காய்களுடன் இலகுவாக விளையாட ஆரம்பித்துவிடலாம்,ஆனால் தொழில் முறையில் ஆட நினைத்தால் "உண்மையில் காஸ்ட்லியான ஒரு விளையாட்டு". ஏகப்பட்ட நூல்கள், திறன் வாய்ந்த கணினி, நல்ல சதுரங்க மென்பொருள், பயிற்சியாளர் ,பின்னர் கடும் உழைப்பு என நிறைய செலவழிக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் இதற்கான சாதகமான சூழல் சென்னையில் மட்டுமே நிலவுகிறது, இங்கு நிறைய செஸ் கிளப்கள், பயிற்சியாளர்கள் என " கட்டண வாரியாக" கிடைக்கிறார்கள், மேலும் நூல்கள், கணினி, மென்ப்பொருள் பற்றிய ஒரு விழிப்புணர்வும் அதிகம் உள்ளது.
தமிழகத்தின் பிறப்பகுதிகள் எனப்ப்பார்த்தால் , கோவை(ஈரோடு ,நாமக்கல்,கரூர்) உட்ப்பட), மதுரை(மாப்பிள்ளை விநாயகர் சோடா கம்பெனி செஸ் வளர்த்தது, இப்பவும் போட்டி நடக்குதா), சேலம், திருச்சி போன்றப்பகுதிகளில் தான் ஓரளவு விழிப்புணர்வு உள்ளது எனலாம். மற்றப்பகுதிகளில் எல்லாம் சதுரங்கத்துக்கு என பெரிதான பிடிப்பே இல்லை, இதுக்குனு புத்தகமெல்லாம் இருக்கு ,அதெல்லாம் படிச்சாத்தான் நல்லா விளையாட வரும், செஸ் கிளாக்னு ஒன்னு இருக்கு அது வச்சு டைம் லிமிட் உடன் பிராக்டீஸ் செய்யனும் என சொன்னால் "நாம ஏதோ புருடா" விடுறோம்னு நினைக்குமளவுக்கு இருக்காங்க,அடியேனே அப்படியான சூழலை எதிர்க்கொண்டுள்ளேன் அவ்வ்!
இன்றைய இணைய சூழலில் எதுவும் சாத்தியம் என்றப்போதிலும் , தமிழிணைய மக்கள் என்னமோ இன்னமும் "திண்ணைக்கதை வேகத்திலேயே" இருப்பதாக தோன்றுகிறது.சதுரங்கத்துக்கு என நிறைய ஃபோரம்கள், இணைய தளங்கள், வலைப்பதிவுகள் என ஆங்கிலத்தில் உள்ளது, நிறைய பேரு சுறுசுறுப்பாக பங்கும் பெறுகிறார்கள். தமிழ் வலைப்பதிவுகளில் இதுக்கு முன்னர் யாரேனும் முயன்றார்களா என சரியாக தெரியவில்லை, தற்சமயம் நம்ம பங்குக்கு ஒரு தொடர்ப்பதிவை ஆரம்பிச்சு வைக்கலாம்னு ,முயற்சிக்கிறேன், யாருக்கேனும் ஆட்சேபம் இருந்தால் சொல்லுங்கள் , நிப்பாட்டிக்கலாம் :-))
சதுரங்கத்தின் முறையான பாலப்பாடம், சதுரங்க துவக்க (ஓப்பனிங்க் ) ஆட்ட முறைகள், துவக்க பொறிகள்(ஓப்பனிங்க் டிராப்கள்),பொதுவாக செய்யக்கூடிய தவறுகள்,, நகர்த்தல்களை குறிப்பெழுதுவது (மூவ்களை "ஸ்கோர் எழுதுவது)" போன்றவற்றை அறிமுகப்படுத்தி வைப்பதன் மூலம் புதிதாக சதுரங்கம் ஆட விரும்புவர்களுக்கும், ஏற்கனவே ஓரளவு பழகியவர்களுக்கும் இத்தொடர் ஓரு ஆரம்பப்புள்ளியாக உதவுக்கூடும் என நம்புகிறேன். பழைய நினைவுகளை கிளறியும், கூகிளாண்டவரின் கடாச்சத்தாலும் மட்டுமே எழுத முயல்கிறேன்,மற்றபடி உயர்மட்ட அளவில் எல்லாம் எதிர்ப்பார்க்காதிங்க அவ்வப்போது சில சதுரங்க ஆட்டங்களை பற்றி தனியாக விளக்கம் வேண்டுமானால் கொடுக்க முயல்கிறேன்.
சதுரங்கத்தின் வரலாறு:
சதுர் - நான்கு
அங்கம் - உறுப்பு.
