புதிய தலைமுறை சேனல் முதலிடம் வந்தது எப்படி? GRP ரகசியம்!
சன் செய்திகளை விட புதிய தலைமுறை செய்திகள் சேனல் முன்னிலை வகிப்பதாக ஏ.சி.நீல்சன் சர்வேயின் அடிப்படையில் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துக்கொண்டார்கள். அதாரமாக GRP புள்ளிகளை காட்டியிருந்தார்கள்.
பொதுவாக டிஆர்பி என்ற ஒன்றே அதிகம் கேள்விப்பட்டிருப்போம், அது என்ன GRP ?
ஒரு நிகழ்ச்சி அல்லது விளம்பரம் அதிகம் பார்க்கப்படுகிறதா என்பதை டீஆர்பி புள்ளிகள் மூலம் கண்டுப்பிடிப்பார்கள்.
இது எப்படி எனில்,
சேனல் A, சேனல் B இரண்டு சேனல்கள் ஒரு பகுதியில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், அப்பகுதியில் 100 வீடுகள், 100 டீ.விகள் இருக்கு. எத்தனைப்பேர் எந்த சேனல் எப்பொழுது பார்க்கிறார்கள் எனப்பார்க்க ஒரு மீட்டர் இருக்கு(மக்கள் மீட்டர்). அத்தனை வீட்டிலும் மீட்டர் வைப்பது சாத்தியம் இல்லை என்பதால் 10 வீட்டுக்கு ஒன்று என 100 வீட்டுக்கு 10 வீட்டில் மட்டும் வைப்பார்கள். இங்கே சாம்பிளிங் ரேட் 10 சதவீதம், எனவே கிடைக்கும் டீஆர்பி புள்ளிகளை 10 ஆல் பெருக்கினால் எத்தனைப்பேர் பார்த்தார்கள் என தெரிந்து விடும்.
சேனல் A,
10 மீட்டர் வீடுகளில் 8 பேர் பார்க்கிறார்கள் எனீல்
டீஆர்பி = 8*10=80%
இங்கே ஒரு துணைக்கேள்வியாக ஒவ்வொருவரும் எத்தனைமுறைப்பார்க்கிறார்கள் எனக்கேட்தாக வைத்துக்கொண்டால் GRP வந்து விடும்.
உ.ம்,
ஒவ்வொருவரும் ஒரு முறை என்றால்,8 பேருக்கும் சராசரி= 1+1+1+1+1+1+1+1/8=1
GRP =8*1*10=80 % என்றே வரும்.
சேனல் B :
10 மீட்டர் உள்ள வீடுகளில் 4 பேர் மட்டும் பார்ப்பதாக காட்டினால்,
டீஆர்பி= 4*10=40%
துணைக்கேள்வியாக எத்தனை முறை பார்க்கிறீர்கள் என்று கேட்பதற்கு ஒவ்வொருவரும் தலா இரு முறை பார்ப்பதாக கூறுகிறார்கள்,
எனவே, சராசரி 4 பேருக்கு =2+2+2+2/4=2
GRP =4*2*10=80% என வரும்.
8 பேர் பார்க்கும் சேனலுக்கும் GRP 80, 4 பேர் மட்டுமே பார்க்கும் சேனலுக்கும் GRP 80,ஆனால் டீஆர்பியில் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இருக்கும்!
அதாவது ஒரு சேனல், நிகழ்ச்சியை எத்தனைப்பேர், பார்க்கிறார்கள் என்பதை விட எத்தனை முறை என்ற ,பிரிகுவென்சியை கணக்கில் எடுத்துக்கொண்டு கணக்கிடுவது தான் GRP புள்ளிகள் ஆகும்.
TRP= TARGET (TELEVISION) RATING POINT,
GRP= GROSS RATING POINT
இதன் அடிப்படையில் நம்பர் 1 என சொல்லிக்கொள்வது ஊரை ஏமாற்றும் தந்திரம்.
பதிவுகளிலேயே பார்த்திருக்கலாம், நல்லப்பதிவர்களின் தரமான பதிவுக்கு பத்து பேர் படித்து பத்து பின்னூட்டம் போட்டு இருப்பார்கள், சில அடாசுப் பதிவுகளுக்கு நான்கு பேர் தான் படித்து இருப்பார்கள் அவர்களே வளைத்து வளைத்து ,மாமா, மாப்ஸ்,மச்சான் என்று பல பின்னூட்டங்கள் போட்டு 100 தாண்டி இருப்பார்கள். பின்னூட்டங்கள் எண்ணிக்கையில் பார்த்தால் 100 க்கு மேல வாங்கியதை தான் தரமானது என்று சொல்ல வேண்டியது இருக்கும், அது தான் சூடான இடுகையிலும் இருக்கும்.ஆனால் தரமான பதிவோ பத்து பேர் படித்து 10 பின்னூட்டம் மட்டுமே வாங்கி இருக்கும், அது முன்னிலையில் இராது.
வெறும் நான்கு பேர்ப்படித்து 100 பின்னூட்டம் சரியா , 10 பேர் படித்து பத்து பின்னூட்டம் சரியா? அப்படிப்பட்ட சர்வே தான் புதிய தலைமுறை நம்பர் 1 என்பதும்.
இது புதிய தலைமுறை சேனலை குறைத்துக்காட்ட சொல்லவில்லை, சன் ஆதிக்கம் தகர்ந்தால் நல்லது தான் ,ஆனால் உண்மையில் அப்படி இல்லை என தெளிவுப்படுத்தவே சொல்கிறேன்.