சதுரங்கம் அக்காலத்தில் பலகையில் ஆடப்பெற்ற போர் விவரண விளையாட்டாக திகழ்ந்தது. எனவே போர்க்களத்தில் பயன்ப்படுத்தப்படும் நால்வகை படைகளான , யானைப்படை, குதிரைப்படை, விற்படை, காலாட்படை ஆகியவற்றை அங்கமாக கொண்ட விளையாட்டாக உருவாக்கப்பட்டது. இதனை குறிக்கும் வகையிலேயே 'சதுரங்கா" என அழைக்கப்பட்டது. கூடவே நான்கு பக்கங்கள் கொண்ட சதுரப்பலகை /கட்டம் என்பதை குறிக்கிறது எனவும் கொள்ளலாம்.
சதுரங்கத்திற்கு என வரலாற்று ஆவண ரீதியான காலமாக சுமார் ஐந்தாம் நூற்றாண்டையே ஆய்வாளர்கள் சொல்கிறார்கள், முதன் முதலில் குப்தர்கள் ஆட்சிக்காலத்தில் சதுரங்க ஆட்டம் உருப்பெற்று விளையாடப்பட்டதாக ஆவணப்பூர்வமாக சொல்கிறார்கள்.
ஆனால் இந்து ஞானத்தொன்மவியல் மரபின்படி பல்லாயிரமாண்டு பின்புலம் உள்ளதாக சொல்கிறார்கள். சதுரங்கத்தினை ஒத்த பல வகையான விளையாட்டுக்கள் புராணக்காலத்தில் இருந்து விளையாடப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவை எல்லாம் நவீன சதுரங்கம் போல இல்லை, சில ஒற்றுமைகள் மட்டுமே உண்டு. முன்னோடி விளையாட்டு எனலாம்.
அஷ்டபாதா எனும் எட்டுக்கு எட்டு அடி கட்டம் போட்டு , 100 கட்டங்கள் உடைய பலகையில் ,தாயம் உருட்டி விளையாடும் ஒரு விளையாட்டு இருந்துள்ளது. இவ்விளையாட்டினை "மன்ம லீலை" சிரி கிருஸ்ணா , ராதையுடன் சேர்ந்து ஆடியதாக இந்துமரபு தொன்மங்கள் கூறுகின்றன(உருண்டது தாயம் மட்டும் தானா அவ்வ்).
(வல்லிய ஆட்டக்கார கிருஸ்ணா-ராதா)
மேலும் மகாபாரத போர்க்கள திட்டத்தினை இவ்விளையாட்டினை வைத்து தான் கிருஸ்ணா பாண்டவர்களுக்கு விளக்கினாராம், எனவே "வார் ஸ்ட்ராட்டஜி" விளையாட்டாகவும் திகழ்ந்திருக்கிறது...!
அஷ்டபாதாவின் தற்கால வடிவம் தான் "பரமப்பதம்" எனும் தாயம் உருட்டி ஆடும் விளையாட்டாகும்.
இன்னொரு இந்து ஞானமரபு தொன்மவியல் கதைப்படி , இலங்கை வேந்தன் இராவணரின் மனைவி "மண்டோதரி" தான் சதுரங்க விளையாட்டை உருவாக்கியவர் என்றும் ,ராவணருடன் விளையாடி பொழுது போக்கியதாகவும், இராமருடன் உண்டான போரினையும் விளையாட்டின் மூலம் விளக்கியதாகவும் சொல்கிறார்கள்.
வரலாற்றின் படி ,குப்தர்கள் காலத்தில் உருவான இவ்விளையாட்டை , அரேபிய வணிகர்கள் பாரசீகத்திற்கு எடுத்து சென்று , அங்கு அறிமுகப்படுத்தியதாக சொல்கிறார்கள்.
பாரசீகத்தில் Shatrang (Chess) என அழைக்கப்பட்டுள்ளது, சதுரங்கா என்பதன் திரிபே அது.
சாசனிட் பேரரசு ஆட்சிக்காலத்தில் (242-651 AD) Middle Persian Pahlavi மொழியில் Chatrang namakwor (A Manual of Chess). என்ற நூலும் எழுதப்பட்டுள்ளது, வரலாற்றின் அடிப்படையில் சதுரங்கம் குறித்தான முதல் நூல் மற்றும் ஆவணம் இதுவே.
சதுரங்கத்தினை மிகப்பெரிய அளவில் பரப்பியது பாரசீக மன்னர்களே, அவர்கள் அரசவையில் ஒரு விளையாட்டாக ,மன்னர் முன்னிலையில் ஆடப்பட்டு , ரசிக்கப்பட்டுள்ளது.
The Kârnâmag î Ardashîr î Babagâ என்கிற பாரசீக பஹ்லாவி மொழி நூல், King Khosraw என்கிற Ardashîr - î என்ற பாரசீக மன்னனின் பெருமைகளை கூறும் நூலாகும் ,அதில் சதுரங்கம் இந்தியாவில் இருந்து பாரசீகத்துக்கு வந்த கதையாக சொல்லப்படுவதென்னவெனில்,
இந்தியாவில் கன்னோஜை ஆண்ட Divsaram என்ற மன்னன் சத்ராங்க் என்ற பெயரில் ஒரு விளையாட்டை உருவாக்கி , 64 கட்டங்களுடன் ஒரு தங்கப்பலகை, மற்றும் வைரங்களால் ஆன 32 ஆட்டக்காய்களை செய்து, கூடவே 1200 ஒட்டகங்களில் பரிசுப்பொருளையும் அனுப்பி அதனுடன் ஒரு சவாலையும் விட்டாராம், இந்த விளையாட்டு எப்படி விளையாடப்பட வேண்டும் எனக்கண்டுப்பிடித்து சொல்லிவிட்டால், தான் கப்பம் கட்டுவதாகவும், அப்படி கண்டுப்பிடிக்கவில்லை எனில் பாரசீக மன்னன் கப்பம் கட்ட வேண்டும் என்பதே சவால்.
சத்ராங்க் விளையாட்டுடன் Takhtritus,(ஏஜண்ட்) என்ற தூதரும் உடன் வந்திருந்தார், அவரிடம் நான்கு நாட்கள் அனுமதிப்பெற்று ,இரானில் உள்ள அறிஞர்களை எல்லாம் அழைத்து " புதிரை விடுவித்தால்" பெரும் பரிசு என அறிவித்தார், யாராலும் முடியாத நிலையில் , மூன்றாம் நாள் அன்று, Vazorgmitro, son of Bôkhte, என்பவர் முன் வந்து இன்று இரவுக்குள் தீர்வு காண்கிறேன் என சொல்லி அதே போல தீர்வும் கண்டு அடுத்த நாள் தெரிவிக்கவும் செய்தார்.
(முதல் சதுரங்கப்போட்டி)
இவ்வெற்றிக்கு பரிசாக 12,000 jôjans எனப்படும் சாசனிட் நாணயங்களை Vazorgmitro, son of Bôkhteவுக்கு மன்னர் வழங்கினார்.
அதன் பின்னர் Vazorgmitro, son of Bôkhte, அதே போல ஒரு ஆட்டத்தினை உருவாக்கி அதற்கு "Vin-Artakhshir" எனப்பெயரிட்டு , இந்திய மன்னருக்கு அனுப்பி , இது எவ்வகையான விளையாட்டு எனக்கண்டுப்பிடிக்கவில்லை எனில் இரு மடங்கு கப்பம் கட்ட வேண்டும் சவால் விட்டதாகவும் செல்கிறது.
அர்தாஷீர் -1 -"கொஸ்ரு" என்ற பாரசீக மன்னர் பின்னாளில் சதுரங்கத்தில் யாரும் வெல்ல முடியாத சதுரங்க ஆட்டக்காரராக மாறியதாக அமீர் குஸ்ரு எழுதிய ஷா நாமா என்ற நூலில் புகழ்ந்தும் பாடி உள்ளாராம்.
ஒன்பதாம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் அல் அல்டி (Al-Aldi)என்ற அரேபிய எழுத்தாளர் "சதுரங்கப்புதிர்கள் மற்றும் விதிகள்" கொண்ட நூலினை mansubat என்ற நூலாக எழுதியுள்ளார், இதில் இந்திய மற்றும் பாரசீக சதுரங்கத்திற்கிடையே உள்ள வேறுப்பாடுகள் குறித்தும் எழுதப்பட்டுள்ளது. அரபியாவில் பொதுவாக Shah-mat (checkmate) என சதுரங்கத்தினை அழைப்பார்கள். அக்காலத்திலேயே Blindfold play,முதல் பல் வேறு வகையான முறையில் சதுரங்கம் விளையாடப்பட்டதாக இந்நூலில் காணப்படுகிறதாம். இந்நூலே உலகில் இருக்கும் மிகப்பழமையான சதுரங்க ஆட்ட விதி நூலாகும்.
இப்படியாக பாரசீகத்தில் வளர்ந்த சதுரங்கம், பின்னாளில் இஸ்லாமிய எழுச்சியின் போது,கலிபாக்களின் ஆட்சிக்காலத்தில் அவர்கள் வென்ற இடங்களுக்கு எல்லாம் பரவியதாம், கலிபாக்களும் சதுரங்கம் ஆடுவதில் ஆர்வம் காட்டியதாக சொல்லப்படுகிறது.
இதில் குறிப்பிட வேண்டியது என்னவெனில் இந்தியாவில் தான் "நவீன சதுரங்கம் "தோன்றியது என்பதற்கு சான்றாக தற்போதுள்ளவை இந்த பாரசீக நூல்கள் தான், நம்ம ஊருல ஆதாரமே இல்லை ,புராணங்களில் கிருஸ்ணர் ஆடினார், இராவணன் ஆடினார்னு தொன்மங்கள் மட்டும் தான் இருக்கு அவ்வ்
சிந்து சமவெளிப்பகுதியிலும் சதுரங்கம் போன்ற ஒரு விளையாட்டு புழங்கி வந்ததாக தொல்ப்பொருள் ஆய்வில் தெரியவந்துள்ளது ,ஆனால் அவை எல்லாம் ஒத்த விளையாட்டு வடிவங்களே, 64 கட்டம், 32 ஆட்ட காய்கள் என்ற வடிவத்தில் ஆடப்பட்ட "சதுரங்கம்" என்ற விளையாட்டு 5 ஆம் நூற்றாண்டு காலம் முதல் தான் ஆடப்பட்டு வந்துள்ளது.
மேலும் சீனா, பர்மா, பிலிப்பைன்ஸ் ,ஜப்பான் எனப்பல நாடுகளிலும் சதுரங்கத்தினை ஒத்த விளையாட்டுக்கள் பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
பல்வேறு ஆசிய நாடுகளில் புழங்கி வரும் சதுரங்க விளையாட்டுக்களின் பெயர்கள்:
# பாராசீகம்(இரான்)- சத்ரஞ்ச்
(சத்ராஞ்ச் ஆட்டக்காய்கள்)
# சீனா-Xiang Qi
# ஜப்பான் - Shogi
# பர்மா -Sittuyin
# கொரியா- Changgi
# தாய்லாந்து- Makruk
அரபு தேசத்தின் மூலம் இத்தாலி ,ஸ்பெயின் எனப்பரவி ,அங்கிருந்து இங்கிலாந்து அமெரிக்கா, ரஷ்யா என சதுரங்கம் பரவியதாம், இன்னும் சொல்லப்போனால் ரஷ்யாவிற்கு 19 ஆம் நூற்றாண்டில் தான் போய் சேர்ந்திருக்கிறது, கம்யூனிச ஆட்சியின் போது , தான் தீவிரமாக பரவ ஆரம்பித்தது, ஜார் மன்னர்கள் காலத்திலும் சதுரங்கம் ஆடப்பட்டிருந்தாலும், லெனின் ஆட்சிக்கு வந்த பின்னரே சதுரங்கம் முக்கியத்துவம் பெற்றது ஏன் எனில் புரட்சிக்கு முந்தைய தலைமறைவு காலத்தின் போது , "Aleksander Fiodorvich Iliin-Zhenevskii" என்ற சக கம்யூனிச தோழருடன் ,லெனின் சதுரங்கம் ஆடி பொழுது போக்கினாராம்.
லெனின் ஆட்சிக்கு வந்த பின்னர் Aleksandr Fiodorvich Iliin-Zhenevskii இனை இளம் சிவப்பு படை வீரர்களை(இவர்கள் பெரும்பாலும் உளவாளிகள் என சொல்லப்பட்டவர்கள்), உருவாக்கும் பொறுப்பின் தலைமை அதிகாரியாக நியமித்தார், அப்பொழுது தான் "சதுரங்கம்" ஆடினால் பொறுமை, புத்திசாலித்தனம் மற்றும் கட்டுப்பாடு பெருகும், எனவே உடற்பயிற்சியுடன் அனைவருக்கும் சதுரங்கப்பயிற்சியும் அளிக்க வேண்டும் என லெனினுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார், இதனடிப்படையில் அனைவருக்கும் கட்டாயமாக சதுரங்கப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
(தமிழ் நாட்டைப்பொறுத்தவரையில், வருங்காலத்தில் நடைமன்னர் வைக்கோ மட்டும் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தால் வாலிபாலுக்கு நல்ல கவனம் கிடைக்க கூடும் ஏன்னா ஜெயிலில் வாலிபால் எல்லாம் ஆடியிருக்காருல்ல அவ்வ்!)
அதன் பிறகு வெகு விரைவில் ரஷ்யா முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் எல்லாம் "லேபர் செஸ் யூனியன்" என்றப்பெயரில் சதுரங்க யூனியன்களும் ஆரம்பிக்கப்பட்டு அனைவரும் விளையாட ஆரம்பித்தனர், பின்னர் சதுரங்கத்திற்கு என சிறப்பு பள்ளிகளும் உருவாக்கப்பட்டது.
Nikolai Krylenko, என்பவரை சதுரங்க ஆட்டத்தினை மட்டும் கவனிக்க சிறப்பு அதிகாரியாக லெனின் நியமித்தார் , உலக அளவில் சதுரங்கத்தில் ரஷ்யர்கள் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு , சிறப்பாக விளையாடக்கூடிய 100 நபர்களை தேர்ந்தெடுத்து "சிறப்பு ஊதியம்" கொடுத்து பயிற்சியில் ஈடுபட வைத்தார். இதே போல வரிசையாக செய்யப்பட்டது. இம்முயற்சியை ரஷ்யாவின் "chess production line" அப்போதைய ஆங்கில ஊடகங்கள் வர்ணித்தன.
அக்காலக்கட்டத்தில் ரஷியா உலக அளவில் சதுரங்கத்தில் பெரிய இடத்தில் இல்லை,ஆனாலும் கம்யூனிச புரட்சியினை விரும்பாமல் ,நாட்டை விட்டு தப்பி சென்று பிரான்சில் தஞ்சமடைந்த போல்ஷ்விக்கை சேர்ந்த "Alexander Alekhine" என்ற கிராண்ட் மாஸ்டரே கி.பி 1945 இல் இறக்கும் வரையில் உலக சாம்பியனாக இருந்தார், ஆனாலும் ரஷ்யா அவரை தங்கள் நாட்டவராக ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பின்னரே ரஷ்யா உலக சேம்பியன் ஷிப் போட்டிகளில் கலந்துக்கொள்ள ஆரம்பித்தது.
கம்யூனிச ஆட்சியின் தயாரிப்பான "Mikhail Botvinnik," 1945 இல் உலக சேம்பியன் ஆனார். இதன் விளைவாகவே Vasili Smyslov, and Paul Keres,Mikhail Tal,,Tigran Petrosian, Boris Spassky என பல ரஷ்யர்கள் உலக சாம்பியன்களாக உருவானார்கள், இன்று ரஷ்யாவில் பள்ளிகளில் சதுரங்கமும் ஒரு பாடமாக இயல்பாக சேர்க்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகிறது.
*************
சதுரங்க போட்டிகளின் நவீனக்கால வரலாறு:
# நவீனகாலத்தின் முதல் சர்வதேச சதுரங்கப்போட்டி கி.பி 1851 இல் லண்டனில் நடைப்பெற்றது , அதில் ஜெர்மனியை சேர்ந்த Adolf Anderssen என்பவர் வெற்றிப்பெற்றார், அவரே அப்பொழுது அதிகாரப்பூர்வமற்ற உலக சேம்பியன் எனக்கருதப்பட்டார். ஏன் எனில் அப்பொழுது உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொள்ளும் வகையில் போட்டிகள் நடைப்பெறவில்லை என்பதால், அவ்வாறு அழைக்கப்பட்டார்.
# கி.பி 1866 இல் லண்டனில் முதல் உலக சேம்பியன்ஷிப் போட்டிகள் நடைப்பெற்றது, அதில் செக்கோஸ்லோவாக்கியாவை சேர்ந்த Steinitz வென்று அதிகாரப்பூர்வமாக உலகின் முதல் சேம்பியனாக ஆனார்.
# போரிஸ் ஸ்பாஸ்கி ,கி.பி 1945 முதல் கிபி 1972 இல் அமெரிக்கரான பாபி பிஷரிடம் தோற்கும் வரையில் ரஷ்யா மட்டுமே அசைக்க முடியாத உலக சேம்பியனாக இருந்தது. ரஷ்யர்களின் ஆதிக்கத்தினை முறியடித்த பாபி பிஷர், ஒரு இளம் சாதனையாளர் ஆவார், 15 வயதுக்குள்ளாகவே கிராண்ட் மாஸ்டர் ஆனவர், ஆனால் கொஞ்சம் "மனம் போன போக்கில்" நடந்துக்கொள்வார், பல நேரங்களில் மிக தாமதமாக போட்டிக்கு வருவார், சமயங்களில் வராமலே போய் விடுவார், ஆனால் வந்து உட்கார்ந்தாச்சுனா எதிர்த்து ஆடுபவருக்கு சங்கு தான் , உலக சேம்பியன் ஷிப் போட்டிகளின் தகுதி சுற்றில் இரு முறை கிளீன் ஸ்வீப் ஆக அனைத்து ஆட்டங்களையும் வென்றவர், அமெரிக்க தேசிய போட்டியில் 13 சுற்றுகளிலும் தோல்வியே அடையாமல் முழுதாக 13 புள்ளிகள் பெற்று சாதனைப்படைத்தவர், உலக சேம்பியனாக 22 வயதுக்குள் ஆனவர், அவரின் சாதனையை சமீபத்தில் சென்னையில் நடந்த உலக சேம்பியன் ஷிப் போட்டியில் தான் முறியடிக்க முடிந்தது, நார்வேயின், மேக்னஸ் கால்ர்சன் மிக இளம் உலக சேம்பியன் ஆனார்.
பாபி பிஷரின் நிலையற்ற போக்கு , பிடிவாதம் மற்றும் அதிக அப்பியரன்ஸ் ஃபீஸ் கேட்கும் பழக்கத்தினால் அவரது விளையாட்டு வாழ்க்கை ஒரு நிச்சயமற்றதாகவே விளங்கியது,பல முறை சதுரங்கத்தினை விட்டு விலகியதாக அறிவித்து பின்னர் மீண்டும் ஆட வந்துள்ளார்.
சதுரங்கத்தில் உலகளாவிய போட்டிகளில் பரிசுப்பணம் தவிர்த்து போட்டிகளில் கலந்து கொள்ள " appearance fees" என ஒரு தொகையினை போட்டியாளர்களுக்கு கொடுப்பதுண்டு, அதற்கு பெரும் தொகை கேட்பதை வழக்கமாக பிஷர் வைத்திருந்தார், உலக சேம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துக்கொள்ளவே பெரும் தொகை கேட்டவர். அப்படி வாங்கிக்கொண்டு தான் அவரும் போட்டியில் கலந்துக்கொண்டார், அப்பொழுதெல்லாம் புகழ்ப்பெற்ற ஆட்டக்காரர் எனில் அப்படி ஒரு மரியாதை இப்பொழுதும் உண்டு ,ஆனால் தற்போது உலக சேம்பியன் ஷிப் போட்டிகளில் அதிகாரப்பூர்வமாக அப்பியரன்ஸ் ஃபீ இல்லை ஆனால் நல்ல பரிசு தொகை உண்டுமேலும் பிஷரின் அதிரடிகளுக்கென்றே தனி ரசிக கூட்டம் உண்டு, அவர் அன்று என்ன செய்தார் எப்படி ஆடினார் என தெரிந்துக்கொள்ளவே பலரும் சதுரங்க ஆட்டத்தினை கவனிக்க ஆரம்பித்தார்கள். எனவே சர்வதேச சதுரங்க சம்மேளனமும் ,ஃபிஷருக்கு ஏற்றார்ப்போல பல முறை வளைந்துக்கொடுத்துள்ளது.
(பாபி ஃபிஷர்)
சதுரங்க போட்டியில் ஒரு ஆட்டக்காரர் வரவில்லை எனில் மற்ற ஆட்டக்காரர் போட்டியாளரின் செஸ் கிளாக்கை ஓட விட்டு விட்டு காத்திருப்பார், இதன் மூலம் போட்டியாளர் தாமதமாக வந்தால் அவரது மூவ்களுக்கான நேரமும் குறைந்து விடும், மேலும் , அப்பொழுதெல்லாம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் எதிர் தரப்பு வர வேண்டும் என விதி இருந்தது , அதற்குள் வந்து விட்டால் ஆடலாம், ஒரு மணி நேரம் கழித்து வந்தால் தோற்று விட்டதாக அறிவிக்கப்படும்( இப்பொழுது உடனே வர வேண்டும்),பாபி பிஷர் பெரும்பாலும் கடைசி நேரத்தில் வந்து தான் ஆட ஆரம்பிப்பார், ஆனால் எதிரில் ஆடுபவரை விட வேகமாக ஆடி சம நிலையோ வெற்றியோ பெற்றுவிடுவார், இது போன்ற அபரிமிதமான விளையாட்டுத்திறன் இருந்ததால் தான் இன்றளவும் ஆல் டைம் பெஸ்ட் பிளேயர் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருக்கிறார்.
பல முறை இறுதிக்காலக்கெடுவெல்லாம் முடிந்த பின்னர் வந்து ஆட்டத்தினை மீண்டும் ஆரம்பிக்க சொல்லி இருக்கிறார், அதற்கும் சதுரங்க சம்மேளனம் தலையாட்டிய கதையெல்லாம் உண்டு.
பாபி ஃபிஷருக்காக ஆட்ட நேரத்தினை மாற்றியமைத்ததால், கடுப்பான Oscar Panno, என்ற கிராண்ட் மாஸ்டர் ஒரே ஒரு நகர்த்தல் கூட செய்யாமல் தான் தோற்றுவிட்டதாக எழுதிக்கொடுத்துவிட்டு போய்விட்ட சம்பவமும் நடந்துள்ளது.
ஆனால் இவரது கடைசி காலத்தில் நிம்மதியற்று நாடற்றவராக அலைய வேண்டியதாகிவிட்டது , 1992 உள்நாட்டு யுத்தம் காரணமாக யுகோஸ்லாவிவாவை நாடாக கருத முடியாது என அறிவித்து ,அமெரிக்கா தடை செய்திருந்த காலக்கட்டம், அப்பொழுது , போரிஸ் ஸ்பாஸ்கியுடன் மீண்டும், ஒரு போட்டியினை ஸ்பான்சர் விருப்பப்படி ?! ,யுகோஸ்லாவியாவில் ஏற்பாடு செய்திருந்தார்கள், யுகொஸ்லாவியா செல்லக்கூடாது என அமெரிக்க அரசு எச்சரித்தது ,ஆனால் முன்னரே ஒப்பந்தம் போட்டு பெருந்தொகையினை அப்பியரன்ஸ் ஃபீ ஆக வாங்கிவிட்ட நிலமை, நீண்ட காலம் கழித்து பெரிய போட்டி என்பதாலும், யுகோஸ்லாவியா சென்று ஸ்பாஸ்கியுடன் போட்டியில் கலந்துக்கொண்டார்.
இதனால் கடுப்பான அமெரிக்க அரசு 1992 இல் வருமான வரிக்கணக்கெல்லாம் கேட்டு குடைந்ததும் அல்லாமல் , பாபி ஃபிஷரின் அமெரிக்க குடியுரிமையையும் ரத்து செய்துவிட்டது, எந்த நாட்டுக்குடியுரிமையும் இல்லாமல் ஒவ்வொரு நாடாக சுற்றி வந்தார் ,ஐஸ்லாந்தில் சிறிது காலம் அகதியாக தங்கியிருந்தார். கி.பி 2002 இல் எந்த நாட்டின் முறையான பாஸ்போர்ட்டும் இல்லாமல் பயணம் செய்தார் என ஜப்பானில் கைது செய்யப்பட்டு சுமார் 10 மாதங்கள் சிறையிலும் கழித்தார் , புகழ்ப்பெற்ற உலக சேம்பியன் என தெரிந்தாலும் தண்டனைக்காலம் முடிந்த பின்னர் ; டெர்மினல் படத்தில் டாம் ஹேங்க்ஸ் நிலைப்போல ,எந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவது என தெரியாத நிலை நிலவியது,பின்னர் ஐஸ்லாந்து நாடு பிஷருக்கு குடியுரிமை கொடுத்து அழைத்துக்கொண்டது, 2008 இல் இறக்கும் வரையில் ஐஸ்லாந்தில் ரெஜவிக் நகரத்தில் வசித்து வந்தார்.
பாபி பிஷர் ரஷ்யாவின் ஆதிக்கத்தினை தகர்த்தது சிறிது காலமே நீடித்தது, அதன் பின்னர் ,அனடொலி கார்ப்போவ், கேரி காஸ்ப்பரோ என்ற இரட்டையர்கள் வந்து மீண்டும் ரஷ்யாவின் ஆதிக்கத்தினை துவக்கி வைத்துவிட்டார்கள்.
ரஷ்யர்கள் 19 ஆம் நூற்றாண்டில் தான் சதுரங்கம் பழக ஆரம்பித்து 20 ஆம் நூற்றாண்டில் அசைக்க முடியாத சக்தியாக திகழ ஆரம்பித்த போதும் ,சதுரங்கத்தின் தாயகமான இந்தியாவில் பெரிதான சலனம் எதுவுமில்லாமலே கழிந்தது, ஆனால் 1972 இல் ,பாபி பிஷர் உலக சேம்பியன் ஆன அதே ஆண்டில் ஒரு எழுச்சி ஏற்பட்டது, சென்னையை சேர்ந்த மானுவல் ஆரோன் என்பவர் இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டர் பட்டத்தினை வென்றார்.
(இந்தியாவின் முதல் "International Master" மானுவல் ஆரோன்)
அதன் பின்னரே இந்தியர்களும் சர்வதேச அளவில் பிரகாசிக்க முடியும் என்ற எண்ணம் உருவாகி பரவலாக சதுரங்கம் ஆட ஆரம்ம்பித்தார்கள் என சொல்லப்படுகிறது. பின்னர் மானுவல் ஆரோன் சென்னையில் "டால் சதுரங்க கழகம்" என ஒன்றினை நிறுவி பயிற்சியும் அளிக்கலானார், இன்றும் அக்கழகம் இயங்குகிறது. ஒரு நாள் மாலை அப்பயிற்சி மையத்திற்கு சுமார் 7 வயது சிறுவன் ஒருவன் புதிதாக ஆட வந்தான், ஆனால் பல பெரியவர்களையும் வெற்றிக்காணவே ,நல்ல திறமை இருக்கிறது என அடையாளங்கண்டு தொடர் பயிற்சியில் ஈடுபடுத்த சொல்லி அச்சிறுவனின் தயாரிடம் சொன்னாராம், அச்சிறுவன் வேறு யாரும் அல்ல , பின்னாளில் ஐந்து முறை உலக சேம்பியனாக திகழ்ந்த "விசுவநாதன் ஆனந்த்" தான்!!!
பாபி பிஷர் செய்தது போன்று ரஷ்ய ஆதிக்கத்தினை அதிரடியாக தகர்க்க வில்லை என்றாலும் நிதானமாக தகர்த்த இன்னொருவர் இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த் ஆவார், ஆனால் இவரால் கார்ப்போவ், காஸ்பரோவ் ஆகியோரின் சதுரங்க வாழ்வின் இறுதியில் தான் அசைக்க முடிந்தது, ஆனாலும் இரண்டாம் முறையாக ரஷ்ய ஆதிக்கம் அகன்ற காலக்கட்டம் என்பது ஆனந்தின் காலக்காட்டமே. இப்பொழுது கார்ல்சன் மூலம் இந்தியாவின் ஆதிக்கமும் தகர்க்கப்பட்டுவிட்டது, கண்ணுக்கு எட்டிய தொலைவில் ,உலக அளவில் சவால் விடக்கூடிய சதுரங்க ஆட்டக்காரர்கள் ,ஆனந்த் தரத்தில் இந்தியாவில் உருவாகவில்லை, இந்நிலைக்கு ஒரு காரணமாக ஆனந்த்தையே சொல்லலாம், இந்தியாவில் நடக்கும் போட்டிகளை முற்றிலும் தவிர்த்து விட்டார், மேலும் இந்தியாவின் சார்பில் செஸ் ஒலிம்பியாடிலும் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டார், எனவே அடுத்தக்கட்ட தலைமுறைக்கு தேவையான வழிக்காட்டலையோ அல்லது போட்டிகளின் போது கொடுக்கும் அனுபவ பகிர்வுகளையோ அளிக்க தவறிவிட்டார் எனலாம்.
கிரிக்கெட்டில் வேகமான ஆடுகளத்தில், வேகமான பந்து வீச்சாளர்களை எதிர்க்கொண்டு பயிற்சி எடுத்திருந்தால் தான் போட்டியின் போது வேகப்பந்து வீச்சாளரை எதிர்க்கொள்ள முடியும், சதுரங்கத்திலும் அதே கதை தான் .சதுரங்கத்தினை பொறுத்த வரையில் பலமான ஆட்டக்காரர்களுடன் ஆடிப்பழகினால் தான் ஆட்டத்திறன் மெருகேறும்.
வருங்காலத்திலும் இந்தியாவின் புகழ் சதுரங்கத்தில் உலக அளவில் கொடிக்கட்டி பறக்க வேண்டும் எனில் ரஷ்ய பாணியில் சிறப்பு பயிற்சிகளை பள்ளிகளில் அரசே முன்னின்று நடத்த வேண்டும். நடக்குமா எனத்தெரியவில்லை, அரசுப்பள்ளிகளில் ஆங்கில வகுப்பு துவங்கினாலே ஒப்பாரி வைக்கும் போலி கொள்கைவாதக்கோஷ்டிகள் இருக்கும் வரையில் அரசே நினைத்தாலும் சாத்தியப்படும் என்று தோன்றவில்லை அவ்வ்!
இந்தப் பதிவில் வரலாறே மிகவும் நீண்டு விட்டதால், சதுரங்க விளையாட்டின் அறிமுகத்தினை அடுத்தப்பதிவில் தொடர்கிறேன்.
கட்டங்கள் தொடரும்...
--------------------------
பின் குறிப்பு:
படங்கள் மற்றும் தகவல் உதவி,
# http://math.uww.edu/~mcfarlat/177hist.htm
# http://www.avesta.org/pahlavi/chatrang.htm
# Bobby Fischer Goes To War- DAVID EDMONDS AND JOHN EIDINOW
முழுப்புத்தகமும் மின்னூலாக படிக்க
http://www.e-reading.co.uk/bookreader.php/1010825/Edmonds_-_Bobby_Fischer_Goes_to_War.html
மற்றும்
விக்கி & கூகிள் ,தி இந்து,இணைய தளங்கள்,நன்றி!
----------------------------------------------